Thursday, March 13, 2014

மோசமானவங்கள்ல முக்கியமானவங்க! தமிழக எம்.பி-க்களின் ரேங்க் கார்டு- எம்.பரக்கத் அலி

பார்லிமென்டின் 'ஃபேர்வெல் டே’ முடிந்துவிட்டது. புதிய எம்.பி-க்களைத் தேர்ந்தெடுக்கத் தயாராகிவிட்டார்கள் வாக்காளர்கள். எம்.பி-க்களில் பலர், வாக்காளர்களின் வாசல்களைத் தேடி மீண்டும் வரலாம். தமிழகம், புதுச்சேரியில் இருந்து போன 40 பேர், பார்லிமென்ட் பள்ளியில் சாதித்தார்களா... சறுக்கினார்களா..? எம்.பி-க்களின் 'ரேங்க் கார்டு’ என்ன?
வருகைப் பதிவேட்டில் இருந்து ஆரம்பிப்போம்!
2009-ம் ஆண்டில் இருந்து 2014 வரை நாடாளுமன்றத்தில் 15 கூட்டத்தொடர்கள் நடந்திருக்கின்றன. மொத்தமாக 350 நாட்கள். அதிக நாட்கள் அவைக்கு வந்த எம்.பி-க்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராமசுப்புவுக்கு முதல் இடம். மொத்தம் 341 நாட்கள் வந்து 97 சதவிகித அட்டென்டண்ஸ் வைத்திருக்கிறார். இரண்டாம் இடத்தில் சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த லிங்கம். மூன்றாவது இடத்தில் தி.மு.க-வைச் சேர்ந்த டி.கே.எஸ். இளங்கோவன்.  
அதிகம் மட்டம் போட்ட எம்.பி-க்களில் முதல் இடம், ராமநாதபுரம் தி.மு.க. எம்.பி., நடிகர் ரித்தீஷுக்குதான். தமிழக எம்.பி-க்களின் வருகைப் பதிவில் இவருக்கே கடைசி இடம். 350 நாட்களில் 135 நாட்கள் மட்டுமே அவைக்கு வந்திருக்கிறார். ரித்தீஷ§க்கு முந்தைய இடத்தில் விடுதலைச்சிறுத்தைகள் தொல். திருமாவளவன் இருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் உள்ள வருகைப் பதிவேட்டில் அமைச்சர்கள் கையெழுத்துப் போடும் மரபு இல்லை. இதனால் தமிழகம், புதுவையைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், நாராயணசாமி ஆகியோரின் வருகைப் பதிவுகளைக் கணக்கிட முடியவில்லை. ஆ.ராசா 2010 நவம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு ஸ்பெக்ட்ரம் வழக்கில் அவர் கைதுசெய்யப்பட்டு, 15 மாதங்கள் சிறையில் அடைக்கப் பட்டார். இந்தக் காலகட்டத்தில் ராசா நாடாளுமன்றத்தில் பங்கேற்கவில்லை. 2012 மே மாதம் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டப் பிறகு நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை ஈழ விவகாரத்துக்காக 2013 மார்ச் மாதம் தி.மு.க. வாபஸ் வாங்கியதைத் தொடர்ந்து தி.மு.க-வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஐந்து பேர் ராஜினாமா செய்தார்கள். அதன் பிறகு நடந்த கூட்டத்தொடரில் பழனிமாணிக்கம் 18 நாட்களும் காந்தி செல்வன் 32 நாட்களும் அவைக்கு வந்திருக்கிறார்கள். ஜெகத்ரட்சகன் 11 நாட்கள், மு.க.அழகிரியும் நெப்போலியனும் இரண்டே இரண்டு நாட்கள் அவைக்கு வந்திருக்கிறார்கள்.
விவாதம், சிறப்புக் கவன ஈர்ப்பு, கேள்விகள், துணைக் கேள்விகள், அரசினர் மசோதாவில் விவாதம், தனிநபர் மசோதா, தனிநபர் தீர்மானம்... என நாடாளுமன்றத்தில் ஸ்கோர் செய்ய இப்படி நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த சப்ஜெக்ட்டில் தேறியவர்கள் ஒருசிலர்தான்.
இப்படி நாடாளுமன்றச் செயல்பாடுகளின் பல்வேறு அம்சங்களை அடிப்படையாக வைத்து எம்.பி-க்களின் செயல்பாடுகளை அலசுவோம்.
அமைச்சர்களாக இருந்தவர்களைத் தவிர மற்றவர்களை எடை போட்டபோது, முதல் ரேங்க், திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராமசுப்புவுக்கு. இரண்டாவது ரேங்க்கில் சுகவனம் (தி.மு.க.), மூன்றாவது ரேங்க்கில் தாமரைச் செல்வன் (தி.மு.க.) இருக்கிறார்கள். நான்காவது, ஐந்தாவது இடங்களில் செம்மலை (அ.தி.மு.க.), சிவசாமி (அ.தி.மு.க.) உள்ளனர். பார்லிமென்ட் கிளாஸில் கடைசி இடம் டி.வேணுகோபால் (தி.மு.க.). அதற்கு முந்தைய இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தொல். திருமாவளவன் இருக்கிறார்.
கட்சிவாரியாக அலசினால் தி.மு.க. எம்.பி-க்களில் முதல் இடம் சுகவனத்துக்கும், கடைசி இடம் டி.வேணுகோபாலுக்கும் போகும். அ.தி.மு.க. எம்.பி-க்களில் செம்மலைக்கு முதல் இடம். கடைசி இடம் ஓ.எஸ்.மணியன். ஆனால், இந்த இரண்டு பேருக்குமே ஜெயலலிதா இப்போது சீட் தரவில்லை. காங்கிரஸ் எம்.பி-க்களிலேயே கடைசி இடத்தில் இருக்கிறார் கிருஷ்ணசாமி. முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரான இவர், அன்புமணியின் மாமனார்!
கேள்விகள் எழுப்புவது, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுவது போன்ற சில சம்பிரதாயங்கள் அமைச்சர்களுக்குக் கிடையாது. அதன் அடிப்படையில் தமிழக அமைச்சர்களாக இருந்து பதவியை ராஜினாமா செய்தவர்களையும், இப்போது அமைச்சர்களாக இருப்பவர்களையும் மதிப்பிட்டபோது அதில் முதல் இடம் பிடித்தவர்... '15 நாள் புகழ்’ நாராயணசாமி. அடுத்தடுத்த இடங்களில் ப.சிதம்பரம், பழனிமாணிக்கம், காந்தி செல்வன் வருகிறார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இந்த ரிப்போர்ட்டில் கடைசி இடம் 'அஞ்சாநெஞ்சன்’ அழகிரிக்கு. எந்தப் பிரிவிலும் அவர் மார்க் வாங்காமல் சைபர் மேல் சைபர்களாகக் குவித்திருக்கிறார்.
ஒவ்வொரு எம்.பி-க்கும் தொகுதியின் வளர்ச்சிக்காக 'தொகுதி மேம்பாட்டு நிதி’ என ஆண்டுக்கு ஐந்து கோடி வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு 25 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. அந்த நிதியைக்கூட சிலர் முழுமையாகப் பயன்படுத்தவில்லை. இந்த நிதியை 100 சதவிகிதம் பயன்படுத்தியவர்களில் முதல் இடத்தில் இருக்கிறார் ஆதிசங்கர். இரண்டாவது இடத்தில் மு.க.அழகிரியும், மூன்றாவது இடத்தில் குமாரும் இருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் ஆங்கிலம், இந்தி மொழிகளில் பேச விரும்பாத 'அமைச்சர்’ அழகிரி, 'தமிழிலேயே பேசட்டும்’ என சபாநாயகர் மீரா குமார் சொல்லியும் கண்டுகொள்ளவில்லை. ரித்தீஷ், நெப்போலியன், கே.பி.ராமலிங்கம் இவர்கள் அழகிரியோடு புடைசூழ அரிதாக நாடாளுமன்றத்துக்கு வருவார் அழகிரி. அமர்வார்; சில நிமிடங்களில் கிளம்பிவிடுவார். மற்ற எந்த வட இந்திய எம்.பி-க்களுடனும் பேச மாட்டார். ஆனால், ஆச்சரியமாக, பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கிஷார் சந்திரா தேவ் என்பவரிடம் சகஜமாக உரையாடுவார் அழகிரி. அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றாலும், அழகிரியின் பள்ளித் தோழன். கோபாலபுரத்தில் ஒன்றாக கிரிகெட் விளையாடியவர்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புண்ணியத்தில் எம்.பி.-யான ஆரூண், சித்தன், கிருஷ்ணசாமி, விஸ்வநாதன், மாணிக் தாகூர் ஆகியோர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதுவுமே செய்யவில்லை.  பாராளுமன்ற ஊழியர்களால் அதிக சலாம் அடிக்கப்பட்ட எம்.பி. ஆரூண். பீடியைப் போல கரன்சிகளை பாக்கெட்டில் சுருட்டி வைத்திருப்பார். அதைத் தாராளமாக ஏராளமாக ஊழியர்களுக்கு வழங்குவார். அதனால் அவருக்கு ஸ்பெஷல் சலாம்!
அ.தி.மு.க. எம்.பி-க்களில் தம்பிதுரைதான் 'நாடாளுமன்றத்தின் ஜெயலலிதா’! அவரை மீறி அங்கே யாரும் பெர்ஃபார்மன்ஸ் செய்துவிட முடியாது. அ.தி.மு.க. உறுப்பினர்கள் எது பேசுவதாக இருந்தாலும் அவர் அனுமதி பெற்ற பிறகே பேச முடியும்.
தமிழக எம்.பி-க்களில் மத்திய அமைச்சர்களாகப் பணிபுரிந்தவர்களுள் தங்கள் துறை மூலம் கிள்ளுக்கீரை நன்மைகூட செய்யாதவர்களில் முன்னிலையில் இருப்பவர்கள் ஜெகத்ரட்சகன்,  நெப்போலியன், பழனிமாணிக்கம், காந்திசெல்வன் ஆகியோர். ப.சிதம்பரம் தனது சிவகங்கை தொகுதிக்கு நிறைய வங்கிக் கிளைகளையும், ஏ.டி.எம். சென்டர்களையும் கொண்டுவந்தார். சோனியாவை ஒரு முறையும், மன்மோகன் சிங்கை இரண்டு முறையும் தொகுதிக்கு அழைத்துவந்தார். திருமயத்தில் பாய்லர் ஆலை குழாய்கள் பிரிவை பிரதமரை வைத்து திறந்துவைத்தார்.    
ஆக மொத்தத்தில், 'சிறப்பாகச் செயல்பட்டவர்கள்’ என்று தமிழக எம்.பி-க்களில் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. 'மோசமானவங்கள்ல முக்கியமானவங்க’ என்ற ரீதியில்தான் 40 எம்.பி-க்களின் சொற்ப சாதனைகளை பூதக்கண்ணாடி வைத்து தேட வேண்டியிருக்கிறது. பிறகு, இந்தியா எப்படி வல்லரசு ஆகும்?

- Vikatan

No comments:

Post a Comment