Saturday, March 1, 2014

செல்லுபடியாகுமா செலெரியோ?

'இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக’ என்று விளம்பரப்படுத்துவதுப் போல, 'இந்தியர்களின் கார் ஓட்டும் பழக்கத்தையே மாற்றி அமைக்க வந்திருக்கும் கார்’ என்று செலெரியோவைச் சத்தம் போட்டு அறிமுகப்படுத்தி இருக்கிறது மாருதி.
 ''கியர்-கிளட்ச் என்று மாற்றி மாற்றி அல்லாடி டிரைவ் செய்து, மக்கள் அலுத்து விட்டார்கள். அவர்களை இந்த இரண்டின் இம்சையில் இருந்தும் விடுதலை செய்யும் விதமாக 'ஈஸி டிரைவ்’ எனப்படும் 'ஆட்டோ கியர் ஷிஃப்ட்’ தொழில்நுட்பத்தை செலெரியோவில் அறிமுகப்படுத்தி இருக்கிறோம்'' என்கிறது மாருதி.
ஐரோப்பிய நாடுகள், ஆட்டோமேட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்(AMT)  எனப்படும் இந்தத் தொழில்நுட்பத்தைக் கடந்து, அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறிச் சென்றுவிட்டாலும், மாருதி இதை செலெரியோ வாயிலாக அறிமுகப்படுத்தி இருப்பதற்குக் காரணம், இது விலை மலிவான ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் என்பதுதான்.
மாருதியின் சிறப்புகளுக்குக் காரணமே, இந்தச் சிக்கனம்தான். இன்று நாட்டில் இரண்டு கார்கள் விற்பனையானால், அதில் ஒன்று மாருதியின் கார். 'ஜென் எஸ்திலோ’ மற்றும் 'ஏ ஸ்டார்’ ஆகிய இரண்டு கார்களுக்கு வழியனுப்பு விழா நடத்திவிட்ட மாருதி, அந்த இழப்பை ஈடுசெய்யும் விதமாக செலெரியோவை அறிமுகப்படுத்தி இருக்கிறது. விலைப் படிக்கட்டுகளின்படி பார்த்தால், வேகன் ஆர் மற்றும் ரிட்ஸ் ஆகிய இரண்டுக்கும் நடுவில் செலெரியோவை பொசிஷன் செய்திருக்கிறது. 'சரி, இது எதனுடன் போட்டி போடும்?’ என்பதிலும் மாருதி தெளிவாக இருக்கிறது. மாருதியின் குறி ஹூண்டாய் ஐ10தான். கிராண்ட் ஐ 10 வெற்றியால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது, அதன் உடன்பிறப்பான ஐ10தான் என்று மாருதி கருதுவதால், செலெரியோவை ஐ10 காருக்கு எதிராக அது களம் இறக்கி இருக்கிறது. செலெரியோவின் விலையும் சரி, மற்ற அம்சங்களும் சரி, ஐ10 காருக்குத்தான் அதிகப் போட்டியாக இருக்கப் போகிறது.
வெளிப்புறத் தோற்றம்
இது, ஐ10 காரோடு போட்டி போட்டாலும் செலெரியோவின் டிஸைனில் எந்தப் புதுமையும் இல்லை. அதேபோல, ஸ்விஃப்ட்டின் டிஸைனில் வெளிப்படும் எந்தப் புதுமையும் இதில் இல்லை. வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் ஆல்ட்டோவின் சாயலிலேயே செலெரியோவை டிஸைன் செய்துவிடுவது என்று, மாருதியின் டிஸைனர்கள் ஏன் முடிவு செய்தார்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் இதையும் மீறி செலெரியோவின் க்ரில், ஹெட்லைட் ஆகியவை காருக்குப் புதிய தோற்றத்தைக் கொடுக்க முயற்சி செய்கின்றன.
உள்ளலங்காரம்
இத்தனை சின்ன காரில் இவ்வளவு பெரிய இடம் எங்கிருந்து வந்தது என்று ஆச்சரியப்படும் அளவுக்கு, காரின் பின்னிருக்கையில் கை கால்களை நீட்டி தாராளமாக உட்கார முடிகிறது. இருந்தாலும் இரண்டு பேர் உட்கார்ந்தால் தாராளமாகத் தெரியும் இது, மூன்று பேர் உட்கார்ந்தால் அசௌகரியமாக இருக்கிறது. பின்னிருக்கைகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஹெட்ரெஸ்ட் இன்னும் பெரிதாக இருந்திருந்தால், இன்னும் பாதுகாப்பாக இருந்திருக்கும். இப்போது முன்னிருக்கைகளுக்கு வருவோம். டிரைவர் சீட்டின் பொசிஷன் உயரமாக இருப்பதும், ஐ10 மற்றும் மாருதி ரிட்ஸில் இருப்பதைப் போலவே கியர் லீவர் கைக்கு எட்டும்விதமாக சற்றே மேலாக இருப்பதும் வசதி.
பூமாலையின் வடிவில் இருக்கும் சென்டர் கன்ஸோல், பார்வைக்கு இதமாகக் காட்சியளிக்கிறது. இதன் உள்ளலங்காரம் ஐ10 காரோடு போட்டி போடும் அளவுக்கு இல்லை.  ஸ்மார்ட் போன் மற்றும் ப்ளூ-டூத் உடன் காரின் ஆடியோ சிஸ்டத்தை இணைத்துக்கொள்ள வசதி இருக்கிறது. பாட்டில் மற்றும் கப்புகள் வைக்கவும் கணிசமாக இடம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். க்ளோவ் பாக்ஸ் இன்னும்கூட கொஞ்சம் பெரிதாக இருந்திருக்கலாம். 235 லிட்டர் அளவுக்கு இருக்கும் டிக்கியில் மேலும் பொருட்களை வைக்க வேண்டி வந்தால், பின்னிருக்கைகளில் ஒன்றை மடக்கிவிட்டுக் கொள்ளலாம். மேலும் தேவைப்பட்டால், இரண்டு இருக்கைகளையும் மடக்கிவிடலாம்.
இன்ஜின்
சிட்டி கார் என்ற வகையில் பார்த்தால், செலெரியோவிடம் குறை சொல்ல முடியாது. இதில் இருப்பது 1 லிட்டர் கே10 இன்ஜின்தான் என்றாலும், இதன் வால்வு மற்றும் ஸ்ப்ரிங்குகள் துவங்கி ஏராளமான விஷயங்களை மாருதி ரீ-டிஸைன் செய்திருக்கிறது. அதனால், இந்த இன்ஜினை ’கே10பி’ என்று அது குறிப்பிடுகிறது. இந்த மாற்றங்களினால் இன்ஜினின் சக்தி வழக்கமான 67bhpக்கு மேல் உயர்ந்து விடவில்லை. ஆனால், இது இன்ஜின் இயங்கும் விதத்தை மாற்றி இருக்கிறது. இதனால், ஆக்ஸிலரேட்டரை எவ்வளவு அழுத்தினாலும் அது செலெரியோவுக்குப் பிடிக்கிறது.
ஆனால், இன்ஜின் சத்தம் காருக்குள்ளே வருவதுதான் ஏன் என்று தெரியவில்லை. 0 -100 கி.மீ வேகத்தை 14.9 விநாடிகளில் கடந்துவிடுகிறது. இது போட்டி கார்களைவிட எவ்வளவோ பெட்டர். இதற்குக் காரணம், இந்த காரின் எடை வெறும் 830 கிலோதான். இதுவும் ஐ10 காரைவிட குறைவுதான். காலியான நெடுஞ்சாலைகளிலும் இது சக்தி போதாமல் திணறவில்லை. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 158 கி.மீ. மேனுவல் மற்றும் ஆட்டோ கியர் ஷிப்ட் என்று இரண்டு விதமாகவும் செலெரியோ விற்பனையாகிறது. மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட செலெரியோவை எடுத்துக்கொண்டால், இது ஆல்ட்டோ கே10 மற்றும் வேகன் ஆர் ஆகியவற்றில் இருக்கும் கியர்பாக்ஸ்தான். ஆனால், மேம்படுத்தப்பட்ட கியர் பாக்ஸ்.
மாருதி கூவிக் கூவி விளம்பபடுத்தும் ஈஸி டிரைவ் எனப்படும் ஆட்டோமேட்டிக்  மேனுவல் டிரான்ஸ்மிஷன்தான் (AMT)உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இதை வழக்கமான ஆட்டோமேட்டிக் கார் என்று சொல்ல முடியாது. மாருதியும் இதை அப்படிக் குறிப்பிடவில்லை. இதில் 'பார்க்கிங் மோடு’-ஐக் குறிக்கும் றி என்ற 'மோடையே பார்க்க முடியாது. ஏனெனில், இந்த (AMT)க்கு இது தேவையில்லை. முழுமையான ஆட்டோமேட்டிக் என்பது டார்க் கன்வெர்ட்டர்கள் மற்றும் ட்வின் கிளட்ச் ஆட்டோவைக் கொண்டது. 'அதனால், ஓட்டுபவர்களுக்கு என்ன?’ என்று கேட்டால், வழக்கமான ஆட்டோமேட்டிக் என்றால், காரின் வேகம் அதிகரிக்கும்போது ஒரு கியரில் இருந்து அடுத்த கியருக்கு கார் மாறும்போது, அது மாறுவதே தெரியாமல் மாறும். ஆனால், செலெரியோவில் இருக்கும் (AMT) தொழில்நுட்பத்தில் கியர் மாறுவதை உணர முடியும். செலெரியோவில் இதை உணர முடிகிறது. குறிப்பாக, முதல் கியரிலிருந்து இரண்டாம் கியருக்கு மாறும்போது உணர முடிகிறது. ஆனால், இது பெர்ஃபாமென்ஸைப் பெரிதாகப் பாதித்துவிடவில்லை. 0-100 வேகத்தைக் கடக்க ஈஸி டிரைவ் எடுத்துக்கொள்ளும் நேரத்துக்கும்  மேனுவல் எடுத்துக்கொள்ளும் நேரத்துக்குமான இடைவெளி, வெறும் 1.66 விநாடிகள்தான்.
கிளட்ச்-கியர் என்று எதுவும் இல்லாமல், ஹோண்டா ஆக்டிவா மாதிரி காரை ஓட்டிச் செல்லும் இந்த 'ஈஸி டிரைவ்’ வசதி, மனைவிக்குப் பிடிக்கும். ஒரு வேளை இது கணவருக்குப் பிடிக்கவில்லை என்றால், அவர் 'மேனுவல் மோட்’-ல் வைத்து இந்த காரை ஓட்டிக்கொள்ள முடியும்.
இந்த ஈஸி டிரைவின் ஹைலைட், இதன் மைலேஜ். ’லிட்டருக்கு 23.1 கி.மீ கொடுக்கும்' என்று சொல்கிறது அராய். எந்தக் கோணத்தில் பார்த்தாலும் வேறு எந்த ஒரு ஆட்டோமேட்டிக் காரும் இப்படி ஒரு மைலேஜ் கொடுப்பதில்லை.  அதேபோல, செலெரியோ அதிக மார்க் வாங்கும் இன்னொரு ஏரியா சஸ்பென்ஷன். இதன் சாஃப்ட் சஸ்பென்ஷனைப் போலவே இதன் லைட் ஸ்டீயரிங்கும் கச்சிதமான டர்னிங் சர்க்கிளும் கார் ஓட்டுவதை மிக ஈஸியான விஷயங்களாக்கி விடுகின்றன.
ஈஸி டிரைவ் வசதிகொண்ட செலெரியோவைத்தான் மாருதி வெகுவாக விளம்பரப்படுத்துகிறது. ஆனால், இதில் விலை குறைந்த Lxi மற்றும் VxI   ஆகிய இரண்டு மாடல்களை மட்டுமே மாருதி ஈஸி டிரைவ் ஆப்ஷனோடு அறிமுகப்படுத்தி இருக்கிறது. காற்றுப் பைகள், ஏபிஎஸ் ஆகிய பாதுகாப்பு வசதிகள்கொண்ட Zxi மாடலில், மாருதி 'ஈஸி டிரைவ்’ ஆப்ஷனைக் கொடுக்காதது ஏன்?

- Motor vikatan

No comments:

Post a Comment