Tuesday, March 11, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 27

ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து, எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்து, பத்திரிகைகளை முடக்கி, சிறைகளைச் சித்ரவதைக் கூடங்களாக மாற்றி, யாரெல்லாம் காங்கிரஸ் நடவடிக்கைகளை எதிர்த்தார்களோ அவர்களை எல்லாம் முடக்கிவைத்த அவசரநிலைக் காலகட்டத்தை, இந்தியாவின் வளர்ச்சியான காலகட்டம் என்று வர்ணித்தார் பிரதமர் இந்திரா. நாட்டில் கட்டுப்பாடு ஏற்படவும், நல்வாழ்வை நோக்கி வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தவும்தான் அவசரநிலை அறிவிக்கப்பட்டது என்று சொல்லி, அதன் ஓராண்டு நிறைவு விழாவைக் கொண்டாடினார் இந்திரா.  அதற்காகப் பல்வேறு பத்திரிகைகளில் சிறப்பு பேட்டிகளையும் கொடுத்தார். அதுதான் கொடுமையிலும் கொடுமை!

'சமாச்சார்’ செய்தி நிறுவனத்துக்காகவும், 'அமிருதபஜார் பத்திரிகா’ இதழின் ஆசிரியர் துஷார் காந்தி கோஷ§க்கு அளித்த பேட்டியிலும், பிரதமர் இந்திரா சொன்ன விஷயங்களைப் பார்த்தால், அன்றைய காலகட்டத்தில் அவரது சிந்தனையை முழுமையாக உணர முடியும்.
இந்திராவின் பதிலில் மட்டுமல்ல... கேள்வியில்கூட எப்படிப்பட்ட அரசியல் இருக்கிறது என்பதை கவனியுங்கள்!
கேள்வி: தேசிய நெருக்கடியை முன்னிட்டு அவசரநிலை அறிவிக்கப்பட்டபோது அதை மிகக்கடுமையாக எதிர்த்த சிலரும்கூட, இன்று அதன்மூலம் நாட்டில் இந்த ஓராண்டு காலத்தில் பொருளாதாரப் புரட்சி தோன்றியிருப்பதை ஒப்புக்கொள்கிறார்கள். அரசியல் துறையில், இந்த ஓராண்டு காலத்தில் கிடைத்துள்ள பலன்கள் என்று நீங்கள் குறிப்பிட விரும்புவது என்ன?
பதில்: அரசியல் துறையைவிட பொருளாதாரத் துறையிலேயே நாம் பலன் கண்டிருக்கிறோம். பொருளாதார வளர்ச்சி, சமூகத்தில் இழைக்கப்படும் அநீதிகளை அகற்றுதல், ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது ஆகியவற்றில் செலுத்தப்படும் முயற்சிகளில் இருந்து கவனத்தைத் திருப்பவும் கலைக்கவும் எதிர்க்கட்சியினர் முற்படுகிறார்கள். வெவ்வேறு தோற்றங்களிலும் விதவிதமான கோஷங்களிலும் இந்த சக்தி மறைந்திருந்தாலும், நாட்டில் குழப்பம் விளைவிக்கும் அவர்களது நோக்கம் என்னவோ அப்படியே மாறாமல் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
கேள்வி: உள்நாட்டில் சிலருடைய எதிர்ப்பு நேர்ந்தாலும், வெளிநாடுகளில் இருந்து விரோதமான உணர்ச்சிகள் தோன்றினாலும், நாட்டுக்குக் கிடைக்கும் பொருளாதார, அரசியல் லாபங்களை உத்தேசித்து, அவசரநிலைமையை நாம் பொறுத்துக்கொள்ளலாம் என்று மக்கள் பலரும் நினைக்கிறார்கள். நீங்கள் இந்தக் கருத்தை ஏற்கிறீர்களா?
பதில்: இன்று இவ்வாறு நம்மிடம் பகைமைப் பாராட்டுபவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவசரநிலை அறிவிக்கப்படுவதற்கு முன்பே இருந்தார்கள். அவர்களுடைய கண்களுக்கு அரசாங்கத்தின் செயல்கள் எதுவுமே சரியாகத் தோன்றியது இல்லை. அவர்களில் ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள் எல்லாருமே என் தந்தையை அவருடைய ஆயுட்காலம் முழுவதும் அவருடைய கொள்கைகளுக்காக எதிர்த்தவர்களே.
சமீபத்தில் தோன்றியுள்ள ஒரு புதிய சிக்கலை, மேற்கத்திய நாடுகளின் பத்திரிகைகள் மக்கள் கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றன. ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் உள்ள நாடுகளின் அரசாங்கங்களை நிலைகுலையச் செய்வதில், தொடர்ந்து தீவிரமான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அந்த நாடுகளில் உள்ள சுதந்திர உணர்ச்சி மிகுந்த தலைவர்களை அவதூறுக்கு ஆளாக்குவதிலும், கொலை செய்வதிலும்கூட இந்த சக்திகள் முனைந்திருக்கின்றன. அந்தந்த நாட்டில் உள்ள சில தனிப்பட்ட நபர்களையோ, குழுவினரையோ தங்கள் வசப்படுத்தவும், பணம் செலவுசெய்து வாங்கிவிடவும், அவர்கள் முற்படுகிறார்கள். தெரிந்தோ, தெரியாமலோ இந்த முயற்சிக்கு சில நாட்டினர் துணை நிற்கிறார்கள்.
கேள்வி: 'அரசாங்கம், தான் செய்துமுடிப் பதாக மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை, மன உறுதியுடன் நிறைவேற்றி வைக்க முற்பட்டிருந்தால், அவசரநிலைக்கு அவசியம் இருந்திராது. அப்படி ஓர் அறிவிப்பு இல்லாமலே இந்த ஓராண்டில் கிடைத்த வெற்றிகளை இந்தியா சாதித்திருக்க முடியும்’ என்று எதிர்க்கட்சிகள் சொல்லிக்கொண்டு வருவதைப் பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்னவென்று கூறுவீர்களா?
பதில்: மக்களுக்கு நாங்கள் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில், நாங்கள் மெத்தனமாகச் செயல்பட்டிருந்தால், அதற்குக் காரணம் போதிய மன உறுதி இல்லாமை அல்ல; எங்களை மீறிய சில சந்தர்ப்பங்களே அதற்குக் காரணம். பங்களாதேஷில் விளைந்த சங்கடமான சூழ்நிலையும், தொடர்ந்து விளைந்த போரும், அரசாங்கத்தின் மீது பளுவான பொறுப்புகளைச் சுமத்திவிட்டன. இதைத் தவிர, சில பகுதிகளில் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கும்கூட, வறட்சி நிலை ஏற்பட்டிருக்கிறது. நாடு இத்தகைய இன்னல்களுக்கு ஆளாகி இருக்கும்போது, ஒன்றுசேர்ந்து தோள் கொடுத்து, மக்களின் உதவிக்கு வரவேண்டியது எதிர்க்கட்சிகளின் பொறுப்பு அல்லவா? இதற்கு மாறாக, இந்த நிலையைப் பயன்படுத்திக்கொண்டு கட்டுப்பாடின்மை, பலாத்காரம், குற்றங்கள் புரிவது ஆகியவற்றுக்கான சூழ்நிலையை மென்மேலும் தூண்டுவதிலேயே அவர்கள் ஈடுபடலாம் என்று எண்ணினார்கள். சமுதாயத்தின் பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்களும் இந்த அழிவு சக்தியின் சூழலால் பாதிக்கப்பட்டார்கள். உலக வங்கிகூட, நாங்கள் சந்திக்க நேர்ந்த இந்த இடையூறுகளையும், அவற்றை நாங்கள் துணிவுடன் சமாளித்துப் பெற்ற வெற்றியையும் பாராட்டி இருக்கிறது.
கேள்வி: அவசரநிலையைத் தொடர்ந்து நீட்டிப்பதன் மூலம்தான் நாட்டின் முன்னேற்றத்தைச் சாதிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது, அரசியல் சட்டத்தில் தேவையான மாறுதல்களைச் செய்து முடித்த பிறகு, அவசரநிலையை முடித்துக்கொள்வது சாத்தியம் என்று கருதுகிறீர்களா?
பதில்: அவசரநிலையை முடிவின்றி நீட்டிப்பது என்பது சாத்தியம் அல்ல. அதே சமயம் நாட்டு மக்களின் பல பகுதியினருக்கும், அர்த்தமுள்ள ஜனநாயகக் கொள்கைகளின் அமைப்பு உருவாகி அதன் நன்மைகள் கிடைக்கும்படியான ஒரு சூழ்நிலையை நிச்சயமாகக் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
கேள்வி: 20 அம்சப் பொருளாதாரத் திட்டத்தை நீங்கள் அறிவித்தபோது, விலைவாசி பற்றிச் சிந்தித்து எடுக்க வேண்டிய முயற்சிகளுக்குத் தடைசெய்வதுபோல் எழுந்த சவாலை நீங்கள் வெற்றிகரமாகச் சமாளித்துள்ளதாக நினைக்கிறீர்களா? விலைவாசி குறைவதற்கு, உற்பத்தி பெருக வேண்டும். இதில் கணிசமான முன்னேற்றம் கிடைத்துள்ளதா?
பதில்: பெருமளவுக்கு விலைவாசிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. விலைவாசி உயராமல் தடுத்துள்ளோம். தொடர்ந்து தடுத்துக் கட்டுப்படுத்திக்கொண்டு வருகிறோம். ஆனால், எதையும் நாமே நேரடியாகக் கட்டுப்படுத்தக் கூடிய வசதிகள் நமது அமைப்பில் இல்லை. பெரும்பாலான பொருட்களை உற்பத்தி செய்வது, தனியார் துறையினரிடம் இருக்கிறது. சந்தைகளில் பல்வேறு வகையான சக்திகளுக்கு ஈடுகொடுக்க வேண்டியிருக்கிறது.
உற்பத்தியைப் பெருக்குவதுதான் எங்கள் முக்கியமான முயற்சி. உற்பத்திப் பெருகி இருப்பதும் உண்மை. குறிப்பாக, பொதுத் துறையில் உள்ள நிறுவனங்கள் இதில் முன்னேற்றம் காட்டியிருக்கின்றன. பொதுத் துறையில் உள்ள நிறுவனங்கள் இப்போது நிறைய லாபம் ஈட்டத் தொடங்கியுள்ளன. நிறைய நஷ்டம் ஏற்பட்டுக்கொண்டிருந்த இடங்களில், அத்தகைய நஷ்டம் பெருமளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.
கேள்வி: கடத்தல்காரர்களின் கொட்டம் ஒடுக்கப்பட்டிருக்கிறது. வரி ஏய்ப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. ஏராளமான கறுப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டு வெளியே கொண்டுவரப்பட்டிருக்கிறது. தொழிற்சாலைகளில் நிலைமை நிச்சயமாக முன்னேறி இருக்கிறது. ஏற்றுமதி வாய்ப்புகள் பெருகி இருக்கின்றன. ஆனால், இவற்றில் பல நிலைகளில் உள்ளே பொருந்திவிட்ட சிறு குறைகள் குந்தகம் விளைவிக்கின்றன. இந்த சிறு இடையூறுகளைத் தவிர்க்க, காலவரையறை செய்யப்பட்ட ஒரு திட்டத்தை வகுத்து, தொழில் முயற்சிகளைக் கூட்டவும், புதிய தொழில் முதலீடுகளுக்கு ஊக்கமளிக்கவும் நீங்கள் உத்தேசித்து இருக்கிறீர்களா?
பதில்: இடையூறுகளை நீக்குவதும், உற்பத்திக்கு ஊக்கம் தருவதும், புதிய முதலீடுகளைத் தூண்டி ஆதரிப்பதும் எங்களுடைய முக்கியக் கொள்கைகளாக இருந்து வருகின்றன. பல புதிய யோசனைகளை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். எங்கள் அமைச்சர்கள் தங்களால் ஆனவரை முயன்று வருகிறார்கள். கள்ளக் கடத்தல் பற்றிக் குறிப்பிட்டீர்கள். மறுபடியும் அது தலைதூக்கத் தொடங்கி இருக்கிறது. எங்கள் தீவிர முயற்சிகளைக் கொஞ்சம் தளர்த்தினாலும், அது மறுபடியும் தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. நாங்கள் தொடர்ந்து விழிப்பாக இருந்து செயல்பட்டு வருகிறோம். ஒன்றுக்கொன்று தொடர்புள்ள, இணைந்த முயற்சிகள் அரசாங்கத் துறைகளால் செய்யப்பட வேண்டும். மக்கள் முழு மனத்துடன் ஈடுபாடுகொண்டு, ஒத்துழைக்க வேண்டும். மக்களின் பங்கு என்பது என்ன? தனிப்பட்ட ஒரு பிரஜை தவறான வழிகளில் ஈடுபட்டாலும் அல்லது, அரசாங்க அலுவலர்கள் மக்களை வருத்தித் துன்புறுத்தினாலும், உடனே அதை எங்கள் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்பதுதான். இப்படிப்பட்ட முறையீடுகளையும் யோசனைகளையும் கவனிப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய முயன்று வருகிறோம்.
கேள்வி: அடுத்த 12 மாதங்கள் எப்படியிருக்கும் என்று உருவகம் செய்து பார்க்கிறீர்கள்?
பதில்: அடுத்த 12 மாதங்களின் விளைவுகளை, கடந்த 12 மாதங்களுடன் இணைத்துப் பார்ப்பது சரியல்ல. பொருளாதார நிலையில் ஒரு நல்ல வளர்ச்சிபெற இன்று நாடு தயாராகிக்கொண்டிருக்கிறது. நாம் நமது திட்டங்களில் தொடர்ந்து நீர்ப்பாசனத்துக்கும், மின்சார உற்பத்திக்கும் கவனம் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துவருகிறோம். தேவையான முதலீட்டு வசதிகள் இல்லாமையினால், புதிய திட்டங்கள் பலவற்றைத் தொடங்க முடியாமல் இருக்கிறோம். அவை பற்றிய யோசனைகள் தேக்க நிலையிலேயே இருக்கின்றன. எடுத்துக்கொண்டு பாதி முடித்துவிட்ட திட்டங்களை, அவற்றை அந்த நிலையில் நட்டாற்றில் விட்டுவிட்டால் நஷ்டமாகிவிடுமே என்பதற்காக தொடர்ந்துகொண்டிருக்கிறோம். நிதி நிலைமை சிரமமாக இருப்பதால், ஒப்புதல் அளிக்கப்பட்டுத் தயாராக இருக்கும் திட்டங்களைக்கூடத் தள்ளிப்போட்டிருக்கிறோம். நல்ல பருவமழையைப் பொறுத்தே பெருமளவுக்கு நாட்டின் நல்லகாலம் அமைந்திருக்கிறது. வானிலை முன்போல இல்லை. ரொம்ப மாறிவிட்டது. டில்லியின் இன்றைய நிலை, ஜூன் மாதம் போலவா உங்களுக்குத் தோன்றுகிறது?'
- இப்படிச் சொல்லிக்கொண்டு இருந்தார் இந்திரா.
அவசர நிலைக் காலத்தில் நடந்த சில நன்மைகள் இன்றுவரை நினைவுகூரப்படுகின்றன. கடைக்காரர்கள் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களின் விலைப்பட்டியலை வெளியிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள். கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் அதற்கான வருமான வரியைத் தாங்களாகவே முன்வந்து கட்டவேண்டும் என்பதை வலியுறுத்தி சிறப்பு அறிவிப்பு செய்யப்பட்டது. அதனால் சுமார் 250 கோடி ரூபாய் வரை அரசு கஜானாவுக்கு வந்து சேர்ந்தது. நாடுமுழுவதும் கடத்தல், கள்ளச்சந்தைக்காரர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். இப்படிப்பட்டவர்களைக் கைது செய்வதற்காகத்தான் 'மிசா’ சட்டமே ஒரு காலத்தில் கொண்டுவரப்பட்டது. இப்படி மேலோட்டமான சில விஷயங்கள் பயத்தின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்டன. ஆனால் சட்டம் சந்தித்த அவலம்தான் அந்தக் காலத்தில் அதிகம்!

- Vikatan

No comments:

Post a Comment