Tuesday, March 11, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 26

1976-ம் ஆண்டு பிப்ரவரி 1, 2 ஆகிய இரண்டு நாட்களும் மரணத்தின் குரலை சென்னை மத்தியச் சிறைச்சாலை கேட்டது. அதுவரை தொழுநோயாளிகள் அடைக்கப்பட்டு இருந்த அறையைத் தேர்ந்தெடுத்து, அரசியல் கைதிகளை அடைத்துவைக்கும் குரூரம் அன்று அரங்கேறியது. மத்தியச் சிறையில் ஒன்பதாவது பிளாக்கில் கைதிகள் அடைக்கப்பட்டபோது, வார்டன்கள், கைதி வார்டன்கள், முதன்மைத் தலைமை வார்டன், ஜெயிலர், உதவி ஜெயிலர் ஆகியோர் சேர்ந்துநின்று அரசியல் கைதிகளைத் தாக்கினார்கள். இது அன்றைய சிறைக் கண்காணிப்பாளராக இருந்தவர் முன்னிலையிலேயே நடந்தது.

இந்தக் காட்சிகளை அப்போது சிறைக்​கைதியாக அடைக்கப்பட்டு இருந்த சிட்டிபாபு டைரியாக எழுதினார். சிறைகளின் கோரத்தைச் சொல்லும் முக்கியமான ஆவணமாக இன்று​வரைக்கும் இருக்கும் புத்தகம் அது. சென்னை மத்திய சிறைச்சாலையில் 1976 பிப்ரவரி முதல் 1977 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் அரசியல் கைதிகளைக் கொடுமைப்படுத்தியதாகவும் அடித்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட மாண்புமிகு நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் தலைமையிலான கமிஷனில், மிக முக்கியமான ஆதாரமாக சிட்டிபாபுவின் சிறை டைரி இருந்தது.
''கர்வத்தோடு ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன. நாங்கள் அனைவரும் இரண்டாவது நுழைவாயிலைக் கடந்து சென்றோம். இப்போது நாங்கள் ஒரே வரிசையில் நின்றுகொண்டிருந்தோம். ஒருவர் அவசரமாக அங்கு வந்தார். அவர் வரும்போதே, 'யாருடா இவன்கள் எல்லாம்?’ என்று கத்திக்கொண்டே வந்தார். அவருடைய பேச்சே புதுமையாக இருந்தது. வரவேற்புக்குப் பின்னர் எங்களுக்கு வாழ்த்துக்கூறுவதுபோல அவை இருந்தன. 'இவன்களையெல்லாம் சோதனை போடுங்கள். எந்தப் பயலும் பணம் கொண்டுவந்திருக்கக் கூடாது’ என்று அவர் கூறினார். அப்போது ஒரு வார்டன், ஆசைத்தம்பியிடம் 67 ரூபாய் இருப்பதாகக் கூறினார். அவ்வளவுதான், அந்த அதிகாரியின் சொற்கள் கொடூரமாக இருந்தன. 'அப்படியா ஆசைத்தம்பி? உனக்கு மூளையில்லை? நீ அடிக்கடி சிறைக்கு வந்திருக்கிறாயே’ என்று பேசிக்கொண்டே போனார். அப்போதே எவருக்கும் புரிந்திருக்கும். அமைதியாக இருந்த பாம்பு தலையைத் தூக்கிப் படமெடுத்து ஆடத் தொடங்கிவிட்டதாக நாங்கள் அறிந்துகொண்டோம். 'இவர்களை எல்லாம் ஏழாவது பிளாக்கில் வேண்டாம், ஒன்பதாவது பிளாக்கில் அடைத்து வையுங்கள்’ என்று அவர் கட்டளையிட்டார்!'' என்று தொடங்குகிறது அந்த டைரி. ஒன்பதாவது பிளாக் என்பது அதற்கு முந்தைய தினம் வரை தொழுநோயாளியான கைதிகள் இருந்த அறை. இந்த அறையில் இவர்களை வைப்பதற்காகவே நோயாளிகளை இடம்மாற்றி காலி செய்துவிட்டார்கள் அதிகாரிகள்.
அந்த அறைக்குள் சிட்டிபாபு உள்ளிட்டவர்கள் நள்ளிரவில் அனுப்பிவைக்கப்பட்டனர். அறைக்குள் இருந்த துர்நாற்றத்துக்கு என்ன காரணம் என்றே அவர்களால் உணர முடியவில்லை. ஆனாலும், அதில்தான் அன்றைய இரவு முழுவதும் தூங்கினார்கள். இரவு ஒரு மணிக்கு மேல் மு.க.ஸ்டாலின் அழைத்துவரப்பட்டு அதே சிறையில் அடைக்கப்பட்டார். மறுநாள் மாலையில் என்ன நடந்தது என்பதை சிட்டிபாபு தனது டைரியில் விவரிக்கிறார்...
''இரவு 7.30 மணி. அந்த அறை இருட்டாக இருந்தது. அறைக்கு வெளியே இன்னும் ஓரிரு விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. இரவு சுமார் 8 மணிக்குச் சிலர் அங்கு நுழைவதை மங்கலான வெளிச்சத்தில் காண முடிந்தது. காக்கி ஆடை அணிந்தவர்களும் வெள்ளை ஆடை அணிந்தவர்களும் வந்தனர். அவர்கள் இரண்டு வரிசையாக நின்றனர். அந்த இரண்டு வரிசைகளுக்கும் இடையே அவர்கள் வைத்திருந்த கைத்தடி நீளத்துக்கே இடைவெளி இருந்தது. அறைக் கதவு திறக்கப்பட்டது. அடிக்கும் சப்தம் கேட்டது. அது சினிமாவில் நடப்பதைப்போன்று இருந்தது. கொலைகாரர்களின் கைகளில் இருந்த கைத்தடிகள் அரசியல் கைதிகளின் உடலைப் பதம் பார்த்தன. அய்யோ, அப்பா, அம்மா என்ற அழுகுரலும் கூக்குரலும் கேட்டன...
அடுத்து நாங்கள்! கதவு திறக்கப்படும் ஒலி கேட்டோம். கதவை அவர்கள் வேகமாகத் தள்ளினர். 'வாங்கடா’ என்று குரல் கேட்டது. நான் ஓர் அடி எடுத்துவைப்பதற்கு முன்பாக எனது கன்னத்தில் அறை விழுந்தது. அவர்கள் என்னை சுவற்றின் மேல் தள்ளிவிட்டனர். ஒருவர் என் வயிற்றில் அடித்தார். நான் சுவரில் சரிந்து உட்கார நினைத்தேன். ஆனால் வீராசாமி (ஆற்காடு வீராசாமி) மரம் போல் தரையில் சாய்ந்தார். அவரை ஒரு மதம் பிடித்த யானையைப் போன்ற ஒருவர் தனது வலது காலாலும் இடது காலாலும் உதைத்தார். கையாலும் அடித்தார்.
தமிழகத்து முதலமைச்சர் மகன் என்று நேற்றுவரை அறிந்திருந்த அந்த அதிகாரி, தன் கால் பூட்ஸால் அவன் அழகிய முகத்தைச் சுவை பார்க்க உதைத்தான். அடுத்து கொலைகாரன் ஒருவன் ஓங்கிய கோல், அவனது தோள் பட்டையில். காக்கி உடை அணிந்த வார்டன் ஒருவன், அவனது கன்னத்தில் கை நீட்டினான். இவர்கள் இவனை அடித்தே கொன்றுவிடுவர் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. ஏனையோர் தரையில் படுத்துக்கிடந்தனர். அவர்கள் உதவிக்காக எழுந்து வரமுடியாத நிலையில் இருந்தனர். உடனே என் தம்பியைத் தள்ளிக்கொண்டு குறுக்கே ஓடினேன். தடி அடிகள் என் கழுத்தில் விழுந்தன. அவை அடிகளே அல்ல; கொல்லன் உலைக்களத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பின் மீது சம்மட்டி கொண்டு அடிப்பதைப்போன்று அவை இருந்தன. இந்தக் கொடுமைகளைத் தாங்கிக்கொண்ட பின்னர், என் அருமைத் தம்பியை அறைக்குள் தள்ளிக்கொண்டு வர என்னால் முடிந்தது'' என்று போகிறது அந்த டைரி.
அடிகளை வாங்கி வாங்கி ஆசிரியர் கி.வீரமணியின் முகம் வீங்கிப்போயிருந்ததாகவும் சிட்டிபாபு எழுதி இருக்கிறார். 'விடுதலை’ என்.எஸ்.சம்பந்தம் ஏற்கெனவே இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டவர். அவரை அடித்தார்கள். 'இதற்கு மேல் அடித்தால் அவர் செத்துவிடுவார்’ என்று வீரமணி சொன்னதை அதிகாரிகள் கேட்கவில்லை. சிறை அதிகாரிகளின் நடவடிக்கையை ஜாலியன் வாலாபாக் சம்பவத்துடன் சிட்டிபாபு ஒப்பிட்டுள்ளார்.
''அடுத்து அடியார் (முரசொலி அடியார்) அனுப்பப்பட்டார். அந்தோ பரிதாபம், முந்தைய ஒரு தடவை தாம் அழைக்கப்பட்டிருப்பது போன்று நினைத்துக்கொண்டு அவர் சென்றார். அடியார் என்று அழைத்தவாறே அவர் அடிக்கப்பட்டார். அடிபட்ட பின்னர், அவர் அதிகாரியைச் சந்தித்தார். அன்று இரவு அவர் இருந்த சிறைக்கூடத்துக்கு நான் மாற்றப்பட்டேன். நீலநாராயணன் என்னோடு இருந்தார். வெட்டுண்ட மரம்போல கீழே விழுந்த அடியாரைத் தூக்கிவிட நீலம் முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. அடியாரது முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. ஆயினும், ஒரு சிறு அசைவுகூடத் தென்படவில்லை. அவரது வாயில் நுரை தள்ளியது. அவரது கைகால்கள் கடும் குளிர் கண்டது போன்று நடுங்கின. அவரது முகத்தில் சவக்களைத் தட்டியது. மரணம் அவரை நெருங்கியது'' என்று எழுதி இருக்கிறார் சிட்டிபாபு.
ஏன் இவர்கள் அடிக்கப்பட்டார்கள் என்பது குறித்து நீதிபதி இஸ்மாயில் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிடுகிறார்:
''திராவிட முன்னேற்றக் கழகத்தையும் நிறுவன காங்கிரஸையும் சேர்ந்த காவல் கைதிகளை அவர்களது கட்சியில் இருந்து விலகுமாறு சிறைத் துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். அந்த கைதிகளின் கூற்றுப்படி, அவர்கள் கட்சியில் இருந்து விலக விரும்பவில்லை. அவர்களை அடித்தும் அச்சுறுத்தியும் அவர்கள் கட்சியில் இருந்து விலக வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்கள் தாங்களாகவே முன்வந்து இந்த விலகல் கடிதத்தை கொடுக்கவில்லை. எனவே, சிறை அதிகாரிகள் அரசியல் கைதிகளை அவரவரது கட்சிகளில் இருந்து விலக ராஜினாமா கடிதங்களைக் கொடுக்கும்படி வலியுறுத்தியுள்ளனர் என்ற முடிவுக்கு நான் வருகிறேன்'' என்று சொல்லியிருக்கிறார் நீதிபதி. அந்தளவுக்கு நெருக்கடிகள் தரப்பட்டன.
மாநிலக் கட்சிகளையே தடைசெய்ய பிரதமர் இந்திரா திட்டமிட்டு இருப்பதாக, டெல்லியில் இருந்து தகவல் வந்தது. அப்போதுதான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று எம்.ஜி.ஆர். பெயர் மாற்றம் செய்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரையும் மாற்ற கருணாநிதிக்கு கட்சிக்குள் இருந்த சிலரே ஆலோசனை சொன்னார்கள். ஆனால், அப்படி மாறுதல் செய்யக் கூடாது என்பதில் கருணாநிதி உறுதியாக இருந்தார். சென்னை மத்திய சிறையில் இருந்து கருணாநிதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் ஒன்றில், 'கழகத்தின் தலைமையிலும் மாற்றம் கூடாது. பெயரிலும் மாற்றம் கூடாது’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. தேவையில்லாமல் இந்திராவை கருணாநிதி பகைத்துக்கொண்டதால்தான் இப்படிப்பட்ட சிக்கல் கட்சிக்கு வந்தது என்று சொல்லி சிலர் கருணாநிதியைத் தலைவர் பதவியில் இருந்து அகற்ற திட்டமிட்டார்கள். அதைத்தான் அந்தக் கடிதம் குறிப்பிடுகிறது.
தி.மு.க-வினரை மொத்தமாகச் சிறையில் வைப்பது, கருணாநிதி மற்றும் அவரது அமைச்சர்கள் மீது விசாரணை கமிஷன் வைப்பது, அவரைத் தலைமைப் பதவியில் இருந்து தூக்குவது, தொண்டர்களைப் பயமுறுத்தி அந்தக் கட்சியில் இருந்து விலகவைப்பது என எல்லாவிதமான அச்சுறுத்தல்களும் அந்தக் காலக்கட்டத்தில் செய்யப்பட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரை 1976-ம் ஆண்டு முழுக்கவே நெருப்பாறு ஓடிய ஆண்டாக கனன்றுகொண்டு இருந்தது.
இந்திராவுக்கு எதிராக அகில இந்தியக் கட்சிகள் அனைவரும் ஓர் அணியாகத் திரள வேண்டும் என்று கருணாநிதி அறிவித்தார். இதற்கான கலந்துரையாடல் கூட்டம் 76-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் நாள் தி.மு.க. எம்.பி-யான இரா.செழியனின் டெல்லி வீட்டில் நடந்தது. இந்திராவுக்கு எதிரான மிகப்பெரிய அஸ்திரமாக அந்தக் கூட்டம் அமைந்தது.
அசோக் மேத்தா (அகில இந்திய பழைய காங்கிரஸ்), பிலுமோடி (பாரதிய லோக்தளம்), பிஜு பட்நாயக் (சோஷலிஸ்ட் கட்சி), வாஜ்பாய் (ஜனசங்கம்) உள்ளிட்ட தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 'அனைவரும் ஏற்கத்தக்க உடன்பாடு இந்தக் கூட்டத்தில் எட்டப்பட வேண்டும்’ என்று கருணாநிதி சொன்னார். மறுநாள், இதே தலைவர்களது கூட்டம் ஹெச்.எம்.படேல் வீட்டில் நடந்தது. இந்திரா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்று இந்தக் கூட்டத்தில்தான் முடிவுசெய்யப்பட்டது. அப்போது பாட்னாவில் தங்கியிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண், தனக்கு இது மகிழ்ச்சியைத்தருவதாகக் கருணாநிதிக்குக் கடிதம் அனுப்பினார். எதிர்க்கட்சிகள் அகில இந்திய அளவில் ஓரணியில் திரளத் தொடங்கியதைப் பார்த்து திகைத்த இந்திரா, கொஞ்சம் இறங்கிவர ஆரம்பித்தார்.

- VIkatan

No comments:

Post a Comment