Thursday, March 13, 2014

ஆறாம் திணை - 79 மருத்துவர் கு.சிவராமன்

டந்த சில நூற்றாண்டுகளாகவே 'காயகல்பம்’ என்ற நுட்பமான அறிவியல், வணிகப்பிடிக்குள் சிக்கிச் சீரழிந்து வருகிறது. சிக்ஸ்பேக் வைத்த பலசாலி ஒருவர், தன் கையையும் காலையும் முறுக்கி ஒரு கண்ணாடிப் புட்டியைக் கையில் வைத்துக்கொண்டு, ''இந்தக் காயகல்ப லேகியத்தைச் சாப்பிட்டதால்தான் இந்த முறுக்கு உடம்பும், 'அந்த’ விஷயத்தில் வீரியமும் கிடைத்தது'' என்று கூறும் விளம்பரங்கள் இன்றைக்கு அதிகம். காயகல்பம் என்றாலே, ஆண்மைக் குறைவுக்கான மருந்து என அர்த்தமற்ற ஒரு காரணத்தைக் கற்பித்தன அறமற்ற வணிக வியூகங்கள்!
அன்று, வாழ்வை 'இறைவன்’ எனும் புள்ளியில் விரித்துப் பார்த்தவரும் சரி, 'இயற்கை’ எனும் புள்ளியில் சுருக்கிப் பார்த்தவரும் சரி, நோயற்று ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ்வது மட்டுமே அடிப்படை ஆரோக்கியம் என்பதைத் தெள்ளத்தெளிவாக அறிந்திருந்தனர்.
'உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன்... உயிர் வளர்த்தேனே!’ என்ற திருமந்திரமும், 'உயிர்க் குருதியெல்லாம் உடம்பின் பயனே... அயர்ப்பின்றி யாதியை நாடு’ எனும் ஒளவையின் வரிகள் சொன்னது அதைத்தான்.
சுருக்கமாகச் சொன்னால், அந்தக் காலத்திலேயே புழக்கத்தில் இருந்த தடுப்பூசி டானிக்குகள் என்றோ, புற்றாகும் மாற்றத்தைத் தடுக்கும் மருந்தாகவோகூட காயகல்ப அறிவியலைப் புரிந்துகொள்ளலாம். சில கற்ப மருந்துகளை, நோயில்லா காலத்தில் சில உணவு கட்டுப்பாடுகளுடன் ஒரு மண்டலம் அல்லது குறிப்பிட்ட சில நாட்கள் சாப்பிடுகையில் உடலுக்குப் பொதுவான நோய் எதிர்ப்பாற்றல் கூடும். உடல் தோல் சுருக்கம், முடி நரைப்பது நிற்கும் அல்லது தள்ளிப்போகும் என்ற கருத்தாக்கம் இருந்திருக்கிறது!
'அப்போ ஆயுள் அபாரமாக அதிகரிக்குமா? இப்போ நீங்களே அறிவியலுக்கு எதிராப் பேசுறீங்களே!’ எனச் சண்டைக்கு வர வேண்டாம்.
ஒரு மருந்து அல்லது நலப்புரிதல், வயோதிகத்தைத் தள்ளிப்போட உதவுகிறது என்றால், இன்றைய விஞ்ஞான புரிதலின்படி செல் அழிவை மீட்டெடுக்கும் பணியைச்           செய்யக்கூடிய தாவர நுண்கூறுகள் அதில் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் பொருள்.
பேராசிரியர் ரொனால்டு டேஃபீனோ என்கிற அமெரிக்க விஞ்ஞானி, டெலோமெரேஸ் (Telomerase) எனும் நொதியின் மூலம் வயோதிகத்தைக் கட்டுப்படுத்தலாம் எனும் நம்பிக்கையை எலிகள் மூலம் ஆய்வு செய்து நிரூபித்து, இது மனிதனிலும் சாத்தியம் என்று எழுதினார்.
உலக விஞ்ஞானிகள் இடையே நன்மதிப்பு பெற்ற அறிவியல் பத்திரிகையான 'நேச்சர்’-ல் அந்த ஆய்வு 2010-ல் வெளியானது. அறிவியல் சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தாலும், டெலோமெரேஸ் நல்ல செல்லைப் புற்றாக்க விடாது தடுக்கும் என டேஃபீனோ தொடர்ந்து சொல்லிவந்தார்.
காயகல்பம் என்றதும் முன்பு சொன்னபடி 'அண்டாகா கசம்... அபூகா ஹுகும்’ கதையெல்லாம் அல்ல. இஞ்சித் தேனூறல், கற்றாழை, வேம்பு, கரிசாலை, பொன்னாங்கண்ணிக் கீரை, மணத்தக்காளி, மஞ்சள் பூசணி இவற்றைத்தான் நோயற்ற வாழ்வுக்கான கற்ப மூலிகைகளாகக் கருவூரார் சித்தர் சொல்கிறார். கருவூரார், வாத காவியத்தில் சொன்ன          108 மூலிகைகளில் பல, காய்கறி மார்கெட்டிலும், வாய்க்கால் வரப்பு ஓரத்திலும், கோடை வாசஸ்தல மலைகளிலும் கிடைப்பவைதான்.
யணத்தில் காலில் நீர் கோப்பவருக்கு சுரைக்காய்க் கூட்டு, தூக்கம் கெடுத்து கண்விழித்துப் பணியாற்றி கண் எரிச்சலுடன் உடல் சூடு மிகுந்து நிற்போருக்கு கீழாநெல்லியும் மோரும், மந்தபுத்தி போக சிறுகீரை மிளகுச் சேர்த்துக் கூட்டும், சளி பிடித்தவருக்குத் தூதுவளை ரசமும், எப்போதுமே மெலிந்து இருப்போருக்கு தேற்றான்கொட்டைப் பொடியும், மேகவெட்டைக்கு ஓரிதழ்தாமரை... என கல்ப மருந்துப் பட்டியல் தமிழர் மருத்துவப் புரிதலில் ஏராளம் உண்டு.
'காலமே யிஞ்சியுண்ணக் காட்டினார் சூத்திரத்தில் மாலையதிலே கடுக்காய் மத்தியான் சுக்கருந்த’ என்ற திருவள்ளுவ நாயனார் கற்ப பாடல் சொல்வது, 'காலையில் இஞ்சி, கடும்பகலில் சுக்கு, மாலையில் கடுக்காய் சாப்பிடு’ என்பதுதான். 'அப்ப மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எல்லாம் வேண்டாம். பப்புல போய் எல்லா வயசிலும் ஆடலாம்’ என்ற பொருள் அல்ல இதற்கு. எந்தக் கற்பமும் முறையான யோகப் பயிற்சியுடன் இருந்தால்தான் பயன் தரும். 'வளியினை வாங்கி வயத்தில் அடக்கில் பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்’ எனத் திருமூலர் மூச்சுப் பயிற்சியில் சொன்னதும் அதைத்தான்.
அரிஸ்டாட்டில், கேலன், ஹிப்போகிரட்டஸில் இருந்து இன்றைய நவீன மருத்துவப் புரிதல் வந்தது போல, நம் தேரனும், திருமூலனும், அகத்தியனும் சொன்னதை ஆய்ந்தும், அலசியும், விரித்தும் பயனாக்க சமகால விஞ்ஞானிகள் தயங்குவது மடமை! அதுமட்டுமல்ல, வெளிநாட்டு மரபணுவுக்கு நம் ஒட்டுமொத்த     பாரம்பரிய உணவு விதைகளையும் காவுகொடுத்து, மரபணு மாற்றிய பயிர்களின் கள ஆய்வுக்கு மட்டும் துள்ளியெழும் நவீன ஆய்வுகள், 'ஏல... செத்த சும்மா இரு. அவுக எப்படியும் காப்பாத்திருவாக’ என மருத்துவமனை வாசலில் காத்திருக்கும் அப்பாவி ஏழைத் தம்பதிக்குச் செய்யும் சமூக அநீதியும்கூட!
- பரிமாறுவேன்...

- Vikatan

No comments:

Post a Comment