Tuesday, March 11, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 28

நாடாளுமன்றத்தை ரப்பர் ஸ்டாம்ப் ஆக்கி தங்கள் விருப்பங்களை எல்லாம் சட்டமாக உருவாக்கும் தன்னிச்சையான சூழ்நிலை தாண்டவம் ஆடியதுதான் சர்வாதிகாரத்தின் உச்சம். எதுவெல்லாம் தனது செயல்பாடுகளுக்குத் தடையாக இருந்ததோ, அந்தச் சட்டங்களை எல்லாம் பகிரங்கமாகக் கழுத்தை நெரித்துக் கொல்வதற்கு இந்திரா திட்டமிட்டார்.

1. தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக்கொள்ள அமல்படுத்தப்பட்ட அவசரநிலைப் பிரகடனத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதற்காகத் தாக்கல் செய்தார். அந்தத் தீர்மானத்தை ஜெகஜீவன்ராம் தாக்கல் செய்தார். அந்தத் தீர்மானம் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் விவாதம் இல்லாமல் நிறைவேறியது.
2. அரசு ஊழியர் ஒருவரைத் தேர்தல் ஏஜென்டாக வைத்துக்கொண்டதால்தானே இந்திராவின் வெற்றி செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் அறிவித்தது. அரசு ஊழியர்களைத் தேர்தல் ஏஜென்டாகப் பணியாற்றுவதை அனுமதிக்கும் சட்டத்திருத்த மசோதா அறிமுகம் ஆனது.
3. அமல்படுத்தப்பட்ட அவசரநிலைப் பிரகடனத்தை யாருமே கேள்வி கேட்கக் கூடாது என்று இந்திரா நினைத்தார். அப்படி கேள்வி கேட்கும் உரிமை நீதிமன்றங்களுக்குத்தானே இருந்தது. எனவே, அவசரநிலைப் பிரகடனம் குறித்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை விசாரிக்கும் உரிமையை அரசியலமைப்புச் சட்டத்தின் 38-வது திருத்தம் மூலமாகப் பறித்தார்.
4. தனது பதவியைப் பறிக்கும் செய்கையை யார் செய்தது? நீதிமன்றம்தானே? அவர்களுக்கு அந்த உரிமை இருந்தால்தானே செய்ய முடியும்? அதையே பறித்துவிடலாமே? அதற்கும் ஒரு திருத்தம் அமல் ஆனது.
பிரதமர் மற்றும் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேர்தல் வழக்கை உயர் நீதிமன்றம், மற்றும் உச்ச நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்ற அரசியலமைப்புச் சட்டத்தின் 39-வது திருத்தம் மாநிலங்களவை, மக்களவையில் நிறைவேறியது.
5. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று சொன்னால், யாருமே விசாரிக்கக் கூடாது என்று நினைப்பதாகக் கருதிவிடக் கூடாது என்பதற்காக ஒரு பொம்மை குழுவை உருவாக்க நினைத்தார் இந்திரா.
அதாவது பிரதமர், சபாநாயகர் ஆகியோரின் தேர்தல் வழக்குகளை இனி நாடாளுமன்றம் நியமிக்கும் குழு மட்டுமே விசாரிக்கும் என்ற திருத்தமும் கொண்டுவரப்பட்டது. நாடாளுமன்றக் குழு என்றால் தனக்கு வேண்டப்பட்ட யாரை வேண்டுமானாலும் அந்தக் குழுவில் நியமித்து, விசாரணை நாடகத்தை நடத்தி முடித்துக்கொள்ளலாம்.
6. இந்தத் திருத்தங்கள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டம் 9-வது அட்ட வணையின் கீழ் நிறைவேற்றப்பட்டது. 9-வது அட்டவணையின் கீழ் நிறைவேற் றப்படும் எந்தத் திருத்தங்களையும் நீதிமன்றங்கள் விசாரிக்க முடியாது.
7. குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் ஆகிய பதவிகளை வகிக்கிற எவர் மீதும் அவர்கள் பதவி ஏற்பதற்கு முன்போ, பதவி வகிக்கும் போதோ, தனிப்பட்ட முறையிலோ, அதிகாரபூர்வமாகவோ செய்த எந்தக் காரியத்துக்கும் குற்றவியல் வழக்கோ, உரிமையியல் வழக்கோ போட முடியாது என்ற சட்டத்திருத்தம் தயார் ஆனது. அதாவது, குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் ஆகிய மூவரையும் யாராலும் கேள்வி கேட்க முடியாத சூப்பர் பவர் அந்தஸ்துக்குக் கொண்டுபோனது அந்தத் திருத்தம். நல்லவேளை அது நிறைவேறவில்லை.
8. இவ்வளவையும் கேள்வி கேட்க நீதிமன்றங்கள் இருக்கிறதே? அது தேவையா என்ற அபரிமிதமான யோசனையில் உருவானதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் 42-வது திருத்தம். நீதித் துறையின் அதிகாரங்களைக் குறைக்க வகை செய்ததுடன் நாடாளுமன்றத்துக்கு வரம்பற்ற அதிகாரத்தைத் தூக்கிக் கொடுத்து பிரதமர் எதை நினைத்தாலும் செய்யலாம் என்று அனுமதி வழங்கிய சட்டத்திருத்தம் அது.
நாடாளுமன்றத்துக்கு அடுத்த நிலையில் உச்ச நீதிமன்றத்தைக் கொண்டுபோய் நிறுத்தினார்கள். அன்றைக்கு அதிகார ஆட்டம் ஆடிய ஏ.ஆர்.அந்துலே, '1967-ம் ஆண்டு முதலே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சதித் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்’ என்று நாடாளுமன்றத்திலேயே பேசினார் என்றால் அன்றைய அத்துமீறல்கள், நீதிமன்ற அவதூறுகளின் குவியல்களாக இருந்தன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
அதாவது நாடாளுமன்றத்துக்குள் அடங்கிய ஒரு அமைப்பாக உச்ச நீதிமன்றத்தை மாற்ற இந்தத் திருத்தம் அடித்தளமிட்டது.
9. நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகளாக மாற்ற வழிவகை செய்யும் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 1976-ல் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வந்திருக்க வேண்டும். 6 ஆண்டுகளாகப் பதவிக்காலம் நீடிக்கப்பட்டதால் 1977-ல் தேர்தல் நடத்தினால் போதும். ஓராண்டு காலம் இன்னும் கூடுதலாக அனுபவிக்கலாம் என்று நினைத்து அதற்கும் ஒரு திருத்தம் கொண்டுவந்தார்கள்.
10. இப்படி தனித்தனியாக சட்டங்கள், சட்டத் திருத்தங்கள், தீர்மானங்கள் கொண்டுவருவதைவிட மொத்தமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கான வேலையில் காங்கிரஸ் கட்சி மும்முரமானது.
உச்ச நீதிமன்றத்தையே ஒரு அரசியல் கட்சியைப் போலப் பாவித்து அவதூறுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தி வந்த அன்றைய காங்கிரஸ் தலைவர் டி.கே.பரூவா, 'நமது அரசியலமைப்புச் சட்டம் குறித்த புதிய பார்வை - சில கருத்துக்கள் என்ற அறிக்கையைத் தயாரித்து அனைத்து நீதிமன்ற பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கும் அனுப்பினார். இந்த அறிக்கையை அவர் எழுதவில்லை... ஏ.ஆர்.அந்துலே எழுதினார் என்ற ரகசியம் பின்னர்தான் அம்பலம் ஆனது. பிரதமர் ஆட்சி முறையைவிட அதிபர் ஆட்சி முறைதான் சரியானது என்று வாதிட்டது இந்த அறிக்கை. கௌஹாத்தியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர ஸ்வரன் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையில் 1975 ஏப்ரல் 3 அன்று காங்கிரஸ் தலைவர் ஓ.கே.பரூவாவிடம் ஸ்வரன்சிங் கொடுத்தார். அதிபர் ஆட்சி முறை என்ற எண்ணத்தை இந்த காங்கிரஸ் குழுவே ஏற்காமல் இருந்ததுதான் இந்தியாவின் அதிர்ஷ்டம். மாறாக, இவர்கள் ஆதரித்து இருந்தால் இந்தியா இன்று ஜனநாயக நாடாகவே இருந்திருக்குமா என்பதே சந்தேகம்.
அதிபர் முறையைக் கொண்டு வரலாம் என்று சஞ்சய் விரும்பியதாகவும் ஆனால், இந்திரா அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் ஒரு தகவல் உண்டு. அதிகாரம் பொருந்தியவராக ஆக இந்திரா நினைத்தார். ஆனால், சஞ்சய் அதிகாரம் பொருந்தியவராக ஆகியேவிட்டார்.
இந்திராவின் பெயரைச் சொல்லி நடந்ததில் பெரும்பாலானவை சஞ்சய் கட்டளைப்படி நடந்தவையே. அடுத்த சில மாற்றங்களில் இந்திரா இடத்தில் அமர சஞ்சய் திட்டமிட்டு இருந்தார். சஞ்சய் பற்றி தன்னிடம் புகார் செய்த ஒருவரிடம், 'நம்மை முந்திக்கொண்டு அவர்கள் சாமர்த்தியசாலிகள் ஆகிவிட்டார்கள்’ என்று இந்திரா கூறினார். நெருக்கடி நிலையை நீடித்துக்கொண்டே போவதுதான் சஞ்சய் நண்பர்களின் ஆலோசனையாக இருந்தது.
அப்போது பிரிட்டனில் இந்தியத் தூதராக இருந்தவர் பி.கே.நேரு. இவர் இந்திரா குடும்பத்தின் உறவினர். இவரிடம் அரசியமைப்புச் சட்ட ஆலோசனையை சஞ்சய் சொல்லி பன்சிலால் கேட்டுள்ளார். 'எங்கள் சகோதரியை வாழ்நாள் முழுக்கவும் இந்தியாவின் அதிபராக்கிவிடுங்கள். அப்புறம் பிரச்னையே இருக்காது’ என்று பன்சிலால் கேட்க, ஆடிப் போனாராம் பி.கே.நேரு. இந்திராவைப் பெரிய புதைகுழிக்குள் அமுக்கப் பார்க்கிறது ஒரு கூட்டம் என்று அலறிய பி.கே.நேரு, தன்னுடைய மனைவி ஃபோரின் நேருவை உடனடியாக இந்திராவைப் பார்க்க அனுப்பி வைத்தார். இந்தச் சந்திப்பு நடந்தபோது இந்திரா அதிக குழப்பமான மனநிலையில் இருந்ததாக எழுதுகிறார்கள்.
'சிக்கலில் இருந்து விடுபட நினைக்கிறார். ஆனால், எப்படி விடுபடுவது என்று தெரியவில்லை. சுற்றிலும் நிறைய சதி நடக்கிறது. அதில் பாதிக்கு மேல் தனக்குத் தெரியாமலேயே நடக்கிறது. புதிய அரசியலமைப்பு சபையை உருவாக்க வேண்டும்’ என்று தனக்குச் சொல்லப்பட்ட ஆலோசனையை இந்திரா நிராகரித்துவிட்டார், ஆனால் புது அரசியலமைப்பு சபையை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் ஆளும் மாநில சட்டசபைகளில் இருந்து தீர்மானம் போட்டு அனுப்புகிறார்கள். இதையெல்லாம் யார் சொல்லிச் செய்கிறார்கள், அவர்களுக்கு உத்தரவிடுவது யார் என்று அவரால் புரிந்து தெளிய முடியவில்லை. இதிலிருந்து விடுபட ஒரே வழிதான் இருக்கிறது என்பதை இந்திரா கண்டுபிடித்தார்.
தேர்தல் நடத்திவிட்டால் என்ன என்பதுதான் அந்த யோசனை. தேர்தல் நடத்தினால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்று உளவுத் துறையை விசாரிக்கச் சொன்னார். 1977 நவம்பரில் ஒருநாள் பத்திரிகையாளர் குல்தீப் நய்யாரைச் சந்தித்த உளவுத் துறை அதிகாரி ஒருவர், 'எமர்ஜென்சி விலக்கப்பட இருக்கிறது’ என்று லேசாகக் காதில் சொல்ல... அவர் அதனை தனக்குத் தெரிந்த கமல்நாத்திடம் உறுதிப்படுத்தி... இந்தியன் எக்ஸ்பிரஸில், அவசரநிலை இரண்டு வாரங்களில் விலக்கிக்கொள்ளப்பட்டு தேர்தல் நடத்தப்படும்’ என்று தலைப்புச் செய்தி ஆக்கினார். எக்ஸ்பிரஸ் உரிமையாளர் கோயங்காவால் நம்ப முடியவில்லை. காலையில் நாளிதழ் வெளிவந்தது. அன்றைய செய்தித் துறை அமைச்சர் வி.சி.சுக்லா இதைப் பார்த்து கோபமாகி, 'குல்தீப் நய்யார் விரைவில் கைது செய்யப்படுவார் என்பதை அவருக்குச் சொல்லுங்கள்’ என்று கத்தினார்.
எடுத்த முடிவில் இந்திரா உறுதியாக இருந்தார். தேர்தல் தேதியை அறிவித்தார்.

- Vikatan

No comments:

Post a Comment