Tuesday, March 11, 2014

தண்ணீர்..தண்ணீர்... - 3

தண்ணீர்..தண்ணீர்...
ஆர். குமரேசன் படங்கள்: ஆர். ராம்குமார்
 நீர் மேலாண்மை
நிலத்தை மனித உயிரெனக் கொண்டால், ஓடைகளும், வாய்க்கால்களும்தான் ரத்தநாளங்கள். நிலத்தின் குருதியான தண்ணீரை அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு சேர்ப்பவை, இந்த ரத்த நாளங்கள்தான். அப்படி நகரும் குருதியை சேமித்து வைக்கும் இதயங்கள் போன்றவை குளங்கள், ஏரிகள் மற்றும் கண்மாய்கள். மனித உடலில் ரத்த நாளங்களோ, இதயமோ பாதிக்கப்பட்டால், என்ன விளைவுகள் ஏற்படுமோ... அதுதான் நிலத்துக்கும், நீருக்கும் ஏற்பட்டுள்ளது. ஓடைகள், வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால், தண்ணீரின் சீரான ஓட்டம் தடைபட்டிருக்கிறது. பல இடங்களில் இணைப்பும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவுதான் இன்றைய தண்ணீர் தட்டுப்பாடு. காலம் கடந்த நடவடிக்கை என்றாலும், பூமியின் இதயங்களான குளங்களை குணப்படுத்த வேண்டிய அவசர அவசியத்தில் இருக்கிறோம்.
அதைப் பற்றி திண்டுக்கல் நீர்வடிப்பகுதி முகமையின் விரிவாக்க அலுவலரும், உதவி பொறியாளருமான பிரிட்டோ சொல்வதைக் கேட்போமா...
''மூன்றாண்டுகளாக மழை இல்லை. வரலாறு காணாத வறட்சி என்கிறார்கள். ஆனால், இதுபோன்ற நிலையை இதற்கு முன்பும் பல முறை சந்தித்து இருக்கிறோம். கடந்த 50 வருட மழையளவை எடுத்துப் பார்த்தால், ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நான்காண்டுகள் வரை மழை இல்லாமல் இருந்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, ராஜஸ்தானை அடுத்து குறைவான மழை பெறும் இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு. நமது சராசரி மழையளவு 760 மில்லிமீட்டர். இதில் நீலகிரி, கன்னியாகுமரி, கொடைக்கானல், சென்னை ஆகிய பகுதிகள் அதிகளவு மழை பெறுகின்றன. இங்கு பெய்யும் மழையால் பெரும்பான்மையான மக்களுக்குப் பயனில்லை என்பதால், அதைக் கழித்து கணக்கிட்டால், தமிழகத்தின் சராசரி மழையளவு 415 மில்லி மீட்டர். இது ராஜஸ்தானில் பெய்யும் மழையை விடக் குறைவு. ஆக, பாலைவனத்தில் கிடைக்கும் மழைநீர் அளவில்தான் நமக்குக் கிடைக்கிறது. அப்படி கிடைக்கும் நீரை, கிடைத்தற்கரிய மாமணியை நாம் பேணிக் காத்து பயன்படுத்த வேண்டாமா?
குளங்களைப் புரிந்து கொள்ளுங்கள்!
அந்தந்தப் பகுதியில் பெய்யும் மழைநீரை சேமித்து வைப்பவை குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் மற்றும் அணைகள் போன்ற நீர்நிலைகள்தான். மேடான பகுதிகளிலிருந்து வழிந்தோடி வரும் மழை நீரை, பள்ளமான பகுதிகளில் (குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் மற்றும் அணைகள்) சேமித்து வைத்து, வாய்க்கால் வழியாக அடுத்தடுத்துள்ள குளங்களுக்கு சென்று இறுதியில், ஆறுகளில் கலக்கும் வகையில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டவை, நமது பாசன முறைகள். அதனால்தான், உலக நாடுகள், நமது பண்டைய நீர் மேலாண்மை முறைகளை இன்றைக்கும் வியந்து நோக்குகின்றன. நீர் மேலாண்மையின் அடிப்படை அம்சங்களாக முன்னோர் உருவாக்கி வைத்திருக்கும் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளையும், வாய்க்கால்களையும் பாதுகாக்காத வரை, நீராதாரம் குறைந்து கொண்டே போவதைத் தடுக்க முடியாது.
முதலில் குளங்கள், ஏரிகள் மற்றும் கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளைப் பற்றிய புரிதல், நம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். நிலத்தில் உள்ள ஆழமான குழி அல்லது தொட்டி போன்ற அமைப்புதான் குளம், ஏரி மற்றும் கண்மாய் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மை அதுவல்ல. நினைத்த இடத்தில் எல்லாம் இவற்றை உருவாக்கிவிட முடியாது. இவை அமைவதற்கான மண் கண்டம் மிகவும் அவசியம். குறிப்பாக, செம்மண் சரளை உள்ள இடங்கள்தான் இத்தகைய நீர்நிலைகள் அமைப்பதற்கு ஏற்றவை. இவை, திறந்தவெளி நீர்தாங்கிகள். நிலத்தடியில் இருக்கும் ஒவ்வொரு பாறைப் பிளவுகளுக்கும் நீரைக் கடத்துபவை. மேற்பரப்பில் வண்டல் மண்ணும், அதற்கு கீழ் அடுக்கில்சிறுகற்கள் கொண்ட சரளை மண்ணும், அதற்கு அடுத்து ஜல்லிக் கற்களும், அதைத் தாண்டி இளகும் தன்மையுள்ள படிவுப் பாறைகளும் (சுண்ணாம்புப் பாறைகள்) கடைசியாக கரும்பாறைகளும் இருக்கும். தண்ணீர், வண்டலால் உறிஞ்சப்பட்டு, சரளையில் ஊடுருவி, ஜல்லி வழியாக நிலம் முழுக்க படுக்கை வசமாக பரவும். இதனால்தான் குளம், ஏரி மற்றும் கண்மாய் அருகிலுள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் உயர்கிறது.
பொதுவாக, நீர்நிலைகளில் மண் எடுக்கும் விவசாயிகள், மேற்பரப்பில் உள்ள வண்டலை மட்டும் அள்ளிச் செல்வார்கள். அடுத்த மழையின்போது, வழிந்தோடி வரும் நீரானது... வழியெங்கும் உள்ள வண்டலை அள்ளி வந்து திரும்பவும் மேற்பரப்பில் சேர்த்துவிடும். ஆனால், சாலை விரிவாக்கம், மேம்பாட்டுப் பணி என்று சொல்லி குளம், ஏரி மற்றும் கண்மாய்களில் மண் எடுப்பவர்கள், அதிக ஆழத்துக்குத் தோண்டி விடுகிறார்கள்.
வண்டலையும் தாண்டி, சரளை மண் அடுக்கு, ஜல்லி அடுக்கு என பாதாளம் வரை தோண்டிக் கொண்டே செல்வதால், அடுத்த மழைக்கு வந்து சேரும் நீர்... நான்காவது அடுக்கான சுண்ணாம்புப் பாறைகள் மீதே தேங்குகின்றன. இந்தப் பாறைகள் மீது படியும் நீர் உடனடியாக ஆவியாகிவிடும். அதனால்தான், இப்போதெல்லாம் குளங்களுக்கு வரும் நீர், ஓரிரு நாட்களிலேயே காலியாகி விடுகிறது. இந்த பேராபத்தை சரி செய்யாவிட்டால்... நமக்கு எதிர்காலம் இல்லை என்பதே உண்மை. ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளின் அமைப்பு முறையை முழுமையாகப் புரிந்துகொண்டு, முறையாக தூர்வார வேண்டும். தண்ணீர் வெளியேறும் பாதைகளான கலிங்குகளை (கலங்கல், கலுங்கு என்றும் சொல்வார்கள்)  முறையாகப் பராமரிக்க வேண்டும்.
கால்வாய்கள், வளைவான இடங்களில் அகலமாக இருக்கும். வளைவுகளில் நீரின் போக்கு தாராளமாக இருக்கும். வாய்க்கால் குறுகலாக இருந்தால், அடிக்கடி மண் அரிப்பு ஏற்பட்டு, உடைப்பு ஏற்படும். இதைத் தவிர்க்கத்தான் வளைவுகளில் அகலமாக அமைத்தார்கள். ஆனால், தற்போது கால்வாய்களின் அகலமான பகுதியில் உள்ள கரைகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால், அகலம் குறைந்தே இருக்கிறது. இதனால் வளைவுகளில் உள்ள கரைகளில் மோதும் நீர், கரையைத் தாண்டி தன் பாதையை மாற்றிக் கொள்கிறது. இதனால் குளங்களுக்கான நீர்வரத்து பாதிக்கப்படுகிறது.
1970-ம் ஆண்டு வருவாய்துறை வரைபடத் தில் ஒவ்வொரு பகுதிக்குமான குளங்களும், வாய்க்கால்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அந்தந்தப் பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் அந்த வரைபடங்கள் கிடைக்கின்றன. அந்த வரைபடத்தில் உள்ள வாய்க்கால்கள், குளங்களை முறையாகப் பராமரித்தாலே தண்ணீர் பிரச்னையை சுலபமாக சமாளிக்கலாம். அந்தந்த ஊராட்சி மன்றங்கள் இதைக் கையிலெடுக்க வேண்டும்.
ஓர் ஊராட்சியில் மட்டுமே செய்வதைவிட, ஒரு ஒன்றியம் முழுக்க ஒரே நேரத்தில் செய்தால்தான் முழுமையான பலனை அடைய முடியும். முதலில் கால்வாய்களைத் தூர் வாருங்கள். முட்கள் புதர்களை அப்புறப் படுத்துங்கள். பிறகு, குளங்களை சரி செய்யுங் கள். அரசியல் பேதங்களைத் தாண்டி, நீங்கள் செய்யும் இந்தச் செயலால் வருங்காலம் உங்களை வாழ்த்தும். இதற்கான அனைத்து உதவிகளையும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ், செய்து கொடுக்க தயாராக இருக்கிறது.
எதிர்வரும் மழைக் காலத்துக்கு முன்பாக, இதைச் செய்து முடிப்பது அவசியம்'' என்று வேண்டுகோள்களை முன் வைத்த பிரிட்டோ...  ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கான அடிப்படை விஷயங்கள், விவசாய நிலங்களுக்கான நீர் மேலாண்மை நுட்பங்கள் என்று நிறைய நிறைய பேசினார்...

- பொங்கிப் பாயும்...

- Vikatan

No comments:

Post a Comment