Tuesday, March 11, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 29

'இந்திராவே இந்தியா; இந்தியாவே இந்திரா’ - என்ற ஆணவ முழக்கத்தின் காரணமாக இந்தியாவே இந்திராவின் பண்ணை வீடாக மாற்றப்பட்டு, பழக்கப்பட்டு வந்த காலகட்டத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இனி இந்தியாவில் தேர்தல் நடக்குமா, ஜனநாயகம் தழைக்குமா, நாடாளுமன்றத்தில் கருத்துரிமை கேட்குமா, எதிர்க்கட்சிகள் என்ற ஒன்றே இருக்குமா என்ற சந்தேகக் கேள்விகள் வரிசையாக எழுந்துநின்று அனைத்துக்குமே இல்லை என்ற பதிலே கிடைத்துக்கொண்டிருந்த நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

இப்போது தேர்தல் வைத்தாலும் காங்கிரஸ் கட்சிதான் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என்ற உளவுத் துறையின் அறிக்கையை அப்படியே நம்பியோ, இதற்குமேல் அவசரநிலையை நீட்டித்தால் சஞ்சய் காந்தியின் சகாக்களால், தானே மீள முடியாத புதைக்குழிக்குள் தள்ளப்படுவோம் என்ற பயத்தினாலோ இந்திரா தேர்தல் தேதியை அறிவித்திருக்கலாம்!
எப்படிப் பார்த்தாலும் அது துணிச்சலான முடிவே. இந்திராவுக்குள் இருந்த நேருவின் மகள் என்ற ரத்தம் இன்னும் வற்றிப் போய்விடவில்லை என்பதை வெளிச்சப்படுத்தியது அந்த காரியம். இதைத்தான் சோஷலிஸத் தலைவர் மதுலிமாயி சொன்னார்.
''1977-ல் இந்திரா தேர்தலை நடத்த முன்வந்ததற்குக் காரணம் அவருடைய ஆழ் மனத்தில் பதிந்திருந்த உண்மையான சொரூபம்தான். தவறான காரண காரியங்கள் முடிவுக்கு வந்ததற்கு அதீத சுயமதிப்பீடு போன்ற காரணங்கள் இருந்தாலும், எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் பங்கேற்புடைய ஜனநாயக நெறியின் மேன்மையின்பால் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையும் அரசியலமைப்பு விதித்த முறைப்படித்தான் ஆட்சியில் தொடரவேண்டுமென்ற நாட்டமும்தான் தேர்தலை நடத்தக் காரணமாயின. தான் ஜவஹர்லால் நேருவின் மகள் என்பதையும் எங்களைப்போலவே மகாத்மா காந்தியின் தலைமையில் நடந்த சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் குழந்தை என்பதையும் இந்திரா ஒருபோதும் மறந்திருக்க மாட்டார்'' என்று இந்திராவால் 19 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்ட மதுலிமாயி சொன்னார். உண்மைக் காரணம் இதுதான். இந்தியாவுக்கு ஜனநாயக ஆட்சி முறையே பொறுத்தமானது. மிகப் பெரிய ஆட்டத்தை ஆடி... அது தன்னால் அடக்க முடியாத நிலைக்கு போகப்போவதுவரை தெரிந்து... அதன்பின் இறங்கிவர வேண்டியிருந்தது.
1977-ன் ஆரம்பம் இந்தியாவுக்கு நல்லபடியாக இருந்தது. 75, 76-ம் ஆண்டுகள் மிக மோசமானவையாகக் கழிந்தன.
''18 மாதங்களுக்கு முன்பு நாடு மிகப் பெரும் ஆபத்தில் இருந்தது. மிக மோசமான நிலைமையில் நாடு இருந்ததால்தான் அவசரநிலை கொண்டுவரப்பட்டது. இப்போது நாடு பாதுகாக்கப்பட்டுவிட்டது. இனி நாம் தேர்தலை எதிர்கொள்வோம்'' என்று 1977 ஜனவரி மாதம் வானொலியில் இந்திரா பேசினார். நாட்டுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆபத்து அவரது பதவிக்கு வந்தது. எமர்ஜென்சியை அறிவிக்காமல் இருந்திருந்தால் அவர் பதவி விலகி இருக்க வேண்டும். இன்னொருவரையோ, சஞ்சய் காந்தியையோ கொண்டுவந்திருக்கலாம். அடுத்து ஒரு தொகுதியில் போட்டியிட்டு அவரே வென்று மீண்டும் பிரதமர் ஆகி இருக்க முடியும். ஆனால், இந்த மாற்று ஏற்பாடுகள் எதையும் ஏற்க மறுத்ததால்தான் அவசரநிலையை அமல்படுத்தி இந்திய அரசியலில் மாபெரும் அவமானத்தை சந்திக்கும் நிலைக்கு இந்திரா தள்ளப்பட்டார்.
தேர்தல் நடத்த இருப்பதாக அவர் அறிவித்த ஜனவரி 18-ம் தேதிதான், இந்திரா பிரதமராகப் பதவியேற்ற 11-வது ஆண்டின் தொடக்கம். இந்திரா மனம் மாறுவதற்கும், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒற்றுமைப்படுவதற்கும் இந்த ஒன்றரை ஆண்டுகள் பயன்பட்டன என்று சொல்லலாம். தேர்தல் தேதியை இந்திரா அறிவித்த அன்றே சோனா டாக் பங்களா தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மொரார்ஜி தேசாய் விடுதலையானார். தனிமைச் சிறையில் இருந்தாலும் இந்திராவை எதிர்க்க தலைவர்கள் ஒன்று சேர்க்கும் முடிவை எடுத்துவிட்டார்கள். ஜனவரி 19 அன்று மொரார்ஜி தேசாயின் டெல்லி வீட்டில் தலைவர்கள் ஒன்றுகூடினார்கள்.
மொரார்ஜியின் கட்சியான காங்கிரஸ் (ஓ), சோஷலிஸ்ட் கட்சி, ஜனசங்கம், பாரதிய லோக் தளம் ஆகிய நான்கு கட்சித் தலைவர்களின் கூட்டம் அது. இவர்கள் அனைவரும் ஒரே கட்சியின் பெயரால், ஒரே சின்னத்தில் போட்டியிடப்போவதாக அறிவித்தார்கள். அந்தக் கட்சிக்கு 'ஜனதா கட்சி’ என்று பெயர் சூட்டப்பட்டது. ஜனவரி 23-ம் தேதி அன்று முறைப்படியான அறிவிப்பை ஜெயப்பிரகாஷ் நாராயண் செய்தார். ஜனதா கட்சி, இந்திராவுடன் இருந்தவர்களுக்கே அச்சத்தை ஏற்படுத்தியது. 1975-ல் அவசரநிலைப் பிரகடனத் தீர்மானத்தை மக்களவையில் கொண்டுவந்து முன்மொழிந்த ஜெகஜீவன் ராம் மனதையே அது கரைத்தது. தனது நண்பர்களான பகுகுணா, நந்தினி சத்பதியுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிப்ரவரி 1-ம் தேதி 'விலகிய ஜெகஜீவன் ராம், ஜனநாயக காங்கிரஸ் என்ற புதிய கட்சியை உருவாக்கி, அது ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று அறிவித்தார். ''அவருடைய பதவி விலகல் காங்கிரஸுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் பாபுஜி அரசியல் சாமர்த்தியத்துக்குப் பெயர் போனவர். அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகத் தீர்மானித்தது அந்தக் கப்பல் மூழ்கிக்கொண்டிருப்பதன் அடையாளமாக இல்லாவிட்டாலும் குறைந்தது மிக மோசமாக ஓட்டையாகி ஒழுகிக்கொண்டிருப்பதைக் குறித்தது'' என்று எழுதுகிறார் ராமச்சந்திர குஹா.
1977 மார்ச் 16 முதல் 20 வரை மக்களவைத் தேர்தலுக்கான தேதி குறிக்கப்பட்டது. எமர்ஜென்சியை அகற்றி இந்திராவை விரைவில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என, தனிமைச் சிறையில் இருந்தபடி சபதம் போட்ட ஜெயப்பிரகாஷ் நாராயண் உடல்நலம் அளவுக்கதிகமாக குன்றிப்போயிருந்தது. ஆனால், 'நடப்பது கடைசி யுத்தம், இதிலும் களத்தில் இருப்பேன்’ என்று அறிவித்தபடி நகரம் நகரமாகப் போய் பேசிக்கொண்டு இருந்தார். ''காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதுதான் கடைசியான சுதந்திரத் தேர்தலாக இருக்கும். அப்படியானால் 19 மாத சர்வாதிகாரம் என்பது 19 ஆண்டு பயங்கரவாதமாகிவிடும்'' என்று பம்பாயிலும் பாட்னாவிலும் பயமுறுத்திக்கொண்டு இருந்தார் ஜே.பி. இந்தியாவுக்குத் தன்னால் ஆன வளார்ச்சிகளைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தார் இந்திரா.
மார்ச் 6-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவே இந்திராவுக்கு எதிராக இருக்கிறது என்பதைக் காட்டுவதற்கான பேரணி அது. அதே நாளில் பிரபலமான இந்தி காதல் படமான 'பாபி’யை ரிலீஸ் செய்து கூட்டத்தை கலைக்கப் பார்க்கிறார்கள் என்று செய்தி பரவியதாகவும், அதையும் மீறி பேரணிக்கு கூட்டம் வந்ததாகவும் ஒரு தகவல் சொல்கிறது. பேரணிக்கு வருபவர்களைக்கூட தடுக்க முடிந்திருக்கலாம். ஆனால் மக்களை..?
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது ரேபரேலி தொகுதியில் சுமார் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தனது பழைய போட்டியாளர் ராஜ்நாராயணிடம் இந்திரா தோற்றுப்போனதாக அறிவிக்கப்பட்டது. அதற்குப் பக்கத்துத் தொகுதியான அமேதியில் அரசியல் அனுபவம் இல்லாத கல்லூரி மாணவன் ரவீந்திர சிங்கிடம் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சஞ்சய் காந்தி தோல்வியைத் தழுவினார். எமர்ஜென்சியின் கதாநாயகர்களான வி.சி.சுக்லா ராய்பூரிலும், பன்சிலால் பிவானியிலும், ஸ்வரண் சிங் ஜலந்தரிலும் தோற்றுப்போனார்கள்.
மொத்தமுள்ள 542 இடங்களில் ஜனதாவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 330 இடங்களைப் பிடித்தன. காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமே 154 தொகுதிகளே கிடைத்தன. இந்த 154-ல் 92 இடங்கள் தென் மாநிலங்களில் இருந்து கிடைத்தன. தமிழகம் 14, ஆந்திரா 41, கர்நாடகா 26, கேரளா 11 என காங்கிரஸுக்கு வாரி வழங்கியது. வட மாநிலங்கள் அனைத்துமே இந்திராவுக்கு மிகப் பெரிய சரிவை ஏற்படுத்தியது.
தான் தோற்றுவிடக் கூடும் என்பது மார்ச் 19 மாலை 4 மணிக்கு இந்திராவுக்குத் தெரியவந்தது. தனது செயலாளர் ஆர்.கே.தவானிடம், ''ரேபரேலிக்கு போன் செய்து சரியான தகவல் என்ன என்று கேளுங்கள்'' என்று உறுதிப்படுத்தினார். அப்போது இந்திராவின் தோழியான பூபுல் ஜெயகர் பரிதவித்து ஓடிவந்தார்.
'உனக்கா இந்து... இப்படி நடக்க வேண்டும்?’ என்று பதறினார் பூபுல் ஜெயகர். 'இதெல்லாம் சகஜம் பூபுல், நடக்கக் கூடியதுதான்’- சாதாரணமாக பதிலளித்தார் இந்திரா. இரவு நேரம் ஆகியது. அனைவரையும் சாப்பிட அழைத்துச் சென்றார் சோனியா. யாருக்கும் சாப்பிட மனமில்லை. ஆனால், இந்திரா மட்டும் கவலைப்படாமல் சாப்பிட்டார். இரவு 10.30-க்கு அமைச்சரவையை இந்திரா கூட்டினார். 11 மணிக்கு சஞ்சய் வந்து சேர்ந்தார். அம்மாவைப் பார்த்ததும், 'நடக்கக் கூடாதது நடந்துவிட்டது’ என்று புலம்பினார். அவரை அமைதிப்படுத்திவிட்டு நள்ளிரவு 2 மணி வரை அதிகாரிகளோடு பேசிக்கொண்டு இருந்தார் இந்திரா. 2 மணிக்கு தூங்கி 4 மணிக்கு எழுந்தார். உடனடியாக உத்தரவு போட்டார். 'இந்த வீட்டை உடனடியாக காலிசெய்தாக வேண்டும்’ என்று எண் 1 ஸபதர்ஜஸ் சாலை வீட்டில் இருந்த பொருட்கள் 6.30 மணிக்கு கலைக்கப்பட்டன.
''ஜவஹர்லால் நேருவின் மகள், 11 ஆண்டுகள் பிரதமராக இருந்தவர், ஆனந்த பவன் என்ற அரண்மனை போன்ற இல்லத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தவர். தங்குவதற்கு தமக்கென்று ஒரு வீடு இல்லாமல் தவிக்கும் நிலைமையை என்னால் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. வாழ்க்கையை வருவதுபோல் ஏற்கும் மனமுள்ளவர் திருமதி காந்தி என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால் அவரிடம் ஒரே ஒரு பொருளுக்கு மட்டும் பஞ்சமில்லை. அதுதான் அவர் மன உறுதி'' என்று இந்திரா குடும்பத்துக்கு நெருக்கமான முஹம்மத் யூனுஸ் எழுதியிருக்கிறார்.
அந்த மனஉறுதியை அசைத்துப் பார்த்தது ஜனதா ஆட்சி!


- Vikatan

No comments:

Post a Comment