Sunday, June 17, 2012

மயக்கம் என்ன?

From Junior vikatan..சேலத்தில் என் நண்பன் ஒருவன். மிகக் கௌரவ​மான பணியில் இருந்தான். செய்தொழில் நேர்த்திக்காகவே போற்றப்படுபவன். ஆனால், மிக அதிகமாகக் குடிப்பான். ஒருநாள் நெத்திமேடு பஸ் ஸ்டாப்பில் நான் நின்றுகொண்டு இருந்தபோது கைலி, பனியனுடன் ரோட்டில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தான். என்னவோ ஏதோவென நானும் அவனைப் பின்தொடர்ந்து ஓட... அவன் பக்கத்தில் இருந்த ரம்பா ஒயின்ஸ் ஷாப்புக்குள் தாவினான். (தனியாரிடம் மதுக்கடை இருந்தபோது நடிகை ரம்பாவின் கவர்ச்சிப் படம் போட்ட போர்டுடன் வைக்கப்பட்ட பெயர், இன்று வரை நிலைத்துவிட்டது.) உள்ளே நுழைந்தவன் பரபரவெனப் பார்த்தபடி ஒரு டேபிளில் இருந்த ஆஃப் பாட்டிலை வெடுக்கென எடுத்துக்கொண்டு ஓடத் துவங்கினான். 
செயின் பறிப்பு திருடன் ரேஞ்சுக்கு பாட்டிலை  இறுக்கமாகப் பிடித்தபடி அவன் ஓட...  'ஏய், பிடி... பிடி’ என்றபடி துரத்த ஆரம்பித்தார்கள். பார் பணியாளர் ஒருவர் இடையே புகுந்து மறிக்க... அங்குமிங்கும் அலைபாய்ந்தவன், வாட்டர் பாக்கெட் மூட்டையில் கால் இடறி... பொத்தென விழுந்தான். நான்கு பேர் அவனை அமுக்கிப் பிடித்து பாட்டிலைப் பிடுங்க... அப்போதும்விடாமல் அவன் பாட்டிலை வாய்க்குள் சரித்து அப்படியே குடித்தான். அவனிடம் இருந்து பாட்டிலைப் பாடாதபாடுபட்டு பிடுங்கினார்கள். அதை ஒருவன் அவனது முகத்தில் ஊற்றி, அவன் பிறப்பைக் குறித்து கேள்வி எழுப்பினான். கும்பலில் இருந்த இன்னொருவன் காலி பீர் பாட்டிலை எடுத்து நண்பனின் தலையில் ஓங்கி அடித்தான். ரத்தம் வழிந்த நிலையிலும் இவன், 'பாஸு, கொஞ்சம் குடுங்க பாஸு... ஒரு கட்டிங் குடுங்க...’ என்று கெஞ்ச ஆரம்பித்தான்.
ஓடிச் சென்று நண்பனை சூழ்ந்திருந்த கும்பலை சமாதானப்படுத்தி, அவனை அழைத்து வந்தேன். இந்தக் களேபரத்தில் அவனது கைலியைக் காணோம். தூரத்தில் கிடந்த கைலியை ஒரு சிறுவன் எடுத்துத் தர, அதைக் கட்டிவிட்டேன். குவாட்டர் வாங்கித் தந்தே ஆக வேண்டும் என்றான் நண்பன். நான் மறுக்க... திடீரென்று என் காலைப் பிடித்துக்கொண்டு கதறினான். வேறு வழி இல்லாமல் குவாட்டர் வாங்கித் தந்தேன். தண்ணீர்கூட கலக்கவில்லை. மூடியைத் திறப்பதற்கு அவசரம். மூடியை பல்லால் பெயர்த்து எடுத்து, அப்படியே குடித்து, ஆசுவாசமானான்.
''அடி வாங்கி இப்பிடிக் கேவலப்பட்டு இதைக் குடிச்சாகணுமா?'' என்றேன். ''அடியைவிடு... குடிதான் முக்கியம் மச்சி...'' - பஞ்ச் அடித்து சிரித்தது பானம். எனக்கு வயிறு பற்றி எரிந்தது. அப்புறம் அவன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. கைத்தாங்கலாக அவனை டாக்டரிடம் அழைத்துச் சென்றேன். டாக்டர் தலையில் கட்டுப் போட்டுவிட்டார். 'ஊசி வேண்டாம்; போட்டாலும் வேலை செய்யாது. நாளைக்கு காலையில இந்த மாத்திரையை சாப்பிடச் சொல்லுங்க...’ என்றார். அவனுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றேன்.
வீடு உள்பக்கமாகத் தாழிடப்பட்டு இருந்தது. சரியாக வீட்டு வாசலில் இவன் வாந்தி எடுத்து சரிய... வாந்தியில் ரத்தம் கலந்து இருந்தது. குடல், இரைப்பை அரித்து ஓட்டையானால்தான் இப்படி வாந்தியுடன் ரத்தம் கலந்து வரும். இல்லை என்றால் தொண்டையில் புண் இருந்திருக்க வேண்டும். நான் கதவைத் தட்டினேன். கதவைத் திறந்தது ஒரு அழகான குட்டிப் பையன். கீழேகிடந்த நண்பனை பார்த்துவிட்டு, 'அங்கிள் ரொம்ப தேங்ஸ்...’ என்றான். அப்பாவைப் பார்த்து அவன் அதிர்ச்சி அடையவில்லை. ஏற்கெனவே ரொம்பப் பட்டு இருப்பான் போலிருக்கிறது. நானும் அவனும் நண்பனின் தோளைப் பிடித்து வீட்டுக்குள் இழுத்துச் சென்று படுக்க வைத்தோம். அந்த குட்டிப் பையன் பெரிய மனுஷ தோரணையில் வாளியில் தண்ணீரும் விளக்குமாறும் கொண்டு வந்து வாசலைக் கழுவி விட்டான்.
''இவர் வாங்குற சம்பளத்துக்கு இப்படிக் குடிச்சா குடும்பம் நடத்த முடியுமா அங்கிள். லைன் வீட்டுக்காரங்க எல்லாம் தினமும் கண்டபடி திட்டுறாங்க. ஹவுஸ் ஓனர் வீட்டைக் காலி பண்ணச் சொல்றார். நான் ஸ்கூலுக்கு போறதா? இவரைப் பார்த்துகிறதா?'' என்றான். நான்காம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவனிடம் கொஞ்சமும் மழலை இல்லை. அப்பனின் குடியும் அடியும் அவனை அப்படிப் பக்குவப்படுத்தி இருக்கும்போல. ''அம்மா எங்கடா?'' என்றேன்.
''அம்மா கோவிச்சுக்கிட்டு ஊருக்குப் போய் ஒரு வாரம் ஆச்சு. என்னைக் கூப்பிட்டாங்க. நான் வர மாட்டேன்னுட்டேன். ஆயா வேலைக்கு போயிருக்கு. இவர் தூங்குறப்ப வெளியே கதவைத் தாழ்ப்பாள் போட்டுட்டு, ஸ்கூலுக்குப் போனேன். எப்படியோ திறந்துக்கிட்டு ஓடி இருக்கார்...'' என்றான். நொந்து திரும்பும்போது ஏனோ வாஸ்கோடகாமா நினைவுக்கு வந்தார்!
வாஸ்கோடகாமா, 1498 மே மாதம் கள்ளிக்கோட்டை மன்னர் சமோரினை சந்தித்தபோது, போர்ச்சுக்கீசிய மதுச்சந்தையை இந்தியாவுக்குக் கொண்டுவர வாய்ப்பு இல்லையே என்று கவலைப்பட்டார். காரணம், அப்போது இந்தியாவில் குடிப்பழக்கம் மிக, மிக அரிதாகவே இருந்தது. குறிப்பாக, மொகலாய மன்னர்கள் உண்மையான முசல்மான்களாக இருந்து, மதுவை 'ஹராம்’ செய்து இருந்தார்கள். சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மன்னர் ஜஹாங்கீர் ஆட்சியில்தான் போர்ச்சுக்கீசிய, பிரெஞ்சு நாட்டு மதுபானச் சந்தைக்கு இந்தியாவின் கதவுகள் அகலத் திறந்தன. மன்னர் ஜஹாங்கீர் விதவிதமான மது பானங்களைச் சுவைப்பதிலும் மது சுவைப்பவர்களை ஊக்குவிப்பதிலும் ஆர்வமாக இருந்தார். ஆட்சியை வழிநடத்தும் ஒரு மன்னரால் அப்போது தொடங்கி சந்தைப்படுத்தப்பட்ட மது கலாசாரம், இன்று தமிழகத்தில் அரசே மதுபானங்களை கூவிக்கூவி விற்கும் நிலைக்குக் கொண்டுவந்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களை நடுத்தெருவில் நிறுத்தி உள்ளது. 'குடி உயர கோன் உயரும்’ என்ற அவ்வை வாக்கை தப்பாய் புரிந்துகொண்டால் இப்படித்தான்!
இன்று உலகிலேயே மிக அதிகமாக மது குடிப்பவர்கள் இந்தியர்கள். மதுவால் ஏற்படும் சமூகப் பிரச்னையால் இந்தியா மிகப்பெரிய அழிவை நோக்கிச் செல்கிறது. அணு, மொத்தமாக அழிக்கும் என்றால், மது கொஞ்சம் கொஞ்சமாக. வீட்டுக்கு ஒரு குடிகாரர் என்பதுதான் அரசாங்கத்தின் குறைந்தபட்ச இலக்கு. வரும் ஆண்டுகளில் இது அதிகரிக்கும் என்றுஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். அதிகாரிகள் கோடிகளில் டார்கெட் நிர்ணயித்துக் காத்து இருக்கிறார்கள்.
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் மதுக் கடைகள், மதுக் கேளிக்கை விடுதிகளின் எண்ணிக்கை  சராசரியாக ஆறு முதல் எட்டு சதவிகிதம் வரை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துவருகிறது. 1952-ம் ஆண்டில், மது அருந்தத் தொடங்கும் இந்தியரின் சராசரி வயது 19. இன்று அது 13. பன்னாட்டு மது நிறுவனங்களின் மிகப்பெரிய 'ஹப்’பாக மாறிவிட்டது இந்தியா. மாறாக, மேற்கத்திய நாடுகளில் குடிப்பழக்கம் குறைந்து வருகிறது - பிரபல இன்டர்நேஷனல் மருத்துவ பத்திரிகையான லேண்ட்செட் சமீபத்தில் வெளியிட்ட தகவல் இது!
தமிழகத்திலோ, நிலைமை மிக மிக மிக மோசம்.  ஏழு கோடி மக்களில் சுமார் ஒரு கோடிப் பேர் குடிக்​கிறார்கள். சுமார் 49 லட்சம் பேர் தினமும் குடிக்கும் மது அடிமைகள். இதில் 13 வயது சிறுவர்களும் அடக்கம்.
அதுசரி, அப்புறம் அந்த நண்பன் என்ன ஆனான் என்று சொல்லவே இல்லையே... 'தினைக் கள் உண்ட தெளிதோல் மறவர்’ வழி வந்த அந்த நண்பன், பின்னாளில் டாஸ்மாக் சரக்கின் போதை போதாமல் எங்கோ ஸ்பிரிட் வாங்கி வந்து குடித்து செத்துப்போனான்!  
அரசு மருத்துவமனையில் அவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மோகனை ஒருமுறை யதேச்சையாக பார்த்தபோது அவனைப் பற்றிக் கேட்டேன். ''அவங்கம்மாதான் அவனை இங்க கூட்டிட்டு வந்தாங்க. குடிச்சிட்டு சுயநினைவு இல்லாம இருந்தான். இங்க வர்றப்பயும் குடிக்கணுமானு அவங்கம்மாகிட்ட சத்தம் போட்டேன். 'இங்க கூட்டிட்டு வர எனக்கு வேற வழி தெரியலைப்பா... அதான் நானே அரை பாட்டில் வாங்கிக் கொடுத்தேன்...’னு அழுதாங்க.
நாலு மணி நேரம் கழிச்சு எழுந்தவன், சுற்றிலும் பார்த்துட்டு எழுந்து ஓட ஆரம்பிச்சான். தடுத்த நர்ஸைத் தள்ளிவிட்டதில் அவங்களுக்கும் காயம். ஒருவழியா அவனைப் பிடிச்சு, பெட்டுல கட்டிப்போட்டோம். ஆனாலும், அவன் பிழைக்க அஞ்சு சதவிகிதம்தான் வாய்ப்பு இருந்துச்சு. கணையத்தை ஆல்கஹால் அடைச்சு, ஜீரண நீர் வெளியேற வழி இல்லாம அது பந்து மாதிரி வீங்கி, எந்நேரமும் வெடிக்கத் தயாரா இருந்துச்சு. இரைப்பையோட உள்சுவரான 'மியூக்கஸ்’-ல கிழிஞ்சுபோன பனியன் மாதிரி ஏகப்பட்ட ஓட்டைங்க. உள்ளே எந்த உணவும் தங்காது. கல்லீரல் 80 சதவிகிதம் அழுகிப்போயிருந்தாக்கூட அதை வெட்டி எடுத்துட்டா, அது தானாகவே வளரும் தன்மைகொண்டது. ஆனால், கல்லீரல் முழுக்க ஹெபாடிடிஸ், சிரோசிஸ் பரவி இருந்தது. பத்து நாள் இங்க பொழுதுக்கும் கத்திட்டே கெடந்தவன், ஒருநாள் தப்பிச்சு ஓடிட்டான். அப்புறம் ஏதோ ஸ்பிரிட் குடிச்சு செத்துட்டான்னாங்க...'' என்றார்.
இப்படி என் நண்பன் மட்டும் அல்ல... இன்று தமிழகத்தில் குடிநோயால் மட்டுமே தினமும் அநேகம் பேர் இறக்கிறார்கள். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் ராஜீவ்காந்தி மருத்துவ​மனையிலும் கணையம், கல்லீரல் வீங்கி, பார்வை சொருகி, பாதி மனிதனாய் வருபவர்களின் எண்ணிக்​கையும் அதிகரித்து இருக்கிறது. அதுசரி, டாஸ்மாக் ஆரம்பித்தபோது 2,828 கோடியாக இருந்த ஆண்டு வருமானம் கடந்த ஆண்டில் 18,000 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இதனைச் சாதனையாகச் சொல்லும் அரசு... மருத்துவமனைகளில் செத்து விழும் மனிதர்கள் எண்ணிக்கை உயரும்போதும் அதையும் சாதனையாகச் சொல்லுமா? ஆபத்தை உணராமல் அரசாங்கம் பரப்பும் வியாதியின் கோரம் என்ன தெரியுமா?  
    தெளிவோம்      
           மது மூலம்!
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையில் மது தயாரிக்கப்படுகிறது. ரஷ்யாவின் ஓட்கா உருளைக் கிழங்கிலும், சீனாவின் மவுத்தாய் - ஜப்பானின் சாக்கே ஆகியவை அரிசியிலும், ஸ்காட்லாந்தின் ஸ்காட்ச் கோதுமை மற்றும் மக்காச்சோளத்திலும், ஃபிரான்ஸின் ஷாம்பெயின் திராட்சையிலும், கோவாவின் பென்னி முந்திரியில் இருந்தும் தயாராகிறது. இதுதவிர அரபு நாடுகளில் பேரீச்சம் பழத்திலும், இலங்கை, ஃபிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தென்னை, பனையின் பொருட்களில் இருந்தும் மது தயாரிக்கப்படுகிறது. கரும்பு ஆலையில் இருந்து வெளியேறும் கழிவான மொலாசஸில் இருந்து மதுவைத் தயாரிப்பது தமிழ்நாடு மட்டுமே!

மது - ஆசிட் வேறுபாடு என்ன?
மதுவுக்கும் ஆசிட்டுக்கும் வித்தியாசம் பெரிதாக ஒன்றும் இல்லை என்கிறார் இந்திய பொது சுகாதார சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் இளங்கோ. ''மீத்தைல் ஆல்கஹால் என்பது டாய்லெட் கழுவும் ஆசிட், பெயின்ட், வார்னிஷ் போன்ற பொருட்களில் பயன்படுத்தப்படும் ரசாயனம்.
ஈத்தைல் ஆல்ஹகால் என்பது மதுபானங்களில் போதைக்​காக கலக்கும் ரசாயனம். இவை இரண்டும் அண்ணன் - தம்பி போலத்தான். இரண்டுக்கும் ஒரே வாசனை, ஒரே சுவை. மீத்தைல் ஆல்கஹாலை குடித்தால், ஐந்து நிமிடங்​களில் பார்வை பறிபோகும். 15 நிமிடங்களில் மூளை செயல் இழக்கும். 30 நிமிடங்களில் உயிர் போகும். இதே வேலை​யைதான் ஈத்தைல் ஆல்கஹாலும் கொஞ்சம், கொஞ்சமாக செய்கிறது. மீத்தைலுக்கு நிமிடங்கள் என்றால் ஈத்தைலுக்கு ஆண்டுகள். அவ்வளவுதான்!'' என்கிறார் அவர்.மிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (tamilnadu state marketing corporation limited). இதுதான் 'டாஸ்மாக்’கின் விரிவாக்கம். தமிழக அரசாங்கம் எந்தத் தொழிலைவாணிபமாக மதிக்கிறது பார்த்தீர்களா? அது சரி, ஊத்திக்கொடுப்பதுதான் தொழில்என்றாகிவிட்டது; அதிலாவது ஒரு நியாயம் இருக்​கிறதா? 
இங்கு ஏன் இப்படி ஒரு கேள்வி அவசியம் ஆகிறது என்றால், மது, மது வகைகள், மதுப் பழக்கம், மது விற்பனை, மதுவிலக்கு இவற்றைப் பற்றி நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். ஆனால், ஒரு தொழிலில் நீங்கள் ஈடுபடுகிறீர்கள் என்றால், அந்தத் தொழிலுக்கு என்று உள்ள அறநெறிகளைப் பின்பற்றுவதுதானே நியாயம்?
தமிழ்நாட்டில், தான் விற்கும் சரக்கை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் என்று குறிப்பிடுகிறது தமிழக அரசு. ஆனால், உண்மையில் வெளிநாட்டு வகை மதுபானத்துக்கும் இங்கு அரசு விற்கும் மதுபானத்துக்கும் சம்பந்தமே கிடையாது என்பதுதான் உண்மை.
அசல் சீமைச் சரக்குகள் ஏதாவது ஒரு தானியத்தில் இருந்தோ, பழரசத்தில் இருந்தோ, கிழங்கில் இருந்தோ நேரடியாகத் தயாரிக்கப்படுபவை. விஸ்கி என்றால் முளைதானியங்களில் இருந்தும் (மால்ட்), ரம் என்றால் கரும்புச் சாறு அல்லது கரும்புச் சக்கைக் கூழில் இருந்தும், ஒயின், பிராந்தி, கிரப்பா என்றால் திராட்சையில் இருந்தும், வோட்கா என்றால் கிழங்கு மற்றும் தானியங்களில் இருந்தும் தயாரிப்பதே வெளிநாட்டுப் பாணி.  எதில் இருந்து தயாரிக்கிறார்கள், எதை எல்லாம் சேர்த்து இருக்கிறார்கள் என்ற விவரங்கள் எல்லாமும்கூட மது பாட்டிலின் மீதே தெளி​வாகக் குறிப்பிடப்படும். புதுவை, கோவா ஆகிய மாநிலங்களில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மது வகைகள் அதிகம். அதனாலேயே, அங்கு விற்கப்படும் உள்ளூர் மது வகைகளும்கூட தரமாகவே இருக்கும். முக்கியமாக, அங்கு விற்கப்படும் மது வகைகளில் நிர்ணயிக்கப்பட்ட ஆல்கஹால் சேர்க்கப்படுகிறது. அதனால், அது ஏற்படுத்தும் போதையும் குறைவு. ஆனால், இங்கு அரசே நடத்தும் கடைகளில் விற்கப்படும் மது வகைகளின் தரம் என்ன? அவற்றில் உள்ள மூலப் பொருள்கள் என்ன? ஏன் இவ்வளவு ஆல்கஹால் அதிகம்கொண்ட மது வகைகள் விற்கப்படுகின்றன? யாருக்காவது தெரியுமா?
சாதாரண டீக்கடைக்குச் சென்றாலே, நாம் ஓரளவு காற்​றோட்​டமும் சுகாதாரச் சூழலும் நிரம்​பிய கடையாகப் பார்த்து தேடுவோம். நல்ல நாற்காலிகளைத் தேடுவோம். சர்வர்களின் உபசரிப்பை எதிர்பார்ப்போம். டீக்கடைக்காரருக்கு நாம் கொடுப்பது என்னவோ ஆறேழு ரூபாய்கள்தான். அதற்கே ஒரு டீக்கடை முதலாளி எவ்வளவு வசதிகளைத் தர வேண்டி இருக்கிறது? ஆனால், ஆண்டுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாயை வாரிக் கொடுக்கும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு எப்படிப்பட்ட வசதிகளை நம்முடைய அரசும் டாஸ்மாக் நிறுவனமும் ஏற்படுத்தித் தந்து இருக்கின்றன?  
என்னடா, திடீரென்று குடிகாரர்களுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று பார்க்காதீர்கள். இவை எல்லாமே இன்றைக்குத் தமிழகத்தில் நிலவும் மோசமான குடிக் கலாசாரத்துடன் தொடர்பு​டையவை.ஒருவர் வாந்தி எடுத்துக்கிடக்க, இன்னொ​ருவர் பக்கத்திலேயே சிறுநீர் கழித்துக்கொண்டு இருக்க இருவருக்கும் நடுவில் சாவதானமாக குடித்துக்​கொண்டு இருக்கும் ஆட்களை இங்குதான் நாம் பார்க்க முடியும். எப்படி மது இந்த நிலைக்கு எல்லோரையும் தள்ளுகிறது?    
மது அருந்துவது ஒருவரின் மூளை​யின் நரம்புகளில் முதலில் பாதிப்பு ஏற்படுத்தும். ரத்தத்தில் ஆல்கஹால் அளவை பி.ஏ.சி. (Blood Alcohol Count) என்பார்கள். இது 0.10 அளவு வரை இருந்தால் பிரச்னை இல்லை. இந்த அளவைத் தாண்டினால் வரும் சிக்கல் ஆரம்பத்தில் வெகு சாதாரணமாகத் தெரியும். சொல்லப்போனால், இந்தப் பாதிப்பு ஆரம்ப நிலை​யில் செம ஜாலியாகக்கூட இருக்கும்.
மது அருந்தியவுடன் ஆல்கஹால் நேராக சிறு மூளையைப் பாதிக்கிறது. அப்போது மூளை என்னும் முதலாளியின் கட்டுப்பாட்டில் இருந்து சுமார் 50 சதவி​கிதம் வரை உடல் உறுப்புகள் விடுபட்டுவிடும். அதனால் நேராக நடக்க முடியாது. நினைப்பதை சீராகப் பேச முடியாது. முதலாளி, 'நேராக நட’ என்று கட்டளை போட்டாலும் கால்கள் கேட்காமல் பின்னிக்கொண்டுதான் செல்லும்.
இந்த மூளை நரம்பு மண்டலப் பாதிப்பை கோர்சிகா காஃப்ஸ் சிண்ட்​ரோம் (Corsica Cofs Syndrome) என்பார்கள். ஆரம்பப் பிரச்னை ஜாலி​யாக இருக்கும் என்பதன் அர்த்தம் சேட்டைகள் இப்போதுதான் தொடங்​கும் என்பதுதான்!      
என் நண்பன் ஒருவனுக்கு  மூன்று லார்ஜ் உள்ளே போனால்... அவன் சுபாவமே மாறிவிடும். அவன் மூடைப் பொறுத்து 'அன்பே சிவம்’ கமல்ஹா​சனாக மாறுவான் அல்லது 'அமைதிப் படை’ சத்யராஜாக மாறுவான். ஒரு நாள் காலை 11 மணிக்கு டீ சாப்பிடச் சென்றோம். டீ குடித்த பின்பு, 'நான்தான் காசு கொடுப்பேன்’ என்று பேன்ட் பாக்கெட்டில் கையைவிட்டு எதையோ வெளியே எடுத்தான். அது டூ வீலர் பெட்ரோல் டேங்கின் மூடி. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அது ஆச்சர்யம் இல்லை. ஆனால், அவனுக்கும் ஒன்றும் புரியவில்லை என்பதுதான் ஆச்சர்யம். அதைப் பார்த்தபடி திருதிருவென முழித்தான்.
அப்புறம் திடீரென்று யோசனை வந்தவனாக, 'நேத்து ராத்திரி டாஸ்மாக்ல என் வண்டியை மறிச்சு ஒருத்தன் வண்டியைப் போட்டு இருந்தான். கொஞ்சம்கூட பொறுப்பே இல்லாம அப்படியா நிறுத்துறது? என் வண்டியை எடுக்குறதுக்குள்ள நாக்கு தள்ளிப்போச்சு. அதான் அவன் பெட்ரோல் டேங்க் மூடியைக் கழட்டிட்டு வந்துட்டேன்...’ என்றான் சாதாரணமாக. இது ஆரம்ப கட்டத்தில்தான் ஜாலி. இந்த கோர்சிகா காஃப்ஸ் சிண்ட்ரோம் சேட்டைகள் எல்லாம் இருக்கட்டும். இதன் உச்சபட்ச பாதிப்பு எப்படி இருக்கும் தெரியுமா? கற்பனை செய்யக்கூட முடியாது. ஆம், மிகக் கொடூரமான மனநோய் அது.
இந்த மனநோய் மனிதர்களை உற்பத்தி செய்​வதற்குள் அரசியலும் வர்த்தகமும் பணமும் மட்டுமே முக்கியமான காரணம்!
ஆட்சி மாறும்போது காட்சி மாறும். கல்லாக்களும் இடம் பெயரும். ஆனால், டாஸ்மாக் அப்படி அல்ல!
டாஸ்மாக் நிறுவனத்துக்கு பீர், பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகளை சப்ளை செய்யும் தொழிற்​சாலைகளில் முக்கியமானவை தி.மு.க. அல்லது அ.தி.மு.க. பின்புலம் கொண்டவை. சம்பந்தப்​பட்ட கட்சி ஆட்சிக்கு வரும்போது, வேண்டப்பட்ட நிறுவனத்​திடம் இருந்து அதிக அளவில் கொள்முதல் செய்வது வழக்கம்​தான். அதனால் ஜெயலலிதாவின் ஆட்சியில், சசிகலாவுக்கு வேண்டப்​பட்டவர்களால் நடத்தப்படுவதாகச் சொல்லப்படும் மிடாஸ் நிறுவனம், டாஸ்மாக்குக்கு எவ்வளவு சரக்கு சப்ளை செய்திருக்கிறது என்பதை அறிய நினைத்தோம். தகவல் அறியும் உரிமைச் சட்டப் போராளி வழக்கறிஞர் லோகநாதனும் நமக்குக் கை கொடுத்தார். இதில் கிடைத்த பல தகவல்கள் அரசியலைத் தாண்டிய அதிர்ச்சி ரகம்.  
டாஸ்மாக் நிறுவனத்தை 1983-ம் ஆண்டு அன்றைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். துவக்கினார். அப்போது ஐந்து நிறுவனங்களிடம் இருந்து மதுபான வகையறாக்களை மொத்தமாகக் கொள்முதல் செய்து, தனியார் மதுபானக் கடைகளுக்கு விற்று வந்தது அரசு. பிறகு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் (2003-ம் ஆண்டு) அரசு நிறுவனமான டாஸ்மாக், மது பானங்களை சில்லறையாக விற்பனை செய்யத் தொடங்கியது. கூடவே, சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர்களுக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் 'மிடாஸ் கோல்டன் டிஸ்டிலரீஸ் பிரைவேட் லிமிடெட்’ என்கிற நிறுவனம் புதிதாக லைசென்ஸ் பெற்று, கனஜோராக சப்ளையைத் தொடங்கியது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தனக்குத் தரப்பட்ட தகவல்களை விரிவாகச் சொன்னார் லோகநாதன். ''2003 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் 130 கோடி ரூபாய்க்கு மிடாஸிடம் இருந்து டாஸ்மாக் கொள்முதல் செய்துள்ளது. 2005 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் 872 கோடியாக எகிறி இருக்கிறது. பிறகு வந்த ஐந்து ஆண்டு தி.மு.க. ஆட்சியில் நானூற்று சில்லரைக் கோடிகள், ஐநூற்று சில்லரைக் கோடிகளாக இருந்திருக்கிறது. தற்போது அ.தி.மு.க. ஆட்சி அமைந்த கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 1,404 கோடி ரூபாய்க்கு சரக்கு கொடுத்துள்ளது. இத்தனைக்கும் இந்த நிறுவனம் மூன்று கோடி ரூபாய் முதலீட்டில்தான் தொடங்கப்பட்டது.
இது ஒரு புறம் இருக்கட்டும். தி.மு.க-வைச் சேர்ந்த மத்திய அமைச்சரான ஜெகத்ரட்சகனின் மனைவி மற்றும் மகன் பெயரில் இருக்கிறது 'எலைட் டிஸ்டிலரீஸ்’ நிறுவனம். தி.மு.க. ஆட்சியில் இருந்த (2006 - 2011) ஐந்து ஆண்டுகளில் இந்த நிறுவனம் 1,275 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்குக்கு சரக்கு சப்ளை செய்திருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் இந்தத் தொழிற்சாலை என்ன ஆனது என்று பார்த்தால் மெகா ஆச்சர்யம். ஆம், 2011-2012 நிதி ஆண்டில் மட்டும் 1,008 கோடி ரூபாய்க்கு சப்ளை செய்திருக்கிறது.
கருணாநிதி கதை, வசனம் எழுதிய 'பெண் சிங்கம்’ மற்றும் 'உளியின் ஓசை’ திரைப்படங்களைத் தயாரித்த என்.ஜெயமுருகனின் எஸ்.என்.ஜெ. டிஸ்டிலரீஸ் நிறுவனத்தின் நிலை இதைவிட ஆச்சர்யத்தைத் தருகிறது. ஆம், 2010-2011 நிதி ஆண்டில் 1,235 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்குக்கு சரக்கு சப்ளை செய்த இவர்கள், ஜெ. ஆட்சி அமைந்த பிறகு 1,494 கோடி ரூபாய்க்கு சப்ளை செய்திருக்கிறார்கள். இது எப்படிச் சாத்தியமாகிறது என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும்.
அதாவது, மிடாஸ் நிறுவனத்தின் முக்கியமான பங்குதாரராக, மதர் மீரா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இருக்கிறது. இதன் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர், டாஸ்மாக்குக்கு மதுபானங்கள் சப்ளை செய்யும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான மோகன் பிரீவரீஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும் இருக்கிறார். இவரும் கருணாநிதி வசனம் எழுதிய படங்களைத் தயாரித்த ஜெயமுருகனும் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருக்கிற சாகர் சர்க்கரை ஆலையின் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். சசிகலாவுக்கு நெருங்கிய 'மிடாஸ்’ நிறுவனத்தின் பங்குதாரரோடு கருணாநிதிக்கு மிக நெருங்கிய நபர் தொழில் தொடர்பில் இருக்கிறார் என்றால், அதற்கு என்ன அர்த்தம்? அதனால்தான் ஜெயமுருகனின் நிறுவனம் மதுபான சப்ளையில் இப்போதும் உச்சத்தில் இருக்க முடிகிறது. அரசியல் யுத்தம் நடத்தும் இரண்டு பெரும் கட்சிகளின் மேல்மட்டத் தொடர்புகள், தொழில் பிணைப்புகள் எதுவும் அப்பாவித் தொண்டர்களுக்குத் தெரிவது இல்லை என்பதுதான் கொடுமை.  
மிடாஸின் முக்கியப் பங்குதாரரான மதர் மீரா நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான விஷ்ணு பிரசாத் யார் தெரியுமா? சமீபத்தில் வருமான வரித் துறையால் ரெய்டு நடத்தி கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட செய்தியால் லைம் லைட்டுக்கு வந்தவர் விஷ்ணு பிரசாத். யூகிக்க முடியவில்லையா? சிரஞ்சீவியின் மருமகன்தான் விஷ்ணு பிரசாத். இப்படி எல்லாக் கட்சிகளும் ஒன்றுக்குள் ஒன்றாகத்தான் இருக்கின்றன. இது தெரியாமல்தான் அப்பாவித் தொண்டர்கள் அடித்துக்கொள்கிறார்கள்'' என்று வருந்தினார்.
இதைப் படித்தாலே  தலையைச் சுத்துதா..?டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலு வலகத்தை நீங்கள் நேரில் பார்த்து இருக்கிறீர்களா? சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராசன் மாளிகை வளாகத்தில் இயங்குகிறது இந்த தலைமை அலுவலகம். அந்த அலுவலகத்தை, நாளை காலை முதல் செக்கானூரணி பஸ் ஸ்டாண்​டுக்குப் பக்கத்தில் இயங்கும் டாஸ்மாக் பாருக்கு மாற்றிவிட்டால் என்ன ஆகும்? 
தலைமை அலுவலகத்தின் வரவேற்பறையில் தொடங்கி அதன் தலைவர், நிர்வாக இயக்குநர், அதிகாரி​கள், அலுவலர்களின் அறைகள் எல்லாம் நட்சத்திர விடுதிபோல் இருக்கிறது. எனக்கு ஒரு விஷயம்தான் புரியவில்லை. தங்களுடைய அலுவலகத்தை இவ்வளவு ஆடம்பரமாக வைத்துக்கொள்ளும் இவர்கள், டாஸ்மாக் கடைகளையும் பார்​களையும் மட்டும் எப்படி பொதுக் கழிப்பிடங்களைவிட அசுத்தமான, துர்நாற்ற​மான, சுகாதாரக் கேடான சூழலில் நடத்த அனுமதிக்​கிறார்கள்?
அதுசரி, 'குடி குடியைக் கெடுக்கும்’ என்று போர்டு போட்டு, எவன் குடி கெட்டால் நமக்கென்ன என்று கல்லாக் கட்டும் தொழில்தானே நடத்துகிறோம் என்ற அலட்சியமா?
சில வாரங்களுக்கு முன், கலிஃபோர்னியா  நண்பர் ஒருவர் சென்னை வந்திருந்தார். அவர் ஒரு மருத்துவர். நம் நகரத்தில் தெருக்கள்தோறும் இருக்கும் மதுக்கடைகளைப் பார்த்த அவர், ஒரு கடைக்குள் சென்று பார்க்க விரும்பினார். உள்ளே போனார். சில நிமிடங்கள் மௌனமாக அந்தச் சூழலைக் கூர்ந்து கவனித்த அவர் சொன்னார்... ''உலகம் எல்லாம் மதுவைக் குடித்தால் என்னென்ன கேடுகள் வருமோ, அவை அத்தனையும் உங்கள் ஊரில் மட்டும் இரண்டு மடங்காகி விடும். இப்படி ஒரு சுகாதாரமற்ற சூழலை நான் எங்குமே பார்த்தது கிடையாது. உங்கள் அரசாங்கம் இதை எல்லாம் எப்படி அனுமதிக்​கிறது?'' என்றார். ''எங்கள் அரசாங்கம்தான் இந்தக் கடைகளையே நடத்துகிறது'' என்றேன். விறுவிறுவென்று சென்று காரில் ஏறிய அந்த நண்பர் அதற்குப்பின் கடைசி வரை அந்த விஷயம்பற்றி பேசவே இல்லை!
எழுத்தாளர் அறந்தை நாராயணன், 'குடியால் குடைசாய்ந்த கோபுரங்கள்’ என்று ஒரு புத்தகம் எழுதினார். தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்த நடிகர்கள் சிலர், தங்களது குடிப்பழக்கத்தால் எப்படி சொந்த வாழ்க்கையை அழித்துக்கொண்டார்கள் என்பதை விவரிக்கும் அந்தக் காட்சிகளைப் படிக்கும்போது ரத்தம் கொதிக்கும். கோபுரங்களில் இருந்தவர்களை எல்லாம் குடிசையை நோக்கித் தள்ளி... பட்டுப் பீதாம்பரங்களில் தவழ்ந்தவர்களைக் கட்டாந்தரையில் தவழவைத்துச் சிதைத்து...
மது போதைக்கு எதிராகக் கல்லூரிகளில் அடிக்கடி விழிப்பு உணர்வு வகுப்புகளை நடத்துபவர் டாக்டர் மோகன். மாணவர்கள் எப்படிப் போதைக்கு அடிமையாகிறார்கள் என்பதுபற்றி தொடர் ஆய்வில் ஈடுபட்டு இருக்கும் அவர் சொல்லும் தகவல்கள் அதிர வைக்கின்றன. ''பள்ளி அல்லது கல்லூரிக் காலத்தில் ஜாலிக்காக என்று பீர் குடிக்கத் தொடங்கும் மாணவர்களில், பத்தில் மூன்று பேர் காலப்போக்கில் முழுநேரக் குடிகாரர்களாக மாறுகிறார்கள். அதனாலேயே நோயாளி ஆகி, 40 வயதுக்குள் மரணத்தைத் தழுவுகிறார்கள்'' என்று பெரிய ஆய்வறிக்கையையே தருகிறார் மோகன்.
மாணவர்களின் முதல் அனுபவம் பெரும்பாலும் நண்பர்களின் வற்புறுத்தல்களால்தான் தொடங்குகிறது.'சும்மா அடி மச்சி. ஒரு த்ரில் தான ’ என்று ஏ(ஊ)ற்றி விடுவார்கள். இதை 'பீர் பிரஷர்’(peer pressure) என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். இந்த இடத்தில்தான் மாணவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் 'சும்மா’ மது குடிப்பது என்பது செத்த எலியின் வாலைப் பிடிப்பதுபோல எளிதாகத்தான் இருக்கும். ஆனால், அது உண்மையில் புலி வால் என்பது போகப்போகத்தான் தெரியும்!
சிலர் சொல்வார்கள், ''எப்போவாச்​சும் குடிப்பேன்... கம்பெனி மீட்டிங்... ஃப்ரெண்ட்ஸ் கெட் டு கெதெர்... மன்த்லி ஒன்ஸ்... வெளியூர் போனால்தான்... ஆனா, நான் குடிகாரன் இல்லை'' என்று. குடிக்கும் பழக்கம் இருக்கும் எவருக்கும் நான் குடிகாரன் இல்லை என்று சொல்லும்  தகுதி கிடையாது. ஏனெனில் மனநல மருத்துவர்கள் மது குடிப்பதை 'குடிப்பழக்கம்’ என்று சொல்வது இல்லை. 'குடிநோய்’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். ஒரு  முறை குடித்தாலும் கிருமி, கிருமிதானே? அதேபோல, 'எப்போதாவது குடிக்​கிறேன் ஆசாமி’கள் பார்க்க ஆரோக்கிய​மாகத் தெரியலாம். ஆனால், குடிப் பழக்கம் உள்ள எவருக்கும்  கல்லீரல், கணையம் போன்றவை குறைந்தது 10 சதவிகிதமாவது பாதிக்கப்பட்டு இருக்கும். ஆக,  'எப்போதாவது குடிக்கிறேன் ஆசாமி’கள் முதல்நிலைக் குடிநோயாளிகள்!
எப்போடா பொழுது சாயும் என்று காத்​திருந்து மதுக்கடைக்கு ஓடுவது இரண்டாம் நிலை நோய்க்கான அறிகுறி. இந்தக் கட்டத்தில் இருப்பவர்கள் குடிக்கப்போகும் நேரத்துக்கு நான்கு மணி நேரத்துக்கு முன்பாகவே 50 சதவிகிதம் தன்னிலையை இழந்துவிடுவார்கள். நாம் ஒன்று கேட்டால், அவர்கள் ஒன்று பதில் சொல்வார்கள் அல்லது திருதிருவென முழிப்பார்கள். அதாவது, வயிற்றுக்குள் சாராயம் போகவில்லை என்றாலும் 'போகப்​போகிறது’ என்ற மனநிலையிலேயே தடுமாறத் தொடங்கி ​விடுவார்கள். வேலைநேரம் முடிந்து, ஏழு மணிக்கு குடிக்கப் போக வேண்டும் என்றால், குடிப்பதற்கானத் திட்டமிடல் மதியம் மூன்று மணிக்கே மனதுக்குள் தொடங்கிவிடும்.  குடிக்கும்போது அதிகமாகப் போதை ஏற வேண்டும் என்று மதிய உணவைக் குறைத்து சாப்பிடுவார்கள் சிலர். உணவே வேண்டாம்; வெறும் வயிற்றில் குடித்தால்தான் போதை அதிகம் ஏறும் என்பது வேறு சிலரின் தத்துப்பித்துவம். இரவு முழுவதும் மது அருந்திவிட்டு, மறுநாள் காலை தன்னைத்தானே திட்டிக்கொண்டும் 'நாளை முதல் குடிக்க மாட்டேன்’ என்று சபதம் எடுத்துக்கொண்டும் அன்றாட அலுவலில் ஆஜர் ஆவது இவர்களுடைய குணாதிசயம். ஏமாற்றிச் சென்ற காதலியில் தொடங்கி பெட்ரோல் விலை உயர்வு வரை எல்லாமே இவர்கள் குடிப்பதற்கான காரணங்கள் ஆகலாம். குடிக்க வேண்டும் என்பதற்காகக் இப்படிக் காரணங்களை உருவாக்குவதை மன நல மருத்துவத்தில் 'ரேஷனலைசேஷன்’ (rationalization) என்பார்கள். இவர்கள் இரண்டாம் நிலைக் குடி நோயாளிகள். இரவு மட்டும் குடிக்கும் இந்த இரண்டாம் நிலை குடி நோயாளிகளுக்கு ஒரு கட்டத்தில் ஆல்கஹால் அவர்களின் மூளை நரம்புகளிலும் ரத்தத் தட்டுகளிலும் சேகரமாகிவிடும். இதனால், ஏற்கெனவே குடித்த மதுவின் அளவு போதாமல் ஒரு வருட இடைவெளிக்குள் மதுவின் அளவு இரண்டு மடங்காக அதிகரித்துவிடும். குவாட்டர் அடித்தவர் ஆஃப் பாட்டில் அடிக்க வேண்டிய சூழல். இதனால், இயல்பாகவே உடலில் உள்ள மொத்த உறுப்புகளும் பாதிக்கப்பட்டு, கை நடுக்கம், பதற்றம் இவை எல்லாம் ஏற்படும். மறுநாள் காலை இயல்பாக இருக்க முடியாது. குறைந்தது 90 மில்லி மதுவாவது குடித்தால்தான் இயல்பு நிலைக்குத் திரும்பும் நிலை ஏற்படும். இங்குதான் காலையிலேயே மதுவை தேடிச் செல்லும் உச்சபட்ச மூன்றாம் நிலைக் குடி நோயாளி உருவாகிறான்.
ஒருவர் மூன்றாம் நிலைக் குடி நோயாளியாக மாறிவிட்டார் என்பதைக் கீழ்க்காணும் ஆறு விஷயங்களில் இருந்து மனநல மருத்துவர்கள் அனுமானிக்கிறார்கள்.
1. மதுவின் அளவை அதிகரித்துக்கொண்டே செல்வது.
2. மனைவி, குழந்தை, காதல், காமம், சினிமா, புத்தகம், விளையாட்டு... இப்படி எல்லா இன்பங்களையும்விட மதுவே சந்தோஷம் என நினைப்பது.
3. மது அருந்திய போதை தெளிந்த பின், மீண்டும் மது கிடைக்கும் வரை, குடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருப்பது.
4. குடிக்க ஆரம்பித்துவிட்டால் எந்த அளவும் இல்லாமல் சுயநினைவு இழக்கும்வரை  குடித்துக்கொண்டே இருப்பது.
5. மது அருந்துவது தவறு. உடல் நலம், குடும்ப நலம் பாதிக்கிறது என்று உணர்ந்து மதுவைவிட முயற்சிக்கும்போது, கை உதறல், மனப்பதற்றம், அபரிமிதமான வியர்வை, உறக்கம் இன்மை போன்ற சூழலுக்குத் தள்ளப்படுவது.
6. உடல் நலம் பாதிக்கப்பட்டுவிட்டது... மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுவிட்டோம் என்று தெரிந்தும் குற்ற உணர்விலேயே குடித்துக்கொண்டே இருப்பது.
ஒருவர் மூன்றாம் நிலைக் குடி நோயாளியாகி​விட்டால், அவரை மீட்பது அவ்வளவு எளிது இல்லை. இதற்கான சிகிச்சையை 'ஆன்டி ரெட்ரோ வைரல்’  (anti retroviral)  என்று சொல்வார்கள். ஜீவ மரணப் போராட்டம் இது.
உதாரணத்துக்கு, உருண்டையாக இருக்கும் மூளையின் மேல் ஆல்கஹால் என்கிற தொப்பியை ஒருவர் பல ஆண்டுகளாக அணிந்து இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். திடீரென்று ஒரு நாள் இந்த தொப்பியைக் கழற்றினால், மூளை உச்சபட்சக் கொதிநிலையை அடையும். அப்போது உடலுக்குக் கட்டளையிடும் மூளையின் நரம்புகள் ஆத்திரத்தில் கன்னாபின்னா என்று கட்டளையிட்டு... கை கால்கள் உதறி, நாக்கை துருத்திக் கடித்து, தற்கொலை செய்துகொள்ளத் துடிப்பார்கள் அல்லது எதிரே இருப்பவரைத் தாக்கவும் துணிவார்கள்.
இந்தச் சிகிச்சையின்போது முதல் 72 மணி நேரத்தில் குடி நோயாளியின் உடலில் இருந்து ஆல்கஹாலின் விஷத்தன்மையை அகற்றும் பணி நடக்கும். இந்தச் சமயத்தில் வலிப்பு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். இதை 'ரம் ஃபிட்ஸ்’  (rum fits) என்பார்கள். மரண வேதனையைவிடக் கொடிய வேதனை இது. சொல்லப்போனால், வெளியேறத் துடிக்கும் உயிரைத் தடுத்து நிறுத்தி, சிகிச்சை அளிப்பது என்பது இதுதான்.
    அதெல்லாம் சரி, நீங்கள் குடி நோயாளியா?
உலகச் சுகாதார நிறுவனம் அங்கீகரித்து சர்வதேச அளவில் மனநல மருத்துவர்கள் பயன்படுத்தும் அடிப்படைக் கேள்வித்தாள் இது. இந்தக் கேள்விகளை 'ஆடிட் கொஸ்டீன்ஸ்’  (The alcohol use disorders identification test) என்பார்கள். இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் உங்களுக்கே உங்களுக்கானவை. அது அடுத்த இதழில்...
 - தெளிவோம்
 மது உருவான கதைகளுள் ஒன்று!
 மதியை மயக்கும் மது எப்படி உருவானது என்பதற்கான நாடோடிக் கதைகளுள் இதுவும் ஒன்று. ஷாம்ஜெட் என்கிற பாரசீக மன்னன் திராட்சைப் பிரியன். அரசவையில் இருந்தாலும், அந்தப்புரத்தில் இருந்தாலும் அவனுக்கு முன்பாக பெரிய ஜாடி ஒன்றில் திராட்சை நிரப்பப்பட்டு இருக்க வேண்டும். ஒரு நாள் மன்னன் வெளியூர் சென்று திரும்பியபோது, அவனது படுக்கை அறையில் வைக்கப்பட்டு இருந்த ஜாடியில் திராட்சை அழுகி, நொதித்துப்போய் கிடந்தது. மன்னன் அதை விரலால் எடுத்து நக்கிப் பார்த்தான். துர்நாற்றத்துடன் கசந்தது. உடனே, இது சைத்தானின் வேலை என்று கருதியவன், ஜாடியில் 'விஷம்’ என்று எழுதி அரண்மனைக்கு வெளியேவைக்க உத்தரவிட்டான்.
அந்த நேரம் அந்தப்புரத்தின் அரசிகளில் ஒருத்தி, மன்னனிடம் கோபித்துக்கொண்டு வெளியே ஓடினாள். ஜாடியில் விஷம் என்று எழுதப்பட்டு இருப்பதைப் பார்த்தவள், உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பி, அதை எடுத்துக் குடித்தாள். அதுவரை, அழுதுகொண்டே 'கண்ணில் நிறைந்த கணவரை எண்ணி கண்ணீர்க் கடலில் குதிக்கவா...’ என்று பாடிக்கொண்டு இருந்தவள், சில நிமிடங்களில் பரவச நிலையை அடைய, ஆன் தி ஸ்பாட்டில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். தகவல் அறிந்து வெளியே வந்த மன்னன், தானும் அதை எடுத்து சுவைக்கவும் அரண்மனை வாயிலில், 'ஓஹோ எந்தன் பேபி... நீ வாராய் எந்தன் பேபி...’ என்று இருவரும் டூயட் பாடத் தொடங்கிவிட்டார்கள். என்னவோ ஏதோ என்று வெளியே வந்த அரசவை அறிஞர்களும் அதை சுவைக்க... அப்புறம் என்ன, 'வேர் இஸ் த பார்ட்டி... அரண்மனை வாசலில் பார்ட்டி!’தான்.
 ஊறல்... ஊழல்...
மதுரை கோச்சடையில் டாஸ்மாக் கடை ஒன்றின் மேற்பார்வை​யாளராக இருக்கும் ஷாஜகான், டாஸ்மாக் பார்களில் நடக்கும் மோசடிகளை எதிர்த்துக் குரல் கொடுப்பவர். அவர் சொல்லும் விஷயங்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகம். டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் எப்படி எல்லாம் நடக்கிறது என்பதற்கு அவர் சொன்ன ஓர் உதாரணம்...
''ஒரு கடையின் தினசரி வியாபாரத்தில் 2.5 சதவிகிதம் அடிப்படைத் தொகையாக நிர்ணயித்து, மாதத்துக்கு இவ்வளவு தொகை கட்ட வேண்டும் என்று பார் உரிமத்துக்கு டெண்டர் விடுவார்கள். ஒரு நாளைக்கு கடையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் என்றால், தினசரி 2,500 வீதம் மாதத்துக்கு 75 ஆயிரம் என நிர்ணயித்து டெண்டர் விடுவார்கள். இந்தத் தொகைக்கு மேல் யார் அதிகமாகக் கேட்கிறார்களோ... அவர்களுக்கு லைசென்ஸ் கிடைக்கும்.
இப்படி உரிமம் பெறுபவர், மூன்று மாத முன்வைப்பு தொகை செலுத்த வேண்டும். மூன்று மாதங்கள் தொடர்ந்து தொகை செலுத்தவில்லை என்றால், உரிமத்தை ரத்து செய்துவிடுவார்கள். இங்குதான் மோசடியே ஆரம்பம். உரிமம் ரத்து ஆன பின்பு அதிகாரிகளுடன் பேசிவைத்துக்கொண்டு, அந்தக் கடைக்கான ஏலத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால், அதிகாரப்பூர்வமற்ற முறையில் பார் தொடர்ந்து நடக்கும்.
தமிழகத்தில் மொத்தம் 7,434 டாஸ்மாக் கடைகள். இதில் சுமார் 2,000 கடைகளில் அனுமதி இல்லாமல் இப்படி பார் நடக்கிறது. இந்த 2,000 கடைகளில் ஒரு நாளைக்குச் சராசரியாக ஒரு லட்சம் வியாபாரம் என்று வைத்துக்​கொண்டாலும், 2.5சதவீத கணக்குப்படி மாதத்துக்கு 15 கோடி அரசுக்கு நஷ்டம். இது ஒரு லட்சம் வியாபாரம் என்ற அடிப்படையில் போடப்பட்ட கணக்கு மட்டுமே. இரண்டு அல்லது நான்கு லட்சம் வரை வியாபாரம் ஆகும் கடைகளுக்கு நஷ்டக் கணக்குப் போட்டால் இன்னும் தலை சுற்றும்!''

சரி, குடிநோய்ப் பரிசோதனைக்குத் தயாராகி​ விட்டீர்களா?

இந்த கேள்விகளுக்கான உண்மையான பதிலை 'டிக்’ அடியுங்கள். கிடைக்கும் மதிப்பெண்களை வைத்து
நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
1.எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மது அருந்துகிறீர்கள்?
அ. எப்போதும் இல்லை
ஆ. இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை
இ. மாதத்துக்கு 2 முதல் 4 முறை
ஈ. வாரத்துக்கு 2 முதல் 3 முறை
உ. வாரத்துக்கு 4 முறை, அதற்கு மேலும்
2.எத்தனை கோப்பை (லார்ஜ்) மது அருந்து கிறீர்கள்?
அ. 1 அல்லது 2  ஆ. 3 அல்லது 4
இ. 5 அல்லது 6   ஈ. 7 முதல் 9
உ. 10 ,அதற்கு மேல்
3. ஒரே தடவையில் ஆறு கோப்பை அல்லது அதற்கு மேலும் குடிக்கிறீர்கள் என்றால் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை அப்படிக் குடிக்கிறீர்கள்?
அ. எப்போதும் இல்லை
ஆ. இரண்டு மூன்று மாதங்களுக்கு
ஒரு முறை
இ. மாதத்துக்கு ஒருமுறை
ஈ. வாரம் ஒருமுறை
உ. தினமும்
4. மது அருந்த ஆரம்பித்து விட்டால் நிறுத்தவே முடியாது என்ற சூழ்நிலை கடந்த ஆண்டில் எத்தனை முறை உங்களுக்கு ஏற்பட்டது?
அ. எப்போதும் இல்லை
ஆ. இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை
இ. ஒவ்வொரு மாதமும்
ஈ. ஒவ்வொரு வாரமும்
உ. தினமும்
5. குடிப்பதற்காக கடந்த ஆண்டு, நீங்கள் வழக்கமான செய்யும் அலுவல்களை எத்தனை முறை புறக்​கணித்து இருக்கிறீர்கள்?
அ. எப்போதும் இல்லை
ஆ. இரண்டு மூன்று
மாதங்களுக்கு ஒரு முறை
இ. ஒவ்வொரு மாதமும்
ஈ. ஒவ்வொரு வாரமும்
உ. தினமும்
6. மிக அதிகமாகக் குடித்த பிறகு மறுநாள் காலை எழுந்தவுடன் மீண்டும் மது அருந்த வேண்டும் என்ற சூழ்நிலை கடந்த ஆண்டு எத்தனை முறை ஏற்பட்டது?
அ. எப்போதும் இல்லை
ஆ. இரண்டு மூன்று
மாதங்களுக்கு ஒரு முறை
இ. ஒவ்வொரு மாதமும்
ஈ. ஒவ்வொரு வாரமும்
உ. தினமும்
7. மது அருந்தியதால் குற்ற உணர்ச்சி மற்றும் நீங்கள் செய்த செயலுக்காக வருந்தும் சூழ்நிலை கடந்த ஆண்டு எத்தனை முறை ஏற்பட்டது?
அ. எப்போதும் இல்லை
ஆ. இரண்டு மூன்று
மாதங்களுக்கு ஒரு முறை
இ. ஒவ்வொரு மாதமும்
ஈ. ஒவ்வொரு வாரமும்
உ. தினமும்
8. அதிகமாகக் குடித்த பின், கடந்த இரவில் என்ன நடந்தது என்பதே நினைவு இல்லாத சூழல் கடந்த ஆண்டில் எத்தனை முறை ஏற்பட்டது?
அ. எப்போதும் இல்லை
ஆ. இரண்டு மூன்று
மாதங்களுக்கு ஒரு முறை
இ. ஒவ்வொரு மாதமும்
ஈ. ஒவ்வொரு வாரமும்
உ. தினமும்
9. நீங்கள் குடிப்பதால் உங்களுக்கோ அல்லது உங்களால் மற்றவர்களுக்கோ கடந்த ஆண்டு காயம் ஏற்பட்டுள்​ளதா?
அ. இல்லை
ஆ. ஆம், ஆனால் கடந்த ஆண்டு இல்லை
இ. ஆம். கடந்த ஆண்டு ஏற்பட்டது.
10. உறவினர், நண்பர், மருத்துவர் என யாரேனும், நீங்கள் குடிப்பது குறித்து கவலை தெரிவித்து குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று அறிவுரை கூறி இருக்கிறார்களா?
அ. இல்லை
ஆ. ஆம், ஆனால் கடந்த ஆண்டு இல்லை
இ. ஆம், கடந்த ஆண்டு கூறினார்.
மதிப்பெண்கள்:
1-8 கேள்விகளுக்கு: அ-0; ஆ-1; இ-2; ஈ-3; உ-4.
9-10 கேள்விகளுக்கு: அ-0; ஆ-2; இ-4.
உங்கள் மதிப்பெண் எவ்வளவு என்று கணக்கிட்டுப் பார்த்தீர்களா?
இப்போது ரிசல்ட்:
ஆணோ, பெண்ணோ உங்கள் மதிப்பெண் 8 என்றால், நீங்கள் அபாய கட்டத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறீர்கள்.
பெண்ணாக இருந்து 13 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறீர்கள் என்றாலோ... ஆணாக இருந்து 15 மதிப்பெண்களைப் பெற்றிருக்​கிறீர்கள் என்றாலோ... சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய குடிஅடிமை நீங்கள். அதற்கு மேலும் மதிப்பெண் பெற்று இருந்தால், உங்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!
சரி, மது அருந்துவதால் ஒருவருக்கு ஏற்படும் உடல்நிலை, மனநிலை பாதிப்புகள் நமக்குத் தெரியும். ஆனால், மதுவே அருந்தாமல் குடி நோயாளிகளுடன் குடும்பம் நடத்தும் பெண்களுக்கு உடல் அளவிலும் மனஅளவிலும் ஏற்படும் பாதிப்புகள்பற்றி உங்களுக்குத் தெரியுமா?
குடிநோயாளிகள் கொஞ்சமும் கற்பனை செய்துகூட பார்க்க விரும்பாத அந்த நரக வேதனையை இப்போது பார்க்கலாம்.
மதுவை முகர்ந்துப் பார்க்கும்போது வரும் துர்நாற்றத்தைவிட மது குடித்தவரின் வாய், சுவாசம், வியர்வையில் இருந்து வரும் துர்நாற்றம் பத்து மடங்கு அதிகம். பாழாய்போன பாரில் அழுகிய முட்டையில் போடப்பட்ட ஹாஃப் பாயில், முந்தா நாள் போட்ட சில்லி சிக்கன்... ஏற்கெனவே வயிற்றுக்குள் அழுகிக்கொண்டு இருக்கும் கல்லீரல், காயம்பட்ட இரைப்பை இவை எல்லாம் சேர்ந்து மதுரை மல்லி வாசனையா மணக்கும்?
மது நாற்றத்துடன் வீட்டுக்கு வரும் ஒரு குடிநோயாளி, இரவில் காம நோக்கத்துடன் தனது மனைவியை நெருங்கும்போது... அதுதான் பெண்ணுக்கு உலகிலேயே சகித்துக்கொள்ள முடியாத வேதனையாக இருக்கும். கிட்டத்தட்ட வல்லுறவுபோலத்தான் இதுவும். தமிழக அரசு வழங்கும் டாஸ்மாக் சாபத்தால் ஒவ்வொரு தெருவுக்கும் பத்து பெண்களாவது இந்தக் கொடுமையை தினம்தினம் அனுபவிக்கிறார்கள்.
நடத்தையில் சந்தேகம்... மனைவி கொலை... கணவன் கைது என்று நாளிதழ்களில் நாள் தவறாமல் வரும் செய்திகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதற்குப் பின்னணியில் இருக்கும் குடிநோய் தொடர்பான மருத்துவ ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?
கடந்த தொடரில் படித்த உச்சபட்ச மூன்றாம் நிலை குடிநோயாளிகளுக்கு ஒரு முக்கியமான பிரச்னை இருக்கும். அது... இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதுபோல நினைத்துக்கொள்வது. குறிப்பாக, தன் மனைவி தனக்கு நேர்மையாக இல்லையோ... நடத்தை தவறி இருப்பாளோ என்ற சந்தேகம் (குடியால் பலர் ஆண்மைக்குறைவு பிரச்னைக்கு உள்ளாவதும் அதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையும்கூட இதற்கு ஒரு காரணம்). மனநல மருத்துவத்தில் இதை  Delusion of Infidelity என்பார்கள்.
குடித்துவிட்டு வருவதால் இயல்பாகவே மனைவி தன்னை சரிவரக் கவனிக்காமல் இருப்பது, திட்டுவது, பண விஷயங்களை மறைப்பது போன்றவற்றால் மனைவி மீது வரும் வெறுப்பு இதற்கு ஒரு காரணம். இன்னொரு முக்கியமான மருத்துவரீதியான காரணம், ஆண் மலட்டுத்தன்மை. மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் இந்த வாக்கியம் ஏகப் பிரபலம். Provokes the desire but, takes away the performance. அதாவது, காமத்தைத் தூண்டிவிடும்; ஆனால், செயல்படுத்தவிடாது என்று அர்த்தம். மதுவும் அப்படித்தான். ஆல்கஹால், காமத்தைத் தூண்டிவிடும். ஆனால், செயல்படவிடாது. தொடர்ந்து குடிக்கும் குடிநோயாளிகள் மனைவியுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது, நீண்டநேரம் போராடுவார்கள். ம்ஹூம், உருப்படியாக எதுவும் நடக்காது. பெண்களுக்குத் திருப்தியை ஏற்படுத்த முடியாது. ஆணுக்கும் தன்னால் இயலவில்லையே என்கிற குற்றஉணர்வு ஏற்படும்.
ஆனால், தொடர்ந்து மது அருந்துவதால்தான் மேற்படி விஷயத்தில் தான் வீக் என்பதை ஆண் அவ்வளவு சீக்கிரம் ஒப்புக்கொள்ள மாட்டான். அது ஆணின் ஈகோ. தன்னால் மனைவியைத் திருப்திப்படுத்த முடியாததால், மனைவி வேறு எங்கோ தாகத்தைத் தீர்த்துக்கொள்கிறாளோ என்ற சந்தேகம் கணவனுக்கு ஏற்படும். குடிபோதையில் இருக்கும் ஒரு குடிகாரனால் வார்த்தைகளை அளந்து பேச முடியாது. குடித்துவிட்டு வந்து மனைவியின் நடத்தை குறித்து ஆபாசமாகக் கேள்வி எழுப்புவான்.
கணவன் குடிப்பதை, குடித்து விட்டு அடிப்பதை, குழந்தையின் மருத்துவத்துக்கு வைத்து இருக்கும் பணத்தைப் பிடுங்கிக்கொண்டு சென்று குடிப்பதை எல்லாம்கூட பொறுத்துக்கொள்ளும் ஒரு நல்ல மனைவியால், தான் நடத்தை கெட்டவள் என்று கணவன் திட்டுவதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. வன்முறையும் விவாகரத்துகளும் குற்றங்களும் தொடங்கும் இடம் இதுதான்!
செக்ஸ் ரீதியான இந்தப் பாதிப்பின் அடுத்த கட்டம் தெரியுமா? அசிங்கத்தின் உச்சம் அது!

தரம்... தரை டிக்கெட்டு!

வருமானத்தைப் பெருமையாகச் சொல்பவர்கள் மதுவின் தரத்தைப் பற்றிக் கொஞ்சமாவது கவலைப்படுகிறார்களா?
தயாரான மதுபானம் தொழிற்சாலையில் இருந்து வெளியே வர வேண்டும் என்றால் அதற்கு ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு மதுபான நிறுவனத்துக்கும் துணை வட்டாட்சியர் அந்தஸ்தில் ஓர் அதிகாரி இருப்பார். அன்றைய தினம் டாஸ்மாக் கிடங்குக்குச் செல்லத் தயாராக உள்ள மதுபானத் தொட்டியில் அவர் குறிப்பிட்ட அளவு மதுவை சாம்பிள் எடுத்துக்கொண்டு தொட்டிக்கு சீல் வைக்க வேண்டும். பின்னர், அந்த சாம்பிளை அரசு தரக்கட்டுப்பாடு ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி சான்றிதழ் வாங்க வேண்டும். அதன் பின்னரே அந்த மதுபானம் பாட்டிலிங் செய்யப்படும். ஆனால், இதிலும் ஏகப்பட்ட முறைகேடு நடக்கிறது என்பதுதான் குடல் எரிய வைக்கும் உண்மை.
ஆரம்பத்தில் ஒரு மதுபானத்தின் புதிய பிராண்டை அறிமுகப்படுத்தும்போது அந்த மதுவைக் குடிக்கும் குடிநோயாளி, 'ரொம்ப நல்லா இருக்கு பேஷ் பேஷ்’ என்று குடிப்பான். இப்படி வாய்மொழி விளம்பரம் மூலமே அதன் விற்பனை பல மடங்கு கூடும். அதைக் குடித்துப் பழகிய குடி நோயாளிகள் அவ்வளவு சீக்கிரம் வேறு பிராண்டுக்கு மாற மாட்டார்கள். ஆனால், திடீரென்று அந்த மதுபானத்தின் தரத்தை பல மடங்கு குறைத்து விடுவார்கள். மூடியைத் திறந்தாலே குப்பென வீசும் எரிசாராய வாடை!
சில ஆண்டுகளுக்கு முன், ஒரு நிறுவனம் அறிமுகப்​படுத்​திய ஐஸ்கிரீம் வாசனை கொண்ட ஒரு மதுபானத்தை, 'மாப்ளே, வீட்ல கண்டேபிடிக்கல... சூப்பரு’ என்று தொடர்ந்து இரண்டு மாதம் வாங்கிச் குடித்த ஒரு நண்பன், திடீரென்று ஒருநாள் ஆரம்பித்து பல மாதங்கள் உடம்பெல்லாம் சொரிந்து கொண்டே இருந்தான்.  ஒரு கட்டத்தில் சொரிந்து சொரிந்து ரத்தமே வந்துவிட்டது அவனுக்கு. அந்த மதுவின் மகிமை அப்படி!


ங்கிலத்தில் 'சோஷியல் டேபோ’ (Social taboo) என்றுசொல்வார்கள். அதா​வது, சமூகத்தில் இவை எல்லாம் சரி... இவை எல்லாம் தவறு என்று நாம் ஒரு வரையறை வைத்திருக்கிறோம் அல்லவா? அதைத்தான் 'சோஷியல் டேபோ’ என்கிறார்கள். ஒரு தாய்க்கும் மனைவிக்கும் என்ன வித்தியாசம்? சகோதரியிடம் எப்படி நடந்து​கொள்ள வேண்டும்... தாயிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? இதை எல்லாம் நமக்குள் விதைப்பது இந்த 'சோஷியல் டேபோ’தான். மது உள்ளே போகும்போது இந்த 'சோஷியல் டேபோ’ எல்லாம் நம் கண்ணில் இருந்து மறைந்து, நம்மைக் குருடாக்குவதுதான் கொடூரம்!

கடந்த இதழில் வெளியான கேள்வி - பதிலைப் படித்து நிலை​குலைந்து போனவர்கள் மிக அதிகம்.
அந்தக் கேள்வி - பதிலில் 15+ மதிப்பெண் பெற்றவர்கள் குடிநோயாளிகள் என்றால், 20+ மதிப்பெண் எடுத்தவர்கள் குடி - மன - பாலியல் நோயாளிகள். நிறையப் பேருக்கு அது அதிர்ச்சி!
நம்புங்கள் நண்பர்களே... அவை அத்தனையும் சர்வதேச அளவில் நிரூபிக்கப்​பட்ட உண்மை. சமீபத்திய இரு சம்பவங்களை இங்கே தருகிறேன். அவை நான் சொன்ன குடிநோய் உண்மைகளோடு எவ்வளவு பொருந்திப்​போகிறது என்று பாருங்கள்...கடந்த வாரம், விழுப்புரம் மாவட்டம், குச்சிப்​பாளையத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண் தன்னுடைய தந்தை மூன்று கொலைகளைச் செய்தவர் என்றதோடு, தன்னிடமே பல முறை தவறாக நடக்க முயற்சி செய்தார் என்று கண்ணீர் மல்க தொலைக்காட்சியில் கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம். மதுரையில் வீரணன் என்பவர் தன் மனைவியாலேயே  கொலை செய்யப்பட்டதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இப்படிப்பட்ட செய்திகளின் பின்னணியில் பொதுமக்கள் பார்​வைக்கு வராத ஒரு பின்னணி இருக்கும். அது... குடி.
வீரணனும் முருகனும்கூட முழுநேரக் குடிநோயாளிகள் என்பதைச் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் உறுதிசெய்தார்கள்.
நன்றாக யோசித்துப் பாருங்கள்... 'மாமியாரைக் கற்பழித்த மருமகன்...’ 'மூதாட்டியைக் கற்பழித்த வாலிபன்’ என்பது போன்ற செய்திகள் அதிகரித்துக்​கொண்டேபோகக் காரணம் என்ன? மது ஒருவனை கற்காலத்துக்கும் கடத்திப்​போகும்!
இப்படி முறை தவறி, அளவுக்கு அதிகமாகக் காமவெறி கொண்டு அலையும் குடிநோயாளி​களை அதிதீவிர பாலியல் வெறிகொண்டவர் (High risk sexual behaviour person) என்பார்கள். ஏழெட்டு லார்ஜ் உள்ளே போனதும் இவர்களுக்கு போதை ஏறுகிறதோ இல்லையோ... கட்டுப்படுத்த முடியாத காமம் தலைக்கு ஏறிவிடும்!  
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பட்டு அமைப்பு பெங்களூருவில் இருக்கும் தேசிய மனநல மருத்துவம் மற்றும் மூளை நரம்பியல் மையத்தில் இருக்கும் மதுமறுவாழ்வு மீட்பு சிகிச்சைப் பிரிவில் 177 குடிநோயாளிகளிடம் ஆறு மாத காலம் ஆய்வு நடத்தியது. இதில், 53 பேர் (30%) அதிதீவிர பாலியல் வெறிகொண்டவர்களாக இருந்தனர்.
சேலம் எஸ்.பி-யாக பொன்.மாணிக்கவேல் இருந்த​போது, ஓமலூர் அருகே கர்ணன் என்பவரை போலீஸ் என்கவுன்ட்டர் செய்தது. அதிகாலை நேரத்தில்  வயக்காட்டுப் பக்கம் ஒதுங்கும் வயதான மூதாட்டி​களைக் கற்பழித்து, காதில், கழுத்தில் இருக்கும் சொற்ப நகைகளைக் கொள்ளை அடிப்பது இவன் பழக்கம். நகைகளை விற்று மஞ்சள் பை நிறைய குவார்ட்டர் பாட்டில்களை வைத்துக்​கொண்டு குடிப்பது... போதை தலைக்கு ஏறியதும் மீண்டும் கற்பழிப்பது என சுமார் மூன்று ஆண்டுகள் அழிச்சாட்டியம் செய்தவனை, ஒரு​வழியாக சுட்டுக் கொன்றார்கள் போலீஸார். அதிகாரி ஒருவரிடம் கேட்டேன்... கர்ணன் ஏன் மூதாட்டிகளை மட்டும் கற்பழித்தான் என்று. 'குடித்து, குடித்து அவன் மூங்கிலைப்போல மெலிந்து இருந்தான். 70 வயதைத் தாண்டிய மூதாட்டிகளை கீழே சாய்க்கும் அளவுக்கு மட்டுமே அவனிடம் சக்தி இருந்தது’ என்றார்.
குடி ஒருவனை இந்த அளவுக்குக் கொண்டு​செல்​லுமா என்று அதிர்ச்சி அடைய வேண்​டாம். இதையும் தாண்டிய கட்டத்துக்கும் கொண்டுசெல்லும். அந்த நோயின் பெயர்  Zoophila அல்லது Bestiality . அதாவது ஒரு மனிதன், மனிதன் அல்லாத உயிரினங்களுடன், விலங்குகளுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வது. இது மன​நோயின் ஒரு பகுதிதான் என்றாலும் மண வாழ்க்கை சிக்கலாகி, தனிநபராக (ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும்) இருக்கும் முழுநேரக் குடிநோயாளிகளிடம் இந்தக் குரூர நோய் இருக்க வாய்ப்பு உண்டு. இவர்கள் நாய், பூனை போன்ற தங்களுடைய செல்லப் பிராணிகளிடம் உடலுறவு கொள்வார்கள். அப்படி உடல் உறவு கொள்வது மட்டும் அல்ல... அவர்களின் உலகமும் அந்தப் பிராணியைச் சுற்றியே இயங்கும். பிராணி​களிடம் மனம்விட்டுப் பேசுவார்கள். கட்டிப் பிடித்து செல்லம் கொஞ்சுவார்கள். அழுவார்கள். கிட்டத்தட்ட சமையல் செய்யத் தெரியாத மனைவி அல்லது கணவன் அது!
விலங்கின் யோனியில் இருக்கும் திரவம், எச்சில், சிறுநீர் போன்றவை மனிதனின் உள் உறுப்புகளுடன் மற்றும் வாயில் படும்போது எலிக் காய்ச்சல், க்யூ காய்ச்சல் மற்றும் ப்ரூசெல்லோசிஸ் (Brucellosis),  லெப்டோஸ்பைரோஸிஸ் (Leptospirosis), டாக்ஸோகேரியாசிஸ் (Toxocariasis) ஆகிய மோசமான கிருமிகளின் தொற்று ஏற்படும். இதேபோல, விலங்குகளுடன் புணரும் பெண்​களுக்கு விலங்குகளின் விந்தணுக்களால் கரு உருவாகாது என்றாலும், சில நேரங்களில் விலங்கின் விந்தணுக்களால் பெண்ணுக்குத் தீவிர ஒவ்வாமை ஏற்பட்டு மரணம் வரை கூட அழைத்துச் சென்றுவிடும்.
சில மாதங்களுக்கு முன், கோவை மாவட்டம், போத்தனூர் அருகேயுள்ள செட்டிப்பாளையம் கிராமத்தில் சில வாலிபர்கள் ஒன்று சேர்ந்து காளை மாட்டை (?!) பலாத்காரப்படுத்தி உள்ளனர். அதற்கும் சில மாதங்களுக்கு முன், சென்னிமலை அருகேயுள்ள ஈங்கூரில் ஒரு கும்பல் நிறை மாதப் பசுவிடம் தங்கள் ஆண்மையைக் காட்டி உள்ளனர். இந்த இரண்டு கும்பலில் இருந்தவர்களுமே பயங்கர போதையில் இருந்தவர்கள் என்பது நாம் இங்கு கவனிக்க வேண்டியது!
இவை எல்லாவற்றையும் விடக் கொடுமை மன நல மருத்துவர் ஒருவர் சொன்னது... மனநலம் மற்றும் குடிநோய் மீட்புச் சிகிச்சைக்கு வரும் நூற்றில் ஐந்து பேர் இந்த வகைக் குரூர நோயுடன் வந்து தங்களை விடுவிக்கும்படி கதறுகிறார்கள் என்றார் அந்த மருத்துவர்.
சரி, டெலிபோன் ஸ்காட்டலாஜியா (Telephone scatologia) என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? டாடாவுக்கும் அம்பானிக்கும் மிட்ட லுக்கும் கோடி கோடியாய் அள்ளித் தரும், குடிநோயாளிகளின் அந்த நோயைப் பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்.
- தெளிவோம்
நீயும் போலி நானும் போலி!


ஒரு பக்கம் போலீஸார் போலி மது பானங்களைப் பிடித்துக்கொண்டே இருந்தாலும், இன்னொரு பக்கம் போலி மது தயாரிப்பு உற்சாகமாக நடந்துகொண்டேதான் இருக்கிறது. இரண்டு நாளைக்கு முன்புகூட ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள எரிசாராயத்தை விழுப்புரம் போலீஸார் கைப்பற்றி இருக்கிறார்கள். சரி, போலி மதுபானங்களை எப்படித் தயாரிக்கிறார்கள்?
ஃபார்முலா 1: இது சாதாரண முறை. டாஸ்மாக் சரக்கு இரண்டு பங்கு. கேசரி பவுடர், ஆப்பிள், ஆரஞ்சு, லெமன் மூன்றில் ஏதாவது ஒரு எசன்ஸ் கலந்த தண்ணீர் ஒரு பங்கு. போலி சரக்கு ரெடி. இது பெரும்பாலும் டாஸ்மாக் பணியாளர்கள் அல்லது பார்களில் வேலை செய்பவர்கள் மூலம் தயாரிக்கப்பட்டு, அவர்களாலேயே விற்கப்படுவது. நம் ஊரில் அதிகம் விற்பனையாகும் விலை குறைந்த பிராண்டின் குவாட்டர் பாட்டில்களில்தான் அதிகம் இந்த தில்லாங்கடி நடக்கிறது. குவாட்டர் பாட்டிலின் மூடியை அலேக்காக திறந்து, தங்கள் கலவையை ஊற்றி, பாட்டிலை மூட ஒரு பெரிய சைஸ் குண்டூசி போதும்.
ஃபார்முலா 2: கர்நாடகம் மற்றும் புதுச்சேரியில் குறிப்பிட்ட சில சரக்குகள் மட்டும் விலை குறைவு. ஃபுல் பாட்டில் ரூ. 180-க்கும் கிடைக்கிறது. ஆனால், கிக் கொஞ்சம் குறைவுதான். இவற்றை மொத்தமாக வாங்கி வந்து, ஸ்பிரிட் (எரிசாராயம்) கலந்து தயாரிப்பார்கள். உதாரணத்துக்கு, குவார்ட்டர் தயாரிக்க எரிசாராயம் ஐந்து மி.லி. வெளி மாநிலச் சரக்கு 100 மி.லி. கலர் பவுடர், எசன்ஸ் கலந்த தண்ணீர் 75 மி.லி. இதுதான் கலவை. 180 மி.லி. குவாட்டர் தயார்!
  ஃபார்முலா 3: இது கொஞ்சம் ஏமாந்தாலும் டேஞ்சர்தான். கிட்டத்தட்ட கள்ளச்சாராயம். காலாவதியான பேட்டரிகளை உடைத்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கிறார்கள். அது ஆறியவுடன் வடிகட்டி அதை ஃப்ரீஸரில் ஐஸ் கட்டியாக மாற்றுகிறார்கள். ஐஸ் கட்டியை அண்டாவில் போட்டு மீண்டும் காய்ச்சல். இப்படி மீண்டும் மீண்டும் காய்ச்சும்போதுதான் தண்ணீரில் இருக்கும் ஆக்ஸிஜன் மற்றும் மினரல் எல்லாம் காலியாகி பூஜ்ஜிய சதவிகித கனிமங்கள் இல்லாத தண்ணீர் கிடைக்குமாம். அப்போதுதான் ஸ்பிரிட்டைத் தண்ணீரில் கலக்கும்போது ஸ்பிரிட்டின் முழு வீரியத்தையும் தண்ணீர் உள்வாங்கிக் கொள்ளுமாம். கனிமங்கள் இருந்தால், தண்ணீரில் கலக்கப்படும் ஸ்பிரிட்டின் வீரியம் குறைந்துவிடும் என்கிறார்கள் இந்தப் போலி விஞ்ஞானிகள்.
இதில்  ஒரு லிட்டர் தண்ணீரில் 200 மி.லி. ஸ்பிரிட், தேவையான எசன்ஸ் மற்றும் கலர் பவுடர் கலந்தால் சரக்கு தயார். இந்தச் சரக்கைத் தயாரிப்பவர் சரக்கை அடித்துவிட்டு கைத்தவறி கொஞ்சம் ஸ்பிரிட்டைச் சேர்த்து கலந்துவிட்டால், அதைக் குடிப்பவர் 30 நிமிடங்களுக்குள் கண் நரம்பு பாதிக்கப்பட்டு பார்வை பணாலாகி, உடனடி சிகிச்சை கிடைக்காத பட்சத்தில் ஒரு மணி நேரத்தில் மரணத்தைத் தழுவுவார்!


காப்பீடு... கமிஷன்... கள்ள டீலிங்!
இன்றைக்கு ஏதாவது ஒரு டாஸ்மாக் கடையில் தீப்பிடித்து எரிந்தாலோ அல்லது ஏதாவது விபத்தில் சேதமானாலோ காப்பீட்டுத் தொகை கிடைக்காது தெரியுமா? லட்சக்கணக்கான நஷ்டத்தை அந்தக் கடையில் வேலை பார்க்கும் கடை மேற்பார்வையாளர், பார் மேற்பார்வையாளர், மூன்று விற்பனையாளர்கள், இரண்டு பார் உதவியாளர்கள் என்று ஏழு பேர்தான் ஏற்க வேண்டும். ஆரம்பத்தில் கடைக்கான மதுபான தேவைப்பட்டியலை கடையில் விற்பனையாகும் மது வகையின் தேவையைப் பொறுத்து கடையின் மேற்பார்வையாளரே எழுதிக் கொடுப்பார். ஆனால், சில ஆண்டுகளாக என்ன தேவை என்று கடை மேற்பார்வையாளர் எழுத முடியாது. கடையில் என்ன இருப்பு இருக்கிறது என்பதை மட்டுமே அவர் குறிப்பிட வேண்டும். தேவைப் பட்டியலை நிரப்புவது அதிகாரிகளே.
ஒரு கடையில் ஒரு நாளைக்கு விற்பனையாகும் மதுபானங்களின் மதிப்பில், 10 நாட்களுக்கான இருப்பு மட்டுமே இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு கடையில் ஒருநாள் விற்பனை சராசரியாக 50 ஆயிரம் என்றால், ஐந்து லட்சம் ரூபாய்க்கு மட்டுமே இருப்பு இருக்க வேண்டும். அப்போதுதான் விபத்து ஏதாவது நடந்தால் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். ஆனால், இன்றைக்கு  ஒரு நாளைக்கு 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் ஒரு சிறிய கடையில் 23 லட்சம் ரூபாய் மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
அதிகாரிகளுக்கும் மதுபான நிறுவனங்களுக்கும் இடையில் நடக்கும் மெகா டீலிங் இது. ஒவ்வொரு மதுபான நிறுவனமும் தனது நிறுவனத்தின் மதுபானங்களை அதிகமாக விற்க வேண்டும் என்று போட்டி போட்டுக்கொண்டு அதிகாரிகளை வகையாகக் கவனிக்கின்றன. இதற்கு கோட் சூட் மாட்டிய கார்ப்ரேட் இடைத்தரகர்கள் உண்டு. வெளிநாட்டு டூர், ஆடம்பர அன்பளிப்புகள், பலான விஷயங்கள் என எல்லாமே உண்டு. இவை இல்லாமல், கமிஷன். அதுதான் மிக முக்கியம். இன்றைய மார்க்கெட் நிலவரப்படி மாவட்ட அளவிலான ஒருவருக்கு ஒரு பெட்டிக்கு கமிஷன் (48 குவாட்டர் பாட்டில்கள் அடங்கியது ஒரு பெட்டி) 55 ரூபாய் முதல் 115 ரூபாய் வரை என்கிறார்கள். இப்படி போட்டி போட்டுக்கொண்டு மதுபான நிறுவனங்கள் கவனிப்பதால், அதிகாரிகள் இஷ்டத்துக்கு சரக்குகளை வாங்கிக் குவிக்கிறார்கள். கோடிகள் இங்கே விளையாடுகின்றன.
கமிஷன் அதிகம் கொடுக்கும் நிறுவனத்தின் மதுபானங்களை அதிகம் விற்கும்படி பணியாளர்களை வற்புறுத்துகிறார்கள். கூட்டத்தில் சட்டை கிழிந்து வெற்றிகரமாக கவுன்ட்டரைச் சென்றடைந்தும், அங்கு நீங்கள் கேட்கும் பிராண்டு கிடைக்காததற்கு இதுவே காரணம். இந்த கமிஷன் தொகை அதிகாரிகளுக்கு மட்டும் அல்ல... மேலிடம் வரை செல்கிறது!

'கட்டளைக்கு கீழ்ப்படி’ என்பது தான் உலகெங்கும் உள்ள ராணுவ வீரர்களின் தாரக மந்திரம். பெருமூளை டு சிறுமூளையின் சிஸ்டமும் அப்படியே. போதை ஏறாத வரை சிறுமூளை என்பது கண்ணியமான, கடமை தவறாத ராணுவவீரன். ஆனால், மூளையின் நரம்புகளுக்குள் மது போதை ஊடுருவிய பிறகு பெரு மூளையில் இருந்து சிறுமூளைக்குச் செல்லும் சாலையில் ஆல்கஹால் வாகனங்கள் அணிவகுத்து டிராஃபிக் ஜாம் ஆகிவிடும். பெரியவன் காட்டுக் கத்தலாகக் கட்டளை இட்டாலும் சின்னவன் சட்டையே செய்ய மாட்டான். பிரச்னை ஆரம்பிப்பது இங்கேதான்!
பத்திரிகைகளில் பெண்களின் புகைப்படங்களோடும் தொலைபேசி எண்களோடும் விளம்பரங்கள் வருமே... பார்த்து இருக்கிறீர்களா? என்றைக்காவது அந்த எண்களைத் தொடர்புகொண்டு பேசி இருக்கிறீர்களா? நிமிஷங்களில் நூறுகளைக் கரைக்கும் எண்கள் அவை. ஆனாலும், கல்லா நிரப்பிக்கொண்டுதான் இருக்கின்றன. எப்படி?
போதை ஏறினால், யாரிடமாவது 'பேசி’ ஆக வேண்டிய கட்டாய நிலைக்கு மனிதனைத் தள்ளுவதும் மதுவின் இயல்புகளில் ஒன்று. முன்பெல்லாம் 'பேச’ வேண்டும் என்றால், ஆட்கள் நேரில் கிடைத்தால்தான் போச்சு. ஆனால், இப்போது அப்படியா? இருக்கவே இருக்கிறது டெலிபோனும் செல்போனும்.
சரக்கு உள்ளே இறங்கினால், சிலருக்கு அரட்டை வேண்டும். சிலருக்கு அழ வேண்டும். இரவில் படுக்கை அறையிலோ அல்லது வேறு எங்கேயோ தனிமையில் இருள் சூழ்ந்த நிலையில் இப்படிப் பேசும்போது எதிர் முனையில் இருப்பவர் உண்மையிலேயே தனது அருகில் இருப்பதுபோன்ற உணர்வு இருக்குமாம். பெண்களுடன் பேச எண்களைத் தேடுவது இந்தச் சூழலில்தான். இதற்குத்தான் 'டெலி போன் ஸ்காட்டலாஜியா’ என்று பெயர்.
பச்சைத் தண்ணீரில் பாலை எடுக்க முடியுமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங் களின் சி.இ.ஓ-க்கள் 'டெலிபோன் ஸ்காட்டலாஜியா’வை விட்டு வைப்பார்களா? கவர்ச்சிகரமான விளம்பரங்களை அறிவித்து, 24 மணி நேரமும் ஆபாசமாகப் பேச பெண்களை நியமித்து ஸ்காட்டலாஜியாவைக் காசாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்!
பெங்களூருவில் இருக்கும் ஒரு போதை மீட்பு சிகிச்சை மையத் துக்கு கடந்த வாரம் சென்றிருந்தேன். அங்கு ஒரு மருத்துவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரை அவரது மனைவி அழைத்துக்கொண்டு வந்தார். மருத்துவர் அந்த மனிதரிடம், ''மாத்திரை எல்லாம் சரியா சாப்பிடுறீங்களா? நல்லா தூக்கம் வருதா?'' என்று கேட்டார். ''சரக்கை நிறுத்தி மூணு மாசம் ஆச்சு. ஆனா, அவன் சீண்டிக்கிட்டே இருக்கான் டாக்டர். கேலி பண்றான். வண்டியை ஓட்டுறப்ப 'அந்த மரத்து மேல வண்டியை விடு... வேன் மேல மோது... அந்தப் பச்சை சட்டைக்காரன் மேல ஏத்து...’னு கத்துறான். நான் அவன் பேச்சைக் கேட்காம என்னை ரொம்பக் கட்டுப்படுத்தி கன்ட்ரோலா போறேன். அசிங்க அசிங்கமாத் திட்டுறான். முந்தா நாளு அவன் டார்ச்சர் தாங்க முடியாம வண்டியை ஓரம் கட்டி நிறுத்திட்டேன். இப்ப நான் உங்ககிட்ட வரக் கிளம்பறப்பகூட 'வேண்டாம்டா, அவன் என்னைக் கொன்னுடுவான்’னு அழுறான்...'' என்று இவர் அழுதார்.
நீண்ட காலம், அளவுக்கு அதிகமாக தொடந்து மது அருந்தியதால் ஏற்படும் இந்த நிலைக்குப் பெயர்... 'ஆடிட்டொரி ஹாலுசினேஷன்’ (கிuபீவீtஷீக்ஷீஹ் லீணீறீறீuநீவீஸீணீtவீஷீஸீ). காதுக்குள் யாரோ ஒருவர் அல்லது பலர் கண்டபடி திட்டுவார்கள்; கட்டளையிடுவார்கள். அதுதான் இவரது நோய். அது சரி, 'மரத்து மேல வண்டியை விடு’ என்று கட்டளை வந்ததாகச் சொன்ன அவர் என்ன பணியில் இருக்கிறார் தெரியுமா? நீங்கள் அதிர் வதைத் தவிர வேறு வழியே இல்லை. அவர் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஓட்டுநர். அதுவும் அடிக்கடி இரவுப் பணியில் இருப்பவராம்!
பெரும்பாலான ஓட்டுநர்களுக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. அதில் எத்தனை பேருக்குக் காதுக்குள் கட்டளை வருகிறது என்று தெரியவில்லை!
மருத்துவர் என்னிடம் சொன்னார்: ''வண்டி ஓட்டுகிறவர்கள் ரொம்ப சீக்கிரம் மதுவுக்கு அடிமையாகி விடுகிறார்கள். அறியாமையே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துவிடுகிறது'' என்றவர் ''சரி, படித்து எல்லாம் தெரிந்தவர்கள் மட்டும் எப்படி இருக்கிறார்கள்... அட, டாக்டர்களே எவ்வளவு பேர் குடிக்கிறார்கள்!'' என்றார்.
''படிக்காதவர்களுக்குப் புரியவைப்பது கடினம். ஆனால், படித்தவர்களிடம் குடியினால் ஏற்படும் பிரச்னைகள், நோய்கள்பற்றி எளிதாகப் புரிய வைக்கலாம் இல்லையா?'' என்று கேட்டேன்.
''அடப் போங்க சார்... படிக்காத ஒரு கிராமத்தானை ரொம்ப ஈஸியாத் திருத்திடலாம். ஆனா, நல்லாப் படிச்சவங்களைத் திருத்துறதுதான் கஷ்டம். படிக்காதவங்க நாங்க சொல்றதை நம்பி, சொல்பேச்சு கேட்பாங்க. ஆனா, படிச்சவங்க மோசம். 'நாலு ஐஸ்கீரிமைச் சாப்பிட்டு ஏழு பெக் போட்டா ஒண்ணும் செய்யாது’ன்னு அவனா ஒரு சயின்ஸ் பேசுவான். அதுவும் பணக்காரன்னா கேட்கவே வேண்டாம். 'அதான் லிவர் டிரான்ஸ்பிளான்டேஷன்’ வந்துடுச்சேன்னு வியாக்கியானம் பண்ணுவான்...'' என்றவர் அடுத்து சொன்ன விஷயத்தைக் கேட்டு வியர்த்துப்போனேன்.
மருத்துவர் என்னைப் பார்த்துக் கேட்டார்:
''கண்ணதாசன் எவ்வளவு பெரிய கவிஞர்? வின்ஸ்டன் சர்ச்சில் எவ்வளவு பெரிய தலைவர்? அவர்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அந்த மதுவே ஒரு தீவிர நோயை அவர்களுக்குத் தந்திருந்தது உங்களுக்குத் தெரியுமா?''
 - தெளிவோம் 
பார் பாலிடிக்ஸ்! 
ஒரு பாரை ஏலம் எடுப்பவர் பாரை எப்படி நடத்த வேண்டும் தெரியுமா? உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின்படி, முதலில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம், உணவு வழங்க உரிமம் பெற வேண்டும். பார்கள் அமைந்திருக்கும் இடம் ஈரத்தன்மை இல்லாமல் காய்ந்த நிலையில், காற்றோட்டமாக விசாலாமானதாக இருக்க வேண்டும். சுகாதாரமான கழிவறை இருக்க வேண்டும். சுத்தமான உடை அணிந்த பணியாளர்கள் இருக்க வேண்டும். அங்கு வரும் வாடிக்கையாளருக்கு சுகாதாரமான உணவைத் தருவதுடன், இலவசமாக சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்கிறது அந்தச் சட்டம். ஆனால், பாரில் நடப்பது என்ன?
ஒரு விஷயம்... பாரில் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் தண்ணீர் பாக்கெட்டின் உண்மையான விலை உங்களுக்குத் தெரியுமா? 30 பைசா.
100 தண்ணீர் பாக்கெட்டுகள் விற்றால் 460 ரூபாய் லாபம். நகரப் பகுதியில் ஒரு பாரில் சராசரியாக 4000 பேரும் கிராமப் பகுதிகளில் ஒரு பாரில் சராசரியாக 1000 பேரும் குடிக்கிறார்கள். ஒருவர் தலா இரண்டு தண்ணீர் பாக்கெட் வாங்கினாலும் ஒரு நாளைக்கு 8000 தண்ணீர் பாக்கெட்டுகள் வரை விற்பனை. அப்படி என்றால் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆறாயிரத்து சொச்சம் கடைகளுக்கும்  இந்தத் தரமற்ற தண்ணீரால் மட்டும் எவ்வளவு லாபம் என்று கணக்குப் பார்த்துக்கொள்ளுங்கள்! 
பிளாஸ்டிக் டம்ளரிலும் இதே கொள்ளைதான். சட்டப்படி 40 மைக்ரான் அளவுக்கு மேல் இருக்கும் (மறுஉற்பத்தி செய்யக் கூடிய அளவு) பிளாஸ்டிக் டம்ளர்களைதான் விற்பனை செய்ய வேண்டும். ஆனால், எவ்வித மைக்ரான் கணக்குக்கும் உட்படாத மட்டமான பிளாஸ்டிக் நாற்றம் வீசும் டம்ளர்கள்தான் பார்களில் கிடைக்கும். ஐந்து ரூபாய்க்கு விற்கப்படும் இந்த டம்ளரின் உண்மையான விலை எவ்வளவு தெரியுமா? 15 பைசா. அதாவது 15 ரூபாய் முதலீட்டில் 485 ரூபாய் லாபம். இப்போது இதற்கு ஒரு கணக்கைப் போடுங்கள்.
அடுத்து ஸ்நாக்ஸ்... பேருதான் பெத்த பேரு...  வறுத்த நிலக்கடலை, பொட்டுக்கடலை, வத்தல்... இவைதான் நம்மூரில் ஸ்நாக்ஸ். பாரில் விற்கப்படும் நிலக்கடலை பாக்கெட்டை  வாங்கினால், எப்படி கூட்டிக் கழித்து எண்ணிப் பார்த்தாலும் 15 கடலைக்கு மேல் இருக்காது. அதன் விலை ஆறு ரூபாய்!
கடலையே இந்த விலை என்றால், அசைவ சைட் டிஷ்ஷின் தரமும் விலையும் எப்படி இருக்கும்? இதில் எவ்வளவு கொள்ளை நடக்கும்?
அங்கீகரிக்கப்பட்ட இறைச்சிக் கடைகளில் உள்ளாட்சி நிர்வாகத்தால் ஆய்வு செய்யப்பட்டு, முத்திரையிடப் பட்ட இறைச்சியை மட்டுமே சமைத்து விற்பனைக்குக் கொண்டுவர வேண்டும். இதை 15 நாட்களுக்கு ஒரு முறை அந்தந்தப் பகுதி உள்ளாட்சி நிர்வாகத்தைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டு உறுதிசெய்ய வேண்டும். ஆனால், இன்றைக்கு அப்படி எல்லாம் விதிமுறை பார்த்து, ஆய்வு நடத்தினால் எத்தனை பார்கள் மிஞ்சும்?
 அட்டைப் பெட்டிகளும் காலி பாட்டில்களும்!
 பாரில் ஒருவர் காலி பாட்டிலுக்கும் சேர்ந்து விலை கொடுத்துத்தான் மதுவை வாங்குகிறார். அப்படி வாங்கிக் குடித்துவிட்டுப் போட்டுவிட்டுப்போகும் காலி பாட்டில்கள், மது பாட்டில்கள் அடைக்கப்பட்டு வரும் அட்டைப் பெட்டிகள் இவற்றை வைத்து உள்ளூர் அரசியல்வாதிகள் எவ்வளவு லாபம் அடைகிறார்கள் தெரியுமா?
ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாகும் மது பாட்டில்களில் 60 முதல் 70 சதவிகிதம் பாட்டில்கள் பாரில் சேகரமாகும். முன்பு எல்லாம் இந்தக் காலி பாட்டில்களை வாங்க பல நிறுவனங்கள் இருந்தன. பாரை ஏலம் எடுத்தவர் அந்த நிறுவனங்களிடம் காலி பாட்டில்களை விற்று விடுவார். அவர்கள் பாட்டிலைச் சுத்தம் செய்தோ, செய்யாமலோ மீண்டும் மது தயாரிப்பு நிறுவனங்களிடம் பாட்டில்களை விற்று விடுவார்கள்.
ஒரு குவார்ட்டர் பாட்டில் அறுபது காசு, ஆஃப் பாட்டில் ஒரு ரூபாய், ஃபுல் பாட்டில் இரண்டு ரூபாய் என்று முன்பு எடுத்துக்கொண்டு இருந்தார்களாம். ஆனால், இதிலும் காசு பார்த்தால் என்ன என்று யாரோ ஒரு நல்ல மனிதருக்குத் தோன்ற இப்போது இங்கும் சிண்டிகேட் வந்துவிட்டது. அதாவது, ஒவ்வொரு பகுதிக்கும் அந்தந்தப் பகுதி அரசியல் தலைகளின் ஆசி பெற்ற ஒருவர் இப்படிக் காலி பாட்டில்களைச் சேகரிக்க இருப்பார். அவரிடம்தான் அந்தப் பகுதியில் உள்ள எல்லா பார்களும் காலி பாட்டில்களை அளிக்க வேண்டும். அவர் வைத்ததுதான் விலை. முன்பு கொடுத்ததில் பாதியை மட்டுமே கொடுத்து இதிலும் வசூல் பார்க்கிறது ஒரு குரூப்!
ஒரு கடைக்கு மது பாட்டில்களைச் சுமந்து வரும் அட்டைப் பெட்டியை வைத்து சில கோடிகள் புரள்கின்றன என்றால் நம்புவீர்களா? ஓர் அட்டைப் பெட்டியின் விலை ரூ. 3.50. ஒரு கடைக்கு மாதம் எத்தனை அட்டைப் பெட்டிகள் மது போகிறதோ அத்தனை அட்டைப் பெட்டிகளுக்கும் கணக்கு செய்து, அதற்கான வரைவோலை எடுத்து டாஸ்மாக் நிறுவனத்துக்கு பணியாளர்கள் அனுப்பி விட வேண்டும். இந்த அட்டைப் பெட்டிகளை வெளியே தனியாருக்கு டாஸ்மாக் பணியாளர்கள் விற்றுக்கொள்ளலாம். முன்பு எல்லாம் இப்படி அட்டைப் பெட்டிகளை வெளியே விற்கும்போது,  பெட்டிக்கு ஒரு ரூபாய் கிடைக்குமாம். கடைக்கு வரும்போதே உடைந்து வரும் பாட்டில்களால் ஏற்படும் இழப்பைச் சரிகட்ட இது பயன்படுமாம். ஆனால், இதிலும் இப்போது கை வைத்துவிட்டார்களாம் அரசியல் புள்ளிகள். ஒவ்வொரு பகுதிக்கும் அந்தந்தப் பகுதி அரசியல் தலைகளின் ஆசி பெற்ற ஒருவர் இப்படி அட்டைப் பெட்டிகளைச் சேகரிக்க இருப்பார். அவரிடம்தான் அந்தப் பகுதியில் உள்ள எல்லா மதுக்கடைகளும் அட்டைப் பெட்டிகளை அளிக்க வேண்டும். அவர் வைத்ததுதான் விலை. முன்பு கொடுத்ததில் பாதியை மட்டுமே கொடுத்து இதிலும் வசூல் பார்க்கிறது இன்னொரு குரூப்!


''கண்ணதாசனுக்குக் குடிப்பழக்கம் ஒரு வியாதியைத் தந்து இருந்தது. மன நல மருத்துவத்தில் அதற்கு, 'இரு துருவக் கோளாறு’ என்று (Bipolar mood disorder) பெயர். வின்சென்ட் சர்ச்சிலும் இதே நோயால் பாதிக்கப் பட்டவர்தான்'' என்றார் டாக்டர்.
நான் இந்த வியாதியைக் கேள்விப்பட்டு இருக்கிறேன். வாழ்வில் எல்லோருக்கும் மேடும் வரும்... பள்ளமும் வரும். இந்த ஏற்ற இறக்கம் சாதாரணமாக இருக்கும் வரை பிரச்னை இல்லை. இந்த மேடு அசாதாரண மேடாகவும் பள்ளம் பெரிய பள்ளமாகவும் மாறும்போது அது ஒருவருக்கு மனநலம் சார்ந்த பிரச்னையாகி விடும். இரு துருவக் கோளாறு உள்ளவர் பித்து, மனச்சோர்வு என்று இரண்டு பிரச்னைகளுக்கும் மாறி மாறி உள்ளாகித் துன்பப்படுவர்.
முதலில் தோன்றுவது பித்து நிலை. அந்த நிலையில் உயர் சக்தியுள்ள மனோபாவத்துடன் இருப்பார்கள். அப்போது அசைக்க முடியாத தன்னம்பிக்கை, உயர்ந்த, கலவையான, புதுமையான எண்ணங்கள், சிறந்த படைப்பாற்றல், நகைச் சுவை உணர்வு, அதிகபட்சக் கோபம், கணக்கு வழக்கு பார்க்காமல் செலவு செய்வது, உறக்கமே இல்லாமல் தான் மேற்கொண்ட காரியத்தைச் சிரத்தையாக முடித்தல் ஆகிய குணங்களுடன் இருப்பார்கள். இவை எல்லாம் உயர் உணர்வுகள். சிறிது காலம் இந்த நிலை நீடித்த பின், பெரும் மனச்சோர்வு, விரக்தி ஏற்படும். தற்கொலை எண்ணங்களும் எழ வாய்ப்பு இருக்கிறது. இதுதான் இருதுருவக் கோளாறு.
கண்ணதாசனின் நடவடிக்கைகளை ஆராய்ந்த பல மன நல மருத்துவர்கள் கண்ணதாசன் இருதுருவக் கோளாறால் அவதிப்பட்டார் என்று உறுதியாகக் கருதுகிறார்கள். அவர் கோபப்பட்டபோது எழுதிய பாடல்களையும், அதீத உற்சாக மாக இருந்தபோது எழுதிய பாடல் களையும், சோகமாக இருந்தபோது எழுதிய பாடல்களையும் வகைப்படுத்தி சில மருத்துவக் கட்டுரைகளில் அவர்கள் கோடிட்டுக் காட்டுகிறார்கள்.
''ஒரு முறை பாடல் ஒலிப்பதிவின் போது இயக்குநர் ஸ்ரீதர், எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்டோர் நீண்ட நேரம் கண்ணதாசனுக்காகக் காத்திருந்திருந்தனர். ஒரு கட்டத் தில் கடுப்பான எம்.எஸ்.வி., 'இந்தக் குடிகாரரோட இதே வேலையாப் போச்சு. சொன்ன நேரத்துக்கு வந்து தொலைக்க மாட்டார்...’ என்றார். லேட்டாக வந்த கண்ணதாசனிடம் யாரோ ஒருவர் இதைப் போட்டுக்கொடுக்க, கண்ணதாசன் எதையும் காட்டிக் கொள்ளாமல் இயக்குநர் ஸ்ரீதரிடம் சிச்சுவேஷனைக் கேட்டுக்கொண்டார். பின்பு சாந்தம் ததும்ப எம்.எஸ்.வி-யை பார்த்து, 'நீங்க அப்படி எல்லாம் பேச மாட்டீங்களே...’ என்றவர் இசையின் ராகத்துடன் இழுத்துப் பாடினார் - 'சொன்னது நீதானா... சொல்... சொல்... சொல்... என்னுயிரே...’
இன்னொரு முறை, கவிஞர் புதிதாக அறிமுகமான பிரெஞ்சு மதுவைக் குடிக்க ஆசைப்பட்டு இருக்கிறார். கையில் காசு இல்லை. அவரது உடன்பிறந்த அண்ணனிடம் காசு கேட்டபோது, அண்ணன் மறுத்து விட்டாராம். அந்த வேகத்தில் கவிஞர் எழுதிய பாடல்தான், 'அண்ணன் என்னடா... தம்பி என்னடா... அவசரமான உலகத்திலே...’ '' என்று கண்ணதானின் உயர் உணர்வுகளின் வெளிப்பாடுகளைச் சொல்லும் மருத்துவர்கள், அதே கண்ணதாசன் மனச்சோர்வுக்கு உள்ளாகும்போது கடுமையான விரக்திக்கு ஆளானதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாஜி படைகள் இங்கிலாந்தை நெருங்கியபோது, நாடாளுமன்றத்தில் சர்ச்சில் ஆற்றிய பேருரைதான் இங்கிலாந்து மக்களையும் ராணுவ வீரர்களையும் சிலிர்த்து எழச் செய்து நாஜிப் படைகளைச் சின்னாபின்ன மாக்கியது. ஆனால், சர்ச்சிலால் இரண்டு லார்ஜ் அடிக்காமல் இயல்பாகப் பேசவே முடியாது. பெரும்பாலும் அவரது காலை உணவில் இரண்டு லார்ஜ் மது இல்லாமல் இருக்காது. மதுவிடம் நான் இழந்ததை விட மதுவிடம் நான் பெற்றதே அதிகம் என்பது அவர் அடிக்கடி சொல்லும் வாக்கியம். அவர், மதுவின் ஒவ்வொரு துளியையும் ரசித்துக் குடித்தார். அதனால் அவரும் இரு துருவக் கோளாறால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
உலகப்புகழ் பெற்ற ஓவியர் வின்சென்ட் வான்கா, ஹாலிவுட் நடிகர் மெல் கிப்ஸன், எழுத்தாளர் ஷிட்னி ஷெல்டன் என நூற்றுக்கணக்கான படைப்பாளிகள் இரு துருவக் கோளாறில் பாதிக்கப்பட்டு இருந்தனர்.  அதே சமயம், இரு துருவக் கோளாறு மது குடிக்காதவர்களுக்கும்கூட வரும் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனாலும், மது குடிப்பவர்களே 90 சதவிகிதம் இந்தப் பிரச்னையை எதிர்கொள்கின்றனர் என்று சொல் கிறார்கள்.  
ஒரு விஷயம் உறுதி... நானும் கவிதை எழுதுகிறேன் என்று யாரும் குவார்ட்டர் பாட்டிலைத் தட்டித் திறக்க வேண்டாம்... கவிதை வராது; குடிநோய்தான் வரும்.
டாஸ்மாக் பணியாளர்களின் சிரமம்குறித்து எழுதி இருந்ததற்கு நிறைய டாஸ்மாக் ஊழியர்கள் தொலைபேசியிலும் கடிதம் வாயிலாகவும் நன்றி தெரிவித்தனர். நல்லது. ஆனால், இந்தப் புள்ளிவிவரத்தை எழுதினால் திட்டுவார்களோ என்று நினைக்கிறேன். சரி, போற்றுவார் போற்றட்டும்... மண்ணை வாரித் தூற்றுவார் தூற்றட்டும்!
கடந்த ஏப்ரல் 11-ம் தேதியில் இருந்து மார்ச்12-ம் தேதி வரை ஓர் ஆண்டில் தமிழகத்தில் காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருவள்ளூர், திருப்பூர், சேலம், மதுரை, திருச்சி, வேலூர், ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் அதிக அளவாக 251.27 லட்சம் மதுபானப் பெட்டிகள் விற்பனை ஆகி இருப்பதாக டாஸ்மாக் நிறுவனம் தெரிவிக்கிறது.
சுமார், இரண்டரைக் கோடி பெட்டிகள். ஒரு பெட்டிக்கு 48 பாட்டில்கள். அப்படி என்றால் மொத்தம் 120 கோடி பாட்டில்கள். ஒரு பாட்டிலுக்கு இரண்டு ரூபாய் கூடுதல் விலை வைத்து விற்கிறார்கள். அப்படி என்றால், ஆண்டுக்கு  240 கோடி ரூபாயை 'குடி’மகன்களிடம் இருந்து இவர்கள் கூடுதலாகப் பறிக்கிறார்கள். இந்த 240 கோடி என்பது வெறும் இரண்டு ரூபாய் கணக்குதான். பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் வரை கூடுதலாக வசூலிப்பவர்களும் உண்டு. அதைச் சேர்க்கவில்லை. பீருக்கு 10 ரூபாய் வரை கூடுதலாக விற்கிறார்கள். அதையும் இந்த 240 கோடியில் சேர்க்கவில்லை. காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை...  இரவு 10 மணி தொடங்கி விடிய, விடிய ஒரு பாட்டிலுக்கு 30 முதல் 50 ரூபாய் வரை கூடுதலாக விற்கிறார்கள். அதுவும் இதில் சேர்க்கப்படவில்லை. காந்தி ஜெயந்தி, மஹாவீர் ஜெயந்தி உட்பட ஓர் ஆண்டுக்கு டாஸ்மாக் நிறுவனம் அளிக்கும் எட்டு விடுமுறை நாட்களிலும் கள்ளச்சந்தையில் ஒரு பாட்டிலுக்கு 50 ரூபாய் கூடுதலாக விற்கிறார்கள். அதைச் சேர்க்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக மேற்கண்ட 240 கோடி ரூபாய் என்பது 10 மாவட்டங்களுக்கான சராசரி கணக்கு மட்டுமே. எனவே, மிக, மிக, மிகக் குறைந்தபட்சமாக ஒரு ஆண்டுக்கு 240 கோடி பகல் கொள்ளை அடிக்கிறார்கள். அப்படி என்றால் முழுமையான கணக்குதான் எவ்வளவு?
'டாஸ்மாக்’ நிறுவனத்தில் வேலை பார்க்கும் நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.
''எல்லா வகையான சட்ட விரோத விற்பனை மூலமாக ஒரு நாளைக்குச் சராசரியாக மாநிலத்தில் 10 கோடி ரூபாய் வசூல் ஆகிறது...'' என்றார் அசராமல். அதாவது, மாதத்துக்கு 300 கோடி. ஆண்டுக்கு 3,600 கோடி. அதாவது டாஸ்மாக் நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தில் சுமார் 20 சதவிகிதம். என்ன, தலை கிறுகிறுக்கிறதா?!
நண்பர் சொன்னதை முழுமையாகப் படியுங்கள்... ''எல்லாவற்றை யும் நாங்கள்தான் அள்ளிக்கொண்டு போகிறோம் என்று நினைக் காதீர்கள். யார், யாருக்கு எல்லாம் போய்ச் சேர்கிறது தெரியுமா?
ஒரு மாதக் கணக்கு சொல்கிறேன். கேளுங்கள். அதிகாரிகளுக்கு ஒரு லட்சம். மதுவிலக்குப் பிரிவுக்கு 10 ஆயிரம். ஏரியா கவுன்சிலருக்கு 5,000. லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு 5,000. லோக்கல் தாதா, அரசியல் அடிப்பொடிகளுக்கு 5,000. ஆக, ஒரு கடைக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மொய் எழுதியாக வேண்டும். கூடுதல் விலை வைத்து விற்பதால், ஒரு கடையின் சராசரி மாத வருமானம் மூன்று லட்சம் ரூபாய். லஞ்சம் கொடுத்தது போக மீதம் இருப்பது ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய். இதை ஒரு கடையின் ஏழு ஊழியர் களுக்குப் பிரித்தால், ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானம். இந்தப் பாவப் பணத்துக்கு நாங்கள் கொடுக்கும் விலை என்ன தெரியுமா?
இன்றைக்கு 80 சதவிகித டாஸ்மாக் ஊழியர்கள் தினமும் குடிக்கிறார்கள். இதில் 40 சதவிகிதம் பேர் காலையிலேயே குடிப்ப வர்கள். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 100 டாஸ்மாக் ஊழியர்கள் கல்லீரல் வீங்கி இறந்து இருக்கிறார்கள். பலர் குடித்து, குடித்து நடைப் பிணமாக இருக்கிறார்கள். பாதிப்பேருக்கு பேனா எடுத்து எழுத முடியாது. கை உதறும். இவை எல்லாம் உடல் ரீதியான பிரச்னைகள். 'எங்கே வேலை பார்க்கிறீர்கள்?’ என்று சொந்தக்காரர்கள் கேட்பார்கள். நாங்கள் தயங்கித் தயங்கித்தான் பதில் சொல்வோம். உடனே அவர்களின் முகமே மாறிவிடும். எங்கள் ஊழியர்களில் 50 சதவிகிதம் பேருக்கு வயது 40-ஐ நெருங்கியும் திருமணம் ஆகவில்லை என்ற அதிர்ச்சியான உண்மை உங்களுக்குத் தெரியுமா? எங்களுக்கு யாரும் பெண் கொடுக்க முன்வருவது இல்லை.
'குடிக்காமல் இருந்து தொலைய வேண்டியதுதானே? அத்தனைப் பேருமா குடிக்கிறார்கள்?’ என்று நீங்கள் கேட்கலாம். ஒழுக்கத்தைக் கற்றுத்தரும் ஆசிரியர்களே குடித்துவிட்டுப் பள்ளிக்குச் செல்கிறார்கள் என்று செய்திகளை படிக்கிறோம். புத்தகங் களுக்கு நடுவே இருப்பவருக்கே மனம் தடுமாறுகிறது என்றால், பாட்டில்களுக்கு மத்தியில் இருக்கும் எங்களுக்கு மனம் தடுமாறாதா? சரி, அப்படியும் கட்டுப்பாடாக இருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு ஒரு கடைக்கு 100 பெட்டிகள் வந்து இறங்குகிறது என்றால், குறைந்தது 10 பாட்டில்கள் உடைகின்றன. அதை நாங்கள் என்ன செய்வதாம்? மனம் தடுமாறாமல் இருக்க டாஸ்மாக் ஊழியர்கள் அத்தனை பேரும் என்ன புத்தர்களா? இல்லை, போதி மரத்தடியில்தான் டாஸ்மாக் கடை இருக்கிறதா?  
ஒரு பேச்சுக்கு நாங்கள் மொத்த ஊழியர்களும் திருந்தி விடுகிறோம். கூடுதல் விலை வசூலிக்க வில்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள். விடுவார்களா அதிகாரிகள்? பிடுங்கி எடுத்துவிட மாட்டார்கள்? உண்மையைச் சொல்லப் போனால், மாதம் 25 ஆயிரம் ரூபாய் வருமானத்துக்காக வாழ்க்கையைத் தொலைத்து விட்டோம்'' என்றார் அவர்!

லகளாவிய மதுத்தரம் என்று ஒன்று உண்டு. அதை நாம் பக்கத்தில்கூட நெருங்க முடியாது. தமிழகக் 'குடிமகன்கள்’ அதை நினைத்து ஏக்கப் பெருமூச்சு மட்டும் விட்டுக்கொள்ளலாம். அதுகிடக்கட்டும், இந்திய மதுத்தரம் (Indian standard alcohol specifications) என்று ஒன்று உண்டு தெரியுமா? மதுவை இப்படித்தான் தயாரிக்க வேண்டும்; இந்தந்த வஸ்துகள், இந்தந்த விகிதாச்சாரத்தில் சேர்க்கப்பட வேண்டும்; குறிப்பிட்ட நாட்களுக்கு கொள்​கலன்களில் அடைத்து வைத்து இருக்க வேண்டும் என்று எல்லாம் விதிமுறைகள் உண்டு.
இப்படி மதுவுக்கு மட்டும் அல்ல... மது அடைக்கப்​படும் பாட்டில்களின் தடிமன், பாட்டில் மூடியின் தடிமன், மூடியின் உட்புறம் இருக்கும் இருக்கும் கார்க்கின் தடிமன் இவை எல்லாவற்றையுமே ஐ.எஸ்.ஓ. அமைப்பு (ஐ.எஸ் - 4450/2005) கர்ம சிரத்தையாக நிர்ணயித்துள்ளது. மது அடைக்கப்படும் பாட்டில்கள் எடை தாங்கும் பரிசோதனை, வெப்பக் கதிர்வீச்சு பரிசோதனை செய்​யப்பட வேண்டும் என்று எல்லாம் சொல்கின்றன அந்த விதி​முறைகள்.
நிர்ணயிக்கப்பட்டுள்ள தரத்​தின்படி இந்தியாவில் மதுவை எப்படித் தயாரிக்க வேண்டும் என்று தெரியுமா?
பொதுவாக...
தண்ணீர் ஸ்பிரிட் வடிகட்டப்பட்ட மொலாஸிஸ் எசன்ஸ் = மது.
இதில் 'பிரீமியம்’, 'மீடியம்’, 'லோ’ என்று மூன்று தரங்கள் உண்டு. பிரீமியம் மற்றும் மீடியம் தர மது பானங்களில் நியூட்ரல் ஸ்பிரிட் (Neutral spirit) கலப்பார்கள். அதாவது, நன்றாக வடிகட்டிய, குறைந்த காட்டம் கொண்ட ஸ்பிரிட். பிரீமியம் ரகத்தில் மரத்திலான கொள்கலன்களில் அடைத்து, நொதிக்க வைக்கப்பட்ட பழரசத்தைக் கூடுதலாகச் சேர்ப்பார்கள். 'லோ’ ரக மதுவில் ரெக்டிஃபெய்டு ஸ்பிரிட் (Rectified spirit) கலப்பார்கள். அவ்வளவாக வடிகட்டாத ஸ்பிரிட் இது.
இவற்றை எல்லாம் கலந்து கட்டி ஒவ்வொரு வகை மதுவுக்கு ஏற்ப, குறிப்பிட்ட நாட்கள் கொள்கலன்களில் இருப்பு வைக்க வேண்டும். பின்பு, அதில் ஒரு பாட்டில் (குவாட்டர், ஆஃப், ஃபுல் என எந்த அளவு என்றாலும் சரி) சாம்பிள் எடுத்துப் பரிசோதனை செய்தால், அதில் 42.86 - 43.86 சதவிகிதத்துக்குள் ஆல்கஹால் இருக்க வேண்டும். இந்த அளவுக்குக் கூடவும் கூடாது; குறையவும் கூடாது. இதுதான் விற்பனைக்கு உகந்த மது. அரசாங்கத்தின் பார்வையில் குடிக்க உகந்த மது!
ஆனால், இங்கு நடப்பது என்ன? ஒரளவு நல்ல ஹோட்டலிலேயே இட்லி, தோசையை மிருது​​வாக்க வயிற்றுக்கு ஒவ்வாத சோடா உப்பு கலக்கிறார்கள். அப்படி என்றால், புறநகர்ப் பகுதிகளில் கோட்டைபோல் மதில் சுவர்களை எழுப்பிக்கொண்டு, ஏகப்பட்ட செக்யூரிட்டிகளின் பாதுகாப்புடன், வெளி ஆட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல், 'நானே ராஜா நானே மந்திரி’ ரேஞ்சுக்கு மதுபானங்களைத் தயாரிக்கும் மதுபான நிறுவனங்கள் எப்படி எல்லாம் தில்லுமுல்லு செய்ய முடியும்?
இதைப் படித்து, மதுவை ரட்சிக்கும் எந்த ஒரு ரட்சகரும் கடுப்பாக வேண்டாம். 'அரசுத் தடயவியல் ஆய்வுக்கூடத்தில் சான்றிதழ் பெற்ற பின்புதானே விற்பனைக்கு அனுப்புகிறோம்’ என்று கொதிப்படைய வேண்டாம். அவர்களது மனசாட்சிக்குத் தெரியும்... என்ன எல்லாம் செய்கிறார்கள் என்று!
சர்க்கரை ஆலைகளில் இருந்து வாங்கும் ஒவ்​வொரு லிட்டர் ஸ்பிரிட்டையும் மது ஆலைகள் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுத்தயாரிப்புக்கு மட்டும்தான் பயன்படுத்துகின்றனவா? வேறு வணிக நோக்கத்தில் வெளியே கைமாற்றப்படவே இல்லையா? அனுமதிக்​கப்பட்ட, உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்காத எசன்ஸை மட்டும்தான் உபயோகப்​படுத்துகின்றனவா? ஐ.எஸ்.ஓ. நிறுவனம் வகுத்துள்ள அத்தனை விதிமுறைகளையும் ஒன்று விடாமல் பின்பற்றுகின்றனவா?
ஆம், என்று சொல்பவர்கள் தங்கள் ஆலையில் நடக்கும் மதுத்தயாரிப்பை எப்போதுமே வீடியோ காட்சிக்கு உட்படுத்துவார்களா? பரிசோதனைக்கு சாம்பிள் அனுப்பும்போது அந்த வீடியோ காட்சிகளையும் தடயவியல் சோதனைக்கூடத்துக்கு அனுப்புவார்களா? விதிமுறைகளின்படி புதிய பாட்டில்களில்தான் மது அடைக்கப்பட வேண்டும். அதனால், டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது பாட்டில்களை விற்கும்போது புதிய பாட்டில்களுக்கான விலையைச் சேர்த்து​தானே குறிப்பிடுகிறார்கள்? அப்படி இருக்கும்போது பாட்டில் ரீ-சைக்கிளிங் என்பது எப்படி வந்தது?
ஆள்வோருக்கும் தெரியும்; அதிகாரிகளுக்கும் தெரியும்... மது நிறுவனங்களுக்கும் தெரியும்... இதை எல்லாம் எந்தக் குடிமகனும் கேட்க மாட்​டான். அதுதான் குடிப்பவனை மது முட்டாள் ஆக்கி விடுகிறதே?  பாட்டிலில் எவ்வளவு மட்டமான மதுவை அடைத்துக் கொடுத்தாலும் மூக்கைப் பிடித்துக்கொண்டு குடித்து விடுவான் என்று இந்த நிறுவனங்கள் நம்புகின்றன. இப்படி விதிமுறைகளை மீறுவது சமூக விரோதச் செயல் இல்லையா?
சமூக விரோதச் செயல் என்றவுடன்தான் டாக்டர் சொன்னது நினைவுக்கு வந்தது. மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருவிதக் குணாதிசயம் உண்டு. அதாவது, பஞ்சாபகேசன்... பயந்த ஆளு. முனுசாமி... கோபக்காரன். சரவணன்... சாது. உமா... ரொம்ப உணர்ச்சிவசப்படுவாள். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். இந்தக் குணாதிசயம், தனக்கோ அல்லது சமூகத்துக்கோ ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்தால், அதுதான் ஆளுமைக் கோளாறு. சிலருக்கு இயல்பாகவே மனதின் அடி ஆழத்தில் விதிமீறல் மீது ஒருவித ஈர்ப்பு இருக்கும். பொதுவாகவே, மது உள்ளே சென்றால் கட்டுப்பாடற்ற, சுதந்திரமான நிலைக்கு மனிதனை அது கொண்டுசெல்லும். இந்த 'விதிமீறல் ஆட்கள்’ தொடர்ந்து மது அருந்தும்போது, அவர்களுக்கு ஏற்படும் மனநோய்தான் சமூக விரோத ஆளுமைக் கோளாறு (Anti - social personality disorder).
மிக, மிக ஆபத்தானவர்கள் இவர்கள். யாருடைய உணர்வுகளையும் கொஞ்சம்கூட மதிக்க மாட்டார்கள். சட்டங்கள், விதிமுறைகள் எல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.  யாரையும் பொருட்படுத்தாமல் கன்னாபின்னாவென்று தவறுகளைச் செய்வார்கள். எந்தக் குற்றத்தையும் செய்துவிட்டு, கூலாக ஃபீல் செய்வார்கள். நம் ஊரில் இருக்கும் பல அடாவடி தாதா அரசியல்வாதிகளுக்கு இது பொருந்தும். கொலைக் குற்றத்துக்காக இவர்களைக் கைதுசெய்து வண்டியில் ஏற்றும்போதும் சிரித்துக்கொண்டே, கைகளை ஆட்டி  போஸ் கொடுப்பார்கள். இவர்களை எல்லாம் நீங்கள் நாளிதழ்களில் நிறையப் பார்க்க முடியும்.
சிறைகளில் மூன்று 'டூக்கள்’ பிரபலம் sணீபீ, னீணீபீ, தீணீபீ. சிறையில் இருப்பவர்களை இப்படி மூன்று பிரிவுகளாகப் பிரித்துச் சொல்வார்கள் சிறை அதிகாரிகள். இதில் மூன்றாம் வகையினர்தான் மேற்கண்ட ஆட்கள்.
மனிதர்கள் எல்லோருக்கு ஒருவித உந்துதன்மை (Impulsivity) இருக்கும். அதாவது, ரோட்டில் அழகாக ஒரு பெண்ணைப் பார்க்கிறீர்கள். 'பொண்ணு செம க்யூட்பா...’ என்று நினைத்துக்கொண்டே அவளைக் கடந்து சென்றால், அது நார்மல். அதுவே, அழகான பெண்ணைப் பார்த்த உடனே, கையைப் பிடித்து இழுத்தால் அது, சமூக விரோத ஆளுமைக் கோளாறு. இன்று சிறையிலும் வெளியிலும் நீக்கமற நிறைந்து இருக்கும் கொடிய சமூக விரோதிகள், காசுக்காகக் கொலை செய்யும் கூலிப்படையினர், அடாவடி அரசியல்வாதிகள், ஆன்மிக ஆராய்ச்சிப் போர்வையில் உலா வரும் போலி சாமியார்கள்... இவர்கள் எல்லாம் சமூக விரோத ஆளுமைக் கோளாறு நோயாளிகளே; இவர்களின் 90 பேருக்குக் குடிப்பழக்கம் இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
பொதுவாக விதி என்று ஒன்று இருந்தால், விதிவிலக்கும் உண்டுதானே... உலகிலேயே ஏராள​மானவர்களைக் கொலை செய்து மிகக்கொடியவராக பெயர் எடுத்த ஹிட்லர், தனது 30 வயதுக்குப் பின்பு சாகும் வரை மதுவையே தொடாதவர். அதற்கும் முன்பும் கூட ஓரிரு முறை மட்டுமே அவர் மது அருந்தி இருக்கிறாராம். இன்னொரு தகவல், ஒருமுறை கசாப்புக் கடைக்குச் சென்ற ஹிட்லர், அங்கு மாட்டை அறுப்பதைப் பார்த்து மனம் கலங்கி, அதன் பின்பு அசைவத்தையே ஒதுக்கி விட்டார். ஆனால், அவரும் சமூக விரோத ஆளுமைக் கோளாறு நோய்கொண்டவர் என்பது எவ்வளவு முரண்பாடான உண்மை பாருங்கள்!
''விற்பனை குறைந்தால் அதிகாரிகள் திட்டுகிறார்கள்!''
 கடந்த இதழில் டாஸ்மாக் ஊழியர்கள் கூடுதல் விலை வைத்து விற்பதை எழுதி இருந்ததைப் படித்து விட்டு, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கப் (ஏ.ஐ.டி.யூ.சி) பொதுச்செயலாளர் தனசேகரன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். ''நீங்கள் சொன்னதில் நிறைய உண்மைகள் இருந்தாலும்... சில முரணான தகவல்களும் இருக்கின்றன. கூடுதல் விலை வைத்து விற்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்மைதான். ஆனால், கடையைத் திறக்கும் முன்பும், கடை மூடிய பின்பும் விடிய, விடிய விற்பது டாஸ்மாக் பணியாளர்கள் அல்ல... பாரில் வேலை பார்ப்பவர்கள், பாரை ஏலம் எடுத்து நடத்துபவர்கள், அரசியல் தரகர்கள்.... இவர்களே, மதுபாட்டில்களை மொத்தமாக கொள்முதல் செய்து அப்படி விற்கிறார்கள்'' என்றார்.
அவரிடம், ''அவர்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யத்தான் தினமும் மொத்தமாக மது பாட்டில்களை வாங்குகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? அப்படி என்றால் அந்த முறைகேட்டுக்கு ஊழியர்களும் உடந்தைதானே?'' என்று கேட்டோம். ''ஒவ்வோர் ஆண்டுக்கும் 20 சதவிகிதம் மது விற்பனையை உயர்த்தி இலக்கு நிர்ணயித்து, விற்பனை குறைந்தால் கெட்ட வார்த்தைகளில் அதிகாரிகள் அர்ச்சனை செய்யும் சூழலில், எப்படியோ விற்றால் போதும் என்ற நிலைக்குத்தான் யாராக இருந்தாலும் தள்ளப்படுவார்கள். தவிர, டாஸ்மாக் நிர்வாகம் ஒவ்வொரு கடைக்கும் இத்தனை யூனிட் மட்டுமே மின்சாரக் கட்டணம் தர முடியும் என்று சீலிங் வைத்துள்ளது. இந்த சீலிங் முறைப்படி பார்த்தால் மின் கட்டணத்தில் பாதியை நாங்கள் கையில் இருந்து செலுத்த வேண்டி இருக்கிறது. தவிர, ஒவ்வொரு கடையிலும் அளவுக்கு அதிகமாக இருப்பு வைக்க அதிகாரிகள்  கட்டாயப்படுத்துகின்றனர். இதனால், பல கடைகளில் மது பாட்டில்களை வைக்க இடம் இல்லாமல் பக்கத்தில் ஒரு அறையைப் பிடித்து அங்கு இருப்பு வைக்கிறார்கள். அதற்கு கைக்காசைப் போட்டு வாடகை செலுத்துவதும் ஊழியர்களே. அந்தக் கட்டடத்தில் இருப்பு வைக்கும் மதுபானத்துக்கு ஆபத்து ஏற்பட்டால், மொத்தத்தையும் ஊழியர்களே ஏற்க வேண்டும். இப்படி ஊழியர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களைப் பட்டியல் போடலாம்'' என்றார்.

No comments:

Post a Comment