Saturday, June 2, 2012

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!


ஜார்கண்ட் மாநிலத் துணை முதல்வர் ஹேமந்த் சோரனிடம், ''காட்டிலும் கிராமங்களிலும் உள்ள மக்களை வலுக்கட்டாயமாகக் காலி செய்து, தொழில் அதிபர்களுக்குத் தாரை வார்க்கும் செயலைத்தான் அரசு செய்கிறதா'' என்று கேட்டதும் தயக்கம் இல்லாமல் பதில் சொல்லத் தொடங்கினார். 
''உண்மைதான்! யாரும் எங்கள் மக்களை ஏறெடுத் தும் பார்ப்பது இல்லை. இங்கு உள்ள கனிம வளங்களை அள்ளுவது பற்றியும் எப்படி குறுக்கு வழிகளில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க லாம் என்பதுபற்றியும்தான் தொழில் அதிபர்கள் யோசிக்கிறார்கள். உங்களுக்குத் தெரியுமா, இந்தியாவின் பிரபலத் தொழில் நிறுவனம் ஒன்று,  தனக்கு நிலம் கொடுத்த மக்களுக்குத் தான் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் இன்னும் இழுத்தடிக்கிறது. தொழிற்சாலைகளுக்காக இடம் பெயர்ந்த மக்களின் தீர்க்கப்படாத பிரச்னைகள் இங்கே ஏராளம். மாவோயிஸ்ட்கள் தலையெடுக்கக் காரணமே இதுபோன்ற நிலைதான். அவர்கள் கிராமங்களில் வசிக்கும் ஏழைகளைத் தங்கள் வசப்படுத்திக்கொள்கிறார்கள். அங்கெல்லாம் அவர்கள் ராஜ்ஜியம் நடத்துகிறார்கள். அரசாங் கத்திடம் இருந்து மக்களுக்கு விடுதலை என்கிறார் கள். அந்தப் பகுதிகளில் மாநில அரசின் நிர்வாகத் தையே செயல்பட விடுவது இல்லை. அரசு ஊழியர்களால் தங்கள் கடமைகளைச் செய்ய முடிவதும் இல்லை. பல வருடங்களாக நிலவும் இந்தப் பிரச்னையின் பின்னணியையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
சுரங்கத் தொழிலில் மத்திய அரசின் கொள்கைகள், சட்டங்கள் மாநில அரசுகளுக்கு சாதகமாக இல்லை. மாநிலத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத சூழலும் இந்தப் பிரச்னைக்கு இன்னொரு முக்கிய மான காரணம். அதனால், ஒரு தெளிவான முடிவை எடுக்க முடிவது இல்லை. மாவோயிஸ்ட் பிரச்னை என்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளுடன் தொடர்புடையது'' என்றவர் நம்மைப் பார்த்து,
''நீங்கள் எந்தெந்தப் பகுதிகளுக்குச் சென்றீர்கள்?'' என்று கேட்டார்.
''லத்தேகர், சர்ஜூ, சைபாஸா, பெட்லா'' என்று வரிசையாக நாம் சொல்ல ஆரம்பிக்க இடைமறித்த அவர், ''நீங்கள் போன பகுதிகள் எல்லாம் மாவோயிஸ்ட்களால் பெரும் பாதிப்புக்கு உள்ளான பகுதிகள். ஆனால், இப்போது நிறைய சாலைப் பணிகள், சிறுபாலங்கள், கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை வழிநெடுகிலும் பார்த்திருப்பீர்களே. ஏதோ எங்களால் முடிந்ததைச் செய்கிறோம்'' என்றார்.
அடுத்து, மாவோயிஸ்ட் பற்றி அவரது பேச்சு திரும்பியது!
''மாவோயிஸ்ட்கள் ஒன்றும் புனிதர்கள் அல்ல. அவர்கள் ஆரம்பித்த இடத்தில் இருந்து எங்கேயோ போய்விட்டார்கள். பணம்தான் அவர்களுக்கு முக்கியம். அதற்காகவே, உள்ளூரில் பிரச்னைகளை உருவாக்குகிறார்கள். அரசின் வளர்ச்சித் திட்டங்களை கிராமங்களில் நிறைவேற்றப் போனால், அதற்கு மாவோயிஸ்டுகள் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள். வளர்ச்சி என்ற சொல்லையே அவர்களால் சகித்துக்கொள்ள முடியாது. எங்கள் மாநிலத்தில் பெரும்பான்மையான கிராமங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. வேலையில்லாத் திண்டாட்டம், சுகாதாரச் சீர்கேடு, கல்வியின்மை, மின்சார வசதி என்று செய்ய வேண்டிய பணிகள் எவ்வளவோ கிடக்கின்றன. காடு, மலைகளை ஒட்டியுள்ள கிராமத்து மக்களின் நிலைமை ரொம்பவும் பரிதாபம். கிராமங்களை ஆக்கிரமித்துள்ள மாவோயிஸ்ட்களிடம் இருந்து மீட்க போலீஸார் சண்டை போட்டு வருகிறார்கள். மாவோயிஸ்ட் ஒழிப்புத் திட்டத்தைப் பொறுத் தவரை, மத்திய அரசுக்குத் தேவையான ஒத்துழைப்பு தருகிறோம். மாநில முதல்வர் அர்ஜுன் முண்டா, நடப்பதை அமைதியாகக் கவனித்து வருகிறார். வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்'' என்றார்.
''சுரங்கத் தொழிலில் மத்திய அரசின் கொள்கையும் சட்டதிட்டமும்தான் இவ்வளவு குளறுபடிகளுக்கும் காரணம் என்கிறீர்களா?'' என்று கேட்டோம்.
''நிச்சயமாக. பெரும்பாலான சுரங்கங்களை நடத்துவது மத்திய அரசுதான். அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் அளப்பரியது. அதில் மாநில அரசாங்கத்துக்குக் கிடைக்கும், 'ராயல்டி' தொகை மிகவும் சொற்பம்தான். கனிம வளங்களுக்குத் தரும் 'ராயல்டி’ தொகையை உயர்த்திக் கொடுத்தால், வளர்ச்சிப் பணிகளுக்கு அவை உதவியாக இருக்கும். மத்திய அரசுடன் எவ்வளவோ போராடிப் பார்த்து விட்டோம். ஆனால், அவர்கள் செவி சாய்க்கவே இல்லை. சுரங்கத் தொழிலில் உள்ள பழைய கொள்கைகள், சட்டத் திட்டங்களை மாற்றத் தயங்குகிறார்கள். ஆனால், பூமியில் புதைந்து கிடக்கும் கனிம வளங்களை எடுப்பதற்கு மட்டும் புதிது புதிதாகத் திட்டங்களைப் போடுகிறார்கள். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் எங்கள் மாநிலத்துக்கு வந்து, அவராகவே சில திட்டங்களை அறிவிக்கிறார். மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கைக்கு உள்ளான கிராமங்களில் வசிக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை கேட்டுத் தெரிந்துகொண்டு, அதற்கான திட்டங்களை அறிவிக்கிறார். இதனால் ஒரு கையில் துப்பாக்கியும் மறு கையால் மருத்துவ உதவியும் செய்ய வேண்டிய நிலையில் போலீஸார் இருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கைக் கவனிக்க துப்பாக்கி பிடிக்கலாம். ஆனால், அவர்களை சமூகப் பணிகளில் எப்படி ஈடுபடுத்த முடியும்? அவர் எதிர்பார்ப்பு நிறைவேற நிறையக் காலம் பிடிக்கும். எப்படியோ மக்களுக்கு நல்லது நடந்தால் சரி என்று நாங்களும் போகிறோம். ஆனால், ஒரு மாநில மக்களின் உணர் வையும் தேவைகளையும் அந்த மாநில அரசுதான் நன்கு உணர்ந்து இருக்கும் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். வளர்ச்சிப் பணிகளில் எங்களையும் முழுவதுமாக இணைத்துக் கொள்ள வேண்டும்'' என்கிறார்.
''உங்கள் அப்பா சிபுசோரனுக்குச் செல்வாக்கு உள்ள பகுதிகளில் மட்டும் மாவோயிஸ்ட்கள் இல்லை யாமே? இது எப்படிச் சாத்தியம்? மாவோயிஸ்ட் டுகளால் உங்களுக்கு ஆபத்து இல்லையா?'' என்றோம்.
''எங்கள் பகுதிகளில் மாவோயிஸ்ட் பாதிப்பு கொஞ்சம் உண்டு. அவர்கள் அங்கே தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சித்து வருகிறார்கள். மற்றபடி, எங்கள் கட்சிக்கு அவர்களிடம் இருந்து எந்த ஒரு மிரட்டலும் வந்தது இல்லை. மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். எங்கள் மாநில மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உண்மையாக இருப்பதும்கூட காரணமாக இருக்கலாம். ஏனென் றால், இந்த விஷயங்களுக்காகத்தானே அவர்களும் போராடுகிறார்கள். என்ன, நாங்கள் அரசியல் வழியில் போராடுகிறோம்; அவர்கள் துப்பாக்கி வழியில் போராடுகிறார்கள். அப்படியிருக்க, அவர்கள் ஏன் எங்களை எதிரிகளாகப் பார்க்கப் போகிறார்கள்? என் அப்பா சிபுசோரன் கடந்த 30 ஆண்டுகளாக காடுகள், மலைகள், கிராமங்கள் என்று அடித்தட்டு மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். இரவு, பகல் எந்தநேரத்திலும் மக்களைச் சந்திக்கிறார். நானும் அவர் வழியில்தான் செல்கிறேன். எங்களுக்கு மாவோயிஸ்ட்டுகள் எந்த மிரட்டலும் விடுத்தது இல்லை'' என்றார்.
''அப்படியானால் நீங்கள் மாவோயிஸ்ட்களை அழைத்துப் பேசி சுமுகமாக ஒரு தீர்வை ஏற்படுத் தலாமே?''
''பேசத் தயார். அவர்கள் முன்வந்தால், பேசுவோம். ஆனால், இதுவரை அதற்கான முயற்சி எடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. எனக்கு மாநில அரசியலில் எதிர்காலம் இருக்கிறது. நான் துணை முதல்வர் பதவிக்கு வந்து 16 மாதங்கள்தான் ஆகின்றன. நிறையச் செய்ய வேண்டும் என்றே நினைக்கிறேன். நல்ல வாய்ப்பு வரும்போது, அவர்களை அழைத்துப் பேசுவேன். பின்தங்கிய கிராமப்புற மக்களுக்கு எது நல்லதோ, அதைச் செய்வேன்'' என்றவரிடம் இருந்து விடைபெற்றுக் கிளம்பினோம்.
பெட்லா வனப் பகுதி. ஜார்கண்ட் - சத்தீஸ்கர் இரண்டு மாநிலங்களில் எல்லையை வருடும் அடர்ந்த காட்டுப் பகுதி. நாம் அங்கு சென்றபோது, மாவோயிஸ்ட்களுக்கும் சி.ஆர்.பி.எஃப். போலீஸாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்துகொண்டு இருந்தது. சண்டை தொடங்கி இது 49-வது நாள் (11.05.2012) என்றார்கள். பெட்லா வனப் பகுதி வழியாகத்தான், மாவோயிஸ்ட்கள் முகாம் அமைத்துள்ள பகுதிக்குப் போலீஸார் போக முடியும் என்பதால், அங்கே பரபரப்புக்கு பஞ்சம் இல்லை!
வானத்தில் விர்விர் என்று இறக்கையைச் சுழற்றியபடி வட்டமடிக்கிறது விமானப் படையின் ஹெலிகாப்டர். வனத்தின் இடையே மோட்டார் சைக்கிள்களில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அங்குமிங்கும் பறந்தபடி இருக்கிறார்கள். சி.ஆர்.பி.எஃப். தலைவர் விஜயகுமார், பெட்லா கெஸ்ட் ஹவுஸில் முகாம் இட்டிருப்பதாகச் சொன்னார்கள். அங்கே சென்றோம். வனப் பகுதியின் வரைபடம் சகிதம் சக அதிகாரிகளுடன் ஆலோசனையை முடித்துவிட்டு, வெளியே வந்தார் விஜயகுமார். யூனிபார்ம், கூலிங்கிளாஸ் சகிதம் கம்பீரமாக நடந்து வந்த அவர் தோளில் ஏகே 47 ரக துப்பாக்கி. அதை சரிசெய்தபடி, நம்முடன் பேச ஆரம்பித்தார் விஜயகுமார்...

 - அதிர்ச்சி தொடரும்.. 
பெட்லாவின் விசேஷங்கள்...
ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து 170 கி.மீ. தொலைவில் இருக்கிறது பெட்லா. வனத்துறைக்குச் சொந்தமான புலிகள் சரணாலயம் இங்கே இருக்கிறது. காட்டுப் பகுதியில் ஏராளமான புலிகள் நடமாட்டம் உண்டு. யானை உள்ளிட்ட நிறைய காட்டு மிருகங்கள் மற்றும் அரிய வகை பறவைகள் காணப்படுவதால், அவற்றை  பார்க்கவும்,  நீர்வீழ்ச்சி மற்றும் ஆற்றில் குளிக்கவும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதும்.  இங்குள்ள அரண்மனை சரித்திரப் புகழ் வாய்ந்தது.  சேரோ மன்னன் 16-ம் நூற்றாண்டில் ஆட்சி நடத்திய அரண்மனை, சிதைந்த நிலையில் இருக்கிறது. இதற்கு அருகில் மன்னனின் வாரிசு ஓர் அரண்மனையைக் கட்டத் தொடங்கி, அது கட்டி முடிக்கப்படாமல் பாதியில் நிற்கிறது. ஒரு காலத்தில் ஏராள மான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தவை இந்த இடங்கள். போலீஸ் ரோந்து போன்ற பிரச்னைகள் இப்போது நிலவுவதால், சுற்றுலா பயணிகள் அதிகம் வருவது இல்லை. நாம் போனபோது, வனக் கண்காட்சி மையம் வெறிச்சோடிக்கிடந்தது. சரணால யத்திலும் பார்வையாளர்கள் யாரும் கண்ணில் தென்படவில்லை. பெட்லா வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமத்திலும் ஆட்களைக் காணோம்.
அருகில் தென்பட்ட ஒரு டீக்கடையில் பேச்சு கொடுத்தோம். ஆனால், அவர்களும் பேச மறுத்தார்கள். பெட்லாவை ஒட்டி ஆதிவாசிகள் வசிக்கும் கிராமத்துப் பக்கம் நடை போட்டோம். ஒரு வீட்டில் கும்பல் கூடி இருந்தது. அங்கே தென்பட்ட ஒரு சிவப்புத் துணி பேனரில் மாவோ கம்பீரமாகத் தெரிகிறார். நக்ஸல்பாரி இயக்கத்தின் நிறுவனரான சாரு மஜூம்தார், மார்க்ஸ் படங்களில் தெரிகிறார்கள். நம்மைப் பார்த்ததும், அருகில் வந்து இன்முகத்தோடு வரவேற்றார்கள். ஆனால், போலீஸ், மாவோயிஸ்ட் என்று நாம்  பேசத் தொடங்கியதும், ஒரு கணத்தில் விலகிப் போய்விட்டார்கள்.
அவர்கள் அனைவர் முகத்திலும் ஒருவித பதற்றத்தை மட்டுமே பார்க்க முடிந்தது!

து வித்தியாசமான யுத்தக்களம். எதிரி​களுக்குச் சீருடை கிடையாது. பொதுமக்கள் போலத்தான் வேஷம் போட்டுக்கொண்டு அவர்கள் வருவார்கள். நாலா புறங்களில் இருந்தும் அவர்கள் வீசும் குண்டுகள் பறந்து வரலாம். ஆனால், எங்களுடைய ஒரு துப்பாக்கி ரவை கூட பொதுமக்கள் மீது பாய்ந்துவிடக் கூடாது. நடுக்காட்டில், கும்மிருட்டில், கண்ணைக் கட்டிக்கொண்டு குறிதவறாமல் சுடுவதுபோல என்று வைத்துக்கொள்ளுங்களேன். அப்படித்தான் போரிட்டுக்கொண்டு இருக்கிறோம். நீங்கள் இப்போது நிற்கும் இடத்தில் 49-வது நாளாக சண்டை நடக்கிறது. இதுவரை, மாவோயிஸ்ட் தரப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டு உள்ளனர். மூவருக்குப் படுகாயம். எங்கள் தரப்பில் ஒருவரை இழந்து விட்டோம். ஆறு பேருக்குப் பலத்த காயங்கள். எதுவுமே சுலபம் இல்லை.''
- நம்மிடம் நிதானமாகத்தான் பேசுகிறார் விஜய​குமார். ஆனால், அவருடைய கண்கள் சுற்றிலும் கண்காணித்துக்கொண்டே இருக்கின்றன.
''மூன்று லட்சம் வீரர்களை வழிநடத்தும் அனு​பவம் எப்படி இருக்கிறது?''  
''நாம் சரியாக இருந்தால், நமக்குப் பின்னால் இருப்பவர்களும் சரியாக இருப்பார்கள். என்னை  என் வீரர்கள் கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களை என் நடவடிக்கைகளால்தான் வழிநடத்து​கிறேன். சவாலான நேரம் என்றால், எனக்குக் கீழே இருப்பவர்கள் ஏதாவது தப்பு செய்துவிட்டு, என் முன்பு அவர்கள் நிற்கும் நேரம். கண்ணியமான, தைரியசாலியான அதிகாரி ஒருவர் தவறு செய்கிறார் என்றால், நான் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். அதற்கு முந்தைய காலங்களில் அவர் எந்த ஒழுங்கு நடவடிக்கைக்கும் ஆளாகாமல் மிகச்சிறப்பாகப் பணி செய்திருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவும் வேண்டும். அந்த மாதிரி தருணங்கள்தான் சவாலாக இருக்கும். மற்றபடி, எனக்குக் கீழே இருப்பவர்களின் எண்ணிக்கையை நான் தனித்தனியாகப் பார்ப்பது இல்லை. எனக்குக் கீழே ஒரு வீரர் இருக்கிறார். அவரோடு நானும் ஓடிக்கொண்டு இருக்கிறேன். அப்படித்தான் எப்போதும் நினைப்பேன்.''
''ஜார்கண்டில் இதுவரை எத்தனை ஆபரேஷன்களை நீங்கள் நடத்தி இருக்கிறீர்கள்? எல்லா​வற்றிலும் வெற்றி கிடைத்ததா?''
''ஜார்கண்ட்டில் இப்போது நாங்கள் நடத்திக்​கொண்டிருக்கும் ஆபரேஷனின் பெயர்... 'ஆபரேஷன் ஆக்டோபஸ்’. முதல் தாக்குதலை சரண்டாவில் நடத்தினோம். அடுத்து சர்ஜூவில். மூன்றாவதாக புர்ஹா பகட்டில் தாக்குதல் நடத்தினோம். இவை திட்டமிட்டு நடத்தப்பட்ட ஆபரேஷன்கள். ஆனால், சத்தீஸ்கரிலோ, ஜார்கண்​டிலோ எல்லைப் பகுதிகளில் அடிக்கடி துப்பாக்கிச் சண்டைகள் நடப்பது சகஜம். திடீரென்று நாம் இப்போது நிற்கும் இடங்களை எதிரிகள் சூழ்ந்துகொண்டால், என்ன செய்வோம்? போன வாரம் நவீன்மாஞ்சி (மாவோயிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்) அவருடைய மூன்றாவது மனைவியின் வீட்டுக்கு வந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. சுற்றி வளைத்துப் போலீஸார் பிடித்தார்கள். இதற்கெல்லாம் கணக்கே கிடையாது. ஆனால், மாவோயிஸ்ட்களைத் துரத்துவதோடு விட்டுவிடுவது இல்லை. அவர்களுடைய முகாம்களை எங்கெல்லாம் அழித்து, அவர்களைத் துரத்துகிறோமோ, அங்கெல்லாம் எங்கள் படையின் நிரந்தர முகாம்களை அமைத்து விடுகிறோம்.  இதை எல்லாம் வெற்றி என்று சொல்வதைவிட, இது தொடர்ச்சியான ஒரு போர் நடவடிக்கை என்றுதான் சொல்ல வேண்டும்.''
''வீரப்பன் ஆபரேஷன், உளவுத் தகவலை அடிப்​படையாக வைத்துத்தான் வெற்றி பெற்றதாக முன்பு சொல்லி இருந்தீர்கள். தொழில்நுட்ப உளவு - மனித உளவு இரண்டையும் சேர்த்து பயன்படுத்தி வெற்றி பெற்​றோம் என்று சொன்னீர்கள். இங்கேயும் அதே பாணிதானா?'' 
''ஆமாம். படை வேறு... உளவுப் பிரிவு வேறு. இவர்கள் கொடுக்கும் துல்லியத் தகவல் அடிப்படையில்தான் படையினரால் அதிரடித் தாக்குதல் நடத்த முடியும். இதையெல்லாம் மனதில் வைத்துத்தான், புதிய உளவுப்பிரிவு ஒன்றை சமீபத்தில் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆரம்பித்து வைத்தார். மேலும், 3,500 பேர்கொண்ட உளவுப்பிரிவை நாடு முழுவதும் தயார் செய்து இருக்கிறோம். அதிரடிகளைப் பொறுத்திருந்து பாருங்கள்!''
''இந்தத் தாக்குதல் யுக்தியில் உங்களின் குரு யார்?''
''பிரிட்டிஷ் படையின் ஃபீல்டு மார்ஷல் பெர்னார்டு மன்ட்கோமெரி. இரண்டாம் உலகப்போரில் மிகச்சிறந்த ராணுவத் தளபதியாக விளங்கியவர். அவரது போர் யுக்திகள் எனக்குப் பிடிக்கும். ராணுவ, போலீஸ் பணியில் இருக்கும் ஒவ்வொருவரும் அவரைப் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். இங்கிலாந்து ராணுவம் மிகவும் வலுவுடையதாக மாறியது அவருடைய சாதனையால்தான். ஒரு சில மாதங்களில் 10 லட்சம் வீரர்களுக்கு முறைப்படி பயிற்சி கொடுத்து போருக்குத் தயார் செய்தவர். அவரது பெயரை கூகுளில் தட்டிப்பாருங்கள். அவரது சாதனை நுணுக்கங்​களைப் படித்துப் பிரமித்துப்போவீர்கள்.''
''சரி, மாவோயிஸ்ட் பிரச்னையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''ஓர் அரசு ஊழியனாக இருக்கும் நான் இதுபற்றி கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. அரசு எனக்குக் கொடுத்துள்ள வேலையை நான் செய்கிறேன். அவ்வளவுதான். ஆனால், மக்கள் பாதிப்படையாமல் வேலை செய்கிறோம் என்பதும் இங்கு மோசமான சூழலில் இருக்கும் மக்களின் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்தத் தேவையானவற்றை கவனிக்கிறோம். அரசாங்கமும் மக்களுடைய நிலையை மாற்ற முயற்சி எடுக்கிறார்கள்.''
''அப்பாவி மக்களைப் படையினர் கைதுசெய்து துன்புறுத்துவதாகவும் சுட்டுக்கொல்வதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் சொல்கிறார்களே? அரசியல்​வாதிகளேகூட குற்றம் சாட்டுகிறார்களே?''
''மனித உரிமை மீறல் தொடர்பான புகார்கள் வரவே கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். அதையும் மீறி வந்தால், அதைக் கண்டுகொள்ளாமல் விடுவது இல்லை. ஐ.ஜி. லெவல் அதிகாரியை அனுப்பி விசாரித்து, சம்பந்தப்பட்டவர் தவறு செய்திருந்தால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கிறோம். ஆனால், இன்னொன்றையும் புரிந்துகொள்ளுங்கள். இங்கே நிஜமாக என்ன நடக்கிறது என்பது மனித உரிமை ஆர்வலர்களுக்குத் தெரியாது. மாவோயிஸ்ட்களிடம் இருந்து வரும் பிரஷர் காரணமாக, அவர்கள் விரும்புகிற மாதிரி அறிக்கை விடும் ஒருசில அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தெற்கு ஒடிசாவில் நடந்த பஞ்சாயத்து தேர்தல்களில் 30 சதவிகித தேர்தலில் மாவோ​யிஸ்ட்கள் போட்டி இல்லாமல் ஜெயித்து இருக்கிறார்கள். 'பரவாயில்லையே. ஜனநாயகப் பாதைக்கு அவர்கள் வந்து விட்டார்களே' என்று சந்தோஷப்படலாம். ஆனால், 'அரசியல்வாதிகள் அந்தப் பதவிகளுக்கு வந்துவிடவே கூடாது' என்று மாவோயிஸ்ட்கள் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். அதனால் அதிருப்தி அடைந்த அரசியல்வாதிகள் பலர், தங்கள் அரசியலில் பாதையைவிட்டே விலகிவிட்டனர். இது மிகவும் மோசமான அணுகுமுறை. ஏற்கெனவே இருக்கிற அரசியல் அமைப்பை மாவோயிஸ்ட்கள் மொத்தமாக அழிக்கப் பார்க்கிறார்கள். நமது ஜனநாயக அமைப்பில் சில தவறுகள், குறைகள் இருக்கலாம். ஆனால், இதைவிட சிறந்ததை மாவோயிஸ்ட்களால் தர முடியாது!''
''மத்திய அரசுக்கும், சில மாநில அரசுகளுக்கும் மாவோயிஸ்ட் ஒழிப்பு விஷயத்தில் கருத்து வேறு பாடு நிலவும் சூழல், படையினரைப் பாதிக்​கிறதா?''
''மாவோயிஸ்ட்கள் விவகாரத்தில் மத்தியஅரசு எங்களுக்கு என்ன சொல்கிறதோ, அதை மாநில அரசின்  உதவியுடன் செய்கிறோம். இந்த விவகாரத்தை, இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இப்போது நாலைந்து மாநிலங்களில் பரவிஇருக்கும் மாவோயிஸ்ட்கள், நாடு முழுவதும் பரவாமல் தடுக்க வேண்டும். சின்னச் சின்ன பிரச்னைகள் வந்தாலும் பொதுநலன், தேச நலன் கருதி மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கையில் அனைவரது ஒத்துழைப்பும் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு.''
''பெருநிறுவனங்கள் இங்குள்ள கனிமவளங் களைச் சுரண்டுவதற்காக மக்களை விரட்​டப் பார்க்கின்றன. அவர்களுக்குஎதிராக மாவோ யிஸ்ட்கள் போராடுகிறார்கள். ஆதி​வாசி​களிடமும் கிராமப்புற மக்களிடமும் மாவோயிஸ்ட்​களுக்கு நல்ல செல்வாக்கு இருப்பது வெளிப்​படையாகவே தெரிகிறது. இத்தகைய சூழலில் உங்களது நடவடிக்கைகள் எப்படி வெற்றி​பெறும்?''
''எனக்கும் தெரியும். இங்கே பல வருடங்களாக சில மின் உற்பத்தி நிலையங்கள் இயங்கிவருகின்றன. ஆனால், அதற்குப் பக்கத்துக் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மின்சாரம் என்றாலே என்ன வென்று தெரியாது. நிறைய வளர்ச்சிப் பணிகள் செய்ய வேண்டி இருப்பதும், அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டியதும் உண்மைதான். இவை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பார்வையில்தான் நான் பேச முடியும். பொதுவாகச் சொன்னால், எங்கள் கூட்டுமுயற்சி நிச்சயமாக பயன் அளிக்கும். இந்தியப் பிரதமர் சொன்னதுபோல, மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கையில் முதல் படி - உள்துறை தொடர்புடையது. இரண்டாவது - மனிதவளத் துறை தொடர்பான வளர்ச்சித் திட்டங்கள். இந்தப்பாதையில்தான் நாங்கள் பயணிக்கிறோம்'' என்று சொல்லிக் கொண்டு இருந்த போது, விஜய குமாரின் கைக்கு ஒரு துண்டுச்சீட்டு வருகிறது.
''நாம் திரும்பவும் இன்னொரு தருணத்தில் சந்திக்கலாமே'' என்றபடி அவசரமாகக் கிளம்புகிறார். ஒரு ஜீப்பில் அவர் ஏற அவரைப் பின்தொடர்ந்து வீரர்கள் சரசரவெனக் கிளம்ப, என்ன விஷயமாக இருக்கும் என்ற நினைப்புடனேயே நாம் புறப்படு கிறோம். தூரத்தில் மனித நடமாட்டம் தெரிந்தது...


நாம் கூர்ந்து கவனித்தபோது அவர்கள் நமக்கு ஏதோ சைகை காட்டியது தெரிந்தது. நாம் அவர்களைப் பின்தொடர ஆரம்பித்தோம். காட்டுக்குள் விறுவிறுவெனக் கடந்து சென்றார்கள் அவர்கள். அவர்களுடைய நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓட்டமும் நடையுமாகச் சென்றோம். ஒரு கட்டத்தில் திடீரென நின்றவர்கள் அப்படியே திரும்பி நம்மை நோக்கி வந்தனர். முகத்தை துணியால் மறைத்துக் கட்டி இருந்தனர். கைகளில் ஏகே 47 ரகத் துப்பாக்கிகள். விஷயம் நமக்குப் புரிய ஆரம்பித்தது.
 நாம் இந்தப் பகுதியில் நடமாடி வருவதை சி.ஆர்.பி.எஃப். படையினரைப் போலவே மாவோயிஸ்ட் இயக்க உளவுப்பிரிவினரும் கண்காணித்து வந்துள்ளனர். நம்மைப் பின்தொடர்ந்து வந்து நாம் யாரென்று தெரிந்துகொண்டும் இருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், மாவோயிஸ்ட்களை நாம் சந்திக்க வேண்டும் என்று கிராமத்து மக்களிடம் சொன்ன தகவலும் அவர்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது.  
இருவரும் நம்மைப் பார்த்து 'வணக்கம்' சொன்ன கையோடு, ''தமிழ்நாட்டுப் பத்திரிகை​யாளர்கள்தானே?'' என்றனர். ''ஆமாம்'' என்றோம்.
நாம் ஒரு குடிசையை நோக்கி அழைத்துச் செல்லப்​பட்டோம். உரையாடல் மெள்ளத் தொடங்கியது.  
''இங்குள்ள பிரச்னையை, உங்களுடைய கோரிக்கை​களைச் சொல்லுங்களேன்?'' என்றோம்.
''இது எங்கள் மண். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். எங்கள் ஊர் இல்லை. எங்கள் மண். இந்தக் காடுகளும் மலைகளும்தான் எங்களுக்கு எல்லாமும். காலையில் எழுந்ததும் காட்டுக்குள்தான் போவோம். பொழுது சாயும்போதுதான் வீடு திரும்புவோம். வீடு இருப்பதும் காட்டுக்குள்தான். ஆக, எங்களுக்கு உணவு, உழைப்பு, உறைவிடம், உலகம் எல்லாமே இந்தக் காடும் மலைகளும்தான். இதைத்தவிர வேறு ஒரு வாழ்க்கை எங்களுக்குத் தெரியாது.
எங்கள் குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடம் வேண்டும் என்று பல ஆண்டுகளாக நாங்கள் அரசிடம் கேட்​டோம். அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. எங்களுக்கு மருத்துவமனை வேண்டும் என்று பல ஆண்டுகளாக நாங்கள் அரசிடம் கேட்டோம். அரசாங்கம் செவிசாய்க்க​வில்லை. சாலைகள் வேண்டும் எனப் பல ஆண்டு​களாக நாங்கள் அரசிடம் கேட்டோம். அரசாங்கம் செவிசாய்க்க​வில்லை. இப்படி எங்களுக்கென்று எதுவும் செய்யாத அரசாங்கம் இன்றைக்கு இந்த மண்ணைவிட்டு எங்களை வெளியேறச் சொல்கிறது. எங்கள் காடுகளையும் மலைகளையும் அழித்து சுரங்கம் தோண்டப்«​பாகிறோம் என்கிறது. எங்கள் சூழலில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? அதனால்தான் நாங்கள் போராடுகிறோம். எங்களைத் தீவிரவாதிகள் என்கிறது உங்கள் அரசாங்கம்'' என்றார்கள்.
''நீங்கள் தமிழ்நாடுதானே... மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் பழக்கம் உண்டா?'' என்றனர்.  
''பத்திரிகையாளர் என்கிற வகையில் அவரைத் தெரியும். நெருக்கமான பழக்கம் இல்லை'' என்​றோம்.
''உங்கள் சிதம்பரம் நடத்தும் 'பச்சைவேட்டை’ தாக்குதலின் உக்கிரத்தால், எங்கள் மக்கள் துடித்துக்​கொண்டு இருக்கிறார்கள். அவர்தான் விஜயகுமாரை இங்கு கொண்டுவந்தார். இது போதாது என்று  எங்களை ஒழிக்க ராணுவத்தையும் அடுத்த வருடம் இறக்கிவிட இப்போதே திட்டம் போட்டு வருகிறார் சிதம்பரம்'' என்றார்கள்.
''இந்தத் தாக்குதலை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?'' என்றோம்.
''மாவோயிஸ்ட் பகுதிகளில் வேலை செய்யும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளில் பலர் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளா எனத் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்கள். அவர்கள் மொழி எங்களுக்குத் தெரியாது. எங்கள் மொழி அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி அடி. நாங்கள் அழுகையாலும் ஆயுதங்களாலும் பதில் சொல்கிறோம்'' என்றார்கள்.
''இங்கே பல வருடங்களாக, அரசியல்வாதிகளும் பெரும் பணக்காரர்களும் எங்களைச் சுரண்டுகிறார்கள். போதாக்குறைக்கு அரசாங்கம் இப்போது பெரு
நிறு​வனங்களையும் அழைத்து வருகிறது. ஆரம்பத்தில் அரசாங்கம் தந்த பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்தோம். பிறகுதான் சுதாரித்து, நிலம் தர மறுக்கும் இயக்கத்தைத் தொடங்கினோம். மக்களின் எந்தத் தேவையையும்  பூர்த்தி செய்ய முடியாத ஓர் அரசாங்கம் இருந்து என்ன பயன்? மக்கள் அனைவரும் எங்களைப் பாதுகாவலராக நினைக்கிறார்கள். கிராமங்களில் நாங்கள் முன் னின்று நடத்தும் மக்கள் நீதிமன்றங்களை வந்து பாருங்கள். நாங்கள் வேறு அல்ல; மக்கள் வேறு அல்ல என்பதைப் புரிந்து கொள்வீர்கள்'' என்றவர்கள், அவர்களே தொடர்ந்தார்கள்.
''சரண்டா வனப்பகுதியில் எங்கள் இயக்கத்​தினர் மீது தாக்குதல் நடத்தினார்கள். அந்தச் சமயத்தில் கிராம மக்களிடம் எந்த அளவுக்குக் கொடூரமாக நடந்து கொண்டார்கள் என்பதை இங்கு உள்ள மனித உரிமை ஆர்வலர்களிடம் கேட்டுப்பாருங்கள்'' என்றவர்களிடம், ''ஆனால், இப்போது வளர்ச்சிப் பணிகள் நடக்கின்றன அல்லவா?'' என்று கேட்டோம்.
''இங்கு ரூ. 248.48 கோடியில் அவர்களுடைய 'வளர்ச்சிப் பணி’ நடக்கிறது. ரூ. 104 கோடியில் 130 கி.மீ. தூரத்துக்குச் சாலை அமைக்கிறார்கள். 7,000 பேருக்கு சைக்கிள் வழங்கினார்கள். அதாவது, நாங்கள் சைக்கிளில் செல்லத்தான் அந்தச் சாலைகளை அமைப்பதாக அரசாங்கம் நம்பச் சொல்கிறது? எங்களுக்கா தெரியாது? கனிம வளத்தைச் சுரண்ட வரும் பெருநிறுவனங்களின் கனரக வாகனங்களுக்காக அமைக்கப்படும் சாலை அது.
ஜார்கண்ட் அரசு இதுவரை இரும்புத்தாது எடுக்க 17 சுரங்கத்தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி இருக்கிறது. எங்களுக்குச் செய்வ​தாகச் சொல்லிக்கொண்டு அவர்களுடைய வளர்ச்சிக்​கான பணிகளைத்தான் அரசு செய்கிறது'' என்றார்கள்.
''இங்கு சி.ஆர்.பி.எஃப். வந்த பிறகு, நிலைமை எப்படி இருக்கிறது? அவர்கள் கை ஓங்கி இருப்பதாகச் சொல்கிறார்களே?'' என்றோம்.
''அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். இங்குள்ள சி.ஆர்.பி.எஃப்-காரர்களில் சமீப காலத்தில் தற்கொலை செய்துகொண்டவர்கள் எத்தனை பேர், படையைவிட்டு திடீரென்று காணாமல்போனவர்கள் எத்தனை பேர், விருப்ப ஓய்வில் போனவர்கள் எத்தனை பேர் என்று தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப்பாருங்கள்... அவர்களுடைய நிலை தெரியும். அவர்கள் எங்களுடன் மோதினால், தோற்றுப்போவார்கள். ஆனால், அப்பாவி மக்களுடன் மோதிக்கொண்டு இருக்கிறார்கள்'' என்று அவர்கள் சொன்னபோதே, வெளியே இருந்த மர உச்சி ஒன்றில் இருந்து வித்தியாசமான குரல் ஒலித்தது.
தூரத்தில் கையில் அம்புகளுடன் ஆதிவாசிகள்!
அதிர்ச்சி தொடரும்
உளவு பார்க்கும் சிறப்பு போலீஸ்...
 ஜார்கண்ட் மாநிலத்தில் இயங்கிவரும் 'ஜோகார்' (ஜார்கண்டீஸ் ஆர்கனைசேஷன் ஃபார் ஹியூமன் ரைட்ஸ்) என்ற அமைப்பின் முக்கியப் பிரமுகரான கோபிநாத் கோஷ், ரமேஷ் ஜெர்ரி ஆகியோர் நம்மிடம் பேசினர்...
''கடந்த 30 வருடங்களாக எங்கள் அமைப்பு செயல்பட்டு​வருகிறது. போலீஸார் தவறு செய்தாலும், மாவோயிஸ்ட் தவறு செய்தாலும் நாங்கள் களத்தில் போய் விசாரித்து உண்மை நிலையை வெளி உலகுக்குத் தெரிவிக்கிறோம்.
ஜார்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை, போலீஸ்தான் மாவோயிஸ்ட்களை உருவாக்கியது. இதனால்தான், போலீஸ் - மாவோயிஸ்ட் மோதல் ஒரு புறம் நடக்க... 'இவர் ஆளா? அவர் ஆளா?' என்கிற சந்தேகத்தில் இரு தரப்பினரும் துப்பாக்கியை உயர்த்துவதால் இறந்துபோகும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. வேலையில்லாமல் கஷ்டப்படும் கிராமப்புற இளைஞர்கள் 6,500 பேரை சிறப்பு போலீஸ் என்ற பெயரில் உலவ விட்டிருக்கிறார்கள். இவர்களின் பணி, மாவோயிஸ்ட்களைப் பற்றித் துப்பு கொடுப்பது. மாதம் 3,000 சம்பளம் என்று ஆசை காட்டுகிறார்கள். இந்த இளைஞர்களும் தங்களை நிஜபோலீஸ் போல நினைத்துக்கொண்டு வலம் வருகிறார்கள். செல்போன் தருகிறார்கள். அவ்வப்போது கொஞ்சம் பணம் தருகிறார்கள். இவர்கள் மீது சந்தேகப்படும் மாவோயிஸ்ட்கள் பல சந்தர்ப்பங்களில் சுட்டுக் கொன்று விடுகிறார்கள். துப்பாக்கி மோதலில் போலீஸ் இறந்தால், அவரது குடும்பத்துக்கு 40-50 லட்ச ரூபாய் நஷ்டஈடு, அரசு வேலை என்றெல்லாம் தருகிறார்கள். ஆனால், இந்த சிறப்பு போலீஸ் பணியில் இருக்கும் அப்பாவிக் கிராம இளைஞர்கள் இறந்தால், போலீஸ் கண்டுகொள்வதே இல்லை. 'எங்களுக்கும் அவர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக எந்தத் தொடர்பும் இல்லை' என்று கைவிரித்து விடுகிறார்கள். பண்டாரிய மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 14 போலீஸாரைக் கொன்றுவிட்டுத் ஓடிவிட்டனர். அந்தக் கிராமத்து மக்களையே போலீஸ் வாட்டி வதைத்தது. திருமண விழாவில் சிவப்பு வண்ணச்சேலை கட்டியிருந்த ஒரு பெண்ணை, 'மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவள்தானே’ என்று கேட்டு அடித்துத் துன்புறுத்தினர். இப்போதெல்லாம், கிராமத்து பெண்களில் பலர் சிவப்பு நிற உடை அணிவதையே தவிர்க்கிறார்கள்.  
மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தவர்கள், அதே பாணியில், வெவ்வேறு பெயர்களில் கிராமங்களில் ஆயுதங்களுடன் நடமாடுகிறார்கள். போலீஸுடன் பினாமிகளாகச் செயல்படும் அமைப்பினரும் உண்டு. இவர்கள் மாவோயிஸ்ட்களை எதிர்த்துச் சண்டை போட வேண்டும் என்பது ஒப்பந்தம். சில கார்ப்பரேட் கம்பெனிகள் தங்கள் கம்பெனியின் அறிவிக்கப்படாத கூலிப்படைகளாக ஒருசில அமைப்புகளை இயக்குகிறார்கள். துப்பாக்கி வாங்கித் தருகிறார்கள். ஏதாவது பிரச்னை என்றால், அந்த கம்பெனிகள் சார்பாக இவர்கள் சண்டை போடுகிறார்கள். மாவோயிஸ்ட் பாணியில் இவர்களும் வரி வசூலிக்கிறார்கள். இவர்கள் எங்காவது மாவோயிஸ்ட்களுடன் மோத வேண்டிய சூழ்நிலை வரும்போது, வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன''என்றனர்.திவாசிகளைப் பார்த்ததும் நாம் திடுக்கிட்டோம். ஆனால், அவர்களோ சர்வசாதாரணமாக அருகில் வந்து நம்மை வணங்கினார்கள். 'தோழர்கள்’ நம்மை அறிமுகப்படுத்தினார்கள். ''பயங்கரவாதிகள், அதிநவீன ஆயுதங்களை வைத்திருக்கிறோம் என்றெல்லாம் சொல்கிறார்களே... மக்கள் படையின் பெரும்பான்மை ஆயுதங்கள் இவை தான்'' என்று 'தோழர்கள்’ நமக்குக் காட்டியது ஆதிவாசிகள் வைத்திருந்த வில்லையும் அம்பையும்! 
அவர்கள் தொடர்ந்தனர்.
''தும்கா மாவட்டத்தில் அணை கட்டும் விவகா ரத்தில் ஆதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு பக்கம் அதிநவீனத் துப்பாக்கிகளுடன் ஆயிரக்கணக்கான போலீஸார், எதிர்ப்பக்கம் அவர் களுக்கு இணையான எண்ணிக்கையில் கையில் வில் அம்புடன் ஆதிவாசிகள். இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல். ஆதிவாசிகள் தரப்பில் நாலைந்து பேர் இறந்தனர். ஆனாலும், அம்புகளைக் கண்டு கலங்கிப்போனது போலீஸ் படை'' என்றார்கள்.
நமக்கு, ஹாசாரிபாத் மாவட்ட வனத்துறை அதிகாரி தங்கப்பாண்டியன் சொன்னது ஞாபகத் திற்கு வந்தது. ''இங்குள்ள ஆதிவாசிகள் மிகவும் நல்லவர்கள்.  வேண்டும் என்று யாரையும் தாக்க மாட்டார்கள்’' என்று கூறிய தங்கப்பாண்டியன் ஒரு சம்பவத்தையும் குறிப்பிட்டார்.
''இங்குள்ள பழங்குடி மக்கள் தங்கள் தற்காப்பு ஆயுதமாக வைத்திருப்பது வில்-அம்பு. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று அனைத்துத் தரப்பினரின் கைகளிலும் அம்பு இருக்கும். இப்படித்தான் ஒரு முறை கிராமத்தினர் வில்-அம்பு சகிதம் திரண்டு என் அலுவலகத்துக்கு வந்துவிட்டனர். அவர்களின் அனுமதி பெறா மலேயே, தொழிற்சாலை ஒன்று கிராமத்து நிலத்தை ஆக்கிரமித்ததை எதிர்த்து புகார் கொடுக்க வந்திருந் தார்கள். நான் முதலில் அதிர்ந்துபோனேன். ஆனால், அவர்கள் மிகுந்த மரியாதையோடு மனு அளித்துவிட்டு திரும்பிப் போனார்கள்'' என்றார் தங்கப்பாண்டியன்.
சைபாஸா மாவட்ட கலெக்டர் சீனிவாசனும் கூட இதே வில் அம்பு அனுபவம் பற்றி நம்மிடம்சொல்லியிருந்தார். ஏதாவது பிரச்னை என்றால், அவர்கள் ஏரியாவுக்கு அவர் போகும்போது, ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கையில் வில் அம்புடன்தான் திரண்டு நிற்பார்களாம். முதல் முறை அவர் அப்படிப் போனபோது அவர்களைப் பார்த்து ஆடிப்போய் இருக்கிறார். ஆனால், கலெக்டரின் அணுகுமுறையை பார்த்து இயல்பாகப் பேச ஆரம்பித்து தங்கள் பிரச்னைகளை ஆதங்கத்தோடு சொல்லியிருக்கிறார்கள். எழுத்தாளர் அருந்ததி ராய் சொல்வதுபோல, அரசும் நவீன சமூகமும்தான் அந்த மக்களைப் போரில் இறக்குகின்றன.
அந்த ஆதிவாசிகளில் ஒருவர் நமக்கு மரப் பாத்திரத்தில் தேன் எடுத்து வந்திருந்தார்.  அவர் வைத்திருந்த வில் அம்பை நாம் கையில் வாங்கி தடவிப்பார்த்தோம். காட்டில் வளர்ந்து கிடக்கும் மூங்கிலை வளைத்து வில்லாக மாற்றியிருந்தார்கள். அம்பு நுனியில் இரும்பு பூண் செருகியிருந்தார்கள். அவர்களின் பாரம்பர்ய நடனமான 'சாஹூ' ஆடிக்காட்டினார்கள்.
''வில் அம்பை நாங்கள் தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்த மாட்டோம். எங்களின் கடவுள் இயற்கை. அதைச் சீரழிக்க வரும் எவரும் எங்கள் எதிரிகள்தான்'' என்றார்கள்.
தொடர்ந்து, ''எங்களவர்கள் வில் வித்தையில் படு கில்லாடிகள். எங்கள் மாநிலப் பெண் தீபிகா குமாரிபற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வில் வித்தையில் கெட்டிக்காரி. ஏராளமான பதக்கங்களை வாங்கி குவித்துவிட்டாள். ஒலிம்பிக்ஸ் போக இருக்கிறாள்'' என்றார்கள். இது, நமக்கு வியப்பை ஏற்படுத்தியது.
''ஆதிவாசிகள் என்றால், அப்பாவிகள் என்று நினைக்கிறது அரசாங்கம். ரொம்ப நாளைக்கு எதுவுமே அறியாமலும் ஏமாளிகளாகவும் நாங்கள் இருந்தது உண்மைதான். ஆனால், இப்போது எங்களுக்கு எல்லாம் தெரியும். தீபிகா குமாரி கதையும் தெரியும். எங்கள் கிராமங்களில் வாழும் மாணவ- மாணவியரைத் தேடிப்பிடித்து அழைத்துப்போய் டாடா நிறுவனம் செரைகலாவில் உள்ள தன்னுடைய வில் வித்தைப் பயிற்சி மையத்தில் ஏன் பயிற்சி அளிக்கிறது என்ற பின்னணியும் தெரியும்'' என்கிறார்கள். அவர்கள் சொல்வதை ஆமோதித்து அட்டகாசமாக ஒரு சிரிப்பு சிரித்தனர் மற்ற ஆதிவாசிகள்!
''ஐயா, நாங்கள் வேறு... இவர்கள் வேறு அல்ல. இதை அரசாங்கத்திடம் அழுத்திச் சொல்லுங்கள்'' என்றனர்.
'தோழர்கள்’ தொடர்ந்தனர்.  
''மூலிகை வைத்தியத்தில் கைதேர்ந்தவர்கள் இவர்கள். இங்குள்ள மக்களின் பெரிய எதிரி மலேரியாவை உண்டாக்கும் கொசு. காடுகளை ஒட்டியுள்ள ஊர்களில் வருடத்துக்கு பல நூறு பேர் மலேரியா காய்ச்சலால் இறந்துபோகிறார்கள். சரண்டா வனப்பகுதியில் ஆபரேஷன் மான்சூன் நடந்தபோது, சி.ஆர்.பி.எஃப்-காரர்கள் கும்பல் கும்பலாக மலேரியா காய்ச்சலால் துடித்தார்களாம். அவர்களைக் காப்பாற்ற ஹெலிகாப்டர் உதவியுடன் ஜாம்ஷெட்பூர் மருத்துவமனைக்கு அள்ளிப்போனார்களாம். அப்படியும் சிலரைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால், ஆதிவாசிகள் தங்களுக்கே உரித்தான மூலிகை வைத்தியத்தைப் பயன்படுத்துவதால், யாரும் இறந்துபோவது இல்லை'' என்றார்கள். அது என்ன மூலிகை என்றோம்.  ''வேண்டாம்... பின் அதற்காகவும் பல நிறுவனங்கள் இங்கே வரும்'' என்று சிரித்தார்கள். பெருநிறுவனங்களின் மேலாதிக்கம் அவர்களை எந்த அளவுக்குப் பாதித்து இருக்கிறது என்று புரிந்தது.
சுரங்கத் தொழிற்சாலைகளில் பல ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்கள் மண்ணுக்கு அடியில் தொங்கியபடி வேலை செய்வதையும் பல சமயங்களில் அவர்கள் தவறி விழுந்து இறந்துபோவதைப் பற்றியும் கவலையுடன் சொன்னார்கள்.  
''இந்த விவகாரங்களை நீங்களாவது மத்திய அரசாங்கத்திடம் சொல்லுங்கள் என்பதுதான் நாங்கள் உங்களிடம் வைக்கும் கோரிக்கை'' என்றார்கள். கை கூப்பி விடைபெற்றோம்.
பெட்லா நகருக்கு வந்து சேர்ந்தோம். அங்கு ஒரு பத்திரிகை நண்பரைச் சந்தித்தோம். அவர் சொன்ன ஒவ்வொரு தகவலும் மனதை உறையவைக்கக் கூடியவை. ''இந்த மாநிலத்தில் கடந்த 2001 முதல் 2010 வரையிலான 10 வருடங்களில் மட்டும் 7,563 பெண்கள் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 2,707 பெண்கள் வரதட்சணைக் கொடுமை காரணமாக உயிரை விட்டிருக்கிறார்கள். 3,854 பெண்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். சூனியக்காரிகள் என்ற முத்திரை குத்திக் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை மட்டும் 1,157.
சட்டம் ஒழுங்குக்குத்தான் இந்த நிலை என்று இல்லை. அடிப்படைக் கட்டமைப்பின் நிலையும் இப்படித்தான். இந்த ஹாசாரிபாத் மாவட்டத் திலேயே 92 சதவிகித மக்கள் திறந்தவெளிக் கழிவறையைத்தான் பயன்படுத்துகிறார்கள். 32 சதவிகிதப் பெண்கள் குடிநீருக்காக ஒரு கி.மீ. தூரம் வரை நடந்து போகிறார்கள். இங்குள்ள மக்களுக்கு நோய் ஏற்பட்டால், மருத்துவமனைக்குச் செல்வது சிரமம். காரணம், டாக்டர்கள் பற்றாக்குறை. மாநிலத்தில் மூன்று மருத்துவக் கல்லூரிகள்தான்  இருக்கின்றன. அங்கே உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை 350. வருடத்துக்கு இவ்வளவு மருத்துவர்கள்தான் வெளியே வருகிறார்கள் என்றால், பார்த்துக்கொள்ளுங்கள் (மாநிலத்தின் மக்கள் தொகை சுமார் 3 கோடி). மருத்துவக் கல்லூரிகளின் நிலைதான் இப்படி என்று இல்லை. பொறியியல் கல்லூரிகளின் நிலைமை இதைவிட மோசம். மக்கள் கொந்தளிக்கிறார்கள் என்றால் சும்மாவா கொந்தளிக்கிறார்கள்?'' என்றார் அந்த நண்பர். நியாயம்தானே?
நாம் அங்கு சுற்றிய ஏழு நாட்களில், மின்வெட்டு என்பது அங்கு சர்வசாதாரணம் என்பது தெரிந்தது. சர்ஜூ கிராமத்தில் இரவு தங்கியிருந்தபோது, அங்கு ஓர் இரவு முழுக்கவே மின்சாரம் இல்லை. துணை முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டில் பேசிக்கொண்டு இருந்தபோதும் பல முறை மின்வெட்டு. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்று எந்த வேறுபாடும் இன்றி மின் வெட்டு.
மனித உரிமை ஆர்வலர் சுரேஷ் கூறுகிறார்...
''எங்கள் மாநிலத்தின் 50 சதவிகித கிராமங்களில் மின்சாரம் இல்லை. அதைச் சரிசெய்யும் எண்ணமே அரசுக்கு இல்லை. மின்சாரம் தொடர்பான தொழில்கள் அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன. வீடுகளில் படிக்கும் பிள்ளைகள் படும்பாடு பரிதாபகரமானது. மாவோயிஸ்ட் பிரச்னை இருப்பதால், பகல் நேரங்களில் மட்டும்தான் சாலைகளில் பஸ்களைப் பார்க்க முடியும். நீண்ட தூரப் பயணம் என்றால், ஓர் இடத்தில் இரவு தங்கிவிட்டு, அடுத்த நாள்தான் பயணத்தைத் தொடர முடியும். இந்த மாதிரி வினோதமான சூழல் இந்தியாவில் இருக்கிறது என்று உங்கள் ஊர்க்காரர்களுக்குத் தெரியுமா?'' என்றார்.
ஜார்கண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நாம் பயணித்த சாலைகள் அனைத்துமே மேடு பள்ளமாகத்தான் காட்சி அளித்தன. இன்று வரை இந்த மாநிலத்துக்கு என்று அரசின் அதிகாரப்பூர்வ வெளியூர் பஸ் போக்குவரத்துக் கழகமே இல்லையாம். நகர்ப்புறங்களில் சில பகுதிகளில் மட்டும் தனியார் பஸ்கள் ஒடுகின்றன. சிறு ரக வாகனங்களை தனியார்கள் ஓட்டிவருகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் அவஸ்தையை அனுபவிப்பவர்களுக்குத்தானே தெரியும் வலியும் துயரமும்? மத்திய அரசின் நிதி, நேரடியாக பஞ்சாயத்துக்களுக்கு போய் சேரும் வகையில் சிஸ்டம் இருக்கிறது. ஆனால், இந்த மாநிலத்தைப் பொறுத்தவரை கடந்த பல ஆண்டுகளாக பஞ்சாயத்து தேர்தலே நடக்கவில்லையாம். இப்போதுதான் தேர்தல் நடந்திருக்கிறது. இன்னும் கூட சில பகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இதனால், இந்த மாநிலத்துக்கான மத்திய அரசின் நிதி, பஞ்சாயத்து தேர்தல் முடிந்தபிறகுதான், வந்து சேருமாம். இதனால்தான் கல்வி, சுகாதாரம், சாலை மேம்பாடு.. .இப்படி எந்த ஒரு கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுமே முழுமையாக செயல்படுத்தப்படாமல் கிடக்கிறதாம். சில நேரங்களில் மாநில அரசு தங்கள் நிதியை போட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற முயலும்போது, கான்ட்ராக்டர்கள் வருவதே இல்லையாம். பொதுக்கட்டடங்கள் கட்ட பலமுறை டெண்டர் விடுகிறார்களாம். இதற்குக் காரணமாக மாவோயிஸ்ட்களை அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது. ஆனால், அதிகாரிகள் கமிஷன் கேட்பதால், கான்ட்ராக்டர்கள் வரத்தயங்குவதாக மாவோயிஸ்ட்கள் சொல்கிறார்கள். மொத்தத்தில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடக்கவில்லை.
மறுநாள் ஊர் திரும்ப வேண்டிய சூழல். ஆனால், அன்றைக்கு இரவு தூக்கமே வரவில்லை. இந்த அரசாங்கம் எவ்வளவு பெரிய குற்றத்தைத் தன் மக்களுக்கு எதிராக நடத்திக்கொண்டு இருக்கிறது? மாவோயிஸ்ட்டுகள், பயங்கரவாதிகள், பச்சை வேட்டை, ரத்த வெறி...
மீண்டும் மீண்டும் அந்த மக்கள் படும் துயரக் காட்சிகள் மனதை அலைக்கழித்தன.
அரசாங்கங்கள் எதிர்க்கலாம். ஆனால், வரலாறு எப்போதுமே மக்கள் பக்கம்தான் இருக்கிறது. துயரத்தையும் அடக்குமுறையையும் எதிர்கொள்ளும் மக்களே வரலாற்றின் அடுத்தடுத்த அத்தியாயங்களை எழுதுகிறார்கள். இந்த ஆதிவாசி மக்களும் புதிய வரலாற்றை எழுதுவார்கள் என்று மனம் சொன்னது. வெளியே எட்டிப்பார்த்தோம். விடிந்திருந்தது.
முற்றும்
 மாவோயிஸ்ட்களின் சிவப்பு பிராந்தியம்
பீகாரில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் என்ற அமைப்பும், ஆந்திர மக்கள் யுத்தக் குழுவும் 2004-ல் இணைந்தன. அதன்பிறகு, உருவானதுதான் மாவோயிஸ்ட் இயக்கம். இதன் தலைவராக கணபதி பதவியேற்றார். இவர்களுக்குத் தேர்தல் பாதையில் நம்பிக்கை இல்லை. இந்தியாவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மாவோயிஸ்ட்கள் செயல்படுகின்றனர். இந்திய நிலப்பரப்பில் சுமார் 40% பகுதிகளில் செயல்படுகிறார்கள். அவர்கள் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளை 'சிவப்புப் பிராந்தியம்' என்று அழைக்கிறது அரசு வட்டாரம். மாவோயிஸ்ட் இயக்கத்தில் அரசியல் பிரிவு, ராணுவப் பிரிவு என்று இரண்டு பிரிவுகள் உண்டு. ஆதரவாளர்கள் பல லட்சம் இருந்தாலும், ஆயுதம் ஏந்திக் களத்தில் நிற்கும் மாவோயிஸ்ட்கள் சுமார் 40 ஆயிரம் பேர்தான் என்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் காவல்படைகள் - மாவோயிஸ்ட்கள் இடையேயான மோதல் சம்பவங்கள் நடந்து வந்தாலும், மிக முக்கியமான நிகழ்வு - 2010-ல் நடந்ததாகும். அப்போது சுமார் 1,000 பேர் தாக்கியதில் 75 பாதுகாப்புப் படையினர் இறந்தனர். அரசாங்கம் சொல்லும் கணக்குப்படி கடந்த ஐந்து வருடங்களில், 1,730 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதேநேரம், சுமார் 2,500 காவல் படையினரைக் கொன்றிருப்பதாக மாவோயிட்டுகள் சொல்கிறார்கள்.  இரு தரப்பினருக்கும் இடையே நடந்துவரும் போரில் சுமார் 2,765 ஆதிவாசிகள், கிராம மக்கள் வரை இறந்து போனதாக மனித உரிமை ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.-Junior vikatan

No comments:

Post a Comment