Saturday, September 28, 2013

அயல்நாட்டுப் பழங்கள் ஆரோக்கியமா?





வெளிநாட்டுப் பொருட்களின் மீதான மோகமும், ஆர்வமும் நமக்கு ரொம்பவே அதிகம். டி.வி., லேப்டாப், ஏ.சி. என்று ஃபாரீன் பொருட்களின் மேல் இருந்த நம்பிக்கை இப்போது நாம் சாப்பிடும் பழங்கள், காய்கறிகள் மீதும் திரும்பி இருக்கிறது. 'பார் கோட் ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டு பளபளக்கும் பழங்களை, ஸ்டைலாக டிராலியைத் தள்ளிக்கொண்டு போய் வாங்க, பழக்கபட்டு விட்டோம்.
 வெளிநாடுகளில் இருந்து அதிக அளவு இறக்குமதி செய்யப்படும் பழம் ஆப்பிள். 'வாஷிங்டன் ஆப்பிள்’, 'ராயல் காலா ஆப்பிள்’, 'பியூஜி ஆப்பிள்’ என்று விதவிதமான ஆப்பிள்கள் கடைகளை அலங்கரிக்கின்றன. இந்த ஆப்பிள்களின் 'பளிச்’ தோற்றத்தைப் பார்த்தாலே வாங்கத் தூண்டும்.
ஆப்பிளின் பளபளப்புக்கு என்ன காரணம்? விவசாயியும் இயற்கை ஆர்வலருமான அரச்சலூர் செல்வம் விலாவரியாகப் பேசுகிறார்...
''வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆப்பிள் கெட்டுப்போகாமல் இருக்க 'வேக்ஸ்’ எனப்படும் கோட்டிங், அதாவது நம் வீட்டுக்கு பெயிண்ட் அடிப்பது போல, ஒரு லேயர் அந்த ஆப்பிள் மீது பூசப்படுகிறது. சில நாடுகளில் வேக்ஸ் இடத்தை 'கெமிக்கல் கோட்டிங்’ பிடித்துக் கொள்கிறது! இது எந்த வகையான கெமிக்கல் என்பது ஆப்பிளை வாங்கும் யாருக்கும் சொல்வது இல்லை; வாங்குபவரும் இதுபற்றிக் கேட்பது இல்லை! இப்படி முலாம் பூசப்பட்ட ஆப்பிளை 'கோல்டு ஸ்டோரேஜ்’ (Cold storage) செய்து அனுப்பிவைக்கிறார்கள். இந்த ஆப்பிளை என்னதான் கழுவினாலும் அதன் மீது பூசப்பட்ட 'வேக்ஸ்’ அல்லது 'ரசாயன முலாம்’ போக வாய்ப்புக் குறைவு.
அன்னாசி, மாதுளை, திராட்சை போன்ற பழ வகைகளும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அன்னாசிப் பழத்துக்கு 'வேக்ஸ் கோட்டிங்’ கொடுக்கப்பட்டு இருந்தாலும் அதில் பாதிப்பு இருக்காது. காரணம் அந்தப் பழத்தை தோல் சீவிதான் சாப்பிடுகிறோம். மாதுளையும் அதே போலத்தான். ஆனாலும் இந்தப் பழங்களில் 'கெமிக்கல் முலாம்’ பூசப்பட்டு இருந்தால், அந்த கெமிக்கலின் தாக்கம் பழத்துக்குள் ஊடுருவிப் பாய்ந்து இருக்கவே செய்யும்.
இந்தியாவுடன் ஒப்பிடும்போது மற்ற நாடுகளில் பூச்சிக் கொல்லி மருந்துகளை குறைந்த அளவிலேயே பயன்படுத்துகின்றனர். வெளிநாடுகளில் 'களைக் கொல்லி’ மருந்துகளைத்தான் அதிக அளவில் பயன்படுத்துவார்கள். இதனால் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது. ஆனாலும் வெளியில் பூசப்பட்டு இருக்கும் வேக்ஸ் மற்றும் கெமிக்கல் கோட்டிங் எப்படி இருந்தாலும் உடலுக்குக் கேடானதுதான்!
தற்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள், மாதுளை, அன்னாசி போன்ற பழங்களை அரசு தடைசெய்ய வேண்டும். நம் ஊரில் கிடைக்காத பழங்களாக இருந்தால் வெளிநாட்டில் இருந்து வாங்கலாம். இது எல்லாமே இங்கேயே கிடைக்கும்போது எதற்காக வெளிநாட்டில் இருந்து பழங்களை இறக்குமதி செய்ய வேண்டும்?'' என்று கேட்கிறார்.
உருளைக் கிழங்கு, காலி ஃபிளவர், கேப்சிகம், கேரட், ஃப்ருகோலி போன்ற காய்கறிகளும் வெளிநாடுகளில் இருந்து இங்கே இறக்குமதியாகின்றன. இவை அனைத்தும் வெளிநாடுகளில் பதப்படுத்தி இந்தியாவுக்கு வருகின்றன. இந்தக் காய்கறிகள் இந்தியாவிலும் விளைகின்றனவே!
உணவு ஆலோசகர் ஷைனி சந்திரனிடம் பேசினோம். 'வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பழங்கள் எந்த வெப்பநிலையில் குளிர்விக்கப்படுகிறது? எவ்வளவு நாட்கள் ஸ்டோரேஜ் செய்திருப்பார்கள் போன்ற விவரங்கள் எதுவும் நமக்குத் தெரியாது. பதப்படுத்தப்பட்ட பிறகு குறைந்தது 45 நாட்களுக்குப் பிறகுதான் இந்தப் பழங்கள் மார்கெட்டுக்கு வந்து சேரும். இப்படி வருவதால் அவற்றில் இயல்பாக இருக்கும் சத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது.
பழங்கள் பறிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குள் சாப்பிடுவது நல்லது. அப்போதுதான் அதில் உள்ள சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும். வெளிநாட்டுப் பழங்களின் மீது தடவப்பட்டு இருக்கும் வேக்ஸ் கத்தியை வைத்துச் சுரண்டினால்தான் போகும். அப்படியே சாப்பிடுவது உடல்நலத்துக்கு ஆரோக்கியம் இல்லை. பார்ப்பதற்கு 'பளிச்’சென இருப்பதால், 'வெளிநாட்டுப் பழம் எவ்வளவு ஃபிரஷ்ஷா இருக்கு.,.’ என்ற நினைப்பில் பலர் வாங்குகின்றனர். இந்தப் பழங்களில் பூச்சியோ புழுவோ பார்க்க முடியாது.
நம் ஊர் பழங்களில் பூச்சி, புழு இருப்பது இயல்பு. பறவைகளோ, பூச்சிகளோ கடித்த பழங்கள் என்றால் அதை நம்பி தைரியமாக வாங்கலாம். காலி ஃபிளவரில் புழு இருப்பதைப் பார்த்து முகம் சுளிப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். உண்மையில் அதுதான் பூச்சிக்கொல்லி, ரசாயனம் ஏதும் இல்லாத நல்ல காலி ஃபிளவர்.
நல்ல உணவுப் பொருட்கள் எதுவாக இருந்தாலுமே அது இரண்டு நாட்களில் அழுகிவிடும். அண்மையில் எனக்குத் தெரிந்தவர் ஒருவர் வெளிநாட்டு ஆப்பிளை வாங்கி காரில் வைத்திருந்தார். அதை அவர் 12 நாட்களாக எடுக்க மறந்துவிட்டார். அதன் பிறகு எடுத்துப் பார்த்தபோதும் அந்த ஆப்பிள் கெட்டுப்போகாமல் அப்படியே புத்தம்புதியதாக இருந்தது. அப்படியானால் அந்த ஆப்பிள் கெட்டுப்போகாமல் இருக்க எந்த அளவுக்கு அதில் ரசாயனம் சேர்த்திருக்க வேண்டும்?  நினைத்தாலே பகீரென இருந்தது.
இயற்கையில் பிரஷ்ஷாக நம் ஊரில் எவ்வளவோ பழங்கள் சீசனுக்குத் தகுந்தாற்போல கிடைக்கிறன. அந்தப் பழங்களை வாங்கிப் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது. கொய்யாப் பழம், சீத்தாபழத்தில் இல்லாத சத்துக்களா வெளிநாட்டு பழங்களில் இருக்கின்றன? கிராமத்துப் பக்கம் சந்தைகளிலும், தள்ளு வண்டிகளிலும் பழங்களை பேரம் பேசி வாங்கிய காலமெல்லாம் போய், நாகரிகத்தின் உச்சத்தில் நாம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பழங்களை வாங்குவதை கௌரவமாக நினைக்கிறோம். அது உடல்நலத்துக்கு நல்லதில்லை என்பதை எப்போது உணரப் போகிறோம்?'' - வேதனையோடு சொன்னார் ஷைனி சந்திரன்.
- கே.ராஜாதிருவேங்கடம்
அட்டை, படங்கள்: ஜெ.தான்யராஜூ
மாடல்: வைஷாலி
 நலம் காக்கும் நம்ம ஊர் பழங்கள்
நம் ஊரில் கிடைக்கும் பழங்களையே மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர் சித்த மருத்துவர்கள்.
 மாம்பழம் - உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
 கொய்யா - எலும்பின் தன்மையை உறுதியாக்கும்.
 மாதுளை - வறட்டு இருமலையும், மலச்சிக்கலையும் குணப்படுத்தும்.  
 விளாம்பழம் - பித்தத்தை சரிப்படுத்தும்.

No comments:

Post a Comment