Saturday, September 28, 2013

ஆறாம் திணை

கூவாத, பறக்காத பிராய்லர் கோழிகளை உருவாக்குதல், கார்னெட் தாதுக்களைக் கழுவிக் களவாடிவிட்டு வெற்றுக் கடல் மண்ணை வீசுதல், கொழுப்பில்லா கூடுதல் புரதம் உள்ள பாலை, மரபணு மாற்றிய கால்நடையில் இருந்து கறப்பது என நவீன அறிவியலும் தொழில்நுட்பமும், 'வளர்ச்சி’ என்ற பெயரில் இந்தப் புவியின் மீதும் பிற தாவர உயிரினங்களின் மீதும் நடத்தும் வன்முறை உச்சத்தில் இருக்கும் காலம் இது!
'இந்தப் பழம் ஏன் மேலே போகாமல் கீழே வருகிறது?’ என்ற நியூட்டனின் சிந்தனையிலும் சரி, 'கறந்த பால் முலை புகா; கடைந்த வெண்ணெய் மோர் புகா; விரிந்த பூ, உதிர்ந்த மலர் மரம் புகா’ என எழுதிய சிவவாக்கியரின் சிந்தனையிலும் சரி, அறிவியலே அடித்தளம். நியூட்டன் தொடங்கிய புள்ளிக்கு நியூகோமனும் ஜேம்ஸ் வாட்டும் வரைந்த கோலங்கள்தாம், நீராவி என்ஜினில் இருந்து தொழில் புரட்சி வரையிலான வளர்ச்சி!  
ஆனால், அதே 'வளர்ச்சி’ என்ற பெயரில் தொழில்நுட்பம் கொண்டுவந்ததுதான் 'வெள்ளைச் சர்க்கரை’. உண்மையில் மதுவையும் புகையையும் போல தடைசெய்யப்பட வேண்டிய பொருள் இந்த வெள்ளைச் சர்க்கரை. ஆனால், இன்று சர்க்கரை, உணவு அரசியலில் அரிசிக்கும் கோதுமைக்கும் அடுத்தபடியாக உள்ளது. உலக சர்க்கரை நோயாளிகள் பட்டியலில் இந்தியர்களை முதல் இடத்தில் தள்ளியதற்கும், பெருவாரியான பெண்களின் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற இடுப்பு வலிக்கும், இன்னும் பல வகையான கேன்சர் நோயின் வளர்ச்சிக்கும் வெள்ளைச் சர்க்கரை ஆற்றிய பங்கு அளப்பறியது.
நாம் இனிப்பு சாப்பிடாதவர் அல்ல. நிறையவே சாப்பிட்டிருக்கிறோம். தஞ்சை நாயக்க மன்னர் விஜய ராகவ நாயக்கர் எழுதிய 'இரகுனாதப்யுதய’ நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் இனிப்புப் பட்டியலைப் பாருங்கள். கஜ்ஜாயம், அதிரசம், மோதகம், சாரத்லு, மிகடசட்லு (பாசந்தி), பன்னீர் பாயசம், சீரகப் பாயசம், குளிர் பாயசம், திரட்டுப் பால், சீகரணி, தேங்காய்ப் பால் என லாலா கடையில்கூட கிடைக்காத இனிப்புகள் ஒரு வேளை உணவில் பரிமாறப்பட்டுள்ளது. அந்த இனிப்புகள் அத்தனையும் அப்போது வெல்லத்திலும், பனைவெல்லத்திலும், தேனிலும்தான் செய்யப்பட்டிருந்தன. வெள்ளைச் சர்க்கரையில் அல்ல. எந்த வகையிலும் இந்த இயற்கையின் இனிப்புக்கு மாற்றாக வர இயலாத வெள்ளைச் சர்க்கரை, தொழில்நுட்ப உதவியால் ஒட்டுமொத்தமாகத் திணிக்கப்பட்டுவிட்டது.
தனக்குத் தேவையான சர்க்கரையை தினையில் இருந்தோ, அரிசியில் இருந்தோ, கிழங்கில் இருந்தோ, கீரையில் இருந்தோ நம் உடல் கிரகித்துக்கொள்ளும். தனியே வெள்ளைச் சர்க்கரை தேவையற்றது. ஆனால், இன்றைக்கு ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட நேரடியாகவோ மறைமுகமாகவோ தினசரி 30 முதல் 40 கிராம் வரை வெள்ளைச் சர்க்கரை சாப்பிடுகிறோம். கரும்பை, சர்க்கரை ஆலைக்கு மட்டுமே தர வேண்டும் என சட்டமிட்டு வெல்லத்தை ஒழித்து, வெள்ளைச் சர்க்கரை கோலோச்ச தொழில்நுட்பம் வழிவகுத்துவிட்டது. ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பும், உண்பவர் உடலுக்கு நன்மையும் தரக்கூடிய வெல்லம் ஓரம் கட்டப்பட்டதற்கு, 'வெல்லம் சீக்கிரம் கெட்டுவிடும். நீர் உள்வாங்கும். தரமான உற்பத்தி இல்லை’ என அச்சுபிச்சுக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. உண்மைக் காரணம் வெள்ளை சர்க்கரையின் பின்னணியில் உள்ள உணவு அரசியலும், ஆல்கஹால் அரசியலும்தான். இன்று இட்லிக்குப் பதிலாக சோள அவல் புகுத்தப்படுவதும், வடநாட்டு கோதுமைச் சப்பாத்தியைப் புறந்தள்ளி வெள்ளை பிரெட் வருவதும், கனிமச் செறிவான கல் உப்பை மறக்கடித்து, 'அயோடைஸ்டு சோடியம் குளோரைடு’ எனும் ரசாயனத்தை 'சாப்பாட்டு உப்பு’ எனத் திணிப்பதும் தொழில்நுட்ப அறிவியல் போர்வையில் உள் நுழையும் வணிகமே தவிர, வேறு என்ன?
'வளர்ச்சி’ என்பது, இங்கே பரிணாமமாக இல்லாமல் வன்முறையாகத் திணிக்கப்படுகிறது. காப்புரிமைகளை கடைசிவரை காசாக்க,  மனிதம் முற்றிலும் மறுக்கப்படுகிறது. எதிர்த்துக் கேள்வி கேட்கும் திறன் உருவாகாதபடி, நம் கல்வியை கொத்தடிமை, கோப்படிமை, கொள்கையடிமை என வடிவமைத்துவிட்டார்கள். 'இப்போ என்ன குறைச்சல்? எல்லாரும் சௌகரியமாத்தானே இருக்காங்க’ என அன்று, 'பருத்தி வாங்க, மிளகு வாங்கத்தானே வாராங்க’ என கிழக்கிந்தியக் கம்பெனியை வெள்ளேந்தியாக வரவேற்றது போல, இப்போதும் பேசச் செய்திருக்கிறது.
அன்று ஆட்சிக் கட்டிலில் ஏறிய 'வெள்ளை’ இன்று நம் உணவுத் தட்டுகளை ஆக்கிரமித்துக் கொண்டது. கொஞ்சம் வெள்ளேந்திகள்; நிறைய வெள்ளைய(ர)டிமைகள்!

-Vikatan

No comments:

Post a Comment