Saturday, May 5, 2012

ஒரு வருட ஜெ. ஆட்சி... பாஸா? பெயிலா?



ஓர் ஆண்டு...
கடந்த சட்டசபைத் தேர்தலில் சுனாமி​யாக எழுந்த மக்களின் எதிர்ப்பு அலை, கருணாநிதியை ஆட்சிக் கட்டிலில் இருந்து அப்புறப்​படுத்தியது. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன்... அமோகப் பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டார் ஜெயலலிதா. மே 16-ம் தேதியோடு ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்ய இருக்கிறார், ஜெய​லலிதா. இந்த ஒரு வருடத்தில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்.
ஆனால், மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தாரா ஜெயலலிதா? அவர்களுடைய பிரச்னைகள் தீர்க்கப்பட்டதா? இந்த ஒருவருட ஆட்சியின் மீது மக்களின் மதிப்பீடு என்ன? என்று கேள்விகள் எழவே, கருத்துக் கணிப்பு நடத்த முடிவு எடுத்தோம். ஓர் ஆட்சி தன்னுடைய சிந்தனை​களை ஓரளவாவது அமல்படுத்த இரண்டரை ஆண்டுகள் ஆகும் என்றாலும், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய பாதையில் இவரது ஆட்சி செல்கிறதா என்பதே இந்தக் கருத்துக் கணிப்பின் நோக்கம்.
ஜெயலலிதாவின் ஆட்சி முறை, முதல்வராக அவரது செயல்பாடு, அமைச்சர்களின் பங்கேற்பு, மின்வெட்டு, கட்டண உயர்வுகள், சட்டம் - ஒழுங்கு, இலவசத் திட்டங்கள், சசிகலா விவகாரம் என்று 18 கேள்விகளை சர்வேயில் முன்வைத்தோம். விகடன் படை  களம் இறங்கியது. கிராமம், நகரம், மாநகரம் என  எல்லாம் புகுந்து புறப்பட்டு மக்களைச் சந்தித்து வந்தது ஜூ.வி. டீம். ஏப்ரல் 26 தொடங்கி மே 2-ம் தேதி வரை எடுக்கப்பட்ட இந்த சர்வேயில் 3,659 பேரிடம் வினாக்களைக் கொடுத்து விடைகளை வாங்கினோம். இதில் பெண்கள் எண்ணிக்கை மட்டும் 1,445. 
சர்வே எடுக்கச் சென்ற ஜூ.வி. டீமுக்கு நிறையவே புதுமையான அனுபவங்கள். சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கேட்டது, 'ஏங்க... இந்த கரன்ட் பிரச்னை எப்போங்க தீரும்?’
'எங்களுக்கு வேற எதுவுமே வேணாம். கரன்ட் மட்டும் கொடுத்தாப் போதுங்க...’ என்று, மக்கள் கெஞ்சு​கிறார்கள். மின்சாரத்தை அடுத்து, பால், பஸ் மற்றும் மின்கட்டண உயர்வை மிகவும் கடுமையாகச் சாடினார்கள். காரசாரமான விமர்சனங்களை ஜெயலலிதா ஆட்சி மீது மக்கள் வைத்தார்கள். ஒரு வருடத்துக்கு முன், சிம்மாசனத்தில் தூக்கி வைத்துக் கொண்டாடிய மக்கள், இப்போது ஜெயலலிதா மீது அதிக ஆத்திரத்தில் இருப்பதை உணர முடிந்தது.  'இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், லேப்டாப் எல்லாம் எங்களுக்கு இன்னும் கிடைக்கலை. எப்போ கொடுப்பாங்க?’ என்று ஒரு சிலரே கேட்டார்​கள். மற்ற அனைவருக்கும் மின்சாரம்தான் முதல் முக்கியத் தேவையாக இருக்கிறது.
ஜெயலலிதாவின் ஒரு வருட ஆட்சி என்ற கேள்விக்கு, 'சுமார்’ என்று பதில் சொன்னவர்களே அதிகம். மின்வெட்டுப் பிரச்னையைப் பொறுத்த வரை, 'மோசம்’ என்று சொன்னவர்கள் 47.31 சதவிகிதம் பேர். 'தி.மு.க. ஆட்சியைவிட மோசம்’ என்று சொன்னவர்கள் 37.66 சதவிகிதம். மின்வெட்டுப் பிரச்னைக்கு மட்டும் 84.97 சதவிகிதம் பேர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அந்த அளவுக்கு மக்கள் 'மின்’ வெப்பத்தில் இருக்கிறார்கள். மின்வெட்டுப் பிரச்னையைத் தீர்ப்பதில் அரசின் செயல்பாடு எப்படி? என்கிற கேள்விக்கு 'அரசு உரிய அக்கறை காட்டவில்லை’ என்பதே அதிக மக்களின் கருத்து.
புதிய சட்டசபை, அண்ணா நூலகத்தை ஜெய​லலிதா முடக்கியது தொடர்பான கேள்விகளுக்கு, 'தவறு’ என்று அதிகபட்சமாக 50.23 சதவிகிதம் பேர் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள். பால், பஸ், மின் கட்டண உயர்வு பற்றிய கேள்விக்கு 'படிப்படியாக உயர்த்தி இருக்கலாம்’ என்று கருத்து சொன்னவர்கள்தான் அதிகம்.
ஜெயலலிதா ஆட்சிக்கு சாதகமாக ஒரே விஷயம்... நில அபகரிப்புப் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்தான். தி.மு.க பிரமுகர்கள் மீது தொடுக்கப்பட்ட அபகரிப்புப் புகார்களையும், அதிரடி நடவடிக்கைகளையும் 'நியாயமானது’ என்று வரவேற்கிறது தமிழகம். ஜெயலலிதா கொண்டுவந்த இலவசங்கள் ஏனோ பெரிய வரவேற்பைப் பெறவில்லை. மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப் போன்ற இலவசத் திட்டங்கள் தொடர்பான கேள்விக்கு, 'மக்கள் வரிப் பணம்தான் வீண் ஆகிறது’ என்று 63.41 சதவிகிதம் பேர் கருத்துச் சொல்லி இருக்கிறார்கள்.
இப்படி சர்வே முடிவுகள் நிறையவே ஆச்சர்யங்​களையும் அதிர்ச்சிகளையும் உண்டாக்கி இருக்​கிறது.
(ஜெயலிதாவின் செயல்பாடுகள், சட்டமன்ற நடவடிக்கைகள், சசிகலாவோடு ஜெயலலிதாவுக்கு இருந்த உரசல், அ.தி.மு.க. ஆட்சியின் டாப் 3 பிரச்னை​கள், ஜெயலலிதாவுக்கு மக்கள் போட்ட மார்க் போன்ற சர்வே முடிவுகள் அடுத்த இதழில்...)
ஜெயலலிதா ஆட்சியைப் பற்றி பொதுமக்கள் சொன்ன கருத்துகளில் சில இங்கே...
சூர்யகலா, ஆரணி: ''ஒரு பெண்ணை முதல்வர் ஆக்கினால் எங்களைப் போன்ற சாதாரண மக்களின் குறை​களைத் தீர்ப்பாங்கன்னு​தான் ஓட்டுப் போட்டோம். ஆனா, அந்தம்மா ஒரேடியா கரன்ட் கட், பால் விலை ஏற்றம், பஸ் கட்டண உயர்வுன்னு எல்லாத்தையும் ஏத்திக்கிட்டே போறாங்க. நினைக்கவே வேதனையா இருக்குங்க.''
செந்தில்குமார், சேலம்: ''நிர்வாகச் சீர்திருத்தத்துக்காக நிறைய முயற்சிகள் எடுத்திருக்காங்க. அது  பாராட்டுக்​குரிய விஷயம். ஆனா, மக்களை நேரடியாகப் பாதிக்கும் பால், கரன்ட், பஸ் கட்டணங்களை ஒரேய​டியாக உயர்த்தினது, மன்னிக்க முடியாத கொடுமைங்க!''
சீனிவாசன், வேலூர்: ''பாலில் இருந்து எல்லா விலைவாசியும் அநியாயத்துக்கு ஏறிப்போச்சு தம்பி. நாங்க ரொம்பக் கஷ்டப்​படுறோம். உண்மையைச் சொல்லணும்னா, ஏன்டா ரெட்டை இலைக்கு ஓட்டு போட்டோம்னு வருத்தமா இருக்கு. எல்லாம் எங்க தலையெழுத்து!''
வேல்குமார், காரைக்கால்: ''மாற்றம் வேண்டும்னு ஒட்டுமொத்த மக்களும் ஓட்டுப் போட்டதற்கு, இவ்வளவு கடுமையான ஏமாற்றத்​தைத் தந்திருக்க வேண்டாம். மக்களுக்கு எது தேவை... எது தேவை இல்லை? எது நல்லது.. எது பாதிப்பு? என்று யோசித்து திட்டங்கள் தீட்டி இருக்க வேண்டும். நரேந்திர மோடி மாதிரி வர வேண்டும் என்று ஆசைப்படலாம். எப்படி ஆவது என்று திட்ட​மிட வேண்டும். இப்படிப் போட்டு மக்களைக் கஷ்டப்​படுத்தக் கூடாது.''
நந்தகுமார், கும்பகோணம்: ''தனிப்பட்ட விருப்பு, வெறுப்புல இவங்க கவனம் செலுத்துறதுதான் அதிகமா இருக்குது. தேர்தல் அறிக்கையில் நிறையத் தொலைநோக்குத் திட்டங்கள் அறிவிச்​சாங்க. அதெல்லாம் என்ன ஆச்சுன்னே தெரியலை''
லெட்சுமணன், தூத்துக்குடி: ''கடந்த ஆட்சியில் நடந்த ஊழல், கட்டப்பஞ்சாயத்து, நிலஅபகரிப்பு போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் ஜெயலலிதாவின் ஆட்சியில் இல்லை என்பது ஆறுதல். சசிகலாவை மீண்டும் வீட்டுக்குள் சேர்த்துக்கிட்டதும், ஜெயலலிதா மீது இருந்த நம்பிக்கை சுத்தமாப் போயிடுச்சு.''
சாந்தி, மதுரை: 'நடு ராத்திரியில கரன்ட் கட் ஆகுதுங்க. தூக்கமே இல்லை. குழந்தைகளை வச்சுக்கிட்டு ரொம்பவும் கஷ்டமா இருக்கு. இதை எல்லாம் நினைக்கும்போது, தி.மு.க. ஆட்சி எவ்வளவோ பரவாயில்லைன்னு தோணுது. எதிர்க் ​கட்சியா விஜயகாந்த் என்ன பண்ணிட்டு இருக்காருன்னே தெரியலை...''
முருகவேல், ஆண்டிபட்டி: ''கடந்த தி.மு.க ஆட்சியை அகற்ற என்னென்ன காரணங்கள் இருந்தனவோ, அந்தக் குறைகளை மட்டும் உடனடியாக ஜெயலலிதா சரிசெய்திருந்தாலே நல்ல ஆட்சி என்று பெயர் எடுத்திருக்கலாம். அது எதையும் ஜெயலலிதா செய்யவில்லை. இலவசங்கள் கொடுத்துவிட்டாலே மக்கள் அமைதியாகி விடுவார்கள் என்று அவர் தப்புக் கணக்கு போட்டு​விட்டார்.''
ரஞ்சித்குமார், திருச்சி: ''மின்சாரமே இல்லாமல் மிக்ஸி, கிரைண்டர், ஃபேனை வெச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு சொல்​லுங்க. இது எதுவும் இல்லாமல்கூட இருந்துடுவேங்க.. ஆனா கரன்ட்டை மட்டுமாவது கொடுக்கச் சொல்லுங்க. மத்த விஷயத்​தைப்பத்தி அப்புறம் பேசிக்கலாம்.''
கார்த்திக்,ஆற்காடு: ''ஒரு வருஷத்துல அ.தி.மு.க ஆட்சி ரொம்பப் பாடாய்ப்படுத்தி விட்டது. நிம்மதியா இருக்க முடியலை. குடிநீர்ப் பிரச்னையை தீர்க்கவே ஆளைக் காணோம். அது எப்ப​டிங்க சசிகலா விஷயத்துல ஜெயலலிதா அவ்வளவு சூப்பரா நாடகம் போடுறாங்க...''
காமராஜ், தர்மபுரி: ''இடைத்தேர்தலில் காட்டும் ஆர்வத்தை மக்கள் பிரச்னையிலும் ஜெயலலிதா அரசு காட்டி இருந்தால், தமிழகம் சுபிட்சமா மாறியிருக்கும். 'கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா, அங்கே ரெண்டு கொடுமை வந்து ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம்’னு எங்க ஊருப் பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க. அப்படித்தான் இருக்கு இந்தம்மாவோட ஆட்சி.''
சதீஷ்குமார், சென்னை: ''தேர்தல் அறிக்கையில் சொன்ன விஷயங்களை ஓரளவுக்கு நிறைவேற்றி இருக்கிறார்கள். சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியதும், ஜெயலலிதா மீது எல்லோருக்குமே நம்பிக்கை வந்தது. ஆனால், மீண்டும் அவரை தன்னோடு சேர்த்துக்கொண்டதும், அவர் மீதான நம்பிக்கை போய்விட்டது.''
வின்சென்ட் செல்வா, சென்னை: ''நில அபகரிப்பில் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்கத்தக்கது. பஸ் கட்டண உயர்வைத் தவிர்த்து இருக்கலாம். சாதாரண மக்களைத்தான் அந்த விஷயம் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இதை ஏன் ஜெயலலிதா உணராமல் போனார்?''
- ஜூ.வி. டீம்

No comments:

Post a Comment