Friday, October 7, 2016

மிஸ்டர் கழுகு : ஹெல்த் என்னதான் ஆச்சு? - அப்போலோ காட்சிகள்..

- Junior vikan article.. thanks to vikatan

ம் முன் வந்தமர்ந்த கழுகார் மீது ஆஸ்பத்திரி வாசனை. ‘‘இரண்டு நாட்களாக தூக்கமே இல்லை என்றவருக்கு பகோடாவையும் லெமன் டீயையும் நீட்டினோம்.

``இப்போது எப்படி இருக்கிறார்?’’ என்றோம்.

லெமன் டீயை உறிஞ்சியபடி பேச ஆரம்பித்தார், கழுகார். ‘‘கடந்த வாரத்தில் நடந்த பல சம்பவங்கள், அப்போலோ மருத்துவமனைக்குள் நடப்பது, அதையொட்டி மீண்டும் ஆதிக்கத்துக்கு வந்த மன்னார்குடி குடும்பம், அ.தி.மு.க-வில் முற்றிலுமாக ஓரம்கட்டி வைக்கப்பட்டுள்ள மூத்த அமைச்சர்கள், சசிகலாவின் கண் அசைவில் செயல்படும் அதிகாரிகள், நீதிமன்றத்தின் வாயை அடைப்பதற்காக எய்ம்ஸ் டாக்டர்களை வரவழைத்தது, இவற்றை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் அளவு அதிகமானது என்று புரிந்துகொள்ள முடியும்.’’

‘‘ஓ! இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா?’’
‘‘ஆம். முதலமைச்சர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2 வாரங்கள் ஓடிவிட்டன. ஆரம்பத்தில், முதலமைச்​சருக்குக் காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைவால் ஏற்பட்ட உடல்சோர்வு என்றுதான் மருத்துவமனை நிர்வாகம் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால்,  மருத்துவமனை நிர்வாகமே இறங்கிவந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்றுப் பிரச்னை என்று சொல்லும் அளவுக்கு அதன் அறிக்கைகள் மாறி உள்ளன. அதையும் தாண்டி, முதலமைச்சருக்குத் தீவிரமான உடல்நலப் பிரச்னைகள் இருக்கின்றன என்பதை, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல் வருகை உணர்த்தியது. அக்டோபர் 2-ம் தேதி லண்டன் சென்ற அவர், ‘முதலமைச்சரின் உடல்நலத்தில் சில குறிப்பிட்ட முன்னேற்றங்கள் இருந்தால் தனக்கு தகவல் தாருங்கள்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்!”

‘‘தகவல் தந்தார்களா?”

“அக்டோபர் 4-ம் தேதி  முதல்வர் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், அன்று மாலையே மீண்டும் அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் குறைந்துவிட்டதாம். அதேநிலைதான் இப்போதுவரை நீடிக்கிறது. இப்போது எய்ம்ஸ் மருத்துவர்கள் மூன்று பேர் வந்து இறங்கிவிட்டார்கள். டாக்டர் ரிச்சர்ட் பியெல் அனுப்பிய இன்னொரு டாக்டரும்  லண்டனில் இருந்து வந்துள்ளாராம்.”
‘‘டாக்டர்கள் ஏன் இப்படி படை எடுக்கிறார்கள்?”

‘‘விஷயம் அவ்வளவு சீரியஸ். அதனால்தான். கடந்த 5-ம் தேதி, சென்னை அப்போலோ

மருத்து​வமனைக்கு எய்ம்ஸ் டாக்டர்கள் வந்தனர். அவர்களில் டாக்டர் கில்நானி, நுரையீரல் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர். மற்றொரு டாக்டர் அஞ்சன் டிரிக்கா, மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர். இவர்களுடன் இதயநோய் சிறப்பு மருத்துவர் நிதிஷ்நாயக்கும் வந்துள்ளார். அவர்கள் முதலமைச்சரின் உடல்​நிலையைப் பரிசோதித்து அவருக்கான சிகிச்சைகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். சிறுநீரகம், நுரையீரல், இதயம் ஆகிய மூன்று உறுப்புகளிலும் முதல்வருக்கு சிறப்புக் கவனம் தேவைப்படுகிறதாம். இந்த மூன்று உறுப்புகளின் செயல்பாடுகள் கூடியும் குறைந்தும் வருகின்றனவாம். அதனால்தான் மருத்துவர்களாலேயே ஒரு முடிவுக்கு வர முடியவில்லையாம். ‘எக்மோ’ முறைப்படி நுரையீரல் இயக்கப்பட்டு வருகிறது. அதில் முன்னேற்றம் இருக்கும்போது மட்டும் உடல் முன்னேற்றம் இருக்கிறதாம். இதனால்தான் இந்தியாவின் பிரபல மருத்துவ நிபுணர்களை அழைக்கிறார்கள். ஆலோசனைகள் கேட்கிறார்கள்.’’

‘‘அப்படியா?”
‘‘லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல் சிகிச்சையைத்தாண்டி, தற்போது எய்ம்ஸ் டாக்டர்களை வரவழைக்க வேண்டிய நோக்கம் முதலமைச்சரின் உடல்நிலை மட்டுமல்ல, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்தும் மிக முக்கியமான காரணம். சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று டிராஃபிக் ராமசாமி, கடந்த 3-ம் தேதி நீதிபதிகளிடம் முறையிட்டார். அப்போது, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் சில கருத்துக்களைத் தெரிவித்தனர். அதில், ‘முதலமைச்சரின் உடல்நிலை பற்றி வெளிப்படையாகப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை, அரசாங்கத்துக்கு இருக்கிறது’ என்று குறிப்பிட்டனர். இதையடுத்து, அரசாங்கத்தின் மேல்மட்டத்தில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. டிராஃபிக் ராமசாமியின் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் டிஸ்மிஸ் ஆனாலும்கூட, இந்த விவகாரத்தை யாராவது உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துப்போக வாய்ப்புள்ளது. அப்படிப் போகும்போது, உச்ச நீதிமன்றம், திடீரென, ஒரு சிறப்பு மருத்துவர் குழுவைப்போட்டு முதலமைச்சர் உடல்நிலையைப் பரிசோதித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கலாம். அப்படி நடந்தால், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களைத்தான் நாடவேண்டும். இதில் இருந்து தப்புவதற்காகவே, அப்போலோ மருத்துவமனையும், அரசாங்கமும் முன்கூட்டியே எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களை அழைத்துவிட்டது என்றும் சொல்லப்படுகிறது.

‘‘சசிகலா தரப்பினர் ரியாக்‌ஷன் எப்படி இருக்கிறது?”

‘‘சசிகலா மருத்துவமனையில் இருக்கிறார்.
அ.தி.மு.க என்ற மிகப் பெரிய கட்சியும், அதன் அரசியல் நடவடிக்கைகளும் தற்போது சசிகலா குடும்பத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. யாரெல்லாம் வேண்டாம் என்று ஜெயலலிதா துரத்திவிட்டாரோ, அவர்கள் எல்லாம் தற்போது அப்போலோ மருத்துவமனைக்குள் அடைக்கலமாகிவிட்டனர். திவாகரன்,

டி.டி.வி.தினகரன், மகாதேவன், டாக்டர் வெங்கடேஷ் என்று எல்லோரும் இப்்போது போயஸ் கார்டன் வேதா நிலையத்துக்கும் அப்போலோ மருத்துவமனைக்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர். கொங்கு மண்டலத்தில் இன்னும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ராவணன்கூட அப்போலோ மருத்துவமனைக்கு வந்துவிட்டுச் சென்றார்.

எம். நடராஜன் வீடும் பரபரப்பாக இருக்கிறது. பின்னால் இருந்து அனைத்து வேலைகளையும் நடராஜன் செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறார். எனவே, இப்போது அவர்களின் கட்டுப்பாட்டில்தான் முழுமையாக போயஸ் கார்டன், அப்போலோ மருத்துவமனை மற்றும் அ.தி.மு.க இருக்கிறது. இப்படி அ.தி.மு.க-விலும், ஆட்சி நிர்வாகத்திலும் சசிகலாவின் ஆதிக்கம் வலுப்பெற்று வருகிறது!”

‘‘சீனியர்ஸ் ரியாக்‌ஷன்?”
‘‘முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அ.தி.மு.க-வின் மூத்த அமைச்சர்கள் அனைவரும் சத்தமில்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு எந்த வேலையும் இல்லை. அதற்கு உதாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று மத்திய அரசு சொன்னதற்கு, நம்முடைய அமைச்சர்கள் தரப்பில் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை.  மத்திய நீர்வளத்துறை செயலாளர் சஷி சேகருக்கு, தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ்தான் கடிதம் எழுதி உள்ளார். ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது’ என்று பிரதமர் சொல்வதும், காவிரி விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சரும் அமைச்சர்களும் நடந்துகொள்ளும் விதமும் அந்தப் பிரச்னை முழுமையாக அரசியல்மயமாகிவிட்டது என்பதற்கு உதாரணம். இந்த நேரத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று மத்திய அரசு சொல்லி உள்ளதற்கு, எதிர்வினை ஆற்ற வேண்டிய பொறுப்பு மாநில முதலமைச்சர் அல்லது பொறுப்பு முதலமைச்சர் அல்லது மூத்த அமைச்சருக்குத்தான் உண்டு. ஆனால், இங்கு மூத்த அமைச்சர்கள் யாரும் அந்த விவகாரத்தில் வாய் திறக்கவில்லை. அவர்களை சசிகலா குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை என்பதுதான் காரணம். பிரதமரின் கருத்துக்கு எதிர்வினையை ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளர் சொல்வது பொருத்தமானது அல்ல என்பது சசிகலாவுக்குத் தெரியுமோ, தெரியாதோ ஆனால், அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கும் சாந்த ஷீலா நாயருக்கும் தெரியும். அவர்கள் சொல்லி இருக்க வேண்டும்!’’

‘‘ம்ம்ம்... சிறுதாவூர் பங்களாவில் கொஞ்சம் சலசலப்பு தெரிகிறதாமே?’’
‘‘முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவிலும், சிறப்பு மருத்துவ வசதிகளுடன் சில  ஏற்பாடுகள் நடக்கின்றன. அப்போலோ மருத்துவமனையில் இருந்து ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆகும்போது, ஒருவேளை சிறுதாவூரில் ஓய்வெடுக்கலாம் என்பதற்காக இந்த ஏற்பாடுகளாம்’’ எனச் சொல்லிவிட்டு எழுந்த கழுகார்,
‘‘கடந்த செப்டம்பர் 30-ம் தேதி, சென்னையில் அப்போலோ மருத்துவமனை குழுமங்களின் தலைவர் பிரதாப் ரெட்டியின் வீட்டில் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதாப் ரெட்டியின் மகள் பிரீத்தா ரெட்டி - விஜயகுமார் ரெட்டி தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். அவருடைய திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது. வி.வி.ஐ.பி-க்கள் சுமார் 70 பேர் மட்டும் கலந்துகொண்ட நிகழ்ச்சி அது. அதில், டெல்லியில் இருந்து வந்திருந்த இரண்டு ஊடக அதிபர்களும் கலந்துகொண்டனர். ‘முதலமைச்சரின் உடல்நிலை மிக மோசமான நிலையில்தான் இருக்கிறது. செயற்கை சுவாசத்தில் இருந்து இன்னும் அவரை விடுவிக்க முடியவில்லை. ஆனால், அரசாங்கம் அதை மறைத்து, முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார் என்று அறிக்கை கொடுக்கிறது. அதையும் மருத்துவமனை லெட்டர்பேடில் அவர்களே எழுதிவிடுகின்றனர்’ என்ற புலம்பல் கேட்டதாம். இது அந்த மருத்துவமனை மீதான நம்பிக்கையை கொஞ்சம் குறைத்துள்ளதாம். அதனைச் சரி செய்வதற்காகத்தான் நாளிதழ்களில் அப்போலோ நிர்வாகம் விளம்பரம்  கொடுத்துள்ளது” என்ற கழுகார், வாட்ஸ்அப்பில் வந்த அப்போலோ அறிக்கையைப் படித்துவிட்டு படபடப்புடன் நிமிர்ந்தார். “முதல்வருக்கு சர்க்கரை நோய், மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றுக்கான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. செயற்கை சுவாசமும், இதர சிகிச்சைகளும் தொடர்கின்றன. சில நாட்களில் வீடு திரும்புவார் என இதுவரை சொல்லிவந்த அப்போலோ, இப்போது முதன்முறையாக, மருத்துவமனையில் நீண்டகாலம் இருந்து முதல்வர் சிகிச்சை பெறவேண்டும் எனச் சொல்லியிருக்கிறது” என்றபடி பறந்தார் கழுகார்.
படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன், ஆ.முத்துகுமார், பா.காளிமுத்து, பா.சரவணகுமார், மீ.நிவேதன், தே.அசோக்குமார்,  உ.கிரண்குமார்.அட்டை ஓவியம்: பிரேம் டாவின்ஸி

No comments:

Post a Comment