Monday, August 22, 2016

சிறுநீரகக் கற்கள் தீர்வு என்ன?

- vikatan article

சிறுநீரகக் கற்கள் தீர்வு என்ன?

உடலின்மிக முக்கியமான  துப்புரவுத் தொழிற்சாலை, சிறுநீரகம். ரத்தத்தில் இருக்கும் தேவையற்ற கழிவுகளைப் பிரித்து வெளியேற்றும் மகத்தான பணியைச் செய்து, உடலின் ஆரோக்கியம் காக்கும் அற்புத சேவகர்கள் இவை. சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவது ஒரு பெரிய பிரச்னை. நமது ஆரோக்கியத்தை அசைத்துப்பார்த்து, இயல்பு வாழ்வைப் பாதிக்கும் இந்தப் பிரச்னை, சராசரியாக 10-ல் ஒருவருக்கு ஏற்படுகிறது. ஆண்களுக்கு இந்தப் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம். உடலில், அளவுக்கு அதிகமாக இருக்கும் கால்சியம், ஆக்ஸலேட், யூரிக் அமிலம் போன்றவை சிறுநீர் வழியாக வெளியேற வேண்டியது அவசியம். இவை, ஏதாவது ஒரு காரணத்தால் வெளியேறாமல், சிறுநீரகத்திலோ சிறுநீரகப் பாதையிலோ தொடர்ந்து தேங்கும்போது, அந்தப் படிமங்கள் கற்களாக உருவாகின்றன. பொதுவாக, 20 - 50 வயதுகளில் இருப்பவர்களுக்குத்தான் சிறுநீரகக் கற்கள் பிரச்னை ஏற்படுகிறது. மேலும்,  சிறுநீரகக் கற்கள் இந்தக் குறிப்பிட்ட காரணத்தால் மட்டும்தான் வருகின்றன என்று சொல்ல முடியாது.

சிறுநீரகக் கற்கள் திடீரென ஓரிரு நாட்களில் வந்துவிடுபவை கிடையாது. சராசரியாக, ஒரு வருட காலத்தில் சிறுநீரகத்தில் சிறுகச்சிறுக சேர்ந்துதான் கற்களாக உருவாகின்றன. சிறுநீரகக் கற்களில் பல வகை உள்ளன. கால்சிய கற்கள், யூரிக் அமிலக் கற்கள், சிஸ்டின் கற்கள், ஸ்ட்ரூவைட் கற்கள் பொதுவாகக் காணப்படுகின்றன. கற்களின் வகையைப் பொறுத்து, வலி மற்றும் சிகிச்சை சில நேரங்களில் மாறக்கூடும். 

அறிகுறிகள்

ஆரம்பக்கட்டத்தில் பெரும்பாலும் வலி இருக்காது. கற்கள் கொஞ்சம் பெரிதான பிறகுதான் வலி ஆரம்பிக்கும். கீழ் முதுகுப்பகுதியில் இருந்து வலி ஆரம்பிக்கும். நோயாளிகள் வயிற்றின் பக்கவாட்டில் கையைவைத்து வலிக்கிறது எனத் துடிப்பார்கள். இது ஒரு முக்கியமான அறிகுறி. சிறுநீரகக் கற்களால் ஏற்படும் வலி மிகவும் கொடுமையானது. சிறுநீரகத்தில் கற்கள் சேரும்போது, அந்த இடத்தில் இருக்கும் தசைகள் தானாகவே கற்களை வெளியேற்ற முயற்சிக்கும். இந்த நடைமுறையின் காரணமாகத்தான் கடுமையான வலி ஏற்படுகிறது. சிறுநீரகக் கற்கள் வந்தவர்களுக்கு அடிக்கடி வாந்தி ஏற்படும். சிலர், எந்த நேரமும் வாந்தி வரும் உணர்வுடனேயே இருப்பார்கள். சிறுநீர் கழிக்கும் இடத்தில் எரிச்சல் ஏற்படும். ஒரு சிலர் சிறுநீர் கழிக்கவே மிகவும் சிரமப்படுவார்கள். வழக்கத்துக்கு மாறாக அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். ஒவ்வொருவருக்கும் இந்த அறிகுறிகள் வேறுபடும். எனவே, இதில் ஏதாவது ஓர் அறிகுறி தொடர்ந்து இருக்கிறது என்றாலே விழிப்புஉணர்வுடன் இருப்பது நல்லது.

கற்கள் அளவு 

சிறுநீரகக் கற்களை மூன்று வகையாகப் பிரிக்க முடியும். 5 மி.மீக்கு கீழ் இருப்பவை சிறிய கற்கள். 5-8 மி.மீ இருப்பவை நடுத்தர அளவிலான கற்கள். 1 செ.மீ-க்கு மேல் இருப்பவை பெரிய கற்கள்.

சிகிச்சைகள்

கற்களின் அளவு, அவை எங்கே இருக்கின்றன என்பதைப் பொறுத்து, சிகிச்சை முடிவு செய்யப்படும். மிகச்சிறிய கற்களாக இருந்தால், மாத்திரை மருந்துகள் எடுத்துக்கொள்வதுடன், தண்ணீரை அதிக அளவில் அருந்ததுவதன் மூலமுமே கற்களை அகற்றலாம். ஒருவேளை, வெளியே வரவில்லை எனில், அறுவைசிகிச்சை செய்ய வேண்டியது இருக்கும். 

சிறு மற்றும் நடுத்தரக் கற்கள் 

5 - 8 மி.மீ கற்கள் இருந்தால், சிறுநீர்ப் பாதையில் ஏதேனும் தொற்று இருக்கிறதா எனப் பரிசோதிக்கப்படும். தொற்று எதுவும் இல்லை எனில், சிறுநீர்ப் பாதையைக் கொஞ்சம் விரிவடையவைப்பதற்கான மருந்துகள் கொடுக்கப்படும். பின்னர், நோயாளி நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த முறையில் 5 மி.மீ-க்கும் குறைவான கற்கள், 80 சதவிகிதம் வெளியே வந்துவிடும்.  5 - 8 மி.மீ அளவிலான கற்கள் எனில், 70 சதவிகிதம் வரை வெளியே வர வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு சிறிய கற்களாக இருந்தாலும், இந்த சிகிச்சை முறையில் வெளியே வராது. 
இவர்களுக்கு, அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. பிறந்ததில் இருந்தே ஒரே சிறுநீரகத்துடன் வாழ்பவர்கள், விமானஓட்டிகள் போன்றோருக்கு, சிறிய கற்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

லித்தோட்ரிப்சி

1.5 செ.மீ-க்குக் கீழ் உள்ள கற்களுக்கு லித்தோட்ரிப்சி சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது. இந்த முறையில் காலையில் மருத்துவமனைக்கு வந்தால், மாலை வீட்டுக்குச் சென்றுவிடலாம். வலி தெரியாமல் இருக்க, மயக்க மருந்துகள் கொடுக்கப்பட்ட பிறகு, பிரத்யேகக் கருவி வழியாக, சிறுநீரகக் கற்கள் மீது அதிர்ச்சி அலைகள் (Shock waves) செலுத்தப்படும். இதில், சிறுநீரகக் கல், சிறுசிறு கற்களாக உடையும். இவை, சிறுநீர்ப் பாதை வழியாக வெளியே வரவேண்டும் என்பதால், அந்த இடத்தில் தற்காலிகமாக ஒரு ஸ்டென்ட் பொறுத்தப்படும். ஒருவேளை கற்கள் உடைந்து, ஏதாவது ஒரு பெரிய துண்டு சிறுநீரகத்தில் தங்கிவிட்டாலோ அல்லது சிறுநீரகப் பாதையில் சிக்கிவிட்டாலோ, 10 நாட்கள் கழித்து இதே சிகிச்சையை மீண்டும் செய்துகொள்ள வேண்டியது இருக்கும்.

பெர்குயுட்டேனியஸ் நெஃப்ரோலித்தோடோமி (Percutaneous nephrolithotomy)

சிறு துளை மூலம் செய்யப்படும் அறுவைசிகிச்சை இது. இந்த முறையில், முதுகுப் பக்கம் ஒரு செ.மீ அளவுக்கு சிறு துளை போட்டு, அதன் வழியாக ஒரு குழாயை விட்டு, சிறுநீரகத்தில் கற்கள் எங்கெங்கே இருக்கின்றன என்பதை, டெலஸ்கோப் வழியாகப் பார்ப்பார்கள். பின்னர், கருவிகளின் துணைகொண்டு கற்களை மருத்துவர்கள் உடைத்து வெளியே எடுப்பார்கள். இந்த முறையில், குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது மருத்துவமனையில் தங்க வேண்டியது இருக்கும். 

ரிஜிட் யூரிடெரோஸ்கோப்பி (Rigid Ureteroscopy) 

சிலருக்கு, சிறுநீரகப் பாதையில் கற்கள் தங்கிவிடும். பிறப்புறுப்பு வழியாக ஒரு குழாயை செலுத்தி,  டெலஸ்கோப் வழியாகக் கட்டிகளின் இருப்பிடம் அறிந்து, லேசர் மூலம் கற்கள்  உடைக்கப்பட்டு எடுக்கப்படும். இந்த முறையில், சிறுநீர்ப்பை மற்றும் அதில் இருந்து சிறுநீர் வெளியேறும் குழாயில் உள்ள கற்களை மட்டுமே எடுக்க முடியும்.

ஃபிளெக்சிபிள் யூரிடெரோஸ்கோப்பி (Flexible Ureteroscopy)

ரிஜிட் யூரிடெரோஸ்கோப்பி போலதான். ஆனால், இந்தக் கருவியானது சிறுநீரகம் வரை செல்லக்கூடியது என்பதுதான் வித்தியாசம். இந்த சிகிச்சையில், பிறப்புறுப்பு வழியாகக் கருவியைச் செலுத்தி, லேசர் பயன்படுத்தி கல் உடைக்கப்பட்டு வெளியே எடுக்கப்படும். 

மீண்டும் வரலாம் - எச்சரிக்கை!

சிகிச்சை மூலம் கல்லை அகற்றினாலும், மீண்டும் எப்போது வேண்டுமானாலும் உருவாவ தற்கான வாய்ப்பு உள்ளது. ஒரு முறை சிறுநீரகக் கற்கள் வந்து அகற்றிய பின்னர், 50 சதவிகிதம் பேருக்கு, அடுத்த ஐந்து ஆண்டு களுக்குள் மீண்டும் சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன. 70 சதவிகிதம் பேருக்கு 10 வருடங்களுக்குள் சிறுநீரகக் கற்கள் மீண்டும் உருவாகின்றன. 

தண்ணீர் குடியுங்கள்!

நமது உடலில் அளவுக்கு அதிகமான, தேவையற்ற தாதுஉப்புகள் தேங்கும்போது, போதுமான தண்ணீர் அருந்துவதன் மூலம் சிறுநீர் வழியாக அதை வெளியேற்றலாம். கூடுமானவரை வீடுகளில் கொதிக்கவைத்து,  வடிகட்டி, ஆறவைத்த தண்ணீரைத் தேவையான அளவு பருகுங்கள். சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள், மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில்தான் தண்ணீர் அருந்த வேண்டும்.

- பு.விவேக் ஆனந்த்

சிறுநீரகக் கற்கள் உருவாக 8 காரணங்கள் 

1. போதுமான அளவு தண்ணீர் அருந்தாமை. குறிப்பாக, கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் நீர் இழப்பு.

2. உடலில் கால்சியம் அளவு அதிகமாக இருப்பது. உணவு, மாத்திரைகள் மூலம் அதிகப்படியான கால்சியம் எடுத்துக்கொள்வது.  

3. உடலில் கால்சியம் அளவுகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் பாராதைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாமல் இருப்பது. 

4. உடல் உழைப்பே இல்லாமல் இருப்பது. குறிப்பாக, படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகள்.

5. கர்ப்பக் காலங்களில் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு அதிகமான தாதுஉப்புகள், உடலில் தேங்குதல்.

6. உடல்பருமனாக இருப்பவர்களுக்கு, உடலில் சீரம் மற்றும் ஆக்ஸலேட் அளவுகள் அதிகமாக இருப்பது.

7. சிறுநீரகப் பாதையில் ஏற்படும் அடைப்புகள். 

8. வயதான ஆண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி வீங்குதல்.

எப்படிக் கண்டறிவது?

எளிய ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம். இதில், வழக்கத்தைவிடவும் மிக அதிக அளவில் வெள்ளை அணுக்கள் இருக்கும். கால்சியம், யூரிக் அமிலம் உள்ளிட்டவை எவ்வளவு இருக்கின்றன என்பதைப் பொறுத்து, என்ன கற்கள் என்பதை அறியலாம். 

சிறுநீர்ப் பரிசோதனையில் கழிவு எவ்வளவு வெளிவருகின்றன என்பதைக் கண்டறியலாம்.

அல்ட்ராசவுண்ட் பரிசோதனையின் மூலம் 90 சதவிகிதம் வரை கற்களைக் கண்டறிய முடியும். 

சிறுநீரகத்திலும் சிறுநீரகப் பாதையிலும் கற்கள் வரும் என்பதால், சிலருக்கு அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில் கற்கள் தெரியாது. இவர்களுக்கு, சி.டி ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை தேவைப்படும்.

சிறுநீரகக் கற்கள் தடுக்க... தவிர்க்க! 

எலுமிச்சையில், பொட்டாசியம் சிட்ரேட் நிறைந்துள்ளது. எலுமிச்சையை, தொடர்ந்து ஜூஸ் போன்ற ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால், சிறுநீரகக் கற்கள் உருவாகும் வாய்ப்புக் குறையும்.

ரெட் மீட் எனப்படும் ஆடு, மாட்டிறைச்சி சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். 

சீஸ், பனீர் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து அதிக அளவு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

கேரட், பாகற்காய் போன்றவற்றைச் சாப்பிடுவது, சிறுநீரகக் கற்களைத் தடுக்கும்.

உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

தினமும் சராசரியாக இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும்.

Friday, August 12, 2016

கேன்சர் திகிலில் ஈரோடு!

Vikatan article

கேன்சர் திகிலில் ஈரோடு!

காவிரி நீர்... கழிவுநீர்... குடிநீர்!அதிர்ச்சி

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஈரோட்டில் அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் ஈரோட்டில் மக்களுக்காக விநியோகிக்கப்படும் குடிநீர் என்பதுதான் அதிர்ச்சி. காவிரியில் இருந்துதான் ஈரோடு நகருக்குக் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.  அந்த நீரில் கேன்சரை உருவாக்கும் நச்சுப்பொருட்கள் இருப்பது ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது அதிர்ச்சியின் உச்சம். 

‘ஈரோடை’ என்ற அமைப்புதான் குடிநீரை ஆய்வு செய்து இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் தலைவரான டாக்டர் சுதாகரிடம் பேசினோம். “ஈரோட்டில் சமீபகாலமாகக் கொசு மூலம் பரவும் டெங்கு, மலேரியா ஆகிய நோய்கள் அதிகமாகக் காணப்பட்டது. நோய் தாக்கியவர்களிடம் விசாரித்தபோது, குறிப்பிட்ட இரண்டு ஓடைகளின் கரைப்பகுதியில் வசிப்பவர்களாக இருந்தார்கள். ஈரோட்டில் உள்ள மொத்தக் கழிவுகளையும் இரவு நேரங்களில் ஓடைகளில்தான் கொட்டுகிறார்கள். இதனால் ஓடையில் கொசுக்கள் உருவாகின்றன.  கொசுக்களின் மூலம் தொற்றுநோய் பரவியிருக்கிறது. எனவே, அந்த ஓடைகளைத் தூர்வாரிச் சுத்தப் படுத்தினோம். அதுமட்டுமின்றி, சமீபகாலமாக கேன்சரால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை அறிந்தோம். அதன்பிறகு ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் விநியோகம் செய்யும் குடிநீரில் வெவ்வேறு இடங்களில் இருந்து 10 மாதிரிகள் சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பினோம். ஆய்வின்படி புற்றுநோயை ஏற்படுத்தும் hexavalent chromium என்ற நச்சுப்பொருள் குடிநீரில் இருப்பது தெரியவந்திருக்கிறது. எங்களின் ஆய்வுகள் குறித்து ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் புகாராகக் கொடுத்தோம். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். அதிகாரிகளை அழைத்து ஆலோசனையும் நடத்தி இருக்கிறார். நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது” என்றார். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஈரோடை அமைப்பைச் சார்ந்த பாரதி, “ஈரோட்டில் இரண்டு கேன்சர் மருத்துவமனைகள் இருந்தன. 2009-10-ம் நிதி ஆண்டில் மட்டும் இந்த மருத்துவ மனைகளில் ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களில் ஏழாயிரம் பேர் கேன்சர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டு அரசுக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது ஒரு கேன்சர் மருத்துவமனை மட்டுமே இருக்கிறது. அதிலும் மாதத்துக்கு 150-க்கும் மேற்பட்டோர் புதிய நோயாளிகளாகச் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக ஈரோட்டில் உள்ள மக்களுக்குப் புற்றுநோய் மற்றும் தொற்றுநோய்கள் அதிகரிப்பதற்கு இந்த நகரின் சுற்றுச்சூழல் சீர்கேடுதான் காரணம். இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்னும் சில வருடங்களில் ஈரோட்டில் இத்தனைபேர் வசித்தார்கள் என்கிற விவரம் மட்டுமே மிஞ்சும்” என்றார்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சரான கருப்பண்ணனிடம் பேசினோம். “சரி என்னன்னு பார்ப்போம். கழிவுநீர் ஆற்றில் கலக்கிறது நம்ம டிபார்ட் மென்ட் இல்லை. அது சம்பந்தமா நீங்க உள்ளாட்சித் துறையிலதான் கேக்கணும். இல்லைனா, மாநகராட்சியிலதான் கேக்கணும். நான் அடுத்த வாரம் வரும்போது நேர்ல போய்ப் பார்க்கிறேன்” எனப் பொறுப்பான பதிலைத் தந்தார்.

நல்ல அரசு, நல்ல அமைச்சர், பாவம் மக்கள்!

- வீ.மாணிக்கவாசகம், படங்கள்: ரமேஷ் கந்தசாமி

எப்படி அசுத்தமாகிறது காவிரி?

‘‘காவிரி ஆற்றில் குடிநீர் எடுக்கும் இடத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்துகிடக்கின்றன. அருகிலேயே சுடுகாடும் இருக்கிறது. அந்த இடத்தில்தான் ஈரோட்டின் மொத்தக் கழிவுகளும் காவிரியில் கலக்கின்றன. ஈரோட்டில் உள்ள தோல் தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நீர்நிலைகளில் விடப்படுகிறது. இதனாலும் ஈரோட்டில் உள்ள நீர்நிலைகள், நிலத்தடி நீர் பாழ்படுகின்றன. ஈரோட்டில் மட்டுமின்றி காவிரியில் இருந்து குடிநீர் எடுக்கும் அத்தனை ஊர்களிலும் ஆய்வு செய்ய வேண்டும்’’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Friday, August 5, 2016

தோற்றவர்களின் கதை - 4

Vikatan document..

தோற்றவர்களின் கதை - 4

சுசி திருஞானம்தொடர்

தோல்விகளே மிகச் சிறந்த பரிசுகள்!

வால்ட் டிஸ்னியின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.  மிக்கி மவுஸ், டொனால்ட் டக் போன்ற அற்புதமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கிய மகத்தான கலைஞர். டிஸ்னி லேன்ட் கேளிக்கைப் பூங்காக்களின் ஸ்தாபகர். வால்ட் டிஸ்னி கம்பெனியின் நிறுவனர்.

இந்தச் சாதனைகளின் பின் உள்ள கொடுமையான சோதனைகள் பற்றிப் பெரும் பாலானவர்களுக்குத் தெரியாது. 

தோல்விகளின் வலி மிகுந்த தனது வாழ்க்கைப் பயணம் வெற்றிகரமானதாகத் தோற்றமளிப்பது பற்றி வால்ட் டிஸ்னி இப்படிக் குறிப்பிட்டார். 

“நான் தொட்ட காரியமெல்லாம் வெற்றி பெறுவதாகவும், நான் எடுக்கும் முடிவுகள் அபூர் வமாகவே தோற்பதாகவும் சிலர் நினைக்கிறார்கள். உண்மையில் நான் எடுத்தத் தவறான முடிவுகளால் பல முறை படுதோல்வி அடைந்திருக்கிறேன். எனினும், நான் அடுத்தடுத்து முயற்சி செய்து கொண்டே  இருப்பதால், தவறுகள் வெளியில் தெரியாதபடி அதிலிருந்து வேகமாக மீண்டு வந்திருக்கிறேன். என்னைப்போல நீங்களும் அடுத்தடுத்த ஏராளமான முயற்சிகளை எடுக்கக் கற்றுக்கொண்டால் உங்களுக்கும் சராசரி வெற்றி அதிகமாகவே இருக்கும்.” 

அமெரிக்காவில் சிக்காகோ நகரில் 1901-ம் ஆண்டு பிறந்தார் வால்ட் டிஸ்னி. வறுமையான பின்னணியால் அவரது தந்தை எலியாஸ் சார்லஸ் டிஸ்னி, தனது கோபத்தை எல்லாம் குழந்தைகள் மீது காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தந்தையின் துன்புறுத்தல் பொறுக்காமல் வால்ட் டிஸ்னியின் அண்ணன்மார்கள் மூவர் ஊரைவிட்டே ஓடிவிட்டனர். சிரமங்களைச் சகித்துக்கொண்டு பள்ளி சென்றுவந்தார் வால்ட் டிஸ்னி. 

டிஸ்னி குடும்பம் கான்சாஸ் நகருக்கு இடம்பெயர்ந்தது. வால்ட் டிஸ்னியின் தந்தை 1911-ம் ஆண்டில் செய்தித்தாள் விநியோக ஏஜென்சி எடுத்தார். அதில், தனது 10 வயதிலேயே பேப்பர் விநியோகிக்கும் கடுமையான வேலையில் வால்ட் டிஸ்னி ஈடுபட்டார். இதன்மூலம் வால்ட் டிஸ்னிக்கு கிடைத்த சொற்ப வருமானத்தையும் அவரது அப்பா பறித்துச் சென்றுவிடுவார். இருந்தாலும், தனது வருமானத்தில் ஒருபகுதியை மறைத்துவைத்து சேமித்தார்.   

1917-ல் டிஸ்னி குடும்பம் மீண்டும் சிக்காகோவுக்கு இடம்பெயர்ந்தது. மெக்கின்லி பள்ளியில் சேர்ந்த வால்ட் டிஸ்னி, சிக்காகோ நுண்கலை அகாடமியில் இரவுநேரப் படிப்பில் சேர்ந்தார். பிற்காலத்தில் அவரது சாதனைப் பயணத்துக்கான படைப்பாற்றல் பயிற்சி அங்கே கிடைத்தது. 

1918-ல், முதல் உலகப்போரின்போது ராணுவ வீரராகச் சேர்ந்து போரிட விரும்பிய வால்ட் டிஸ்னியால் அதில் சேர முடியவில்லை. எனினும், செஞ்சிலுவைச் சங்கத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராகச் சேர்க்கப்பட்டு, பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே அவரது ஆம்புலன்ஸ் மிகவும் பிரபலமாகியது. காரணம், அதன் வெளிப்புறத்தில் அற்புதமான கார்ட்டூன் சித்திரத்தை வரைந்துவைத்திருந்தார் வால்ட் டிஸ்னி.

செஞ்சிலுவைச் சங்கப் பணி முடிந்து ஊருக்குத் திரும்பிய வால்ட் டிஸ்னி, சிபாரிசுகளைப் பிடித்து கன்சாஸ் பத்திரிகை ஒன்றில் கார்ட்டூன் உதவியாளர் பணியில் சேர்ந்துவிட்டார். ஆனால், அவரது மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அவருக்கு அரசியல் சமூக கோபம் போதிய அளவில் இல்லை என்றும், அதனால் பத்திரிகை கார்ட்டூனிஸ்ட் வேலைக்கு அவர் ஒத்துவரமாட்டார் என்றும் விமர்சிக்கப்பட்டு, வேலையில் இருந்து சில மாதங்களில் வெளியேற்றப் பட்டார் வால்ட் டிஸ்னி. 

பின்னர், பேஸ்மன் ரூபின் ஆர்ட் ஸ்டுடியோவுக்கான எடுபிடி வேலைகள் செய்யும் பணி கிடைத்தது. அங்கேயும் கிறிஸ்துமஸ் சீசன் வியாபாரம் முடிந்தவுடன் துரத்திவிட்டர்கள்.
  
அந்த ஸ்டுடியோவில் வேலைபார்த்த ஐவர்க்ஸ் என்ற கார்ட்டூனிஸ்ட் வால்ட் டிஸ்னியின் நண்பரானார். இருவரும் சேர்ந்து ஐவர்க்ஸ் - டிஸ்னி வரைகலை நிறுவனத்தைத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் ஒருசில வாடிக்கையாளர்கள் கிடைத்தபோதும் போதிய வருவாய் ஈட்டமுடியவில்லை.

சுயதொழில் முயற்சியை அப்படியே கைவிட்டுவிட்டு, கான்சாஸ் சிட்டி சினிமா விளம்பர நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தனர். அந்த நிறுவனம் கட்-அவுட் முறை அனிமேஷன் என்ற பழைய தொழில்நுட்பத்தில் விளம்பரப் படங்களைத் தயாரித்து வந்தது. ‘‘செல்லுலாய்டு அனிமேஷன் என்ற புதிய தொழில்நுட்பத்தில் விளம்பரப் படங்களைத் தயாரிப்பது சிறந்தது’’ என்று வால்ட் டிஸ்னி எடுத்துச் சொன்னார். அந்த விளம்பர நிறுவனம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அங்கிருந்தும் வெளியேறினார் வால்ட் டிஸ்னி. 
 
வீட்டிலேயே செல்லுலாய்டு அனிமேஷன் தொழில்நுட்பம் குறித்து பயிற்சிசெய்த அவர், ஹர்மன் என்ற நண்பருடன் இணைந்து சிறிய அனிமேஷன் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். ஈசாப் குட்டிக் கதைகள் பாணியில் “Newman’s Laugh-O-Grams” என்ற அனிமேஷன் தொடரை வால்ட் டிஸ்னி உருவாக்கினார். 

இந்தத் தொடருக்குக் கிடைத்த வரவேற்பால் உற்சாகமான வால்ட் டிஸ்னி, 1921-ம் ஆண்டில் Laugh-O-Gram ஸ்டுடியோவைத் தொடங்கினார். பிரபலமான அலைஸ் இன் வொண்டெர்லேண்ட் கதையை அனிமேஷன் படமாகத் தயாரித்தார். 12 நிமிட அனிமேஷன் படத்தைத் தயாரித்து முடிப்பதற்குள் பெரும் நிதிநெருக்கடிகளைச் சந்தித்த அந்த ஸ்டுடியோ நிறுவனம், 1923-ம் ஆண்டில் திவாலானது. பெரும் அவமானத்துடன் அந்த ஸ்டுடியோ முயற்சியைக் கைவிட நேர்ந்தது.

வேறு வழியின்றி லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்குக் குடிபெயர்ந்தார் வால்ட் டிஸ்னி. தான் தயாரித்த அலைஸ் இன் வொண்டெர்லேண்ட் அனிமேஷன் படத்தை விற்பனை செய்திட அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இறுதியில் நியூயார்க் பட விநியோகஸ்தர் மார்கரெட் வின்க்லெர் என்பவர் வால்ட் டிஸ்னியின் அனிமேஷன் படங்களை விநியோகிக்க முன்வந்தார். 

1923-ம் ஆண்டு அக்டோபரில், வால்ட் டிஸ்னியும் அவரது அண்ணன் ராய் டிஸ்னியும் இணைந்து வால்ட் டிஸ்னி கம்பெனியை ஹாலிவுட்டில் தொடங்கினார்கள். இதனை பழைய நண்பர்களுடன் ஒரு வலிமையான அனிமேஷன் பட நிறுவனமாக வளர்க்கத் தொடங்கினார் வால்ட் டிஸ்னி.

அலைஸ் இன் வொண்டெர்லேண்ட் அனிமேஷன் தொடருக்கான பணிகள் 1927 வரை தொடர்ந்தன. அதில் சலிப்படைந்த வால்ட் டிஸ்னி, தனது நண்பர் ஐவர்க்ஸுடன் இணைந்து Oswald the Lucky Rabbit என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கினார். இந்தத் தொடரினால் அதிக லாபம் பெற்ற பட விநியோக நிறுவனமான மின்ட்ஸ், உரிய பங்கினை டிஸ்னிக்குத் தர மறுத்தது. Oswald கதாபாத்திர உரிமை தன்னிடமே இருப்பதாக மிரட்டியது. டிஸ்னி நிறுவன ஊழியர்களை வெளியேறச் செய்து, தானே தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதில், அவர்களைப் பணிக்கு அமர்த்தி டிஸ்னிக்கு நெருக்கடி கொடுத்தது.

நெருக்கடிகளைச் சந்தித்துப் பழகிப்போன வால்ட் டிஸ்னி, விநியோக நிறுவனத்தின் மிரட்டல்களுக்குப் பணிய மறுத்துவிட்டார். வால்ட் டிஸ்னியின் நெருங்கிய நண்பரான ஐவர்க்ஸ் தவிர, பல மூத்த கலைஞர்கள் டிஸ்னியில் இருந்து வெளியேறிவிட்டனர். 

தனது நண்பர் ஐவர்க்ஸுடன் இணைந்து ‘மிக்கி மவுஸ்’ என்ற அட்டகாசமான கதாபாத்திரத்தை 1928-ம் ஆண்டு உருவாக்கினார் வால்ட் டிஸ்னி. முன்னர் திவாலாகிப்போன Laugh-O-Gram ஸ்டுடியோவில், தான் இரவுபகலாக உழைத்தபோது தன்னோடு விளையாடிய ஒரு செல்லமான எலியை மனதில்கொண்டே இந்தக் கதாபாத்திரத்தை வால்ட் டிஸ்னி உருவாக்கினார். 
  
மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தின் முதல் அனிமேஷன் படம் முடிவுற்றபோதும் உரிய விநியோகஸ்தர் கிடைக்கவில்லை. ஒருவழியாக, பவர்ஸ் சினபோன் என்ற விநியோக நிறுவனத்துடன் ஒப்பந்தம்போட்டு மிக்கி மவுஸ் படம் வெளியானது. படம் வெற்றிபெற்று, விநியோக நிறுவனம் லாபம் குவித்தது. லாபத்தில் உரிய பங்குத் தொகையை வழங்குமாறு டிஸ்னி நிறுவனம் கேட்டபோது, அதற்கு மறுப்புத் தெரிவித்த விநியோக நிறுவனம், வால்ட் டிஸ்னியின் நெருங்கிய நண்பர் ஐவர்க்ஸுக்கு ஆசைகாட்டி அவரை டிஸ்னி நிறுவனத்திலிருந்து வெளியேறச் செய்து, அவரோடு திருட்டுத்தனமாக ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. 

இப்படி அடுத்தடுத்த ஏமாற்றங்களைச் சந்தித்த வால்ட் டிஸ்னிக்கு நரம்புத் தளர்வு ஏற்பட்டது. நீண்ட விடுமுறை எடுத்துக்கொண்டு, கியூபா, பனாமா நாடுகளுக்குச் சென்றுவந்து தனது மனதைத் தேற்றிக்கொண்டார் வால்ட் டிஸ்னி. 

புதுத் தெம்புடன் வந்த வால்ட் டிஸ்னி, கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் விநியோக ஒப்பந்தம் செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து மிக்கி மவுஸ் படங்கள் உலக அளவில் பிரபலமாகின. விருதுகள் தேடிவந்தன. அது, அனிமேஷன் படங்களின் பொற்காலமாக மாறியது. வால்ட் டிஸ்னிக்குப் பல வெற்றிகளைத் தந்தது.  

1939-ம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் டிஸ்னி படங்களுக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. செலவுகள் மிக அதிகமாகிவிட்டதால், டிஸ்னி நிறுவனம் கடனில் தத்தளித்தது. கடனைச் சமாளிக்க டிஸ்னி நிறுவனம் பொதுப் பங்குகளை வெளியிட்டது. இருப்பினும் நிதிச் சிக்கல்கள் தீரவில்லை. வேறு வழியின்றி தொழிலாளர்களின் ஊதியத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை டிஸ்னி நிறுவனம் மேற்கொண்டபோது அதற்குப் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. டிஸ்னி நிறுவனத்துக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன.   

1944-ம் ஆண்டில் அமெரிக்க வங்கியில் டிஸ்னி நிறுவனத்தின் கடன் தொகை 40 லட்சம் டாலராக இருந்தது. பெரும் உழைப்புடன் உருவாக்கப்பட்ட அனிமேஷன் படங்கள் சில, எதிர்பாராதத் தோல்வியைத் தழுவின. தோல்வி மேல் தோல்விகள். கடன் கொடுத்தவர்கள் துரத்திவந்து நெருக்கடி கொடுத்தார்கள். 

கலங்கவில்லை  வால்ட் டிஸ்னி.   பின்வாங்குவதற்குப் பதிலாக விரிவாக்கம் பற்றிச் சிந்தித்தார். பொதுமக்கள் விடுமுறைகளைக் குதூகலமாகச் செலவிடுவதற்கான டிஸ்னி லேன்ட் கேளிக்கைப் பூங்காவை பிரமாண்டமாக உருவாக்கத் திட்டமிட்டார். இதற்கு நிதி வழங்க  வங்கிகள் மறுத்துவிட்டன. இந்தநிலையில், அப்போது தொலைக்காட்சியில் பிரபலமாகிவந்த டிஸ்னி லேன்ட் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியைத் தொடங்கி, அதன்மூலமாக பெரும் நிதி திரட்டினார். 

கேளிக்கைப் பூங்காவை முதலில் ஆதரிக்காத மக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக ஈர்க்கப்பட்டு தேடிவரத் தொடங்கினர். கூட்டம் குவிந்தது. இதுவரை சுமார் 70 கோடி மக்கள் அந்தப் பூங்காவைப் பார்வையிட்டுள்ளனர். உலகின் 14 இடங்களில் கிளைகள் விரிந்தன. தோல்விகளைப் படிக்கட்டுகளாக மாற்றி முன்னேறுவதில் வல்லவரான வால்ட் டிஸ்னி 1966-ம் ஆண்டில், அவரது 65-வது வயதில் புற்றுநோயால் மரணமடைந்தார். எனினும், அவர் உருவாக்கிய டிஸ்னி நிறுவனம் ஆலமரமாய் தழைத்தோங்கியபடி இருக்கிறது. அதன் ஆண்டு வருமானம் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் என்பதே வால்ட் டிஸ்னி விதைத்த நம்பிக்கை விதைகளின் வலிமையைப் பறைசாற்றுகிறது. 

மாபெரும் கனவுத் திட்டங்களை நனவாக்கிய நம்பிக்கை  நாயகன் வால்ட் டிஸ்னி  இளைஞர்களுக்குக் கூறும் அனுபவப் பாடம் இதுதான்: 

‘‘தோல்விகளே மிகச் சிறந்த பரிசுகள். நீங்கள் தோல்வி அடையும்போது அதன் அருமை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். உங்களைக் கீழே வீழ்த்தும் தோல்விதான், இந்த உலகம் உங்களுக்குத் தரும் மிகச் சிறந்த பரிசு என்பதை பின்னர் நீங்கள் உணர்வீர்கள்.’’

(இன்னும் வெல்வோம்)