Friday, April 8, 2016

வெயிலோடு விளையாடு! சம்மர் ஸ்பெஷல் டிப்ஸ்


- vikatan article

வெயிலோடு விளையாடு!

சம்மர் ஸ்பெஷல் டிப்ஸ்

கோடையின் கொடுமையில் இருந்து தப்பிக்க, ஃபிரிட்ஜுக்குள் தலையை விட்டு குளிர்காற்று வாங்கும் சுட்டிகள், மானாவாரியாக ஐஸ் வாட்டரில் தொண்டையை நனைக்கும் அப்பாக்கள், அடுப்படியில் புடவைத்தலைப்பை கைக்குட்டையாக்கி வியர்வையைத் துடைத்துக்கொண்டு சமையல் செய்யும் அம்மாக்கள் என, ஏப்ரல், மே மாதங்களில் இதுதான் அன்றாடக் காட்சி.

பெய்யெனப் பெய்து மழை ஒரு வழி செய்து போன பின், வெயில் வெளுத்து வாங்க ஆரம்பித்து இருக்கிறது. ‘மார்ச் இறுதியிலேயே இந்த நிலை என்றால், அக்னிநட்சத்திரத்தில் எப்படி இருக்குமோ?’ எனக் கோடையை நினைத்துக் கலங்கி நிற்கிறார்கள் மக்கள். 

‘வெயில் பாதிப்பு இதுவரை இல்லை என்றாலும், ஏப்ரல் இறுதி, மே மாதங்களில் உச்சம் பெறும்’ என எச்சரித்து உள்ளது வானிலை ஆய்வு மையம். வீட்டிலும் அலுவலகத்திலும் மின் விசிறி, ஏ.சி எனத் தப்பித்துக்கொண்டாலும் வெளியே செல்லும் இடைப்பட்ட நேரம் நரகம். அதிலும் நகரத்தின் போக்குவரத்து நெரிசலில், சிக்னல் சிக்னலாக ஆமை வேகத்தில்  ஊர்ந்து செல்லும் நேரம், எமலோகத்து எண்ணெய் சட்டி எஃபெக்ட்.

மறுபுறம், கொளுத்தும் கத்திரி வெயிலால் பரவும் விதவிதமான தொற்றுநோய்கள், உடலில் தண்ணீர் பற்றாக்குறையால் வறண்டுபோகும் தொண்டை, எச்சில் உலரும் நாக்கு, கசகச அக்குள் வியர்வை, எரிச்சல், அரிப்பு ஏற்படுத்தும் வியர்க்குரு, எந்த வேலையையும் செய்ய முடியாத அலுப்பு,  தலைவலி, படபடப்பு... என வெயிலால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை யாரும் தப்புவது இல்லை. கோடையின் பாதிப்பில் இருந்து தப்பிக்க, என்ன செய்ய வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிந்துகொண்டால், கோடையும் கொண்டாட்ட காலமாக மாறிவிடும்.

பொதுவாக ஏற்படும் சருமப் பாதிப்புகள் 

வெயில் காலத்தில் நேரடியாகப் பாதிக்கப்படுவது சருமம்தான். சூரியனின் புற ஊதாக் கதிர்வீச்சு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால், முகம், கை, கால், முதுகில் சிவப்பான தடிப்புகள், புள்ளிகள் ஏற்பட்டு, எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படும். 

இரண்டாவது முக்கியப் பாதிப்பு, வியர்க்குரு.சருமத் துவாரங்களில் ஏற்படும் அடைப்பால், வியர்வை வெளியேற முடியாமல்போவதால் ஏற்படுவதுதான் வியர்க்குரு. இதனால், தோல் தடிப்பு ஏற்படும். இதற்கு முக்கியக் காரணம், வெயில் காலத்தில் காற்றுப்புக முடியாத இறுக்கமான ஆடைகள் அணிவது. 

வியர்க்குருவைக் கவனிக்காமல் விடும்போது, கிருமிகள் தாக்கத்தால் வேனல் கட்டிகளாக மாறக்கூடும். 

வெயில் காலங்களில் பொதுவாகத் தாக்கும் நோய்கள் சின்னம்மை மற்றும் `ஹெர்பீஸ்’ எனப்படும் அக்கி. 

வெயிலுக்கும் அம்மைக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றாலும், கோடை காலத்தில்தான் அம்மைநோய்க் கிருமிகள் அதிகம் பரவுகின்றன. 

இடைவிடாத காய்ச்சல், தொண்டைவலி, உடல்வலி, உடல் முழுதும் ஏற்படும் சிவப்பு நீர்க் கொப்பளங்கள் அம்மையின் பிரதான அறிகுறிகள். 

இவற்றுள், ஏதேனும் ஓர் அறிகுறி தென்பட்டாலும் ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் பரிசோதித்துக்கொள்வது நல்லது. 

அம்மைநோய்க்குச் சரியான தடுப்பு மருத்துகள் எடுத்துக்கொள்ளாவிட்டால், அம்மைநோய்க் கிருமிகள் முதுகுத்தண்டுவடம் வழியாக உடலில் பரவித் தங்கிவிடும். 

எப்போது எல்லாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறதோ,  அப்போது இந்த அம்மைக் கிருமி உடல் செல்களைத் தாக்கும். இதனால், அக்கி உருவாகும்.

புற ஊதாக் கதிர்கள் 

வெப்ப மண்டல நாடுகளில், கோடை காலத்தில் புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் உடல் பாதிப்பு அதிகம்.  

அல்ட்ரா வயலெட் ஏ கதிர்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் இருக்கும். இவை, உடலுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. 

சருமத்தின் மேல் பகுதியான எபிடெர்மிஸின் மேல் மட்டுமே இதன் கதிர்கள் படும். இதில், வைட்டமின் டி மிகவும் குறைவு. 

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அல்ட்ரா வயலெட் பி கதிர்கள் இருக்கும். இது, மிகுந்த வீரியம் உடையது. 

சன் ஸ்ட்ரோக் முதல் சருமப் புற்றுநோய் வரை எல்லா பாதிப்புகளும் இதனால் ஏற்படலாம். இதன் கதிர்கள், சருமத்தின் மேல் பகுதியான எபிடெர்மிஸைத் துளைத்து, அடிப்பகுதியான டெர்மிஸ் வரை ஊடுருவிச் செல்லக்கூடியதாகும். 

இதில் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி அதிகம் உள்ளது. பொதுவாக, இந்தியர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு அதிகம் இருக்கக் காரணம், சருமத்தில் அதிக அளவு உள்ள மெலனின். இது, அல்ட்ரா வயலெட் பி கதிர்வீச்சின் பாதிப்புகளைத் தடுத்தாலும், அதனால் ஏற்படும் நன்மைகளையும் சேர்த்தே தடுக்கிறது.

வெள்ளையான தோல் உடையவர்களுக்கு மெலனின் அளவு மிகக் குறைவாக இருக்கும். அதனால், அவர்களுக்கு வைட்டமின் டி எளிதில் கிடைத்துவிடும். ஆனால், புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளும் அவர்களுக்கு அதிகம். 

சன் ஸ்கிரீன் பயன்படுத்தலாமா?

வெயிலில் இருந்து தப்பிக்க, பல சன் ஸ்கிரீன் கிரீம்கள் உள்ளன. அவற்றில், ரசாயனம் கலந்தது எது, கலக்காதது எது, ஆல்கஹால், அமோனியா இல்லாதது எது, சுத்தமான ஹெர்பல் பொருட்கள்தான் வாங்க வேண்டுமா? எனப் பலருக்கும் பல குழப்பங்கள், கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. எந்த சன் ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்தினாலும், பொதுவான  சில விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது நல்லது. 

சன் அலர்ஜி உள்ளவர்கள், கண்டிப்பாக சன் ஸ்கிரீன் கிரீம் அல்லது லோஷனைக் கோடை காலத்தில் பயன்படுத்த வேண்டும். வெயில்படும் இடங்களில் இந்த லோஷனைத் தடவிக்கொள்ள வேண்டும். மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை சுத்தமான நீரால் கழுவி, ஈரம் போகத் துடைத்துவிட்டு, மீண்டும் தடவ வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறை இவ்வாறு செய்ய வேண்டும். 

ஆடைகள்

காற்றோட்டமான கதர், பருத்தி ஆடை மற்றும் உள்ளாடைகள்தான் கோடை காலத்துக்கு  ஏற்றவை. முடிந்தவரை, வெள்ளை அல்லது பளீர் நிறங்களில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம், சூரியக் கதிர்களைப் பிரதிபலிக்கும் தன்மை உடையது. கறுப்பு மற்றும் அடர் நிறங்கள் அதற்கு நேர்மாறாக, சூரியக் கதிர்களைக் கிரகித்துக்கொள்ளும். இதனால், புழுக்கம், வியர்வை அதிகமாகும். பெண்கள் ஸ்லிம் ஃபிட் ஜீன்ஸ், ஷிபான், பாலியஸ்டர், பட்டு  ஆடைகளைத் தவிர்த்து, பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. 

பூஞ்சை (ஃபங்கஸ்) நோய்கள் 

வியர்வை அதிகமாக இருக்கும் இடங்களில் வளரக்கூடியவை பூஞ்சைகள். இவை, தேமல், படை என இரண்டு வடிவங்களில் தோலில் பாதிப்பை ஏற்படுத்தும். தோலின் நிறம், மெலனின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து, பச்சை, சிவப்பு நிறங்களில் அக்குள், பிறப்புறுப்பு இடுக்குகளில் தோன்றும். 

வியர்க்குரு பவுடர் பயன்படுத்தலாமா?

கண்கவர் விளம்பரங்களைப் பார்த்து, குளித்த புத்துணர்வு மாறாமல், வியர்க்குரு பவுடரை உடல் முழுக்கத் தூவிச் செல்பவர்கள் அதிகம். இது, மிகத் தவறானது. அந்த பவுடர்தான் வியர்வைக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி, வியர்வையை வெளியேற விடாமல் செய்துவிடுகிறது. நாளடைவில் வியர்க்குரு ஏற்படக் காரணமாகிறது. பூஞ்சை பாதிப்பு உள்ளவர்கள் மட்டும் மருத்துவர் பரிந்துரையின் பேரில், அதற்கானப் பிரத்யேகமான பவுடரை உபயோகிக்கலாம். மற்றவர்கள், கோடை காலத்தில் பவுடர்களைத் தவிர்ப்பது நலம். 

அமோனியா ஃபேஸ் வாஷ் 

கோடையில், அடிக்கடி ஃபேஸ் வாஷ் பயன்படுத்தும் வழக்கம் பலருக்கு உண்டு. சோப், ஃபேஸ் வாஷ் இரண்டுமே முகத்தில் உள்ள அழுக்கை வெளியேற்றும் கிளென்ஸர்கள்... அவ்வளவுதான். இரண்டிலும் ஒரே ஃபார்முலாதான் உள்ளது. மற்றபடி, ஃபேஸ் வாஷ் செய்வதால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது இல்லை. கோடை காலத்தில் தினமும் காலை, மாலை என இரண்டு முறை குளித்தாலே, உடல் புத்துணர்ச்சி பெற்றுவிடும். ஆனால், எதை உபயோகித்தாலும் சீக்கிரம் முகத்தைக் கழுவிவிட வேண்டும். நெடுநேரம் ஈரத்தில் ஊறினால், சரும மேல்புற செல்கள் வறட்சி அடையும்; சருமம் பாதிப்புக்கு உள்ளாகும்.

பெர்ஃப்யூம், டியோடரன்ட் பயன்படுத்தலாமா?

சிலர், அக்குள் வியர்வைத் துர்நாற்றத்தைப் போக்க, வெற்று உடலில் பாடி ஸ்ப்ரே அடிப்பார்கள், ரோல் ஆன் தடவுவார்கள். இவற்றில், 94 சதவிகிதம் ஆல்கஹால் உள்ளது. தோலின் மேல்புறமான எபிடெர்மிஸ்ஸில் இது நேரடியாகப் படுவதால், சரும ஒவ்வாமை, எரிச்சல் ஏற்படக்கூடும். தொடர்ந்து பாடி ஸ்ப்ரே பயன்படுத்தினால், தோல் கறுத்துவிடும். நீங்கள் நறுமண விரும்பியாக இருந்தால், பாடி ஸ்ப்ரேவுக்குப் பதிலாக, சட்டை மேல் அடிக்கும் பெர்ஃப்யூம் பயன்படுத்துவது நல்லது.

நீர் சத்துள்ள பழங்கள் 

கோடையைச் சமாளிக்க இயற்கை நமக்கு  அளித்திருக்கும் அற்புதக் கொடை, பழங்கள். உடலுக்கு நீர்ச்சத்தைத் தருகிற, வெப்பத்தைப் போக்குகிற வெள்ளரி, தர்பூசணி, கிர்ணி, நுங்கு போன்றவை வெயில் காலத்தில் அதிகம் கிடைக்கின்றன. தர்பூசணியின் வெள்ளைப்பகுதியில்தான் 90 சதவிகித நீர் உள்ளது. சிவப்புப் பகுதியில், 10 சதவிகித நீர்தான் உள்ளது. எனவே, வெள்ளைப் பகுதியுடன் சேர்த்துச் சாப்பிடுவதுதான் நல்லது.  

ஏ.சி பயன்பாடு 

 பல நாட்களாக ஏ.சியைச் சுத்தம் செய்யவில்லை எனில், அதில் சேரும் அழுக்கு, கிருமிகள் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு, தொற்றுநோய்களையும் பரப்பும். எனவே, வீட்டில் உள்ள ஏ.சியை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். மேலும், வறண்ட சருமம் உள்ளவர்கள், வியர்வை வெளியேறாத குறைபாடு உள்ளவர்கள்,   ஏ.சியைத் தவிர்க்கவும்.  ஜன்னலில் நன்னாரி வேரால் ஆன திரையை மாட்டினால் குளிர்ந்த மூலிகைக் காற்று அறையை நிரப்பும். சுகாதாரமான ஹெல்த்தி டயட், முன் எச்சரிக்கையான நடவடிக்கைகள்,  எளிமையான வாழ்க்கைமுறை மாற்றங்களைப்  பின்பற்றினாலே, இந்தக் கோடையைக் கொண்டாட்டமாக மாற்றலாம். ஹேப்பி சம்மர்!

- வி.மோ.பிரசன்னா வெங்கடேஷ்

படம்: எம்.உசேன்

வெயில் கால டிப்ஸ்

ஆரோக்கியமான நபர் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். வெளியில் செல்பவர்கள் கையில் எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்திருப்பது நல்லது. அதுபிளாஸ்டிக்காக இல்லாமல் உலோகமாக இருப்பது சிறந்தது.

வறண்ட சருமம் உள்ளவர்கள் கோடைக் காலத்தில் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். 

முடிந்தவரை எண்ணெயில் பொரித்த உணவுகள், மசாலா, அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.  வேண்டுமானால், வெயில் தாழ்ந்த பின்பு, மாலையில் கொஞ்சமாக எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சிறுநீர் மிகவும் மஞ்சளாக இருந்தால், உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரிடம் காண்பிக்கவேண்டியது அவசியம்.

வெளியே செல்லும்போது சருமத்துக்கு சன்ஸ்கிரீன் தடவுவதுபோல, கண்ணுக்கு கூலிங்கிளாஸ் அணிந்து செல்ல வேண்டும். இது தரமான புறஊதாக் கதிர்வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது கையில் தண்ணீர், குடை கட்டாயம் இருக்க வேண்டும்.

10 - 15 வயதுள்ள வளரும் குழந்தைகளுக்கு வெயிலைத் தாங்கும் சக்தி அதிகம். எனவே, இவர்களை வெளியே விளையாட அனுமதிக்கலாம். ஆனால், 11 முதல் 3 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.

அதீதக் குளிர்ச்சி உள்ள ஐஸ் வாட்டர் குடிப்பது தவறு. மிதமான குளிர்ச்சியாக அருந்தலாம். மண்பானை நீர் நல்லது.  

காலை, மாலை இரு வேளையும் குளிக்க வேண்டும். உள்ளாடைகளை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. 

தினமும், மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை முகத்தைக் கழுவிக்கொள்வது நல்லது.

கோடை கால முதியோர் பராமரிப்பு

இதய ஆஞ்சியோபிளாஸ்ட்டி, பைபாஸ் அறுவைசிகிச்சை செய்தவர்கள், காலை 10 முதல் 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

திடீர் மாரடைப்பை சில மணி நேரம் சமாளிக்க, ஆஸ்பிரின் மாத்திரையைக் கட்டாயமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

வெளியே போகும்போது, கண்டிப்பாக தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்ல வேண்டும். துணைக்கு யாரையாவது அழைத்துச் செல்ல வேண்டும். 

எதிர்பாராத சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டால், உடனடியாக நீர் மோர் கொடுக்கலாம். பிறகு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம்

- vikatan

தொடர்ந்து இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்டமுடியாத நிலை: சரண்டர் செய்யலாமா... பெய்ட் அப்பாக மாற்றலாமா?

- Vikatan article


தொடர்ந்து இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்டமுடியாத நிலை: சரண்டர் செய்யலாமா... பெய்ட் அப்பாக மாற்றலாமா?

எஸ்.ஸ்ரீதரன், தலைவர் (நிதித் திட்டமிடல்), ஃபண்ட்ஸ் இந்தியா.காம்400 வது இதழ் ஸ்பெஷல்

ராம், தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அவருக்குக் கை நிறைய வருமானம்வந்துகொண்டிருந்தது.   திருமணமாகி மூன்று மற்றும் ஐந்து வயதில் இரண்டு குழந்தைகள் அவருக்கு இருந்தன. அவரை ஒரு இன்ஷூரன்ஸ் ஆலோசகர் அணுகி, குழந்தைகளின் எதிர்காலத் தேவைக்காக ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்குமாறு கூறினார். 

ராமுவும் தன் தேவைக்கேற்ப பாலிசி இருப்பதாக நினைத்து இரண்டு பாலிசிகளை வாங்கினார். அவை இரண்டும் 15 வருடம் பிரீமியம் செலுத்தும் எண்டோவ்மென்ட் பாலிசி. ஒரு வருடத்துக்கு ரூ.50,000 வீதம் பிரீமியமாக இரண்டு பாலிசிகளுக்கும் ரூ.1,00,000 கட்டிக்கொண்டு வந்தார்.

ஐந்து வருடம் கழித்து அவருடைய நிறுவனம் சரியாக இயங்காத காரணத்தி னால் மூடும் நிலை ஏற்பட்டதால், அவருக்கு வேலை இல்லாமல் போனது.  இதனால் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியம் கட்ட முடியாமல் போனது. 

அப்போது என்ன செய்யலாம் என்று யோசித்து ஒரு நிதி ஆலோசகரை அணுகினார். அந்த நிதி ஆலோசகரோ அந்த பாலிசிகளை அலசி ஆராய்ந்து விட்டு, ‘‘நீங்கள் வைத்திருப்பது எண்டோவ்மென்ட் பாலிசி. இந்த பாலிசியை எடுக்கும்முன் நன்கு யோசித்து முடிவெடுப்பது  முக்கியம். ஏனெனில், இந்த பாலிசிகளை எடுத்துவிட்டால், நீண்ட கால அடிப்படையில் பிரீமியம் செலுத்தும் பொறுப்பை  நீங்கள் ஏற்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவீர்கள்.   பிரீமியத்தை முழுக்க  செலுத்தி னால் மட்டுமே இந்த பாலிசி மூலம் முழுமையான பலனை  நீங்கள் அனுபவிக்க முடியும். இடையில் பாலிசியில் பிரீமியம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டால், அந்த பாலிசியை சரண்டர் செய்யலாம். அல்லது ‘பெய்ட் அப் பாலிசி’யாகவோ மாற்றிக் கொள்வதுதான் ஒரே வழி’’ என்றார்.

இப்போது ‘பெய்ட் அப் பாலிசி’ என்றால் என்ன என்று தெரியாமல் குழம்பிப் போயிருக் கிறார் ராம். இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருக்கும் பலரும் ‘பெய்ட் அப் பாலிசி’ என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கிறார்கள். 

ஒரு பாலிசியின் பிரீமியத்தை குறைந்தபட்சமாக 3 அல்லது 5 வருடத்துக்கு தொடர்ந்து செலுத்தி இருந்தால், அதை ‘பெய்ட் அப் பாலிசி’யாக மாற்ற முடியும். இவ்வாறு செய்வதால், பாலிசியின் பிரீமியத்தை தொடர்ந்து கட்டும் அவதியில் இருந்து தப்பிப்பதுடன், குறைந்த பட்ச பாலிசிப் பலன்களையும் அனுபவிக்க முடியும். உதாரண மாக, ரூ.50,000 வீதம் 15 வருடம் பிரிமீயம் கட்ட வேண்டிய பாலிசியின் காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சம் என்று எடுத்துக் கொள்வோம்.  பாலிசிதாரர் 5 வருட பிரீமியம் தொடர்ந்து செலுத்தி இருக்கும் நிலையில், இந்த பாலிசியை தொடர முடியாமல் ‘பெய்ட் அப் பாலிசி’ யாக மாற்றினால் என்ன ஆகும்என்பதற்கான சூத்திரம் இதோ:  

பெய்ட் அப் மதிப்பு  = (பிரீமியம் கட்டிய வருடங்கள் X காப்பீட்டுத் தொகை) / மொத்த பிரீமியம் கட்டும் வருடம்

அதாவது, பெய்ட் அப் மதிப்பு = (5 X ரூ.10,00,000) / 15 = ரூ.3.33 லட்சம் ஆகும். இந்த பாலிசியை பெய்ட் அப்பாக மாற்றினால், ரூ.3.30 லட்சத்துக்குக் காப்பீடு கிடைப்ப துடன், பாலிசியின் போனஸ் மற்றும் இதர வருமானங்களை பாலிசி முதிர்வில் மொத்தமாக பெற முடியும். தோராயமாக, இப்போது உள்ள பெரும்பாலான பாலிசிகளில் 4% முதல் 5% வரை வருடாந்திர போனஸாக வழங்கப் படுகிறது. இந்த பாலிசியை ‘பெய்ட் அப்’பாக மாற்றினால், பாலிசியின் முதிர்வுத் தொகையாக சுமார் ரூ.3.5 லட்சம் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுவே பாலிசிதாரர் பாலிசி முதிர்வுக்குமுன் இறக்கும் தருவாயில், குறைக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையான ரூ.3.33 லட்சம் காப்பீட்டாளரின் குடும்பத்துக்குப் போய் சேரும். 

இதே பாலிசியை சரண்டர் செய்ய விரும்பினால், எவ்வளவு கிடைக்கும் என்பதற்கான சூத்திரம் இதோ: 

சரண்டர் மதிப்பு = (30% அல்லது 40% X பிரீமியம் செலுத்தி யது) – முதல் வருட பிரீமியம்

அதாவது, சரண்டர் மதிப்பு = (30% X ரூ. 2,50,000) – ரூ. 50,000 = ரூ. 1,00,000 ஆகும். அதாவது, இவர் ஐந்து வருட பாலிசித் தொகையாக ரூ.2.5 லட்சம் கட்டி இருந்தாலும், பாலிசி சரண்டர் தொகையாக ரூ.1 லட்சம் மட்டுமே கிடைக்கும்.

இரண்டில் எது பெஸ்ட்?  

சரண்டர் தொகையான ரூ.1 லட்சத்தை  மீதமுள்ள 10 வருடத்துக்கு 8% வட்டியில் வங்கி வைப்பு நிதியில் முதலீடு செய்தால், சுமாராக ரூ.2.15 லட்சம் கிடைக்கும். இதுவே, சிறிது ரிஸ்க் எடுத்து பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்தால், 12% முதல் 15% வரை வருமானம் கிடைக்கும். சரண்டர் தொகையான ரூ.1 லட்சத்தை 10 வருடத்துக்கு 15% வருமானத்தில் முதலீடு செய்தால், சுமாராக ரூ.4 லட்சம் வரை கிடைக்கும். ஆனால், இப்படி செய்யும் போது, ‘பெய்ட் அப் பாலிசி’ மூலம் கிடைக்கும் ரூ.3.33 லட்சம் இன்ஷூரன்ஸ் கவரேஜ் உங்களுக்குக் கிடைக்காது. 

பிரீமியம் கட்டாமல் ஏதாவது ஆயுள் காப்பீடு பாலிசி உங்களிடம் இருந்தால், ‘பெய்ட் அப்’ மதிப்பு, சரண்டர் மதிப்பு ஆகியவற்றை கணக்கிட்டு, எது லாபம் என கவனித்து முடிவு எடுங்கள்.
 

- vikatan

Thursday, March 24, 2016

உணவின்றி அமையாது உலகு - 3

- vikatan

உணவின்றி அமையாது உலகு - 3

நாம் உட்கொள்ளும் உணவு, செரிமானம் ஆகி, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களாக மாற்றப்பட்டு உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் கொண்டுசெல்லப்படுகிறது. உண்பதற்கு முன்பு, வெறும் பொருளாகக் காட்சிஅளித்த உணவு, உட்கொண்டதும் நம் உடலின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறுகிறது. இவ்வளவு முக்கியமான உணவுக்கு, நாம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?

உணவை அதற்கு உரிய முக்கியத்துவத்தோடு அணுகி இருந்தோமானால், ரசாயனக் கலப்படம் வரை வந்திருக்க மாட்டோம். இன்னொருவர் சாப்பிடும் உணவின் மீதான அலட்சியம் மற்றும் லாபவெறிக்காக, நஞ்சுகளைக் கலக்கும் அளவுக்குக் கலப்படம் பெருகியிருக்காது.

உணவுக் கலப்படம் என்பது ஏதோ இப்போது திடீரென உருவான விஷயம் இல்லை. உணவுப் பொருட்களை விற்கும் பழக்கம் தொடங்கிய காலத்திலேயே, கலப்படமும் ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், அந்தக் காலத்து கலப்படத்துக்கும் நவீன காலத்துக் கலப்படத்துக்கும் மிக முக்கியமான வேறுபாடு ஒன்று இருக்கிறது.

விலை உயர்ந்த உணவுப்பொருளோடு, விலை குறைந்த உணவுப் பொருளைக் கலப்படம் செய்வார்கள். தேயிலைப் பொடியில் புளியங்கொட்டையை அரைத்துக்  கலப்பது போன்றவைதான் அந்தக் காலத்துக் கலப்படங்கள்.

ஆனால், இப்போது கலப்படம் என்பது பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது. விற்கும் உணவுப் பொருளோடு எதை வேண்டுமானாலும் கலந்துவிடலாம். கலக்கப்படும் பொருள் உணவுப் பொருளாக இருக்க வேண்டும் என்பதுகூட அவசியம் இல்லை; அதைச் சாப்பிடும் மனிதர்களின் உடல்நலம் பற்றியும் கவலை இல்லை; கலப்படத்தின் நோக்கம்,  வியாபாரமும் அதீத லாபமும் மட்டும்தான்.

உலகின் எல்லா தொழில்களிலும் அறம் குறைந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். ஆனால், உணவுத் துறையிலும், மருத்துவத் துறையிலும் அறம் குறைந்துவிட்டால், என்ன நடக்கும்? மனிதர்கள் அனைவரும் நோயாளிகளாக மாற்றப்படுவார்கள். இப்போது அது நடந்து கொண்டிருக்கிறது.

இந்த இதழில், தலைக்குத் தேய்ப்பதில் இருந்து சமையலில் பயன்படுத்துவது வரை நாம் பயன்படுத்தும் மிக முக்கியமான பொருளான தேங்காய் எண்ணெயில் செய்யப்படும் கலப்படத்தைப் பார்ப்போம்.

தேங்காய் எண்ணெயைக் குளிர்ச்சிக்காகத் தலைக்குப் பயன்படுத்துகிறோம். இதன் மருத்துவக் குணங்களுக்காக சமையலில் பயன்படுத்துகிறோம். இந்தத் தேங்காய் எண்ணெய் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

‘இதென்ன வேடிக்கையான கேள்வியாக இருக்கிறது? தேங்காயில் இருந்துதான் தேங்காய் எண்ணெய் தயாரிக்கிறார்கள்’ என்று நீங்கள் பதில் சொன்னால், உங்களுக்கு இன்னொரு கேள்வி. அப்படி என்றால், தேங்காய் விலை கூடும்போது எல்லாம் தேங்காய் எண்ணெய் விலையும்கூட வேண்டுமே. அப்படிக் கூடுகிறதா? இல்லை. அதற்குப் பதிலாக பெட்ரோலியப் பொருட்களின் விலை கூடும்போது, தேங்காய் எண்ணெயின் விலையும் கூடுகிறது.

பெட்ரோலுக்கும் தேங்காய் எண்ணெய்க்கும் என்ன தொடர்பு? வைத்தியர் மோகனன் ஆய்வுகள் தேங்காய் எண்ணெய் பற்றிய உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தன. பூமியில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெயில் இருந்து வெள்ளை பெட்ரோல், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்ற பொருட்கள் பிரித்து எடுக்கப்பட்ட பிறகு, எஞ்சும் கழிவுதான் லிக்யூட் பாரஃபின் (Liquid paraffin) . இது கலங்கலான எண்ணெய் போன்ற திரவம். இதை, ‘மினரல் ஆயில்’ என்றும், ‘அமெரிக்க மண்ணெண்ணெய்’ என்றும் அழைக்கிறார்கள்.

இந்தத் திரவத்தை பிளீச்சிங் கெமிக்கல் கொண்டு நிறமற்றதாக மாற்றுகிறார்கள். இந்த நிலையில் இதைப் பார்த்தால், ஏதோ ஒரு எண்ணெய் மாதிரி நமக்குத் தெரியும். அதனுடன், தேங்காய் எண்ணெயின் செயற்கை மணம் (ஃப்ளேவர் எசென்ஸ்) கலந்தால், தேங்காய் எண்ணெய் ரெடி. அந்தக் காலத்து கொழும்புத் தேங்காய் எண்ணெய் போல மணமும் தூய்மையும் நம்மை ஈர்ப்பதாக இருக்கும். இது செயற்கை எண்ணெய் என்பதும், ரசாயனத்தால் உருவாக்கப்பட்டது என்பதும், இதற்கும் தேங்காய்க்கும் தொடர்பு இல்லை என்பதும் நமக்குத் தெரியாது. டப்பாவில் அடைத்து விற்கப்படும் பெரும்பாலான எண்ணெய்களில் இந்த லிக்யுட் பாரஃபின் கலப்பு இருக்கிறது.

இப்போது சொல்லுங்கள்... குளிர்ச்சிக்காகத் தலையில் தேய்க்கும் தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக, மண்ணெண்ணெயைத் தேய்த்தால் உடல் என்ன ஆகும்? அதைப் பயன்படுத்தி சமையல் செய்தால், குடல் என்ன ஆகும்?

முன்பு தேங்காய் எண்ணெயில் வடை சுட்டு, அது மிச்சமாகிப் போனால் என்ன ஆகும் நினைவிருக்கிறதா? ஊசிப்போகும். அதாவது, வடைக்குள்ளிருந்து நூல் நூலாக பூஞ்சை பிடித்துப்போகும். இப்போது, அப்படிப் பார்க்க முடிகிறதா? உயிர்ச்சத்துள்ள எண்ணெயில் இருந்துதான், இப்படிப் பூஞ்சை வளரும்.இந்த செயற்கை எண்ணெயில் இருந்து வளராது. குளிர் காலங்களில் தூய தேங்காய் எண்ணெய் உறைந்துபோகும். இந்த ரசாயன எண்ணெய் உறைந்துபோவது இல்லை. இவற்றை மட்டும் அளவுகோல்களாக வைத்து ரசாயன எண்ணெய்களைக் கண்டுபிடித்துவிட முடியாது.

பல கம்பெனிகள் தங்கள் தயாரிப்புகளிலேயே மினரல் ஆயில் சேர்க்கப்பட்டிருப்பதை லேபிளில் தெரிவிக்கிறார்கள். இன்னும், பல கம்பெனிகள் தூய எண்ணெய் மட்டுமே இருப்பதாகச் சத்தியம் செய்கிறார்கள். சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான எண்ணெய்களை ஆய்வு செய்த வைத்தியர் மோகனன், தர நிர்ணய ஆய்வுக்கூடங்கள் மூலம் ரசாயனக் கலப்பை உறுதி செய்திருக்கிறார்.

இது தேங்காய் எண்ணெயோடு மட்டும் நின்றுவிடுவது இல்லை. செயற்கை மணம் எந்தப் பொருளுக்கு எல்லாம் கிடைக்குமோ, அத்தனை பொருட்களும் ரசாயனத்தன்மையோடு தயாரிக்கப்படுகின்றன. நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களில், நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள், பெட்ரோலிய ரசாயனங்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. எல்லா எண்ணெய்களும் எப்படித் தயாராகின்றன என்று தொடர்ந்து பார்க்கலாம்.

- பயணம் தொடரும்.

எண்ணெய் அறிந்தால்

பொதுவாக, உணவில் எண்ணெய் பயன்படுத்துவது எந்த அளவுக்கு நல்லது? ‘உணவுப் பொருட்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெயைச் செரிக்கும்திறன் நம் தோலுக்கு மட்டுமே உண்டு’ என்கிறது, இயற்கை மருத்துவம். அதனால்தான் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம் போன்ற மரபுவழி மருத்துவங்களில் எண்ணெயை உடல் முழுவதும் தேய்த்து, சிகிச்சை அளிக்கும் முறைகள் இருந்தன. நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும், வாரம் தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இருந்ததும் இதனால்தான். உடல் செரிக்க வேண்டிய எண்ணெயை, குடலுக்குக் கொடுத்தோமானால் என்ன ஆகும்? செரிமானத்தில் எஞ்சும் கழிவுகளில், பிசுபிசுப்பான அமிலத்தன்மையுள்ள கழிவுகள் உடலில் சேர்வதற்குக் காரணமாக அமையும். எனவே, முடிந்த அளவு எண்ணெயின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது நல்லது.

நேரடியாக எண்ணெய்களில் இருந்து கிடைக்கும் சத்துக்களை, எண்ணெய்ப் பயன்பாடு இல்லாமலேயே பெறுவதற்காக, நம் முன்னோர்கள் ஒரு டெக்னிக் வைத்திருந்தார்கள். எண்ணெய்த்தன்மை உள்ள உணவுப் பொருட்களை நேரடியாகச் சாப்பிடுவதுதான் அந்த முறை. உதாரணமாக, தேங்காய் எண்ணெயின் பலன்களைப் பெறுவதற்காக, தேங்காயை உணவில் சேர்த்துக்கொள்வது. இப்படிச் சாப்பிடும்போது, உணவுப் பொருட்களில் இருக்கும் எண்ணெய்த்தன்மையை உடலே ஜீரணம் மூலம் பெற்றுக் கொள்ளும்.

சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், கடலை எண்ணெய் போன்ற எண்ணெய்களைவிட தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் போன்ற எண்ணெய்கள் சமையலுக்கு மிகவும் சிறந்தவை. உலகில் பெரும்பாலான நாடுகளில் மரபாகப் பயன்படுத்தப்பட்டு வந்த தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவற்றை, அமெரிக்காவின் சோயா எண்ணெய் பிரசாரம் பின்னுக்குத் தள்ளியது. அந்தந்த நாடுகளில் வழக்கத்திலிருந்த எண்ணெய் பயன்பாடு மாறி, உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக ரீஃபைண்ட் ஆயில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது

- vikatan