Monday, May 11, 2015

தேங்காய் இளநீர் ரெசிப்பிகள்!

- Article from Dr. Vikatan

கிருஷ்ணமூர்த்தி டயட் கவுன்சலர்
எஸ்.ராஜகுமாரிசமையல் கலை நிபுணர்
குளிர்ச்சியைத் தந்து உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரக்கூடியது தேங்காய். அதிக அளவு தாது உப்புக்கள் இருப்பதால், தினமும் ஓர் இளநீர் குடிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளலாம். இந்தக் கோடையில் வெப்பத்தைத் தணிக்க, தேங்காய், இளநீர் ரெசிப்பிகளை செய்து காட்டியிருக்கிறார், சமையல்கலை நிபுணர்  எஸ்.ராஜகுமாரி. பலன்களைப் பட்டியலிடுகிறார் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி. 
தேங்காய்ப் பால் மில்க்‌ ஷேக்
தேவையானவை: தேங்காய்ப் பால் - ஒரு கப், பால் - அரை கப், ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை, சர்க்கரை - 5 டீஸ்பூன்.
செய்முறை: அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் கொதிக்கவைக்கவும். பாதிக் கொதி வரும்போது, தேங்காய்ப் பால், சர்க்கரை சேர்த்து, ஒரு கொதிவந்ததும் இறக்கி, ஏலக்காய்த் தூள் தூவவும். தேங்காய்ப் பாலை அதிகமாகக் கொதிக்கவிடக் கூடாது. சர்க்கரைக்குப் பதிலாக, நாட்டு வெல்லம் சேர்த்தால் உடலுக்கு நல்லது.
பலன்கள்: உடலுக்கு எனர்ஜியைத் தரும். தேங்காய்ப் பாலுடன் பால் சேர்க்கும்போது, கொழுப்புச் சத்து அதிகம் கிடைக்கும். புரதமும் தாது உப்புக்களும் சிறிதளவு இருப்பதால், நல்ல தெம்பைத் தரும்.  வயிற்றுப் புண், அல்சர், பசியின்மையால் அவதிப்படுபவர்கள், எடை குறைந்தவர்கள் இதை அருந்தலாம். குளிரவைத்துக் குடிப்பது நல்லது.
தேங்காய்ப் பொடி
தேவையானவை: துருவிய தேங்காய்  - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க:  தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம் பருப்பு - 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.
தாளிக்க: கடுகு, உடைத்த முந்திரி - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து.
செய்முறை: வெறும் கடாயில் தேங்காயை வறுத்து, தனியே வைக்கவும். அதே கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, வறுக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து, உப்பு சேர்த்து, மிக்ஸியில் கரகரப்பாகப் பொடிக்கவும்.  வறுத்த தேங்காயைச் சேர்த்து, ஒரு சுற்று சுற்றிஎடுக்கவும்.  தாளிக்கக் கொடுத்த பொருட்களைத் தாளித்து, அதில், பொடித்தவற்றையும் சேர்த்து, ஒருமுறைப் புரட்டி, அடுப்பை அணைத்துவிடவும். ஆறியதும், காற்றுப்புகாத டப்பாவில்போட்டு, பத்திரப்படுத்தவும். இந்த ரெடிமேட் சட்னி ஒரு வாரம் வரை கெடாது.
பலன்கள்:  வெளியூர்களுக்குச் செல்பவர்கள் எடுத்துச் செல்லலாம்.  இட்லிக்குத் தொட்டுகொள்ளலாம். சூடான சாதத்துடனும் பிசைந்து சாப்பிடலாம்.
எடைக் குறைந்தவர்கள், அடிக்கடி சோர்வுடன் இருப்பவர்கள், செரிமான சக்தி குறைந்தவர்கள் எடுத்துக்கொள்ளலாம். கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க செய்யும் என்பதால், உடல் பருமன் உள்ளவர்கள் சாப்பிடவேண்டாம். எபிலெப்சி வலிப்பு நோய் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.
இளநீர் பானகம்
தேவையானவை: லேசான வழுக்கை உள்ள இளநீர் - 2 கப், பனங்கற்கண்டு - 2 டீஸ்பூன், ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: இளநீர் வழுக்கையை மிக்ஸியில் அடித்து, பனங்கற்கண்டு, இளநீர், ஏலக்காய்த் தூள் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். இந்தப் பானகத்தை அப்படியே அருந்தலாம். அருமையாக இருக்கும்.
பலன்கள்: இளநீரில், பொட்டாசியமும் சோடியமும் இருப்பதால், கோடைக்கேற்ற குளிர் பானம். வியர்வையால்  தளர்ந்துபோன தசைகளுக்கு நல்லது. வயிற்றுப் போக்கு, அல்சரால் அவதிப்படுபவர்கள் அருந்தலாம்.  உடலில் எனர்ஜி இல்லாமல் போகும்போது, உடனடியாக எனர்ஜியை அள்ளித் தரும். சிறுநீர் நன்றாகப் போகும். உஷ்ணத்தைத் தணிக்கும். சிறுநீரகத்தில் கல் உருவாவதைத் தடுக்கும்.
தேங்காய்ப்பால் பிரியாணி
தேவையானவை: பச்சரிசி அல்லது பாசுமதி அரிசி - 2 கப், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, பட்டை, சோம்பு, வறுத்துப் பொடித்த கசகசா - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - மூன்று டீஸ்பூன், கெட்டியான தேங்காய்ப்பால் - ஒன்றரை கப், பெரிய வெங்காயம் - ஒன்று, பீன்ஸ் - 50 கிராம், குடமிளகாய் - பாதி, பச்சை மிளகாய், கேரட் - தலா 1, ஊறவைத்த பச்சைப் பட்டாணி - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
அலங்கரிக்க: நறுக்கிய மல்லித் தழை - 2 டீஸ்பூன்.
செய்முறை: வெறும் கடாயில் அரிசியை வறுக்கவும். குக்கரில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய பெரிய வெங்காயம், பீன்ஸ், குடமிளகாய், கேரட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். தேங்காய்ப்பால், உப்பு, மஞ்சள் தூள், மசாலாத் தூள், பட்டாணி சேர்த்து, நன்றாகக் கலந்து, குக்கரில்வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆவி வெளியேறியதும், மல்லித் தழையைத் தூவி அலங்கரிக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள எதுவுமே தேவை இல்லை.
பலன்கள்: சிறிதளவு கலோரியும் கொழுப்பு, புரதச் சத்தும் இதில் உள்ளன. அல்சர், வயிற்றுப் புண் இருப்பவர்கள் ஒருவேளை உணவாக எடுத்துக்கொள்ளலாம். எடை குறைந்தவர்கள், உடலில் எனர்ஜி இல்லாமல் இருப்பவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் சாப்பிட ஏற்றது. நார்ச்சத்து இல்லை என்பதால், மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்கவும்.
தேங்காய் இடியாப்பம்
தேவையானவை: இடியாப்ப மாவு - ஒரு கப்,  எண்ணெய் - 3 டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப், துருவிய கேரட் - 2 டீஸ்பூன், வெந்த பச்சைப் பட்டாணி - 3 டீஸ்பூன், மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உடைத்த முந்திரி - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயம் - சிட்டிகை.
செய்முறை: வாய் அகன்ற பாத்திரத்தில்,  இடியாப்ப மாவினைக் கொட்டவும். ஒரு பாத்திரத்தில் உப்பு சேர்த்து, ஒரு கப் தண்ணீர் விட்டு, கொதிக்கவைத்து, அந்த நீரை மாவில் கொட்டிக் கிளறிவிடவும். இடியாப்பக் குழலில் மாவினைப் போட்டு, இட்லித்தட்டில் பிழிந்து, குக்கரில்வைத்து, ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். வெந்ததும் இறக்கி, ஆறியதும் உதிர்த்துவிடவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து,தேங்காய்த் துருவலையும் சேர்த்து வதக்கி, உப்பு, பட்டாணி, கேரட் துருவல் சேர்த்து வதக்கி, மிளகுத் தூள் தூவி இறக்கவும். இதில், உதிர்த்த இடியாப்பம் சேர்த்துக் கலந்துவிடவும்.
பலன்கள்: மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நல்லது. வயிற்றுப் புண், அல்சர் இருப்பவர்கள் எடுத்துக்கொள்ளலாம். எளிதில் செரிக்கக்கூடியது. கேரட், பட்டாணி சேர்ப்பதால், ஓரளவுக்குப் புரதச்சத்தும்  கிடைக்கும். அனைவரும் சாப்பிட ஏற்றது.
தேங்காய் கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி மாவு - 2 கப், பொடித்த வெல்லம் - ஒரு கப், துருவிய தேங்காய் - அரை கப், ஏலக்காய்த் தூள், உப்பு - சிட்டிகை,  நல்லெண்ணெய் - அரை டீஸ்பூன்.
செய்முறை: பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் விட்டு, உப்பு, நல்லெண்ணெய் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில், அரிசி மாவினைக் கொட்டிக் கிளறி, மாவு வெந்ததும் இறக்கவும்.  சிறிது ஆறியதும், சிறிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி, இட்லித்தட்டில் ஐந்து நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். தேங்காயை நைஸாக சிறிதுத் தண்ணீர் விட்டு அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் வெல்லம், அரைத்த தேங்காய், ஏலக்காய்த் தூள் போட்டு, கொதித்ததும் வெந்த உருண்டைகளைச் சேர்த்து இறக்கவும்.
பலன்கள்: உடலுக்கு நல்ல சக்தியைத் தரும். எளிதில் ஜீரணமாகும். ஓரளவு புரதம் மற்றும் கொழுப்புச்சத்து நிறைந்திருக்கிறது. குழந்தைகள், கர்ப்பிணிகள், தாய்மார்கள், முதியவர்கள் என அனைவரும் சாப்பிடலாம். வாய் கசப்பு இருப்பவர்களை விரும்பிச் சாப்பிடவைக்கும்.  மாலை வேளை டிபனாக சாப்பிடலாம். 
- ரேவதி, படங்கள்: எம்.உசேன்

“நான் கண்ணாடி அணிந்துள்ளேன்.இதனால், மூக்கில் கண்ணாடி படும்பகுதி, கறுப்பாகத் தோன்றுகிறது. கறுப்பு அடையாளத்தை எப்படிப் போக்குவது?”
எல்.பவித்ரா, திண்டிவனம்.

“கண்ணாடி அணிவதால் மூக்கின் மீது கறுப்பாகத் தடயங்கள் ஏற்படுவதற்கு, இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, கண்ணாடி செய்யப்பட்ட பொருளானது அலர்ஜியை ஏற்படுத்தலாம். மற்றொன்று, அணியும் கண்ணாடி, மூக்கை அதிகமாக அழுத்துவதாலும் அடையாளங்கள் உண்டாகலாம். அதிக எடை உள்ள கண்ணாடியால், வியர்வை வழியும் போதும், இறுக்கமாக இருக்கும் போதும் கறுப்பு அடையாளங்கள் விழ வாய்ப்புள்ளன. எனவே, எடை குறைந்த ஃப்ரேம் மற்றும் ஃபைபர்  கண்ணாடிகளைத் தேர்ந்தெடுத்து அணிவது நல்லது. அடிக்கடி கண்ணாடியைக் கழற்றும்போது, மூக்கின் இரு ஒரங்களில் துடைத்து விட்டு, மீண்டும் அணிந்தால், அடையாளங்கள் விழாமல் காக்கலாம்.  சருமத்தைக் கருமையாக்கி அடையாளங்களை ஏற்படுத்தும் இறுக்கமான கண்ணாடிகள் அணிவதைத் தவிர்க்கலாம்.
மூக்கு ஒரங்களில் ஏற்பட்ட தழும்பினை சரி செய்ய, சரும மருத்துவரின் பரிந்துரைப் படி, கோஜிக் ஆசிட் (Kojic acid), அசில்லாய்க் ஆசிட் (Azelaic acid) போன்ற கிரீம்களைத் தடவிவர தழும்புகள் மறையும்.”

குற்றம் புரிந்தவர் : ஹே ராம்..! 2

- vikatan article

ஜனவரி 30. 1948.  

தில்லி பிர்லா மாளிகையின் புல்வெளியில், மகாத்மா காந்தியுடன் இணைந்து பிரார்த்தனை செய்வதற்காக ஏராளமான மக்கள் குழுமியிருந்தனர்.
மாலை மணி 05.10. தான் தங்கியிருந்த அறையில் இருந்து தொண்டர்கள் சிலருடன் புறப்பட்டார் காந்தி. 78 வயதிலும் சுறுசுறுப்பாக, பிரார்த்தனை மேடையை நோக்கி நடந்தார்.
இருமருங்கிலும் கூடி நின்று வணங்கிய மக்களுக்குப் புன்முறுவலுடன் பதிலுக்கு வணங்கியவாறே பிரார்த்தனை மேடையின் படிக்கட்டுகளில் ஏறினார்.
மணி 05.17. கூட்டத்தில் படபடக்கும் இதயத்துடன் காத்திருந்த நாத்துராம் கோட்ஸே திடீரென காந்தியை நெருங்கினார். காந்தியின் பாதத்தைத் தொட்டு வணங்குவதுபோல, அவருக்கு முன் குனிந்தார் கோட்ஸே. 
காந்தியுடனிருந்த ஆபா சட்டோபாத்​யாய் என்ற பெண் சேவகி, ‘சகோதரரே, பிரார்த்தனைக்கு ஏற்கெனவே நேரமாகி​விட்டது’ என்று சொல்லி, கோட்ஸேவை  விலக்க முயன்றார்.
கோட்ஸே நிமிர்ந்தார். ஆபாவை முரட்டுத்தனமாகத் தள்ளினார். ஆபா, காந்தியிடமிருந்து விலகி கீழே விழுந்தார். மணி 05.20.
கோட்ஸே சற்றும் யோசிக்கவில்லை. மகாத்மா காந்திக்கு நேரெதிரில் நின்று, தன் வலது கையில் பிடித்த துப்பாக்கியை உயர்த்தினார். கண்ணிமைக்கும் நேரத்தில் அதன் விசையை அடுத்தடுத்து இயக்கி, மகாத்மாவை மார்பிலும் வயிற்றிலும் சுட்டார். மூன்று குண்டுகள் மகாத்மாவின் உடலைத் துளைத்தன. குருதி பொங்கியது.
‘ஹே ராம்’ என்று தனது இஷ்ட தெய்வத்தின் நாமத்தை உச்சரித்தவாறே மகாத்மா காந்தி பின்புறம் சரிந்து விழுந்தார்.
அந்தக் காட்சியைக் கண்ட மக்கள் ஓலமிட்டார்கள். காந்தியைச் சுமந்துகொண்டு, பிர்லா மாளிகைக் கட்டடத்துக்கு ஓடினார்கள்.
ஆனால்... ஆனால்... 
ஆயுதம் ஏந்தாமலேயே, சக்தி வாய்ந்த ஆங்கிலேய ஆட்சியை அகற்றி, பாரதத்துக்கு விடுதலை பெற்றுத் தந்த அகிம்சா மூர்த்தி, தேசத்தந்தை மகாத்மா காந்தியின் உயிர் பிரிந்தது.
மக்களில் சிலர் கோட்ஸே மீது பாய்ந்தனர். தப்பியோட முயற்சி எதுவும் செய்யாமல், அருகிலிருந்த போலீஸாரிடம் சரணடைந்தார் கோட்ஸே. அவருடைய கூட்டாளி நாராயண் ஆப்தேயையும் காவல் துறையினர் கைது செய்தார்கள். 
காந்தி படுகொலைக்குப் பின்னணியில் இருந்த சதியை அம்பலப்படுத்தவும், கொலைகாரருடன் இணைந்து செயல்​பட்ட சதிகாரர்களை அடையாளம் கண்டு, சட்டத்தின் முன் நிறுத்தவும், தீவிர புனலாய்வை மேற்கொண்டது காவல் துறை.
கோபால் கோட்ஸே, ஷங்கர் கிஸ்தயா, மதன்லால் பஹ்வா, திகம்பர் பட்கே, வினாயக் சாவர்கர், விஷ்ணு கர்கரே என்ற ஆறு பேரும் அந்தக் கூட்டுச் சதியில் ஈடுபட்டவர்கள் என்று அறிந்து, அவர்களையும் காவல் துறை கைது செய்தது.
நாத்துராம் கோட்ஸே, கூட்டாளி ஆப்தே, மற்ற சதிகாரர்கள் அனைவர் மீதும் போலீஸ் வழக்குத் தொடர்ந்தது. பஞ்சாபின் உயர் நீதிமன்றம் அமைந்திருந்த ஷிம்லாவில் அந்தப் பரபரப்பான வழக்கு நடந்தது. 
“யோசிக்காமல் அவரைக் கொலை செய்யவில்லை. மூன்று முக்கியமான காரணங்கள் உள்ளன..” என்று நாத்துராம் கோட்ஸே காரணங்களை அடுக்கினார்.
“ஒன்று: 1947-ல் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது, இந்தியா, பாகிஸ்தானுக்கு 75 கோடி ரூபாய் கொடுப்பது என்று முடிவானது. இதில் 20 கோடியை இந்தியா உடனடியாகப் பாகிஸ்தானுக்கு வழங்கியது. ஆனால் பாகிஸ்தான், இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீர் மீது உடனடியாகப் படையெடுத்து வந்து, ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கியது. இதனால் வெகுண்ட இந்தியா, மீதித் தொகையான 55 கோடியை கொடுக்காமல் நிறுத்தி வைத்தது. ஆனால் காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு, இந்திய அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார். மீதித் தொகையான 55 கோடி ரூபாயையும், படையெடுத்து வந்த பாகிஸ்தானுக்குக் கொடுக்கும்படி செய்தார். ஏழ்மையில் உழன்று கொண்டிருந்த இந்தியாவுக்கு காந்தி செய்த துரோகம் இது.
“இரண்டு: பாரதம் பிளவுண்டு போனதற்கு காந்திதான் காரணம். அந்தப் பிரிவினையின்போது, லட்சக்கணக்கான  இந்துக்கள் சூறையாடப்பட்டனர். கொல்லப்பட்டனர். பெண்கள் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டனர். குழந்தைகள் அனாதைகள் ஆயினர். அனைத்துக்கும் காந்திதான் பொறுப்பு.
“மூன்று: காந்தி மேற்கொண்டிருந்த முஸ்லிம் ஆதரவு நிலையும், முஸ்லிம்களைத் திருப்திப்படுத்த அவர் செய்த செயல்களும்தான், முஸ்லிம்களுக்கு தைரியத்தைக் கொடுத்து, இந்துக்களுக்கு எதிராகச் செயல்படத் தூண்டியது. காந்தி இருக்கும்வரை  இந்துக்கள் சுயமரியாதையுடன் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது.  இந்து தர்மமும்,  இந்துஸ்தானமும் அழிந்துவிடும் அபாயம் இருந்தது. அதைத் தடுக்க அவரை அழிப்பதைத் தவிர வேறு வழி இல்லை”
மேம்போக்காகக் கவனித்தால், கோட்ஸேயின் இந்த வாதங்கள் அர்த்தமுள்ளவைபோலத் தோன்றினாலும், உண்மைக்கும் இவற்றுக்கும் தொடர்பு இல்லை.
காந்தி பலமுறை உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். அதுபோலவேதான் பிரிவினை மற்றும் சுதந்திரத்துக்குப் பின்னும், அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
 இந்து - முஸ்லிம்களிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்பது மட்டும்தான் அந்த உண்ணாநோன்பின் ஒரே நோக்கம். அதற்கும், இந்தியா, பாகிஸ்தானுக்குக் கொடுத்த மீதிப் பணத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த உண்ணாநோன்பின்போது அந்த மீதித் தொகை கொடுக்கப்பட்டது என்பதை மட்டும் வைத்து அவர் மீது குற்றம் சுமத்தினார் கோட்ஸே. ஆனால், பணம் கொடுக்கப்பட்ட பின்னரும், மேலும் சிலநாட்கள் காந்தியின் உண்ணாநோன்பு தொடர்ந்தது.
பாகிஸ்தான் பிரிவினைக்கு காந்திதான் காரணம் என்று கோட்ஸே குற்றம்சாட்டியதிலும் அர்த்தம் இல்லை.
‘என் பிணத்தின் மீதுதான் நாடு பிளவுபடும்’ என்று அறிவித்தவர் காந்தி. ஆனால், ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியாலும், முஸ்லிம் லீக் தலைவர் முகம்மது அலி ஜின்னாவின் பிடிவாதத்தாலும்தான், பிரிவினைக்கு ஒப்புக்கொண்டார் காந்தி. உண்மையில், பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணமானவர்கள் மீது குறி வைக்க வேண்டும் என்றால், பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் லார்ட் மவுன்ட்பேட்டனையோ, முகம்மது அலி ஜின்னாவையோதான் கோட்ஸே குறி வைத்திருக்க வேண்டும்.
காந்தியை இந்து விரோதி என்பது கேலிக்குரியது.  இந்துமத சித்தாந்தங்களில் அவரைவிட அதிக நம்பிக்கை கொண்டவர் வேறு யாரும் இருக்கவே முடியாது. தீண்டாமை போன்ற கொடுமைகளை ஒழித்து, அந்த மதத்தைப் புனிதமாக்குவதைத் தன் வாழ்நாள் குறிக்கோளாகவே கொண்டிருந்தார் காந்தி. செத்து விழும்போதும் “ஹே ராம்..!” என்றவர் அவர்.
சுதந்திர இந்தியாவில், சிறுபான்மையினராக இருந்த முஸ்லிம் குடிமக்களுக்கு இருந்த நியாயமான அச்சங்களைக் களையவே காந்தி, அவர்களுக்காக தியாகங்களைச் செய்யுமாறு  இந்துக்களை கேட்டுக்கொண்டார். 
பிரிவினை வாதத்தை எழுப்பி, முஸ்லிம் தீவிரவாதிகள் நாட்டைத் துண்டாக்கிவிடாமல் இருக்க, இது மட்டும்தான் ஒரே வழி என்று நம்பினார் அவர். ஆனால், அவரது இந்த நல்ல எண்ணத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இந்து மதத் தீவிரவாதிகள், இளைஞர்கள் சிலர் மனதில் விஷத்தை விதைத்து, காந்திக்கு எதிராகத் திசை திருப்பிவிட்டனர்.
கோட்ஸேயும், அவரது சதிகார நண்பர்களும்  இந்து தீவிரவாதிகளின் பிரசாரத்தை நம்பி, காந்தி மீது கோபம்கொண்டு அவரைக் கொன்றுவிட்டனர்.
தீவிரமாக நடைபெற்ற வழக்கு முடிந்தது. 1949 நவம்பர் 8-ம் தேதி தீர்ப்பு வெளியானது. கொலைகாரர் நாத்துராம் கோட்ஸேவுக்கும், கூட்டாளி நாராயண் ஆப்தேவுக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. போதுமான ஆதாரங்கள் இல்லாததால், வினாயக் சாவர்கர் விடுவிக்கப்பட்டார். மற்ற சதிகாரர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
‘தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மீது கருணை காட்டவேண்டும்’ என்று எழுந்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. இவ்வாறு கோரிக்கை விடுத்தவர்களில், மகாத்மா காந்தியின் மகன்களும், பிரதமர் நேருவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியில், 1949 நவம்பர் 15-ம் நாள், கோட்ஸேயும், ஆப்தேயும் அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.
மனித குலமே போற்றிய ஒரு மகானின் சகாப்தம், ஒரு மதவெறியரின் அடாத செயலால் திடீரென முடிவுக்கு வந்தது.
மகாத்மா இறந்துபோவதற்கு இரண்டே நாட்கள் முன்பு, 1948 ஜனவரி 28 அன்று, ‘உங்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல சதி நடக்கிறது’ என்று காந்திஜியிடம் சொல்லப்பட்டது.
காந்திஜி அதைக் கேட்டு, புன்னகை செய்தார். புறங்கையை வீசி அந்தக் கூற்றை அலட்சியப்படுத்தினார்.
“மனநிலை சரியில்லாத மனிதன் செலுத்தும் துப்பாக்கிக் குண்டினால் உயிர் துறக்க நேர்ந்தால், நான் புன்னகையுடன் மரணமடைய வேண்டும். என் மனதில் கோபம் இடம்பெறக் கூடாது. இறைவனின் நாமம் என் மனதிலும் உதட்டிலும் நிறைந்திருக்க வேண்டும்” என்றார் அவர்.
உண்மையில் யார் குற்றம் புரிந்தவர்? ஆங்கிலேயர்களா? முகம்மது அலி ஜின்னாவா? மதவெறியாளர்களா?
ஒன்றுக்கும் உதவாத மதவெறி ஒரு மகாத்மாவின் உயிரை காவு வாங்கியதோடு நின்றதா? மதவெறியின் பேய்த்தாண்டவம் இன்று வரை அடங்கவில்லையே?
ஓர் உயிர் ஜெருசலேமில் உதித்தால் அது கிருத்துவம் என்று பெயர் சூட்டப்பட்ட மதத்தைச் சார்கிறது. அரபுநாடுகளில் அவதரித்தால் அது இஸ்லாம் என்று பெயரிடப்பட்ட மதத்தைச் சேர்ந்ததாகிறது. அதுவே இந்தியாவில் பிறந்தால்  இந்து என்ற பெயரைக்கொண்ட மதத்தைத் தழுவியதாகிறது. அத்தனை மதங்களும் இறை நிலையை எய்த போதிக்கும் வழி ஒன்றே.
அன்பு என்னும் ஆயுதத்தைத் தவிர, மதத்தின் பெயரால் வேறு எந்த ஆயுதத்தையும் எடுப்பதில்லை என்று அழுத்தமான தீர்மானத்துக்கு வராதவர்கள் அனைவரும் குற்றம் புரிந்தவர்கள்தாம்.
 
மதம், இனம், குலம், நிறம், மொழி இவற்றைப் பின்தள்ளி, சக மனிதனிடத்தில் நிபந்தனையற்ற அன்பு காட்டத்  தொடங்கிவிட்டால், குற்றங்கள்  நிகழ ஏது வாய்ப்பு? இந்த உண்மை தெரிந்திருந்தும், அதை உணர மறுக்கும் நாமெல்லோரும் குற்றம் புரிந்தவர்கள்தாம்.  

குற்றம் புரிந்தவர் : கொல் அந்தக் கிழவனை..! 1

- Vikatan article

னவரி 20. 1948. பிற்பகல்.
நாத்துராம் விநாயக் கோட்ஸே, அவரது சகோதரர் கோபால் கோட்ஸே, நாராயண் ஆப்தே, ஷங்கர் கிஸ்தயா, மதன்லால் பஹ்வா, திகம்பர் பட்கே மற்றும் விஷ்ணு கர்கரே என்னும் ஏழு நடுத்தர வயது இளைஞர்கள் ரகசியமான இடத்தில் கூடியிருந்தனர்.
இறுக்கமான சூழ்நிலை.
“தர்மத்தை நிலைநாட்ட கிருஷ்ணன் எவ்வளவு கொலைகள் புரிந்திருப்பான்? அது போலத்தான் இதுவும்! ஹிந்து தர்மத்தை அழிவிலிருந்து காப்பதற்காகவே இந்தச் செயலில் ஈடுபடப் போகிறோம். இது ஒன்றும் வெட்கப்படவேண்டிய செயல் அல்ல. புறப்படுங்கள்..” என்று நாத்துராம் கோட்ஸே முழங்கினார்.
ஏழு பேரும் தனித்தனியாகப் புறப்பட்டார்கள். வெவ்வேறு வழிகளில் பயணப்பட்டு மாலையில் தில்லி பிர்லா மாளிகைக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கேதான் நாட்டுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தி தங்கியிருந்தார். அவர்களது திட்டம் தெளிவாக இருந்தது.
காந்தி பிரார்த்தனை செய்யும் போது மதன்லால் பஹ்வா, மேடைக்குப் பின்புறம் சென்று குண்டு ஒன்றை வெடிக்க வைக்கவேண்டும். மக்கள் பீதியில் அங்கும் இங்கும் ஓடுவார்கள். அதே சமயத்தில் விஷ்ணு கர்கரே கூட்டத்தில் கையெறி குண்டை வீசவேண்டும். இதனால் பெரிய கலவரம் உண்டாகும். இந்தச் சூழ்நிலையில் திகம்பர் பட்கேயும், ஷங்கர் கிஸ்தயாவும் காந்தியை நெருங்கி, அவரைத் தலையில் சுட்டுக் கொல்லவேண்டும். அப்போது ஏற்படும் கூச்சலையும் குழப்பத்தையும் பயன்படுத்தி ஏழு பேரும் தப்பித்துச் சென்று விடவேண்டும்.
மதன்லால் திட்டப்படி காந்தி பிரார்த்தனை செய்யும் மேடையின் பின்புறத்தை நோக்கி முன்னேறினார். ஆனால் அங்கே இருந்த காவலாளி, மதன்லாலை மேடைக்குப் பின்புறம் செல்ல அனுமதிக்கவில்லை. 
வேறு வழியின்றி மதன்லால் பிர்லா மாளிகையை விட்டு வெளியேறினார். பிரார்த்தனை மேடையின் பின்புறம் இருந்த சுவர் மீது, வெளியிலிருந்தபடி குண்டை வைத்து வெடிக்கச் செய்தார்.
குண்டு பேரொலியுடன் வெடித்தது. புகையும் எழுந்தது. ஆனால் காந்தி இருந்த மேடைக்குச் சற்று தூரத்தில் இது நிகழ்ந்ததால், சதிகாரர்கள் எதிர்பார்த்தபடி, மக்களிடையே கலவரம் எதுவும் ஏற்படவில்லை. 
மதன்லாலின் துரதிர்ஷ்டம், அவர் காவலர்களிடம் சிக்கினார். அங்கேயே இருந்தால் அனைவரும் சிக்க வேண்டியதுதான் என்ற நிலை. திட்டத்தை நிறைவேற்றாமலேயே, மற்ற சதிகாரர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றார்கள். 
மதன்லால் விசாரிக்கப்பட்டு, அவர்கள் தில்லியில் தங்கியிருந்த ஹோட்டல்களைச் சோதனையிட்டது தில்லி போலீஸ். ஆனால், விடுதிகளை அவர்கள் காலி செய்திருந்தனர்.
போலீஸ் அவர்களைத் தேடி மும்பை விரைந்தது. அவர்களை அப்போதே கண்டுபிடித்திருந்தால், இந்திய சரித்திரமே மாற்றி எழுதப்பட்டிருக்கும். அங்கும் சதிகாரர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லையே!
காந்தியை அவர்கள் கொலை செய்ய முயற்சி செய்ததன் பின்னணி என்ன?
நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி புரிந்த ஆங்கிலேய அரசை எதிர்த்து காந்தி தீவிரமான விடுதலைப் போராட்டத்தில் குதித்தார். ஆண், பெண், இளைஞர்கள் என அனைவரும் ஜாதி, மத வேறுபாடின்றி ஒன்றுபட்டு, தங்கள் சொத்து, சுகம் அனைத்தையும் துறந்து, காந்தியின் தலைமையை ஏற்றனர். ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடத் துவங்கினர்.
இந்திய மக்களில் பெரும்பான்மை யானவர்கள் ஹிந்துக்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் இருந்தவர்கள் இஸ்லாமியர்கள். மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் திணறிய ஆங்கில அரசு, இந்தத் தகவலை அடிப்படையாகக்கொண்டு, போராட்டத்தைத் திசைதிருப்ப ஒரு சூழ்ச்சி செய்தது.
“இந்தியா ஹிந்துக்களின் நாடு! நாடு விடுதலை பெற்றால் ஹிந்துக்களே ஆட்சி புரிவார்கள். காந்தியும் ஹிந்துதான். அவரும் ஹிந்துக்களுக்குச் சாதகமாகத்தான் நடந்துகொள்வார். இன்று ஹிந்துக்களுடன் இணைந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போரிடும் சிறுபான்மையினரான முஸ்லிம்கள், விடுதலைக்குப் பின் ஹிந்துக்களாலேயே ஏமாற்றப்படுவது நிச்சயம்” என்றொரு விஷமப் பிரசாரத்தைச் செய்தது.  
ஆங்கிலேயர்களின் இந்தப் பிரசாரத்தால், சுதந்திர இந்தியா ஹிந்துக்களின் நாடாகவே இருக்கும் என்ற பயம் முஸ்லிம்களின் உள்ளத்தை ஊடுருவியது. தங்களுக்கென தனியொரு சுதந்திர நாடு வேண்டும் என்று அவர்கள் கருதத் தொடங்கினார்கள். 
இஸ்லாமியத் தலைவரான முகம்மது அலி ஜின்னா, ‘முஸ்லிம்களுக்குத் தனி நாடு தேவை..’ என்ற முழக்கத்துடன் களம் இறங்கினார்.
அரசியலில் ஏற்பட்ட இந்தத் திடீர் திருப்பம், ஹிந்து, முஸ்லிம் இருவரையும் இரு கண்களாகவே பாவித்து வந்த காந்திக்குப் பெரும் மன வேதனையை அளித்தது.
‘இது ஆங்கிலேயர்களின் தந்திரம்’ என்று உணர்ந்த காந்தி, ஹிந்துக்களின் மீது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தைப் போக்குவதற்கும் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்கும் பலவாறு முயன்றார். 
“ஹிந்துக்கள், இஸ்லாமியர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்துகொள்வது அவசியம். அவர்களுக்காகச் சில தியாகங்களைச் செய்வது ஹிந்துக்களுடைய கடமை” என்று ஹிந்துக்களை வலியுறுத்தத் தொடங்கினார். இதன்மூலம் ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமை வலுப்பட்டு, விடுதலைப் போர் தீவிரமடைந்து, நாடு விரைவில் சுதந்திரம் அடையும் என்று அவர் நம்பினார்.
ஆனால், காந்தியின் கூற்று தீவிரவாத ஹிந்துக்களிடையே எதிர்மறையான உணர்வுகளை உண்டாக்கின.
“பாரதத்தைப் பிளவுபடுத்த நினைக்கும் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் ஹிந்துக்களுக்கு எதிராகவும் செயல்படுகிறார் காந்தி. இது தொடர்ந்தால், ஹிந்து தர்மம் அழிந்துவிடும். அதிகார மமதை கொண்ட முஸ்லிம்களின் அடிமைகளாக, ஹிந்துக்கள் தங்களது நாட்டிலேயே அந்நியராகிப் போவார்கள்” என்று ஹிந்து அமைப்புகள் பிரசாரம் செய்து, இளைஞர்களை மூளைச்சலவை செய்யத் தொடங்கின.
காந்தி மீதும், முஸ்லிம்கள் மீதும் கடும் கோபமும், ஆத்திரமும் கொண்ட ஹிந்து இளைஞர்கள் பலர் உருவானார்கள். அவர்களுள் மிகத் தீவிரமான காந்தி விரோதியாக உருவானவரே நாத்துராம் விநாயக் கோட்ஸே. 
நாத்துராம் விநாயக் கோட்ஸே, பூனேயில் ஒரு சாதாரணக் குடும்பத்தில், 1910-ம் ஆண்டு மே 19-ம் தேதி பிறந்தார். தந்தை தபால் ஊழியர். தாய் குடும்பத் தலைவி. பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத அவர், ஹிந்துமத இயக்கங்களான ராஷ்ட்ரிய ஸ்வயம் ஸேவக் சங்கம் (R.S.S.), ஹிந்து மஹா சபா போன்றவற்றில் உறுப்பினராகச் சேர்ந்தார். ‘ஹிந்து ராஷ்ட்ர’ என்ற ஹிந்துமத ஆதரவு பத்திரிகையையும் நடத்திக்கொண்டிருந்தார்.
கோடிக்கணக்கான மக்களின் இதய தெய்வமாக விளங்கினார் காந்தி. அவரது சொல், இந்த நாட்டுக்கே வேத மந்திரமாகத் திகழ்ந்தது.
1947 ஆகஸ்ட் 15. நாடு சுதந்திரம் பெற்றது. பாரதம், இந்தியா - பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிளவுபட்டது. ஹிந்து, முஸ்லிம்களிடையே கலவரம் வெடித்தது. இந்திய எல்லைப் பகுதிகளில் இருதரப்பிலும் வன்முறை.   
தீவிரவாத ஹிந்து இளைஞர்கள் கொதித்துப் போனார்கள். இந்தக் கொடுமைகள் அனைத்துக்கும் மூல காரணம் காந்திதான் என்று தீவிரமாக நம்பினார்கள்.
‘கொல் அந்தக் கிழவனை’ என்று முழங்கினார்கள்.
“ஆங்கில ஆட்சிக்கே சிம்ம சொப்பனமாக விளங்கியவரை கொள்கை ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ நெருங்கக்கூட முடியாது. மக்களின் ஆதரவுடன் போராடி அவரை வெல்வதென்பது கற்பனைகூட செய்ய முடியாத ஒன்று! காந்தியின் தவறான போக்கைத் தடுத்து நிறுத்தி, தேசத்தைக் காப்பாற்றும் ஒரே வழி, அவரையே தீர்த்துக்கட்டுவதுதான்” என்று நாத்துராம் விநாயக் கோட்ஸே முழங்கினார். இதே எண்ணம் கொண்ட வேறு சில இளைஞர்களும் அவருடன் கூட்டுச் சேர்ந்தனர்.
1948, ஜனவரி 20 அன்று, தேசத் தந்தையைத் தீர்த்துக்கட்ட அவர்கள் மேற்கொண்ட முதல் முயற்சி தோல்வியடைந்தது. மாட்டிக்கொண்ட மதன்லால் பஹ்வாவைத் தவிர, மற்ற சதிகாரர்கள் தலைமறைவானார்கள். ஆனால், ஓய்ந்துவிடவில்லை.
அடுத்த முறை காந்தியைக் கொல்லும் முயற்சியில் தவறு நிகழ்ந்துவிடக் கூடாது என்ற முனைப்புடன் இன்னொரு திட்டத்தைத் தீட்டினார்கள்.
கோட்ஸேயும் ஆப்தேயும் பூனே சென்றார்கள். கங்காதர் தந்தவதே என்ற நண்பன் மூலம் நவீனமான கைத்துப்பாக்கி ஒன்றை ரகசியமாக வாங்கினார்கள்.
தில்லி பிர்லா மாளிகையில் காவலர்களின் சோதனை கடுமையாக இருக்காது. கோட்ஸே துப்பாக்கியை ஒளித்து வைத்துக்கொண்டு உள்ளே நுழைவது,  ஆப்தேவும் அவருடன் செல்வது, பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு, சமயம் பார்த்து காந்தியை நெருங்கி, அவரைச் சுட்டுக் கொல்வது, முடிந்தால் இருவரும் தப்பித்துச் செல்வது இல்லையென்றால், சரணடைவது என்று தீர்மானித்தார்கள். 
 
1948 ஜனவரி 29-ம் தேதி இரவு, இருவரும் மும்பையிலிருந்து ரயிலில் தில்லி வந்து சேர்ந்தனர். ரயில் நிலையத்து விடுதியில், அன்றைய இரவைக் கழித்தனர்.
தங்கள் திட்டத்தை நிறைவேற்ற மறுநாள் மாலை, காந்தி தங்கியிருந்த பிர்லா மாளிகையை அடைந்தனர்.
அடுத்த இதழில்...


விடுதலையான அம்மாவுக்கு ஓர் மடல்!

- vikatan article.

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மீண்டும் தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
கோடிக்கணக்கான தமிழர்கள் ஓட்டளித்து வெற்றி பெற்ற மகிழ்ச்சியை விட விடுதலைத் தீர்ப்பு கட்டாயம் 'வாழ்வில் நிம்மதியும்' ஆனந்தத்தையும் கொடுத்திருக்கும். மக்களின் முதல்வர் மீண்டும் தமிழக முதல்வராகிறார் என வாண வேடிக்கையும், காது கிழிக்கும் பட்டாசுகளும். ஆர்ப்பாட்டமான ஆட்டமும் முதல்வரை வரவேற்கத் தயாராகி விட்டன. நீதிபதி குன்ஹாவை வெறுத்தவர்கள் நீதிபதி குமாரசாமிக்கு கோவில் எழுப்பும் நிலையில் உள்ளனர்.

டாஸ்மாக் மதுக்கடைகளை அடைப்பது ஒட்டு மொத்த தமிழருக்கும் விடுதலை அளிக்கும் செய்தியாகும். மதுவால் அழிந்த குடும்பங்கள் கூட உங்கள் விடுதலைக்காக கோவிலில் நேர்த்திகடன் செய்தவர்கள்தான். அப்படிப்பட்ட குடும்பங்கள் மதுவால் அழிய வேண்டுமா? உங்கள் மகிழ்ச்சியின் பரிசாக, 'டாஸ்மாக் கடைகள் பூட்டப்படும்' என்ற அறிவிப்பை தமிழ் பெண்களுக்கு கொடுப்பீர்களா?  உங்களுக்கு கிடைத்த விடுதலைச் செய்தி போல எங்களுக்கும் டாஸ்மாக்கில் இருந்து விடுதலைச் செய்தி வேண்டும். ஆந்திராவில் தமிழனை கொள்கிறார்கள், இலங்கை கடற்படை மீனவத் தமிழனை சுடுகிறார்கள், நாமும் நம் பங்கிற்கு டாஸ்மாக் மூலம் தமிழனை கொல்ல வேண்டுமா?

அதிக தரத்துடன், அதிக எண்ணிக்கையில் அம்மா உணவகத்தின் மூலம் வருமானம் தேடலாம். இலவசத்தை ஒழித்து மக்கள் வாழ்வு முன்னேற மனம் வையுங்கள். அரசிடம் இலவசம் வாங்கும் தமிழன் மறு கையில் காசு கொடுத்து சாவை (டாஸ்மாக் சரக்கு) விலைக்கு வாங்கி வருகிறான். இனி தமிழ் இனம் மலட்டு சமூகமாக மாறுவதும், மனிதனாக மலர்வதும் உங்கள் கையில் தான் உள்ளது. டாஸ்மாக் ஒழிந்தால் உங்கள் கட்சிக்கு பெண்களது ஒட்டு விகிதம் கட்டாயம் கூடும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

மலைக்க வைத்த மலை அழிப்பு கிரானைட் கொள்ளை, கடல் தாண்டிச் சென்ற கனிம மணல் கொள்ளை என தமிழகத்தின் இயற்கை வளக் கொள்ளைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, அவற்றை அரசே ஏற்று நடத்த வேண்டும். டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் நமது இயற்கை வளங்கள் மூலம் பெற முடியாதா? அரசுக்கு வருமானம் பார்க்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன. இலவசத்தை ஒழித்து, அரசின் செலவுகளை குறைத்து, பொதுப்பணித்துறையின் ஊழல்களை ஒழித்தாலே அரசுக்கு பல ஆயிரம் கோடிகள் மிச்சமாகுமே. தேவை அற்ற அரசின் செலவுகளை குறைப்பதும் லாபத்திற்கு வழி.

நீங்கள் அடைந்த மகிழ்ச்சியைப்போலவே தமிழர்களும் நிம்மதி, மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். ஆனால், கடந்த ஆறு மாதங்களாக ஆட்சி முடங்கி விட்டது, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அதிகமாகி விட்டது. கொலை, கொள்ளை சம்பவங்கள் மக்களின் நிம்மதியை அழித்து விட்டது. மக்களுக்கான எந்த திட்டமும் சீரிய முறையில் செயல்படவில்லை. பொதுப்பணித்துறை பொறுப்பாக லஞ்சம் வாங்கும் துறையாக மாறி விட்டது. லஞ்சம் வாங்கவே அரசு அலுவலகம் பயன்படுகிறது  என்ற நிலைக்கு தமிழர்கள் அரசு அலுவலகத்தை நினைத்து கொதித்துப் போய் வருகின்றனர். கற்றுக்கொடுக்கும் கல்வி முதல், நாட்டை காக்கும் காவல் துறை வரை லஞ்சப் பேய்களின்   ஆக்கிரமிப்பு அதிகரித்து விட்டது. உங்கள் அறையை தூய்மை செய்வது போல, அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் தூய்மை ஒட்டு மொத்த தமிழருக்கும் செய்யும் மாபெரும் சேவையாகும்.

தற்போதைய கோடை காலத்தில் கண்மாயில் நிற்க வேண்டிய மழை  நீர், சாலைகளில் வெள்ளம் போல மக்களை கஷ்டப்படுத்தி வருகிறது. கண்மாயில் நீர் இல்லாமல் சாலைகளில் வெள்ளம் பார்க்க வைத்த  அரசு நீர் வள பொதுப் பணித்துறையினரின் செயல்பாடுகள் விவசாயிகளை மிரட்டி வருகிறது. தூர் வாரப்படாத கண்மாயும், வரத்துக் கால்வாயும் உங்களுக்காக ஓட்டு போட்ட விவசாயிகளுக்கு கஷ்டத்தையே தரும் என்பதை உணர்ந்து, நீர் நிலைகளை தூர் வார உத்தரவிட வேண்டும். தமிழகத்திலும் விவசாயிகள் தற்கொலை ஆரம்பமாகி விட்டது. அதை தடுக்க நவீன திட்டம் கொண்டு வர வேண்டும்.

மக்களின் அடிப்படைத் தேவையான நீர், சாலை சதி, போக்குவரத்து, மருத்துவ வசதி இந்நான்கிலும் மக்களின் எதிர்பார்ப்பு எப்போதும் அதிகமாக இருக்கும். ஆனால், தற்போது சுத்தமான நீர் கிடைப்பது அரிது, தரமான சாலைகள் இருந்தால் 'கின்னஸ் சாதனைக்கு' சொல்லும் அளவிற்கு உள்ளது. பள்ளமான சாலைகள் பல அரசு ஊழியர்களை கோடீஸ்வரராக மாற்றி இருக்கும். பேருந்துகள்   பெயரில் மட்டுமே சொகுசுப் பேருந்து, மற்றபடி பேருந்துகள் எல்லாம் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் அளவிற்கு தரமற்றதாக, உயிரை எடுக்கும் அளவில் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் லஞ்சமும், தரமற்ற மருத்துவ சேவையும், படுக்க இடமின்றி நோயாளிகள் அவதிப்படுவதும் மக்களுக்கு அரசு செய்யும் நன்றிக்கடனா எனத் தெரியவில்லை.

இன்றைய நவீன தொழில் நுட்பத்தில் ஊடகங்கள் வாயிலாக தங்களது விடுதலைச் செய்தி ஒரு நிமிடத்திலேயே உலகம் முழுவதும் தெரிந்து விட்டது. அமைச்சர்கள் தங்களது பணிகளை முனைப்புடன்   கவனிக்கவும், விடுதலை ஆனந்த பெருவிழா என்ற பெயரில் ஊர் ஊருக்கு காது கிழியும் பாடல்களுடன், மக்களை இம்சிக்கும் பொதுக்கூட்டம் நடத்தாமல் இருக்கவும் ஆணையிட வேண்டும்.   தங்களுக்காக ஆடல் பாடல் நிகழ்சிகள், குத்துப்பாட்டு, கோவில் வேண்டுதல்கள் நடத்துவதை மக்கள் பிரதிநிதிகள் நடத்துவதற்கு பதிலாக, மக்கள் குறையை கேட்க தொகுதிப்பக்கம் வரச் சொன்னால் அதுவே மக்களுக்கு நீங்கள் செய்யும் பேருதவி.

உங்கள் கூட்டணியில் உள்ள ஒருவரே நான் முதல்வராக மக்கள் ஆசைப்படுகிறார்கள் என்று சொல்வதும், கூட்டணி திசை மாறி நான்தான் முதல்வர் வேட்பாளர் என்று ஒருவரும், பத்திரிகையளர்களை மிரட்டும் கட்சித் தலைவரும், உங்களை புகழ்ந்து பேசி தவறான வழியில் சம்பாதிக்கும் உங்கள் அருகில் உள்ள அமைச்சர்களும்  சூழ்ந்துள்ள தமிழகத்தில் மக்களுக்காக மட்டுமே செயல்பட வேண்டும் என்ற உறுதியுடன் திறம்பட செயல்பட வேண்டும்.

தங்களது வெற்றி மக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வீண் ஆடம்பரமும், விளம்பரமும் இல்லாத அரசியலை பொதுமக்கள் விரும்புகின்றனர். ஏழை மக்களுக்காகவே மீண்டும் முதல்வராக நீங்கள் பதவி ஏற்பதாகச் சொன்னால், டாஸ்மாக் ஒழிப்புச் செய்தி எங்கள் இதயங்களில் விடுதலைச் செய்தியாக மகிழ்ச்சியுடன் வந்து நிறையட்டும். மகிழ்ச்சி என்றும் நிலைக்கட்டும்.

எஸ். அசோக்

Sunday, December 21, 2014

அந்த நாள்... -10

- Vikatan

அந்த நாள்... -10
டி.அருள் எழிலன்
படம்: சொ.பாலசுப்ரமணியன்
ந்த ஏழு நாட்களில் மட்டும் இலங்கையின் கொழும்பிலும் மேல்மாகாணத்திலும் 1,000 பேர் கொல்லப்பட்டனர். அதைச் சுருக்கமாக 'இனக் கலவரம்’ எனப் பதிந்துகொண்டது சிங்கள அரசாங்கம். ஆனால், உலகையே உலுக்கி ஈழப் போராட்டத்தின் மீது பெரும் கவனம் குவியச் செய்தது 1983-ன் அந்த 'ஜூலைக் கலவரம்’தான். அதன் ஒரு பகுதியான 'வெலிக்கடை சிறைப் படுகொலைகளை’ எந்தத் தயக்கமும் இல்லாமல் 'நரவேட்டை’ என்றே குறிப்பிடலாம். சிங்களக் கைதிகளை வைத்துக்கொண்டு சிறைக்குள் சிங்கள் அரசு நடத்திய அந்த நரவேட்டையில் கொல்லப்பட்ட 54 பேரும் ஈழப் போராட்டத்தின் பொக்கிஷங்கள். கொல்லப்பட்டவர்களில் பலரும் மருத்துவர்கள்; வழக்கறிஞர்கள்; சிந்தனையாளர்கள்; போராளிகள். அடித்தும், வெட்டியும், கண்கள் பிடுங்கப்பட்டும், தலை பிளக்கப்பட்டும்  கொல்லப்பட்டனர் அந்த 54 பேரும். வெலிக்கடை சிறைப் படுகொலைகளின் நேரடிச் சாட்சியான டேவிட், பின்னர் சிறையில் இருந்து தப்பி, தமிழகம் வந்து 30 ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறார். வெலிக்கடை சிறை நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள இங்கே எஞ்சி இருக்கும் ஒரே சாட்சி டேவிட் மட்டுமே.
சாலமோன் அருளானந்தம் டேவிட் என்ற அந்த மூத்தப் போராளியை இன்று  'டேவிட் ஐயா’ என மரியாதையாக அழைக்கிறார்கள். கட்டடக் கலை வல்லுநராகவும், நகர வடிவமைப்பாளராகவும் உலகம் முழுக்கப் பணி செய்த டேவிட், ஈழப் போராட்டத்துக்காக வேலையை உதறிவிட்டு வன்னிக்கு வந்தவர். இவர் உள்ளிட்ட முக்கியமான போராளிகளை மீட்கவே மட்டக்களப்பு சிறை உடைப்பு நடத்தப்பட்டது. சிறையில் இருந்து மீண்டது முதல் தமிழகத்திலேயே வாழ்ந்துவரும் டேவிட்டுக்கு இன்றைக்கு வயது 91. வெலிக்கடை சிறைப் படுகொலைகளின் நினைவுகள் பற்றி கேட்டால், நெஞ்சு நடுங்குகிறது டேவிட் ஐயாவுக்கு.
''நாஜிப் படை கொடூரங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதைவிட மிகக் கொடூரம் அந்தப் படுகொலைகள். எங்கள் போராட்ட வரலாற்றில் 1983, மிக முக்கியமான ஆண்டு.  நானும் என் நண்பரும் டாக்டருமான ராஜசுந்தரமும் தொடங்கிய காந்தியம் அமைப்பு அமைத்த பள்ளிகள் பெரும் வெற்றி பெற்றிருந்தன. மலையக மக்களை வன்னியிலும், ஏனைய தமிழ்ப் பிரதேசங்களிலும் குடியேற்ற நாங்கள் எடுத்த முயற்சி மிகப் பெரிய வெற்றி அளித்தது. அன்றைய காலத்தில் ஒருங்கிணக்கப்பட்ட ஒரே அமைப்பாக, மிகப் பெரிய மக்கள் செல்வாக்கோடு இருந்தது எங்களது காந்தியம் அமைப்பு. இன்னொரு பக்கம் ஈழப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறிய காலகட்டமும் அதுதான். போராட்டத்தில் மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், புத்திஜீவிகளின் பங்களிப்பும் செல்வாக்கும் அதிகமாக இருந்தன. இந்தப் போராட்டத்தின் அடிநாதமாக இருந்த எங்களைப் போன்றோரை முதலில் கைதுசெய்து சிறையில் அடைத்தது இலங்கை அரசு. 1983-ம் ஆண்டு ஏப்ரல் மாதமே என்னையும் டாக்டர் ராஜசுந்தரத்தையும் கைதுசெய்து சித்ரவதைகளுக்குப் பின் வெலிக்கடை சிறையில் அடைத்துவிட்டார்கள். அதுபோல நிர்மலா நித்தியானந்தன், ஜெகன், குட்டிமணி, தங்கதுரை உள்பட பலரையும் கைது செய்து சிறையில் போட்டார்கள். இதனால், வெளியே பெரும் கொந்தளிப்பு நிலவியது.
நாங்கள் சிறையில் இருந்த காலத்தில் வெளியில் போராளிகள் திருப்பித் தாக்கத் தொடங்கினார்கள். திருநெல்வேலி சந்திப்பில் பிரபாகரன், செல்லக்கிளி, கிட்டு, புலேந்திரன் உள்பட பல போராளிகள் ஒரு சிங்கள ராணுவ வாகனத்தைத் தாக்கியதில் 13 ராணுவத்தினர் இறந்தனர். தமிழர்களும் திருப்பித் தாக்குவார்கள் என்பதை முதன்முதலாக பலமாகச் சொன்னது அந்தத் தாக்குதல். புலிகளின் அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, தமிழர்களுக்கு எதிரான மிகப்பெரிய கலவரம் கொழும்பில் கட்டவிழ்த்து விடப்பட்டது. கொழும்பு நகரங்களான தெகிவளை, வெள்ளவெத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி தெருக்களில் போட்டு தமிழர்களைக் கொளுத்தினார்கள். லட்சம் தமிழர்கள் சொந்த நாட்டுக்குள் அகதிகள் ஆனார்கள். பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டார்கள். கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டன. எல்லாம் முடிந்த பிறகு ஊரடங்குச் சட்டத்தை அமல்படுத்தினார்கள். எரிந்துகொண்டிருந்த கொழும்பு நகரம் மரண அமைதியோடு இருக்க, வெலிக்கடை சிறைக்குள் இருந்த நாங்கள் இந்தச் செய்திகளை எல்லாம் வேதனையோடும் கொந்தளிப்போடும் கேட்டுக்கொண்டிருந்தோம். இந்தக் கலவரங்களின் ஓர் அங்கமாக நாங்களும் கொல்லப்படுவோம் என்பதை எதிர்பார்க்கவில்லை. கலவரங்கள் ஓய்ந்துவிடும்... இயல்பு நிலை திரும்பும் என நம்பிக்கொண்டிருந்த ஒருநாள் மதியத்தில் நடந்தது அந்த அகோரம்'' எனப் பெருமூச்சை வெளிப்படுத்துகிறார். நீண்ட மௌனத்துக்குப் பிறகு இறுகிய குரலில் தொடர்கிறார்...
''அன்று மதியம் இரண்டரை மணிபோல இருக்கும். நாங்கள் சிறை வளாகத்தில் மேல் தளத்தின் அறைகளில் அடைக்கப்பட்டிருந்தோம். நான், டாக்டர் ராஜசுந்தரம், பாதிரியார் சின்னராசா, டாக்டர் தர்மலிங்கம் ஆகியோர் நடுவயதைக் கடந்தவர்கள். சுமார் 40 அடி அகலமுள்ள அறைகளில் எங்களை அடைத்திருந்தார்கள். கீழ் தளத்தில் வயதில் குறைந்த இளைஞர்களையும் சிறுவர்களையும் அடைத்துவைத்திருந்தார்கள். அத்தனை பேரும் போராளிகள். திடீரென சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த சிங்களக் கைதிகள் வெளியே திறந்துவிடப்பட்டார்கள். அது அசாதாரணமாக இருந்தது. சிங்கள சிறை அதிகாரிகளே தாழ்ப்பாள்களை நீக்கி சிங்களக் கைதிகளை விடுவித்தார்கள். அவர்களுடைய கைகளில் கம்பிகள், கத்திகள், ஹாக்கி மட்டைகள் என விதவிதமான ஆயுதங்கள் இருந்தன. ஏற்கெனவே சிறையில் இருந்து விடுதலையாகிச் சென்றவர்களும் சிறை வளாகத்தினுள் கொண்டுவந்து இறக்கப்பட்டார்கள். வந்து இறங்கியவர்கள் இப்போதைய கைதிகளோடு சேர்ந்துகொள்ள, நரவேட்டை தொடங்கியது. தேடித் தேடி அடித்தார்கள்; ஓடினால் பிடித்து இழுத்து வந்து மண்டையைப் பிளந்தார்கள்.
களத்தில் தாக்குதல் என்றால் திருப்பித் தாக்கலாம்; அல்லது தப்பி ஒளியலாம். ஆனால், சிறைக்குள் எதைவைத்து எங்களைத் தற்காத்துக்கொள்வது... திருப்பித் தாக்குவது? பெரிய கூண்டுக்குள் சிக்கிக்கொண்ட எலிகளைப்போல மாட்டிக் கொண்டோம். ஒவ்வோர் அறையாகத் திறந்து, தாக்கி, அடித்தே கொன்றார்கள். கீழ்தளத்தில் இருந்து மரண ஓலம்  அதிகரித்தபடியே இருந்தது. அப்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெகன், குட்டிமணி, தங்கதுரை ஆகியோரைத் தாக்கி இழுத்துவந்து அடித்தே கொன்றார்கள். பின்னர் அந்தச் சடலங்களைப் போட்டு அதைச் சுற்றி நின்று கோஷங்களை எழுப்பினார்கள். ஒரு சின்னப் பொடியன். அவன் பெயர் மயில்வாகனன் என நினைக்கிறேன். அவனைக்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. தரதரவென இழுத்துச் சென்றபோதே அந்த உடலில் உயிர் இருக்கவில்லை.  சிறை வளாகமே பிணக்காடு ஆனது. இரவு வரை தொடர்ந்தது கொலைவெறித் தாண்டவம். அது ஓய்ந்தபோது நாங்கள் உயிருடன் இருப்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. ஏனென்றால், மேல் தளத்துக்கு அவர்கள் வரவில்லை. இருட்டிவிட்டதாலும் இதற்கு மேல் தொடர முடியாது என்பதாலும் அவர்களை அவரவர் செல்களுக்குள் அடைத்துவிட்டார்கள்.
அன்றைக்கு மட்டும் எங்கள் சிறையில் மிக முக்கியமான போராளிகளில் 37 பேர் கொல்லப்பட்டார்கள். கொழும்புக் கலவரங்கள் இந்தியாவில் மிகப் பெரிய பிரச்னைகளை உருவாக்க, சிறையில் நடந்த கொலையை மறைக்க உயரதிகாரிகள் 'விசாரணை’ என்றார்கள். ஆனால், விசாரணை அதிகாரிகளிடம் நாங்கள் எதுவும் பேசக் கூடாது என்றார்கள். வாய்த் திறந்து எங்களுக்கு நடந்த கொடுமை பற்றி சொன்னாலும், எந்த நியாயமும் கிடைக்காது என்பதால் வாயே திறக்கவில்லை. எங்களை வேறு சிறைக்கு மாற்றுமாறு நாங்கள் அந்த அதிகாரிகளிடம் கேட்டோம். 'அது முடியாது’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். வேறு வழியின்றி நாங்கள் அமைதியாகக் கலைந்துவிட்டோம். அவர்கள் 37 பேரின் உடல்களையும் உறவினர்களிடம் கொடுக்காமல் அப்படியே போட்டு எரித்தும் புதைத்தும் அழித்துவிட்டார்கள். எல்லாம் ஏதோ சொல்லிவைத்துத் திட்டமிட்டு நடப்பதுபோல தோன்றியது.
விசாரணையின் மறுநாள்... நாங்கள் எதிர்பார்த்ததுபோல மீண்டும் தாக்குதலைத் தொடங்கினார்கள். இந்த முறை மேல்தளம். மேலே வந்தவர்கள் என்னைத் தேடினார்கள். டாக்டர் ராஜசுந்தரத்துக்கு சிங்களம் தெரியும். அவர் எங்கள் சிறையின் பூட்டை உடைத்துக்கொண்டிருந்தவர்களிடம், 'எங்களை ஏன் கொல்ல நினைக்கிறீர்கள்? நாங்கள் உங்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லையே?’ எனச் சொல்லிக்கொண்டிருந்தபோதே சிறைக்கதவை உடைத்து உள்ளே வந்தார்கள். ஒரு கம்பியைக்கொண்டு ராஜசுந்தரத்தின் தலையில் ஓங்கி அடித்தார்கள். அவர் தலை பிளந்து கீழே விழுந்தார். அந்த நொடியே அவர் மரணித்தார். மேல்தளத்தில் இருந்த பாதிரியார்கள் கொல்லப்பட்டார்கள். நானும் மரணத்தை நோக்கி நின்றபோது, அன்றைய கொலைக்கான கெடு முடிந்துவிட்டதுபோல. சிறை அலாரம் ஒலித்தது. அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள். நாங்கள் கீழே அழைத்து வரப்பட்டோம். நடந்துவரும் பாதை முழுக்க பிணங்கள் சிதறிக்கிடந்தன. பெரும்பாலும் தலை சிதைக்கப்பட்டு இறந்துகொண்டிருந்தார்கள். ஒரு பாதிரியாரின் கால்கள் மெதுவாக இழுத்துக் கொண்டிருந்தன. சுவர்களில் எல்லாம் ரத்தம். நடுங்கியபடியே கீழே வந்து நின்றோம். அழைத்துச் சென்று சுட்டுக்கொன்றுவிடுவார்கள் என்றுதான் வந்தேன். சிறை முழுக்கக் கொல்லப்பட்டு சிதறிக் கிடந்த உடல்களை ஓர் இடத்தில் குவித்திருந்தார்கள். அந்தச் சடலக் குவியலில் பலர் மிச்ச சொச்ச உயிருடன், ஆயுளின் கடைசிக் கணத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தனர்.
'எங்களை வேறு சிறைக்கு மாற்றுங்கள்’ என நாங்கள் வைத்த கோரிக்கையை, எங்களில் பெரும் பாலானவர்களைக் கொன்ற பின்னர் ஏற்றுக் கொண்டனர். எஞ்சியிருந்த 48 அரசியல் கைதிகளை மட்டக்களப்பு சிறைக்கு மாற்றினார்கள்!''
ஈழ வரலாற்றின் கறுப்பு நாள் என அடையாளப்படுத்தப்படும் 'வெலிக்கடை சிறைப் படுகொலைகள்’ இரண்டு நாட்கள் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகள். தமிழீழத்துக்காகப் போராடிய அனைத்து போராளிக் குழுக்களையும் சேர்ந்த 54 பேர், அந்தப் படுகொலையில் கொல்லப்பட்டார்கள். ஆனால், ஈழப் போராட்டத்தில் அடுத்தடுத்து நடந்த திருப்பங்களுக்கு அந்தக் கொலை தாண்டவமே காரணமாக இருந்தது. அந்தத் தொடர் பின்னணியைச் சொல்லத் தொடங்கினார் டேவிட்.
''இப்போது நாங்கள் மட்டக்களப்பு சிறையில்.அங்கு நாங்கள் மாற்றப்பட்ட பிறகு இலங்கைக்கு வெளியே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன, இந்தியாவின் ஆதரவு எங்களுக்குக் கிடைத்தது. அதேசமயம் கொழும்புக் கலவரத்தைவிட வெலிக்கடை சிறைப் படுகொலைகளையே மிகப்பெரிய வெற்றியாகக் கருதியது சிங்கள அரசு. இன்னொரு பக்கம் எப்படியும் பழிவாங்கியே தீரவேண்டும் என்ற வேட்கை பல போராளிக் குழுக்களிடம் பரவிக் கிடந்தது. 'ஜூலைப் படுகொலைகள்’ நடந்து இரண்டு மாதங்கள் கழித்து, நாங்கள் நினைத்துப் பார்க்காத அந்த அதிசயம் நடந்தது. செப்டம்பர் 23-ம் தேதி இரவு ஏழே முக்கால் மணி இருக்கும். மட்டக்களப்பு சிறையைக் கைப்பற்றிய போராளிகள் ஒவ்வோர் அறையாகத் திறந்து சுமார் 60 பேரை விடுதலை செய்தனர். வெலிக்கடையில் தப்பியவர்கள் உள்பட பலரும் மட்டக்களப்பு சிறையில் இருந்து தப்பி, காடுகளுக்குள் சென்றோம். அப்போதுதான் நானும் தப்பித்தேன்!''  என்று சொல்லிவிட்டு ஆழமான யோசனையில் மூழ்குகிறார் டேவிட்.
மட்டக்களப்பு சிறை உடைப்பு சம்பவத்துக்குப் பல்வேறு போராளிக் குழுக்களும் உரிமை கோர, அதுவரை போராளிக் குழுக்களிடையே இருந்த போட்டி மனநிலையைப் போர்க்குண  வன்மமாக மாற்றியது. பொது எதிரிக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் தங்களுக்குள்ளேயே சுட்டுக்கொண்டார்கள். இந்தப் பகை வளர்ந்து சென்னை வரை நீடித்து, சூளைமேட்டில் பத்மநாபா படுகொலை வரை சென்று, ஈழப் போராட்டத்தில் பெரும் பாதகத்தை விளைவித்தது.
''அப்போது சிறிதும் பெரிதுமாக சுமார் 30-க்கும் மேற்பட்ட போராளிக் குழுக்கள் இயங்கிவந்தன. இதில் விடுதலைப்புலிகள், பிளாட், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈரோஸ்... ஆகியவை முக்கியமான அமைப்புகளாக தமிழகத்திலும் ஈழத்திலும் இருந்து செயல்பட்டன. எல்லா அமைப்புகளிலும் சேர்த்து மொத்தம் 30 ஆயிரம் பேர் போராளிகளாக இருந்தோம். இலங்கை ராணுவத்திடம்கூட அப்போது அவ்வளவு எண்ணிக்கையில் ராணுவத்தினர் இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே! எங்களுக்குத் தேவையான பயிற்சியை, ஆயுதங்களை இந்தியா கொடுத்தது. ஆனால் பத்மநாபா கொலைக்கு முன்னரே, எதிர்பாராத வகையில் சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான முனையத்தில் ஒரு குண்டு வெடித்தது. அதில் 29 அப்பாவிகள் பலியானார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இந்தக் குண்டுவெடிப்புக்கு இலங்கை அரசு, போராளிகள் மீது பழிபோட்டது.
சகோதரக் கொலைகள், குண்டுவெடிப்பு, மக்களுடனான ஆயுதமோதல்... போன்ற தொடர் சம்பவங்களுக்குப் பின்னர் போராளிகள் மீது இந்தியாவின் கண்காணிப்பு இறுகியது. இந்தியாவில் ஈழப் போராளிகளுக்குச் சோதனைக் காலம் தொடங்கியது அப்போதிருந்துதான். அந்தக் காலகட்டம் முதல் கூட்டம் கூட்டமாக அப்பாவித் தமிழ் மக்களை, இலங்கையில் சிங்கள ராணுவம் கொன்றுகுவித்தது. போராளிகள் இலங்கை ராணுவத்தால் வேட்டையாடப்பட்டு இறந்தபோது, செத்தவன் அடுத்த இயக்கத்தைச் சார்ந்தவன்தானே என அடுத்தடுத்த போராளிக் குழுக்கள் அஞ்சலி செலுத்தாமல் அலட்சியம் செய்தன. ஈழம் என்பது இரண்டாம்பட்சமாகி, அமைப்புகளுக்கு இடையில் ஈகோ பிரதானம் ஆனது. ஒவ்வொரு குழுவும் இன்னொரு குழுவின் தலைவரைக் கொல்லத் தேடினார்கள். சிறி சபாரத்தினம், பத்மநாபா உள்பட பல போராளித் தலைவர்கள் கொல்லப்பட்டனர். அனைத்து இயக்கங்களுமே அந்தக் கொலைகளில் கை நனைத்தன. எமது இளைஞர்களோடு சேர்ந்து  ஈழத்துக்காகப் போராடுவோம் என்று வந்த நான்,  என்னோடு வந்த அத்தனை பேரையுமே கொலைகளில் இழந்தேன். அதோடு இயக்க அரசியலே வேண்டாம் என ஒதுங்கினேன். இடையில் ஓடிக் கடந்துவிட்ட இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ அனுபவங்கள். ஆனால் ஈழம் தொடர்பாக இப்போது என்னிடம் எஞ்சியிருப்பது கறுப்பு நினைவுகளே. என்றாவது ஒருநாள் ஈழ மக்களுக்கு விடிவு வரும் என நம்பிக்கையுடன் இந்த உயிரை இன்னும் பற்றிக்கொண்டிருக்கிறேன்'' என்கிற டேவிட் ஐயாவின் கண்ணீர் கன்னம் நனைக்கிறது!

அந்த நாள்... - 9

- Vikatan

அந்த நாள்... - 9
டி.அருள் எழிலன்
படங்கள்: உ.பாண்டி, கே.குணசீலன்
ந்த ஒற்றைக் கொலை, தமிழகத்தையே அதிரச் செய்தது. அதுவும் அது திட்டமிட்ட கொலையும் அல்ல; கொலை செய்யப்பட்டவர் பிரபலமானவரும் அல்ல. ஆனால், நாத்திகக் கருத்துக்களைத் தீவிரமாகப் பிரசாரம்செய்து, தேர்தலில் வென்று, ஆட்சிக் கட்டிலில் தி.மு.க கோலோச்சிக் கொண்டிருந்த அந்தச் சமயத்தில், மன்னார்குடியின் பிரமாண்ட ராஜகோபால சுவாமி கோயிலில் மூலவர் வாசுதேவப் பெருமாள் பார்த்திருக்க, செங்கமலத் தயாரின் மூலஸ்தானத்திலேயே அந்தக் கோயிலின் குருக்கள் கொல்லப்பட்டதே அந்தப் பேரதிர்ச்சிக்குக் காரணம்!
'இது நாத்திகர்களின் அரசு என்பதால், கோயில் குருக்களுக்குக்கூடப் பாதுகாப்பு இல்லை’ எனக் கொலை வழக்கு அரசியல்ரீதியாக விஸ்வரூபம் எடுத்தது. விரைவில் குற்றவாளிகளைப் பிடித்து, சடசடவென ஆறே மாதங்களில் வழக்கை நடத்தி முடித்து, கோயில் குருக்களைக் கொன்ற பெரியகருப்பனுக்குத் தூக்கும், கோயில் நகைகளைக் கொள்ளையடித்ததற்காக வீரபாண்டியனுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டன. மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றம் வரை சென்றும் தூக்கு உறுதியானது. கடைசி நம்பிக்கையான ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்ட கருணை மனுவும் நிராகரிக்கப்பட, மறுநாள் விடியலில் தூக்கு மேடை ஏறக் காத்திருந்தார்  பெரியகருப்பன். ஆனால், ஒரு திருப்பத்தில் அந்தத் தூக்கு ரத்து ஆனது! பல வருட சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலையான வீரபாண்டியன் இறந்துவிட, இப்போது கமுதியில் பணியாரம் விற்றுக்கொண்டிருக்கிறார் பெரியகருப்பன். குழி விழுந்த கன்னம், மெலிந்த தேகம் என, வாடி வதங்கியிருக்கிறார் பெரியகருப்பன். ஆனால், அவரின் மீசை மட்டும் கம்பீரமாக முறுக்கி நிற்கிறது. நான்கு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்துவிட்டு மனைவியோடு கமுதியில் வாழ்கிறார். இவரது தூக்கு ரத்து ஆனதுதான் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோருக்குத் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு முன்மாதிரி. அந்த நாட்களில் அப்படி என்னதான் நடந்தது? ஆரம்பம் முதல் கதை சொல்லத் தொடங்கினார் பெரியகருப்பன்.
''கமுதிதான் எனக்குப் பூர்வீகம். வீட்ல வறுமை. அதுக்காக திருடுற அவசியம் எதுவும் இல்லை. படிப்பும் மண்டையில ஏறலை. மெட்ராஸ்ல ஒரு பிஸ்கட் கம்பெனியில் வேலைபார்த்தேன். ஆனா, மெட்ராஸ் பிடிக்கலை. திரும்ப கமுதிக்கு வந்து இன்னொரு பிஸ்கட் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். என் அத்தை மக அழகா இருப்பா. ஆசைப்பட்டுக் கட்டிக்கிட்டேன். வரிசையா ரெண்டு பொண்ணுங்க பொறந்தாங்க. மூணாவது பிள்ளை நாலு மாசமா கர்ப்பமா இருந்தப்போ, என் மச்சான் வீரபாண்டியன் வந்து 'தஞ்சாவூருக்குப் போய் அரிசி வியாபாரம் பண்ணலாம். வாடா...’னு கூட்டிட்டுப் போனார்.
தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம், மன்னார்குடினு பல ஊர்களைச் சுத்தினோம். ஆனா, எல்லா ஊர்கள்லயும் கோயில்களுக்கு மட்டுமே கூட்டிட்டுப் போனார். 'மச்சான்... அரிசி வியாபாரம்னு சொல்லிட்டு, கோயில் கோயிலா சுத்துறியே!’னு கேட்கிறப்பலாம், 'வாயை மூடிட்டுப் பேசாம வாடா’னு சொல்வார். மூணு வேளை நல்லா சாப்பிட்டு கோயில், குளம்னு சுத்திட்டு நல்லாத் தூங்கினோம். பல  கோயில்களைச் சுத்திப் பார்த்துட்டு கடைசியில மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலுக்குப் பக்கத்துல ரூம் போட்டுத் தங்கினோம். தினமும் காலையில குளிச்சு முடிச்சதும், கோயிலுக்குப் போயிருவோம். பயபக்தியா சாமி கும்பிடுவோம். சீனிவாசக் குருக்கள் நீட்டுற ஆராதனை தட்டுல எல்லோரும் சில்லறை காசு போடுவாங்க. என் மச்சான் மட்டும் 10, 20, 50-னு ரூபாய் நோட்டு போடுவார். அப்படி அதிக காணிக்கை போட்டு பயபக்தியோடு சாமி கும்பிட்டதால, குருக்களுக்கு எங்களை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. செங்கமலத் தாயார் சந்நிதிக்கு நாங்க போனா ராஜமரியாதை கிடைக்கும். திரையை விலக்கி உடனடி தரிசனம் கிடைக்கும். இப்படியே நாளும் பொழுதும் போயிட்டு இருந்தது.
திடீர்னு ஒருநாள், 'அம்பாளுக்குப் போட்டிருக்குற நகைகளைப் பாத்தியாடா. உனக்கு என்ன தோணுது?’னு மச்சான் கேட்டார். 'பணக்கார அம்பாள்போல மச்சான். நம்பவே முடியலை’னு சொன்னேன். 'டேய்... அந்த நகைகளைக் கொள்ளையடிக்கப் போறோம்டா. அதுக்குத்தான் இத்தனை நாளா அந்தக் குருக்களோடு பழகினேன். இப்போலாம் நாம போன உடனே சீனிவாச குருக்கள் உற்சாகமாயிடுறார் பார்த்தியா... நீ என்ன சொல்ற?’னு கேட்டார். நான் 'சரி’னு மட்டும் சொன்னேன்'' என்றவர் பேசுவதை நிறுத்திவிட்டு தோள்களைச் சிலுப்பிக்கொண்டார்.
அதிகாலையில் கோயிலுக்குச் சென்று குருக்களிடம் அவசரமாக சுவாமியைத் தரிசிக்க வேண்டும் எனக் கேட்பது, குருக்கள் கர்ப்பக்கிரகத்தைத் திறந்ததும் அவரைக் கட்டிப்போட்டுவிட்டு நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு ஓடுவது, அந்த நகைகளை உடனடியாக உருக்கி விற்பது... இதுதான் வீரபாண்டியனின் கோயில் கொள்ளைத் திட்டம். இதற்குத்தான் பெரிய கருப்பனைத் துணைக்குச் சேர்த்துக் கொண்டார். 31 நாட்கள் மன்னார்குடி அஜந்தா லாட்ஜில் தங்கி நோட்டம் பார்த்த பிறகு, மீண்டும் கமுதி வந்து பெரிய சாட்டைக் கயிறு ஒன்றையும், கொஞ்சம் துணிகளையும் வாங்கிக் கொண்டு மீண்டும் மன்னார்குடி சென்றனர் இருவரும். திட்டத்தை நிறைவேற்ற நாள் குறித்துக் காத்திருந்தனர். அந்த நாள் வந்தது!
''அன்னைக்கு அதிகாலையிலயே கோயில் குருக்கள் சீனிவாச தீட்சிதர் வீட்டுக்கே போய், 'வியாபார விஷயமா அவசரமாக வெளியூர் போறோம். அதுக்கு முன்னாடி அம்பாள் ஆசியும் தரிசனமும் வேணும்’னு சொன்னோம். கர்ப்பக்கிரகத்துக்கு ரெண்டு சாவிகள். அதுல ஒண்ணு குருக்கள்கிட்ட இருக்கும். இன்னொண்ணு அறநிலையத் துறை அதிகாரியிடம் இருக்கும். குருக்கள் போய் அந்த அதிகாரிகிட்ட இருந்து சாவியை வாங்கிட்டு வந்தார். அப்படி அவர் வர்றப்போ பொலபொலனு விடிஞ்சிருச்சு. கோயிலைத் திறந்து திரையை விலக்கி செங்கமலத் தாயாருக்கு அவர் அலங்காரம் பண்ண ஆரம்பிச்சார். அப்போ வீரபாண்டியன் கண்ணைக் காட்ட நான் குருக்களைக் கட்டிப்போடுறதுக்காக கயிற்றோடு அவரை நெருங்கினேன். ஆனா, அவர் சட்டுனு 'என்ன நடக்குது?’னு சுதாரிச்சு  என்னைக் கீழே தள்ளிவிட்டார். அவர் என்னைவிட வலு. 'ஐயோ... குருக்கள் சத்தம் போட்டா காரியம் கெட்டுருமே’னு நான் பக்கத்துல இருந்த அரிவாளை எடுத்து குருக்களோட கழுத்திலும் தலையிலும் வெட்டினேன். அம்பாள் கர்ப்பக்கிரகத்துலயே சரிந்து விழுந்தார் சீனிவாச தீட்சிதர்.
நான் குருக்களை வெட்டிட்டு இருக்கும்போதே, வீரபாண்டியன் நகைகளை அள்ளி பையில போட்டுட்டுத் தப்பிச்சு ஓடிட்டார். நான் ரத்த வெள்ளத்தில் துடிச்சுட்டு இருந்த குருக்களை ஓரமா ஒதுக்கிட்டு, கர்ப்பக்கிரகத்தை திரையைப் போட்டு மூடினேன். ஆனா, அப்பவே சிலர் சாமி கும்பிட வந்துட்டாங்க. நான் கோயிலைவிட்டு வெளியேறும் போது, பக்தர்கள் என்கிட்ட  'குருக்கள் எங்கே?’னு கேட்டாங்க. 'அவர் விஷேச பூஜையில இருக்கார். போயிட்டு அப்புறம் வாங்க’னு சொல்லிட்டு கோயில் கதவை நெருங்கிட்டேன். அப்ப, 'அய்யோ... குருக்களை யாரோ வெட்டிப் போட்டிருக்காங்க’னு ஒருத்தர் கத்திட்டார். உடனே காவலாளி கோயில் கதவை மூடிட்டார். நான் என்ன பண்றதுனு தெரியாம அரிவாளால அவரையும் வெட்டிட்டு மெயின் ரோட்டுக்கு ஓடினேன். வெளியே வந்ததும் எனக்கு எதுவுமே தெரியாத மாதிரி மெதுவா நடக்க ஆரம்பிச்சேன். ஆனா, என் சட்டையில பின்னாடி சிதறியிருந்த ரத்தத்தைக் கவனிக்கலை. குருக்களை வெட்டிய தகவல் பரவிட்டதால, ரத்தக்கறை சட்டையோட நடந்துவந்துட்டு இருந்த என்னை, ஒரு போலீஸ்காரர் ஓடிவந்து பிடிச்சார். நான் அவரைத் தள்ளிவிட்டுட்டு ஓடினேன். துப்பாக்கியால் சுட்டார். வயித்துல குண்டு பாய்ஞ்சு கீழே விழுந்துட்டேன். கைது பண்ணி மன்னார்குடி மருத்துவமனைக்குக் கொண்டுபோனாங்க. கோயில் குருக்களைக் கொன்று நகைகளைக் கொள்ளையடிச்சதா என்னை முதல் குற்றவாளியாவும், வீரபாண்டியனை ரெண்டாவது குற்றவாளியாவும் பதிஞ்சு வழக்கு போட்டாங்க!'' என்று நிறுத்தி பெருமூச்சு விடுகிறார் பெரியகருப்பன்.
நகைகளோடு தப்பிச்சென்ற வீரபாண்டியன் நீடாமங்கலம் ரயில் நிலையம் அருகே அவற்றைப் புதைத்துவிட்டு சென்னைக்குத் தப்பிச் சென்றார். 11 நாட்கள் கழித்து ராயப்பேட்டையில் அவரைக் கைதுசெய்து பின்னர் நகைகளை மீட்டிருக்கிறது போலீஸ்.    
''எனக்கு இலவச வக்கீலாக வாதாடியவர் முகம்மது சாலி; வீரபாண்டியனுக்கு வி.எஸ்.ராமலிங்கம்; நீதிபதியாக இருந்தவர் ஒரு கிறிஸ்தவர்; வழக்கை விசாரித்த காவல் துறை தலைவர் அருள் ஒரு கிறிஸ்தவர்; அப்ப முதலமைச்சரா இருந்த கருணாநிதியோ கடவுள் நம்பிக்கை இல்லாதவர். இவ்வளவு பின்னணிகளோடு அந்த வழக்குக்கு மதச்சாயம் பூசினாங்க. 'நாத்திகர்களால் குருக்களுக்கும் கோயில் நகைகளுக்கும் பாதுகாப்பு இல்லை’னும் அப்ப பிரசாரம் பண்ணாங்க. இதனால் அரசுத் தரப்பு எங்களுக்கு எதிரா மிகக் கடுமையாக நீதிமன்றத்தில் வாதாடினாங்க. ஆறே மாசத்துல எனக்குத் தூக்குத் தண்டனையும், வீரபாண்டியனுக்கு ஆயுள் தண்டனையும் கொடுத்து தீர்ப்பு வந்தது. எனக்குத் தூக்குனு தீர்ப்பு வந்த அன்னைக்கு ராத்திரி, என் மனைவிக்குப் பெண் குழந்தை பிறந்தது. 'சத்யா’னு பேர் வெச்சோம்!''
இருவருக்கும் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடுகள் பலன் அளிக்கவில்லை. ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்ட கருணை மனுவும் நிராகரிக்கப்பட, அதில் இருந்து ஏழு நாட்களுக்குள் சென்னை சென்ட்ரல் சிறையில் தூக்கிலிடப்பட காத்திருந்தார் பெரியகருப்பன்.
''கருணை மனுவை நிராகரிச்சுட்டாங்கனு தகவல் வந்ததும் எனக்கு உடம்பு நடுங்க ஆரம்பிச்சிருச்சு. எதுவும் சாப்பிடப் பிடிக்கலை. செய்யக் கூடாத ஒரு தப்பு பண்ணிட்டு பிள்ளைகளையும் சம்சாரத்தையும் தவிக்க விட்டுட்டுப் போறோமேனு அழுதுட்டே இருந்தேன். முன்னாடி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா.பாண்டியன், தோழர் ஜீவா போன்றவர்கள் தலைமறைவா இருந்தபோது அவங்களுக்குச் சின்னச் சின்ன உதவிகள் செஞ்சிருக்கேன். அந்த அறிமுகத்தில் என்னைத் தூக்கில் இருந்து காப்பாத்தச் சொல்லி தா.பாண்டியனுக்குக் கடிதம் எழுதினேன். அவர் எனக்காக சில வழக்கறிஞர்களை வெச்சு உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார். 'பெரியகருப்பனின் கருணை மனு மீது முடிவெடுக்க நான்கு ஆண்டுகள் காலதாமதம் ஏன்?’ அப்படினு கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம், என் தூக்குக்குத் தடை விதிச்சது. 'விடிஞ்சா செத்துருவோம்’னு நினைச்சுட்டு நான் தூங்காம இருந்தேன். அப்போ அதிகாலை 2.30 மணிக்கு சிறை அதிகாரிக்கு என் தூக்குக்குத் தடை உத்தரவு வந்தது. கடைசி நிமிஷத்துல நான் பிழைச்சேன்!'' - அந்த இரவின் பதற்றத்தை இப்போதும் பிரதிபலித்தன அவரது வார்த்தைகள்.
கருணை மனு மீது முடிவெடுக்க காலதாமதம் ஆனதைக் காரணம்காட்டி தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க முடியும் என்ற நடைமுறைக்கு தமிழகத்தில் முன்னுதாரணம் ஆனது பெரியகருப்பனின் வழக்குதான். பின்னர் ஆயுள் கைதியாக சிறையில் காலம் கழித்த பெரியகருப்பன், மொத்தம்                 14 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை ஆனார்.
''27 வயசுல ஜெயிலுக்குப் போயிட்டு 41 வயசுல வெளியே வந்தேன். இப்பவும் என் மனைவி, பிள்ளைகளைத் தவிர என் குடும்பத்தினர், உறவினர்கள் யாரும் என்னை ஒரு மனுஷனாக்கூட ஏத்துக்கலை. அதையும் மீறி இப்ப ஏன் நான் இதையெல்லாம் பேசுறேன்னா, அதுக்கு ரெண்டு காரணங்கள் இருக்கு. ஒண்ணு, இறைவன் படைச்ச உயிரை எடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. அதுக்காக என்னைக்காவது அந்த குருக்களின் வாரிசுகளிடம் நான்  மன்னிப்பு கேட்கணும். ரெண்டாவது திருட்டை சாகசம் நிறைஞ்ச ஒரு தொழிலாக யாரும் நினைக்கக் கூடாது. இன்னொருத்தவங்க உழைச்சு சம்பாதிச்ச காசை களவாடுறது மாதிரியான பாவம் வேற எதுவும் இல்லை!'' என்று சொல்லிக்கொண்டே முறுக்குமீசையைத் தடவிக்கொடுக்கும் பெரிய கருப்பன் நிலைகுத்திய பார்வையுடன் அமர்ந்திருந்தார். சட்டெனக் கலைந்து  தன் மனைவி சுட்டுவைத்த பணியாரங்களை எடுத்துக்கொண்டு வியாபாரத்துக்குக் கிளம்புகிறார்.

எப்படி இருக்கிறார்கள் சீனிவாச தீட்சிதரின் வாரிசுகள்?
சீனிவாச தீட்சிதர் கொல்லப்பட்ட பின், அவரது மகன் ராமானுஜ தீட்சிதர் கோயில் குருக்கள் ஆனார். 80 வயதை எட்டிய ராமானுஜரும், அவரது மகன் வெங்கடேச தீட்சிதரும்தான் இப்போது மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலின் குருக்கள்.  
''தாத்தா கொலை செய்யப்பட்டப்போ எனக்கு மூணு வயசு. தாத்தாவைக் கொலை பண்ணவங்களைப் பத்தி அப்பவே நாங்க எதுவும் சொல்லலை. ஏன்னா எது சரி, எது தப்புனு புரியாம அந்தத் தப்பைச் செஞ்சுட்டாங்க. அதனால நாங்க அவங்களை மன்னிச்சு விட்டுட்டோம். அவங்களும் எங்கேயாவது நல்லபடியா வாழ்ந்தால் போதும்'' என்கிறார் வெங்கடேச தீட்சிதர்.
''பெரியகருப்பன் உங்களைச் சந்தித்து மன்னிப்பு கேட்க விரும்புகிறார். நீங்கள் அவரைச் சந்திப்பீங்களா?'' என்று அவரிடம் கேட்டால், ''வேண்டாம். அது முடிஞ்சுபோன கதை. இனிமே அவரைச் சந்திச்சு என்ன ஆகப்போகுது? அவர் நல்லபடியா வாழ்ந்தா,  அதுவே போதும்'' எனச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

அந்த நாள்... - 8

- Vikatan

14 வருடங்களுக்கு முன்பு மதுரை வில்லாபுரத்தில் குடிநீர்க் குழாய் கிடையாது. அந்தப் பகுதி மக்களுக்குத் தேவையான தண்ணீரை மாநகராட்சிதான் விநியோகம் செய்தது. அங்கு கோலோச்சிய அரசியல் ரௌடிகள் சிலர் குடிதண்ணீரை விலைவைத்து விற்றனர். அப்போது, அந்தப் பகுதியின் கவுன்சிலராகத் தேர்வானார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த லீலாவதி. பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே அவர் படுகொலை செய்யப்பட்டார். தண்ணீருக்காக உள்ளூர் யுத்தத்தில் ஏற்பட்ட முதல் பலி லீலாவதி. அன்று என்ன நடந்தது?
முன்கதையோடு முழு விவரமும் சொல்கிறார் லீலாவதியின் கணவர் குப்புசாமி. இவர் தன் மனைவியின் மரணத்துக்குப் பிறகு வில்லாபுரத்தில் இருந்து வெளியேறிவிட்டார். இப்போது பித்தளைப் பட்டறை ஒன்றை நடத்திவருகிறார்.
''எனக்கும் லீலாவதிக்கும் மதுரைதான் பூர்வீகம். 1977-ல் கல்யாணம் ஆச்சு. அப்போ நான் கம்யூனிஸ்ட் கட்சிப் பணிகளில் தீவிரமா இருந்தேன். லீலாவதிக்கு வீட்ல நெசவு வேலை. அப்போ நான் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாவட்ட நிர்வாகியா இருந்தேன். அந்தச் சங்கத்தில் பெண்களின் பங்களிப்பும் தேவைனு கட்சி முடிவெடுத்தது. ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினரா லீலாவதியைச் சேரவெச்சேன். அப்புறம் தோழர்கள் அவங்கவங்க உறவினர்களைச் சேர்த்தாங்க. அப்படித்தான் பொது வாழ்க்கைக்கு வந்தார் லீலாவதி.
பிறந்தது முதலே வறுமையில் வளர்ந்த லீலாவதிக்கு, இயல்பாகவே ஏழைகள் மீது கரிசனம் இருந்தது; அவர்களின் உரிமைகளைத் தட்டிப்பறிக்கிறவங்க மீது கோபம் இருந்தது. பெரும்பாலும் கட்சி வேலை. மத்த நேரம் கைத்தறி நெசவுனு போச்சு எங்க வாழ்க்கை. சாதாரணப் பள்ளியில்தான் பிள்ளைகளைப் படிக்கவெச்சோம். வீட்டுக்குள் வறுமை. ஆனா, வீட்டுக்கு வெளியே லீலாவதியின் செல்வாக்கு பெருகுச்சு. கட்சிப் பணியும் சமூகச் செயல்பாடுகளும் அவரைக் குறுகிய காலத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆக்கியது. கைத்தறி நெசவாளர் மாநில சம்மேளனத்தின் துணைத் தலைவர் பதவி வந்துச்சு. முக்கியமா வில்லாபுரம் பகுதி மக்களின் நம்பிக்கையைப் பெரும் அளவு சம்பாதிச்சார் லீலாவதி. அது நல்லதுக்கா, கெட்டதுக்கானு தெரியாம அப்போ சந்தோஷப்பட்டோம்!'' என்கிற குப்புசாமியின் குரல்  மௌனமாகிறது.
1996-ல் தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மூன்றில் ஒரு பங்குத் தொகுதிகள் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டன. அப்போது தமிழகத்தில் இருந்த கட்சிகளில் தலைமை தொடங்கி கீழ்நிலைத் தலைவர்கள் வரை அனைவரும், பெண்களுக்கான தொகுதியில் அவரவர் வீட்டுப் பெண்களைக் களம் இறக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் மக்களிடையே செல்வாக்கோடு இருந்த லீலாவதியை 59-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு நிறுத்தியது. அதுவரை தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்த வில்லாபுரத்தை தேர்தல் வெற்றியின் மூலம் சி.பி.எம் கைப்பற்றியது. அது லீலாவதி என்ற தனிநபரின் செல்வாக்குக்குக் கிடைத்த வெற்றி. அப்போது வில்லாபுரம் பகுதி மக்கள் சந்தித்த பிரதான பிரச்னைகள் மூன்று... குடிநீர், ரேஷன் விநியோக முறைகேடு, அரசியல் ரௌடியிஸம்.
தேர்தல் வெற்றிக்குப் பிறகான நிலவரம் சொல்கிறார் குப்புசாமி. ''வில்லாபுரத்தில் கைத்தறித் தொழிலை நம்பி வாழ்ந்த அன்றாடங்காய்ச்சிகளின் எண்ணிக்கை அதிகம். சிலர் அந்த வறுமையை வருமான வாய்ப்பா பாத்தாங்க. ஏழைகளுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்து வசூலிக்கிறது, ரேஷன் கடை சாமான்களைக் கடத்துறது, குடிதண்ணிக்கு விலைவெச்சு விக்கிறதுனு ரௌடியிஸம் கொடி கட்டிப் பறந்தது. அப்போ வில்லாபுரத்தில் ஒரு நாள்விட்டு ஒரு நாள்தான் தண்ணீர் வரும். தண்ணீர் கொண்டுவரும் மாநகராட்சி தண்ணீர் லாரியைக் கைப்பற்றி, ரௌடிகள் விலைவெச்சு விப்பாங்க. ஒரு குடம் தண்ணீர் 50 பைசாவில் தொடங்கி, இரண்டு ரூபாய் வரை விலைபோகும். ஹோட்டல்காரங்க தண்ணிக்கு நிறையக் காசு கொடுப்பாங்கனு, மக்களுக்குக் கொடுக்க வேண்டிய தண்ணியை அவங்களுக்கு வித்துடுவாங்க. அதிலும் வெயில் காலத்துல குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காது. அப்பப்போ வர்ற லாரித் தண்ணியைப் பிடிக்க மக்கள் கூட்டம் அடிச்சுக்கும். இப்படி தண்ணீர்ப் பஞ்சத்தைச் செயற்கையா உண்டாக்கி, அப்புறம் தண்ணீரைக் கொள்ளைக் காசுக்கு வித்துட்டிருந்தாங்க. எப்பவும் ஊர் தண்ணீர்ப் பஞ்சத்துலயே இருக்கணும்னு, வில்லாபுரம் பகுதியில் அரசாங்கம் குடிநீர்க் குழாயோ, குடிநீர்த் தொட்டியோ அமைச்சுடாமப் பார்த்துக்கிட்டாங்க. ஏன்னா, குடிநீர்க் குழாய் வந்துட்டா மாநகராட்சி தண்ணீர் லாரியை எதிர்பார்த்து யாரும் காத்திருக்கத் தேவைஇல்லையே!
இந்த நிலைமையை எப்படியாவது மாத்தணும்னு லீலாவதி முடிவெடுத்தாங்க. வில்லாபுரத்தில் தண்ணீர்க் குழாய்களும், தண்ணீர்த் தொட்டியும் அமைக்கணும்னு மதுரை மேயருக்கு மனுகொடுத்தார். மக்களைத் திரட்டி தொடர்ச்சியாப் போராடினாங்க. மாநகராட்சிக் கூட்டத்தில் குரல்கொடுத்தாங்க. இப்படிப் பல போராட்டங்கள் காரணமா வில்லாபுரம் பகுதியில்  குடிநீர்க் குழாய்களை அமைக்கும் வேலையை ஆரம்பிச்சது மாநகராட்சி. குழாய் மூலம் தண்ணீர் விநியோக சோதனையும் நடந்து முடிஞ்சது. தண்ணீர் மக்களை நோக்கி நெருங்கி வர வர, லீலாவதியின் மதிப்பு மக்களிடம் அதிகரிச்சது.
இன்னொரு பக்கம் ஏரியா கவுன்சிலர் என்கிற முறையில் ரேஷன் கடை முறைகேடுகளைத் தட்டிக் கேட்டாங்க. தப்பு நடக்கும் ரேஷன் கடைகளைத் தீவிரமாக் கண்காணிச்சாங்க. ஏரியாவில் ஒவ்வொரு கடையிலும் ரௌடிகள் தண்டல் வசூலிப்பாங்க. அதனால் கோபத்தில் இருந்த வியாபாரிகள் ஆதரவும் லீலாவதிக்குக் கிடைச்சது. அது வரை அரசியல் செல்வாக்கோடு எல்லா அராஜகமும் பண்ணிட்டு இருந்த கும்பலுக்கு, லீலாவதியின் வேலைகள் பெரிய தடங்கலாச்சு. ஒட்டுமொத்த வருமானத்தையும் லீலாவதி காலி பண்றாங்கனு கடுப்பு. ஆனா அதைப் பத்தி கவலைப்படாம, 'என்ன பண்ணிடுவாங்க?’னு வழக்கம்போல வேலைபாத்துட்டு இருந்தோம். ஆனா, 'என்ன வேணா பண்ணுவாங்க’னு அப்போ எங்களுக்குத் தெரியலை'' - சின்ன இடைவெளி கொடுத்துத் தொடர்கிறார்.
''தொழிலாளர் தினத்துக்கு ஒரு வாரம் இருந்துச்சு. எங்க பகுதியில் அதை எப்படிக் கொண்டாடுறதுனு பேசிட்டு இருந்தோம். அன்னைக்கு புதன்கிழமை. காலையில எந்திரிச்சு டீ குடிச்சுட்டு தோழர்களைப் பார்க்கக் கிளம்புனேன். எண்ணெய் வாங்குறதுக்காக பக்கத்து மளிகைக் கடைக்குப் போனாங்க லீலாவதி. நான் கொஞ்ச தூரம் தள்ளி தோழர்களோடு பேசிட்டு இருந்தேன். அப்போ திடீர்னு, 'ஒரு பொம்பளையை வெட்டுறாங்க... வெட்டுறாங்க’னு அலறுனாங்க. என்ன... ஏதுனு ஓடி வந்தப்போ, 'தோழர்... உங்க மனைவியைத்தான் வெட்டிப் போட்டிருக்காங்க’னு சொன்னாங்க. எனக்கு கண்கள் எல்லாம் இருட்டிட்டு வந்தது. தெருவில் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்கக் கிடந்தா லீலாவதி. உயிர் பிழைச்சுடவே கூடாது, ஆஸ்பத்திரி தூக்கிட்டுப் போறதுக்குள்ள உயிர் போயிடணும்னு கழுத்துப் பகுதியிலேயே குறிவெச்சு வெட்டியிருக்காங்க. கண்ணு முன்னாடி துள்ளத்துடிக்க செத்துப்போயிட்டா என் மனைவி!'' -அந்த நாளின் நினைவுகள் அழுத்த, குரல் நடுங்குகிறது குப்புசாமிக்கு.
''ஆனா, என் மனைவியின் உயிரை எடுத்தவங்களால், அவங்களால் கிடைச்ச உரிமைகளைத் தடுக்கமுடியலை. லீலாவதி மரணம்தான் இந்தப் பகுதியில் ஓர் அரசியல் மறுமலர்ச்சியைக் கொண்டுவந்துச்சு. லீலாவதி படுகொலை செய்தி பரவியதும் மதுரை ஸ்தம்பிச்சது. ஊர் முழுக்கப் பதற்றம். சுமார் 10 கி.மீ தூரம் வரை லீலாவதி இறுதி ஊர்வலம் நடந்துச்சு. வழி முழுக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்னு அஞ்சலி செலுத்தினாங்க. எங்கே பார்த்தாலும் ஜனத்திரள். யாருமே சொல்லாமல் கடைகளை அடைச்சாங்க மதுரை வியாபாரிகள். பொதுமக்கள்கிட்ட இருந்து அப்படி ஒரு எழுச்சி ஏற்படாமப்போயிருந்தா, லீலாவதி சிந்தின ரத்தம் காய்றதுக்குள்ள வழக்கை இழுத்து மூடியிருப்பாங்க!''
லீலாவதி கொலை வழக்கில் வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் உள்ளிட்ட சிலர் கைதுசெய்யப்பட்டனர். வில்லாபுரம் பகுதியில் தன் அரசியல் சாம்ராஜ்யத்தை நிறுவியிருந்த முத்துராமலிங்கம், அந்த வார்டு கவுன்சிலர் பதவிக்கு தன் தம்பி மனைவியை வேட்பாளர் ஆக்கினார். ஆனால், மக்கள் அபிமானத்தால் லீலாவதி வெற்றிபெற்றார். ஒரு கவுன்சிலராக லீலாவதியின் செயல்பாடுகள் முத்துராமலிங்கத்தை அரசியல்ரீதியாப் பாதித்திருக்கிறது. அதுவே லீலாவதியைக் கொலைக்கு வித்திட்டிருக்கிறது.
முதன்முதலாக கம்யூனிஸ்ட்டாக வில்லாபுரத்தில் வென்றவர் லீலாவதி. இன்று வரை அங்கு கம்யூனிஸ்ட்களைத் தவிர இன்னொரு கட்சி வெல்ல முடியாத அளவுக்கு காற்றோடு கலந்திருக்கிறது லீலாவதியின் தியாகம். வில்லாபுரம் பகுதிக்கு குடிநீர்க் குழாயில் முதலில் தண்ணீர் வந்தபோது, குடங்களில் தண்ணீர் பிடித்த மக்கள் அதை வீட்டுக்குக் கொண்டுசெல்லவில்லை. லீலாவதி வெட்டிக்கொல்லப்பட்ட இடத்துக்குச் சென்று அந்தத் தண்ணீரை ஊற்றி அஞ்சலி செலுத்தினார்கள். ஏனெனில், அந்தப் பகுதி மக்கள் அருந்தும் ஒவ்வொரு துளி நீரிலும் கலந்திருக்கிறது லீலாவதியின் ஆன்மா!

லீலாவதி கொலை வழக்கின் பின்னணி!
லீலாவதி கொலை வழக்கில் கருமலையன், முத்துராமலிங்கம், முருகன், மருது, சோங்கன், மீனாட்சி சுந்தரம் என, கைதுசெய்யப்பட்ட ஆறு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது மதுரை கீழ் நீதிமன்றம். குற்றவாளிகள் மேல்முறையீட்டுக்குச் செல்ல, 2003-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் இவர்களின் தண்டனையை உறுதிசெய்தது. 2008-ம் ஆண்டில் அண்ணா பிறந்த நாளின்போது இவர்கள் அத்தனை பேரையும் மனித உரிமை ஆர்வலர்கள், கம்யூனிஸ்ட்களின் கடும் எதிர்ப்பையும் மீறி விடுதலைசெய்தது அப்போதைய தி.மு.க அரசு. மதுரை தி.மு.க தலைமைக்கு நெருக்கமானவர்கள் என்பதாலேயே அந்தச் சலுகை அளிக்கப்பட்டது என்கிற குமுறல் இன்னும் இருக்கிறது.  
''கம்யூனிஸ்ட்களின் முன்மாதிரி லீலாவதி!''
லீலாவதி குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் மதுரை (தெற்கு) தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை.
''10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த தோழர் லீலாவதி, மக்களின் அபிமானத்தைப் பெறுவது எப்படி, தேர்தல் வெற்றிக்குப்  பிறகு மக்களுக்கு உண்மையாக இருப்பது எப்படி என்பதற்கு முன்மாதிரி. எந்தப் பின்னணியும் இல்லாமல் அரசியலுக்கு வந்து தனி மனுஷியாகப் போராடியிருக்கிறார். கவுன்சிலரான பிறகும்கூட கைத்தறித் தொழிலை விடாமல், அந்த வருமானம் மூலமே குடும்பத்தை நிர்வகித்தார். லீலாவதி மரணத்துக்குப் பிறகு வில்லாபுரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை ஆகிவிட்டது. அந்த வகையில் ஒரு கம்யூனிஸ்ட் கவுன்சிலர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு லீலாவதி ஒரு முன்மாதிரியாக அமைந்துவிட்டார். தோழர் லீலாவதியின் மரணமும் தியாகமும் எங்களோடு இருக்கின்றன. நாங்கள் எப்போதும் தோழர் லீலாவதியோடு இருக்கிறோம்!''
லீலாவதி குடும்பம் இன்று...
லீலாவதி - குப்புசாமி தம்பதிக்கு கலாவதி, துர்கா, டான்யா... என மூன்று பெண் குழந்தைகள். அதில் மூத்தவர் கலாவதிக்கு அரசு வேலை கிடைத்து, திருமணம் முடித்து மதுரையில் வாழ்கிறார். துர்கா, கல்லூரி காலத்தில் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், குடும்ப வாழ்க்கை சிக்கல்களை உண்டாக்க, தற்கொலை செய்துகொண்டார். கடைசி மகள் டான்யா சென்னையில் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.