Saturday, April 5, 2014

ஆறாம் திணை - 82 மருத்துவர் கு.சிவராமன்

'மறதிகூட ஞாபகங்களில்தான் கட்டமைக்கப்படுகின்றன!’ என்ற கவித்துவமான வரியை, சமீபத்தில் சு.வெங்கடேசனின் எழுத்துகளில் வாசித்தேன். இந்த வரிகளுக்குப் பின்னே, கவிதையைத் தாண்டி அறிவியலும் ஒளிந்து நிற்பதுதான் விசேஷம்.
'தேவை இல்லாம இதை எடுத்து கையையோ, காலையோ காயப்படுத்திடக்கூடாது’ என்று, சில விளையாட்டுச் சாமான்களை நம் பாட்டி பரணில் ஒளித்துவைப்பது போல, நம்மைச் சங்கடப்படுத்தும் சில விஷயங்களை அழகாக encoding செய்து, hippocampus--ன் ஓரத்தில் மூளை ஒளித்துவைப்பதால்தான், நிறைய பேர் முதல் காதலைச் சௌகரியமாக மறந்துவிடு கிறார்கள். ஆனால், நினைவுகள் குறித்த அறிவியல், பிரமிக்கவைக்கும் புதிர் முடிச்சுகளைக்கொண்டது.
மூன்று வயதில் 300 திருக்குறள் சொல்லும் குழந்தை, 11 வயதில் மனப்பாடப் பகுதியைப் படிக்க முடியாமல் 'மாப்பிள்ளை பெஞ்சு’க்கு மாறுவதும், 17 வருடங்களுக்கு முன் மனதுக்குப் பிடித்தவள் அணிந்திருந்த ஆரஞ்சு கலர் ரிப்பன் ஞாபகம் இருக்கும்போது, 15 நிமிடங்களுக்கு முன்வைத்த வண்டிச் சாவியை மறந்துவிட்டு வீட்டையே தலைகீழாகப் புரட்டுவதும் மூளையின் ரசவாதம்தான்.
மூளை, தனக்குள் சேரும் புதுப்புதுத் தகவல்களை ENCODINGசெய்து, சரியான இடத்தில் STORAGE செய்து, பின்னர் DECODING செய்து காட்டும் வித்தையில்தான் நம் நினைவுத்திறன் ஒளிந்திருக்கிறது. இந்தச் சூத்திரத்தின் நெளிவு சுளிவைக் கற்றவர்கள்தான் விஸ்வநாதன் ஆனந்தா கவோ, அஷ்டாவதானியாகவோ உருவாகிறார்கள்.
பிறந்த குழந்தையை, பிரசவித்தத் தாயின் வயிற்றுப் பகுதியில் வைத்தால், எவருடைய தலையீடும் இல்லாமல், அது நகர்ந்து நகர்ந்து தாயின் மார்புக்காம்பைப் பற்றி சீம்பாலை அருந்துவதை அறிவியல் பார்த்து வியந்திருக்கிறது. குழந்தைக்கு அந்த அறிவு பிறக்கும்போதே 'Pre loaded’-ஆக மூளையில் பதிக்கப்பட்டிருக்கிறது போலும். ஆனால், மூன்றாம் மாதத்தில் அப்பா முகம் பார்த்துச் சிரிப்பதும், தடுப்பூசி போடவரும் நர்ஸைப் பார்த்து முகம் திருப்பிக்கொண்டு கை, கால் உதைத்து அழுவதும், நினைவுகளை மூளையில் பதியவைத்து பின் எடுக்கப் பழகும் வித்தையைக் குழந்தைகள் கற்றுக்கொள்வதாலேயே நடக்கின்றன.
செய்திகளை, தற்காலிக ஞாபகம், நீடித்த ஞாபகம் என மூளை வேறு வேறு வடிவில் பதிவுசெய்யும். தற்காலிக ஞாபகம் ஒலி வடிவில் (Acoustic) மூளையில் பதியும். ஒரு தொலைபேசி எண்ணை செவி வழியில் கேட்டு டயல் செய்த பிறகான 30 நொடிகளில் அந்த எண்ணை நாம் மறந்துபோவது, அந்த Acoustic Storage  எனும் தற்காலிக ஞாபகத்திறன் மூலம்தான். மூச்சு முட்டும் பணியில் இருக்கும்போது, 'ஏங்க... வீட்டுக்கு வரும்போது கால் கிலோ வெண்டைக்காய் வாங்கிட்டு வாங்க’ என்று மனைவி போனில் சொல்வதை, மூளையின் தற்காலிக ஞாபக டிபார்ட்மென்டில் போடுவதால்தான், அந்தக் கணமே அதை மறந்து, அம்மாஞ்சியாக வீட்டுக்குச் சென்று 'தேமே’ என்று திட்டு வாங்கிக்கொண்டு இருப்போம்.
நாம் கேள்விப்படும் விஷயம், தற்காலிக ஞாபக டிபார்ட்மென்ட்டா... நாள்பட்ட ஞாபக டிபார்ட்மென்ட்டா... என்பதை நாம் தெளிவாக முடிவுசெய்து பதியப் பழகிக்கொண்டால் மட்டுமே நினைவாற்றல் மிளிரும். இந்தத் துரித உலகில் தூக்கமின்மை, மன இறுக்கம், இரைச்சலான சுற்றுச்சூழல்... எனப் பல காரணிகள் நம் மறதியை அதிகரிக்கின்றன. பள்ளி/பரீட்சை சார்ந்த, பணி சார்ந்த, பயன் சார்ந்த விஷயங்களைத் தவிர பிறவற்றை எல்லாம் தற்காலிக ஞாபகப் பதிவில் வைத்துக்கொள்ள நவீனம் கற்றுக்கொடுப்பதில்தான் மனித மூளை கொஞ்சம் மங்க ஆரம்பித்துவிட்டது.
சாதாரணமாக, 150 தொலைபேசி எண்களை மூளையில் பதிந்துவைத்திருக்கும் நாம் செல்போனில் கணக்கில் அடங்கா எண்களைப் பதியத்தொடங்கியதும், 'டேய் மாப்ள... என் செல்போன் நம்பர் உன் போன் புக்ல பார்த்துச் சொல்லேன்...’ எனக் கேட்கத் தொடங்கிவிட்டோம். நம் அன்றாட வாழ்வில் சட்டை, பேன்ட் போல ஒட்டிக்கொண்ட  'E’ (எலெக்ட்ரானிக்) உபகரணங்கள் இன்னொரு காரணம்!
அந்தக் காலத்தில் சந்தம் மாறாமல், ஆயிரக்கணக்கில் பதியம் பாடியதற்கும், 'நாலு மரக்கா நெல் ஏன் குறையுது? கார்த்திகையில பூ பிடிக்கணுமே... என்னாச்சு?’ என கணக்காகக் கேள்வி பிறந்ததற்கும் அன்றைய சலனமற்ற நுண்ணறிவும், சிதைவு பெறாத பாரம்பரிய உணவும், அதிகம் ஆர்ப்பரிக்காத மனமும் முக்கியமான காரணிகள். தவிர, நினைவாற்றலைக் கூட்டும் எளிய தாவரங்களை உணவாக உட்கொண்டதும் வரலாறு!
வல்லாரைக் கீரை தோசை அப்படியானது தான். வெளி உபயோகமாக நாள்பட்ட புண்களை ஆற்றுவதில் பயனாகும் இந்தக் கீரையின் தாதுச்சத்துகள், மனதைச் செம்மையாக்கி நல்ல உறக்கமும், தீர்க்கமான நினைவாற்றலும் தரும். வலிப்பு நோய்க்கு இதைப் பயன்படுத்துவது குறித்த ஆய்வுகள் நடைபெற்றிருக்கின்றன.
சங்கு வடிவில் பூக்கும் சங்குப் பூ எனும் மூலிகை, நீர்ப்பிரமி எனும் பிரமிச்செடியும், நினைவாற்றல் திறனை அதிகரிக்கும் நுண்தாவரக் கூறுகள் கொண்டவை. அதன் ஆய்வு முடிவுகளை வைத்தே, 'இன்னும் இரண்டு ஸ்பூன் சேர்த்துச் சாப்பிட்டால், உங்க கடந்த காலம்கூட ஞாபகம் வரும்’ என்ற ரேஞ்சில் விளம்பரப்படுத்தி ஏகப்பட்ட உணவுகள் சந்தையில் விற்கப்படுகின்றன.
இயல்பிலேயே DHA அதிகம் உள்ள மீன்கள், POLYPHENOLS, TRITERPENOIDS உள்ள வண்ணக்கனிகள், சிறு தானியங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டே, விலை உயர்ந்த சந்தை உணவுகளைத் தவிர்க்கலாம்.
நடைப்பயிற்சிக்குக் கிடைத்த அலாதியான வரவேற்பு இன்னும் மூச்சுப்பயிற்சிக்குக் கிடைக்கவில்லை. ஒருவேளை, அதைத் தவக்கோலத்தோடு ஒட்டியே பார்த்து, 'ஓ... இது முனிவர்கள் பிராப்பர்ட்டி போல’ என பெருவாரியானோர் பயந்ததுகூட காரணமாக இருக்கலாம். ஆனால், மூச்சுப்பயிற்சியில் நடைபெற்றுவரும் ஆய்வுகளை உன்னித்துக் கவனித்தால், அது தரும் விவரங்கள் ஏராளம். பலர் நினைப்பது போல அது ஆக்சிஜன் அள்ளும் விஷயம் மட்டுமல்ல; நுரையீரலின் துணைகொண்டு மூளைச்சுரப்பிகளை, நரம்புகளை, திசுக்களை, நிணநீர் ஓட்டத்தை ஆளும் விஷயம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
'காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளனுக்குக் கூற்றை உதைக்கும் குரியதுவாமே’ என மூச்சை ஆளும் உத்தி சொன்ன நம் முன்னோருக்கு, மூச்சுப்பயிற்சி நரம்பு மண்டலம் மூலம் வேலை செய்கிறதா அல்லது ஆண்டவர் மூலம் வேலை செய்கிறதா எனத் தெரியாது. ஆனால், அதைப் பயிற்சி செய்தால் நோயின்றி நீடூழி வாழலாம்; கல்வி கேள்வியில் உயரலாம் எனக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கிறது!
'பயன்படுத்து; பின் கசக்கி எறி’ - சித்தாந்தம்கொண்ட துரித நவீனக் கலாசாரம், பொருளில் மட்டுமல்லாது; நாம் அன்றாடம் கடக்கும் அன்பு, காதல், கரிசனம், மெனக்கெடல், அரவணைப்பு, மரபு பழக்கம்... என எல்லாவற்றையும் மூளை தற்காலிகப் பதிவில் மட்டுமே கட்டமைத்துள்ளன. பயன் முடிந்ததும் தூக்கி எறிவதில்தான், நம் சமூகத்தில் பழக்கமே இல்லாத வயோதிகத்தின் அவமானமும், அடையாளமே மறந்துபோகும் அல்சிமர் நோயும் இப்போது பெருவாரியாக முளைக்கின்றன போலும்!
- பரிமாறுவேன்...
- Vikatan

ஆறாம் திணை - 81 மருத்துவர் கு.சிவராமன்

ரக்கப் பேசும் இனக் குழுக்களில் இருந்து வந்தவர்கள் நாம். ''நக்கீரா... நன்றாக என்னைப் பார். நான் எழுதிய தமிழ்ப் பாட்டு குற்றமா?'' என கடவுளும், ''டேய் லூஸுப் பையா... நீ இல்லாட்டி நான் செத்துருவேன்... ஐ லவ் யூ!'' எனத் தமிழ் சினிமா காதலியும் 'ஓவர் ஒலி’யின் மூலமே தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திப் பழகியுள்ளனர்.
தேர்தல் திருவிழா சமயங்களில் 'எனது அருமை வாக்காளப் பெருமக்களே...’ என்றும், திருமண விசேஷங்களில் 'பட் படார்’ 10,000 வாலா சரவெடி மூலமும், கணேசனைக் கடலில் கரைக்கும்போதும், 'கல்யாண சாவு’ என்று வயதான தாத்தாவை வழியனுப்பும்போதும் அன்றாட வாழ்வில் நாம் போடும் சத்தங்கள் ஏராளம்!
இந்தியாவில் இரைச்சல் மாசுக்களைக் கட்டுப்படுத்த, 'ஆவாஸ் ஃபவுண்டேஷன்’ தொடர்ந்து போராடி வருகிறது. பல்வேறு அறிவியல் தரவுகள், புள்ளி விவரங்களை ஆதாரங்களாக அடுக்கிய பிறகு, மத்திய சூழல் அமைச்சகம் சத்தம் குறித்த பல சட்டங்களை இயற்றியுள்ளது. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதில்தான் வழக்கம்போல் கனத்த கள்ள மௌனம். அதன் விளைவு..? காது கேளாதோரின் எண்ணிக்கை இந்தியாவில் எக்குத்தப்பாக உயர்கிறது.
கிட்டப்பார்வை, தூரப்பார்வை, ஸ்டைல் பார்வைக்கெல்லாம் கண்ணாடி போடுபவர்களை இந்தச் சமூகம் மகிழ்வாக ஏற்றுக்கொள்கிற அளவுக்கு, செவித்திறன் குறைபாடு உள்ளவரை ஏற்றுக்கொள்வது இல்லை. தங்கள் மன உணர்வை அவர்கள் மழலை வார்த்தைகளால், செயலால் வெளிப்படுத்தும்போது நகைத்து அவமானப்படுத்துகிறோம் நாம்.
செவித்திறன் குறைவுக்குப் பல காரணங்கள் உண்டு. தோடு, தொங்கட்டான், ஒற்றைக் கம்மல் ஆகியவற்றை அணிய உதவும் வெளிக் காதுமடல் பகுதி மட்டும் காது அல்ல, அதையும் தாண்டி நடுக்காது, உள்காதும் உண்டு. நடுக்காதில் உடம்பின் மிகச் சிறிய மூன்று எலும்புகள் உள்ளன. ஒலியைக் கடத்தும் மிக நுண்ணிய குழல் உள்ளது. உள்காது முழுக்க நரம்பு இழைகளால் இருக்கும். இதில் எங்கு நோய்வாய்ப்பட்டாலும் செவித்திறன் குறையும் அல்லது முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.
சாதாரண நாள்பட்ட சளி, காது-தொண்டை இணைப்புக் குழாயில் வரும் நீடித்த சளி, நடுக்காதில் தங்கும் சளி... என எளிதில் குணப்படுத்தக்கூடிய தொந்தரவை அலட்சியமாகக் கண்டுகொள்ளாமல் இருப்பதுகூட பின்னாளில் செவித்திறனில் பாதிப்பை உண்டாக்கும்.
பஞ்சர் ஆன டயரில் இருந்து கசியும் காற்று போல, காதுக்குள் ரீங்கார ஒலி போல கேட்டுக்கொண்டே இருப்பது மினியர்ஸ் நோயாக, வெர்ட்டிகோவுடன்கூடிய காது நோயாக இருக்கக்கூடும். இவை எல்லாம் இன்றைக்கு முழுமையாகக் குணப்படுத்தக்கூடியவை.
தவிர, அம்மை முதலான வைரஸ் நோயிலும் உள்காதின் நரம்பிழைகள் பாதிக்கப்படக்கூடும். பிறப்பிலேயே வரும் OTOSCLEROSIS எனும் நோயில், சத்தம் கடத்தும் ஒலியில் அதிர வேண்டிய நுண்ணிய எலும்புகள் சரியாக அதிராததால் செவித்திறன் குறையும். இந்த இரண்டு குறைபாடுகளைக் களைய உபகரண உதவி தேவைப்படும். வயோதிகத்தில் எந்த காரணமும் இன்றி மெள்ள மெள்ள செவித்திறன் குறைவதும் இயல்பு. அது நோய் அல்ல!
பெரும் உபகரணங்களால் பூமியைக் குடைவது, கட்டடங்களை உடைப்பது போன்ற அலுவலில் ஈடுபடுபவர், வீட்டு மொட்டைமாடியை உரசிக்கொண்டு விமானங்கள் இறங்கும் விமான நிலையம் அருகில் வசிக்கும் நகரத்தினர், மன இறுக்கத்தைக் குறைக்கிறேன் பேர்வழி என டிஸ்கொதேயில் காது கிழியும் சத்தத்தில் ஆடும் இளைஞர்கள், வேறு வழி இல்லாமல் அங்கு பணிபுரியும் உழைக்கும்வர்க்கம்... என இரைச்சல்களுக்கு இடையில் வாழும் நபர்களுக்கு எல்லாம் மேற்சொன்ன எந்த நோயும் இல்லாமல் செவித்திறன் கட்டாயம் குறையும்.
அதிகபட்ச சத்தத்தினால் காதுக்குள் உள்ள ஸ்டீரியோசெல்லா எனும் 1,013 மைக்ரோமீட்டர் அளவுள்ள மிக நுண்ணிய மயிரிழைகள் சிதைவதாலேயே செவித்திறன் குறைவு ஏற்படுகிறது. அந்த அதிக இரைச்சல், செவித்திறன் குறைபாடு மட்டுமல்ல ரத்தக்கொதிப்பு, மன உளைச்சல் பிரச்னைகளையும் உண்டாக்கும். இது எல்லாவற்றுக்கும் மேலாக, சமயங்களில் மாரடைப்பையும் உண்டாக்கும்!
பேனா, பென்சில் தொடங்கி துடைப்பக்குச்சி வரை கையில் கிடைத்ததை வைத்து காது குடைந்து கண் சொருகுவது, நம்மில் பலருக்கும் உள்ள பழக்கம். இன்னும் சில சுத்தப்பேர்வழிகள், கழிப்பறையைக் கழுவுவது போல காதை கடுஞ்சிரத்தையுடன் சுத்தம் செய்வர். இவை இரண்டும் தவறு. காதினுள் மெழுகு போன்ற பொருள் உருவாவது நோய் அல்ல; நோய்க்கிருமியைத் தடுக்கத்தான். அது அளவில் அதிகப்பட்டால் மட்டுமே, சுத்தம் செய்வது அவசியம்.
பலர் காதில் சீழ் வந்தால், சனீஸ்வரனுக்கு எண்ணெய் ஊற்றுவது போல எண்ணெய்க் காய்ச்சி காதுக்குள் விட்டு வித்தைகளைச் செய்வர். அது ஆபத்து. சுக்குத் தைலம் முதலான சித்த மருந்துகளை தலைக்குத் தேய்த்துக் குளித்தாலே காதுசீழ் முதலான காது நோய்கள் தீரும். அன்று, காது நோய்களுக்கு என கேட்கும்திறன் கூட்ட மருள், கணவாய் ஓடு, தைவேளை முதலான மூலிகை மருந்துகள் பல, தமிழ் மருத்துவத்தில் பயன்பட்டு வந்தன. எனினும், காதுக்குள் போடும் மருந்துகளை மருத்துவர் ஆலோசனையின்றி போடுதல் கூடாது. தினசரி தலைக்குக் குளிப்பது, வாரம் இரு நாள் எண்ணெய் குளியல் செவித்திறன் பாதுகாக்கும் தடுப்புமுறைகள்.
விலங்குகள், இரை தேடுவதற்கும் தன் இணையைத் தேடுவதற்கும் பெரும்பாலும் ஒலியைத்தான் நம்பியிருக்கும். காட்டில், அந்த ஒலியைச் சிதைக்கும் வகையில் நாம் கடவுளைத் துதித்து ஜெபம் பாடிக்கொண்டிருக்கிறோம், ரிலாக்ஸ் பண்ண ரிசார்ட் கட்டி ரோடு போட்டுக்கொண்டிருக்கிறோம். கடலில் பயணிக்கும் கப்பல் தன் தொடர்புக்கு எழுப்பும் சோனார் ஒலி அலைகளால் இறந்து கரை ஒதுங்கும் நீலத் திமிங்கலங்களின் எண்ணிக்கை அதிகம். நம் சக பயணிகளின் இருப்பை இரைச்சல்கள் மூலம் கேள்விக்குள்ளாக்குவது எந்த விதத்தில் நியாயம்?
மௌனம் நாம் துரிதத்தில் இழக்கும் ஓர் அற்புத உணர்வு. சத்தம் இல்லாத ஒரு பொழுதில்தான், தோட்டத்துக் குருவி நம்மைக் குசலம் விசாரிப்பது புரியும்; குழந்தையின் சிரிப்பு சிலிர்க்கவைக்கும்; காதலியின் கண்கள் கவிதை பேசும்; வயதான பாட்டியின் தளர்வு நடையில் மிடுக்கு புலரும். ஏனென்றால், மௌனம் நம் மனம் மீட்டும் ஆனந்த இசை. அதை அனுபவித்துப் பழகுவோம்!
- பரிமாறுவேன்...

ஆறாம் திணை - 80

ஆறாம் திணை - 80
மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: ம.செ.,
''நம் குழந்தைகள், நமக்கு முன்னர் மரணம் அடையும் கொடூரமான தலைமுறைகள் உருவாகிக் கொண்டிருக்கும் காலகட்டம் இது!’ என்று கருத்தரங்கில் கேட்ட ஒரு வரி, என்னை திகீர் என்று உலுக்கியது. யோசித்துப் பார்த்தால்... ஆம், உண்மைதான் என்று தோன்றுகிறது.
சமீபத்தில் பள்ளி முதல் கல்லூரி வரை என் தோழனாக இருந்த நண்பன், புற்று நோயுடனான போராட்டத்தில் வலுவற்று வீழ்ந்தபோது, 'சாகிற வயசாடா இது..? ஒரு இடத்துல நிக்காம ஓடியாடிக்கிட்டு இருந்தியே. சிகரெட், குடினு எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லையேடா உனக்கு! நான் இருக்க நீ ஏண்டா இவ்ளோ சீக்கிரம் போகணும்?’ என்று அவனுடைய அம்மா கதறியது, இன்னும் மனதை அழுத்திக்கொண்டே இருக்கிறது.
சர்க்கரை, மாரடைப்பு, புற்று ஆகியவை இளைஞர் கூட்டத்தைத் தறிகெட்ட வேகத்தில் சிதைத்துக் கொண்டி ருக்கின்றன. அதன் வீரியத்தைத் தீவிர மாக்குகின்றன மன அழுத்தம், பணிச்சுமை, சமூக ஒப்பீடு நிர்பந்தம். இப்படி வாழ்வியல் நோய்க் கூட்டப் பிடியில் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் தொலைப்பதில் இருந்து தப்பிக்க, ஒருங்கிணைந்த சிகிச்சை மட்டுமே தொலைதூரத்தில் தெரியும் சிறு ஒளிக்கீற்று!  
காமாலை முதலான நோய்க்கிருமியின் தாக்குதலை எதிர்கொள்ள ஈரலைத் தேற்றி, அந்தக் கிருமிக்கான எதிர் மருந்தாகவும் சித்த மருத்துவர் கீழாநெல்லியைக் கொடுப்பார். அதே போல் சிறுநீர்ப்பாதைத் தொற்றுக்கு அமிக்காசின் எனும் எதிர் நுண்ணியிரி மருந்தை நவீன மருத்துவர் கொடுக்கக்கூடும். விபத்தில் ஏற்பட்ட சாதாரண எலும்பு முறிவை நவீன மருத்துவர் மாவுக்கட்டோ அல்லது அவசரம்/தீவிரம் பொறுத்து அறுவை சிகிச்சையோ செய்வார். அதனையே பாரம்பரிய வர்ம மருத்துவர் வர்ம ஒடிவுமுறிவு சிகிச்சை செய்தும் குணப்படுத்துவார். ஆனால், இங்கெல்லாம் ஒருங்கிணைந்த சிகிச்சை அதிகம் தேவைப்படுவது இல்லை.
அதே சமயத்தில் ரத்த சர்க்கரை வியாதி, புற்றுநோய், ரத்தக்கொதிப்பு, மாரடைப்பை நிகழ்த்தக்கூடிய ரத்தக்கொதிப்பு, கொழுப்பு நோய்களில் ஒரு மருந்தோ, ஒரு சிகிச்சை முறையோ மட்டும்கொண்டு முழுமை யாகக் குணப்படுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது.
சரியான உணவு, உடற்பயிற்சி, யோகா, வாழ்வியல், மனமகிழ்ச்சி, சரியான மருத்துவம் இப்படி எல்லாம் ஒருங்கிணைந்த சிகிச்சை மட்டுமே அப்படியான சூழ்நிலைகளில் பயனளிக்கக்கூடும்.
ருத்துவர் சாஹே, 1980- களிலேயே ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மயூராசனம், அர்த்தமச் யேந்திராசனம், ஹம்சாசனம், வக்ராசனம், தனுராசனம் முதலான யோகாசனங்கள் பயன் அளிப்பதைச் சரியான ஆய்வுகள் மூலம் நிரூபித்து, மருத்துவப் பத்திரிகைகளில் பதிப்பித்தார். அதேபோல், நம் ஊர் வேங்கைப்பட்டையின் Pterostilbene எனும் ரசாயனமும், வெந்தயத்தின் கரையும் நார்ச்சத்தும், ஆரம்ப நிலை சர்க்கரை நோய் முழுமையான சர்க்கரை நோயாக மாறுவதைத் தடுப்பதிலும் தாமதப்படுத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கின்றன.
இதேபோல நம் ஊர் கடலழிஞ்சிலை, அமெரிக்க ஒஹியோ பல்கலைக்கழகம் ஆய்வுசெய்து சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்கும் அதன் பயன்பாடுகளை சமீபத்தில் காப்புரிமை செய்துவைத்திருக்கிறது. இன்னும் திரிபலா, கொன்றை, நாவல், சிறுகுறிஞ்சான், மருதம்பட்டை, வில்வம்... என நம் நாட்டு மூலிகைகளும், நாம் அன்றாடம் சாப்பிடும் கறிவேப்பிலை, லவங்கப்பட்டை, கோவைக்காய், பாகற்காய், கத்திரியின் விதை முதலான பல உணவுக் காய்கறிகளும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதை பல பல்கலைக்கழக ஆய்வுகள் நிரூபிக்கின்றன.  
உலகின் மற்ற நாடுகளில் இந்த உணவோ பாரம்பரியப் புரிதலோ, சிகிச்சையோ மிக மிகக் குறைவு. ஆனால், அங்கும் இந்த முறைகள் இப்போது நடைமுறைக்கு வரத் தொடங்கிவிட்டன. கீமோ எடுக்கும் நோயாளி, 'தாய்ச்சி யோகா’ செய்கிறார்; தொடு சிகிச்சை மேற்கொள்கிறார்; நன்கு ஆராயப்பட்ட தாவர மருந்துகள் எடுக்கிறார். ஆனால், இவை அனைத்தும் ஆண்டாண்டு காலமாக இங்கு இருந்தும், இன்னும் சர்க்கரை முதலான வாழ்வியல் நோய்களில் ஒருங்கிணைந்த சிகிச்சைத் திட்டம் வழக்கில் இல்லை.
நவீன மருத்துவர் ஒருவரிடம் செல்லும் இந்த நோயாளி கொஞ்சம் தைரியத்துடன், 'சார் நான் கூடவே இந்த வைத்தியம் எடுக்கலாமா சார்?’ எனக் கேட்டால் பல நேரங்களில், 'எனக்கு இதைப் பத்தியெல்லாம் தெரியாது’, 'ஏன் அதையும் இதையும் குழப்பிக்கிறீங்க? அப்புறம் ஏதாச்சும் தொந்தரவு வந்தா, என்னைக் கேட்கக் கூடாது’ என்ற பயமுறுத்தல் பதில்களேதான் பெரும்பாலும் வரும்.
அதேசமயம், இலை, காய்கறி, மூலிகை மட்டுமே உடலில் முழுவதும் வியாபித்துவிட்ட சர்க்கரை நோயைப் பூரணமாகக் குணமாக்கிவிடும் சாத்தியமும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. இந்தச் சூழலில்தான் ஒருங்கிணைந்த அணுகுமுறை மிகமிக அவசியமாகிறது.
இதைச் சாத்தியப்படுத்த பாரம்பரிய மருத்துவப் பயன், தெளிவு, அதில் சமீபமாக நடந்தேறியிருக்கும் ஆய்வு பற்றி எல்லாம் அறிந்த நவீன மருத்துவரும், அறம் மீறாத நவீன மருத்துவத்தின் தேர்ந்த பயனும் அவசியமும் புரிந்த பாரம்பரிய சித்த - ஆயுர்வேத மருத்துவரும் ஒரே மேசையில் அமர்ந்து பரிந்துரைக்க வேண்டும். இதுதான் ஒருங்கிணைந்த மருத்துவத்தின் முழுமுதல் தேவை!
முதலில் எந்தச் சிகிச்சை, பின்னர் எந்தச் சிகிச்சை, எவ்வளவு நேர இடைவெளியில் மருந்துகளை ஒருங்கிணைக்கையில் மருந்துகளின் Bioavailability  மாறாது கொடுக்க வேண்டும் என்ற காய்ப்பு உவப்பு இல்லாத கலந்துரையாடல் வேண்டும். எந்த ஆசனங்களை/மூச்சுப்பயிற்சியைச் செய்ய வேண்டும்? உயிருக்கு ஆபத்தான நிலையிருப்பின் உடனடியாக எந்தச் சிகிச்சை அவசியம்? நாட்பட்டு முழுமையாக அவர் நலமாக, எந்தெந்த உணவும் மருந்தும் உட்கொள்ள வேண்டும் என்பதை பல தரப்பு மருத்துவர்களும் கலந்து தீர்மானிக்க வேண்டும்.  'என்னால் முடிஞ்சது அவ்வளவுதான். நீ எங்கேயாவது போய் பார்த்துக்கோ...’ என நகர்த்திவிடும் மனோபாவத்தை ஒழிக்க வேண்டும்.
'எல்லாப் பேரழிவிலும் பிரகாசமான வாய்ப்பு ஒன்று உண்டு’ எனச் சொல்லும் வணிகச் சித்தாந்தங்களின்படி பணக்காரர்களுக்காக மட்டும் ஒருங்கிணைந்த மருத்துவத்தைப் பேச்சு அளவில் பல அடுக்குமாடி கார்ப்பரேட் மருத்துவமனைகளில் கொண்டுவந்துவிட்டார்கள். ஆனால், ஒவ்வொரு கிராமப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் ஒரே கட்டடத்தின் முன்னும் பின்னும் அரசின் அத்தனை துறை மருத்துவர்களும் பணியில் இருக்க, பல இடங்களில் அவர்களிடையே குறைந்தபட்ச ஒருங்கிணைப்புகூட இல்லாததுதான் வேதனையான விஷயம்.
'எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா!’ என்று பெருமை தரும் பெருவாரியான பல்லுயிரிய மண்டலங்கள் இங்கு உண்டு. 'என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?’ என்ற உலகின் தொன்மையான அனுபவத்தையும் தன்னுள்கொண்ட உலகின் வழக்கிலுள்ள ஒரே செம்மொழியும் இங்குதான் உண்டு. சகமனிதரைத் தோள்சேர்க்க மறுக்கும் சாதியமும், இருப்பவனுக்கு மட்டும்தான் இவ்வுலகம் எனும் பன்னாட்டு வணிகப்படியும் இதனை தெரியாதவண்ணம் இத்தனை காலம் நம் கண்களை மறைத்து நின்றன. கொஞ்சம் விழிப்பும் முனைப்பும் மட்டும் இருந்தால், உலகின் மருத்துவக் கூரையாக உயர்ந்து நிற்க, இங்கு கொட்டிக்கிடக்கும் பாரம்பரிய உணவும் மருந்தும் வாழ்வியலும் ஒருங்கிணைந்தால் போதும்!
- பரிமாறுவேன்...
- Vikatan

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 37




ராஜீவ் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவரானபோது, அந்தக் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவராக இருந்த கமலாபதி திரிபாதி அவருக்கு ஐந்து பக்க கடிதம் ஒன்றை அனுப்பினார்.

''சுதந்திரப் போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி, காங்கிரஸ் கட்சிக்கென சில நெறிமுறைகளை உருவாக்கித் தந்தார். காங்கிரஸ் கட்சி எப்போதுமே இடதுசாரி சிந்தனை கொண்ட கட்சியாகத்தான் செயல்பட்டு வந்திருக்கிறது. இன்று கட்சியின் கொள்கைகள் நடைமுறைகள் அடியோடு மாறிவிட்டன.
ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளை எல்லாம் கட்சியில் சேர்த்து, அந்த அதிகாரிகள் காங்கிரஸ் தலைவர்களாக ஆக்கப்பட்டுவிட்டார்கள். காங்கிரஸின் கொள்கைகள், காங்கிரஸின் கலாசாரம் ஆகியவை பற்றி எல்லாம் அவர்களுக்கு என்ன தெரியும்?
காங்கிரஸ் மீண்டும் மக்கள் நம்பிக்கையைப் பெற வேண்டுமானால் காங்கிரஸ் கட்சி சொல் வேறு; செயல் வேறு என்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும். காங்கிரஸ்காரர்கள் ஒரே சமயத்தில் பல பதவிகளில் இருக்கக் கூடாது. மாநில முதல்வர்களை மேலிட விருப்பப்படி முடிவுசெய்து திணிப்பதை கைவிட வேண்டும். கட்சியின் சகல மட்டங்களுக்கும் உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும். மாநில காங்கிரஸ் கமிட்டிகளும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் தேர்தல் மூலமே அமைக்கப்பட வேண்டும். கட்சியின் தோல்விக்குப் பெரும் காரணம் கட்சியை ஆட்டிப்படைத்துவரும் இடைத்தரகர்கள்தான். இந்த இடைத்தரகர்கள் ஆதிக்கத்தை முற்றாக ஒழிக்க வேண்டும்'' - இப்படி அடுக்கினார் கமலாபதி திரிபாதி.
இந்தக் கடிதம் ராஜீவ் காந்தியால் நிராகரிக்கப்பட்டது. அடுத்து வந்த நரசிம்ம ராவ் காலத்தில் உதாசீனப்படுத்தப்பட்டது. திரிபாதி சுட்டிக்காட்டிய இடைத்தரர்கள் ராவ் காலத்தில்தான் புற்றீசல்போல எழுந்து வந்தார்கள். இடைத்தரகர்கள் வெளிப்படையாகவே செயல்பட்டார்கள். அவர்கள் நினைத்ததே நடக்கும், அவர்​களைப் பிடித்தால்தான் அனைத்தும் நிறைவேறும் என்ற நிலை ராவ் காலத்தில் பட்டவர்த்தனமானது.
'இந்தியாவின் பிரதமர் பதவியில் இருப்பவருக்கு ஒரு கோடி ரூபாய் தந்தேன்’ என்று பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் ஒருவர் பகிரங்கமாக அறிவித்தால் என்ன ஆகும்? 1993 ஜூன் 16-ம் நாள் ஹர்ஷத் மேத்தா இப்படித்தான் அறிவித்தார். பங்குச் சந்தை ஊழல் என்று வரலாற்றில் பதிவான அசிங்கத்தின் மையப்புள்ளியான ஹர்ஷத் மேத்தா, 'பிரதமராக இருக்கும் நரசிம்ம ராவுக்கு ஒரு கோடி ரூபாயை பணமாகக் கொடுத்தேன். கொடுத்தவன் நான்தான். எங்கள் இருவருக்கும் மீடியேட்டராக இருந்து செயல்பட்டவர் லலித் மிட்டல். ஒரு கோடி ரூபாய் பணம் கொடுக்கப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்தான் கொண்டு போய் கொடுத்தார்’ என்று ஹர்ஷத் மேத்தா சொன்னார்.
இப்படி ஒரு அவமானத்தை சஞ்சய் காந்தி கூட இந்திராவுக்கு ஏற்படுத்தித் தரவில்லை. ஏற்கெனவே பெரும்பான்மை பலம் இல்லாமல் ஆடிக்கொண்டு இருந்த நரசிம்ம ராவ் ஆட்சி, இந்தப் பேட்டிக்குப் பிறகு இன்னும் ஆடியது. ராவ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தார்கள். லேசாக மாறினாலும் ராவ் ஆட்சி கவிழ்ந்துபோகும் என்பதே அன்றைய நிலைமை. ஆனால், ராவ் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடி அவரைச் சுற்றி வலம் வந்துகொண்டு இருந்த இடைத்தரகர்களுக்கே இருந்தது. அவர்கள் தங்கள் பண மூட்டைகளை அவிழ்க்க ஆரம்பித்தார்கள். எம்.பி-களுக்குப் பணம் கொடுத்து அவர்களது மனதை மாற்றி விலைக்கு வாங்க அன்றுதான் அடித்தளம் இடப்பட்டது. அஜித் சிங் ஆதரவு எம்.பி-க்களும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி-க்களும் ராவ் இடைத்தரகர்களின் வலையில் சிக்கினார்கள். யாரும் எதிர்பாராத வகையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் ராவ் தப்பினார். ஆனால், 'எம்.பி-க்களுக்கு பணம் கொடுத்தார்’ என்று ஜார்க்கண்ட் தலைவர் போட்ட வழக்கில் ராவ் சிக்கினார்.
ஹர்ஷத் மேத்தாவைத் தொடர்ந்து லக்குபாய் பதக் வந்தார். 'ஊறுகாய்’ பதக் என்றால்தான் எல்லாருக்கும் தெரியும். நரசிம்ம ராவுக்கும் சந்திரா சாமிக்குமான நட்பை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது இந்த 'ஊறுகாய்’ பதக்தான். நரசிம்ம ராவ் எந்தப் பதவியில் இருந்தாலும் அங்கு மறைமுகமாக சந்திரா சாமியின் ஆட்சிதான் நடக்கும். ராவ் பேரைச் சொல்லி காரியங்கள் சாதித்துக்கொள்ளும் மிகப் பெரிய, முக்கியமான இடைத்தரகராக சந்திரா சாமி செயல்பட்டு வந்தார். அப்படிப்பட்ட சந்திரா சாமி, ராவை காட்டி லக்குபாய் பதக்கிடம் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை 1987-ம் ஆண்டு வாங்கியதாக விவகாரம் கிளம்பியது. ஆனால், சொன்ன வேலையை செய்து கொடுக்கவில்லை என்று லக்குபாய் பதக் கோபமானார். வழக்குப் போட்டார். இது சி.பி.ஐ. விசாரணைக்குப் போனது.
காலங்கள் உருண்டு நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது வழக்கு பூதாகாரமானது. அதுவரை சந்திரா சாமியிடம் பணம் கொடுத்தேன் என்று சொல்லிவந்த லக்குபாய் பதக், 'நான் பணம் கொடுக்கும்போது நரசிம்ம ராவ் பக்கத்தில் இருந்தார்’ என்று சி.பி.ஐ-யில் வாக்குமூலமே கொடுத்தார். பிரதமர் பதவியை விட்டு இறங்கிய பிறகு நரசிம்ம ராவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அடுத்து கிளம்பியது ஹவாலா ஊழல். இதில் காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்லாமல், அதுவரை புனிதர்களாக வேடமிட்டுக் கொண்டிருந்த பி.ஜே.பி-யினரும் சிக்கினார்கள். பி.ஆர்.ஜெயின் என்ற தொழிலதிபர் எழுதிய டைரியில் சட்டத்துக்குப் புறம்பாகப் பணப் பரிமாற்றங்கள் நடைபெற்ற விவகாரங்கள் வெடித்தன. வி.சி.சுக்லா, பல்ராம் ஜாக்கர், மாதவராவ் சிந்தியா, கமல்நாத் போன்ற காங்கிரஸ்காரர்களும் எல்.கே.அத்வானி, மதன்லால் குரானி, யஷ்வந்த் சின்ஹா போன்ற பி.ஜே.பி-யினரும் சிக்கினார்கள். உடனடியாக வழக்குப் போடாமல் இழுத்தடித்தார்கள். உச்ச நீதிமன்றத்துக்கு இந்த விவகாரம் போனது. அதன் பிறகுதான் பலர் மீதும் சி.பி.ஐ. தனது விசாரணையைத் தொடங்கியது.
அதன் பிறகு யூரியா ஊழல், வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு உரம் இறக்குமதி செய்ய துருக்கி நாட்டு நிறுவனத்துக்கு 133 கோடி ரூபாய் தரப்பட்டது. அவர்கள் உரத்தை இறக்குமதியே செய்யவில்லை. உரத்தை அனுப்புங்கள், இல்லாவிட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடுவோம் என்று மத்திய அரசு அதிகாரிகள் எச்சரித்த பிறகும் வந்து சேரவில்லை. மேல் நடவடிக்கையில் இறங்கினார்கள். துருக்கியில் அப்படி ஒரு நிறுவனமே இல்லை. ஆனால், பணம் உடனடியாக எடுக்கப்பட்டுவிட்டது. இதில் நரசிம்ம ராவின் மகன் பிரபாகர் ராவ் சம்பந்தப்பட்டு இருப்பதாக அவர் தலை உருண்டது. தப்பிக்கப் பார்த்த பிரபாகர் ராவ், இறுதியில் சி.பி.ஐ-யில் கைதானார்.
இப்படிப்பட்ட யோக்கிய சிகாமணியான நரசிம்ம ராவ், வி.பி.சிங் மீது கறையை ஏற்படுத்த எப்படிப்பட்ட மோசடியில் இறங்கினார் என்பதே செயின்ட் கீட்ஸ் வழக்கு. ராஜீவ் காந்தியின் போஃபர்ஸ் ஊழலை அம்பலப்படுத்தி அதனை மக்கள் மத்தியில் பிரசாரமாகக் கொண்டுசென்ற வி.பி.சிங் மீது பழிபோட நினைத்து, செயின்ட் கீட்ஸ் என்ற இடத்தில் உள்ள வங்கியில் வி.பி.சிங் மகன் அஜேயாவுக்கு 21 மில்லியன் அமெரிக்க டாலர் இருப்பதாகச் செய்தி பரப்பினார்கள். பக்காவாக ஆதாரங்களையும் தயாரித்தார்கள். அப்படி ஒரு கணக்கு இருந்தால் அதனை கைப்பற்றிக்கொள்ளலாம் என்று பகிரங்கமாக அறிவித்தார் அஜேயா. அடுத்த சில மாதங்களில் தேர்தல் வந்து, 1989-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வி.பி.சிங் பிரதமர் ஆனார். அவர் இதுபற்றி விசாரிக்க சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டார்.
செயின்ட் கீட்ஸ் தீவு வங்கியில் வி.பி.சிங் மகனுக்குக் கணக்கு இருப்பதாகவும், அதில் ஏராளமான பணம் இருப்பதாகவும் ஆவணங்களை அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த நரசிம்ம ராவ் தயாரித்ததாக சி.பி.ஐ. அதிகாரி என்.கே.சிங் கண்டுபிடித்தார். இந்த வேலையை நரசிம்ம ராவுக்காக செய்துகொடுத்தது சந்திரா சாமியும், அவரது உதவியாளர் கே.என்.அகர்வாலும். சி.பி.ஐ-யின் முதல் தகவல் அறிக்கையில் இவர்கள் குற்றம்சாட்டப்பட்டார்கள். இறுதி அறிக்கையில் நரசிம்ம ராவும் குற்றம் சாட்டப்பட்டார்.
ஹர்ஷத் மேத்தா, லக்குபாய் பதக், ஜெயின் சகோதரர்கள், சந்திரா சாமி, கே.ஆர்.அகர்வால் என்ற மாமாஜி போன்ற இடைத்தரகர்கள் வட்டாரம் மத்திய அரசுக்குள் புகுந்து மனம் விரும்பும் அளவுக்கு ஆட்டத்தை நடத்தியது நரசிம்ம ராவ் ஆட்சி காலத்தில்தான்.
பி.ஜே.பி-யின் இந்துத்துவா முன்னெடுப்புகளும் இதே ராவ் ஆட்சியில்தான் முளைவிட்டு வளரத் தொடங்கியது.


- Vikatan

மகாத்மா முதல் மன்மோகன் வரை!- 36

இந்திரா படுகொலைக்குப் பிறகு ராஜீவ் காந்தியை பிரதமர் ஆக வேண்டாம் என்று தடுத்தவர்-

ராஜீவ் படுகொலைக்குப் பிறகு இத்தாலிக்குப் போய்விடலாம் என்று யோசித்தவர்-
தன்னுடைய குழந்தைகளை அரசியல் வாசனை இல்லாமல் வளர்க்க வேண்டும் என்று நினைத்தவர்-
எத்தனையோ பேர் வந்து நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று சொன்னபோது, அதனை மறுத்தவர்_ என்றெல்லாம் தன்னுடைய இமேஜைக் கட்டமைத்துவந்த சோனியா, மெள்ள மெள்ள அரசியலுக்குள் தன்னை நகர்த்திகொண்டு வந்தார் என்பதுதான் உண்மை!
1991 தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி காரணமாக பிரதமர் ஆனவர் நரசிம்ம ராவ். அவருக்கும் சோனியாவுக்கும் அதற்கு முன் அறிமுகம் இருந்தது இல்லை. இந்திராவின் இறுதிச் சடங்குகள் அனைத்தையும் கவனித்துக்கொண்டவர் என்ற அடிப்படையில் லேசான அறிமுகம் மட்டும்தான் இருந்தது. ராஜீவ் காந்தி நினைவு மைய அறக்கட்டளை அமைத்து அதனைக் கவனித்துக்கொண்டு இருக்கப்போவதாகச் சொன்ன சோனியா, தனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லாத நரசிம்ம ராவை அந்த அறக்கட்டளைக்குள் கொண்டுவந்தார். தன்னுடைய நிழலைக் கூடச் சந்தேகப்படக் கூடிய ராவுக்கு சோனியா ஏன் நமக்கு மகுடம் சூட்டுகிறார் என்பது புரியவில்லை. தன்னைச் சுற்றி ஏராளமான அரசியல் எதிரிகள் இருக்கும் நிலையில் இந்திரா குடும்பத்தின் ஆதரவு தனக்கு அவசியம் என்பதால் அந்தப் பொறுப்பை ராவ் ஏற்றுக்கொண்டார். இந்த அறக்கட்டளையின் கூட்டம் சோனியா குடியிருந்த 10, ஜன்பத் வீட்டில்தான் நடந்தது. ஒரு தனியார் அறக்கட்டளையில் பிரதமர் பதவியில் இருப்பவர் இடம்பெறலாமா என்ற சர்ச்சை நடந்துகொண்டு இருக்கும்போதுதான், இந்தக் கூட்டம் சோனியா வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டது.
சோனியாவின் வீட்டில் நடக்கும் தனியார் அறக்கட்டளைக் கூட்டத்துக்கு பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர் போகலாமா என்ற சந்தேகக் கேள்வியை நரசிம்ம ராவைச் சுற்றி இருப்பவர்களே கிளப்பினார்கள். ராஜீவ் காந்தியின் அலுவலகம் இருந்த 7, ரேஸ் கோர்ஸ் இல்லத்தில் அதனை நடத்தலாம், அங்கு பிரதமர் போனால் தவறு இல்லை என்றும் சொன்னார்கள். சோனியாவின் நட்புதான் முக்கியம் என்பதை உணர்ந்த ராவ்... 10, ஜன்பத் வீட்டுக்குப் போக முடிவெடுத்தார். இது சோனியாவுக்குக் கிடைத்த முதல் வெற்றி. காங்கிரஸ் கட்சிக்கு சோனியா வீசிய முதல் தூண்டில் அதுதான். அதில் ராவ் சிக்கினார்.
இதற்குப் பிரதி உபகாரம் செய்ய வேண்டாமா?
ராவ் ஆட்சியின் நிதி அமைச்சராக வந்து உட்காருகிறார் மன்மோகன் சிங். அதுவரை ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தவர் அவர். சோனியாவின் நட்பைத் தொடருவதற்கான முன்னோட்டமாக ராஜீவ் காந்தி நினைவு அறக்கட்டளைக்கு 100 கோடி ரூபாய் நிதியை ராவ், சிங் ஆகிய இருவரும் சேர்ந்து ஒதுக்கினார்கள். ஒரு தனியார் அறக்கட்டளைக்கு அரசாங்கப் பணம் 100 கோடி ரூபாய் தூக்கித் தரப்பட்டதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ராஜீவ் நண்பர்களான எம்.பி-க்கள் அவர்களை விமர்சித்து நாடாளுமன்றத்தில் பேசினார்கள். இதற்கு பதில் சொல்ல முடியாமல் ராவ், மன்மோகன் ஆகிய இருவரும் திணறினார்கள். எதற்காக இந்தப் பணத்தைக் கொடுத்தோம் என்பதை நியாயப்படுத்தி அவர்களால் ஒரு காரணமும் சொல்ல முடியவில்லை. சோனியாவுக்கும் விளக்கம் தர இயலவில்லை. மன்மோகனை அழைத்து, 'இந்தப் பணத்தை தர முடியாத நிலைமையில் இருக்கிறோம்’ என்பதைச் சொல்லிவிட்டு வரச் சொன்னார் ராவ். 'தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 100 கோடி ரூபாய் பணத்தைத் தருவது பெரும் சர்ச்சை ஆகிவிட்டது. இது ஆட்சிக்கே சிக்கலை ஏற்படுத்தும்போல் இருக்கிறது. எனவே, எங்களால் தர முடியவில்லை’ என்பதைச் சொல்லிவிட்டு வந்தார். 'எத்தனையோ பேரைக் காப்பாற்றும் நரசிம்ம ராவால் இதனைச் செய்து தர முடியாதா?’ என்ற வருத்தம் சோனியாவுக்கு ஏற்பட்டது. 'அறக்கட்டளைக்கு என்ன நோக்கத்துக்காகப் பணம் தர முன்வந்தீர்களோ... அதே நலத்திட்டங்களுக்கு இந்தத் தொகையைப் பயன்படுத்தினால் சரியாக இருக்கும்’ என்று கிண்டலாக ஒரு கடிதத்தை அனுப்பிவைத்துவிட்டு சோனியா அமைதியாக இருந்தார்.
ஆனால், அவரது உதவியாளராகவும் பாதுகாவலராகவும் இருந்த ஜார்ஜ் அமைதியாக இல்லை. சோனியாவையும் சும்மா விடவில்லை. அவருக்கு அரசியல் ஆசை தலைதூக்கியது. நாம் பார்த்து வந்தவர்கள் எல்லாம் இன்று அமைச்சர்களாக, எம்.பி-க்களாக இருக்க, தான் மட்டும் இன்னும் பாதுகாவலர் என்று அறியப்படுவதில் அவருக்கு விருப்பம் இல்லை. தேர்தலில் போட்டியிடாமல் மாநிலங்களவைக்கு போவதற்குத் திட்டமிட்டார். எந்த மாநிலத்தில் இடம் காலியாகிறது என்று பார்த்தார். கர்நாடகாவில் ஒரு இடம் காலியாவது தெரிந்தது. அந்த இடத்தை கர்நாடகாவைச் சேர்ந்த மார்க்ரெட் ஆல்வா குறிவைத்தார். அவருக்கு கர்நாடக காங்கிரஸார் எதிர்ப்பு கிளப்பினார்கள். ஜார்ஜ், கேரளாவைச் சேர்ந்தவர். கேரளாவின் முக்கியத் தலைவரான கே.கருணாகரனும் ஜார்ஜுக்கு ஆதரவு காட்டினார். ஆனால் ஜார்ஜுக்கு பதவி தருவதில் ராவ் தயக்கம் காட்டினார். சோனியா அரசியலுக்குள் நுழைவதற்கான அஸ்திரம் இது என்று ராவ் நினைத்தார். ராஜீவ் காலத்தில் முக்கியமான அதிகார மையமாக இருந்தவர் ஜார்ஜ் என்பது ராவுக்குத் தெரியும். அதனால்தான் கட்டையைப் போட்டார். இப்படிச் செய்வதாலேயே சோனியா எதிர்ப்பு அரசியலைக் கையில் எடுத்தால் சிக்கல் ஆகுமே என்றும் ராவ் யோசித்தார். அதனால் சோனியாவைப் போய் பார்த்தார். ஜார்ஜுக்குத் தரலாமா என்று கேட்டார். கட்சி விதிப்படி முடிவெடுங்கள் என்றார் சோனியா. பெரிய மனிதர்கள் அப்படித்தானே சொல்வார்கள். 'கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ், கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவது சரியல்ல’ என்று சொல்லி மார்க்ரெட் ஆல்வாவைத் தேர்வுசெய்தார் ராவ். இது சோனியா மனதில் நெருடல் ஏற்படுத்தியது. ஜார்ஜ் வெளிப்படையாக தனது அஸ்திரத்தை எடுக்க ஆரம்பித்தார். இதற்குப் பிறகுதான் ராவ் எதிர்ப்பாளர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து சோனியாவை சந்திக்க வைக்க ஜார்ஜ் ஏற்பாடு செய்தார். ஒரு வாரத்துக்கு இரண்டு மூன்று நாட்கள் மாலை வேளைகளில் சோனியாவை அதிருப்தி காங்கிரஸ் தலைவர்கள் பார்க்க ஆரம்பித்தார்கள். ராவ் எதிரிகள் தங்களது புலம்பலைப் பதிவுசெய்யும் இடமாக சோனியா வீடு மாறியது. இவர்கள் அனைவருமே, சோனியாவை அரசியலுக்கு வரச் சொன்னார்கள், காங்கிரஸ் தலைமையை ஏற்கச் சொன்னார்கள். 'பிரதமராக ராவ் இருக்கட்டும், நீங்கள் கட்சித் தலைவராக இருங்கள்’ என்றார்கள். இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டார். பதில் எதுவும் சொல்லவில்லை. காலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
சோனியாவின் முதல் அஸ்திரம் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது வெளியானது. இந்திய மக்களின் மதச்சார்பின்மைத் தன்மைக்கும் சகோதரத்துவத்துக்கும் மிகப்பெரிய களங்கம் ஏற்படுத்திய பாபர் மசூதி இடிப்பு 1992 டிசம்பர் 6-ம் தேதி நடந்தது. அப்போது, பாபர் மசூதி இடிப்பைக் கடுமையாகக் கண்டித்து சோனியாவின் முதல் அறிக்கை வெளியானது. 'இந்த அநியாயத்தை நான் தட்டிகேட்கவில்லை என்றால், அது காந்தி, நேரு, ராஜீவ் ஆகிய மூவரும் கட்டிக் காத்துவந்த மதச்சார்பின்மைக்குச் செய்யும் துரோகம்’ என்று சோனியா அறிக்கை வெளியிட்டார். பாபர் மசூதி இடிப்பைவிட, பிரதமர் நரசிம்ம ராவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த அறிக்கைதான். அதுவரை சோனியாவை சந்தித்து ஆலோசனைகள் கேட்டுவந்த ராவ், அதன் பிறகு அந்த நடவடிக்கைகளைக் குறைத்துக் கொண்டார். இடைவெளி அதிகம் ஆனது. சோனியாவைச் சந்தித்தால் அரசாங்க லாபங்களை அடைய முடியாது என்று நினைத்தவர்கள் சோனியாவைப் புறக்கணிக்க ஆரம்பித்தார்கள். ஆனாலும், ராஜீவ் அறக்கட்டளைக்கு அரசுத் துறைகள் தந்துவந்த உதவிகள் அனைத்தும் தடங்கல் இல்லாமல் கிடைத்துவந்தன. ராவ் கையில் இருக்கும் அதிகாரத்தைப் பறிக்க சோனியா அணியினர் திட்டமிட்டனர். அவர்கள் கையில் அர்ஜுன் சிங் மாட்டினார். 'ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற முழக்கத்தை அர்ஜுன் சிங் கிளப்பினார். அப்போது கட்சித் தலைவர், பிரதமர் ஆகிய இரண்டு பதவிகளில் இருந்தார் ராவ். 94-ம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் அர்ஜுன் சிங் இதனை விவாதப் பொருளாக்கினார். இதில் பல களேபரங்கள் நடந்தன. அனைத்துக்கும் சோனியா ஆசீர்வாதம் உண்டு என்று சொல்லப்பட்டது. இறுதியில் அமைச்சர் பதவியில் இருந்தே அர்ஜுன் சிங் விலகினார். கட்சியை விட்டும் விலகினார். அப்போதும் அவரை ஆதரித்து கருத்துச் சொல்லாமல் அமைதியாக இருந்தார் சோனியா.
1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் நாள் ராஜீவ் பிறந்த நாள் விழா அமேதி தொகுதியில் நடந்தது. அப்போது நடந்த காட்சியை சோனியாவின் வரலாற்றை எழுதிய ரஷீத் கித்வாய் விவரிக்கிறார்.
''சேலையால் தலையை மூடிக்கொண்டு பிரியங்கா பின்தொடர அவர் மேடைப்படிகளில் ஏறியபோது, 'சோனியா, தேசத்தைக் காப்பாற்றுங்கள்’ என்ற கோஷம் வானைப் பிளந்தது. சோனியா பதற்றத்தில் இருந்தார். ஆனால், பிரியங்கா நம்பிக்கையின் சின்னமாக கூட்டத்தைப் பார்த்து கையசைத்தார். 'அம்மா, கூட்டத்தைப் பாருங்கள். அவர்களைப் பார்த்து உங்களுக்கு கையசைக்கத் தோன்றவில்லையா?’ என்று சோனியாவின் தோள்களைத் தொட்டுத் திருப்பிக் கூறினார்.
தமது ஏழு நிமிட உரையின்போது மக்களைப் பார்த்து, தம் வேதனையைப் பகிர்ந்துகொள்ளும்படி வேண்டினார். 'ஒரு முன்னாள் பிரதமரின் கொலையை விசாரிக்கவே இத்தனை தாமதம் ஆகுமானால், ஒரு சாதாரண குடிமகனின் கதி என்னவாகும்?’ என்று விசாரணையின் தாமதத்தை மேஜையைத் தட்டி உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார். 'என் உணர்வுகளை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்’ என்று பேசினார். அரசு அமைப்பின் சதி பற்றி அவர் குறியாகக் கொண்டாலும், அப்போது பிளவுபட்டு பின்னடைவில் இருந்த காங்கிரஸ் கோஷ்டிகள் இதை பிரதமர் ராவுக்கு எதிரான தாக்குதல் என்றே கருதினார்கள்'' என்று எழுதி இருக்கிறார்.
அன்றே சோனியா தலைவராக ஆகிவிட்டார். அதனை எதிர்க்கும் நிலையில் நரசிம்ம ராவ் இல்லை. அரசியல் வியூகங்களை வகுத்து, தான் என்ன செய்கிறோம் என்பதை எந்த இடத்திலும் எதிராளி தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கு திரைமறைவு அரசியல் நடத்துவதில் தேர்ந்த ராவ், சோனியாவைப் பார்த்து பயந்ததற்கு காரணம்... அவரது ஆட்சியின் எல்லாப் பக்கங்களும் ஊழல்மயமாகி கேன்சரைப்போல அரிக்க ஆரம்பித்து இருந்ததுதான். ஒரு ஆட்சி முழுமைக்கும் ஊழல்மயமாக ஆக முடியும் என்பதற்கு உதாரணமாக இருந்த நரசிம்ம ராவ் ஆட்சி. உதாரணமாகக் காட்ட வேண்டுமானால், இன்றைய மன்மோகன் ஆட்சியின் 'தாய்’ ஆட்சி அது. ஆம், அந்த ஆட்சியில்தானே மன்மோகன் சிங்கும் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார்!
- Vikatan

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 35

ஜெனீவாவில் இருந்த பத்திரிகையாளர் சித்ரா சுப்பிரமணியம் 1988 ஏப்ரல் 8-ம் தேதி ஒரு தகவலை வெளியிட்டார். ''ஸ்வீடன் நாட்டுப் போலீஸ் அதிகாரி ஒருவரை சந்தித்தேன். இவர்தான் ஃபோபர்ஸ் ஒப்பந்தம் பற்றிய உண்மையை விசாரிக்கும் பொறுப்பில் இருந்தவர். ஃபோபர்ஸ் வர்த்தகம் நடக்கும்போது அதன் நிர்வாகப் பொறுப்பில் இருந்த மார்ட்டின் ஆர்த்போவை சந்தித்து விசாரணை நடத்தியவர் இவர். 'ஃபோபர்ஸ் கம்பெனி இந்த வர்த்தகத்துக்கு ஏஜென்ட்கள் யாரும் இல்லை என்று சொல்லியிருந்தால் இந்த ஒப்பந்தத்தையே இந்திய அரசு போட்டிருக்காது. ஏஜென்ட்களின் இடைவிடாத முயற்சியின் காரணமாகத்தான் இந்த ஒப்பந்தமே போடப்பட்டது. ஆனால், பெரிய இடத்து மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக என்னையும் ஃபோபர்ஸ் நிறுவனத்தையும் பலிகடா ஆக்குகிறார்கள்’ என்று மார்ட்டின் ஆர்த்போ சொன்னதாக அந்த போலீஸ் அதிகாரி என்னிடம் சொன்னார்'' என்று எழுதினார். அந்தப் பெரிய மனிதர்கள் யார்? மார்ட்டின் ஆர்த்போவின் டைரி அம்பலப்படுத்தியது.

''காந்தி டிரஸ்ட் வக்கீல் பாப்வில்சன் என்பவர் ஏ அண்ட் ஈ சர்வீஸஸ் என்ற கம்பெனியின் இரண்டு டைரக்டர்களை ஜெனீவாவில் சந்தித்து ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்'' என்று 1987 ஜூலை 2-ம் தேதி தனது டைரியில் மார்ட்டின் ஆர்த்போ எழுதியிருக்கிறார். இதில் சம்பந்தப்பட்ட காந்தி டிரஸ்ட், ஏ அண்ட் ஈ சர்வீஸஸ் ஆகிய இரண்டும் பணம் கைமாறப் பயன்பட்டவை.
1987 செப்டம்பர் 2-ம் தேதி மார்ட்டின் ஆர்த்போ எழுதிய வாசகங்கள்தான் முக்கியமானது.
''முழு உண்மையைக் கூறும்படி நான் நிர்ப்பந்திக்கப்படலாம். 'N’ ஐ பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஆனால் 'Q’ வுக்கு இந்த விவகாரத்தில் என்ன தொடர்பு என்பது வெளிப்பட்டால் அது பெரிய பிரச்னையைக் கிளப்பும். ஏனென்றால், 'Q’ வுக்கு 'R’ மிகவும் நெருக்கமானவர்'' என்று எழுதியிருக்கிறார்.
'N’ என்பது அருண்நேரு.
Q என்பது இத்தாலியைச் சேர்ந்த குவாத்ரோச்சி. R என்பது ராஜீவ் காந்தி என்ற விளக்கம் வெளிச்சத்துக்கு வந்தது. ராஜீவ் காந்தியை கேள்விக்கு உள்ளாக்கி அதன்மூலம் சோனியாவையே சிக்கலுக்குள் இழுத்துவர ஆதாரமானது அந்த டைரி.
ராணுவ ஆயுத பேரங்களில் முதலில் இடைத்தரகர்களை ஒழித்துவிட்டோம் என்று சொன்னவரும் ராஜீவ் காந்திதான். பேரங்கள் வெளியில் வந்ததும் கமிஷன் எதுவும் தரப்படவில்லை என்றதும் ராஜீவ்தான். சுவிஸ் வங்கியில் பணம் போடப்பட்ட தகவல் வந்ததும், இந்தியர்கள் யாரும் பணம் வாங்கவில்லை என்றதும் ராஜீவ்தான். கமிஷன் பணம் தரப்பட்டதை நிரூபித்ததும் 'அது சர்வீஸ் சார்ஜ்’ என்று வியாக்கியானம் செய்ததும் ராஜீவ்தான்!
பிரிட்டிஷார் இந்தியச் செல்வங்களை இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லும்போது சொன்ன வார்த்தை ஞாபகம் இருக்கிறதா? 'நாங்கள் இந்தியாவில் இருந்து, கொண்டு செல்வதற்குப் பெயர் ஹோம் சார்ஜ்’ என்றார்கள். ராஜீவ் புதிய வார்த்தையை கண்டுபிடித்தார் 'சர்வீஸ் சார்ஜ்’ அவருக்கு ஹோம் இங்கே இருந்ததால் அந்த வார்த்தையை அவரால் பயன்படுத்த முடியவில்லை.
இந்த லஞ்சப் பணம் சுவிஸ் வங்கியில் லோட்டஸ் என்ற பெயரில் போடப்பட்டதாக அடுத்த தகவல் வெளியானது. இதுவும் ராஜீவின் பெயரோடு சேர்த்து இணைத்துப் பேசப்பட்டது 'தாமரை’ என்றால் வடமொழியில் ராஜீவ் என்று அர்த்தம். இவை அனைத்தும் சேர்த்து ராஜீவ் பதவிக்கு வேட்டு வைத்தது. 1989 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை படுதோல்வி அடையச் செய்ய ஃபோபர்ஸ் காரணமானது. இந்த ஊழல் கறையை மறைக்க 1990-ம் ஆண்டில் இருந்து இன்று வரை காங்கிரஸ் எடுத்த முயற்சிகளை விவரித்தாலே, அவர்களின் உண்மை முகம் அம்பலம் ஆகும்.
ஃபோபர்ஸ் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் வி.பி.சிங் 1990-ல் முடிவெடுத்து ஒப்படைத்தார். 91 மே 21-ம் தேதி மிகக் கொடூரமான முறையில் ராஜீவ் படுகொலை செய்யப்பட்டதால் அவர் நீங்கலாக மற்றவர்கள் இதில் சுட்டிக் காட்டப்பட்டார்கள். சி.பி.ஐ. தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் குவாத்ரோச்சி மற்றும் வின்சத்தாவை கைதுசெய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.
1991-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் பிரதமராக பி.வி.நரசிம்மராவ் உட்கார்ந்தார். ஃபோபர்ஸ் விவகாரத்தை அமுக்கும் வேலைகள் ஆரம்பமானது. இது சம்பந்தமான விசாரணைக்கு தடங்கல் ஏற்படுத்தும் வண்ணம் ஒரு கடிதத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மாதவ் சிங் கோலங்கி ஸ்வீடன் அரசுக்கு அனுப்ப, அந்தக் கடிதம் வெளியில் ரிலீஸ் ஆகி அவர் அமைச்சர் பதவியை விட்டு விலகினார்.
கமிஷனில் சம்பந்தப்பட்ட ஏ அண்ட் ஈ சர்வீஸஸ் நிறுவனம் பனாமா தீவில் உள்ள கொல்பார் நிறுவனத்துக்குச் சொந்தமானது என்றும் அதன் உரிமையாளர்கள் குவாத்ரோச்சியும் அவர் மனைவியும்தான் என்றும் சுவிஸ் நீதிமன்றம் 1993-ம் ஆண்டு ஜூலையில் அறிவித்தது. 1996-ல் காங்கிரஸ் அரசு போய் ஐக்கிய முன்னணி அரசு இங்கு பதவிக்கு வந்தது. இதுவும் காங்கிரஸ் தயவில் இருந்ததால் சி.பி.ஐ. எதுவும் செய்யவில்லை.
1998-ல் தனக்கு எதிரான விசாரணையைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் குவாத்ரோச்சி மனுத் தாக்கல் செய்து வலிய வந்து மாட்டினார். ஐக்கிய முன்னணி ஆட்சி கவிழ்ந்து பி.ஜே.பி. ஆட்சி உட்கார்ந்தது. காங்கிரஸை தட்டிவைக்க பி.ஜே.பி-க்கு கிடைத்த அஸ்திரமாக ஃபோபர்ஸ் மாறியது.
குவாத்ரோச்சி, இந்துஜா, வின்சத்தா, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் பட் நாகர் ஆகியோர் பெயரைச் சேர்த்து சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் ஆனது. இது 1999 அக்டோபர். குவாத்ரோச்சியை கைதுசெய்ய முயற்சித்தார்கள். அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது வங்கிக் கணக்கு மட்டுமே லண்டனில் முடக்கப்பட்டது. 2001 அக்டோபரில் வின்சத்தா மரணம் அடைந்தார்.
2004-ல் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி. முடக்கப்பட்ட குவாத்ரோச்சியின் லண்டன் வங்கிக் கணக்கை விடுவிக்க காங்கிரஸ் அரசு கடிதம் எழுதியது மட்டுமல்ல இந்திய அதிகாரியே லண்டனுக்கு நேரில் அனுப்பி வைக்கப்பட்டார். அன்று சட்ட அமைச்சராக இருந்து அதனை பகிரங்கமாகச் செய்தவர் பரத்வாஜ்.
ஃபோபர்ஸ் வழக்கில் இருந்து ராஜீவ் பெயரை டெல்லி உயர் நீதிமன்றம் நீக்கியது. 2005-ல் இந்துஜா சகோதரர்களின் பெயரும் ஃபோபர்ஸ் வழக்கில் இருந்து நீக்கப்பட்டது.
ராஜீவ் இறந்துபோனார். வின்சத்தா இறந்துபோனார். இந்துஜா சகோதரர்களின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது. நான் மட்டும் என்ன பாவம் செய்தேன் என்று கேட்டார் குவாத்ரோச்சி.
''குவாத்ரோச்சி என்பவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரை கைது செய்யவும் முடியவில்லை. அவருக்கு இந்தமுறை கோர்ட்டில் ஆதாரமும் இல்லை. எனவே இந்த வழக்கை முடித்துக் கொள்கிறோம்'' என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. வழக்கு தாக்கல் செய்தது. 2009 ஏப்ரலில் இன்னொன்றும் நடந்தது. குவாத்ரோச்சியை கைதுசெய்ய இன்டர்போல் விட்டிருந்த வாரன்ட் நோட்டீஸை சி.பி.ஐ. வாபஸ் பெற்றது.
இந்துஜா சகோதரர்கள் மீது போடப்பட்ட வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று சொல்லி டெல்லி உயர் நீதிமன்றம் அவர் பெயரை நீக்கியது. சி.பி.ஐ. சிரித்தபடி ஏற்றுக்கொண்டது. இவ்வளவும் எதனால் சாதிக்க முடிந்தது? சோனியா அரசியலுக்கு நுழைந்ததால் மட்டுமே!
ராஜீவ் மறைவுக்குப் பிறகு அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்த சோனியா திடீரென அரசியலுக்குள் நுழைய ஃபோபர்ஸ் விவகாரம்தான் காரணம் என்று வரலாற்று ஆசிரியர்கள் எழுதுகிறார்கள். சிக்கிம் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை இணைப் பேராசிரியராக இருக்கும் வி.கிருஷ்ணா அனந்த் எழுதுகிறார். ''ஃபோபர்ஸ் வழக்குக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் வகையில் நரசிம்ம ராவ் செயல்படுவதைத் தொடர்ந்து அதுவரை அமைதி காத்துவந்த சோனியா தனது மௌனத்தை மெள்ள கலைக்கத் தொடங்கினார். வழக்குகளில், குறிப்பாக ஃபோபர்ஸ் பிரச்னைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதுதான் ஒரேவழி என்ற முடிவுக்கு வந்தார். அரசியல் ஆசை அவரது ஆழ் மனத்திலும் மெள்ள முளைவிடத் தொடங்கியது. ஆனால், அதற்கு ஃபோபர்ஸ்தான் காரணம் என்று கூறுவது,  'எங்க அப்பன் குதிருக்குள் இல்லை’ என்று சொல்வதுபோல் ஆகிவிடும் என்பதால் பிரச்னையைத் திசைதிருப்ப சோனியா முடிவு செய்தார்.
1993 மே 21 அன்று அமேதியில் நடைபெற்ற ராஜீவ் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். ராஜீவ் படுகொலைக்கு காரணம் யார்? சதி வலை பின்னியவர்கள் யார்? அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று மத்திய அரசு மீது சரமாரியான கேள்விக் கணைகளை வீசினார். ஃபோபர்ஸ் பிரச்னை செய்தித்தாள்களில் பரபரப்பாக இடம் பெறுவதற்குப் பதிலாக மௌனம் கலைத்த சோனியாவின் பேச்சே பத்திரிகைகளில் முதலிடத்தைப் பிடித்தது.''
அதன் பிறகு ஃபோபர்ஸ் பிரச்னையை நரசிம்ம ராவ் எடுக்கவில்லை. சோனியாவும் ராஜீவ் கொலையில் உள்ள சதி குறித்த கேள்விகளை எழுப்பவில்லை. ராஜீவ் கொலை சதி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷனில் நரசிம்ம ராவின் நண்பர்கள் தலை உருண்டதை வைத்துப் பார்த்தால் பல்வேறு மர்மங்களை உணர முடியும்!
    

- Vikatan

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 34

ஃபோபர்ஸ் - மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்று ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸ் கட்சியைக் கட்டாந்தரைக்கு கொண்டு வந்த சொல்!

'திருவாளர் பரிசுத்தம்’ என்று அடையாளப்படுத்தப்பட்டு அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட ராஜீவ் காந்தியை 'பீரங்கித் திருடன்’ என்று பரிகாசம் செய்யக் காரணமான சொல்!
ராஜீவைக் காதலித்துக் கரம்பிடித்த அப்பாவி இத்தாலிப் பெண் என்று அதுவரை கருதப்பட்ட சோனியா மீது அரசியல் பார்வை விழுவதற்கு காரணமான சொல்!
இந்தியாவின் பாதுகாப்புக்கு அண்மை நாடுகளால் அச்சுறுத்தல், அதனைச் சமாளிக்க பீரங்கிகள் தேவை எனச் சொல்லி ஸ்வீடனைச் சேர்ந்த ஃபோபர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இரண்டு அரசுகளுக்கும் இடையில் 1985 டிசம்பர் 13 முதல் 1986 மார்ச் 23 வரை பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தது. இந்த ஒப்பந்தங்களுக்கு இடையில் இடைத்தரகர்கள் கிடையாது என்றும் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. கோடிக்கணக்கான பணம் சம்பந்தப்பட்ட ராணுவ ஒப்பந்தங்களின் இடைத்தரகர்கள் சம்பாத்தியமும் கோடிக்கணக்கில் இருக்கும். அனைத்து நாடுகளிலும் தேவையற்ற அளவுக்கு ராணுவத்துக்கு செலவிடுவதற்குக் காரணமே, இதுபோன்ற இடைத்தரகுப் பணங்களைக் கைப்பற்றுவதற்காகத்தான். அரசியல்வாதிகள், பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ராணுவ உயர் அதிகாரிகள் சிலர் இதுபோன்ற ஒப்பந்தங்களில் ஆர்வமாக இருப்பதற்கும் அதுதான் காரணம். இடைத்தரகர் கிடையாது என்று இந்தியா அறிவித்ததை ஸ்வீடன் நிறுவனம் ஏற்கவில்லை என்று சொல்லி, வின்சத்தாவின் அன்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை இடைத்தரகராகப் போட்டார்கள். ஒப்பந்தம் கையெழுத்தான அன்று, டெல்லி மௌரியா ஹோட்டலில் வின்சத்தா விருந்து வைத்துக் கொண்டாடினர். 1987 ஏப்ரல் 16 வரை இதில் என்ன நடந்தது என்பது 'ராணுவ ரகசியமாகவே’ இருந்தது.
அன்றைய தினம் ஸ்வீடன் வானொலி ஒரு செய்தியை ஒலிபரப்பியது. 'ஃபோபர்ஸ் பீரங்கிகளை வாங்குவதற்கு லஞ்சம் தரப்பட்டுள்ளது. இந்தப் பணம் சுவிஸ் வங்கியில் போடப்பட்டுள்ளது’ என்பதுதான் அந்தச் செய்தி. ராஜீவ் தலைகவிழ்ந்து நின்றார். 'எந்த முறைகேடும் நடக்கவில்லை’ என்று அவர் சொன்னார். யாரும் நம்பத் தயாராக இல்லை.
நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் இந்தப் பிரச்னை ராஜீவை தலை முதல் கால் வரை சுற்றி இறுக்கியது. நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. 'ஒன்றை மறைக்க வேண்டுமானால் கல்லைப் போடு; அல்லது, கமிஷனைப் போடு’ என்று சொல்வதைப்போல, இறுதியில் ஜே.பி.சி. விசாரணைக்கு ராஜீவ் ஒப்புக்கொண்டார்.
30 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையில் 24 பேர் காங்கிரஸ் உறுப்பினர்கள். உண்மை எப்படி வெளியில் வரும்? இதில் நியாயம் கிடைக்காது என்று எதிர்க்கட்சியினரும் வர மறுத்து விட்டார்கள். இதுவும் வசதிதானே. அந்த 24 பேரும் ஸ்வீடனுக்குச் சுற்றுலா போனார்கள். திரும்பிவந்தார்கள். கூடிக்கூடிப் பேசினார்கள். 'எந்த ஊழலும் நடக்கவில்லை. யாருக்கும் கமிஷன் தரப்படவில்லை. சுவிஸ் வங்கியில் யார் பேருக்கும் பணம் போடப்படவில்லை’ என்று அறிக்கை கொடுத்தார்கள். அத்தோடு ஃபோபர்ஸ் விவகாரம் முடிக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில்தான் தமிழகத்தில் இருந்து ஒரு குரல்.
''இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது'' என்று அன்று அ.தி.மு.க. எம்.பி-யாக இருந்த ஆலடி அருணா அறிக்கை வெளியிட்டார். இவர் இந்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இருந்தவர். அன்று காங்கிரஸும் அ.தி.மு.க-வும் கூட்டணியில் இருந்தன. அதனால் அவருக்கு ஜே.பி.சி. விசாரணைக்குள் நடந்த ரகசியப் பேச்சுவார்த்தைகள் அத்தனையும் தெரியும். அவற்றைத்தான் யார் பெயரையும் குறிப்பிடாமல் ஆலடி அருணா அம்பலப்படுத்தினார்!
'இந்து’ பத்திரிகை ஃபோபர்ஸ் விவகாரத்தை கையில் எடுத்தது. ராணுவ ரகசியங்கள் அனைத்தையும் மொத்தமாகப் போட்டு உடைத்தது. ஊழலை மறைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் மண்ணாகிப்போனது.
''எவ்வளவு பெரியவர்கள் தவறு செய்திருந்தாலும், தப்ப விடமாட்டோம்'' என்று நல்ல பிள்ளையாக முதலில் அறிவித்தார் பிரதமர் ராஜீவ். ''ஸ்வீடன் வானொலியில் கூறப்பட்ட தொகை சுவிஸ் கம்பெனிக்குத்தான் தரப்பட்டது. அதற்கும் இந்தியாவிடம் பீரங்கி வாங்கியதற்கும் தொடர்பு கிடையாது'' என்று ஃபோபர்ஸ் கம்பெனியையே அறிக்கைவிட வைத்தார்கள். ''சுவிஸ் வங்கியில் பணம் எதுவும் போடப்படவில்லை என்று ஸ்வீடன் அரசு என்னிடம் சொல்லிவிட்டது'' என்றார் ராஜீவ். ''நானோ என் குடும்ப உறுப்பினர்களோ இந்த விவகாரத்தில் எந்தப் பணமும் பெறவில்லை என்று ஜனநாயகத்தின் தலையாய மன்றமான இங்கு தெரிவிக்கிறேன்'' என்று நாடாளுமன்றத்தில் ராஜீவ் சொன்னார்.
1987 ஆகஸ்ட் 26-ம் தேதி ஸ்வீடனில் இருந்து வந்த அறிக்கை, ஊழலின் இருண்ட பக்கத்தை லேசாக வெளிச்சம் போட்டது. ''நாங்கள் தந்த பணத்தில் எங்கள் ஏஜென்ட்கள் இந்தியாவில் யாருக்காவது லஞ்சம் தந்தார்களா என்பது எங்களுக்குத் தெரியாது'' என்றார் நோபல் தொழிற்சாலைகளில் தலைவர்.
''மூன்று கம்பெனிகளின் பெயர்களில் இந்த லஞ்சப் பணம் தரப்பட்டுவிட்டது'' என்று ஃபோபர்ஸ் கம்பெனியின் அதிகாரிகளில் ஒருவரான பார்பெர்க் பேட்டியைக் கொடுத்தார். அந்த மூன்று கம்பெனிகளின் பெயரை முதன்முதலில் அம்பலப்படுத்தினார் 'இந்தியன் எக்ஸ்பிரஸில்’ இருந்த அருண் ஷோரி. 'இந்து’ நாளிதழில் பத்திரிகையாளர் சித்ரா சுப்பிரமணியன், எந்தெந்த சுவிஸ் வங்கியில் பணம் போடப்பட்டது என்ற தகவலை அம்பலப்படுத்தினார்.
ஸ்வீடனில் உள்ள ஸ்டோக்ஹோம் மாவட்ட தலைமை வழக்கறிஞர் ரிஸ்பெர்க், ''ஸ்விஸ் வங்கிகள் வாயிலாக ஸ்வென்ஸ்கா, மொரெஸ்கோ, ஏ அண்டு ஈ சர்வீஸ் ஆகிய மூன்று கம்பெனிகளுக்கு 65 கோடி ரூபாய்க்கு மேல் ஃபோபர்ஸ் கம்பெனி லஞ்சம் கொடுத்துள்ளது உண்மையே!'' என்று சொல்லி 1988 ஜனவரி 25-ம் தேதி இந்தியாவையே அதிரவைத்தார்.
ஸ்வீடன் ஆடிட் அறிக்கையில், ''பீரங்கி பேரத்தில் கமிஷன் கொடுக்கப்படவில்லை என்று கூறுவது உண்மையல்ல. பீரங்கி பேரத்தில் கொடுக்கப்பட்ட தொகைகள் எல்லாம் கணக்கு முடிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட தொகைகள் என்று கூறப்பட்டதும் உண்மை அல்ல. அனைத்துத் தொகைகளும் கமிஷன் தொகைகள்தான். பீரங்கி பேரத்தில் கமிஷன் வாங்கியவர்கள் யாருமே இந்தியர்கள் அல்ல என்று இந்தியப் பிரதமர் சொல்லிவருகிறார். அதுவும் உண்மை அல்ல'' என்று சொல்லி கமிஷன் வாங்கிய கம்பெனிகளின் இந்தியத் தொடர்புகளை அம்பலப்படுத்தியது. இந்தியத் தொழிலதிபர்களாக வின்சத்தா, இந்துஜா சகோதர்கள் தொடர்புடைய கம்பெனிகள் இவை எனவும் அம்பலமானது.
இந்த வர்த்தக - லஞ்சத்தின் மறைந்த பக்கங்களை மத்திய அரசிடம் வழங்குவதற்காக ஃபோபர்ஸ் கம்பெனியின் குழுவினர் இந்தியா வரப்போவதாக அறிவித்தார்கள். அவர்கள் வருகை ராஜீவால் தடுக்கப்பட்டது. பாதுகாப்புத் துறை இணை அமைச்சராக இருந்த அருண் சிங் தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
லஞ்சம் தரப்பட்ட விவகாரம் வெடித்துக்கொண்டு இருந்தபோது, இந்தியாவின் ஆடிட்டர் ஜெனரலான சதுர்வேதி, இந்த ஒப்பந்தத்தின் மற்ற கோளாறுகளை அம்பலப்படுத்தினார்.
''இவை முதல்தரமான பீரங்கிகள் அல்ல. பலமுறை நிராகரிக்கப்பட்ட பீரங்கிகள் இவை. திடீரென முடிவை மாற்றிக்கொண்டு இதனை வாங்கியிருக்கிறார்கள். ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்துக்குள் பீரங்கிகளை இவர்கள் சப்ளை செய்யவில்லை. குறிப்பிட்டபடி பீரங்கிகளின் இயக்கமும் இல்லை. வெடிமருந்துகளும் தரம் தாழ்ந்தவையே'' என்றார் சதுர்வேதி.
சதுர்வேதி மூட்டிய தீயில் எண்ணெய் வார்த்தார் முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி சுந்தர்ஜி.
''ஃபோபர்ஸ் கம்பெனியின் குழு, கமிஷன் வாங்கியவர்களின் பெயரை வெளியிடத் தயாராக இருந்தது. மாஸ்கோவில் இருந்து டெல்லி திரும்பிய ராஜீவ், இந்தத் தகவலை அறிந்து கோபமடைந்தார். ஃபோபர்ஸ் குழு டெல்லி வராமல் தடுத்துவிட்டார். இதன் எதிரொலியாகவே அருண்சிங் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்'' என்றார்.
சி.பி.ஐ-யின் மூலமாக இந்த வாதங்களை மறைக்க முயற்சித்தார்கள். சி.பி.ஐ. என்ற அமைப்பை, தங்கள் வசதிக்கு ஏற்ப ஆளுங்கட்சி பயன்படுத்தும் முயற்சி ஃபோபர்ஸ் காலத்திலேயே ஆரம்பம் ஆகிவிட்டது.
சி.பி.ஐ-யின் அன்றைய தலைவர் மோகன் காத்ரே, ''ஸ்வீடன் நாடு முழுவதும் தேடித் தேடி சலித்துப்போனோம். இவர்கள் லஞ்சம் கொடுத்ததாகச் சொல்லும் மொராஸ்கோ என்ற கம்பெனியே இல்லை'' என்று சொன்னார். மொராஸ்கோ என்ற கம்பெனி இருக்கிறது; அதன் இயக்குநர்கள் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் 1988 அக்டோபர் 9-ம் தேதி வெளிவர ஆரம்பித்தன.
ஃபோபர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் பெயர் மார்ட்டின் ஆர்த்போ. இவர்தான் பீரங்கி பேரம் நடந்த காலத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர். இவர் தினமும் டைரி எழுதி வந்துள்ளார். நடந்த சம்பவங்கள் அனைத்தையும் மறைக்காமல் எழுதிவந்தார். ஸ்வீடன் நாட்டுப் போலீஸார் இந்த டைரியைக் கைப்பற்றினார்கள். அதில்தான் 'R’  'Q’ என்றால் யார் என்பது அம்பலம் ஆனது!
- Vikatan

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 33

இரண்டு மாபெரும் கொலைச் சம்பவங்களுக்கு மத்தியில் ராஜீவ் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

ஒன்று - இந்திராவின் படுகொலையைத் தொடர்ந்து சீக்கிய சமுதாயத்தவர்களாகப் பார்த்துப் பார்த்து பச்சைப் படுகொலைகள் செய்தது.
இரண்டாவது - பல்லாயிரக்கணக்கானவர்கள் செத்தும் பல லட்சக் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டும்போன பஞ்சாப் யூனியன் கார்பைடு சம்பவம்.
இரண்டிலுமே தனது தகுதியின்மையை ராஜீவ் நிரூபித்தார். இந்திராவைக் கொலை செய்தது அவருக்குப் பாதுகாவலராக இருந்த இரண்டு பேர். இருவருமே சீக்கியர்கள். அதற்காக சீக்கியர்கள் அனைவருமே குற்றவாளிகள் ஆகிவிட முடியுமா? அதிகாரம் கையில் இருந்தால் அப்படித்தானே தீர்ப்பளிக்க முடியும்? இந்திராவை கொலை செய்தது சீக்கியர் என்று கேள்விப்பட்டதுமே சீக்கியர்கள் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களைப் பார்த்துப் பார்த்து கொலை செய்தார்கள். 1947 இந்தியப் பிரிவினைக்குப் பிறகு 1984-ல்தான் கூட்டுக் கொலைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தவர், இனத்தவருக்கு எதிராக திட்டமிட்டு படுகொலை நடத்தப்பட்டது. சீக்கிய படுகொலைகளின் மொத்த சாராம்சத்தையும், 'காந்திக்குப் பிறகு இந்தியா’ என்ற தனது புத்தகத்தில் ராமச்சந்திர குஹா படம் பிடித்துக் காட்டுகிறார்.
''அக்டோபர் 31 இரவு தொடங்கிய வன்முறை நவம்பர் முதல் இரண்டு நாட்கள் தீவிரமடைந்தது. முதல் மோசமான சம்பவங்கள் தெற்கு டெல்லியிலும் மத்திய டெல்லியிலும் நடந்தன. அடுத்து அந்த நடவடிக்கை, கிழக்கு யமுனையைக் கடந்து அங்கிருந்த புனர் வாழ்வுக் குடியிருப்புகளுக்குப் பரவியது. எங்கும் சீக்கியர்கள் மட்டுமே இலக்காக இருந்தனர். அவர்களுடைய வீடுகள் எரிக்கப்பட்டன. அவர்களுடைய கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அவர்களுடைய கோயில்களும் மத நூல்களும் அவமதிக்கப்பட்டன. வெறிபிடித்த மக்கள், 'சர்தார்களைத் தீர்த்துக்கட்டு’, 'துரோகிகளைக் கொன்று போடு’, 'சீக்கியர்களுக்குப் பாடம் கற்பி’ என்பது போன்ற கோஷங்களை எழுப்பியதாக நேரில் கண்டவர்கள் கூறினார்கள்.
டெல்லியில் மட்டும் வன்முறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் முடிந்தனர். 18 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட சீக்கிய ஆண்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டனர். அவர்கள் பல விதங்களில் கொல்லப்பட்டனர். அதுவும் அவர்களுடைய தாய் மற்றும் மனைவிக்கு முன்பாக உடல்கள் கொளுத்தப்பட்டன. ஒரு சம்பவத்தில் சிறு குழந்தையை தந்தையுடன் சேர்த்து எரிக்கும்போது, 'ஏ சாம்ப் கா பச்ச ஹை. இஸே பீ கதம் கரோ’ (இது ஒரு பாம்புக் குட்டி. இதையும் சேர்த்துத் தீர்த்துக்கட்டு) என்று கோஷமிட்டனர்.
வெறிக்கூட்டத்தில் இருந்தவர்களை, பெரும்பாலும் காங்கிரஸ் அரசியல்வாதிகளான மாநகர கவுன்சிலர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏன் மத்திய மந்திரிகளேகூட வழிநடத்தினர். இந்த வேலையைச் செய்ய விரும்பி வந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பணமும் மதுவும் அளிப்பதாக உறுதி கூறினர். கூடவே அவர்கள், தாங்கள் கொள்ளையடிக்கும் பொருள்களையும் எடுத்துக்கொள்ளலாம். போலீஸ் இதனைப் பார்த்துக் கொண்டிருந்ததுடன் கொலை செய்வதற்கும் கொள்ளை அடிப்பதற்கும் தீவிரமாக உதவவும் செய்தனர்.
தீன்மூர்த்தி இல்ல வாயிலில் கூடியிருந்த வெறிக்கூட்டம், 'ரத்தத்துக்கு ரத்தம்’ என்று கோஷமிடுவதை தூர்தர்ஷன் காட்டியதன் மூலம் அந்த நிகழ்ச்சி நிஜத்தில் ஏற்பட அதுவே காரணமாயிற்று. போலீஸின் அலட்சியம் அதிர்ச்சி ஊட்டியது. காங்கிரஸ் அரசியல்வாதிகளின் பங்கு அறத்துக்குப் புறம்பானது. இந்த எல்லாத் தவறுகளையும்விட ராணுவத்தை அழைக்க விருப்பமின்றி இருந்தது மிகமிக மோசமானது. டெல்லியிலேயே பெரிய ராணுவக் குடியிருப்பு இருந்தது. தலைநகரின் 50 மைல் சுற்றுப்புறத்தில் பல தரைப் படைப் பிரிவுகள் இருந்தன. பிரதமருக்கும் உள்துறை அமைச்சர் பி.வி.நரசிம்மராவுக்கும் திரும்பத் திரும்ப வேண்டுகோள் விடுத்தும் அவர்கள் ராணுவத்தை அழைக்கவில்லை. 1, 2 தேதிகளில் நகரில் ராணுவ பலத்தைக் காட்டியிருந்தால் ஒருவேளை அது கலவரத்தை அடக்கியிருக்கும். ஆனால், ஆணை வரவேயில்லை''. அந்த மாபெரும் மனிதப் படுகொலையின்போது ராஜீவ் என்ன சொன்னார் தெரியுமா? ''பெரிய மரம் விழும்போது, தரை அதிரத்தான் செய்யும்!''
இந்திராவின் கொலையை யாராலும் நியாயப்படுத்த முடியாது. அதற்காக ஆயிரக்கணக்கான சீக்கியர்களைக் கொன்றதை நியாயப்படுத்த முடியுமா? அமைதியானவர், சாந்த மானவர், அரசியலை வெறுக்கக் கூடியவர், வேறு வழியில்லாததால் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார் என்று சொல்லப்பட்ட ராஜீவின் வாயில் இருந்துதான் இந்த வார்த்தைகள் வந்தன. இந்திராவின் கொலை மாபெரும் சதியின் விளைவு என்பதைப் போலவே சீக்கியர்களின் மீது நடத்தப்பட்டதும் சதித்திட்டமே தவிர தற்செயலானது அல்ல.
காங்கிரஸுக்கும் அகாலி தளம் கட்சிக்குமான வெறுப்பின் விளைவே இந்தச் சம்பவங்கள். 1980-ல் வெற்றிபெற்று பிரதமராக வந்த இந்திரா, பஞ்சாப்பில் சுர்ஜித் சிங் பர்னாலா தலைமையிலான அகாலிதளம் ஆட்சியையும் கலைத்தார். இது சீக்கியர்கள் மனதில் வெறுப்பாக மாறியது. இந்த வெறுப்பை பிந்த்ரன்வாலே பயன்படுத்திக் கொண்டார். காங்கிரஸும் சீக்கியர்களும் எதிரெதிராக அரசியல்ரீதியாக நின்று அது வன்முறை வழியாக மாறியது. பொற்கோயில் என்ற புனித இடம் இதற்கான மையமாக மாறியது. பிந்த்ரன்வாலே குழுவினரைக் கைது செய்வதற்காக 1984 ஜூன் 4, 6 தேதிகளில் ராணுவத்தை அனுப்பினார் இந்திரா. ஆபரேஷன் புளு ஸ்டார் என்று சொல்லப்பட்ட அந்த நடவடிக்கையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் பிந்த்ரன்வாலே கொல்லப்பட்டார். ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தீவிரவாதிகள் மீதான தாக்குதல் என்று சொல்லப்பட்டாலும் தங்கள் மதத்தினரின் புனிதத்தலமான பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பியது இந்திரா மீது வெறுப்பை விதைத்தது. இதனால்தான் அவர் கொல்லப்பட்டார். எனவே அகாலிதளம் - காங்கிரஸ் - சீக்கியர் பகை என்பது பல வருடங்களாகக் கனன்று கொண்டு இருந்தது. அதற்கு திட்டமிட்டு பழிதீர்ப்பதாகவே சீக்கியப் படுகொலைகள் நடந்தன. இது ராஜீவ் ஆட்சியின் முதல் களங்கம்!
கொலைக்குக் காரணமானவர்களைக் காப்பாற்ற இன்றுவரை காங்கிரஸ் அரசாங்கம் துடித்துவருவது அதைவிடப் பெரிய களங்கம்!
இரண்டாவது, போபால் விஷவாயுக் கசிவு. ராஜீவ், பதவிக்கு வந்த ஒரு மாதத்தில் நடந்தது இந்தச் சம்பவம். 1984 டிசம்பர் 3-ம் தேதி போபால் நகரத்தைச் சுற்றி புகை மூட்டம் கண்டது. வீடுகளில் தூங்கிக்கொண்டு இருந்தவர்களுக்குக்கூட இருமல் வந்தது. வெளியே ஓடிவந்தார்கள் பலர். எழுந்திருக்கவே முடியாமல் மயங்கினார்கள் பலர். அதற்குக் காரணம் நச்சு வாயு. அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைட் 'பூச்சிக்கொல்லி மருந்து நிறுவனத்தை அங்கு நடத்தி வந்தது. மீதைல் ஐசோ சயனைட் என்ற வாயு திடீரென வெளியேறியது. எந்த விதமான பரிசோதனைகளும் இல்லாமல் அலட்சியமாக அதனை வெளியேற்றிவிட்டார்கள். விஷத்தன்மைகொண்ட அந்த வாயுவை, அதன் விஷத்தன்மையை நீக்கி வெளியிட வேண்டும். ஆனால், அதனைச் செய்யாமல் விஷமாகவே வெளியிடப்பட்டது. காற்றில் விஷப்புகை பரவினால் என்ன ஆகும்? சுவாசிப்பவர்கள் அனைவருமே சுருண்டு விழுந்தார்கள். இந்த விபத்துக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டர்சன் கைது செய்யப்பட்டு உடனே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரை உடனடியாக அமெரிக்காவுக்குச் செல்ல காங்கிரஸ் அரசு அனுமதித்தது.
பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்புக்கு காரணமான ஆண்டர்சனை பாதுகாப்பாக அனுப்பியதற்கு அவர்கள் சொன்ன காரணம், 'அவரைக் கைது செய்தால் இரண்டு நாடுகளின் நல்லுறவு பாதிக்கப்படும்’ என்றார்கள். எத்தனை ஆயிரம் பேர் செத்தாலும் பரவாயில்லை நாட்டின் நல்லுறவு காப்பற்றப்பட்டால் போதும் என்று அன்று முடிவெடுத்ததால்தான் இன்று ஒரு தேவயானியைக்கூட இந்தியாவால் மீட்க முடியாமல் போனது. இன்று வரை யூனியன் கார்பைடு மரணங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இந்தியாவின் மிகப்பெரிய அழிவு விபத்தாக இன்று வரை நிழலாடுகிறது போபால். அந்த நச்சு வாயுக்கள் இன்றுவரை காற்றில் கலந்துகொண்டு இருக்கின்றன.
இப்படிப்பட்ட இரண்டு பேரழிவுகளுக்கு மத்தியில் பிரதமராக ராஜீவ் வந்தார்.
இந்திரா மரணம், மேனகா வெளியேற்றம், கணவர் பிரதமர் - இந்த சூழ்நிலையில் சோனியா வெளிச்சத்துக்கு வந்தார். ''1984-89 ராஜீவ் பிரதமராக இருந்த காலத்தில் சோனியா அரசியலில் கலக்காமல் ஒரு சாதாரண குடும்பப் பெண்ணாக வாழ்ந்து வர முயன்றார். அவருக்கு வெகு சில ஐரோப்பிய மற்றும் இந்திய நண்பர்களே இருந்தனர். அவர்களில் பலர் வெளிநாட்டு தூதுவர்களாகவும் சிலர் தொழிலதிபர்களாகவும் இருந்தனர். ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டால் இந்த நண்பர்கள் நம்பர் 5, ரேஸ் கோர்ஸ் வீட்டுக்கு வந்து பிரெஞ்ச், ஸ்பானீஷ் மொழிகளில் பேசி அரட்டையாடினார்கள். ஒட்டோவியோ குவாட்ராச்சியும் அப்படிப்பட்ட ஞாயிற்றுக்கிழமை நண்பர்களில் ஒருவர்தான்!'' என்று சோனியாவின் வரலாற்றை எழுதிய ரஷீத் கித்பாய் எழுதியிருக்கிறார்.
1987 ஏப்ரல் 16-ம் நாள் ஸ்வீடன் நாட்டு வானொலி சொல்லிய செய்தி குவாட் ராச்சியையும் சோனியாவையும் ராஜீவையும் யார் என்று இந்தியாவுக்கு நிஜமாய்ச் சொன்னது!

- Vikatan