Wednesday, February 19, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 24

உண்மையில் அன்று ஆட்சி செய்தவர் சஞ்சய் காந்தி என்றால், அவரது வலது கரமாக இருந்தவர் வி.சி.சுக்லா என்று சுருக்கமாக அறியப்படும் வித்யா சரண் சுக்லா. அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்ட காலகட்டத்தில் மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தவர் ஐ.கே.குஜ்ரால். தங்களுக்குச் சாதகமான செய்திகள் மட்டுமே வரவேண்டும் என்று விரும்பிய இந்திராவும் சஞ்சயும் அதற்காக ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்தனர். அவை அனைத்தையும் குஜ்ரால் அலுவலகத்தில் இருந்து சொல்லச் சொன்னார்கள். இந்திராவுக்கு ஆதரவாக முழக்கமிடுவதற்காக டெல்லிக்குள் தினமும் காங்கிரஸ் தொண்டர்கள் அழைத்துவரப்பட்டார்கள் அல்லவா? அந்தச் செய்திகளையும் அவர்களது புகைப்படங்களையும் அனைத்துப் பத்திரிகைகளும் கட்டாயம் வெளியிட வேண்டும் என்று குஜ்ரால் மூலமாக அனைத்து பத்திரிகை அலுவலகங்களுக்கும் சொல்லச் சொன்னார் சஞ்சய். 'இது என்னுடைய வேலை அல்ல’ என்றார் குஜ்ரால். 'அப்படியானால் உங்களுக்கு இங்கு வேலை இல்லை’ என்று சொல்லி திட்டங்களுக்கான துறைக்கு அனுப்பினார்கள்.அப்போது சஞ்சய் காந்தி சொன்னதைச் செய்பவராக, அவர் சொல்லாததையும் செய்பவராக வி.சி.சுக்லா வந்தார்!

இந்திரா காந்தியின் பிரசார தளபதியாக எமெர்ஜென்சி காலத்தில் நியமிக்கப்பட்டதும், 'அதுவரை ஆல் இந்தியா ரேடியோவின் ஸ்டேஷன் இயக்குநர்கள், அதிகாரிகள் வைத்திருந்தது அனைத்தும் தவறான கொள்கைகள்; அதைத் திருத்திக்கொண்டு, தான் காட்டுகிற வழிமுறையில் நடக்க வேண்டும்; தங்களின் சிந்தனைப் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்று எச்சரித்தார். எல்லாவற்றையும் கவனிப்பதையும், தணிக்கை செய்வதையும் கட்டாயம் செய்ய வேண்டும் என்றும் ஆணைகள் பறந்தன. கூடவே, யார் யாரெல்லாம் துரோகிகளாக இருக்கக் கூடுமோ அவர்களின் நெடிய பட்டியலும் வேண்டும் என்றும் ஆணைகள் பறந்தன.
அப்போது இருந்த எல்லா இதழ்களின் ஆசிரியர்கள், நிருபர்களைப் பற்றிய விவரமான பட்டியல் தயாராக வேண்டும் என்றும், அவர்களின் கடந்த காலம் பற்றியும் விரிவான அறிக்கைகள் வேண்டும் என்றும் ஆணைகள் பறந்தன. இப்படி அரட்டி உருட்டி வேலை வாங்கிய சுக்லாவுக்கு, செம பவ்யமான இன்னொரு முகமும் இருந்தது. காலை, மாலை இருவேளையிலும் சஞ்சய் காந்தியைப் பார்த்து அவருக்கு அடிபணிவதைத் தன்னுடைய முக்கியக் கடமையாக வைத்திருந்தார்.
செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஆனதும் சுக்லா தனக்கு நம்பகமான கே.என்.பிரசாத் என்கிற காவல் துறை அதிகாரியை அமைச்சகத்துக்குள் கொண்டுவந்தார். அவருக்கு வெளிநாடு வரை சென்று பல்வேறு  உளவு டெக்னிக்குகள் அறிந்து வந்த அனுபவம் உண்டு. அவர் உளவறிந்து தந்த தகவல்களை அன்றைய காங்கிரஸ் கட்சியின் கிச்சன் கேபினெட் ஆட்களான தேவ் காந்த் பரூவா, ரஜினி படேல் மற்றும் சித்தார்த் சங்கர் ரே போன்றவர்களிடம்... அதாவது, தன்னை இந்த இடத்துக்குக் கொண்டுவரக் காரணமான ஆட்களிடம் கொண்டுபோய் சேர்த்து நல்ல பேர் வாங்கினார் சுக்லா.
இந்த மூவர் கூட்டணிதான் சுக்லாவை 75-ல் நடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பணியாற்ற இந்திராவிடம் பரிந்துரை செய்தது. இந்திரா காந்தியை இளமையான, வலிமை மிகுந்த, நேர்மையான, மாற்றத்துக்கான தலைவராக அங்கே விளம்பரப்படுத்துவதை கச்சிதமாக செய்திருந்தார் சுக்லா. அதன் அடுத்த பலன்தான் குஜ்ரால் இடத்துக்கு இதே மூவர் அணி அவரைக் கொண்டுவந்தது.
வானொலி நிலைய இயக்குநர்களுடன் நடந்த கூட்டத்தில், 'ஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சொல்வதை வெளியிடக் கூடாது. 60 கோடி மக்களின் ஒரே தலைவி இந்திரா'' என்று சொன்னார். ''கட்சியே அரசாங்கம். ஆகவே, காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளை மட்டும் வெளியிட்டால் போதுமானது'' என்றும் சொன்னார். அப்போது ஒரு இயக்குநர், ''அது எப்படிச் சரியாகும்! கட்சி, அரசு இரண்டும் வேறுவேறு அல்லவா?'' என்று கேட்க, ''கட்சிக்கு உங்களை வேலை செய்யச் சொல்லவில்லை. கட்சிதான் ஆட்சி செய்கிறது. அதன் கொள்கைகளை அமல்படுத்துங்கள் என்றுதான் சொன்னேன்!'' என்று பல்லைக் கடித்துக்கொண்டு சொன்னார் சுக்லா. பின்னர் ஒரு வாரத்துக்குள் அந்த அதிகாரி தூக்கி அடிக்கப்பட்டார்.
அடுத்து வெளிநாட்டு இதழ்களின் நிருபர்கள் கூட்டம் ஒன்றைக் கூட்டினார் சுக்லா. 'தணிக்கையை மீறி செய்தி வெளியிட்டால் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவீர்கள்’ என்று எச்சரித்தார். 'இது எச்சரிக்கையோ, பயமுறுத்தலோ இல்லை. ஒரு வெற்று வாசகம்’ என்றும் கவனமாகச் சொன்னார் சுக்லா. அதை வாஷிங்டன் போஸ்ட் நிருபர் லீவிஸ் சிமன்ஸ் எழுதுவதை பார்த்ததும், 'ஏன் அதை எழுதுகிறீர்கள்? அவையெல்லாம் ரிப்போர்டிங் அல்ல!'' என்று அலறினார் சுக்லா. பின்னர், 'உங்களின் கட்டுரைகளைக் கொண்டு மட்டுமல்லாமல், உங்களின்  இதழ்கள் என்ன செய்தி எழுதுகின்றன, அவர்களைப் பற்றி உள்துறையில் இருக்கும் கோப்புகள் எல்லாவற்றையும் கொண்டே நடவடிக்கை இருக்கும்’ என்றும் மறைமுகமாக மிரட்டினார்.
'இதழ்கள் அறத்தோடு இருக்க வேண்டும்’ என்று சுக்லா வகுப்பெடுக்க... பி.பி.சி. நிருபர் எழுந்து, ''நாங்கள் அறத்தோடுதான் இருக்கிறோம். ஆனால், நீங்கள் பேசுகிற எதுவும் அறம் சார்ந்ததாக இல்லவே இல்லை'' என்று சொன்னதும் அங்கே இருந்த நிருபர்கள் கைதட்டினார்கள்! பல்லைக் கடித்தார் சுக்லா!
இதைத் தொடர்ந்து இந்த நிருபர்கள் சிக்கலை அனுபவித்தார்கள். சுக்லா சொன்னதை எழுதிய வாஷிங்டன் போஸ்ட் நிருபர் லீவிஸ் சிமன்ஸ் விரைவில் நாட்டைவிட்டு வெளியேற்றப்படலாம் என்று அமெரிக்காவில் உள்ள அவரது எடிட்டரிடம் இருந்து செய்தி வந்தது.
அப்போது இன்னொரு சங்கதியும் சிமன்ஸுக்கு ஞாபகம் வந்தது. அயல்நாட்டவர் பதிவு அலுவலகத்தில் அவர் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் பதிவு செய்ய வேண்டும். அடிக்கடி வெளிநாடுகளுக்கு வாஷிங்டன் போஸ்டின் ஆசியா நிருபர் என்கிற முறையில் பறக்க நேர்ந்தபடியால், அவரால் அடிக்கடி பதிவுசெய்ய முடியவில்லை. இதைக்காட்டி நாடு கடத்துவார்கள் என்று பயந்தவராக பதிவு அலுவலகம் போனார்.
''24 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு நீங்கள் கிளம்புங்கள்!'' என்று அழுத்திச் சொன்னார்கள் அதிகாரிகள். அதற்கு மறுத்தால் கைது நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்தார்கள். சிமன்ஸ், பேங்காக் நகருக்கு அனுப்பப்பட்டபோது அவரின் அனைத்து குறிப்பேடுகளும் கைப்பற்றப்பட்டன. நான்கு மாதங்கள் கழித்து அந்த நோட்டுகள் அவர் கைக்கு வந்தபோது, அவை எண்கள் இடப்பட்டும், பல இடங்களில் முத்திரை பதிக்கப்பட்டும் இருந்தது.
சுக்லா செல்வ வளம் மிகுந்த ஆள். மிக சொகுசான நம்பர் ஏழு, ரேஸ்கோர்ஸ் இல்லத்தில் இருந்த இவர் அதைவிட்டு நீங்க நேர்ந்தாலும், மார்க்கெட் மதிப்புக்கு வாடகை கொடுத்து அங்கேயே தங்குவேன் என்று சொல்கிற அளவுக்கு அவரின் செழிப்பு இருந்தது. அவரின் அப்பா ரவிஷங்கர் சுக்லா மத்தியப்பிரதேச மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக இருந்தார். எளிய ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர் பல கோடி சொத்துக்களைச் சேர்த்து தன் பொது வாழ்வைக் கழித்தவர். அவர் 70-களில் டெல்லிக்கு சீட் கேட்டு வந்தபோது அவரின் வங்கிக் கணக்கு காட்டப்பட்டு கேள்வி கேட்கப்பட்டதாகவும் அந்த அதிர்ச்சி தாங்காமல் இறந்துபோனதாகவும் டெல்லி வட்டாரத்தில் சொல்லப்படுவது உண்டு.
மத்தியப்பிரேதேச மாநிலத்தின் பல முக்கிய கம்பெனிகளை இவர்கள் வாங்கிக் குவித்தார்கள். சுரங்கங்கள்கூட இவர்களால் விழுங்கப்பட்டது. முடிவெட்டக்கூட ஓபராய் ஹோட்டலுக்குப் போவது சுக்லாவின் பாணியாக இருந்தது. ''இதையெல்லாம் நீங்கள் ஆடம்பரம் என்று எப்படி சொல்கிறீர்கள்?'' என்று இயல்பாகக் கேட்டார் அவர்.
கலாசாரக் காவலராக தன்னைக் காட்டிக்கொண்ட சுக்லா, காம ரசம் பொங்கும் காட்சிகள் இருந்த படங்களை வரவிடாமல் பார்த்துக்கொண்டார். ஆனால், வன்முறை மற்றும் உணர்ச்சியைத் தூண்டும் காட்சிகள் நிறைந்த 'ஷோலே’ படத்தை சஞ்சய்க்கு அமிதாப் நெருக்கம் என்பதால், அப்படியே சென்சார் இல்லாமல் ஓகே செய்தார். சினிமா நிதி கழகத்தின் தலைவராக இருந்த கரஞ்சியா எனும் ஃபிலிம்ஃபேர் இதழின் ஆசிரியர் அந்தப் பதவியை ராஜினாமா செய்தபோது சொன்ன காரணம் என்ன தெரியுமா? 'சுக்லாவை ஒவ்வொரு முறை விமான நிலையத்தில் போய் வரவேற்பது என் வேலையில்லை’ என்றார். வித்யா சின்ஹா எனும் நடிகை வெளிநாட்டுக்குப் போனபோது, 'உங்கள் பெயரிலும் வித்யா உள்ளது, என் பெயரிலும் வித்யா இருக்கிறது’ என்று சொல்லி வழிந்ததாகச் சொல்வார்கள். ராய்ப்பூரில் இந்திராவுக்கு எதிராக இருந்த விஜயலக்ஷ்மி பண்டிட் பேசிய உரையின் 75 வரி செய்தி வானொலியில் வந்ததற்கு டெலிகிராபின் மூலம் அந்தச் செய்தியை பதிவுசெய்த அதிகாரியை உடனடியாக  டிஸ்மிஸ் செய்யச் சொன்னவர் சுக்லா.
கே.என்.பிரசாத், ஏ.கே.வர்மா (இவர் சுக்லாவின் வகுப்புத் தோழர்) ஆகியோர் இதழியல் மற்றும் சினிமா நபர்களை மிரட்டுகிற வேலையைச் சிறப்பாக செய்தார்கள். தயாள் எனும் ஐ.ஏ.எஸ். அதிகாரி பத்திரிகைகள் எதைப் பற்றியும் மூச்சுவிடாமல் இருப்பதைப் பார்த்துக்கொண்டார். கிஷோர் குமார் அரசாங்க விளம்பரத்தில் (குடும்பக் கட்டுப்பாட்டு) நடிக்க மறுத்ததால், அவரது பாடல்களை ஒலிபரப்ப மறுத்தனர். மத்திய தகவல் சர்வீஸ் துறையை ஒட்டுக்கேட்கும் கருவிகள் வாங்கவும், உளவு பார்க்கும் கருவிகள் வாங்கவும் பயன்படுத்திக்கொண்டார் சுக்லா. அவை எங்கே, எதற்குப் போனது என்று தெரியாது. ஒரு கட்டத்தில் பத்திரிகைகளின் ஆசிரியராக யார் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முயல்கிற அளவுக்கு சுக்லா செயல்பட்டு சஞ்சய் காந்தியின் நன்மதிப்பைப் பெற்றார். ஆனால், உலகம் முழுவதும் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் நாற்றம் எடுக்கும் அளவுக்கு சுக்லாவைத் திட்டின. ஆனால், அதைப் பற்றி எல்லாம் சுக்லாவுக்குக் கவலையே இருந்தது இல்லை!

- Vikatan

Saturday, February 15, 2014

தண்ணீர்..தண்ணீர்... 1

''ஊர்ல நம்ம வீட்டுலயும் 'வாட்டர் ப்யூரிஃபையர்' போட்டாச்சுல. நம்ம ஊர்ல வீட்டுக்கு வீடு இப்ப இந்த மெஷினுங்கதான் ஓடிட்டிருக்கு. உங்க 'மினரல் வாட்டர்' எல்லாம் தோத்துடும். சும்மா கல்கண்டு மாதிரி இருக்கும்ல....''
''என்னது, அந்த வரப்பட்டிக்காட்டுல வாட்டர் ப்யூரிஃபையர் பயன்படுத்தறீங்களா?''
''பின்ன என்னப்பா... பத்து, பதினைஞ்சு வருஷத்துக்கு முன்ன வாய்க்கா தண்ணியைக்கூட அள்ளி அள்ளி குடிச்சுட்டு இருந்தவங்கதான். ஆனா, இப்ப தண்ணி சரியா இல்ல. நிலத்தடிநீர் கெட்டுப் போச்சு. போர் போட்டு எடுக்கற தண்ணியைகூட அப்படியே வாயில வெக்க முடியல. சுத்தமான தண்ணியா குடிக்கணும்ல...''
-நகரங்களில் மட்டுமல்ல... இன்று தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களிலும் கூட மினரல் வாட்டர் பாட்டில்கள் பளபளக்கின்றன. வீட்டுக்கு வீடு டிஷ் ஆண்டெனா வைத்திருப்பது போல... 'தண்ணீர் சுத்திகரிக்கும்' இயந்திரங்களையும் மாட்டி வைத்திருக்கிறார்கள்.
நியாயம்தான்... சுத்தமான குடிநீர் அவசியம்தான். ஆனால், ஒட்டுமொத்த தண்ணீரின் சுத்தத்தைப் பாதுகாப்பது பற்றி கவலைப்படாமல், நாம் குடிக்கும் தண்ணீர் மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் என்கிற நிலைப்பாடு... எந்த அளவுக்கு சரி?
நீர் நிலைகளைப் பாதுகாத்து காலாகாலத்துக்கும் ஜீவராசிகளுக்கான நீர்த் தேவையை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கம்தான். ஆனால், 'தனியார் 20 ரூபாய்க்கு மினரல் வாட்டர் பாட்டில் விக்கறாங்க... உங்கள் அன்புச் சகோதரியான நான் 10 ரூபாய்க்குக் கொடுக்கிறேனே...!' என்று முதல்வரே பெருமை அடித்துக் கொண்டிருக்கும்போது... வேறென்ன சொல்ல!
இது, இன்றைக்குச் சரியாக இருக்கலாம். நாளைக்கு...?
ஆம், உடனடித் தேவைக்கு சரி. ஆனால், நீண்டகால அடிப்படையில் பார்த்தால், 'கடல்நீரைச் சுத்திகரித்து குடிநீராக்குகிறோம்...', 'வீட்டுக்கு வீடுதண்ணீரைச் சுத்திகரிக்கிறோம்' என்கிற பெயரில், இருக்கின்ற நீரையெல்லாம் சுத்திகரிக்க ஆரம்பித்தால், அதன் எச்சமாக தேங்கும் கழிவுநீர், திரும்பத் திரும்ப பூமிக்குள் அனுப்பப்பட்டு, ஒரு கட்டத்தில்... ''இந்தத் தண்ணியில தொடர்ந்து கழிவு நீர் சேர்ந்ததால... 10 ஆயிரம் டிடிஎஸ் இருக்கு. இதை சுத்தப்படுத்தவே முடியாது. வேணும்னா... செவ்வாய் கிரகத்துல தண்ணியிருக்காம். ஒரு கிரவுண்ட் 500 கோடி ரூபாய்தான். பேசாம அங்க போயிட்டா... தண்ணி என்ன, பைப் போட்டு தேவலோக அமிர்தத்தையேகூட எடுத்துக்கலாம். நானெல்லாம் ஏற்கெனவே ஏழு கிரவுண்ட் வாங்கிப் போட்டுட்டேன். என்ன... நீங்க நாலு கிரவுண்ட் புக் பண்றீங்களா...?'' என்று நம்ம 'டெல்லி' கணேஷ் உள்ளிட்ட பெரியதிரை, சின்னத்திரை நட்சத்திரப் பட்டாளங்கள் டிவி-யில் தோன்றி உங்களிடம் வீட்டுமனை விற்கவேண்டிய நிலை வந்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை!
காற்று, தண்ணீர் இந்த இரண்டும் இயற்கை அளித்த இலவசங்கள்... ஆனால், காலஓட்டத்தில் குடும்ப பட்ஜெட்டின் செலவுப் பட்டியலில் அவையும்கூட இடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டன! இயற்கையின் அருட்கொடைகளை முறையாகப் பயன்படுத்தாதன் விளைவு... இலவசமாகக் கிடைத்து வந்த தண்ணீர் இன்று விலைக்கு வாங்க வேண்டிய பொருளாக மாறியிருக்கிறது. ஊதாரித்தனமாக செலவு செய்பவர்களை, 'காசை தண்ணியா செலவு செய்றான் பாரு’ என உவமையாகச் சொல்வார்கள். ஆனால், இன்று தண்ணீருக்காக காசு செலவு செய்யும் நெருக்கடியான நிலை!
குடிநீருக்கே இந்த நிலை என்றால்....
விவசாயத் தேவைக்கு?
வேரில் வெந்நீர் ஊற்றிவிட்டு, பழங்களை எதிர்பார்த்து அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். நீராதாரங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு, நீரை எதிர்பார்த்தால் எப்படி கிடைக்கும்? மலைகளில் இருந்து மரங்களை அழித்தோம்... பிறகெப்படி மேகம் சூழ்கொள்ளும்?
மலைகளில் உருவாகி ஆறாக மாறி, குளம், குட்டைகளைக் குளிர்வித்து, ஏரி நிறைத்து, குடிநீர் கொடுத்து, கடலில் கலக்கும் தண்ணீர், அதன் பாதையில் பயணித்த வரையில் பிரச்னை இருக்கவில்லை. ஆனால், வயல்காடு, ஆறு, குளம், குட்டை, ஏரி, கண்மாய் என்று அனைத்து நீராதாரங்களையும் ஆக்கிரமித்து பெரும்பெரும் பங்களாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், ஏர்போர்ட், நீதிமன்றங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், தொழிற்சாலைகள் என்று அமைக்க ஆரம்பித்த பிறகுதான், பொறுமை இழந்து, தன் பாதையை மாற்றிக் கொண்டுவிட்டாள் தண்ணீர் தாய்! கடைசியில், அவள் தனது பயணத்தை நிறுத்தியே பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
விளைவு, பாசனம் இல்லாமல் கருகிக் கிடக்கின்றன பயிர்கள். முடங்கிக் கிடக்கிறது விவசாயம். தை மாதத்திலேயே தலைவிரித்தாடும் பஞ்சம், கொளுத்தும் கோடையில் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே நடுங்குகிறது நெஞ்சம்.
கோடையைச் சமாளிக்க, என்ன செய்யலாம்..? என்பதற்கான ஆய்வுப் பணிகளை போர்க்கால அடிப்படையில் தொடங்கியிருக்கிறது, தமிழக அரசு. அப்படி ஆய்வுக்காகச் சென்ற அதிகாரிகள், பிரச்னையின் விஸ்வரூபத்தை கண்ட அதிர்ச்சியில் ஆடிப்போய் கிடக்கிறார்கள்.
''இது ஒரு மோசமான கட்டம். நிலத்தடி நீர் காணாம போய் பல வருசமாச்சு. குடிநீர்த் திட்டத்துக்காக, எந்த இடத்துல போர்வெல் போட்டாலும், புகைதான் வருது. பாசனத்துக்காக கட்டுன அத்தனை அணைகளையும் கூட்டுக்குடிநீர்த் திட்டத்துக்கு மாத்தியாச்சு. அப்படியிருந்தும் குடி தண்ணிக்கு தட்டுப்பாடு.... என்ன செய்யப் போறோம்னே தெரியலையே'' என்று நடுங்கியபடி கூறுகிறார் இந்த ஆய்வில் இடம்பிடித்திருந்த அரசு உயர் அலுவலர் ஒருவர்.
'நீரை நிலத்துல தேடாதே... வானத்துல தேடு’!
யாரால் நிகழ்ந்தது இந்தப் பேராபத்து..? 'தீதும் நன்றும் பிறர் தர வாரா..’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை மனதில் நிறுத்தினால், இதற்கு முழுப்பொறுப்பு ஏற்க வேண்டியது, நாம் ஒவ்வொருவரும்தான்.
'நீரை நிலத்துல தேடாதே... வானத்துல தேடு’ என்பார், 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார். அதாவது, மழை பொழிய என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்யுங்கள் என்பதுதான் அதன் உட் பொருள். இனியாகிலும், நெருங்கி வரும் பேராபத்தைத் தடுக்க நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டாமா? தும்பை விட்டு வாலைப் பிடித்திருந்த நாம், தற்போது வாலையும் அல்லவா கைவிட்டுக் கொண்டிருக்கிறோம்.
'எஞ்சியிருக்கும் தண்ணீரையாவது காப்பாற்றினால்தான்... இனி எதிர்காலம் என்கிற எச்சரிக்கை உணர்வு, நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஊற வேண்டும். அது பெருவெள்ளமாகப் பாய்ந்து ஆட்சிப் பொறுப்புகளில் அமர்ந்து கொண்டு, சூழலைப் பற்றியும்... எதிர்கால சந்ததி பற்றியும்... இயற்கைச் சுரண்டல்கள் பற்றியும் கண்டுகொள்ளாமல், பொதுச்சொத்துக்களைச் சுருட்டுவதை மட்டுமே குறிக்கோளாக மேற்கொண்டிருப்போரை சுருட்டிக் கொண்டு போகவேண்டும்...'
இப்படியெல்லாம் வீராவேசம் கொண்டு சாபம் விடலாம்தான். ஆனால், அதைவிட முக்கியம்... நிஜத்தில், நாம் ஒவ்வொருவருமே களத்தில் இறங்க வேண்டும் என்பதுதான்!
இருக்கும் நிலத்தடி நீரை, கிடைக்கும் மழை நீரை எப்படியெல்லாம் சேமிக்கலாம் என்பதை அறிந்துக் கொண்டு, நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட நுட்பங்களை, உங்களுக்கு அறிமுகப்படுத்தவே... 'தண்ணீர்... தண்ணீர்...’ எனும் இந்தப் புதிய தொடர் இங்கே பாய்ந்து வருகிறது. நீர் மேலாண்மை வல்லுநர்கள், பொறியாளர்கள், விவசாயிகள்... என பலதரப்பட்டவர்களும் மிரட்டும் வறட்சியை விரட்டும் தொழில்நுட்பங்களை உங்களிடம் பகிரப் போகிறார்கள்.
நிலங்களைக் குளிர வைக்கும் குளங்கள்!
இதைச் சொன்னதுமே... 'என்ன பேசி என்ன பயன்... சொல்றதுக்கு நல்லாத்தான் இருக்கும். ஆனா, நடைமுறையில இதெல்லாம் சாத்தியமா?' என்கிற சந்தேகக் கேள்விகள் இந்நேரம் அனைவரிடமுமே மையம் கொண்டிருக்கும். அதில் தவறில்லை. ஆனால், அனைத்தும் நடைமுறை சாத்தியம்தான் என்பதிலும் உண்மை இல்லாமல் இல்லை.
ஆம்... மகாராஷ்டிர மாநிலத்தின், ராலேகண்சித்தி எனும் வறண்ட கிராமத்தை, இன்றைக்கு வளமான விவசாய பூமியாக அண்ணா ஹஜாரே மாற்றியிருக்கிறாரே! அதே மாநிலத்தில் புனே அருகில் இருக்கும் ஹிவ்ரே பஜார் எனும் வறண்ட கிராமம், அந்த ஊர் நல்ல உள்ளங்கள் சிலரின் முயற்சியால் இன்றைக்கு சோலைவனமாக மாறியிருக்கிறதே! எல்லாமே, நீர் மேலாண்மை எனும் மந்திரத்தால் விளைந்த உண்மையே!
இவையெல்லாம் தொலை தூர நிஜங்கள். இங்கே உங்கள் கைக்கு எட்டும் தூரத்தில் திண்டுக்கல் மாவட்டத்திலேயே, நேரடி சாட்சிகளாக நின்று கொண்டிருக்கின்றன பத்துக்கும் மேற்பட்ட குளங்கள்!
நம் முன்னோர்கள், குளங்களை முறையாக தூர்வாரி, வண்டலை நிலங்களில் போட்டனர். நீரும் நிறைந்தது, நிலமும் விளைந்தது. அந்த முறையைக் கைவிட்டதன் விளைவு, குளமும் காய்ந்து, நிலமும் வறண்டு கிடக்கிறது. குளங்கள் விவசாயத்தின் அடிப்படை ஆதாரங்கள். அவற்றை முறையாகப் பராமரித்தாலே... பாதி பிரச்னை தீர்ந்துவிடும். ஒரு குளம் நிறைந்து, அடுத்த குளம்... அது நிறைந்தவுடன் அடுத்த குளம்... என வரிசையாகக் குளங்களை நிறைத்துக் கொண்டே ஏரிகளை அடையும் வகையில் பாசன வாய்க்கால்களை அமைத்திருந்தனர், நம்முன்னோர். அவையெல்லாம் பராமரிப்பில்லாமல் தூர்ந்து போனதும், ஆக்கிரமிக்கப்பட்டதும்... குளங்கள் வறண்டு போக ஒரு காரணம்.
இதைச் சரியாக புரிந்துகொண்டு, கடந்த 2010-ம் ஆண்டு, குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள அத்தனைக் குளங்களையும் இணைத்தார், அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் வள்ளலார் (தற்போது தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்). கிட்டத்தட்ட 14 குளங்கள் இணைக்கப்பட்டதன் பலன், பல ஆண்டுகளுக்கு பிறகு, அங்கிருந்த தரிசுகளில் அரங்கேறியது, உழவுத் தொழில். 'இனி இந்த மண்ணில் விவசாயமே இல்லை’ என நினைத்து, வேலை தேடி வெளியூர் சென்றவர்கள், மீண்டும் ஊர் திரும்பிய அதிசயம் அரங்கேறியது! நம்பிக்கை விதை விதைக்கப்பட்டிருக்கிறது!
- பொங்கிப் பாயும்...

- Vikatan

ஆறாம் திணை - 75 மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: எஸ்.ஏ.வி.இளையராஜா - Vikatan

'கடந்த ஆண்டு இந்தியாவில் 15 பில்லியன் ரூபாயைத் தாண்டிய வணிகம் அளித்திருக்கிறது காதலர் தினக் கொண்டாட்டங்கள். இந்த வருடம் இது இன்னும் அதிகரிக்கும்!’ என்று கணக்கிடுகிறார்கள் அசோசெம் எனும் இந்திய வணிக நிறுவனக் கூட்டமைப்பினர்.
'வாலன்டைன்ஸ் டே’ திருவிழா, காதலர்களுக்கு முக்கியமோ இல்லையோ, வணிகர்களுக்கு மிக முக்கியமானது. வழக்கம் போல் பூக்களின் தட்டுப் பாட்டுக்காக இந்த ஆண்டும் ஹாலந்து அரசு சிறப்பு விமானங்களை நெதர்லாந்தில் இருந்து ரோஜா முதலான பூக்களுடன் பல ஐரோப்பிய-அமெரிக்க நாடுகளுக்கு இயக்குகிறது. சீக்கிரமே அப்படியான விமானங்கள் இந்தியாவுக்கும் வரும்.
சாதி வேற்றுமைகளை ஒழிக்கும் காதல், பூக்களுடனும், சாக்லேட்டுகளுடனும், பரிசுகளுடனும் கொண்டாடப்படுவது சந்தோஷமே. அதே சமயம், அதன் பயன் காலமெல்லாம் நிலைத்திருக்கிறதா என்று யோசித்தால், சுற்றும் முற்றும் நிறைய சறுக்கல்கள்!
'திருமணம் என்பது என்னைப் பொறுத்தவரை, ஒரு கப் காபி சாப்பிடுவது மாதிரி!’- சமீபத்தில் என்னிடம் இப்படிச் சொன்னவர், யாரோ அயல்தேசப் பெண்மணி அல்ல. சென்னை மந்தவெளியில் சமீபத்தில் மணமுறிவு செய்துகொண்ட ஒரு பெண். நிறையவே மனதை உலுக்கிய அந்த வரிகள், 'ஆறாம் திணை’யில் மறந்துபோன வரகரிசியையும் ஏழு சுத்து கைமுறுக்கின் பாரம்பரியத்தை மட்டும் பேசினால் போதாது என்பதை உணர்த்தியது. எக்குத்தப்பாக உயரும் விவாகரத்துகளின் எண்ணிக்கைகள் இனிவரும் நாட்களில் திருமணம் மீதான நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக உடைக்கும் என்றே தோன்றுகிறது.
குடும்ப வன்முறைகளில், யாரோ ஒருவரை அடிமைப்படுத்திச் சுரண்டும் அவல வாழ்வில் விவாகரத்துகள் வரவேற்கக்கூடியவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மறுமணம் என்பதை ஏளனமாகப் பார்க்கக் கூடாதது மட்டுமல்ல; அத்தியாவசியமானதும்கூட. சங்க இலக்கியங்கள் சொன்ன, 'வெள்ளரிக்காய் விதையைப் போல, விரைத்து வறண்டு நிற்கும் நீரில்லாத சோற்றை, வெறும் கீரைக் குழம்போடும், எள் துவையலுடன், தின்றுகொண்டு பாய்கூட இல்லாமல் கல் மேல் படுத்து கைம்மை நோன்பு இயற்றி’ வருந்தும் பெண்கள் போல் எந்தப் பெண்ணும், இனி இருக்க வேண்டியது இல்லை. ஆனால், இன்றைய விவாகரத்து வழக்குகளில் பெரும்பாலானவை 'மனப்பொருத்தம் இல்லை’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வருவதுதான் நம்மைக் கவலைகொள்ள வைக்கிறது!
'என்னோடு வா... வீடு வரைக்கும்;
என் வீட்டைப் பார்... என்னைப் பிடிக்கும்!’ 
என காதலன்/காதலியை வீட்டுக்கு அழைத்து வந்து சம்மதம் பெறுவோரும் சரி, 'பத்தும் பொருந்தி இருக்குப்பா... பத்தும் பத்தாததுக்குக் கடனைக் கிடனை வாங்கிக்கலாம்பா’ என வீட்டில் பார்த்த வாழ்க்கைத் துணையைக் கல்யாணத்துக்குப் பிறகு காதலிப்போரும் சரி... மிகக் குறுகிய காலத்தில் 'மனப்பொருத்தம் இல்லை’ என நீதிமன்ற வளாகத்தில் நிற்க என்ன காரணம்? உளவியல் மலட்டுத்தன்மை (Mental impotence) காரணமாக அவதியுறும் இருபாலரின் எண்ணிக்கையும், 'எதற்காக நான் இணக்கமாகப் போக வேண்டும்?’ என்ற கேள்வியும்தான் மனப்பொருத்தம் எனும் கட்டடத்தின் அடிச்செங்கலை உடைக்கும் வேலையை அன்றாடம் செய்கின்றன.
எத்தனையோ விமரிசனங்களும், ஆங்காங்கே பொய்மையும் இருந்திருந்தாலும் சில ஆயிரம் ஆண்டுகளாக உழைக்கும் இருவரும் இளைப்பாறும் இடமாக, ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் அமைப்பாக இருந்தவை திருமணங்களும் குடும்ப அமைப்புகளுமே!
'குறிஞ்சிப் பூக்கள் மலர்ந்திருக்கும் மலையின் தலைவனுடன் நான் கொண்ட நட்பு, நான் வாழும் நிலத்தைவிட அகலமானதும்; வானத்தைவிட உயரமானதும்; கடலைவிட ஆழமானதும் ஆகும்’ என்ற பெண்ணின் நம்பிக்கையும் 'குவளை மலரின் மணமுடைய கரிய கூந்தலையும், ஆம்பல் மலரின் மணமுடைய பவள வாயினையும் உடையவளே... உன்னைப் பிரிந்தால் இந்த உலகமே எனக்குப் பரிசாகக் கிடைத்தாலும் அதை நான் புறக்கணிப்பேன். உன் காதலே எனக்குப் பெரிது!’ என்ற ஆணின் உறுதியும் உள்ள காதலும், அதில் விளைந்த குடும்பமும் சங்ககாலம் தொட்டு நமக்குப் பழக்கமான ஒன்றுதான்!
ஆனால், நவீன யுகத்தில் பொருள் சேர்க்கவும், தனக்கான சுய அங்கீகாரத்தைப் பெருக்கவும் அதீத நேரத்தை வீட்டுக்கு வெளியே பலரும் செலவழிக்க, தத்தம் காதலை 'எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில்’ தொலைத்து விடுகின்றனர் பலரும். இதனால் பலருக்கு குடும்பம் ஒரு சுமையாகிப் போய் எங்கேயாவது இறக்கிவைக்க மனம் அடிக்கடி எத்தனிக்கிறது.
இப்படி காதல் தொலைத்த பெற்றோரால், அன்றாடம் தன் குழந்தையின் சிணுங்கலில் மறைந்திருக்கும் வியாதியை நிச்சயம் கண்டறிய முடியாது. மனம் நொறுங்கி இருக்கையில் கவனமாக சிறுதானியத்தையோ சிட்டுக்குருவியையோ கண்கள் எப்போதும் தேடாது. களைப்பில் கசங்கிவரும் தன் துணைக்கு, தேன் சேர்த்த பச்சைத் தேநீர் கொடுத்துப் புன்னகைக்க மனம் ஒருபோதும் வராது.
'அட... இது மாதவிடாய் நிற்கும் நேரமே! இவளுக்கு கொஞ்சம் கால்சியம் அதிகமுள்ள மோரும் கம்பு ரொட்டியும் செய்து கொடுக்க வேண்டுமே’ என்ற முனைப்பு கண்டிப்பாக வராது. அக்கறைகளுக்கும், மெனக்கெடலுக்கும், தேடலுக்கும் இளைப்பாற இடம் தருவதற்கும் காதல் மட்டுமே அடித்தளம்!
'தனித்து வாழும் வாழ்வில் சுகம் இல்லையா என்ன? காதலும் சரி, திருமணங்களும் சரி எல்லாம் பொய்த்துப்போன போலிக்கூடுகள்’ என்று இன்று பேசும் பலருக்கும், தம் வசீகரங்கள் தொலைந்துபோன வயோதிகத்தில், 'என்னப்பா? இருமுறீங்க.. தண்ணீர் வேணுமா?’ எனக் கேட்கும் எவரும் இல்லாத உறவற்ற வெறுமையும், அடுக்குமாடி மருத்துவமனையின் ஐந்து நட்சத்திர அறையில், மேல்நாட்டு மருத்துவர் பராமரிப்பில் படுத்திருக்கும்போதும்கூட, கைகளைப் பற்றி தன்னருகே உட்கார்ந்த நிலையில் படுத்திருக்க எவரேனும் இல்லையே எனும் பணக்காரத் தனிமையும் உயிரோடு இருந்து கொல்லும்.
காதல், நெகிழித் தாளில் சுற்றப்பட்ட ரோஜாக்களுக்குள் தேடப்பட வேண்டியது அல்ல. வசீகரிக்கும் வழுவழுப்பான சாக்லேட்டுக்குள்ளும் அது இல்லை. கடன் வாங்கித் தரும் மின்னும் பரிசுகளுக்குள்ளும் காதல் இருக்காது. கண்களால் பேசி, புன்னகையால் பசியாற்றி, தோள்களில் தாலாட்டி உச்சி முத்தத்தில் கருத்தரிக்கும் உயிர்வித்தை அது.
ஆதலினால் காதல் செய்வீர்... அடையாளங்களினால் அல்ல; அன்பினால்!
- பரிமாறுவேன்...
- Vikatan

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 23

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழைத் தடை செய்வதற்கான தந்திரங்கள் தொடங்கின.

எக்ஸ்பிரஸ் வளாகத்தில் மின்சாரம் தடை செய்யப்பட்ட நாள் 30.9.1976. இதைத் தொடர்ந்து சனி, ஞாயிறு மின்சார வாரியத்துக்கு விடுமுறை. திங்கள்கிழமை வந்துதான் அவர்களால் சரிசெய்ய முடியும். இதன்படி பார்த்தால் நான்கு நாட்கள் நாளிதழ் வெளிவராது. இதற்காகவே அந்த மின்தடையை ஏற்படுத்தினார்கள்.
1.10.76 அன்று நாள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கோயங்கா ஒரு ரிட் மனுத் தாக்கல் செய்தார். தடைசெய்யப்பட்ட மின் இணைப்பை உடனடியாக வழங்கக் கோரி அன்று மாலையே உத்தரவு போட்டது நீதிமன்றம். ஆனால், 2.10.76 மதியம் ஒரு மணி வரை மின் இணைப்பு சரி செய்யப்படவில்லை. 'நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போடுவேன்’ என்று கோயங்கா கூறிய பிறகு மதியம் 1.30 மணிக்கு மின் இணைப்பு தரப்பட்டது.
பத்திரிகை வெளிவருவதையே, முற்றிலுமாகத் தடுக்கும் வேலைகளைத் தொடங்கினார்கள். 4-ம் தேதி காலையில் போலீஸ் படை, எக்ஸ்பிரஸ் அச்சகத்துக்குள் நுழைந்தது. உடனடியாக எக்ஸ்பிரஸ் தொழிலாளர்களை வெளியேற உத்தரவு போட்டார்கள். சட்டப்படியான எந்த உத்தரவு நகலும் அவர்கள் கையில் இல்லை. என்ன காரணம் என்று எக்ஸ்பிரஸ் பொது மேலாளர் கேட்டார். 'டெல்லி மாநகராட்சிக்குப் பல லட்சம் ரூபாய் சொத்துவரி செலுத்தவில்லை’ என்று காரணம் சொன்னார்கள். இது சம்பந்தமான தரவுகளைப் பொது மேலாளர் கொடுத்து வாதங்களை வைத்தார். அந்த வளாகம் எக்ஸ்பிரஸின் வேறொரு நிறுவனத்துக்குச் சொந்தமானது. நியூஸ் பேப்பர் நிறுவனம், அந்த கட்டடத்தைக் குத்தகைக்கு எடுத்துத்தான் இயங்கி வந்தது. எனவே எங்களிடம் சொத்துவரி கேட்க முடியாது என்று பொது மேலாளர் சொல்லிப் பார்த்தார். எதனையும் அவர்கள் ஏற்கவில்லை. அச்சக வளாகம் முழுவதையும் அவர்கள் சீல் வைத்தனர். அதன் பிறகு 5, 6 தேதிகளிலும் நாளிதழ் வெளிவர முடியவில்லை. மறுபடி நீதிமன்றம் போவதைத் தவிர கோயங்காவுக்கு வேறுவழி இல்லை.
சொத்துவரி பாக்கியை வசூலிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அச்சகத்தைத் திறந்துவிட வேண்டிய சூழ்நிலை வந்ததும், மீண்டும் மின்வாரியம் நெருக்கடி கொடுத்தது. மின்சார டிரான்ஸ்ஃபார்மர்களை காலை 9 முதல் மாலை 6 மணி வரைதான் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு போட்டார்கள். ஒரு நாளிதழ், இரவில் அச்சாகி, அதிகாலையில்தான் வெளிவரும். அந்த நேரத்தில் மின்சார டிரான்ஸ்ஃபார்மர்களை பயன்படுத்த முடியாது என்றால் பத்திரிகை எப்படி வெளியாகும்? மின்தடை செய்யக் கூடாது என்று ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவு இருப்பதால், இப்போது போடப்பட்டது நீதிமன்ற அவதூறு ஆகும். இதனைச் சொல்லி இன்னொரு ரிட் மனு போட்டார் கோயங்கா.
அச்சகம் உள்ள கட்டடத்தின் பூஸ்டர் பம்புகளை பறிமுதல் செய்து 6-ம் தேதி இன்னொரு உத்தரவை போட்டார்கள். இத்தோடு, குளிர்சாதனத்தையும் மோட்டாரையும் பறிமுதல் செய்து, விற்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. குளிர் சாதனம், தரைக்கு அடியில் இருக்கிறது. அதை இடித்து எடுக்க முயற்சித்தார்கள். 17-ம் தேதி அன்று இன்னொரு நோட்டீஸ் விட்டு, இரண்டு டிரான்ஸ்ஃபார்மர்களையும் பறிமுதல் செய்யப் போவதாகச் சொன்னார்கள். எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு சொந்தமான பூஸ்டர் பம்புகள், குளிர்சாதன இயந்திரங்கள் 31.10.76 அன்று ஏலம்விடப் போவதாக வேறொரு பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தார்கள். ஏலம் எந்தத் தேதியில் நடக்க இருப்பதாகச் சொன்னார்களோ அன்றுதான் விளம்பரமும் தரப்பட்டது.
இதற்கு மறுநாள்தான், டெல்லி கார்ப்பரேஷன் மீது கோயங்கா தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை நடக்க இருந்தது. இந்த வழக்கை வாபஸ் வாங்க நிர்ப்பந்தப்படுத்தியே இந்த ஏல விளம்பரம் வெளியிடப்பட்டது. அசையும் சொத்துக்களை விற்கத் தடை கேட்டு வேறொரு மனுத் தாக்கல் செய்தார் கோயங்கா.
31-ம் தேதி ஏலம் எதுவுமே நடக்கவில்லை. ஆனால், நீதிமன்றத்தில் அதிகாரிகள் என்ன சொன்னார்கள் தெரியுமா? அனைத்துப் பொருட்களையும் ஏலம்போட்டு விற்றுவிட்டோம் என்று சொன்னார்கள். அப்படி விற்கப்பட்டு இருந்தால் அதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டார் கோயங்கா. இப்படி நெருக்கடி மேல் நெருக்கடி தொடர்ந்தது.
''1976-க்குப் பிறகு இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளிவரக் கூடாது என மத்திய அரசு எதிர்பார்த்தது. ஆனால் நாங்கள் மேற்கொண்ட கடுமையான பொருளாதாரச் சிக்கன நடவடிக்கை மற்றும் ஊழியர்களின் விசுவாசம் காரணமாக, இறுக்கிப் பிடித்து எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளைக் கொண்டுவர முடிந்தது. நெருக்கடி நிலை முடிவுக்கு வந்து தேர்தல் அறிவிக்கப்பட்ட சமயத்தில் நாட்டில் நிலவிய சர்வாதிகாரப் போக்குகளுக்கு எதிராகப் பொதுமக்களின் கருத்தை வலுவாக்க எக்ஸ்பிரஸ் பத்திரிகைகள் தனது கடைசிச் சொட்டு ரத்தத்தைப் பயன்படுத்தின'' என்று கோயங்கா கம்பீரத்துடனும் கண்ணீருடனும் ஷா கமிஷன் முன் கூறினார்.
ஒரே ஒரு எக்ஸ்பிரஸ் இதழ் சந்தித்த அவலம் இது. இப்படி ஒவ்வொரு பத்திரிகையும் அடக்கு முறைக்கு எதிரான மூச்சுத் திணறலை இரண்டு ஆண்டுகள் அனுபவித்தன.
செய்திக் கட்டுப்பாட்டை இறுக்கி பத்திரிகைகளின் குரல்வளை நெறிக்கப்பட்டது. செய்தி நிறுவனங்களாக அகில இந்திய அளவில் இயங்கிய யு.என்.ஐ., பி.டி.ஐ. ஆகிய இரண்டு பெரிய நிறுவனங்களையும், மேலும் இரண்டு சிறிய செய்தி நிறுவனங்களையும் அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து 'சமாச்சார்’ என்ற நிறுவனமாக ஆக்கினார்கள். பிரஸ் கவுன்சில் அமைப்பே மூடப்பட்டது. 253 பத்திரிகையாளர்கள் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டனர். குல்தீப் நய்யார் இதில் முக்கியமானவர்.
இந்திரா காந்தி, தனது தலைமுடியை பாப் கட்டிங் வெட்டிக் கொண்டபோது, 'இந்த ஸ்டைல் நன்றாக இருக்கிறதா?’ என்று குல்தீப் நய்யாரிடம்தான் கேட்டாராம். அந்தளவுக்கு இருவருக்கும் நட்பு உண்டு. ஆனால் குல்தீப் நய்யாரையும் இந்திரா விடவில்லை. எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டதும் டெல்லி பிரஸ் கிளப்பில் துணிச்சலாக கூட்டம் கூட்டி கண்டித்தார் குல்தீப் நய்யார். இதைத் தொடர்ந்து இந்திராவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தைப் படித்து கோபமான இந்திரா, உடனடியாக அவரைக் கைது செய்து திகார் சிறையில் வைத்தார். புது டெல்லி ரயில் நிலையத்தில் கூடி இருந்த முஸ்லிம்களை அரசுக்கு எதிராகக் கலகம் செய்யும்படி தூண்டியதாக குல்தீப் நய்யார் மீது வழக்குப் போட்டார்கள். ஆனால் உண்மையான காரணம், அவர் எழுதிய கட்டுரைக்காகத்தான்.
'ஈஸ்ட்டன் எகானமிஸ்ட்’ என்ற பத்திரிகையில் வீ.பாலசுப்பிரமணியன் என்ற கட்டுரையாளர், 'இந்தியாவின் கால்நடைகள் பிரச்னை’ என்று ஒரு கட்டுரை எழுதினார். 'நாட்டில் இப்போது 58 கோடி ஆடுகள் உள்ளன’ என்று கட்டுரையை ஆரம்பித்தார். மொத்த மக்களையும் கால்நடைகளாக உருவகப்படுத்தியது அந்தக் கட்டுரை.
மகாத்மா காந்தியின் பொன் மொழியை வெளியிட்டதற்காக ஹிம்மத் (மும்பை) இதழுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அடக்குமுறை தாங்க முடியாமல் 'ஒப்பீனியன்’ ஆசிரியர் தனது பத்திரிகையையே நிறுத்தினார். பத்திரிகையாளர்களைப் போல 34 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறையில் இருந்தார்கள். வங்காள எழுத்தாளர் சுனாதா சங்கர் ரே, தனது எதிர்ப்பைப் பதிவுசெய்யும் முகமாக எழுதுவதையே நிறுத்தினார். கார்ட்டூனிஸ்ட் கே.சங்கர் பிள்ளை, வரைவதை நிறுத்தினார். 'சர்வாதிகாரச் சூழ்நிலையில் சிரிப்பு எதற்கு?’ என்று கேட்டார்.
அரசு செய்தி நிறுவனங்கள் இந்திரா, சஞ்சய் பற்றியே செய்திகளைத் திரும்பத் திரும்பத் தருவதையே தங்களது பணியாக நினைத்தன. இதுபற்றி ராமச்சந்திர குஹா தனது, 'காந்திக்குப் பிறகு’ என்ற நூலில் எழுதுகிறார்:
''ஆல் இந்தியா ரேடியோவும் அரசின் தொலைக்காட்சியும் பிரதமர் மகன் மீது காட்டிய கவனம் அதிக வியப்புக்குரியது அல்ல. ஒரே வருடத்தில் ஆல் இந்தியா ரேடியோவின் டெல்லி நிலையத்தின் வழியாக சஞ்சய் பற்றி 192 செய்திக் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. அதே காலகட்டத்தில் சஞ்சய்யின் நடவடிக்கைகள் பற்றி தூர்தர்ஷன் 265 செய்திகளை ஒளிபரப்பியது. அவர் ஆந்திரப் பிரதேசத்துக்கு 24 மணி நேரப் பயணம் மேற்கண்டபோது செய்திப்படப் பிரிவு, 'நினைவில் ஒருநாள்’ என்ற ஒரு முழு நீளச் செய்திப் படத்தை மூன்று மொழிகளில் தயாரித்தது.
சஞ்சய் காந்தியின் முக்கியத்துவத்தின் வளர்ச்சிக்கு நிச்சயமானதொரு அடையாளம், மத்திய மந்திரிகளும் மாநில முதல்வர்களும் அவருக்குக் காட்டிய மரியாதை. எந்த அட்மிரலுக்கு ராணுவத்தில் பதவி உயர்வு அளிப்பது என்று முடிவு செய்ய பாதுகாப்பு அமைச்சர் பன்ஸிலால், இரு வேட்பாளர்களையும் சஞ்சய் காந்தியிடம் அழைத்துச் சென்றார். சஞ்சய், ராஜஸ்தான் சென்றபோது அவரை வரவேற்க முதல்வரே விமான நிலையத்துக்கு வந்தார். அவருக்கு கௌரவம் அளிக்கும் வகையில் ஜெய்ப்பூர் செல்லும் வழியில் 501 வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன. அவர் உத்தரப் பிரதேசம் சென்றபோதும் இதே போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. லக்னோ விமான நிலையத்தில் விமான ஓடு பாதையில் தடுக்கி, சஞ்சய் செருப்பை நழுவவிட்டபோது உ.பி. முதல்வரே அதைக் குனிந்து எடுத்து மரியாதையுடன் அளித்தார்''.
அம்மாவும், மகனும் சேர்ந்து நடத்தும் குடும்ப ஆட்சியின் தொடக்கமாகவே அந்தக் காலக்கட்டம் மாறிப்போனது. சுதந்திர நாளில் நள்ளிரவில் பேசிய நேரு, 'இது விதியுடனான சந்திப்பு’ என்றார். இதனைச் சுட்டிக் காட்டிய ஒரு எழுத்தாளர், 'அவர் மகள் நடத்தியது சர்வாதிகாரத்துடனான சந்திப்பு’ என்று எழுதினார்.

- Vikatan

மகாத்மா முதல் மன்மோகன் வரை! 22

'பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்றான் பாரதி. அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டு இருந்த காலக்கட்டத்தில், அடக்குமுறைக்கு எதிராகவும் ஜனநாயகத்தைக் காப்பாற்றவும் ஒரு பத்திரிகை முடிவெடுத்தால், அது என்ன மாதிரியான இருண்ட காலத்துக்குள் பயணிக்க வேண்டும் என்பதற்கான உதாரணமாக நம் மனக்கண் முன் நிற்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்!
 இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் கோயங்காவின் உறவினர் ஷிரியன்ஸ் பிரசாந்த் ஜெயின் ஒருநாள் கோயங்காவை வந்து சந்தித்தார். 'காங்கிரஸ் எதிர்ப்புக் கொள்கைகளை நீங்கள் அதிகமாகக் கடைப்பிடிக்கிறீர்கள். அதனால், உங்கள் மகன் பி.டி.கோயங்காவை மிசா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்போவதாகச் சொல்கிறார்கள்’ என்று சொன்னார். 'இதை உங்களிடம் யார் சொன்னது?’ என்று கேட்டார் கோயங்கா. பம்பாய் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரஜனி படேலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி.கே.பரூவாவும் தன்னிடம் இதனைச் சொன்னதாக ஜெயின் சொன்னார். ஷிரியன் பிரசாந்த் ஜெயின், கோயங்காவின் மகனின் மாமனார். தனது மருமகனைக் கைதுசெய்யப்போவதான தகவல் மாமனாருக்கே சொல்லப்பட்டால் என்ன செய்வார்? 'அந்த மாதிரி எந்தக் கைது நடவடிக்கையும் வேண்டாம்’ என்று அவர் காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து அதாவது ஜூலை 21-ம் தேதி (1975) டெல்லி சென்றிருந்தார் கோயங்கா. அப்போது அவரிடம் பம்பாய் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரஜனி படேல் பேசினார். 'உங்கள் மகன் சம்பந்தமாக பிரதமரிடம் பேசினேன். உங்கள் மகனை கைதுசெய்ய வேண்டாம் என்று பிரதமர் சொல்லிவிட்டார்’ என்று சொன்னார். இது சம்பந்தமாக பிரதமரை ஜெயின் மட்டும் வந்து சந்திக்கட்டும் என்று ரஜனி படேல் அழைத்தார். மறுநாள், அவரே போன் செய்து, பிரதமரை ஜெயின் சந்திக்க வேண்டாம் என்றும் சொன்னார். உங்கள் மகனை கைதுசெய்யப்போகிறோம் என்றும் கைதுசெய்ய மாட்டோம் என்றும் பிரதமரைச் சந்தியுங்கள் என்றும் பிரதமரைச் சந்திக்க வேண்டாம் என்றும் மாற்றி மாற்றி குழப்பிக்கொண்டே இருந்ததற்கு என்ன காரணம்?
ஷா கமிஷன் முன் தாக்கல்செய்த தனது வாக்குமூலத்தில் கோயங்கா சொல்கிறார்:
''வயதான காலத்தில் எனது ஒரே மகனைச் சிறையில் அடைத்து அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல், எனது நடவடிக்கைகளை முடக்கவே கைது நடவடிக்கைகள் விடுக்கப்பட்டன. இந்த மிரட்டல்களைத் தீவிரப்படுத்தி, எனது பத்திரிகைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்; பின்னர், அதை ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களிடம் விற்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம் என்பது தெளிவாகிறது.''
அன்றைய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வி.சி.சுக்லாதான் இந்த நடவடிக்கைகள் முழுமைக்குமான சூத்திரதாரி. பத்திரிகையின் ஆசிரியர் குழுவுக்கான கொள்கைகளை மேற்பார்வையிட, பொதுவாழ்வில் உள்ள மூன்று நபர்களைக் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்று சுக்லா கடிதம் எழுதினார். இது எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் பொதுமேலாளர் ஆர்.கே.மிஸ்ராவுக்கு கடிதமாக அனுப்பிவைக்கப்பட்டது. முழு அடக்குமுறை காலம் என்பதால், இதனை முழுமையாக நிராகரிக்க கோயங்காவால் இயலவில்லை. ஆசிரியர் குழுவுக்கான கொள்கைகளை இந்த மூவர் கண்காணிக்கட்டும் என்பதை கோயங்கா ஏற்றுக்கொண்டார். திடீரென அமைச்சர் சுக்லா தனது முடிவை மாற்றினார். 'ஆசிரியர் குழுவைக் கண்காணிக்கும் குழுவால் எந்தப் பயனும் இல்லை. எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் அரசு நியமிக்கும் இயக்குநர்கள் பெரும்பான்மையாக இருக்க வேண்டும். அதற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் மிசா சட்டத்தின் கீழ் கோயங்கா, அவரது மகன் பி.டி.கோயங்கா, அவரது மருமகள் சரோஜ் கோயங்கா ஆகிய மூவரையும் கைதுசெய்துவிடுவோம்’ என்று சொல்ல ஆரம்பித்தார்கள். 'இவை அனைத்தும் நான் சொல்லவில்லை. சூப்பர் பிரைம் மினிஸ்டர் சொன்னவை’ என்றார் சுக்லா. அவர் அப்படிச் சொன்னது சஞ்சய் காந்தியை. இதைத் தொடர்ந்து எக்ஸ்பிரஸ் குழும இயக்குநர்கள் குழு மாற்றி அமைக்கப்பட்டது. இந்த இயக்குநர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான சட்டதிட்டங்களை அமைச்சர் சுக்லாவும் கோயங்காவும் சேர்ந்து தயாரித்தார்கள். அவை அனைத்து ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முதன்மை ஆசிரியர் மல்கோகர், எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் குல்தீப் நய்யார் ஆகிய இருவரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். அதனை கோயங்கா மறுத்துவிட்டார். கொள்கைரீதியான முடிவுகளை இயக்குநர்கள் எடுப்பது என்பதை மீறி, தினப்படியான நடவடிக்கைகளிலும் இந்த இயக்குநர்கள் தலையிட்டார்கள். அதனை கோயங்கா ஏற்றுக்கொள்ளவில்லை. 'இவை செயல்படுத்த முடியாதவை’ என்று கோயங்கா எதிர்ப்புத் தெரிவித்தார். உடனடியாக அவசரக் கூட்டம் கூட்டி, 'அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை பலதடவைகள் நீங்கள் மீறிவருகிறீர்கள்’ என்று அமைச்சர் சுக்லா குற்றம்சாட்டினார்.
'எந்த இடத்திலும் நாங்கள் வழிகாட்டும் நெறிமுறைகளை மீறவில்லை. ஒரே ஒரு செய்தியை மட்டும் வெளியிட்டோம். அதுவும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சம்பந்தப்பட்டது. மற்றபடி எந்த மீறலும் செய்யவில்லை. நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட பல பத்திரிகைகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கடுமையாகக் கண்டித்து எழுதி இருக்கும்போது... எக்ஸ்பிரஸ், சில யோசனைகளைத்தான் சொன்னது’ என்று கோயங்கா சொன்னார். 'மற்ற பத்திரிகைகள் எப்படியோ போகட்டும். இந்தியன் எக்ஸ்பிரஸ் தனது ஆதரவை அரசுக்கு முழுமையாகத் தர வேண்டும்’ என்று அமைச்சர் சுக்லா சொன்னார். 'இது பாரபட்சமான நடவடிக்கை’ என்று கோயங்கா சொன்னார். 'எங்களது திட்டங்களை ஏற்காவிட்டால் கடுமையான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டிவரும்’ என்று சுக்லா நேரடியாகவே எச்சரிக்கை செய்தார். கைது மிரட்டல்கள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொடர்ந்தன.
இந்த நிலையில் பிரதமர் இந்திராவின் செயலாளர் பி.என்.தர் என்பவருக்கு கோயங்கா ஒரு கடிதம் எழுதினார். தன்னை அமைச்சர் வி.சி.சுக்லா மிரட்டும் கதையை அதில் முழுமையாக விவரித்தார். 'இந்தியன் எக்ஸ்பிரஸும் சரி, வேறு எந்தப் பத்திரிகையும் சரி, தங்களது நம்பகத்தன்மையை முழுமையாக இழந்துவிட்டு, யாரோ ஒருவருடைய நோக்கத்துக்காகச் சேவை புரிய முடியாது என்று எப்போதும் நான் குறிப்பிட்டு வருகிறேன். அதுதான் என் முடிவு. இயக்குநர்கள் குழுத் தலைவர் என்பவர் நிர்வாகத்தின் பிரதிநிதி மட்டுமே. அவருடைய மேலாதிக்கத்துக்குப் பணிந்து, ஒரு பத்திரிகையின் ஆசிரியர் தொழில் ஒருமைப்பாட்டைக் கடைப்பிடிக்க வாய்ப்பு இருப்பதாக நினைக்கவில்லை. அத்தகைய மேலாதிக்கத்தைத்தான் அமைச்சர் சுக்லா கேட்கிறார். இதை ஏற்றுக்கொண்டால் ஒட்டுமொத்த ஆசிரியர் குழு ஊழியர்களும் தார்மீக பலம் இழந்துவிடுவார்கள். அதன் விளைவாகப் பத்திரிகையின் தரமும் நம்பகத்தன்மையும் சீரழிந்துவிடும்’ என்று எழுதினார்.
ஆனாலும், கட்டுப்பாடுகள் தொடர்ந்தன. தினமும் இந்தத் தொந்தரவுகளை அவரால் சமாளிக்க முடியவில்லை. அரசு சார்பு இயக்குநர்கள் 1976-ம் ஆண்டு ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார்கள். அடுத்த மூன்றாவது மாதம் கடுமையான இருதய நோயால் கோயங்கா பாதிக்கப்பட்டார். இரண்டு மாத காலம் அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டியதாயிற்று. அப்போது எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பில் இருந்த எஸ்.மல்கோகரை அரசு பிரதிநிதிகள் திடீரென்று நீக்கினர். அவருடைய இடத்துக்கு வி.கே.நரசிம்மன் நியமிக்கப்பட்டார். அவர் அரசுக்குக் கட்டுப்பட்டு, பயப்படும் ஆசிரியராகச் செயல்படவில்லை. துணிச்சல் மிக்க போராட்டங்களை அரசு இயக்குநர்களுக்கு எதிராக நடத்தினார்.
மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்த பிறகும், கோயங்கா தன்னுடைய போராட்டத்தை நிறுத்தவில்லை. ஒருநாள் அமைச்சர் வி.சி.சுக்லாவின் அறைக்கே சென்று, 'உங்களுக்கு தைரியம் இருக்குமானால், என்னைக் கைதுசெய்து பாருங்கள்’ என்று பகிரங்கமாகச் சொல்லிவிட்டு வந்தார். இப்படி பகிரங்கமாக மிரட்டிய பிறகும், கோயங்காவை கைதுசெய்ய முடியாமல் தடுத்தது எது?
இந்திராவின் கணவர் ஃபெரோஸ் காந்தி, தனது பத்திரிகையுலக வாழ்க்கையை இந்தியன் எக்ஸ்பிரஸில் தொடங்கியவர். அவருக்கும் கோயங்காவுக்கும் நல்ல நட்பு உண்டு. இந்திரா, ஃபெரோஸ் காந்தி ஆகிய இருவரும் தங்களுக்குள் எழுதிய கடிதங்கள் பல கோயங்காவிடம் இருப்பதாகவும், அதிகமான மிரட்டலைச் செய்தால் இதனை கோயங்கா வெளியில் விட்டுவிடக்கூடும் என்று செய்தி பரப்பப்பட்டது. இந்தத் தகவல் காரணமாக, 'கைது நடவடிக்கை தவிர மற்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவும்’ என்று சுக்லாவுக்கு அறிவுரை சொல்லப்பட்டது.
அரையாண்டு முடிந்ததும் அரசு சார்பு இயக்குநர்களை போர்டு கூட்டத்தில் மீண்டும் தேர்வுசெய்ய வேண்டும் அல்லவா? அதனை தந்திரமாக தவிர்த்தார் கோயங்கா. இயக்குநர்களை நியமித்த பிறகும் எந்தப் பயனும் இல்லாமல் போனதை உணர்ந்த அரசு, அதனை வலியுறுத்தவும் இல்லை. இப்படியாக அந்த அடக்குமுறை நாடகம் முடிந்தது. அடுத்து வருமான வரி வழக்குகளை தூசிதட்டி எடுத்தார்கள். 'இந்த வழக்குகளை மீண்டும் எடுப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம்’ என்று அமைச்சர் சுக்லாவுக்கு கோயங்கா கடிதம் அனுப்பினார்.
1976-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸின் எட்டு பதிப்புகளுக்கும் முன்தணிக்கை அமல்படுத்தப்பட்டது. அனைத்து செய்திகளையும் காட்டிவிட்டுத்தான் பிரசுரிக்க வேண்டும். முடிந்த அளவுக்கு செய்தியைத் தணிக்கை செய்துதருவதைத் தாமதப்படுத்தி, பத்திரிகையை உரிய நேரத்தில் வரவிடாமல் தடுக்கும் தந்திரமாகவே இந்த முன்தணிக்கை பயன்படுத்தப்பட்டது. காலை 5 மணிக்கு வெளியாக வேண்டிய செய்தித்தாள், மதியம் 2 மணிக்குத்தான் வரமுடியும் என்ற நிலைமையை ஏற்படுத்தினர்.
திடீரென்று ஒருநாள், கோயங்காவைச் சந்தித்தார் சஞ்சய் காந்தியின் அன்றைய வலதுகரமாக இருந்த கமல்நாத். இன்று அவர் மத்திய அமைச்சராக இருக்கிறார். 'ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் வி.கே.நரசிம்மனை எடுத்துவிட்டு, ஷமீம் என்பவரை நியமியுங்கள்’ என்றார். இதனை கோயங்கா கடுமையாக எதிர்த்தார். 'ஷமீம் அனுபவம் இல்லாதவர். அவரை நியமித்தால் பத்திரிகை அழிந்து போகும்’ என்றார். அரசு நியமிக்கச் சொன்ன ஷமீம், ஒரு உள்ளூர் செய்தியாளர். ஒரு பத்திரிகையின் முதன்மை ஆசிரியருக்கு என்ன மாதிரியான தகுதி எல்லாம் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லி கோயங்கா வாதிட்டார். அதனை அமைச்சர் சுக்லாவும் கமல்நாத்தும் ஏற்கவில்லை. அனைத்து கிளைகளிலும் இருந்த பொறுப்பாசிரியர்களை மாற்றிவிட்டு, துணைக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று அடுத்த நெருக்கடி கொடுத்தார்கள். அரசால் நியமிக்கப்பட்ட இயக்குநர் குழுவுக்கு துணையாக இன்னொரு குழு அமைக்க வேண்டும் என்றார்கள். இந்தக் குழுவில் கே.கே.பிர்லாவும் கமல்நாத்தும் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் பதவியேற்றுக்கொண்டதுமே,  எக்ஸ்பிரஸ் முதன்மை ஆசிரியர் வி.கே.நரசிம்மனை நீக்கினார்கள். தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி கோயங்கா இதனைத் தடுத்தார்.
கோபம் கொண்ட அரசு தரப்பு என்ன செய்தது தெரியுமா? எக்ஸ்பிரஸ் வளாகத்துக்கு மின்சாரத்தைத் தடைசெய்தார்கள்!

- Vikatan

மகாத்மா முதல் மன்மோகன் வரை! 21

24.6.1975-ம் நாள் அன்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் இந்திராவுக்கு எதிரான பெரிய கூட்டம் திரட்டப்படுவதாகத் தகவல் பரவியதும், டெல்லி லெப்டினென்ட் கவர்னருக்கு இந்திராவின் மூளையாகச் செயல்பட்ட ஆர்.கே.தவானிடம் இருந்து ஒரு தகவல் போனது.
 ''இந்தக் கூட்டம் முடிந்ததுமே எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் கைதுசெய்துவிடுங்கள்'' என்பதுதான் அது. பிரதமர் இல்லத்துக்கு உளவுத் துறையின் எஸ்.பி. வந்திருப்பதாகவும், யார் யாரைக் கைதுசெய்யலாம் என்ற பட்டியலை தயார் செய்துகொண்டு இருப்பதாகவும் ஆர்.கே.தவான் கூறினார். ''இந்தப் பட்டியலை பிரதமர் பார்த்தார். சில பெயர்களை அடித்தார். சில பெயர்களை சேர்த்துள்ளார்'' என்றும் தவான் கூறினார். ''ஆனால், இறுதிப் பட்டியலை நான் பார்க்கவில்லை'' என்று பின்னர் தவான் கூறினார். இறுதிப் பட்டியலை இந்திராவும் சஞ்சயும் தயார் செய்தார்கள்.
ராம்லீலா மைதானத்தில் பேரணி முடிந்து காந்தி அறக்கட்டளை கூட்டத்துக்கு வந்ததுமே ஜே.பி. கைதுசெய்யப்பட்டார். அப்போது நள்ளிரவு 2.30 மணி. அங்கிருந்து நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்துக்கு முதலில் அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் அரியானா மாநில அரசு விருந்தினர் மாளிகையில் சிறைவைக்கப்பட்டார். அதே நேரத்தில், மொரார்ஜி தேசாயும் அவரது வீட்டில் கைதுசெய்யப்பட்டு, ஜே.பி. வைக்கப்பட்டிருந்த அதே மாளிகைக்கு அழைத்துவரப்பட்டார். இருவரும் வேறுவேறு அறைகளில் வைக்கப்பட்டார்கள்.
ஜனசங்கத்தின் தலைவர் அடல்பிகாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி ஆகியோர் கைதுசெய்யப்பட்டார்கள். நானாஜி தேஷ்முக், இந்தத் தகவலை அறிந்து தப்பிவிட்டார். சோஷலிஸ்ட் கட்சியின் தலைவர்கள் அசோக் மேத்தா, மது தண்டவதே ஆகியோருடன் மார்க்சிஸ்ட் தலைவர் ஜோதிர்மயி பாசுவும் கைதானார். இந்த ஜோதிர்மயி பாசுதான், சஞ்சய் காந்தியின் கார் கம்பெனி முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியவர். இவ்வளவு பேரை கைதுசெய்தவர்கள், இந்திரா மீது வழக்கு போட்ட ராஜ் நாராயணனை விட்டுவைப்பார்களா? அவரும் கைதானார்.
இந்தக் கைது நடவடிக்கை காங்கிரஸில் இருந்த 'இளம் துருக்கியர்’களான சந்திரசேகர், ராம்தன், கிருஷ்ணகாந்த் போன்றவர்களுக்குத் தெரியவந்தது. ஜே.பி. எங்கே இருக்கிறார் என்று அந்த நள்ளிரவில் தேடியவர்கள் இந்த மூவரும். ராம்லீலா மைதானத்தில் இருந்து காந்தி அறக்கட்டளை கட்டத்துக்குத் தானே ஜே.பி. போனார் என்பதை உணர்ந்த அவர்கள் மூவரும் காந்தி அறக்கட்டளை வளாகத்துக்கு வந்தார்கள். அவர்களையும் சஞ்சய் காந்தியின் போலீஸ் கைதுசெய்து அரியானா அழைத்துச் சென்றது. டெல்லியில் மட்டுமல்ல; இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் இந்த கைது நடவடிக்கை பரவியது.
ஜூன் 24, 25 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் இந்தியா முழுக்க 677 பேர் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டார்கள். இவர்கள் அனைவருமே உள்நாட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்படி (மிசா) கைதுசெய்யப்பட்டார்கள். யாரைக் கைதுசெய்தாலும் விசாரணையே, இல்லாமல் இரண்டு ஆண்டுகளுக்கு சிறை வைக்கலாம் என்பதுதான் இந்த சட்டத்தின் முக்கியமான ஷரத்து. 1971-ல் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் அமல்படுத்தப்பட்ட ஆரம்ப காலத்தில் கடத்தல்காரர்கள்தான் இந்தச் சட்டத்தின்படி அதிக அளவில் கைதானார்கள். உணவுப் பொருள் கடத்தல் அப்போது அதிகம் நடந்து வந்ததால் இந்தக் கைதுகள் அதிகம் நடந்தது. உணவுக்கடத்தல்காரர்கள் பொதுமக்களுக்கு எதிரானவர்கள் என்ற அடிப்படையில் இந்தக் கைதுகள் நடந்தன. அதே சட்டத்தை, அரசியல் தலைவர்கள் மீதும் பயன்படுத்தினார்கள். இந்திராவுக்கு எதிரானவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று கருதப்பட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைத்துத் தலைவர்களும் கைதுசெய்யப்பட்டார்கள். கைதுசெய்யப்பட்ட யாருமே ஜாமின் கேட்க முடியாது என்பதுதான் இந்தச் சட்டத்தின் ஸ்பெஷல் என்பதால் அதனை இந்திராவும் சஞ்சய்யும் பயன்படுத்தினார்கள்!
தலைவர்கள் கைதுக்குப் பிறகு பத்திரிகைகளின் குரல்வளையை நெரிக்கத் தொடங்கினார்கள்!
இந்தியாவின் முக்கிய செய்தி நிறுவனங்கள் இருந்த பகுதி பகதுர்ஷா மார்க். அங்கு உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. மின்சாரம் இருந்தால்தானே பத்திரிகைகளை அச்சிட முடியும்? மூலாதாரத்தில் கைவைக்கும் மூளை சஞ்சய் காந்தியுடையது. இந்திராவுக்கு எதிராக அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு வந்ததில் இருந்த அதுபற்றி எழுதிய பத்திரிகைக்காரர்கள் யார் என்ற பட்டியலும் தயார் ஆனது. அவர்களைக் கைதுசெய்ய சஞ்சய் உத்தரவு போட்டார்.
அன்று செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தவர், பிற்காலத்தில் பிரதமர் ஆன ஐ.கே.குஜ்ரால். செய்தியாளர்களைக் கைதுசெய்யும் பட்டியல் அவரிடம் தரப்பட்டது. ஆனால், அதனை ஐ.கே.குஜ்ரால் ஏற்கவில்லை. உடனே அவரிடம் இருந்து அந்தப் பதவி பறிக்கப்பட்டது.
மின்தடை இல்லாத பகுதியில் இயங்கி வந்த செய்தி நிறுவனங்கள் தங்களது நாளிதழ்களை வெளியில்விட்டன. ஹிந்துஸ்தான் டைம்ஸ், ஸ்டேட்ஸ்மேன், தி டிரிப்யூன் போன்றவை வெளியானது. டிரிப்யூன் இதழ்களை கட்டுக்கட்டாக பறிமுதல் செய்து எரித்தார்கள். இதைத் தொடர்ந்து  பத்திரிகை தணிக்கை முறை உடனடியாக அமலானது. எந்தச் செய்தியை வெளியிடுவதாக இருந்தாலும் அதனை மத்திய அரசு அதிகாரி ஒருவர், பார்த்து 'சரி’ என்று சொன்னால் மட்டும்தான்  வெளியிடலாம். அவர் வெளியிடக் கூடாது என்றால் அதனை வெளியிடவே கூடாது. அதாவது காங்கிரஸ் அரசு, இந்திரா, இந்திரா மீதான வழக்குகள், இந்திராவுக்கு எதிரான போராட்டங்கள், கைது நடவடிக்கைகள், விமர்சனங்கள் எதையுமே வெளியிடக் கூடாது என்பதுதான் இந்தத் தணிக்கை நடவடிக்கையின் ஒரே குறிக்கோள் இந்த நடவடிக்கையை அகில இந்திய அளவில் இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஸ்டேட்ஸ்மேன் இதழ்கள் கடுமையாக எதிர்த்தன. மதர்லேண்ட் (டெல்லி) தருண் பாரத் (லக்னோ) ஆகியவை மீது அடக்குமுறை பாய்ச்சப்பட்டது. மதர்லேண்ட் ஆசிரியர் மல்கானி, கைதுசெய்யப்பட்டார். லண்டன் இதழான டெல்லி டெலிகிராப் செய்தியாளர் பீட்டர்சிங், நியூஸ்வீக் செய்தியாளர் (அமெரிக்கா) லாரென்ஸ் ஜிக்சின்ஸ் ஆகிய இருவரும் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். ஆனாலும் அடக்குமுறைக்கு எதிராக பல இதழ்கள் எழுதின. புதிய புதிய பெயர்களில் இதழ்கள் வெளிவந்துகொண்டே இருந்தன. தமிழகத்தில் அப்போது தி.மு.க. ஆட்சி இருந்தது. 1976 ஜனவரி 30-ம் தேதி அந்த ஆட்சி கலைக்கப்பட்ட பிறகுதான் அடக்குமுறை கோரத்தாண்டவம் அதிகமானது. பத்திரிகை தணிக்கையும் அதன் பிறகே தமிழகத்தில் தொடங்கியது.
'இந்தியன் எக்ஸ்பிரஸ்’ அதிபர் கோயங்கா பட்ட கஷ்டத்தை உணர்ந்தாலே, அன்றைய இந்திய இதழியலின் சூழ்நிலை புரியும். இதோ கோயங்கா சொல்கிறார்:
''1975 ஜூன் 26-ம் தேதி அதிகாரப்பூர்வமாக நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டாலும் தில்லியிலுள்ள எனது வெளியீட்டு நிறுவனங்களுக்கு அதற்கு முந்தைய நாள் 25-ம் தேதி நள்ளிரவே நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டு விட்டது. எனது தில்லி அலுவலகம் அமைந்திருந்த பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. எனவே 26-ம் தேதி காலை இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளிவரவில்லை.
எனக்கும் எனது இந்தியன் எக்ஸ்பிரஸுக்கும் இருண்ட காலம் துவங்கியது. ஒட்டுமொத்த தேசத்துக்கும் இருண்ட காலம் என்பதை அது நிரூபித்தது. நாட்டின் அத்தியாவசிய மதிப்பு அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. அதுவரை இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் அற்பத்தனமானதாகவும் வெறுக்கத்தக்கதாகவும் மட்டுமே இருந்தன. ஆனால் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட பிறகு பகையாக மாறியது. நெருக்கடி காலத்தின்போது இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு வகை தொல்லைகள் குறித்துப் பலரும் அறிந்திருந்தனர். ஆனால் வெளியே தெரிந்த விஷயங்கள் விரல் நுனி அளவுதான்.
நெருக்கடி நிலைக்காலம் என்பது எனது வாழ்க்கையின் இருண்ட காலம். நான் அரை நூற்றாண்டாக தீவிர ஈடுபாடு கொண்டிருந்த இந்த நாட்டுக்கும் இருண்ட காலம்.
எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலாளர் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். பத்திரிகைத் தணிக்கை முறை திணிக்கப்பட்டது. குடிமக்களது உரிமைகள் முடக்கப்பட்டன. அதன்பின்னர் மத்திய அரசு, அதாவது ஆளுங்கட்சியின் பார்வை 1975-ம் ஆண்டு ஜூலை மூன்றாவது வாரத்தில் என் மீது திரும்பியது....'' என்று சொல்லிவிட்டு கோயங்கா சொல்லும் தகவல்கள்தான் அதிர்ச்சிக்குரியவை.
கோயங்கா என்ன சாதாரணமான ஆளா? அவர் பத்திரிகை நிறுவனர் மட்டுமல்ல, அவருக்கு 50 ஆண்டுகால பொதுவாழ்க்கை உண்டு. நாடாளுமன்ற உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். 1926-ல் அன்றைய மெட்ராஸ் சட்டமன்ற கவுன்சில் உறுப்பினராகவும் இருந்தவர். சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் காங்கிரஸ் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டவர். 1952-ல் சென்னை ராஜதானியில் கம்யூனிஸ்ட் அல்லாத காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கு உதவியவர். 1969-ல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைகின்றவரை தன்னை காங்கிரஸ் கட்சியுடன் அடையாளப்படுத்திக் கொண்டவர். காங்கிரஸ் கட்சி, இந்திராவின் தனிப்பட்ட சொத்தாக மாறிவருவதை உணர்ந்து கண்டித்தவர் கோயங்கா. அதனாலேயே இந்திராவின் எதிரியாகக் கருதப்பட்டார். சுதந்திரமான, யார் தலையீடும் இல்லாத, அதிகார வர்க்கம் செல்வாக்கு செலுத்த முடியாத பத்திரிகை நிறுவனத்தை நடத்த வேண்டும் என்று நினைத்தார். ஆனால், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செய்திகள் வெளியிடும்படி கோயங்காவை கட்டாயப்படுத்தினார்கள். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. அதனாலேயே வருமானவரித் துறை, மத்திய புலனாய்வுத் துறை ஆகியவற்றைப் பயன்படுத்தி கோயங்காவின் நிறுவனங்கள் மீது வழக்குகள் பதியப்பட்டன. 1972-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கட்டுப்பாட்டின்படி, எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் அரசு நியமிக்கும் இரண்டு இயக்குநர்கள் இரண்டு ஆண்டுக்கு இருப்பார்கள் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. பங்குதாரர்களுக்கே தெரியாமல் இயக்குநர்களை நியமிக்கும் தந்திரம் இது என்று கோயங்கா இதனைக் கடுமையாக எதிர்த்தார்.
'1969 முதல் பத்திரிகைகளைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் அரசின் பல்வேறு முயற்சிகள், எனது எதிர்ப்பு காரணமாக ஓரளவே வெற்றிபெற்றன. எனது வர்த்தகத் திறனுக்கும் எனது சக்திக்கும் மீறியே இதற்காக நான் செலவிட வேண்டியதாயிற்று. ஆளுங்கட்சியுடனான எதிர்ப்பைக் கைவிடும்படி எனது நண்பர்கள் எனக்கு ஆலோசனை தெரிவித்தனர். ஆனால் நான் கைவிடவில்லை. வாழ்க்கையின் அத்தியாவசியமான சில மரியாதைகளுடன் சமரசம் செய்துகொள்ள நான் பழகவில்லை. எனது வர்த்தகம் மற்றும் உடமைகள் பறிபோனாலும் அத்தியாவசியமான மதிப்புகளைக் காப்பாற்றுவதற்காகப் போராடப் பயிற்சி பெற்றவன் நான்'' என்று சொல்லிக்கொண்ட கோயங்காவை எமர்ஜென்சியில் சும்மா விடுவார்களா?

- Vikatan

''அவர்களைக் கொன்றதுபோல் உன்னையும் கொல்வார்கள்!'' கிறுகிறுக்க வைக்கும் கிரிக்கெட் சூதாட்ட சப்போர்ட்

ஐ.பி.எல். 2014-க்கான வீரர்களின் ஏலம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஐ.பி.எல். ஜுரம் ரசிகர்களிடம் தொடங்கிவிட்டது. ஆனால், கடந்த ஐ.பி.எல்-லில் வெளிவந்த சூதாட்டப் புகார்கள், கைதுகள், வாக்குமூலங்கள் ஏற்படுத்திய சிக்கல்கள் இன்னும் அவிழவில்லை. இந்த வழக்கு பற்றி அப்போது விசாரித்துவந்த க்யூ பிராஞ்ச் அதிகாரி சம்பத்குமார், நீதிபதி முகுல் முத்கல் குழு முன்பு சமர்ப்பித்துள்ள அறிக்கை, ஐ.பி.எல்-லுக்குப் பின்னால் நடைபெற்ற திரைமறைவு வேலைகளை அம்பலப்படுத்தி உள்ளது.
 சம்பத்குமார் அறிக்கையின் சாராம்சம் இதுதான்...  
''போலி பாஸ்போர்ட்களைத் தயாரிப்பவர்களை கைதுசெய்ய க்யூ பிராஞ்ச் போலீஸ் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடுதல் வேட்டை நடத்தியது. அதில் ஜாபர் என்ற ஜபருல்லா சிக்கினார். விசாரணையில் அவர், மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகளின் துணையுடன் இந்த மோசடியை நடத்துவதாகத் தெரிவித்தார். அவருடைய செல்போனை ஆய்வு செய்ததில், ஹரிஷ் பஜாஜ் என்கிறவரிடம் தொடர்ந்து பேசியிருப்பது தெரியவந்தது. ஹரிஷ் மீது க்யூ பிராஞ்ச் போலீஸாரின் பார்வை திரும்பியது. இதைத் தெரிந்துகொண்ட ஹரிஷ், தான் பயன்படுத்திய செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
இந்த நேரத்தில், ...... எஸ்.பி. என்னைத் தொடர்புகொண்டு, 'வழக்கறிஞர் ...... உங்களைச் சந்திப்பார். அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்யுங்கள்’ என்றார். அவர் சொன்னபடியே ...... என்னை வந்து சந்தித்தார். அவருடன் ஒட்டுமொத்த காவல்துறையும் வலைவீசித் தேடிக்கொண்டிருந்த ஹரிஷ் பஜாஜ் என்பவரும் வந்தார். என்னிடம் பேசிய அந்த வழக்கறிஞர் 'இவருக்கு பாஸ்போர்ட் மோசடி போன்ற விவகாரங்கள் தெரியாது. இவர் சாதாரண கிரிக்கெட் புக்கி’ என்றார். இருந்தாலும், ஹரிஷை கைதுசெய்து, கஸ்டடியில் எடுத்து விசாரித்தோம்.
ஹரிஷ் அளித்த வாக்குமூலம் இது... 'அவருடைய தொழில் சென்னையில் தொழில் செய்யும் சில மார்வாடிகளுக்கு போலீஸ்காரர்களுடன் லிங்க் ஏற்படுத்திக் கொடுப்பதும், போலீஸ்காரர்கள் மற்றும் ரவுடிகளால் அவர்களின் தொழிலுக்கு எந்தப் பிரச்னையும் வராமல் பார்த்துக்கொள்வதும்தான். கிரிக்கெட் பெட்டிங்கிலும் ஆர்வம் உண்டு. சென்னையில் கிரிக்கெட் பெட்டிங் ஏஜன்டாக இருந்தவர் பிரசாந்த். அவர் சூதாடிகளுக்கு டிப்ஸ் கொடுப்பவர். அதற்கு கமிஷனாக ஒவ்வொரு சூதாடியிடம் இருந்தும் 4,000 ரூபாய் வாங்கிக்கொள்வார். அதுபோல், போலீஸ்காரர்களிடம் இருந்து புக்கிகளுக்கு தொல்லை வராமலும் பிரசாந்த் பார்த்துக்கொள்வார். இதற்காக ஒவ்வொரு புக்கிகளிடம் இருந்தும் வாரம் 30 ஆயிரம் ரூபாய் வசூல்செய்து போலீஸுக்குக் கொடுப்பார்.
கடந்த ஐ.பி.எல். போட்டியில் 168 புக்கிகள் ஈடுபட்டனர். அவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் வாரம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் மாமூலாக போலீஸ் அதிகாரிகளுக்கு போயுள்ளது. இதனால், போலீஸ்காரர்கள் பெட்டிங் நடந்த திசை பக்கமே வரவில்லை. ஹரிஷ் பஜாஜ் 50 லட்சம் வரைக் கும், கௌதம் என்பவர் ஒரு கோடி ரூபாய் வரைக்கும் உள்ள பெட்டிங்களை கவனித்துக்கொள்ள... ஒரு கோடிக்கு மேல் தொகை புழங்கும் பெட்டிங்களை கிட்டி என்ற உத்தம் ஜெயினும் வழிநடத்தி உள்ளனர்.
இந்தத் தகவல்களை ஹரிஷ் சொன்னதும், தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அதில் பலர் கைதுசெய்யப்பட்டனர். இந்த விவரங்களைத் தெரிந்துகொண்ட மத்திய உளவுத் துறையான ஐ.பி-யும் உள்துறை அமைச்சகமும் டெல்லி போலீஸுக்கு விவரங்களை அளித்தனர். அதன் மூலம்தான், டெல்லியில் ஸ்ரீசாந்த், அங்கீத் சாவ்லா கைதுசெய்யப்பட்டனர். சென்னையிலும் புக்கிகளையும் சூதாடிகளையும் தேடும் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.
அப்போதுதான் புக்கிகளுக்கு எல்லாம் புக்கியாக செயல்பட்ட கிட்டி என்பவர் சரணடைய விரும்புவதாகச் சொன்னார். நான் அந்தத் தகவலை சி.பி.சி.ஐ.டி. அதிகாரி மஞ்சுநாத்துக்குத் தெரிவித்தேன். அவருடைய உத்தரவின் பேரில் சரணடைந்த கிட்டியை கைதுசெய்து விசாரித்தோம். அவர் அளித்த வாக்குமூலம் என்னவென்றால், கிட்டி பெட்டிங் தொழிலை 12 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் தொடங்கி உள்ளார். அதில் கிட்டிக்கு நிறைய தொடர்புகள் கிடைத்துள்ளது. விக்ரம் அகர்வால் என்ற நட்சத்திர விடுதி உரிமையாளரின் நட்பும் அதில் அடக்கம். அவரும், அவர் மனைவி வந்தனா அகர்வாலும் கிரிக்கெட் பெட்டிங் மூலம் பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள். இதற்காக அவர்கள் பிரத்யேகமாக ஒரு இணையதளத்தையும் நடத்தினர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், மகள் ரூபா ஆகியோர் விக்ரம் அகர்வாலின் மனைவி வந்தனா அகர்வாலுக்கு மிக நெருக்கம். இதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, ரெய்னா ஆகியோரும் விக்ரம் அகர்வாலுக்கு நெருக்கமானார்கள். இதனால், இந்த இரண்டு அணியின் கிரிக்கெட் வீரர்களுக்கும் அடிக்கடி எழும்பூர் ஹோட்டலில் இரவு விருந்து நடத்தினர். விக்ரம் அகர்வாலுக்கு கிட்டி நெருக்கம் என்பதால், அவரும் பல இரவு விருந்துகளில் கலந்துகொண்டுள்ளார்.
இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு குருநாத் மெய்யப்பனும், விக்ரம் அகர்வாலும் சூதாட்டத்துக்குத் திட்டம் தீட்டினர். கடந்த 2013-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 27-ம் தேதி நடைபெற்ற இரவு விருந்தில் கிட்டி கலந்துகொண்டபோது அவரிடம் பேசிய விக்ரம் அகர்வால், 'ஒரு பெரிய டீல் ஓகே ஆகிவிட்டது. நடைபெறப்போகும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடையிலான போட்டியில், சென்னை தோற்கும்’ என்று சொல்லியுள்ளார். விருந்து முடிந்த பிறகு கிட்டி, குருநாத் மெய்யப்பன், விக்ரம் அகர்வால் ஆகியோர் பேசிக்கொண்டிருந்தபோது, ஜெய்ப்பூரில் உள்ள சஞ்சீவ் என்பருடன் குருநாத் மெய்யப்பன் போனில் பேசியுள்ளார். 'பிளான்படி 140 ரன்கள் மட்டும் எடுத்துவிட்டு, போட்டியிலும் தோற்றுவிடுவதாக டோனி சொல்லிவிட்டார். எனவே எந்தப் பிரச்னையும் இல்லை’ என்று சொல்லியுள்ளார். எல்லாப் போட்டிகளிலும் வெற்றிபெற்று வந்த சென்னை அணி, சரியாக 140 ரன்களில் அதன் பிறகுதான் தோற்றது. மேலும், இந்தப் பிரச்னை வெளியில் தெரிந்து வில்லங்கமானதும், கிட்டியை மட்டும் சிக்க வைத்துவிட்டு விக்ரம் அகர்வால் தப்பிவிட்டார்.
அதற்கு காரணமாக கிட்டி சொல்வது, தமிழக உளவுத் துறை அதிகாரி ஒருவர், விக்ரம் அகர்வாலின் நெருங்கிய உறவினர் என்பதுதான். மேலும், கிட்டியை எச்சரித்த விக்ரம் அகர்வால், 'இதுபற்றி வெளியில் வாய் திறந்தால் நீ செத்துவிடுவாய். ஏனென்றால், இந்தப் பிரச்னையில் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் தம்பி அனீஸ் இப்ராஹிமுக்குத் தொடர்பு உள்ளது. ஏற்கெனவே, பெட்டிங் விவகாரத்தில் அவர்களுக்குத் தொல்லை கொடுத்த டெல்லி இன்ஸ்பெக்டர் பதீஸ்தத்தையும் அவருடைய மனைவி கீதா சர்மாவைவும் அவர்கள் கொன்றுவிட்டார்கள். நீயும் வாயைத் திறந்தால், உன்னையும் அவர்கள் கொன்றுவிடுவார்கள்’ என்று சொன்னார். டெல்லி போலீஸ்காரர்கள் அதை தற்கொலை வழக்காகப் பதிவுசெய்து இருப்பது பிறகு தெரியவந்தது.  
இப்படி முக்கியமான வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டு, ஆதாரங்கள் வலுவாக இருந்தபோதும் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-யின் க்யூ பிராஞ்ச் சரியாக கையாளவில்லை. இந்தக் குற்றங்களுக்கு மூளையாக இருந்தவர்கள், திட்டமிட்டவர்கள் யாரும் கைதுசெய்யப்படவில்லை. நான் எந்த வகையிலும் கிட்டிக்கு உதவி செய்யவில்லை. நான் நடத்திய விசாரணைகள் அனைத்துக்கும் பதிவு உள்ளது’ என்கிறது அந்த வாக்குமூலம்.
ஐ.பி.எல். 2014 தொடங்கப்போகும் இந்த நேரத்தில் சம்பத்குமார் சமர்ப்பித்த இந்த அறிக்கை, ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குள் மோதலைத் தொடங்கி வைத்துள்ளது. இன்னும் இதில் எத்தனை விவகாரங்கள் வெளிவரப்போகிறது என்று தெரியவில்லை!
- ஜோ.ஸ்டாலின்

- Junior Vikatan

Friday, February 7, 2014

டின்னர் - கோட்ஸேக்கு நன்றி சொல்லுங்கள்! கமல்ஹாசன்

ந்தக் காரியமாயினும் முழு ஈடுபாட்டோடு, உணர்வுபூர்வமாகச் செய்யும் கமல்ஹாசன், 'மகாநதி’ யின்
 ஒவ்வொரு ஃபிரேமிலும் கவனம் செலுத்திக்கொண்டிருந்தபோதிலும், இடையே நம்மைச் சந்தித்தார்.
 ''டின்னருக்கு நீங்கள் யாரை அழைப்பீர்கள்?''
''மோகன்தாஸ் கரம்சந்த் காந்தின்னு ஒரு வக்கீல் இருந்தாரே... அவரைத்தான்! அவர்மீது எனக்கு ப்ரியம்- மரியாதை அதிகம். அவர் உயிரோடு இருந்த காலத்தில் அவர் அருகே அமர்ந்து, பேசிக்கொண்டே சாப்பிடும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. அதனால், எனது டின்னருக்கு அவரை விருந்தினராக அழைக்க விரும்புகிறேன். கற்பனை என்பதல்ல... இது என் ஆத்மார்த்த ஆசை.'
''அவரை செலக்ட் பண்ணக் காரணம் என்ன?''
''அவர் ஒரு வக்கீல். வழக்கறிஞர்களுக்கும் எனக்கும் ஜன்மார்ந்த பந்தம் உண்டு. என் அப்பா, சகோதரர் உள்பட என்னைச் சுற்றிலும் வழக்கறிஞர்களே அதிகம். எனக்குத் தெரிந்த வக்கீல்களெல்லாம் கடைசிவரை 'பிராக்டீஸ்’ பண்ணிச் சம்பாதித்தனர். அப்படி இருக்கும்போது, இந்த வக்கீல் மட்டும் (மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி) கறுப்பு அங்கியை உதறி எறிந்துவிட்டு, தேச சேவையில் மக்கள் நல்வாழ்வுக்காக, சுதந்திரத்துக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டார். வருமானம் தருபவற்றை உதறிவிட்டு, எதற்காக இப்படிச் செய்தார் என்று அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும்.''
''டின்னரை எங்கு வைத்துக் கொள்வீர்கள்?''
''விருந்தோம்பலில் தமிழருக்கென்று சிறப்பு உண்டே! நமது இல்லத்துக்கு வரவழைத்து விருந்தளிப்பதுதானே முறை! எனவே, எனது சொந்த ஊரான பரமக்குடியில் உள்ள எனது வீட்டுக்கு (தேசிய பெருமை வாய்ந்ததாக்கும்) அவரை அழைக்கவே விரும்புகி றேன்.''
''டேபிள், சேர் போடுவீர்களா?''
''அதெல்லாம் எதற்கு? அந்த மனிதருக்குக் கால்களை மடக்கி உட்காருவதுதானே பிடிக்கும்! அவர் இஷ்டப்படியே தரையில் அமர்ந்துதான்! நானும் அவரைப் போலவே உட்கார்ந்து கொள்வேன்.''
''உங்கள் கெஸ்ட் தனியாக வர வேண்டுமா... குடும்பத்துடனா?''
''அந்த அம்மாவோடு (கஸ்தூரிபா காந்தி) உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்றும் எனக்குக் கொள்ளை ஆசை. அதனால், அம்மாவுக்கு உடம்பு சரியாக இருந் தால், அவர்களையும் அழைத்து வாருங்கள் என்று கேட்டுக் கொள் வேன்.''
''மெனு என்னவாக இருக்கும்?''
''காந்திக்குப் பிடித்தமான வேர்க்கடலையும் ஆட்டுப்பாலும்தான் மெனு. எனக்கும்கூட அதுதான். முடிந்தால், உடனுக்குடன் பால் கறந்து கொடுக்க, ஆரோக்கிய மான ஆட்டைக்கூட அருகில் வைத்துக் கொள்ளக்கூடும். இந்த டின்னர் ருசிக்காக அல்ல; ஆத்ம பசிக்காகத்தானே!''
''டின்னரின்போது அவரிடம் என்ன பேசுவீர்கள்?''
''அவரிடம் நிறையக் கோள்மூட்டுவேன். 'நீங்க என்னெல்லாம் நினைச்சீங்க. நாடு எப்படியெல்லாம் இருக்கணும், அரசியல் வாதிகள் எந்த மாதிரியெல்லாம் இருக்கணும்னு நீங்க நினைச்சுக் கிட்டிருந்தீங்களோ, கனவு கண் டீங்களோ, ஆசைப்பட்டீங்களோ, அந்த மாதிரியெல்லாம் இப்போது இல்லை. உங்களை நன்றாக ஏமாற்றிவிட்டார்கள். இதுவரைக் கும் நீங்கள் உயிரோடு இருந்திருந் தால், கோட்ஸே உங்களைச் சுட் டிருக்க வேண்டியதில்லை. இன் றைய மோசமான நிலைகளைப் பார்த்து உங்களை நீங்களே சுட்டுக் கொள்வீர்கள். அதனால் கோட் ஸேக்கு நன்றி சொல்லிவிட்டு, எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள்’ என்பேன்.''
''உங்கள் சந்தோஷத்தை எப்படித் தெரிவிப்பீர்கள்?''
'''உங்களை மாதிரி வியாபாரத்தனமில்லாத மனிதரைச் சந்திப்பதில் ரொம்பச் சந்தோஷம். உங் களை மாதிரி எங்களால் இருக்க முடியாது. எங்க நிலையை உங்க ளிடம் சொல்லி பாவமன்னிப்புக் கேட்க இந்த டின்னர் ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்ததில் எனக்கு எல்லை இல்லாத மகிழ்ச்சி’ என்பேன்.''
''டின்னரில் கடைசி அயிட்டம் என்னவாக இருக்கும்?''
''வெளியே சொல்வதில் நான் வெட்கப்படப்போவதில்லை. மற்ற வர்களைப்போல நான் பண்டிகை களைக் கொண்டாட விரும்புவ தில்லை. இந்தத் தேசத்துக்குச் சுதந்திரம் வந்த நாளன்று நான், என் மனைவி, குழந்தைகள் விழித்திருப்போம். சுதந்திரம் கிடைத்த நள்ளிரவு நேரத்தில் எங்கள் வீட்டில் கொடியேற்றி, நிமிர்ந்து நின்று, சல்யூட் அடித்து, தேசிய கீதம் பாடுவோம். இது பலருக்குக் கேலியாகத் தெரியலாம். ஆனால், எங்களுக்கு இது பெருமை. நாங்கள் இந்தியர்கள். இந்த உணர்வு என்னுள் வியாபித்து இருப்பதால் டின்னரின் கடைசி அயிட்டம்...
ஜன கண மன...''

- Vikatan