Thursday, October 24, 2013

ஆறாம் திணை - 59

-ம் நூற்றாண்டு வரை நம்மிடையே தீபாவளி இல்லை.
கார்த்திகைத் திருவிழா, தைப்பூசம், திருவாதிரை, சிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடி பதினெட்டு... இவைதாம் நாம் கொண்டாடிய பழந்தமிழர் விழாக்கள்’ என்கிறார் பேராசிரியர் தொ.பரமசிவன் தன் 'பண்பாட்டு அசைவுகள்’ எனும் நூலில்.
'21-வது சமண தீர்த்தங்கரரான மகாவீரரின் நினைவு நாளை தீபம் ஏற்றிக் கொண்டாடிய வழக்கமே, நரகாசுரன் அழிந்த நாளாக பின்னாளில் மாறியது’ என்பது தமிழ் வரலாற்று ஆய்வாளர்களின் கூற்று. 'நீத்தார் நினைவு நாளில் தலையில் எண்ணெய் வைப்பது என்பது, இடைக்காலத்தில் நம்மிடம் வந்துசேர்ந்த மரபு. அந்த மரபின்படிதான் தீபாவளி நாளில் தலைக்கு எண்ணெய் வைப்பதும் நம்மிடையே வந்தது’ என்கிறார்கள்.
தீபாவளி கொண்டாடும் பழக்கம் வரும்  முன்னரே தலைக்கு எண்ணெய் வைத்துக் குளிப்பது என்பது, நம் அன்றாட வாழ்வியலாக, மருத்துவமாக, மருத்துவத்தில் மறுபத்தியமாக, மரபாக, சடங்கு சாங்கியமாக நம்மோடு பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்த ஒன்று.
'பஞ்சேந்திரியமும் பலத்துத் தெளிவையுரும்’ என்கிறது சித்த மருத்துவம். எள்ளின் நெய், ஆமணக்கு நெய், வேம்பு நெய், பசு நெய் இத்தனையும், அந்த நாளில் தலைக்குத் தேய்த்துக் குளிக்கப் பயன்பட்ட எண்ணெய்கள்தாம்.
வெகு சமீபத்தில், காற்றில் அலை அலையென பளபளப்பாகப் பறக்கும் கூந்தல்தான் 'நாகரிகம்’ என ஆகிப்போனதில் இருந்து தலைக்கு எண்ணெய் வைப்பதே மறைந்துவருகிறது. அதே எண்ணெயில் கொஞ்சம் acidifiers, polymers, hydrolyzed protein, moisturizers, dimethicone, sequestrants, lubricants, amino acids  என கிளார்க் அட்டவணையில் இருக்கும் ரசாயனங்களில் பெரும்பாலானவற்றை ஒன்றாகக் கலக்கி தயாரிக்கப்படும் கண்டிஷனரில் முடியை 'அமிலக் கழுவலுக்கு’ உள்ளாக்கும் போக்கே அதிகரித்து வருகிறது.
'தலையில்... மூட்டில்... உடலில் எண்ணெயைத் தேய்ப்பதா?’ என்று சில காலத்துக்கு முன்பு வரை நவீன அறிவியலும் வரிந்துகட்டி கேள்வி எழுப்பியபடிதான் இருந்தது. ஆனால், இப்போதோ நிலைமையே வேறு!
பூனாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில், கைக்குழந்தைகளுக்கு தைலம் தேய்த்து மசாஜ் செய்வதால், எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள், குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பதை உறுதி செய்கிறது என 'Indian Paediatrics’ எனும் மருத்துவப் பத்திரிகை தெரிவிக்கிறது. உடல் எடை, சரும வனப்பு, குழந்தை நன்கு தூங்கி எழும் தன்மை ஆகிய பல நலக்கூறுகளை எண்ணெய் மசாஜ் குளியல் அதிகரிப்பதை சமீபத்திய மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
'தினமும் கொஞ்சமே கொஞ்சம் எண்ணெயை தலையில் தேய்த்துக் குளிக்கக் குளிக்க, தோல் வறட்சி நீங்கும்; உடல் வலி சோம்பல் தீரும்; அடிக்கடி சளி பிடிக்கச் செய்யும் சைனஸ் தொல்லை குறைவதோடு, பல் வியாதிகளைக்கூட கட்டுப்படுத்தும்’ என்கிறது 'பதார்த்த குண சிந்தாமணி’ எனும் மருத்துவ நூல்.
'அட நீங்க வேற... பொறந்து வளர்ந்த ஊரைவிட்டு என்னைக்கு சென்னை வந்தேனோ, அன்னைக்கே எனக்கு சைனஸ் வந்துருச்சி. என்னைக்கு தலைமுடி கொட்ட ஆரம்பிச்சதோ, அப்போ இருந்து கார்ப்பரேஷன் தண்ணியைத் தலைக்குக் காட்டுறதே இல்லை. இந்த லட்சணத்துல நீங்க தினமும் எண்ணெய் தேய்ச்சிக் குளிக்கச் சொல்றீங்களே சார்!’ என்று அலுத்துக்கொள்ளும் தமிழர்களுக்கு சிறு விளக்கம்...
'குளியல்’ என்பது கார் அல்லது பைக்கைக் கழுவுவதுபோல அழுக்கு நீக்கும் ஒரு கடமை மட்டுமே அல்ல. வியர்வை, அழுக்கு போக மட்டும்தான் குளியல் என்றிருந்தால், எல்லோரும் வேலை முடித்து இரவில்தான் குளிக்க வேண்டும். ஆதிகாலம்தொட்டு ஏன் காலையில் குளித்துக்கொண்டிருக்கிறோம்? இரவெல்லாம் பூமியில் சந்திரனின் ஆட்சி. பகலில் சூரியனின் ஆட்சி. சந்திரன், பிரபஞ்சத்தைக் குளிர்விக்கும்; சூரியன், பிரபஞ்சத்தை உஷ்ணமாக்கும். அதைத் தாங்கிக்கொள்ளும் வகையில் நம் உடல் குளிர்ச்சியடைய வேண்டும். அதனால்தான் சூரியனின் தாக்கம் தொடங்கும் காலை வேளையில், நம் உடலைக் குளிர்விக்க, வளர்சிதை மாற்றத்துக்கு ஏதுவாக காலைக் குளியல் அமைக்கப்பட்டது.
'நதி நீராடல்’ வாய்ப்பே இல்லாது போய்விட்ட கான்க்ரீட்வாசிகளான நாம், குறைந்தபட்சம் தினமும் தலைக்குக் குளிப்பது நல்லது. கழுத்துக்குக் குளிப்பது, இடுப்புக்குக் குளிப்பது, பாத்திரம் கழுவுவதுபோல் பாத் டப்பில் படுத்துக்கொண்டு குளிப்பதால் எல்லாம் ஒருவேளை அழுக்கு நீங்கலாம்... ஆனால், வியாதி நீங்காது.
மூக்கடைப்புக்காரர்கள் உரிய மருத்துவத்துடனும் கூடுதலாக சுக்கு, தைலம் போன்ற சித்த மருத்துவத் தலைமுழுக்குத் தைல உதவிகளுடனும் கண்டிப்பாகத் தலைக்குக் குளிக்க வேண்டும். ரத்தக்கொதிப்பு நோயாளிகள் நல்லெண்ணெயில் சீரகம் போட்டுக் காய்ச்சியும், அடிக்கடி சளி பிடிக்கும் தன்மை உடையவர் மிளகு போட்டுக் காய்ச்சியும் குளிப்பது நல்லது.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடலின் நிணநீரின் ஓட்டத்தைச் சீராக்குகிறது என்பது, நவீன அறிவியலுக்கும் புரியத் தொடங்கியுள்ளது. இந்தக் குளியல், நோய்வாய்ப்பட்ட இடத்தில் நோய் எதிர்ப்பாற்றலைத் தீண்டி,  புண் மற்றும் வலி நிவாரணத்தைத் தூண்டுவதைக் கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள், எண்ணெய் தேய்த்து உடலை மசாஜ் செய்து குளிப்பதினால் புற்றுநோயின் தீவிரமும் குறையக்கூடுமோ என ஆராயத் தொடங்கியுள்ளனர். அப்பத்தா, அம்மாக்களுக்குப் பயந்து தீபாவளிக்கு மட்டும் எண்ணெய்க் குளியல் செய்யாமல், அதை வழக்கமாக்கிக் கொண்டால், பல நோய்கள் நம் பக்கம் வராது.
தித்திப்பு இல்லாமல் தீபாவளியா? வெள்ளைச் சர்க்கரை இல்லாத தித்திப்பை இந்தத் தீபாவளியில் இருந்தேனும் கொஞ்சம் முயற்சிப்போமே! தினை அதிரசத்துக்கும், திரட்டுப்பாலுக்கும், இனிப்புப் பணியாரத் துக்கும், முந்திரிக் கொத்துக்கும், கம்பு உருண்டைக்கும் வெல்லம் போதும். அதுவும் ஹைட்ரேஸ் சேர்க்காத பழுப்பும் கறுப்புமாக இருக்கும் உதிரி நாட்டு வெல்லம்தான் இந்த மண்ணையும் காற்றையும் நீரையும்கூட இனிப்பாக வைத்திருக்கும்.
சிறுதானிய ஸ்வீட் கொழுக்கட்டை, நிலக்கடலை பர்ஃபி, தினையரிசி முருக்கு, வரகரிசி தேன்குழல், சாமையரிசி ரிப்பன் பக்கோடா... என நீங்கள் உங்கள் வீட்டை மகிழ்வூட்டும் முயற்சியில்தான் இந்த நாட்டையும் மகிழ்வூட்ட முடியும்!
குதூகலத்திலும் கொண்டாட்டத்திலும் உடன் வாழ்ந்த நிலத்துக்கு அறமும் நன்றியும் சொன்ன கூட்டம் நாம். வானம் பார்த்தே சூழல், காலம் சொன்னவர் வாழ்ந்த பூமி இது. வீசும் காற்றின் ஓசை உணர்ந்து நாவாய் திருப்பிய கடல் ஆண்டவனின் மண் இது. இலையின் வாசம் பார்த்து வைத்தியம் சொன்ன அறிஞர் நிறைந்திருந்த நிலம் இது. விளையும் பொருளும், விளைந்த நிலமும் பார்த்து, வாழ்வியல் சொல்லும் நாகரிகம் படைத்தவன் உலகம் இது.
எண்ணெய்க் குளியலில் தொடங்கி மஞ்சள் நீர், வேம்புக் காப்பு, முளைப்பாரி, வாழைப்பந்தல், கோபுரக் கலசத்து வரகரிசி என்ற பல நலவாழ்வுச் சூத்திரங்கள் காலம்காலமாக தமிழ் மரபில் விழாக்களுடனும் சடங்குகளுடனும் பொதிந்துபோய் இருக்கின்றன. அவற்றைப் பத்திரமாகக் கட்டவிழ்த்துப் பயன்படுத்த வேண்டியது மட்டுமே நம் கடமை!

ஆறாம் திணை - 58

From Vikatan..
6,840 கடைகள், 30,000 ஊழியர்கள், 22,000 கோடி ரூபாய் வருமானம்... டாலர் மதிப்பு சரிந்து நாடே பொருளாதாரத் தள்ளாட்டத்தில் இருந்தாலும்,  வருடத்துக்கு 20 சதவிகித வியாபார வளர்ச்சியுடன் கொடிகட்டிப் பறக்கிறது தமிழக அரசு நடத்தும் சாராய வணிகம்! குடிப்பவர்களில் 40-50 சதவிகித நபர்களை கிட்டத்தட்ட நிரந்தரக் குடி அடிமைகளாக மாற்றிவரும், இந்தப் புனிதத் தொழில் மூலம் வரும் வருமானத்தில்தான், அரசு பல நலத்திட்டங்களை நடத்துவதாகச் சொல்லும் அவலம், உலகில் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை!
'கொஞ்சமாக் குடிச்சா தப்பில்லையாமே’, 'இதயத்துக்கு நல்லதாமே’, 'ஹார்ட் அட்டாக் வராதாமே’, 'கொஞ்சமா ஆல்கஹால் உள்ள பீர், ஒயின் சாப்பிடலாமே...’ என சப்பைக்கட்டு கட்டி ஆல்கஹால் சுவைக்கும் சகோதர - சகோதரிகளுக்கு ஒரு முக்கியமான செய்தி... ஆல்கஹால் விகிதம் 40 சதவிகிதத்துக்கு அதிகமான விஸ்கி, பிராந்தி போன்ற ஹாட் டிரிங்க்ஸ் என்றால் 'பெக்’ கணக்கு, 68 சதவிகிதம் ஆல்கஹால் உள்ள பீர்/ஒயின் என்றால் 'மக்’ கணக்கு... இதைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் வயிற்றுக்குள் செல்லும் ஆல்கஹாலுக்கும் அது நடத்தும் அட்டூழியத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை!
'திராட்சை ஒயினில் நிறைய பாலிஃபீனால் இருக்கிறது... அது இதயத்துக்கு நல்லதாமே’ என மெத்தப் படித்தவர்கள் ஒரு வாதத்தை முன்வைப்பார்கள். உணவியல் வல்லுநர்கள் சிலர்கூட சந்தோஷமாக இதை ஆதரிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆனால், அவர்களுக்கு எல்லாம் அதே பாலிஃபீனால்கள் பச்சைத் தேயிலையிலிருந்து கத்திரிக்காய் வரை எத்தனையோ பொருட்களில் இருக்கிறது என்பதும் தெரியும்தானே? அதற்கெல்லாம் வக்காலத்து வாங்காத அறிவுஜீவிகள் ஒயின் மீது காட்டும் கரிசனத்துக்கு, இதயம் மீதான அக்கறையா காரணம்?
'ஒயினை உணவாக்க வேண்டும். சரவண பவன் முதல் கையேந்தி பவன் வரை அனைத்து உணவகங்களிலும் அதை வழங்க அனுமதி வேண்டும்’ என பெரும் வணிகக் கூட்டம் அரசுக்குத் தொடர்ந்து அறிவுரை சொல்லிவருகிறது. பெண்களும் மது அருந்தும் பழக்கத்தை ஊக்குவித்தால், குடும்பத்தோடு குடிக்கச்செய்து, மாதாந்திர மளிகைக் கடை பட்டியலில் ஒயினையும் இடம்பெறச் செய்யலாம் என்ற சந்தை உத்தியில் பிரபல திரைப்படங்களால் இந்த நிகழ்வு தொடர்ந்து ஊக்குவிக்கப்பட, நகர்ப்புற இளம்பெண்களில் குடிப்பழக்கம் கணிசமாகப் பெருகிவருகிறது. ஆணைவிட பெண்ணுக்கு மதுவினால் வரும் நோய்க் கூட்டம் 100 சதவிகிதம் அதிகம்!
இப்போதைக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ஈரல் சிர்ரோசிஸ் நோயாளிகள் இந்தியாவில் இருப்பதாக ஓர் அறிக்கை சொல்கிறது. பெரும் கார்ப்பரேட் மருத்துவமனைகள், ஈரல் துறைப் பிரிவுகளை உருவாக்கி போஷாக்காகப் பராமரித்துவருகின்றன. ஏனெனில், ஈரல் பாதிப்படைந்தவர்களில் சரிபாதி பேர் ஈரல் புற்றுநோய்க்கும் ஆளாவார்களாம். 'குடிப்பதால் புற்று, சிர்ரோசிஸ் எல்லாம் எனக்கு வரலை. லேசா ஈரலில் கொழுப்பு படிஞ்சிருக்கு. அவ்வளவுதான்’ என்பவர்களுக்கும் ஒரு செய்தி. தொடர்ச்சியாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், சிர்ரோசிஸ் நோய்க்கு 'காத்திருப்பு நிலை’யில் உள்ளவர்கள்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் மது அருந்துவதால், உங்கள் பிள்ளை ஈரல் வியாதியாலோ அல்லது வேறு புற்றுநோய்க்கோ அல்லது சர்க்கரை முதலான பல வியாதிகளுக்கோ ஆளாகலாம் என்கிறது எப்பிஜெனிடிக்ஸ் துறையின் ஆய்வுகள்.
மது போதையில் ஒரு நபர் தள்ளாடுவது போல, அந்த நபரின் மரபணுக்களும் தள்ளாடி, மரபணுத் தகவல்களை மிகத் துல்லியமாகப் பிரதியெடுக்கவேண்டிய பணியை மறந்துவிடுகிறது. தன் செல்களைப் படியெடுக்கும்போது, சந்திப்பிழை, கமா, ஃபுல்ஸ்டாப் எல்லாம் வைக்க மறந்ததில் 'DNA demethylation’ நடந்து, அது குடித்தவருக்கோ, குடித்தவரின் பிள்ளைகளுக்கோ சிர்ரோசிஸ் முதல் பல வியாதிகளை வரவழைக்கக்கூடும் என்கிறது எப்பிஜெனிடிக்ஸ் துறை.
'சங்க காலத்தில் கள் உண்ணலையா? இப்போது மட்டும் ஏன் இத்தனை அலறல் அறிவுரை?’ என்று கேட்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். கள் வேறு; எத்தனால் கலந்து விற்கும் சாராயம் வேறு. கள்ளைவிட நவீன சாராயத்தில் 10 மடங்கு எத்தனால் அதிகம். 'அப்படியென்றால் அந்தக்கால கள் குடிக்கலாமே?’ என்றும் அவசரப்பட வேண்டாம். சங்க காலத்தில் இளவட்டக் கல் தூக்கி, காதலித்து, குமரியிலிருந்து மதுரைக்கு குதிரையில் பயணிக்க உடல் வலிமை தேவையாக இருந்தது. இப்போது யாரோ எழுதிய எஸ்.எம்.எஸ்-ஐ அனுப்பி காதலிக்கும், 'பஸ்ல படுத்துட்டுப் போக ஸ்லீப்பர் சீட் இருக்கா?’ என சொகுசு தேடும் நோஞ்சான்களுக்கு கள் அவசியமே இல்லை.
இன்றளவில், ஈரல் மாற்றுசிகிச்சைக்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட 25 லட்ச ரூபாய். பழுதடைந்த ஈரல் பராமரிப்பு செலவு சிலபல ஆயிரங்கள். 'டாக்டர்... இந்த வியாதி குடிச்சதினால் வந்துச்சுனு கேஸ் சீட்ல எழுதிடாதீங்க. இன்சூரன்ஸ் கிடைக்காது’ என ஈரல் மருத்துவரிடம் கெஞ்சும் கூட்டம் இங்கே இரண்டு சதவிகிதத்துக்கும் குறைவுதான். குடியில் ஈரல் அழிந்து மரணத்தருவாயில் பெரிய மருத்துவமனைக்கு நுழையவே முடியாத பாமர, ஏழை மக்கள் கூட்டம்தான் 98 சதவிகிதம்.
வருடத்துக்கு 22,000 கோடி வரு மானம் பெற்றுத்தர அரசாங்கம், பொருளாதார நிபுணர்களைத்தான் திறம்படச் செயலாற்றப் பணிக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களை அல்ல!

தமிழ் சினிமா... ஒரு க்ளிக் உலா!

From Ananda Vikatan..

ஸ்டில்ஸ் ரவி... அன்றைய 'காமதேனு’ தொடங்கி இன்றைய 'ஆல் இன் ஆல் அழகுராஜா’ வரை 500 திரைப்படங்களுக்கும் அதிகமாகப் பணியாற்றிய தமிழ் சினிமாவின் 'மோஸ்ட் வான்டட்’ புகைப்படக் கலைஞர். 'அன்னக்கிளி’ இளையராஜா அறிமுகம், மகேந்திரனின் 'ஜானி’ மேக்கிங், கோடம்பாக்கத்தின் அவுட்டோர் படப்பிடிப்புகள் என தமிழ் சினிமாவின் வரலாற்றோடு நெருக்கமாகப் பயணித்துவரும் இவர், தன் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்...

ப்போதுதான் புதிதாக வந்த மினி கீ போர்டு ஒன்றை சுஹாசினி, வாணி கணபதியிடம் இசைத்துக் காட்டுகிறார் கமல். எனக்கு கமல் எப்பவும் ஆச்சர்யம். கோல்டு ஸ்பாட் குளிர்பானம் குடிக்கும் குரங்கு, நேபாளத்தில் வரிசையாக நிற்கவைத்து ஆடுகளின் தலையை வெட்டும் நேர்த்திக்கடன் என, தான் பொழுது போக்காக எடுத்த படங்களைக் காட்டுவார். 'ஹாபியா எடுக்கும் மனுஷனே இவ்வளவு நேர்த்தியா எடுக்கும்போது, அதையே தொழிலா பண்ற நாம எப்படி எடுக்கணும்’னு எனக்குள் வெறி ஏறும். தமிழ் சினிமாவில் முதல் டிஜிட்டல் கேமரா வாங்கியவர் கமல். இரண்டாவதுதான் நான். ஆல் இன் ஆல் அழகுராஜான்னா, அது கமல்தான்!

'துடிக்கும் கரங்கள்’ படப்பிடிப்புத் தளத்தில், ரஜினியின் பிறந்த நாளைகொண்டாடுகிறார் லதா. 'பைரவி’ படப்பிடிப்பு சமயத்தில் ஸ்ரீகாந்த்-ஸ்ரீப்ரியா ஜோடி ரொம்பவே பாப்புலர். அப்போ, ரஜினி வளர்ந்துவரும் நடிகர். அதுவும் அந்தப் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரம். படப்பிடிப்பு தளத்தில் ஷாட் ப்ரேக்கில் மற்ற நடிகர்-நடிகைகள் அரட்டையில் இருக்கும்போது, ரஜினி மட்டும் சாட்டைச் சுற்றுவது, வசனத்தைப் பேசிப் பார்ப்பதுனு அடுத்த காட்சிக்கான பயிற்சியில் இருப்பார். 'என்னய்யா இந்த ஆளு இப்படித் திரியுறாரு?’னு அப்போ பலர் கமென்ட் அடிச்சாங்க. ஆனா, அந்த ஹோம்வொர்க்தான் பின்னாடி ரஜினிக்கு 'ஸ்டைல் மன்னன்’ அந்தஸ்தை வாங்கிக் கொடுத்தது!

டி.ராஜேந்தர் இயக்கும் படங்களின் படப்பிடிப்புத் தளம் ரகளையா இருக்கும். ஒவ்வொரு வசனத்தையும், ஒவ்வொரு சீனையும் கடைசிவரை மெருகேத்திட்டே இருப்பார். ஷாட் ப்ரேக்கில் படத்துக்குச் சம்பந்தமில்லாத சில விஷயங்களை நான் க்ளிக் பண்ணிட்டு இருப்பேன். உடனே அவர் தன் கேமராமேன்கிட்ட, 'அங்கே பாரு, ரவி எதையோ எடுக்கிறான். நல்லா இருந்தா, அந்த மாதிரி நீயும் எடு’னு விரட்டுவார். 24x7 அலெர்ட்டாவே இருக்கும் நபர் டி.ஆர்.!


டற்கரையில் உட்கார்ந்து இளையராஜா, பாஸ்கர், கங்கை அமரன் பாடுற மாதிரியும் பொதுமக்கள் அதைக் கேட்டு காசு போட்டுட்டு போற மாதிரி படங்கள் எடுத்திருக்கேன். அந்தளவுக்கு ராஜா சகோதரர்கள் என்னை நம்பி தங்களைக் கொடுப்பாங்க. 'அன்னக்கிளி’யில் கமிட் ஆனதும் எடுத்த முதல் ஸ்டில் தொடங்கி, ராஜாவை ஏகப்பட்ட படங்கள் எடுத்திருக்கேன். அவர் ரொம்ப நாளா நான் எடுத்த போட்டோவைத்தான் லோகோ மாதிரி கேசட் ப்ளேயர்களிலும் போஸ்டர்களிலும் பயன்படுத்தினார்.

து 'பாட்டுக்கு ஒரு தலைவன்’ பட பாடல் காட்சியின்போது க்ளிக்கியது. க்ரேனில் ஷோபனா. இவரை வெளியில் இருந்து பார்ப்பவர்கள், 'கொஞ்சம் திமிரானப் பெண்ணோ’ என எண்ணத் தோணும். ஆனால், பார்த்தவுடன் அன்பாகப் புன்னகைப்பார். வெரைட்டியான போஸ்களுடன் தடதடவென க்ளிக்குகளைக் கடந்துசெல்லும் இவரின் க்ரியேட்டிவிட்டியைப் பார்த்து வியந்திருக்கிறேன்.

பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து... அப்போ இவங்க இருக்கிற இடம் களைகட்டும். கம்போஸிங் பண்ண வந்துட்டு அதைத் தவிர மத்த எல்லா விஷயங்களையும் அரட்டை அடிச்சிட்டு கிளம்பிப் போவாங்க. சும்மா ஜாலியா இருக்கலாம்னு போன இடத்துல, பாட்டும் ட்யூனும் சிக்கி அசத்தல் கம்போஸிங்கோட திரும்பி வருவாங்க. இவங்க மூணு பேரும் ஈகோ இல்லாம இருந்திருந்தா, இன்னும் பல க்ளாஸிக் படைப்புகள் கிடைச்சிருக்கும் நமக்கு. 'அலைகள் ஓய்வதில்லை’ படத்துக்காக அர்ச்சனா உள்பட ஏகப்பட்ட பேரை டெஸ்ட் ஷூட் எடுத்தோம். அதில் கடைசியில் க்ளிக் ஆனது ராதா. அப்புறம் ராதாவுக்கு ஏத்த மாதிரி அந்தப் படத்துக்கான பாடல்களை கம்போஸ் பண்ணாங்க!

'ஜானி’ படத்துக்காக போட்டோ செஷன் பண்ணப்போ, ரஜினி வெற்று உடம்புடன் கோடரியால் விறகு வெட்டுவது மாதிரி சில படங்கள் எடுத்தேன். அந்தப் படங்களை போஸ்டரில் பயன்படுத்தினார்கள். அதைப் பார்த்தால், 'ஏதோ பயங்கரமான ஆக்ஷன் படம் போல’னு ரசிகர்கள் மனசுல ஓர் எண்ணம் வரும். ஆனா, ஜானியோ மென்மையான காதல் கதை. ஒரு ஸ்டில் போட்டோகூட ரசிகர்கள் மனதில் படத்தைப் பத்தி பெரிய தாக்கத்தை உண்டாக்கும். நாம எடுக்கும் படம் கதையின் இயல்பைப் பிரதிபலிப்பதாக இருக்கணும்னு நான் புரிஞ்சுக்கிட்ட படம் அது.  

சுஹாசினி, அன்று ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் அசிஸ்டென்ட். 'ஜானி’ படப்பிடிப்பில் துறுதுறுவென வலம்வந்த அவரிடம் தன் 'நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் நடிக்க அழைத்தார் மகேந்திரன் சார். ஆனால், முதலில் சுஹாசினி மறுத்துவிட்டார். 'ஜானி’ படப்பிடிப்பு நடைபெற்ற ஒரு கடையின் சுவர் முழுக்க கண்ணாடி பதிக்கப்பட்டிருந்தது. அதில் சுஹாசினி தன்னை அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தார். என்னவோ தோண, 'சார், சுஹாசினிக்கு நடிக்கிற ஐடியா இருக்கு. திரும்பப் பேசிப் பாருங்க. க்ளிக் ஆகும்’ என்றேன். க்ளிக் ஆனது!  

தான் நடிக்கும் யூனிட்டைச் சேர்ந்தவர்கள் மேல் அவ்வளவு அக்கறை காட்டுவார் சிரஞ்சீவி. அப்போ ஒவ்வொரு கோடையிலும் தன் பட ஷூட்டிங் காஷ்மீரில் இருக்கிற மாதிரி பார்த்துப்பார். ஒவ்வொரு படத்துக்கும் 15 நாட்கள்னு, ஒரு மாசத்துல ரெண்டு படத்தின் ஷ§ட்டிங்குகளை  காஷ்மீரில் வெச்சி முடிச்சிடுவார். அதே யூனிட் ஆட்கள் தான். தயாரிப்பாளர், ஹீரோயின் சில நடிகர்கள் மட்டும் மாறுவாங்க. இப்படித்தான் ஒருதடவை நான் அவர் படத்துக்காக காஷ்மீர் போயிருந்தேன். அங்கே எல்லாரும் அவங்கவங்க மனைவியோட வந்திருந்தாங்க. 'நீ உன் மனைவியைக் கூட்டிட்டு வரலையாப்பா..? இது ஹாலிடே கம் ஷூட்டிங்காச்சே’னு கேட்டப்போ, நான் கிட்டத்தட்ட அழுதுட்டேன்!

சோக் குமார்... எனக்கு மிகவும் பிடித்த ஒளிப்பதிவாளர். இந்தப் படத்தில் அவருக்கு முத்தம் கொடுப்பவர்கள் ராதிகாவும் அவரோட அசிஸ்டென்ட் விஜயலட்சுமியும். என் சர்வீஸ்ல ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு லைட்டிங்கில் பண்ணின கேமராமேன் இவர் மட்டும்தான். அவரும் நானும் அதிகாலையிலேயே எழுந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போயிருவோம். அப்போ மத்தவங்க யாரும் தயாராகலைன்னா, 'ரவி... வாட் எ நைஸ் லைட். ஆனா, லைட்டிங் போகுதுய்யா. எங்க இன்னும் யாரும் வரலை’னு மனுஷன் கெடந்து துடிப்பார். சினிமா வெறியர். ரொம்பவே வெகுளி. ஈகோ இல்லாதவர். 'ஜானி’ படத்துல ரெண்டு ரஜினி சேர்ந்து நடிச்ச அந்த ட்ரிக் ஷாட், ஒரு லைட்மேன் சொன்ன யோசனை. ஒரு லைட்மேன் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளும் அளவுக்குத் தன்மையானவர்.

சுஜாதா, எம்.ஜி.வல்லபனின் நண்பர். அவரோட இயக்கத்தில் ராதிகா-சக்கரவர்த்தி நடித்த படத்தில் நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்தார் சுஜாதா. 'எப்படியும் நான் நல்லா நடிச்சிருக்க மாட்டேன். எடிட்டிங் டேபிள்ல சரிபண்ணிக்கங்க’னு சொல்லிட்டே இருந்தார். நம்ம என்ன பேசினாலும் காது கொடுத்துக் கேட்பார் சுஜாதா. சில வாரங்கள் கழிச்சுப் பார்த்தா, ஏதாவது ஒரு கதையில நம்மகிட்ட கேட்ட டெக்னிக்கல் விஷயங்களை அழகான செய்தியா வாசகர்களிடம் சேர்த்திருப்பார்.    

சினிமாவில் பலரைப் போல எனக்கும் பாலசந்தர் சார்தான் மானசீகக் குரு. இவர் இயக்கிய 'அக்னி சாட்சி’ படத்தில் வயல்வெளி லொகேஷன். அங்கே வழக்கமாக ஆர்ட்டிஸ்டை வயலுக்கு நடுவில் நிக்கவெச்சிதான் படம் எடுப்பாங்க. நான் சரிதாவை வயலின் ஒரு மூலையில் நிக்கவெச்சி ஃப்ரேம் முழுக்க பச்சைப் பசேல்னு முழு வயலும் தெரிவது மாதிரி போட்டோ எடுத்தேன். அதை ராத்திரி பார்த்துட்டு, 11 மணிக்கு மேல போன் பண்ணி, 'ரவி சூப்பர்யா... சூப்பர். நல்ல ஃப்ரேம்யா’னு பாராட்டிட்டே இருந்தார். நேரம் கிடைக்கிறப்பலாம் அவர் வீட்டுக்குப் போயிருவேன். அப்படி நான் போன சமயம் கமல் வந்திருந்தார். அப்போ கே.பி.சாரின் மனைவி எங்களுக்குக் கொடுத்த உபசரிப்புக்கு 'காபி சாட்சி’தான் அந்தப் படம்!

'ஜோதி’, மணிவண்ணன் இயக்கிய ரெண்டாவது படம். ஆரம்பத்துல அவருக்கும் எனக்கும் செட் ஆகலை. ஆனா, தொடர்ந்து நான் எடுத்த புகைப்படங்களை பார்த்துட்டு வந்தவர், அப்புறம் எல்லாப் படங்களுக்கும் என்னையே கூப்பிட்டார். அப்போ மோகனுக்கு இருந்த புகழ் வெளிச்சத்தை இப்போகூட எந்த ஹீரோக்களும் அனுபவிச்சிருக்க மாட்டாங்க. ஆனா, அது எதையும் அவர் மனசுல ஏத்திக்கிட்டதே இல்லை. கார்ல வந்து இறங்கி ரோட்டு டீக்கடைல நின்னு என்தோள் மேல கைபோட்டுப் பேசிட்டு இருப்பார்.


து, 'மற்றவை நேரில்’ படப்பிடிப்பு. பி.சி.ஸ்ரீராமின் முதல் படம். மௌலி இயக்கம். ஜெயதேவி தயாரிப்பாளர். திறமையான ஆட்களைப் பரிந்துரை செய்து முன்னுக்கு கொண்டுவருவதில் ஜெயதேவி கிரேட். முதல் படத்திலேயே பி.சி-யின் சில ஃப்ரேம்களைப் பார்த்து நான் மிரண்டு போயிருக்கேன். ஆனா, 'நான் பார்த்து மிரண்ட ஆட்கள்’னு என் பெயரை பி.சி. சொல்லியிருக்கார். அது என் தொழிலில் எனக்குக் கிடைத்த பெரிய கௌரவம். தேங்க்ஸ் பி.சி. சார்!

Friday, October 11, 2013

Fun - நம்மோட ரியாக்‌ஷன் !


From Vikatan

ஜெயிக்கும் குதிரையா... சொதப்பல் ஜோக்கரா? - ராகுல்காந்தி டோட்டல் ஸ்கேன்

சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்பு கோட்-சூட், டர்பன் சகிதமாக மன்மோகன் சிங் பிரதமர் ஆனபோது, 'இவர் சராசரி அரசியல்வாதி இல்லை; 'பொருளாதார மேதை’, 'மிஸ்டர் க்ளீன்’ என்றார்கள். ஒன்பது ஆண்டு காலம் முடிந்துவிட்டன. மன்மோகன், இந்தியாவை இரு சுற்றுகள் ஆண்டு முடிக்கப் போகிறார். இதோ மறுபடியும் தேர்தல் வருகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக ராகுல் காந்தி முன்நிறுத்தப்படுகிறார். இப்போது 'இவர், சராசரி அரசியல்வாதி இல்லை; பதவி ஆசை இல்லாதவர்; கிராமங்களின் ஆணிவேர் வரை அறிந்தவர்’ என்கிறார்கள்.
  ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பிரதமர் வேட்பாளராக இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும், அவரைத் தாண்டி இன்னொருவர் அந்த இடத்துக்கு வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. பெரும் 'மீடியா லாபி’யுடன் களத்தில் முன்நிற்கும் மோடியை, ராகுல் சமாளிப்பாரா? தொடர்ந்து மூன்றாம் முறையாக காங்கிரஸை ஆட்சிபீடத்தில் ஏற்றுவாரா? ராகுல் காந்தியின் பலம், பலவீனங்கள் குறித்த அலசல்கள் இங்கே...
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தி, காங்கிரஸ் கட்சியால் வெற்றிபெற முடியுமா? 2ஜி தொடங்கி நிலக்கரி வரையிலான பிரமாண்ட ஊழல் குற்றச்சாட்டுகளை ராகுல் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்? காங்கிரஸ் கூட்டணியின் பிரதிநிதி என்ற அடிப்படையில் அதன் நன்மை, தீமைகளுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளும் பக்குவம் ராகுலுக்கு இருக்கிறதா? பதில் சொல்கிறார்... இளைஞர் காங்கிரஸின் முன்னாள் தேசியப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜோதிமணி.
''ராகுல்... புதிய நம்பிக்கை!''
''அரசியலில், 'ஊழலை’ ஒரு பொது விவாதமாக கொண்டுவந்ததில் முன்னோடி, ராஜீவ் காந்தி. அவரது வழித்தடத்தைப் பின்பற்றி, கட்சிக்குள்ளும் வெளியிலும் ஊழலை ஒழிக்க ராகுல் முயற்சிக்கிறார். குறிப்பாக, 'அரசியலில் லஞ்சம்; அரசியல்வாதிகள் இடையே லஞ்சம்’ என்றுதான் பொத்தாம்பொதுவாக பேசுகிறார்களே ஒழிய... அரசியல் கட்சிகளில் புழங்கும் லஞ்சம், ஊழல்குறித்து யாரும் பேசுவது இல்லை. ராகுல் ஒருவர்தான் இதுகுறித்துப் பேசிவருகிறார். அதற்கான முன்முயற்சியாக, வெளிப்படைத் தன்மையுள்ள அரசியல் கட்சியாக காங்கிரஸை மாற்ற மெனக்கெடுகிறார். அதற்கான உதாரணம்தான் 2006-ல் நடத்தப்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான உள்கட்சித் தேர்தல். ஒட்டுமொத்த இந்திய அரசியல் கட்சிகளிலேயே முதல்முறையாக ஜனநாயக முறைப்படி வாக்களித்து, உள்கட்சி நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர். கடும் எதிர்ப்புகளையும் பிரச்னைகளையும் தாண்டி ராகுல் இதைச் சாதித்தார்.
குற்றப் பின்னணி உடையவர்கள் எம்.பி., எம்.எல்.ஏ-வாக பதவி வகிப்பதைப் பற்றிய சர்ச்சை இப்போதுதான் பேசப்படுகிறது. ஆனால் ராகுல், அன்றைக்கே இளைஞர் மற்றும் மாணவர் காங்கிரஸில் கிரிமினல் பின்னணி உள்ளவர்கள் போட்டியிடுவதைத் தடை செய்தார். இப்படி தொடர்ந்து செய்யும்போது குற்றப் பின்னணி கொண்டவர்கள், ஆரம்ப மட்டத்திலேயே தடுத்து நிறுத்தப்படுவார்கள். இன்னும் 10 ஆண்டுகள் கழித்து இதன் நேர்மறை விளைவை நாம் உணர முடியும்.
சாதி பார்த்து, பணம் பார்த்து, ஆள்பலம் பார்த்து பதவி கொடுத்து வளர்த்துவிடுவது தான் இன்றைய அரசியல் கட்சிகளின் பொது இயல்பு. 'ஓட்டு போடுவதோடு ஒதுங்கி நில்லுங்கள்’ என்று மக்களை விலக்கி வைத்துவிட்டு, அரசியல் கட்சிகள் விருப்பம் போல ஆட்டம் போடுகின்றன. இதைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்கான ஜனநாயகத்தை உத்தரவாதப்படுத்தவும் அரசியல் கட்சிகள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். அதை ராகுல் காந்தி செய்கிறார்.
அதேபோல இன்றைய அரசியல் கட்சிகளுக்குள், 'ஜனநாயகம்’ என்பது பெயர் அளவுக்குதான் இருக்கிறது. நான் காங்கிரஸ் கட்சியையும் சேர்த்தே சொல்கிறேன். இதை நேர்மையாக ஒப்புக்கொண்டு வெளிப்படையாக திறந்த விவாதம் நடத்த ராகுல் முயற்சிக்கிறார். அதில் என்ன தவறு? மற்ற அரசியல் கட்சிகளிடம் இதை நீங்கள் ஒரு துளிகூட காண முடியாது!''
''காங்கிரஸ் கட்சியின்மேல் உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து, ராகுல் காந்தியைத் துண்டித்து தனியே பார்க்க முடியுமா?''
''ஊழல், எல்லா நாடுகளிலும் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது. ஆனால், அது தன் சொந்தக் கட்சியிலேயே, சொந்த அரசாங்கத்திலேயே நடைபெற்றாலும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது எத்தனை இடங்களில் நடக்கிறது? தாங்கள் கொண்டுவந்த கொள்கையில் பிழை என்றால், அதை ஒப்புக்கொண்டு சரிசெய்யும் மனத்துணிவு எத்தனை பேருக்கு இருக்கிறது?
காங்கிரஸ் கூட்டணி அரசைப் பொறுத்தவரை, மூன்று பெரிய ஊழல்களைக் குறிப்பிடலாம்.
1) 2ஜி அலைக்கற்றை ஊழல். இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2) காமன்வெல்த் ஊழல். இதில் சுரேஷ் கல்மாடி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் சிறையில் இருக்கிறார்.
3) ஆதர்ஷ் வீட்டுவசதி வாரிய ஊழல். இது, மிகச் சிறிய ஊழல். காங்கிரஸைச் சேர்ந்த மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர், ஒரு வீட்டை தனது மாமியாருக்கு ஒதுக்கிவிட்டார் என்பது குற்றச்சாட்டு. இதற்காக அவர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். அதற்கு, ராகுல் காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார். நிலக்கரி ஊழலைப் பொறுத்தவரை, 1993-ல் தொடங்கி, 2012 வரையிலுமான சுரங்கக் கொள்கையின் அடிப்படையில் அது மதிப்பிடப்படுகிறது. இதில், பல மாநிலங்களும் அரசியல் கட்சிகளும் சம்பந்தப்பட்டுள்ளன. காங்கிரஸை மட்டும் குற்றம் சாட்டுவது உள் நோக்கம் கொண்டது!''

''ராகுல் காந்தி, திடமான முடிவு எடுப்பதில் தயக்கம் கொண்டவராகவே இருக்கிறாரே?'
''பஞ்சாப்பில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலை நடத்த உள்கட்சியில் எதிர்ப்பு வந்தபோது, 'இளைஞர் காங்கிரஸ்’ என்ற அமைப்பை முழுவதும் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தியவர் ராகுல். சமீபத்தில் குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் பதவி இழப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, அவசரச் சட்டம் கொண்டுவர நாடாளுமன்றம் முயன்றது. தன் சொந்தக் கட்சியின் அமைச்சரவையாக இருந்தபோதிலும் அதைக் கடுமையாக விமர்சித்தவர் ராகுல். தான் மட்டுமே தலைவராக இருக்க வேண்டும் என்று எண்ணாமல் நாடு முழுவதும் பிரதேசத் தலைமைகளை உருவாக்குவதில் ராகுல் முன் நிற்கிறார். 'மற்றவர்கள் வளர்ந்து வந்தால், தன் இடம் போய்விடுமே!’ என்ற பயமற்ற துணிச்சல்காரர் அவர். காந்தியின் வழியில், நாட்டின் கிராமங்களை நேரடியாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறார். அதனால்தான் எத்தனையோ பாதுகாப்பு பிரச்னைகளையும் தாண்டி துணிவுடன் கிராமத்துக் குடிசைகள் வரையிலும் செல்கிறார். அவர் எளிமையாக இருப்பதால், உறுதியற்றவர் என்று சொல்ல முடியாது!''
''ராகுல் காந்தி என்கிற தனிநபர், மாற்றத்தை விரும்புகிறார் என்றே வைத்துக்கொண்டாலும், கட்சியின் கொள்கை அளவில் மாற்றத்தைக் கொண்டுவராமல் அவரால் என்ன செய்ய முடியும்?'
''1991-ல் அரசாங்கம் தனியார்மய, தாராளமயக் கொள் கைகளைக் கொண்டுவந்தது. அவற்றின் மூலம் மக்களை வளப்படுத்த முடியும் என்று நம்பினார்கள். ஆனால், அந்தக் கொள்கைகள் கோடீஸ்வரர்களையும் நடுத்தர வர்க்கத்தினரையும் மேம்படுத்தியதே தவிர, பல கோடி ஏழைகளுக்கு வளங்களைப் பகிர்ந்து அளிக்கவில்லை. இதை ராகுல் காந்தி உணர்ந்திருக்கிறார். அதனால்தான், அதிகாரப் பரவலாக்கம் என்பதையும், திட்டங்களுக்கான நிதி, பஞ்சாயத்து அளவில் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்துகிறார். அரசுக்கு வெளியில் இருந்து கருத்தளவில் இதை ஏற்றுக்கொள்ளும் ராகுல், அரசின் உள்ளே செல்லும்போது இதை கொள்கையாக நிச்சயம் அமல் படுத்துவார்.''

ராகுல் காந்தியை புதிய நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதமுடியுமா?, 10 ஆண்டுகால காங்கிரஸ் கூட்டணி அரசின் மீதான மக்களின் அதிருப்திகளை அவரால் எதிர்கொள்ள முடியுமா? பதில் சொல்கிறார், தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்.
''ராகுல்... நச்சுச் சூழலின் வாரிசு!''
''காங்கிரஸ் கட்சி, கிட்டத்தட்ட 10 ஆண்டுகாலம் இந்தியாவை ஆட்சி செய்து மக்களிடம் பெரும் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. எதிர்வரும் தேர்தல் அந்தக் கட்சிக்குப் பெரும் சவாலாக இருக்கப்போகிறது. ஆகவேதான், அவர்கள் தோற்றுப்போன ஓர் அரசின் பிரதிநிதியான மன்மோகன் சிங்கை ஓரம் கட்டிவிட்டு, ராகுல்  காந்தியை முன்னே கொண்டுவருகின்றனர். ஆனால், இந்தச் சீரழிந்த அரசியல் சூழலில் ராகுல் காந்தி எந்த வகையிலும் வேறுபட்டவராகவோ, நம்பிக்கை அளிப்பவராகவோ இல்லை என்பதுதான் யதார்த்தம்.
நாளைக்கே ராகுல் காந்தி பிரதமராக வந்தாலும், மன்மோகன் சிங் செயல்படுத்திக் கொண்டிருக்கும் இதே தனியார் மய, தாராளமயக் கொள்கைகளைத்தான் இன்னும் வேகமாக; நாசூக்காக அமல்படுத்தப்போகிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில், இன்றைய அரசியல் என்பது கட்சிகளும் கம்பெனிகளும் இரண்டறக் கலந்ததாக மாறிவிட்டது. முன்பு எல்லாம் கம்பெனிகள், கட்சிகளுக்கு காசு கொடுத்து காரியம் சாதித்துக்கொள்வார்கள். அதை நாம் 'லஞ்சம்’ என்போம்; அவர்கள் 'நன்கொடை’ என்பார்கள். இப்போது இந்த இடைவெளியே இல்லை. கம்பெனியே கட்சி ஆரம்பிக்கிறது; கட்சிக்காரர்கள் கம்பெனி ஆரம்பிக்கிறார்கள். இதனால் கம்பெனிகளின் ஒட்டுண்ணிகளாக, 'கட்சிக்காரர்கள்’ பரிணாம வளர்ச்சி அடந்துள்ளனர். இந்த 'ஒட்டுண்ணி முதலாளிகள்’ இருக்கும்வரை ராகுல் காந்தியால் எந்த மாற்றத்தையும் செயல்படுத்த இயலாது.''
''அதாவது, 'ராகுல் காந்தி நல்லது செய்யத்தான் நினைக்கிறார். ஆனால், அரசியல் சூழல் அவரது கைகளைக் கட்டிவைத்திருக்கிறது’ என்கிறீர்களா?''
''இல்லை. அப்படி நல்லது செய்ய நினைப்பவராக இருந்தால், 'நான்சென்ஸ்’ என்று பிரதமருக்கு எதிராக அற ஆவேசத்துடன் பொங்கி எழும் அவர், தன் சொந்த சகோதரியின் கணவரான ராபர்ட் வதேராவின் டி.எல்.எஃப்  முறைகேடுகளை வன்மையாகக் கண்டித்திருக்க வேண்டும். ஹரியானா மாநிலத்தையே வளைத்துப்போடும் அளவுக்கான வதேராவின் நிலச் சூறையாடல் வெளிப் படையாக அம்பலப்பட்ட பின்னரும், ராகுல் காந்தி பெயர் அளவுக்குக்கூட கண்டிக்கவில்லை. இதில் கள்ள மௌனம் சாதித்துக்கொண்டு, உத்தரப்பிரதேசத்தின் குடிசை வீட்டில் கஞ்சி குடிப்பதால் மட்டும் அவர் ஏழைப்பங்காளன் ஆகிவிடமாட்டார். இந்தக் கஞ்சி குடிக்கும் காட்சியை எல்லாம் இவரது அப்பா ராஜீவ் காந்தி காலத்திலேயே பார்த்துவிட்டோம்.
கடந்த 2004 நாடாளுமன்ற தேர்தலில்கூட காங்கிரஸ் கட்சி, 'ஆம் ஆத்மி’ என்பதைதான் தங்களின் தேர்தல் முழக்கமாக முன்வைத்தது. 'ஆம் ஆத்மி’ என்றால், 'சாமானியன்’ என்று பொருள். அந்தச் சாமானியர்கள், கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை லட்சம் கோடியைச் சூறையாடியிருக்கிறார்கள் என்பதைதான் நாம் பார்த்திருக்கிறோமே! இந்த நச்சுச் சூழலின் வாரிசான ராகுல் காந்தி மட்டும் எப்படி மேன்மையானவராக இருப்பார்?''
''காங்கிரஸையும் ராகுல் காந்தியையும் குறைந்தபட்சம் மதச்சார்பற்ற அம்சத்திலேனும் ஆதரிக்கலாம் அல்லவா?''
''பா.ஜ.க. மதவாதக் கட்சி என்பதாலேயே, காங்கிரஸ் மதச்சார்பற்ற கட்சியாகிவிடாது. உண்மையில், பா.ஜ.க. ஒரு தீவிர இந்துத்துவக் கட்சி என்றால், காங்கிரஸ் ஒரு மிதவாத இந்துத்துவக் கட்சி. பாபர் மசூதி இடிப்பு, நரசிம்மராவ் அரசின் பாதுகாப்புடன்தான் நடைபெற்றது.
மத்தியப்பிரதேசத்தில் பசு வதை தடைச் சட்டம் கொண்டுவந்த திக்விஜய் சிங், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான். அதே திக்விஜய் சிங்தான், 'உமாபாரதி முட்டை கலந்த கேக் சாப்பிட்டார்’ என்று அதை ஒரு தேசியப் பிரச்னையாக மாற்றினார். குஜராத்தில் மோடி மட்டும்தான் மதவெறியரா? அங்கு பாரதிய ஜனதாவில் இருந்து விலகிவந்த அதே காவிக் கும்பல்தான் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களாக களம் இறக்கப்படுகின்றனர்.
இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் அகமதாபாத்தில்தான், தலித் மக்களுக்கு என்று தனியே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இப்படி நவீன நகர்ப்புறச் சேரிகள் அமைப்பதை காங்கிரஸ் தடுத்து நிறுத்தவில்லையே? குறைந்தபட்சம் குஜராத்தில்கூட வலுவான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்த வில்லையே? ஆகவே, காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்றது என்பது ஒரு போலித் தோற்றம். இதைத் தாங்கிப் பிடிப்பவராகவே ராகுல் காந்தியும் இருக்கிறார்.''
'' 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்’, '100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம்’ போன்ற அம்சங்களில் காங்கிரஸ் கட்சி குறிப்பிடத்தக்க அளவுக்கு செயல்பட்டிருக்கிறதே?''
''ஆர்.டி.ஐ. என்பது, பெரும் போராட்டத்துக்குப் பிறகு வேறு வழியே இல்லாமல் காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த திட்டம். 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம், பெரும் ஊழலுக்குள் சிக்கிக்கிடப்பதை நாடே அறியும்.
'தமிழ் இனம்’ என்று எடுத்துக் கொண்டாலும், காங்கிரஸ் கட்சி பெரும் துரோகம் இழைத்துவிட்டது என்பதையும், ஈழத் தமிழர்களின் இனப்படுகொலையை முன்னின்று நடத்தியது என்பதையும் யாராலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது!
ஈழத் தமிழர்கள் ஒருபுறம் இருக்கட்டும். இந்தியத் தமிழர்களுக்கே காங்கிரஸ் கட்சியால் எந்தப் பயனும் இல்லை. தமிழ்நாட்டுக்கு, காங்கிரஸ் அரசால் எந்தப் பொருளாதார ஆதாயங்களும் இல்லை. தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 5.9 கோடி லிட்டர் மண்ணெண்ணெயை மானிய விலையில் மத்தியத் தொகுப்பில் இருந்து ஒதுக்கீடு செய்துவந்தார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக இதை 2.9 கோடி லிட்டராகக் குறைத்துவிட்டார்கள்.
மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கும் 13-வது நிதி ஆணையம், 'மத்திய அரசின் வருவாயில் இருந்து, ஆண்டு ஒன்றுக்கு 5.01 சதவிகிதம் நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளது. அதன்படிதான் ஒதுக்கீடும் நடந்துவருகிறது. ஆனால், சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், இந்த நிதி ஒதுக்கீட்டை 2.5 சதவிகிதமாகக் குறைத்துவிட்டார்கள். இதற்கு, 'தமிழ்நாடு செயல்திறன்மிக்க மாநிலம்’ என்று சப்பைக் காரணம் சொல்கிறார்கள். இது மோசடியான வாதம்.
தமிழ்நாட்டுக்கான வருமானம் எங்கிருந்து வருகிறது? இந்திய அரசு, இங்கிருந்து அள்ளிச்செல்லும் வரி வருவாயில் பாதியையாவது கேட்டுப் பெறக்கூடிய அரசியல் துணிச்சல், கருணாநிதிக்கோ, ஜெயலலிதாவுக்கோ கிடையாது. அதற்கு மாறாக டாஸ்மாக் கடைகளை திறந்து, மக்களுக்கு சாராயம் விற்று வருமானத்தைப் பெருக்குகிறார்கள். இந்தச் 'செயல்திறனுக்குதான்’ நிதியை பாதியாகக் குறைக்கிறார்கள். பின்தங்கிய மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தவறு இல்லை. அதை மத்திய நிதியில் இருந்து ஒதுக்கிக் கொடுக்கவேண்டும். பக்கத்து மாநிலத்தின் நிதியில் இருந்து எடுத்துத் தரக் கூடாது. ஆக, காங்கிரஸ் ஆட்சி என்பது, தமிழ்நாட்டுக்கு நஷ்டத்தைதான் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது!''
'''மதவாதத்தை உயர்த்திப்பிடிக்கும் பாரதிய ஜனதாவின் மோடியைவிட, 'குறைந்த தீமை’ (Lesser evil) என்ற அடிப்படையில், காங்கிரஸின் ராகுல் பரவாயில்லை’ என்று சிலர் சொல்கிறார்களே?''
''எரியும் கொள்ளியில், சின்னக் கொள்ளி, பெரிய கொள்ளி என்ற வேறுபாடு எல்லாம் கிடையாது. தீமை என்றால் தீமைதான். 2004-ல் பா.ஜ.க. 'பெரிய தீமை’ (Greater evil); காங்கிரஸ் 'குறைந்த தீமை’ (Lesser evil). இப்போது அப்படியே தலைகீழாகத் தெரிகிறது. எது ஆளும் கட்சியாக இருக்கிறதோ, அது பெரிய தீமையாகத் தெரிவது இயல்பு. ஆனால், மக்களாகிய நமக்கு இரண்டு கழிசடைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தாக வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. நாங்கள் 'தேர்தலைப் புறக்கணியுங்கள்’ என்கிறோம். அதையும் மீறி வாக்குச்சீட்டில் எதையாவது பதிவுசெய்ய வேண்டும் என்றால், இப்போதுதான் 'யார் மீதும் நம்பிக்கை இல்லை’ என்பதை பதிவுசெய்ய 'நோட்டா’ (NOTA) என்ற வசதி வாக்குச்சீட்டில் வந்துவிட்டதே... அதைப் பயன்படுத்துங்கள்.''

ஆறாம் திணை - 57

From Vikatan..

ம் கொள்ளுத் தாத்தாவைவிட தாத்தா, அதிக வயது வாழ்ந்தார்.  தாத்தாவைவிட அப்பா, அதிக வயதுடன் இருக்கிறார். ஆனால், நாம் அப்படி இருப்போமா? எதிர்காலத்தில், நம் குழந்தைகள்..? சமீபத்திய வாழ்வியல் நோய்கள் அடிக்கும் இந்த அலாரத்தைத்தான், 'சர்க்கரை வியாதியஸ்தர்களின் எண்ணிக்கை இன்னும் 10 வருடங்களில் 70 மில்லியன்களைத் தொடும்’ என்கிறது பன்னாட்டுச் சர்க்கரை நோய்க் கழகம்.
உலகில் சர்க்கரை நோயாளிகளின் அளவில் முதல் இடத்தை நாம் ஏற்கெனவே பிடித்தாயிற்று. வருங்காலத்தில் 'மேட்ரிமோனி’ விளம்பரங்கள், 'ஐந்து இலக்க சம்பளம் வாங்குகிற, சர்க்கரை நோயில்லாத ஆண்/பெண் தேவை’ என்றுதான் வெளிவரும். காய்ச்சல், தலைவலி என எதற்கு மருத்துவரைப் பார்த்தாலும், 'எதுக்கும் சர்க்கரை இருக்குதானு பார்த்துருங்க’ என மருத்துவர்கள் பரிந்துரைப்பது வாடிக்கையாகிவிட்டது!
ஈரலுக்குப் பின்னே ஒளிந்திருந்து, உடம்பின் ஜீரணத்தை சமர்த்தாகப் பாதுகாத்துவந்த கணையத்தின் பீட்டா செல்கள், கண்ணுக்குத் தெரியாத வைரஸில் பாதிப்படைந்ததா? மரபணு செய்த சேட்டையா? அவ்வப்போது வரும் அலைபேசி அவதி போல, செல்களுக்கு இடையிலான சிக்னல் பிரச்னையா? சொகுசான சோம்பேறி வாழ்க்கை முறையா? வெள்ளைச் சர்க்கரை, வெள்ளை அரிசி, வெள்ளைக் கோதுமை மாவு, வெள்ளைக் கோழி... என வெள்ளை(யர்) உணவு தினசரி வாடிக்கையாகிவிட்டதாலா? அடுக்கடுக்காகக் கேள்விகள்  முளைத்துக் கொண்டே இருக்கின்றன. பதில்கள்தான் கிடைத்தபாடில்லை. ஆனால், மேலே சொன்னவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால்கூட, சர்க்கரை நோய் டோக்கன் போட்டு அமர்ந்துவிடும் என்பதுதான்  வேதனையான உண்மை.
'ஆத்தி... சர்க்கரை நோய் வந்தாச்சு. இனி எதைத் தின்றால் பித்தம் தெளியும்?’ என நம்மவர்கள் போடும் ஆட்டம் இருக்கிறதே! 'கொய்யாக்கா இலை சாப்பிடுங்க; கோவைக்காய் பொரியல் சாப்பிடுங்க; வெண்டைக்காயை நடுவுல பொளந்து, ராத்திரியெல்லாம் ஊற வெச்சுச் சாப்பிடுங்க; தஞ்சாவூர் பக்கம் சர்க்கரை ஈஸ்வரர்னு ஒரு கோயில் இருக்கு. அங்க ஒருமுறை போய்ட்டு வந்துருங்க; தொடு சிகிச்சையை முயற்சி செய்யுங்க; தொடாத சிகிச்சைல கேன்சரே குணமாகுதாம்’ என திரும்பும் திசையெல்லாம் புத்திமதிகள். சர்க்கரை நோய் பற்றிய புரிதலை ஏற்படுத்திக்கொள்ள முனைவது தப்பு இல்லை. ஆனால், முப்பதே நாட்களில் இந்தி கற்றுக்கொள்வது போல, முப்பதே நாட்களில் சர்க்கரையை முறியடித்து ஜாங்கிரி சாப்பிட நினைப்பதுதான் தப்பு.
சர்க்கரை நோய், டைஃபாய்டு ஜுரம் மாதிரி கிடையாது, கிருமியை ஒழித்தால் நோய் மறைந்துபோவதற்கு. சரியான மருத்துவத்தோடு, ஒட்டுமொத்தமாக வாழ்வியலைப் புரட்டிப் போட்டால்தான் நல்வாழ்வு நிச்சயம். சமீபத்திய ஆய்வுகள், நீங்கள் IMPAIRED GLUCOSE TOLERANCE அல்லது IMPAIRED FASTING GLUCOSE  அளவில், அதாவது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருந்தாலே, ஓரிரு ஆண்டிலேயே சர்க்கரை நோயாளியாக மாற வாய்ப்பு மிக அதிகம் என்கிறது நவீன அறிவியல்.
45 நிமிட வேக நடை, தினசரி காலை-மாலை 20 நிமிட பிராணாயாமப் பயிற்சி இவற்றுடன் வெள்ளைச் சர்க்கரை முதலான வெள்ளை உணவை விலக்கும் மனோபாவம் உங்களிடம் இருந்தால், சர்க்கரையின் வரவை முடிந்தவரை தள்ளிப்போடலாம். சில நேரத்தில் தப்பிக்கவும் செய்யலாம்.
ஆன்ட்டி-ஆக்சிடென்ட் நிறைந்த க்ரீன் டீ அல்லது ஆவாரைக் கஷாயத்தை காலை பானமாகவும், கைக்குத்தலில் தவிடு நீக்கிய தினை, ராகி, கம்பு, சிறு சோள மாவில் செய்த தோசையோ, இட்லியோ, கொழுக்கட்டையோ காலை உணவாகச் சாப்பிடுங்கள். வாரம் இரு நாள் மட்டும் மாப்பிள்ளைச் சம்பாவில் அல்லது வேறு பாரம்பரிய அரிசியில் பொங்கலோ, தவிடு நீக்காத கோதுமையில் சப்பாத்தியோ சாப்பிடுங்கள். தானியங்களை கஞ்சியாகச் சாப்பிடுவதை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கலாம். இன்னொரு முக்கிய விஷயம். சிறுதானியங்களிலும் பாலிஷ் போடத் தொடங்கிவிட்டார்கள். சிறுதானியத்தை கைக்குத்தலாக மட்டும் வாங்கிச் சாப்பிடுங்கள். அல்லது, அரிசிக்கு நேர்ந்த கதை விரைவில் தினைக்கும் பிற தானியங்களுக்கும்கூட வரக்கூடும்.
மதிய உணவை, வெங்காயம், தக்காளி சாலட்டில் தொடங்குங்கள். முளைகட்டிய பாசிப்பயறு, முருங்கைக் கீரை பொரியல், வாழைத்தண்டுப் பச்சடி, வெள்ளைப் பூசணிக் கூட்டு, வெண்டைக்காய், கத்திரி, கோவை இவற்றில் செய்த கூட்டுப் பொரியல், தினையரிசி சாதம் அல்லது கைக்குதல் கார அரிசி அல்லது பழுப்பு அரிசியில் அல்லது புழுங்கல் அரிசியில் சோறு, கண்டிப்பாக ரசமும் மோரும் என சாப்பிடுங்கள். சொன்ன அத்தனையும் குறைந்த கிளைசிமிக் தன்மையும், சர்க்கரை நோய்க்கு எதிரான மூலக்கூறுகளையும் கொண்டவை.
மாலையில் சர்க்கரை நோயாளிகள் ஏதேனும் சாப்பிடுவது மிக அவசியம். பப்பாளி துண்டுகளோ சிவப்பு மூக்குக்கடலைச் சுண்டலோ நல்லது. சிவப்பு அரிசி வெள்ளைச் சோள அவல் சாப்பிடுவதும் இரவு அகோரப் பசியைக் குறைக்கும். இரவில் கம்பு அடை, சோள தோசை அல்லது கேழ்வரகு தோசை-வெங்காய சட்னி அல்லது கத்திரிக்காய் கொத்சுவுடன் சாப்பிடுவதும், தேவைப்பட்டால், ஒரு கப் மோரும் சாப்பிடலாம். 8 மணிக்கு மேல் குறு நடை ஒன்று போடுவதும் அவசியம். கும்மிருட்டில் இரவுத் தூக்கம் தடையின்றி 6-7 மணி நேரம் சர்க்கரையைக் கட்டுப்படுத்த, புற்றைத் தடுக்க மிக அவசியம்.
இந்த நடைமுறைக்கு ஏற்ப வாழ்க்கையை முறைபடுத்திக்கொண்டாலே, உடலில் சர்க்கரை மறைந்து வாழ்க்கையில் தித்திப்பு சேரும்!
- பரிமாறுவேன்...

அஜித்தின் ரோல்மாடல்!

From Vikatan..

டிகர் அஜித் பலருக்கு ரோல் மாடலாக இருக்க, 'போட்டோகிராபி, ஏரோ மாடலிங்கில் என் குரு இவர்தான்’ என்று அஜித் கைகாட்டும் நபர்... அரவிந்த். சினிமா வட்டாரத்தில் 'ஹெலிகேம்’ அரவிந்த்.  
'' 'சீவலப்பேரி பாண்டி’ படத்துக்கு நான்தான் ஒளிப்பதிவாளர். அதுக்கப்புறம் விளம்பரப் படங்கள் பண்ண ஆரம்பிச்சிட்டேன். ஒளிப்பதிவில் புதுசா ஏதாவது பண்ணணும்னு எனக்குள் ஐடியா ஓடிட்டே இருந்துச்சு. அதுக்காக வெளிநாடுகளில் சுத்த ஆரம்பிச்சேன். அப்போதான் ஹெலிகேம் அறிமுகம் ஆச்சு.
ஓரளவு டாப் ஆங்கிள் ஷாட் எடுக்கணும்னா, ஜிம்மி ஜிப் (நீளமான க்ரேன்) பயன்படுத்தணும். ஆனா, ஒரு ஷாட் முடிஞ்சதும் ஜிம்மி ஜிப்பை இடம் மாத்துறது பெரிய வேலை. இல்லைன்னா ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுக்கணும். அது செலவு பிடிக்கிற வேலை. இந்த ரெண்டுக்கும் மாற்றா அமைஞ்சதுதான் ஹெலிகேம்; அதாவது ஹெலிகாப்டர் கேமரா. பெரிய சைஸ் ரிமோட் ஹெலிகாப்டரில், ஸ்பெஷலா டிசைன் பண்ணின கேமராவைப் பொருத்தி, அதைப் பறக்கவெச்சுப் படம்பிடிப்பது.
இதனால் நேரமும் மிச்சம்; செலவும் குறைவு. நாமே ஹெலிகேம் செய்வோம்னு அதுக்கான பொருட்களைத் தேடினேன். அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மன், சீனா-னு அலைஞ்சு தேவையான பொருட்கள் வாங்கி அசெம்பிள் பண்ணி ஹெலிகேமை உருவாக்கினேன்.
'நண்பன்’ படத்தில் விஜய் ஒரு கேமராவை செட் பண்ணிப் பறக்கவிடுவாரே, அதுக்குப் பேர் 'மல்ட்டி ரோட்டர்’. அதுல கேனான்-5ஞி மாதிரி சின்ன கேமராவை செட் பண்ணலாம். ஆனா, நாங்க பயன்படுத்தும் ஸ்பெஷல் டிசைன் கேமராவுக்கு ஹெலிகேம்தான் செட் ஆகும். 'நண்பன்’ படத்தில் ஒரு சீனுக்காக எட்டு அடி உயரமும், 50 கிலோ எடையும் உள்ள பெரிய ஹெலிகாப்டர் கேமராவைப் பயன்படுத்தினேன். கிட்டத்தட்ட மினி ஹெலிகாப்டர் அது. அந்த மாதிரி பெரிய ஹெலிகேம் பண்ணும்போது ரிஸ்க் ஜாஸ்தி. ஆர்ட்டிஸ்ட் பக்கத்தில் இருந்து கிளம்பி, மேலே பறக்கும்போதோ அல்லது மேலே இருந்து கீழே இறங்கும்போதோ ஆர்ட்டிஸ்ட் மேல மோதுறதுக்கோ, காயம் ஏற்படுறதுக்கோ வாய்ப்பு இருக்கு. அதனால் அதுக்கு மாற்றா ஃப்ளை கேமராவை உருவாக்கி இருக்கேன். 'சூது கவ்வும்’ படத்தில் பணப்பையைத் திருடும் ஹெலிகாப்டர் ஃப்ளை கேமரா டைப்தான். அதில் ரிஸ்க் ரொம்பக் கம்மி. இன்றைய ஸ்டார்கள் ஃப்ளைகேம் வெச்சு ஷூட் பண்ண ரொம்பவே ஆர்வம் காட்டுறாங்க. ஏன்னா, அதுல ஷூட் பண்ணிப் பார்த்தா, பார்க்க பிரமிப்பா இருக்கும்.
விஜய் நடிக்கும் 'ஜில்லா’ ஷூட்டிங் போயிருந்தேன். விஜய் வீடு செட் போட்டிருந்தாங்க. அந்த வீட்டில் இருக்கும் ஜன்னல் வழியா ஃப்ளைகேமை உள்ள கொண்டுவந்து கிச்சன், ஹால், பூஜை ரூம்னு எல்லாத்தையும் ஒரே டேக்ல ஷூட் பண்ணிக் காட்டினேன். விஜய், மோகன்லால் ரெண்டு பேரும் அசந்துட்டாங்க. படத்தோட டைரக்டர் நேசன், 'படத்தோட க்ளைமாக்ஸ்ல உங்களுக்கு நிறைய வேலை இருக்கும்’னு கட்டிப்பிடிச்சுட்டார்.
நடிகர் அஜித், எனக்கு 'தீனா’ பட சமயமே பழக்கம். ஸ்கூல் லீவு விட்டா பசங்க கிரிக்கெட் விளையாடக் கிளம்புற மாதிரி, ஷூட்டிங் இல்லைன்னா நாங்க ரெண்டு பேரும் வீட்ல சொல்லிக்காம அச்சரப்பாக்கம் ரன்வேயில் ஏரோ மாடலிங் பண்ணக் கிளம்பிடுவோம். ரெண்டு பேர் வீட்லயும் செம திட்டு விழும். கண்டுக்கவே மாட்டோம்.
அஜித் நடிக்கிற 'வீரம்’ படத்துல செம  ட்ரெயின் ஃபைட் ஒண்ணு இருக்கு. ஒடிஸா மாநிலம் ராயகடாவில் பத்து நாட்கள் ஷூட் பண்ணினோம். படுவேகமாகப் போகும் ரயில் மேல் அஜித் சண்டை போட, ஃப்ளைகேம் சுத்திச் சுத்திப் படம் பிடிச்சது. அந்தச் சண்டைக் காட்சியை ரஷ் போட்டுப் பார்த்தபோது அஜித் கண்ணில் கண்ணீரே வந்துடுச்சு. 'நான் ஃபைட்ல எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கேன். அதெல்லாம் வெளியே தெரிஞ்சதே இல்லை. இதுல ஃபைட் சீனைப் பார்க்கிறப்ப பிரமிப்பா இருக்கு’னு சிலாகிச்சார். அப்புறம் என்ன... அன்னைக்கு ராத்திரி அவர் செலவில் தல பார்ட்டிதான்'' என கலகலவெனச் சிரிக்கிறார் அரவிந்த்.

Saturday, October 5, 2013

iOS 7 Vs ஆண்ட்ராயிட்



ன்றைய டிரெண்டில், ஸ்மார்ட் போன் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் என்றாகிவிட்டது! இதில் ஸ்மார்ட்போன்களில் 'ஏ ஸ்டார்’ அந்தஸ்துகொண்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன்களை, 'ஐ.ஓ.எஸ்.’ எனும் ஆபரேட்டிங் சிஸ்டம் இயக்குகிறது. சாம்சங், சோனி, எல்.ஜி, மோட்டரோலா தொடங்கி 23 நிறுவனங்களின் செல்போன்களை இயக்கும் ஆண்ட்ராய்ட் மென்பொருள்தான் சுமார் 100 கோடி மொபைல் போன்களை இயக்குகிறது.
இந்த நிலையில் ஆப்பிள் தனது புதிய 'ஐ.ஓ.எஸ்-7’ என்ற மென்பொருளை வெளியிட்டு இருக்கிறது. 'இது ஆண்ட்ராய்டின் 'அட்ட காப்பி'' என்கிறார்கள் ஆண்ட்ராய்ட் ரசிகர்கள். அவர்களின் கோபத்தில் கொஞ்சம் உண்மையும் இருக்கிறது.
தமிழுக்கு முக்கியத்துவம்!
இனி, ஐ-போன்களில் நேரடியாக தமிழிலேயே டைப் செய்துகொள்ளும் வசதியை அளித்திருக்கிறது ஐ.ஓ.எஸ்-7 அப்டேட். ஆண்ட்ராய்டில், இன்னும் நேரடியாக தமிழில் டைப் செய்யும் வசதி இல்லை!
கன்ட்ரோல் சென்டர்!
செல்போனை 'ஏரோப்ளேன் மோடு’க்கு மாற்றும் விசை, வை-ஃபை, ப்ளுடூத், திரையின் ஒளி அளவைக் கட்டுப்படுத்தும் அம்சங்களை இனி தேடி அலையவேண்டியது இல்லை. கன்ட்ரோல் சென்டரிலேயே அவற்றைப் புகுத்திவிட்டது ஆப்பிள். தொடு திரையை கீழிருந்து மேலாக நகர்த்தினால் இந்தக் கன்ட்ரோல் சென்டர் திரை வரும். அதே போல் தொடு திரையை மேலிருந்து கீழாகத் தள்ளினால், புதிய மெயில், மிஸ்டு கால் மற்றும் பிற வசதிகளைக் காணலாம். இந்த வசதிகள் பல காலமாக ஆண்ட்ராய்டில் இருப்பதுதான்.
போட்டோ கேலரி!
ஐ-போனில் நீங்கள் க்ளிக்கும் படங்கள் தேதி வாரியாக, இடம்வாரியாக தானாகவே போட்டோ கேலரியில் பதிவாகும். இதனால் போட்டோக்களை போனில் தேடி எடுப்பது எளிது.
ஏர் ட்ராப்!
ஐ-போனில் புகைப்படங்களை ப்ளுடூத் மூலம் அனுப்ப முடியாது. ஆனால், ஐ-போன் டு ஐ-போன் படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப, ஏர் ட்ராப் வசதியைப் பயன்படுத்தலாம். ஆனால், இந்த ஏர் ட்ராப் வசதி ஐ-போன் 4ஷி மற்றும் ஐ-போன் 5 போன்ற மாடல்களில்தான் கிடைக்கும்.
ஸ்வைப்!
முன்பு ஐ-போனில் ஸ்வைப் செய்யவேண்டிய இடத்தில் அழுத்தினால் மட்டுமே போனை இயக்க முடியும். ஆனால், இப்போது ஆண்ட்ராய்ட் போன் போல எந்த இடத்தில் ஸ்வைப் செய்தாலும் திரை திறக்கும் வகையில் செட்டிங்ஸ் மாற்றி இருக்கிறார்கள்.
உண்மையிலேயே ஐ.ஓ.எஸ்-7 மிகவும் வேகமாக இயங்குகிறது. ஆனால், ஆண்ட்ராய்ட்டின் பல வசதி களை இதில் கொண்டுவந்திருப்பதைத் தாண்டி அசரடிக்கும் விஷயங்கள் இல்லை. அதேநேரம் ஆண்ட்ராய்ட் வசதிகளும் இந்த ஐ.ஓ.எஸ்.7-ல் முழுமையாக வரவில்லை. ஆண்ட்ராய்டில் நமக்குத் தேவையான அப்ளிகேஷன்களை கஸ்டமைஸ் செய்துகொள்ள முடியும். உதாரணத்துக்கு, கூகுள் க்ரோம் தேவைஇல்லை என்றால் மொஸில்லா ப்ரவுசரை வைத்துக்கொள்ளலாம். ஆனால், ஐ.ஓ.எஸ். 7-ல் ஆப்பிளின் சஃபாரியைத் தவிர வேறு ப்ரவுசரை வைக்க முடியாது. அதே போல் ஆண்ட்ராய்ட் போனில் ஹோம் ஸ்கிரீனை உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வடிவமைத்துக்கொள்ளலாம். ஆனால், ஆப்பிளில் அப்படிச் செய்ய முடியாது.
ஆக, நல்ல பேரும் இல்லாமல் கெட்டப் பேரும் இல்லாமல் தப்பித்து இருக்கிறது ஐ.ஓ.எஸ்-7. ஆனால், இனி ஆப்பிள் போன் 'ஒஸ்தி போன்’ என்று ஜம்பம் அடிக்க முடியாது. ஏனெனில், 5,000 ரூபாய் மொபைலில் இருக்கும் வசதிகள்தான் ஆப்பிளின் சமீபத்திய அப்டேட்டிலும் இடம் பிடித்திருக்கின்றன!

கூகுள் கிளாஸ்... உஷார்!



ணினிய சாதனங்கள், நம்மைச் சுற்றியும்... நம் மீது நகர்ந்தபடியும் இருக்கின்றன. கணினியாக நமக்கு முன் இருக்கும் மேசையில் இருந்து மடிக்கு நகர்ந்து, தற்சமயம் கைகளில் தவழும் அலைபேசி வரையிலான கணினியச் சாதனங்கள் நம் உடலின் மற்ற பாகங்களைப் பார்த்து நகர்ந்தபடியே இருக்கின்றன.
கை மணிக்கட்டில் கைக்கடிகாரம் போல அணிந்துகொள்பவை, இடுப்பில் பெல்ட் போல அணிந்துகொள்ளும் இணைய சாதனம்... என, மாதம் ஒரு சாதனம் வந்துகொண்டே இருக்கிறது. இவற்றில், இன்னும் வெளிவராத 'கூகிள் கிளாஸ்’ அதற்குள் உலகப் பிரசித்தம் அடைந்துவிட்டது. கண்களில் கண்ணாடி போல அணிந்துகொள்ளும் கூகுள் கிளாஸ் ஐடியாவைக் கட்டமைக்க, பிரமாண்டமான தொழில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது.
மேலோட்டமாகப் பார்த்தால், 'கூகுள் கிளாஸ்’ என்பது நம் கண்களுக்கு முன்னால், கேமரா சகிதமாக இருக்கும் ஓர் அலைபேசி அவ்வளவே! 'அது நல்லதுதானே... கையில் அலைபேசியை வைத்துப் பேசுவது, புகைப்படம் எடுப்பது போன்றவற்றை எளிதாகச் செய்ய முடியுமே’ என்ற எண்ணம் எழலாம். ஆனால், கூகுள் கிளாஸ் பயன்படுத்துவதில் உள்ள பாதுகாப்பு மற்றும் பிரைவசி பற்றிய சாத்தியக்கூறுகளைத்  தெளிவாகத் தெரிந்துகொண்டால், அந்த எண்ணம் மாறிவிடக்கூடும்.
முதலில் பிரைவசி பிரச்னைகள் சிலவற்றைப் பார்க்கலாம்.
கூகுள் கிளாஸின் மிக முக்கிய வசதியாக சொல்லப்படுவது, நம் கண்கள் எதை நோக்குகின்றனவோ, அதை கூகுள் கிளாஸும் கேமரா கொண்டு நோக்கும். நீங்கள் உங்களுக்கு முன் இருப்பவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது, உங்களுக்கு வலதுபுறமாக நடந்து செல்லும் மற்றொருவரைப் பார்த்தால், கூகுள் கிளாஸின் கேமரா பக்கவாட்டில் நடக்கும் நபரை ஸ்கேன் செய்து தகவல்கள் திரட்ட முனையும். இடதுபுறமாகச் செல்லும் பேருந்தை ஒரு கணம் பார்க்க முற்பட்டால், கூகுள் கிளாஸ், அந்தப் பேருந்தையும் ஸ்கேன் செய்து அதைப் பற்றிய தகவல்களைத் திரட்டி உங்களுக்கு அளிக்க முற்படும்.
கண் அசைவுகள், நமது உடல்மொழியின் முக்கிய அங்கம் என்பதுடன், மனநிலையைப் பிரதிபலிக்கக்கூடியது என்பதால், கூகுள் கிளாஸ் தொடர்ந்து கண் அசைவுகளைப் பதிவுசெய்துகொண்டே இருக்கும். 'அப்படிச் செய்வதன் மூலம் நமக்குத் தேவையான தகவல்களைத்தானே தருகிறது?’ என்ற கேள்வி எழலாம். அது மேலெழுந்தவாரியாகப் பார்ப்பதற்கு நன்மையாகத் தோன்றினாலும், இதன் மிகப் பெரிய சிக்கல், உங்களைப் பற்றியும், உங்களைச் சுற்றி இருப்பவற்றைப் பற்றியும் தகவல்களை தொடர்ந்து சேகரித்து, பதிவுசெய்யப்பட்டுக்கொண்டே இருக்கும். இது, 'இந்தியா போன்ற மக்கள்தொகை மிகுந்த நாட்டில் அத்தனை ஆரோக்கியமான அம்சமா?’ என்ற கேள்விக்கு, நிச்சயம் நாம் விரும்பும் பதில் கிடைக்காது!
உதாரணத்துக்கு, பல்லாவரத்தில் இருக்கும் சரவணன், தரமணியில் இருக்கும் அலுவலகத்துக்கு பேருந்தில் தினமும் செல்வதைப் பதிவுசெய்து வைத்துக்கொள்ளும் கூகுள் கிளாஸ், சரவணன் செல்லும் பாதையில் குறிப்பிட்ட தினத்தில் விபத்து நடந்து போக்குவரத்துத் தடைப்பட்டுவிட்டது என்றால், அவர் வீட்டைவிட்டுப் புறப்பட்டதும், 'ரயிலில் செல்வது நல்லது’ என ஆலோசனை கொடுக்கும். ரயில் நிலையத்துக்குச் செல்ல நடக்கும் பாதையையும் காட்டும்.
ரயிலில் எதிர்கொள்ளும் பக்கத்து வீட்டு ஷீலா முகத்தை ஸ்கேன் செய்து, சமூக வலைத்தளத்தில் அவரது புரொஃபைல் படித்து, 'ஷீலாவுக்கு இன்று பிறந்த நாள்... வாழ்த்துச் சொல்லு’ என்று சரவணனிடம் சொல்லும். இதெல்லாம் நல்லதுதானே என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், ஷீலாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்து மட்டும் சொன்னால் ஓ.கே.. ஷீலா, தன் பாய் ஃப்ரெண்டுடன் முந்தைய தினம் எடுத்த படங்களையோ, 'கேர்ள்ஸ் பார்ட்டி’யில் ரிலாக்ஸாக இருக்கும் படங்களையோ உங்கள் விழித்திரையில் திரையிட்டுக் காட்டினால்?
அதுவும், கூகிள் கிளாஸில் சாத்தியம்!
சரவணனைப் பற்றிய தகவல்களை கூகுள் கிளாஸ் மூலமாக, கூகுள் நிறுவனம் சேமித்து வைத்துக்கொள்வதை அவர் விரும்புவாரா என்பது ஒரு பக்கம். அவரைச் சுற்றி இருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் சரவணன் மூலம் தங்கள் பிரைவசி பறிபோவதை விரும்புவார்களா?
இந்த பிரைவசி பிரச்னை காரணமாக, கூகுள் கிளாஸில் இயங்கும்வண்ணம் தயாரிக்கப்பட்டு வரும் 'Glassware’ எனப்படும் பல்வேறு மென்பொருட்களுக்கு, முகத்தை ஸ்கேன் செய்து புரிந்துகொள்ளும் Facial Recognition என்ற வசதியைக் கொடுக்கமாட்டோம் என்று அறிவித்திருக்கிறது கூகுள். ஆனால் இத்தகைய அறிவிப்புகள் அனைத்தும், சந்தைப்படுத்துதலின்போது காற்றில் கரைந்துவிடும். அதுவும்போக, நம்மைப் பற்றிய தொடர் பதிவுகளே நிச்சயம் நம் பிரைவசிக்கு விடப்படும் மிகப் பெரிய சவால்தான்!
இதுபோக பிராக்டிகல் பிரச்னைகள் பல உள்ளன...
நீங்கள் பார்க்கும் இடங்களை எல்லாம் தொடர்ந்து பதிவுசெய்துகொண்டே இருப்பதால், கூகுள் கிளாஸை கவனமாகக் கையாள வேண்டியிருக்கும். நீங்கள் ஏ.டி.எம்-மிலோ, வங்கியின் வலைத்தளத்திலோ, இணையத்திலோ, என்ன கடவுச்சொல் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பார்த்து, அதைப் பயன்படுத்தி திருட இயலும்.
கூகிள் கிளாஸில் கண்களுக்கு மிக அருகில் ஒளித்திரையைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். இதனால் கண்களுக்கு வரும் பாதிப்பு பற்றிய பரிசோதனைகள் அதிக அளவில் நடத்தப்படாததால், இந்தப் பாதிப்பு எவ்வளவு இருக்கும் என்பது இப்போதைக்குக் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
ஆக, உங்களுக்கென்று எந்த ரகசியமும் இல்லாமல், எங்கேயும் எப்போதும் உங்கள் செயல்களை உலகம் உற்று நோக்கிக்கொண்டே இருக்கும் அபாயம் இருக்கிறது. நீங்கள் கூகுள் கிளாஸ் அணிந்திருந்தாலும், உங்களுக்கு அருகில் இருப்பவர் அதை அணிந்திருந்தாலும்!