Sunday, December 21, 2014

அந்த நாள்... - 6

முந்தைய நாள் உலைகளில் கொதித்த சாராயம், மறுநாள் சூளகிரி சுற்றுவட்டாரத்தைச் சுடுகாடு ஆக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை! தமிழ்நாடு - கர்நாடகா எல்லையை ஒட்டி, அன்றைய ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள சூளகிரி ஒன்றியத்தில், 16 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த விஷச் சாராய சாவுகள்... இரு மாநிலங்களையும் கதிகலங்கவைத்த கொடூரம்!
1998-ம் ஆண்டு நல்லகான கொத்தபள்ளி, சாமல்பள்ளம், பருவீதி, ஒசள்ளூர், குறும்புக்குட்டை, ஏனுசோனை, தின்னூர், கெட்டூர் கிராமங்களில் ஆண்-பெண் வித்தியாசம் இல்லாமல் குடல்வெந்து இறந்தவர்களாக அரசாங்கம் சொன்ன எண்ணிக்கை 50. ஆனால், விஷச் சாராயம் குடித்த உயிர்களின் எண்ணிக்கை  இன்னும் அதிகம்.
நல்லகான கொத்தபள்ளி கிராமத்தில் மட்டும் 18 பேர் பலியாகி இருந்தனர். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த கன்னியம்மாள், அந்த விஷச் சாராய சாவில் தன் கணவர் ராஜேந்திரனைப் பறிகொடுத்தவர்.
''அவருக்கு மூணு மனைவிங்க. மூத்தவங்க இறந்த பிறகு இரண்டாம் தாரமும் அப்புறம் என்னையும் கல்யாணம் பண்ணிக்கிட்டார். சம்பவம் நடந்தப்போ என் மூத்த பொண்ணுக்கு ரெண்டு வயசு. ரெண்டாவது குழந்தை மீனாட்சி பிறந்து 22 நாள் ஆகியிருந்துச்சு. வழக்கம்போல அன்னைக்கு அவர் சாராயம் குடிச்சிட்டு வந்து சலம்பிட்டே தூங்கிட்டாரு.
காலையில் ரொம்ப நேரமா எந்திரிக்கல. மெதுவா எந்திரிச்சவரு, 'அய்யோ... எனக்குக் கண்ணு தெரியலை’னுதான் முதல்ல குரல்கொடுத்தாரு. என்ன ஏதுன்னே புரியலை. கொஞ்ச நேரத்துல 'வயிறு வலிக்குது’னு துடிச்சாரு. ஓசூர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனோம். அங்கே என்ன ஏதுனு விசாரிச்சுட்டு இருந்தப்பவே, எங்க ஊர்க்காரங்க சிலர் அதேமாதிரி 'கண்ணு தெரியலை... வயிறு எரியுது’னு வரிசையா வந்தாங்க. உடனே சுதாரிச்சுட்டு, 'சாராயம் குடிச்சீங்களா, ஊர்ல எத்தனை பேர் குடிச்சாங்க?’னு கேட்டாங்க. திமுதிமுனு அந்த இடமே  கலவரமாப்போச்சு. என் புருஷன் வயித்துவலி தாங்காமத் துடிதுடிச்சு மத்தியானம் செத்துட்டாரு. எங்க ஊர்ல இருந்து வந்தவங்களும் வரிசையா அடுத்தடுத்து செத்தாங்க. ஊரே பொணக்காடாப் போச்சு. தினம் குடிச்சாலும் ஒருநாள்கூட அவர் வேலைக்குப் போகாம இருந்தது இல்லை. இளநீர் வித்தோ, விவசாயக் கூலி வேலைபார்த்தோ எங்களைக் கௌரவமாப்  பார்த்துக்கிட்டாரு. அவர் இறந்துட்ட பிறகு கூலி வேலைக்குப் போய் என் ரெண்டு பொண்ணுங்களையும் படிக்கவெச்சேன். மூத்தவ ப்ளஸ் டூ; இளையவ ஒம்போதாப்பு வரை படிச்சாங்க. ரெண்டு பேருக்கும் மாப்பிள்ளை பார்க்கும்போது, 'படிக்கலைன்னாகூடப் பரவாயில்லை... குடிக்கக் கூடாது’னு சொன்னேன். தேடித் தேடி குடிக்காத மாப்பிள்ளைகளா புடிச்சேன். இப்போ என் பொண்ணுங்களைத் தங்கமாப் பார்த்துக்கிறாங்க. அதுதான் என் வாழ்க்கையில ஒரே நிம்மதி'' எனப் பெருமூச்சுடன் பெரும் சோகம் சொல்கிறார் கன்னியம்மாள்.
சூளகிரி ஒன்றியத்தில் உள்ள இரப்பன்பேல், எப்பளம் பகுதிகளில் உற்பத்தியாகும் சாராயம், ஏரியாவாரியாகப் பிரிக்கப்பட்டு  ஏஜென்ட்களுக்கு அனுப்பப்பட்டு விற்பனையாகி வந்தது. அதில் எப்பளம் பகுதியின் சாராயச் சக்கரவர்த்தி செல்வத்தின் சாராயத்துக்கு கிராக்கி அதிகம். செல்வத்தின் சாராயம் சூளகிரியையும் தாண்டி கிருஷ்ணகிரி, ஓசூர், பாலகோடு, தேன்கனிக்கோட்டை வரை பரந்து விரிந்து பாய்ந்தது. சப்ளையர்கள், அவர்களுக்குக் கீழே ஏஜென்ட்கள், சில்லறை வணிகர்கள், சாராய சப்ளைக்கு 53 மொபெட்டுகள், புல்லட்கள், சைக்கிள்கள், வாகனங்கள் நுழைய முடியாத மலைப் பகுதிகளுக்கு கழுதைகள்... எனத் தெளிவான திட்டங்களோடு இண்டு இடுக்குகளில் எல்லாம் சாராயத்தைச் சேர்த்திருந்தார்கள். கர்நாடகாவில் இருந்து வரும் கன்டெய்னர் லாரிகளில் முறைகேடாக பெட்ரோல், ஸ்பிரிட் எடுப்பது சாராய வியாபாரிகளின் வாடிக்கை. சாலையில் பழுதாகி நின்ற ஒரு வாகனத்தில் இருந்து,  35 லிட்டர் அளவுக்கு ஸ்பிரிட்டைத் திருடி சாராயம்  தயாரித்திருக்கிறார்கள். அதுதான் சூளகிரி பகுதியை அப்போது சுடுகாடு ஆக்கிவிட்டது.
''அன்னைக்கு நடந்தது இப்பவும் நல்லா ஞாபகம் இருக்கு. முதல் நாள் சாயங்காலம் சாராயம் குடிச்சிட்டு வந்த எங்க வீட்டுக்காரர் காலையில் எந்திரிக்கவே இல்லை. ஹெல்த் இன்ஸ்பெக்டர் வந்து, 'ஊர்ல யாராவது சாராயம் குடிச்சவங்க இருந்தீங்கன்னா, உடனே ஆஸ்பத்திரிக்குக் கிளம்புங்க. உங்க ஊர்ல சிலர் சாராயம் குடிச்சிச் செத்துப்போயிட்டாங்க’னு  அறிவிச்சாங்க. நான் உடனே என் புருஷனை எழுப்பி, 'அவருக்கு எதுவும் ஆகக் கூடாது’னு வேண்டிக்கிட்டே, ஓசூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவெச்சேன். டாக்டர் அவரைப் பரிசோதிச்சுட்டு 'குடல் வெந்துருச்சு. பிழைக்கிறது கஷ்டம்’னு சொல்லிட்டாங்க. சாயங்காலமே என் வீட்டுக்காரர் செத்துட்டார். அப்போ ஓசூர் ஆஸ்பத்திரியில எங்கே பார்த்தாலும் யாராவது ஒருத்தரை தரையில பொணமாப் போட்டுவெச்சிருந்தாங்க. பொண அறை முழுக்க நிறைஞ்சுபோச்சு'' என்று தன் கணவர் மரணம் அடைந்த துயரம் சொல்கிறார் சக்கரலம்மா.
''அப்போ ஒரு பாட்டில் குடிச்சவங்களுக்கு கண்ணு தெரியாமப்போய் சில மாசங்கள் இருந்து அப்புறம் செத்தாங்க. ரெண்டு பாட்டில் குடிச்சவங்க ஆஸ்பத்திரியில செத்தாங்க. மூணு பாட்டில் குடிச்சவங்க ராத்திரி படுத்து காலையில் எந்திரிக்கவே இல்லை. இப்படி இந்த ஊர்ல அன்னைக்கு சாராயம் குடிச்சவங்க யாரும், இப்போ உயிரோடு இல்லை. ஏன்னா, அது சாராயம் இல்லை... விஷம்; ஒவ்வொரு சொட்டும் விஷம்!'' என்று இன்றும் அன்றைய தவிப்புடன் பேசுகிறார் திம்மராயப்பா.  
''இந்த ஊர்ல மிலிட்டரி பெருமாள்னு ஒருத்தர் இருந்தார். அவர் மிலிட்டரியில் இருந்து ரிடையர்டு ஆன பிறகு, சாராயம் வாங்கி வித்தார். எங்க ஊருக்கு அவர்தான் சாராய ஏஜென்ட். சனம் முழுக்க அவர்கிட்டதான் சாராயம் வாங்கிக் குடிப்பாங்க. அன்னைக்கும் அவர்கிட்ட வாங்கிக் குடிச்சுத்தான் ஊரே செத்துச்சு. இதுல அவர் குடும்பமும் தப்பலை. அன்னைக்கு வித்த சாராயம் என்னைக்கும் இல்லாத ருசியா இருந்துச்சாம். 'ஏயப்பா... இன்னைக்கு சரக்கு சீக்கிரமே தீர்ந்திடும். இப்பவே கொஞ்சம் குடிச்சிக்கிடுங்க’னு சொல்லி அவர் மனைவி, மருமகள், மகன், மகள்னு மொத்தக் குடும்பத்தையும் குடிக்க வெச்சிருக்கார் பெருமாள். அவர் எதிர்பார்த்த மாதிரியே சாராயம் வேகமாக் காலியாகிருச்சு. ஆனா, பெருமாள் குடும்பத்தில் ஒருத்தர் பாக்கி இல்லாம, சாராயம் குடிச்ச எல்லாரும் இறந்துட்டாங்க!'' - அதிர்ச்சி கொடுக்கிறார்  திம்மராயப்பா.
தமிழகத்தின் வறண்ட பகுதிகளில் ஒன்று தருமபுரி மாவட்டம். தட்டுப்பாடின்றி ஒக்கேனக்கல் தண்ணீர் ஓடினாலும், தாழ்வான நிலத்தில் பாயும் அந்த வெள்ளத்தால், மேட்டுப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைப்பது இல்லை. கிருஷ்ணகிரியை ஒட்டிப் பாயும் தென்பெண்ணை ஆற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பியிருக்கிறது சூளகிரி ஒன்றியம். கனிம, குவாரிக் கொள்ளையர்கள் நிலத்தைக் குதறி எடுத்ததுபோக எஞ்சிய நிலத்தில் நடைபெறும் விவசாயத்தை நம்பியே இருக்கிறார்கள், பெரும்பாலான விவசாயக் கூலிகள்!
விஷச் சாராய சாவு வழக்கில் செல்வம் உள்பட 28 பேர் கைதுசெய்யப்பட்டார்கள். பல வருடங்கள் வழக்கு நடந்தது. எனினும் செல்வம் உள்பட ஒருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.  சாட்சியங்களை வலுப்படுத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்கும்விதமாக அரசு தரப்பு நடந்துகொள்ளாததன் விளைவாக உண்மை 'ஊத்தி’ மூடப்பட்டது!  
''பல கிராமங்களில் சாராயம் குடிச்சவங்க செத்துப்போறாங்கன்னு தகவல் வந்ததும் எங்க ஊர்லயும் தண்டோரா போட்டுச் சொன்னாங்க. வீடு வீடாப் போய் சாராயம் குடிச்சவங்களைத் தேடினப்போ, பலரும் செத்துக்கிடந்தாங்க. அப்போ ஆம்புலன்ஸ் கிடையாது. இவ்வளவு பேர் சாகிறதுக்கு அதுவும் ஒரு காரணம். எப்பவாது வரும் கவெர்மென்ட் பஸ்ஸில் ஏறித்தான் ஓசூர் போகணும். அப்படிச் சிலரை பஸ்ஸில் ஏத்தி ஓசூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்புனோம். ஆனா, பஸ் ஓசூருக்குப் போறதுக்கு முன்னாடியே பலரும் இறந்துட்டாங்க. பஸ்ஸை அப்படியே மார்ச்சுவரிக்குத்தான் ஓட்டிட்டுப் போனாங்க!'' என்கிறார் கெண்டப்பா.
அன்று சாராயம் குடித்தவர்களில் மிஞ்சியிருக்கும் வெகுசிலரில் பருவீதி வெங்கட்ராஜும் ஒருவர். உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், மாலையில் இவருக்குக் கண்கள் தெரியாது.
''எனக்கு டீ காபி குடிக்கிற பழக்கம்கூட இல்லைங்க. ஆனால், சாயங்காலத்துல கொஞ்சம் சாராயம் குடிப்பேன். அன்னைக்கு ஒரு பாட்டில் சாராயம்தான் குடிச்சேன். அதுக்கே 15 நாள் ஆஸ்பத்திரியில் என்னை வெச்சிருந்தாங்க. என்னென்னமோ மருந்து எல்லாம் கொடுத்தும் கண் பார்வை மட்டும் பாதிச்சிருச்சு. சாயங்காலத்துல ரெண்டு கண்களும் தெரியாது. பலர் என்னை மாதிரி கண்ணு தெரியாம இருந்து கொஞ்ச நாட்கள்ல செத்துப்போனாங்க. இப்ப நான் சாராயம் குடிக்கிறது இல்லை. ஆனா, டாஸ்மாக் குவாட்டர் குடிக்கிறேன்!'' எனச் சிரிக்கிறார் வெங்கட்ராஜ்.
ஒவ்வோர் ஊரிலும் கணக்கில் வராத மரணங்களின் எண்ணிக்கை அதிகம். கிராமங்களில் விஷச் சாராயத்தால் சாவு எனத் தெரியாமலே பலரைப் புதைத்தார்கள். குறிப்பாக, சாராயம் குடித்து இறந்த பல பெண்களை, அவர்களது குடும்பத்தினர் போலீஸுக்குத் தகவல் தெரிவிக்காமலே புதைத்தார்கள். ஆனால், இறந்த ஒவ்வொரு நபருக்கும் தலா 10,000 ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டதும், பிணங்களைத் தோண்டி எடுத்து 'சாராயத்தால் சாவு’ எனச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதில் பல பிணங்கள் கணக்கில் சேரவே இல்லை!
    
16 ஆண்டுகளுக்குப் பிறகு சூளகிரி பகுதி  இப்போது எப்படி இருக்கிறது?
அன்றே கொன்ற விஷச் சாராயத்தின் இடத்தை, 'நின்றுகொல்லும் டாஸ்மாக்’ கைப்பற்றியிருக்கிறது. நிஜ நிலவரம் சொல்கிறார் சமூக ஆர்வலர் முருகேசன்.
''1998-ம் ஆண்டு விஷச் சாராய சாவில் இறந்தவங்க பெரும்பாலும் எழுதப் படிக்கத் தெரியாத ஏழைங்க. அதனால அவங்களுக்கு நிதியும் கிடைக்கலை; நீதியும் கிடைக்கலை. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு இந்தப் பகுதியில் வெளிப்படையான சாராய வியாபாரம் இல்லை. ஆனா, மெதுமெதுவா தெருவுக்குத் தெரு டாஸ்மாக் திறந்துட்டாங்க. சமீபத்தில்கூட சிலர் டாஸ்மாக்ல குடிச்சி சுருண்டு விழுந்து செத்துப்போனாங்க. காரணம், கடத்திக் கொண்டுவரப்படும் போலி மதுபான பாட்டில்கள். இந்தப் பகுதி கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளான தண்ணீர், கழிப்பிடம், பள்ளி போன்றவை  கேட்டு பல ஆண்டுகளாகப் போராடிட்டு இருக்கோம். ஆனா, அதையெல்லாம் யாரும் கண்டுக்கவே இல்லை. சாராயத்தை மட்டும் திகட்டத் திகட்ட ஊட்டுறாங்க!'' - முருகேசன் சொல்லிமுடிக்கும் சமயம், மாலை பரபரப்புக்கான எதிர்பார்ப்புடன் மினுங்கி மினுங்கி எரியத் தொடங்குகிறது உள்ளூர் டாஸ்மாக்கின் தட்டி விளக்கு!

''இன்று தக்காளி வியாபாரம் மட்டும்தான்!''
16 ஆண்டுகளுக்கு முன்பு சாராய வியாபாரியாக இருந்த 'சாராய செல்வம்’, இப்போது சூளகிரி ஏரியாவின் தக்காளி சப்ளையர். ஓசூர் பிரதான சாலையில் பிரமாண்ட தக்காளி மண்டி நடத்திவருகிறார் செல்வம். வெள்ளை வேட்டி, சட்டை, கழுத்தில் கொத்தாகத் தொங்கும் தங்கச் சங்கிலிகளும், கை விரலில் டாலடிக்கும் மெகா சைஸ் 'அம்மா’ மோதிரம், சுற்றி நிற்கும் ரத்தத்தின் ரத்தங்கள்... என அரசியலில் அலேக் வளர்ச்சி செல்வத்துக்கு.  
''என்னைப் பத்தி ஊருக்குள்ள விசாரிச்சுட்டு இருந்தீங்களாமே... என்கிட்டயே கேட்டிருக்கலாமே!'' என்று உற்சாகமாக வரவேற்றார். ''அப்போ எனக்குக்  கல்யாணம் ஆன புதுசு. கல்யாண களையில யாவாரத்தைச் சரியாக் கண்டுக்கலை. 'செல்வத்தை ஒழிக்க இதுதான் சமயம்’னு எவனோ காய்ச்சின சாராயத்தைக் குடிச்சு மக்கள் செத்துப்போன பழியை என் மேல போட்டுட்டாங்க. 13 மாசம் ஜெயிலில் இருந்தேன். 300 சாட்சிகளோடு வழக்கு நடந்தப்போ, 50 பேர் வரைக்கும் செத்துப்போயிட்டாங்க. மிச்சம் இருந்த 250 பேரில் ஒருத்தர்கூட, எனக்கு எதிரா சாட்சி சொல்லலை. நான் அந்த மக்களுக்குக் கெடுதல் பண்ணலை. அதனாலதான் நீதிமன்றம் என்னை விடுதலை பண்ணிச்சு. அதே மக்கள்தான் என்னை ஏனுசோனை பஞ்சாயத்துத் தலைவர் ஆக்குனாங்க. அடுத்து ஏனுசோனையைவிட பெரிய
பஞ்சாயத்தான சென்னப்பள்ளியில் போட்டியிட்டு அமோகமா ஜெயிச்சேன். எந்த சனங்களைக் கொன்னேன்னு என்னை ஜெயில்ல போட்டாங்களோ, அதே சனங்கதான் எனக்கு ஓட்டு போட்டாங்க. இப்பவும் சொல்றேன்... இந்த வேப்பனப்பள்ளி தொகுதியில் எனக்கு ஸீட் கொடுத்தா, நான் நிச்சயம் ஜெயிப்பேன். ஏன்னா, சுத்தியுள்ள 42 பஞ்சாயத்துகளிலும் என்னைக் கேட்காம ஒரு ஈ, காக்காகூட நுழைய முடியாது. எனக்கு அரசியல் செல்வாக்கு எல்லாம் கிடையாது. மக்கள் செல்வாக்கு மட்டும்தான்!'' எனப் பெருமிதமாகச் சொல்கிறார் இந்த முன்னாள் சாம்ராட்!

- Vikatan

அந்த நாள்... - 5

- Vikatan Article

அந்த நாள்... - 5
டி.அருள் எழிலன், படங்கள்: எல்.ராஜேந்திரன்
ந்த நாள், இந்தியாவையே அலற வைத்தது!
திருநெல்வேலி மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமம் மீனாட்சிபுரம். அங்கு வாழ்ந்த 300 குடும்பங்களில் 210 குடும்பத்தினர் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறினார்கள். 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி, ஒரு குட்டிக் கிராமமே மதம் மாற, 'இந்து மதத்துக்கு ஆபத்து’ என டெல்லி வரை பற்றிக்கொண்டது பரபரப்பு!
அப்போது மத்தியில் இந்திரா காந்தியின் ஆட்சி; தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி. 'சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா எதிர்கொண்ட மிகப் பெரிய இக்கட்டு இது’ எனக் குரல்கள் எழ, மத்திய உள்துறை அமைச்சர் யோகேந்திர மக்வானா உடனடியாக மீனாட்சிபுரத்துக்கு விரைந்தார். பா.ஜ.க தலைவர் வாஜ்பாயும் மீனாட்சிபுரத்துக்குப் பறந்தோடி வந்தார். தமிழகச் செய்தித் துறை மற்றும் இந்துசமய அறநிலைத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் வந்தார். மதம் மாறிய மக்களுக்கு மத்திய அமைச்சர் மக்வானா தைரியம் சொன்னார். 'மீண்டும் இந்து மதத்துக்குத் திரும்பிவிடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார் வாஜ்பாய். ஆர்.எம்.வீரப்பன் விழிபிதுங்கி நின்றார். அனைவருக்கும் மௌனத்தையே பதிலாகத் தந்தனர் மீனாட்சிபுரம் முஸ்லிம்கள்!
இப்போதும் அரசு ஆவணங்களிலும் இந்துக்களிடமும் அந்தக் கிராமத்துக்கு 'மீனாட்சிபுரம்’ என்பதுதான் அடையாளம். ஆனால், உள்ளூர் முஸ்லிம்களுக்கு அது ரஹ்மத் நகர். பெயரும் மதமும்தான் வித்தியாசமே தவிர, உள்ளூர் மக்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்போல பிணைந்து கிடக்கின்றனர். பாபர் மசூதி தகர்ப்பு இந்தியாவின் பல இடங்களில் இந்து-முஸ்லிம்கள் இடையே கலவரத்தை உண்டாக்கியபோதும், மீனாட்சிபுரம் மக்களிடையே சின்ன சலசலப்புகூட இல்லை!
மீனாட்சிபுரம் மக்கள் மதம் மாற என்ன காரணம்?
67 வயதைத் தொடும் உமர் ஷெரிஃபின் பழைய பெயர் துரைராஜ். அன்றைக்கு நடந்த மதமாற்றத்தை முன்னின்று நடத்திய இவர், அந்த நாட்களை நினைவுகூர்கிறார்...
''நாங்க ஏன் இஸ்லாத்தை தழுவினோம் என்பதற்கு ஒவ்வொருத்தரும் வெவ்வேறு கதைகட்டிவிட்டார்கள். ஆனா, அப்போ என்ன நடந்தது என்பதற்கு சாட்சி நாங்கள் மட்டுமே. 'ஒரு சாதாரண கிராமத்து மக்கள் சேர்ந்து இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்களே’னு  பரபரப்பாயிருச்சு. 'ஏன் மாறுனீங்க, வளைகுடாவில் இருந்து பணம் வந்துச்சா?’னுலாம் கேட்டாங்க.  நாங்க பிரியாணிக்கு ஆசைப்பட்டு மதம் மாறிட்டோம்னு பலரும் அவதூறு பரப்பினாங்க. அது எதுவும் உண்மை இல்லை. நான் ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல பி.ஏ வரை படிச்சேன். வெள்ளை வேட்டி, சட்டைதான் கட்டுவேன். நாங்க நல்ல வசதிதான். ஆனா, என்னதான் சுத்தமா துணிமணி உடுத்தினாலும், காலேஜுக்குப் போய்ப் படிச்சாலும் நான் ஒரு தாழ்த்தப்பட்டவன்கிறதால எனக்கு ஊருக்குள்ள எந்த மரியாதையும் இல்லை; சுதந்திரமா நடக்க முடியலை. உயர் சாதிக்காரர் குடிக்கிற அதே கிளாஸில் டீ குடிக்க முடியாது. அவர் குடுக்கும் காசைத்தான் நாங்களும் குடுப்போம். ஆனா, எங்களுக்கு வாழை இலையில் டீ ஊத்திக் குடுப்பாங்க. 'ஏன் இப்படி?’னு எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாது. வாழ்ந்தா கௌரவமா, சுயமரியாதையோட வாழணும்னு தோணிட்டே இருந்துச்சு. சொத்துபத்து இல்லைன்னா,  கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாரிச்சுக்கலாம். ஆனா, மரியாதையை எங்கே போய் வாங்குறது? அதான் மானத்தோட வாழணும்னு முடிவு பண்ணி, நாங்க மொத்தமா மதம் மாறினோம்!'' - தோள் துண்டை சரிசெய்தபடி தொடர்கிறார் உமர் ஷெரிஃப்.
''நாமதான் நம்மளை இந்துனு சொல்லிக்கிறோம். ஆனா, உயர்சாதிக்காரர்கள் 'பள்ளப் பய, அரிஜன்’னுதான் சொல்வார்கள். இப்போ நாம மதம் மாறினா கொஞ்சம் வருஷம் கழிச்சு நம்ம சந்ததியாவது, அந்தக் கொடுமையில் இருந்து தப்பிப்பாங்கனு முடிவு எடுத்தோம். கொஞ்சம் பேர் கூடி ஒவ்வொரு வீடாப் போய் 'இந்து மதத்தின் 'பள்ளர்’ என்ற பிரிவில் இருந்து நாங்களாக விரும்பி மனமுவந்து இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறுகிறோம்’னு விருப்பக் கையெழுத்து வாங்கி மதம் மாறினோம். 'மதம் மாறணுங்க’னு நாங்க யாரையும் வற்புறுத்தலை. 'மதம் மாறி என்னத்தைக் கண்டிய?’னு இப்பவும் சிலர் கேக்கிறாங்க. படிச்ச படிப்புக்கும், பாக்குற உத்தியோகத்துக்கும் அதை எல்லாம்விட மனுஷனா இருக்கிறதுக்குமான மரியாதை கிடைச்சிருக்கு. அப்போலாம் நம்மளைவிட சின்ன வயசுக்காரனா இருப்பான்... ஆனா 'ஏலே’னுதான் கூப்பிடுவான். இப்போ, 'வாங்க பாய்... உக்காருங்க’னு சொல்றான். மதம் மாறுனதால கிடைச்ச  மரியாதை இது. ஆனா, இந்த நினைப்பெல்லாம்கூட என் சந்ததியோடு முடிஞ்சுபோயிரும். அடுத்தடுத்து வர்றவனுக்கு இதெல்லாம் தெரியாது. பார்த்தீங்கன்னா... எங்க குடும்பங்களில் மாமன் முஸ்லிமா இருப்பான். மச்சான் இந்துவா இருப்பான். அப்பன் முஸ்லிமா இருப்பான். பிள்ளை இந்துவா இருப்பான். மதம் எங்களைப் பிரிக்கவும் இல்லை; குழப்பத்தையும் உண்டாக்கலை. எல்லாரும் அண்ணன் தம்பியா ஒற்றுமையா வாழ்றோம்!'' - அப்போது எடுத்த முடிவு சரியானதுதான் என்பதை இப்போதும் தீர்க்கமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார் உமர்.
மீனாட்சிபுரம் மதமாற்றம் கொளுத்திய நெருப்புதான், தமிழகத்தில் வேறு பல கொந்தளிப்புகளுக்குக் காரணமானது; இந்து எழுச்சி மாநாடுகள் அதிகம் நடத்தவும் காரணமானது. 1982-ல் அதுதான் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் விழாவில் கலவரமாக மாறி, 15 நாட்கள் குமரி மாவட்டத்தை கலவர பூமியாக மாற்றியது. அதுவரை அண்ணன் தம்பிகளாகப் பழகிவந்த இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மோதிக்கொள்ள, காணாமல்போனவர்கள், கொல்லப்பட்டவர்கள் என டஜன் கணக்கில் உயிர்களைப் பலிவாங்கியது அந்தக் கலவரம். ஆனால், அதோடு முடியவில்லை. மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு, அதுவும் களேபரமாகி ஓய்ந்தது. ஆனால், அப்போதும்கூட மீனாட்சிபுரத்தில் சின்னச் சண்டை சச்சரவுகூட இல்லை.  
மீனாட்சிபுரத்தில் பல ஆண்டுகளாகவே தாழ்த்தப்பட்டவர்கள் மீதான அடக்குமுறை நிலவினாலும், ஒட்டுமொத்தமாக மதம் மாறத் தூண்டியதற்கு பின்னணியில் ஒரு காதல் இருக்கிறது! அந்தக் கதையைச் சொல்கிறார் உமர் ஃபரூக்.
''அப்போ தங்கராஜ்னு ஒரு அண்ணன் இருந்தார். அவர் மேக்கரை கிராமத்தில் சாதி இந்து பொண்ணைக் காதலிச்சார். அவங்க ரெண்டு பேரும் ஊரைவிட்டு ஓடிவந்தப்போ,  பெரிய பிரச்னை ஆயிருச்சு. தங்கராஜ் ஊருக்குள்ள அடைக்கலம் தேடினப்போ, 'நீங்க முஸ்லிமா மதம் மாறிடுங்க. உங்க ரெண்டு பேரின் சாதியும் அழிஞ்சிரும்’னு சொன்னாங்க. உடனே அவர் கேரளாவில் இருக்கிற பொன்னானிக்குப் போய் தன் பேரை 'யூசுஃப்’னு மாத்திக்கிட்டு இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினார். அதுக்குப் பிறகு மேக்கரையில் நடந்த சில சம்பவங்களில் போலீஸ் வேணும்னே மீனாட்சிபுரம் மக்களையும் யூசுஃப்பையும் துன்புறுத்தினாங்க. அதுதான் நாங்க கூட்டம் கூட்டமா மதம் மாறக் காரணம். தாழ்த்தப்பட்டவங்களா இந்து மதத்தில் இருந்து தினம் தினம் கொடுமையை அனுபவிக்கிறதுக்கு, நம்ம அடையாளத்தையே மாத்திக்கிலாம்னுதான் அந்த முடிவை எடுத்தோம். வீட்ல இருந்து செருப்பு போட்டுட்டு கிளம்புற நாங்க, ஊருக்குள்ள சில இடங்களுக்குப் போகும்போது மட்டும் அந்தச் செருப்பை கையில் தூக்கிக்கணும். 'தாழ்த்தப்பட்டவன் இந்த வேலைகளைத்தான் செய்யணும், இப்படித்தான் வாழணும், இப்படித்தான் உடுத்தணும்’னு அவங்க எதிர்பார்ப்புக்கு நாங்க எப்படி வாழ முடியும்? அதான் மதம் மாறிட்டோம். அப்போ இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவ பல ஜமாத்களைத் தொடர்புகொண்டோம். அவங்க சரியா ஒத்துழைக்கல. கடைசியா திருநெல்வேலியில் போய் பதிவு பண்ணோம். அவங்க 'கலிமா’ சொல்லிக்கொடுத்து மாத்தினாங்க. இஸ்லாத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடு இல்லை. எல்லோருமே மனுஷங்க... அவ்வளவுதான்!''  
தலித்களாக இருந்து மதம் மாறியவர்களின் சமூக அந்தஸ்து மேம்பட்டிருந்தாலும் தங்களை அந்த மதத்துக்குள்ளேயே சமமாக ஒருசிலர் ஏற்றுக்கொள்வது இல்லை என்ற குறை, அவர்களுக்கு உள்ளது. அதுபோல இஸ்லாம் தழுவிய சிலர் மீண்டும் இந்து மதத்துக்கே திரும்பியும் இருக்கிறார்கள். ஆனால், அது சுமுகமாகவே நடக்கிறது. 1981-ல் இஸ்லாம் தழுவிய ஆறுமுகச் சாமி தன் பெயரை ரஹ்மான் கான் என மாற்றிக்கொண்டார். ரஹ்மான் கான் மீண்டும் 2009-ல் இந்து மதத்துக்குத் திரும்பி ஆறுமுகச் சாமி ஆகிவிட்டார். அவருடைய வாக்குமூலம் மதமாற்ற வரலாற்றை இன்னொரு பார்வையில் பதிவுசெய்கிறது.
''நான் மதம் மாறினப்போ என் மகன்கள் அன்னராசு, ராமச்சந்திரன்... ரெண்டு பேரும் சின்னப் பசங்க. அதனால் அவங்களை நான் மதம் மாத்தலை. வளர்ந்து ஆளாகி அவங்களா  விரும்பினால் மாறிக்கட்டும்னு விட்டுட்டேன். இப்போ அன்னராசு, ரயில்வேயில் வேலை பார்க்கிறான். ராமச்சந்திரன், வெளிநாட்டில் இருக்கான். சில வருஷம் முன்னாடி, 'நீங்களும் இஸ்லாத்துக்கு மாறுறீங்களா?’னு கேட்டேன். அப்போ அதை மறுத்து அவங்க சொன்ன பதில் எனக்கு நியாயமாத் தெரிஞ்சது. 'உன்னை ஒரு சாதி இந்து அடிச்சா, நீ வாங்கிட்டுப் பேசாமப் போனது அந்தக் காலம். ஆனா, இப்போ நிலவரம் அப்படி இல்லை. யாரும் யாரையும் அடக்க முடியாது; அதிகாரம் பண்ண முடியாது. மீறி என்னை ஒருத்தன் அடிச்சா, அவனை நான் ரெண்டு அடி திருப்பி அடிப்பேன். எங்க வாழ்க்கையை நாங்க வாழ்ந்துக்கிறோம்’னு சொல்லிட்டாங்க. இன்றைய இளைஞர்களின் மனநிலை இப்படித்தான் இருக்கு. அதுக்காக இந்து மதத்தில் தீண்டாமை ஒழிஞ்சிருச்சுனு அர்த்தம் இல்லை. அதுக்கு எதிரான போராட்டம் தீவிரமாகிடுச்சுனு எடுத்துக்கலாம். கடந்த கால் நூற்றாண்டில், தாழ்த்தப்பட்டவரா இருந்து முஸ்லிமா மாறியவர் வாழ்வில் எப்படி மாற்றங்கள் வந்திருக்கோ, அதேபோல தாழ்த்தப்பட்டவர் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஆரம்பிச்சிருக்கு. இதையெல்லாம் உணர்ந்த நான், 'ஒரே குடும்பத்தில் அப்பாவும் பிள்ளைகளும் ஆளுக்கு ஒரு மதத்தில் இருக்க வேண்டாம்’னு நினைச்சுத்தான் இந்து மதத்துக்குத் திரும்பிட்டேன். மற்றபடி மரியாதையிலோ, வழிபடும் சுதந்திரத்திலோ இஸ்லாம் மார்க்கம் எனக்கு எந்தக் குறையும் வைக்கலை!'' என்கிறார் ஆறுமுகச் சாமி.
மீனாட்சிபுரம் கிராமத்தின் காளி கோயில் கொடைக்கு இஸ்லாமியர்கள் வருவதும், மசூதி விழாக்களில் இந்துக்கள் பங்கேற்பதுமாக, மதத்தை முன்னிட்டு இதுநாள் வரை மீனாட்சிபுரத்தில் எந்தச் சச்சரவுகளும் இல்லை. ஊர் நிர்வாகச் செலவுகளைக்கூட பரஸ்பரம் ஜமாத்திலும், கோயில் கமிட்டியிலுமாகப் பங்கிட்டுக்கொள்கிறார்கள்.
'பட்டியல் சாதியினர் ரொட்டிக்காகவும் மீனுக்காகவும் போராடுகின்றனர்; மதம் மாறுகின்றனர் எனச் சொல்வது கடைந்தெடுத்த முட்டாள்தனம். இந்த நாடு பின்பற்றவேண்டிய சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துக்காக அவர்கள் போராடுகிறார்கள்!’ என்றார் அண்ணல் அம்பேத்கர். மீனாட்சிபுரம் அனுபவம் இன்றும் உணர்த்துவது அதைத்தான்!

அந்த நாள்... - 4

- Vikatan Article

'பாவ மன்னிப்பு’... 1961-ம் ஆண்டு இயக்குநர் பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த படம். கோடீஸ்வரன் ஆளவந்தான் வீட்டில் ராமுவாகப் பிறந்து, ஏழை முஸ்லிம் வீட்டில் ரஹீமாக வளரும் கதாபாத்திரத்தில் நடித்த சிவாஜி கணேசனின் மாஸ்டர் பீஸ்!
1979-ம் வருடம் தூத்துக்குடி, லூர்து அம்மாள்புரத்தின் லட்சுமி டூரிங் டாக்கீஸில் 'பாவ மன்னிப்பு’ திரையிடப்பட்டது. ஜூலை மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமையின் மதியக் காட்சி அது. படம் திரையில் ஒளிர்ந்துகொண்டிருந்தபோது, அந்த ஓலைக்கொட்டகைத் திரையரங்கு மீது சிதறி விழுந்த சிறு நெருப்புப் பொறி படபடவென பற்றியெரிந்து 115 உயிர்களைச் சுட்டுப் பொசுக்கியது. சுழன்று வீசிய பொட்டல் காற்று அடங்கிய பின்னர், குவியல் குவியலாகக்  கிடந்த பிணங்களை அள்ளிப்போட மட்டுமே முடிந்தது தீயணைப்புத் துறையால். அந்தத் திரையரங்கத் தீ விபத்தில் இறந்தவர்கள் அனைவரும், தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த ஏழைகள். தீ தின்ற கொடூரம் அரங்கேறி 35 ஆண்டுகள் ஓடிவிட்ட பின்பும் மனதிலும் உடலிலும் காயங்கள் ஆறாமல், அந்தக் கறுப்பு நாளின் சாட்சிகளாக இன்னமும் தூத்துக்குடிப் பக்கம் வாழ்கிறார்கள் பலர்.
மறுநாள் பாடுக்கான மீன்பிடி வலையை உலர்த்தி, கிழிந்துபோன கண்ணிகளைக் கட்டி சரிசெய்துகொண்டே பேசினார் ஜேசுநஸ்ரியான். 'பாவ மன்னிப்பு’ படம் பார்க்கப் போய் காயம் அடைந்த பல பெண்களைக் காப்பாற்றிய ஜேசுநஸ்ரியான், அந்தத் தீ நிகழ்வை அப்படியே விவரிக்கிறார்...
''நான் சிவாஜி ரசிகன். அவரோட எந்தப் படம் வந்தாலும் குடும்பத்தோடு போய் பார்த்துடுவேன். 'பாவ மன்னிப்பு’ முதல் தடவை வெளியானப்ப, தூத்துக்குடி டவுனுக்குப் போய் படத்தைப் பார்த்தேன். அப்புறம் எங்கூட்டு பக்கத்தில் லட்சுமி கொட்டாயில் படம் போட்டாங்க. குடும்பத்தோடு போனோம். அப்ப டிக்கெட் 40 பைசா. 'ஏ’ கிளாஸ் டிக்கெட்டே பெஞ்சுதான். பெரும்பாலானவங்க மண் தரையில் உக்கார்ந்துதான் படம் பார்ப்பாங்க. அப்படித்தான் 'பாவ மன்னிப்பு’ படத்தையும் உக்கார்ந்து பார்த்தோம். நீளமான படம். மூணு மணி நேரம் ஓடும். இடைவேளை முடிஞ்சு படம் ஆரம்பிச்சதும், 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...’ பாட்டு வரும். பாட்டு முடியும்போது  ஆத்துல குதிச்சு தற்கொலை பண்ணிக்கப் போற சாவித்திரியைக் காப்பாத்தி அறிவுரைசொல்லி ஒரு அநாதைக் குழந்தையைக் கையில் குடுத்து வளர்க்கச் சொல்வார் சிவாஜி. குழந்தையை சாவித்திரி கையில் வாங்குறப்ப, திரையில் எங்க பார்வை படுற இடத்தில் சின்னதா தீ எரிஞ்சது. அது படத்தில் வர்ற காட்சினு நினைச்சு நாங்க பார்த்துட்டு இருந்தோம். ஆனா, சிலர் 'தீ... தீ...’னு கத்துனாங்க. 'அட... படத்தில் ஏதோ எரியுதுப்பா’னு சிலர் சொல்ல, என்னனு தெரியாத குழப்பத்துலயே நாங்க பார்த்துட்டு இருந்தப்ப, மளமளனு தீ பரவுச்சு. நெசமாவே தீ பிடிச்சு எரியுதுனு அப்பத்தான் எங்களுக்குப் புரிஞ்சது!  
'கொட்டாய்ல தீ பிடிச்சிருச்சு.. தப்பிக் கணும்’னு புரிஞ்சு நாங்க  சுதாரிக்கிறதுக்குள்ள தீ திரையைப் பொசுக்கி கூரை மேல் பிடிச்சுக்கிச்சு. ஞாயிற்றுக்கிழமைங்கிறதால நல்ல கூட்டம். 300-க்கும் மேல இருக்கு சனம். இதை உங்ககிட்ட சொல்ற நேரத்துக்குள் தீ மொத்தமா சூழ்ந்துருச்சு. பகல் நேர ஆட்டம்கிறதால வெளிச்சம் வரக் கூடாதுனு கொட்டாயைச் சுத்தி தார்ப்பாய் போட்டு, இறுக்கி மூடிக் கட்டிவெச்சிருந்தாங்க. உள்ளே போக வெளியே வர ஒரே வாசல்தான். தீ எரிஞ்ச புகைமூட்டத்தில் வாசல் எங்க இருக்குனுகூடத் தெரியலை. தப்பிச்சு ஓட என்ன பண்றதுனு தெரியாம பக்கவாட்டில் இருந்த கம்புகளைப் பிடிச்சு ஆட்ட ஆரம்பிச்சிருச்சு சனம். இன்னொரு பக்கம் மொத்தக் கூட்டமும் வாசலை நோக்கித் திமிறிட்டு ஓடுச்சு. கொட்டாயோட கூரை தீ பிடிச்சு எரிஞ்சுட்டு இருந்ததால், கம்பைப் பிடிச்சு உலுக்குனதுல கூரை அப்படியே எரிஞ்சுட்டே கீழே இருந்த சனம் மேல விழுந்து அமுக்கிருச்சு. அவ்வளவுதான்... அப்புறம் அங்கே நடந்ததைக் கண்கொண்டு பார்க்கவும் முடியலை; இப்போ நினைச்சுப் பார்த்துச் சொல்லவும் முடியலை.
அதிகபட்சம் அரை மணி நேரம் தீ எரிஞ்சிருக்கும். அப்பவே நூத்துக்கும் அதிகமானவங்க செத்திருப்பாங்க. ஆனா, செத்தவங்க எல்லாம் தீயில் கருகிச் செத்தாங்கனு சொல்ல முடியாது. முழுசா எரிஞ்சு செத்தவங்க குறைவுதான். நெரிசலில் மிதிபட்டுச் செத்தவங்கதான் அதிகம். கொட்டாயில் நாலு மூலையிலும் குவியல் குவியலாக் கிடந்துச்சு பிணங்கள். காரணம், சனம் முழுக்க உயிர் தப்ப ஒரே இடத்தில் குவிஞ்சு நின்னதுங்க. அதான் ஒண்ணு மேல ஒண்ணு அமுங்கி செத்துப்போச்சுங்க. எல்லாம் எரிஞ்சு முடிஞ்ச பிறகு, ஃபயர் வண்டிக்காரன் வந்து தண்ணி அடிச்சது எல்லாம் வெந்துகிடந்த உடம்பு மேலதான். நான் அப்போ சில பெண்களையும் குழந்தைகளையும் காப்பாத்தி வெளியே போட்டேன். அந்தச் சம்பவத்துக்கு சாட்சி, என் மனைவி ஜேசுவடியாள். தீயில் கருகின அவளோட ஒரு காலை அப்பவே எடுத்துட்டோம். சில வருஷங்களுக்கு முன்னாடி இன்னொரு காலில் விரல்களையும் எடுத்துட்டோம்.
சம்பவம் நடந்த பிறகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நேரில் வந்து பார்த்தார். யார் யாரோ எல்லாம் உதவுறோம்னு சொன்னாங்க. ஆனா, பெறவு எதுவும் நடக்கலை. செத்தது பூரா பாவப்பட்ட சனங்க. இன்னைக்கும் கை போனவங்க, கால் போனவங்கனு பல பேரு ஊருக்குள் உலாத்திட்டுக் கிடக்குறாங்க. இந்த விபத்துக்குப் பிறகு பல குடும்பங்கள்  பிரிஞ்சும் சிதைஞ்சும் போச்சு!''
இந்தியாவில் மிகப் பெரிய திரையரங்கத் தீ விபத்தான இந்த பயங்கரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை, அரசு ஆவணங்களும் தீயணைப்பு துறை ஆவணங்களும் அதிகபட்சம் 115 எனப் பதிந்திருக்கின்றன. ஆனால், எண்ணிக்கை நிச்சயம் அதைவிட அதிகம் என்கிறார்கள். அடையாளம் தெரியாதவர்கள், கணக்கில் வராதவர்கள் என நலிந்த ஏழைகளைக் கணக்கில் காட்டாமலே முடங்கிப்போனது உண்மையான இழப்பு விவரம்.
''அன்னைக்கு 40 காசு குடுத்து கொட்டாய்ல டிக்கெட் வாங்கினேன். இப்போ 35 வருஷம் ஓடிப்போச்சு. ஆனா, அந்த 40 காசு குடுத்த  காயம் இன்னும் ஆறலை!'' என்றபடியே வீட்டுக்குள் இருந்து தவழ்ந்து வெளியில் வருகிறார் ராஜம். இரண்டு கால்களையும் தீக்கு தின்னக் கொடுத்துவிட்டுப் பிழைத்துக் கிடக்கிறார்.
''மேல இருந்து கூரை அப்படியே விழுந்து என்னை அமுக்கிருச்சு. ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோன எட்டாவது நாளே காலை  எடுத்துட்டாங்க. அப்போ எனக்கு 16 வயசு இருக்கும். என்கூட வந்திருந்த என் ஜோட்டுப் பொண்ணுங்களுக்கு தாவணில தீ பிடிச்சு எரிச்சிருச்சு. டிரெஸ் இல்லாம வெளியே ஓடிவரப் பயந்து கொட்டாய்க்குள் தீயில் வெந்துட்டாங்க. அதனால் பெண்களும் குழந்தைகளும்தான் நிறைய செத்துப்போனாங்க. எப்படியோ தப்பிச்ச என்னை ஒரு மவராசன் கல்யாணம் பண்ணிக்கிட்டார். ஆனா, ரெண்டு பிள்ளைகள் பிறந்த பிறகு ரெண்டு கால்களும் இல்லாத என்கிட்ட வரதட்சணை கேட்டார். 'வரதட்சணை கொடுக்க நான் எங்கே போவேன்?’னு கேட்டதும் என்னை அப்படியே விட்டுட்டுப் போயிட்டார்!'' -ஆயுள் முழுக்க அவலம் துரத்தும் துயரம் பகிரும் ராஜத்துக்கு இப்போது வயது 50.
திரையரங்கத் தீ விபத்தில் முகம் முழுக்கவே சிதைந்துபோன எலிசபெத் ராணியின் கதை துயரமும் உருக்கமும் நிரம்பியது... ''எனக்கு அப்ப கல்யாணமாகி மூணு வயசில் ஒரு பையன் இருந்தான். வயிற்றில் ஏழு மாசக் குழந்தை. அப்ப ஒரு துக்கம் விசாரிக்க அம்மா வீட்டுக்கு வந்திருந்தேன். வந்த இடத்தில் சினிமாவுக்குப் போகலாமேனு, நான், அம்மா, தங்கச்சி மூணு பேரும் லட்சுமி டாக்கீஸுக்குப் போனோம். படம் பார்த்துட்டே இருக்கிறப்ப திடுதிப்புனு தீ பிடிச்சிருச்சு. 'தீ... தீ’னு சனம் கத்துச்சு. நாங்க ஓடினோம். ஆனா, தப்பிக்க முடியலை. அம்மா மாட்டிட்டாங்க. தங்கச்சி மேலே ஒரு கரன்ட் பாக்ஸ் விழுந்து அப்படியே அமுக்கிடுச்சு. என் மேல தீக்கட்டைகள் விழுந்து எரிஞ்சது. முகம், இடுப்பு, கை, கால்கள் எல்லாம் கருகிப்போச்சு!'' என்கிற எலிசபெத் ராணி சம்பவத்துக்குப் பிறகு ஒரு வருடம் தீவிர மருத்துவ சிகிச்சையில் இருந்திருக்கிறார். தீக்காய சிகிச்சைக்கு இடையிலேயே எலிசபெத்துக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால், தீக்காயத்துடன் இருக்கும் எலிசபெத் பிறந்த சிசுவைப் பராமரித்தால் தாய் - சேய் இருவருக்குமே ஆபத்து என மருத்துவர்கள் சொன்னதால் குழந்தையை கோவையைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு  தத்துக் கொடுத்துவிட்டார் எலிசபெத். எலிசபெத் மருத்துவமனையில் இருந்தபோதே அவரது கணவர் விவாகரத்து  கேட்டுப் பிரிந்துவிட்டார். அப்போது சிறுவனாக இருந்த தன் தம்பி மைக்கேலின் உதவியோடு வாழ ஆரம்பித்தார் எலிசபெத். இப்போது மைக்கேலுக்குத் திருமணம் நடந்து குடும்பம் குழந்தைகள் என்றான பிறகும்  அக்காவைத் தன்னுடனேயே வைத்திருக்கிறார். தத்துக் கொடுத்த குழந்தைக்கும் எலிசபெத்துக்குமான உறவு... ஓர் உருக்கமான நெகிழ்ச்சி!
'' 'பாவ மன்னிப்பு’ படத்தில் மாணிக்கம் பிள்ளையா நடிச்சிருப்பார் பாலையா. அவர் 'ஆளவந்தான்’கிற பணக்காரர் வீட்டு டிரைவர். ஆளவந்தான் ஒரு கொலையைப் பண்ணிட்டு, மாணிக்கம் பிள்ளையை போலீஸில் மாட்டி விட்ருவார். மாணிக்கம் பிள்ளையோட குடும்பம் சிதறிப்போயிடும். ரொம்ப நாள் ஜெயிலில் இருந்துட்டு மாணிக்கம் பிள்ளை வெளியே வர்றப்போ, அவரோட மகள் பணக்காரங்க வீட்டில் வளர்றது தெரிஞ்சு போய் பார்ப்பார். ஆனா, அந்தப் பொண்ணை எடுத்து நல்லபடியா வளர்த்த மனுஷன் மாணிக்கம் பிள்ளைகிட்ட, 'நீங்கதான் அப்பானு உங்க பொண்ணுகிட்ட சொல்லிராதீங்க’னு சொல்லிடுவார். அதனால்,  அப்பானு காட்டிக்காமலேயே தன்  பெண்ணை தூரத்துல இருந்து பார்த்துட்டுப் போவார் மாணிக்கம் பிள்ளை. அந்தத் தீ விபத்து என்னையும் மாணிக்கம் பிள்ளை கணக்காதான் ஆக்கிருச்சு. என் பொண்ணைத் தத்து கொடுக்கும்போதே, 'ஒரு நாளும் இவ என் பொண்ணுனு உரிமை கேட்டு வர மாட்டேன். ஆனா, என் புள்ளையை நல்லா வளர்த்து ஆளாக்கிடுங்க’னு மட்டும் சொன்னேன். என் பொண்ணை நல்லபடியா வளர்த்து பெரிய இடத்தில் கட்டிக்கொடுத்து நல்ல வேலையும் வாங்கிக் கொடுத்திருக்காங்க. ரொம்ப நல்ல நிலைமைல இருக்கா என் பொண்ணு. அவங்க கொடுத்த வாக்கைக் காப்பாத்திட்டாங்க. நானும் காப்பத்தணும்ல! 'நான்தான் உன் அம்மா’னு சொல்லிக்காம என் மகளை தூரத்தில் இருந்தே பார்த்துட்டு வந்துருவேன். எப்படியோ என் குழந்தை நல்லா இருக்கா... அது போதும் எனக்கு!'' - தீக்காயங்கள் உடலைப் பொசுக்கியிருக்க, பாசத்தை நெஞ்சில் புதைத்துப் பேசுகிறார் எலிசபெத்.
லட்சுமி டாக்கீஸ் இருந்த இடம் இன்று வெறிச்சோடிய காலி நிலம். அருகிலேயே முருகன் தியேட்டர்  கட்டடம் எழும்பியிருக்கிறது. விபத்து நடந்த சமயத்தில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. அ.தி.மு.க அனுதாபியான லட்சுமி டாக்கீஸ் உரிமையாளர் ராஜாமணி  என்கிற உருண்டையன் கைதுசெய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்து உடல்நலம் குன்றி இறந்துபோனார். லட்சுமி டாக்கீஸில் லைசென்ஸ் உரிமையாளரும் ஆபரேட்டராகவும் இருந்த சீனிவாசன், அதன் பிறகு தியேட்டர் தொழிலிலேயே ஈடுபட முடியாமல், பின்னர் இறந்துவிட்டார். 90-களுக்குப் பின்னர் திரையரங்கங்களில் ஏற்பட்ட நவீன தொழில்நுட்பமும் மாற்றங்களும் டூரிங் டாக்கீஸ்களையே ஒழித்துவிட்டது. ஆனால், இந்த நவீன தியேட்டர்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாகி இருக்கிறதா என்பது  பதில் அளிக்க முடியாத கேள்வி!
ஒவ்வொரு விபத்தும் உண்டாக்குவது காயங்களை மட்டும் அல்ல... அனுபவங்களையும்தான். அதில் இருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்களை நாம் தவறவிடக் கூடாது!

இன்றும் கலவர நிலவரம்!
ன்று ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த தூத்துக்குடி நகரத்தையே பிணக்காடாக மாற்றிய லட்சுமி டாக்கீஸ் தீவிபத்து பற்றி விசாரிக்க விசாரணை கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் அது பற்றி எந்தப் பேச்சும் இல்லை. திரையரங்கத் தீவிபத்து பற்றிய விழிப்புஉணர்வு உருவாக டெல்லி திரையரங்கம் ஒன்றில் ஒரு விபத்து நடக்கவேண்டிய நிலைதான் நமது நாட்டில் நிலவுகிறது.
1997-ம் ஆண்டு ஜூனில் டெல்லி 'உப்ஹார்’ திரையரங்கத் தீவிபத்தில் 59 பேர் பலி ஆனார்கள். அது தொடர்பாக வழக்கு பதிந்த சி.பி.ஐ., திரையரங்க உரிமையாளர்கள் சுசில் மற்றும் கோபால் உள்பட 12 பேரை கிரிமினல் குற்றவாளிகள் என அறிவித்தது. Association of the Victims of Uphaar Tragedy என சங்கம் தொடங்கி நீதிப் போராட்டத்தின் மூலமாக உப்ஹார் வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் 25 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீட்டைப் பெற்றார்கள். அப்போது நீதிமன்றம் திரையரங்கங்களுக்கு சில வழிகாட்டும் நெறிமுறைகளைச் சுட்டிக்காட்டியது. திரையரங்கங்கள் அமைத்துக்கொள்ளும் டிரான்ஸ்ஃபார்மரை திறந்தவெளியில் தனி அறையில் அமைக்க வேண்டும், விபத்து நடந்தால் தப்பிச் செல்லும் அவசர வழிகள் தொடர்பாக ஒவ்வொரு ஷோவுக்கு முன்னரும் அறிவிக்க வேண்டும்; அவசர வழிகள் எவை என்பது தெரியும்படி விளக்குகள் எரியவிடப்பட வேண்டும்; திரையரங்கத்தை முறையாக இன்ஷூர் செய்ய வேண்டும் என்றெல்லாம் பல வழிமுறைகளை வழங்கியது. ஆனால், டூரிங் டாக்கீஸ்களைக் காட்டிலும் அதிக அபாயங்கள் நிரம்பிய நவீன மல்ட்டிப்ளெக்ஸ்களில் அந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என்பது அச்சுறுத்தும் சந்தேகங்கள். ஒற்றை தியேட்டரை நான்கு குட்டிக் குட்டி தியேட்டர்களாக மாற்றி இடுக்குகளையே வாசலாக, வழியாக மாற்றிக் கட்டியிருக்கிறார்கள். அதிலும் ஷாப்பிங் மால்களில் அமைந்திருக்கும் இப்படியான திரையரங்கங்களில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், ஒருவர்கூடத் தப்பிக்க முடியாது என்பதே கலவரமான நிலவரம்.

அந்த நாள்... 3

- Vikatan Article

அந்த நாள்... 3
டி.அருள் எழிலன், படங்கள்: கே.ராஜசேகரன்
ன்று நினைத்தாலும் குலை நடுங்கும் கொடூரம் அது!
அரைப்படி நெல் கூடுதலாக, அதுவும் கூலியாகக் கேட்டதற்காக, கீழ்வெண்மணியில் உயிருடன் கொளுத்திக் கொல்லப்பட்டனர் 44 விவசாயத் தொழிலாளர்கள். அவர்கள் எரிந்தபோது எழுந்த தணல்தான்... விவசாயிகள் விடுதலையின் முதல் விளக்கு!
ஊருக்குள் மல்லுவேட்டி கட்டித் திரியும் இளசுகளுக்குப் பெயர் மைனர். தன் நிலம் என்றாலும் சேற்றில் கால்படாமல் கொழுத்தவனுக்கு பெயர் 'ஆண்டே’. அந்த ஆண்டே கொளுத்திப்போட்ட தீயில் வெந்து தணிந்தவர்கள் 'உழைப்பவனுக்கே வெள்ளாமை சொந்தம்’ என்பதற்கான விதையை விதைத்தவர்கள்!
சம்பா சாகுபடி நடவுக்கான வயலில் கணுக்கால் அளவு மட்டுமே தண்ணீர் நிற்கும்படி, சேற்றில் கால் புதைய மண்ணைப் பண்படுத்திக்கொண்டிருக்கிறார்  பழுத்த விவசாயி பழனிவேல். 1968-ல் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் கீழ்வெண்மணியில் நடந்த அந்தக் கொடூரத்தைக் கண்ணால் கண்ட சாட்சி இவர். நிலத்தில் சொட்டுச் சொட்டாக, உதிரம்போல விழும் பழனிவேலின் வியர்வைத் துளிகள் சொல்ல, 50 ஆண்டு வரலாறு உண்டு. 1968-க்கு முன்பு வரை பண்ணை அடிமையாக இருந்த பழனிவேல், இப்போது நான்கு ஏக்கர் நிலத்துக்கு உரிமையாளர்.          20 பேருக்கு கூலி கொடுக்கும் விவசாயி.
''இப்ப நாங்க கௌரவமா, மற்ற மனுஷமக்கள் மாதிரி மருவாதியா வாழ்றோம்னா, அதுக்குக் காரணம் அன்னைக்கு எங்க உரிமைக்காக எரிஞ்ச அந்த 44 பேர்தான். அதுங்க எல்லாம் சாமான்யப்பட்ட உசுரு இல்ல!'' - துயரத்தால் மூடப்பட்ட அந்தக் கறுப்பு நாளை நினைவுகூரும்போது பழனிவேலின் உடலில் ஒருவிதப் பதற்றம் படர்கிறது.
''காலங்காலமா இங்கதான் பொறந்து வளந்தோம். எங்க அப்பார் காலத்துல அடிமைப் பரம்பரையா இருந்தோம். ஆறு வயசுல  மகன் இருந்தா அவன் பண்ணையார் வீட்டு மாடுகளை மேய்க்கணும்; அப்பன் பண்ணையில் வேலை செய்யணும்; மனைவி அவன் வீட்டுக்கு எடுபிடி வேலை செய்யணும். இதுதான் இங்க இருந்த பரம்பரைப் பண்ணை அடிமை முறை. வயல் வேலைக்கு கொஞ்சம் தாமதமாப் போனாக்கூட சாணிப்பால், சவுக்கடிதான். காராம் பசுவில் கறந்த பாலைக் குடிக்கும் பண்ணையாருங்க, எங்க முன்னோர்களுக்கு சாணியைத் தண்ணியில் கரைச்சுக் குடிக்கவைப்பாங்க. அதைத்தான் பண்ணையாருங்க 'சாணிப்பால்’னு சொல்வாங்க. காவிரி எப்படி கர்நாடகாவில் இருந்து வந்துச்சோ, அதே மாதிரிதான் எங்களுக்கு விடுதலை வாங்கிக்கொடுத்த சீனிவாச ராவும் கர்நாடகாவில் இருந்து வந்தார். அவர் போராடித்தான் சாணிப்பால் சவுக்கடியை இல்லாமல் ஆக்கினார். அந்தக் கொடுமை எங்க அப்பார் காலத்திலேயே முடிஞ்சுபோச்சு. ஆனா, வாழ்க்கை மாறலை; கூலி உயரலை. அதே கொடுமைகள் வேற வடிவத்தில் தொடர்ந்துச்சு...'' என்று பேசும் பழனிவேல் படிப்பு வாசம் அறியாதவர். பல ஆண்டுகால கம்யூனிஸத் தொடர்பு, அவருக்கு ஓர் அரசியல் வாழ்வைப் பழக்கியிருக்கிறது.
''அப்ப நிலம் எல்லாம் மக்கள்கிட்ட இல்லை. பெரும்பாலும் மடங்கள், ஆசிரமங்கள், நிலச்சுவான்தார்களிடம்தான். ஆயிரமாயிரம் ஏக்கர் நிலங்கள் இருக்கும். அதில் நேரம் காலம் பாக்காம பண்ணை அடிமைகள் வேலைபார்க்கணும். சூரியன் உதிக்கிறதுக்கு முன்னாடி வேலைக்குப் போயிட்டு,  சூரியன் மறைஞ்சு இருட்டுன பிறகு வீட்டுக்குத் திரும்பணும். இதான் கண்டிஷன். ஆண்டைகள் குடுக்கறதுதான் கூலி. லீவு கிடையாது. கொஞ்சம் தாமதமாப் போனாக்கூட,  கண்ணுமண்ணு தெரியாம அடிப்பாங்க. சாப்பிட விட மாட்டாங்க. வயல் வேலைக்கு வர்ற பொம்பளைக, தங்களோட கைக்குழந்தைங்களை களத்துமேடு, வாய்க்கால் வரப்பு மரங்களில் தொட்டில் கட்டி தூங்கப் போட்டுட்டு வருவாங்க. வேலைக்கு நடுவில் குழந்தைங்க அழுதா பால் கொடுக்கக்கூட விட மாட்டாங்க. இத்தனை கொடுமைகளையும் அனுபவிச்சு வயல் வேலைகளை முடிச்சுட்டு நிமிர்ந்தா, 'ஆண்டே’, அவன் வீட்டு வேலைகளையும் செய்யச் சொல்வான். கடைசியில் அவனா விரும்பினா கொஞ்சம் தானியமோ, அரிசியோ போடுவான். அதையும் இடுப்பில் துண்டைக் கட்டிட்டு, வேட்டியை விரிச்சு வாங்கிட்டு வந்து வெறும் சோறு மட்டும் பொங்கிச் சாப்பிடுவோம். மாசத்தில் அமாவாசை அன்னைக்கு மட்டும் பண்ணையாருங்ககிட்ட கேட்டு, அவங்க விரும்பினா நாங்க லீவு எடுக்கலாம்.  இதை வெறுமனே உழைப்புச் சுரண்டல், சாதிக் கொடுமைனு மட்டும் சொல்லிட முடியாது. ரெண்டும் ஒண்ணோடு ஒண்ணு கலந்தது. இதுதான் கீழத் தஞ்சை முழுக்க நிலவிய கொடூரம்.
அப்ப கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க வந்து எங்களுக்காகப் பேசினாங்க. ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க விவசாயிகள்கிட்ட அது பெரிய கலகமா மாறுச்சு. 'சிவப்புக் கொடிக் கட்சிக்காரங்க பேசுறது நியாயம்தானே’னு நாங்களும் யோசிச்சப்ப, 'கொடுக்கிற சம்பளத்தைவிட அரைப் படி நெல் அதிகம் வேணும்’னு கேட்டோம். கூலி தராட்டி எங்க பொம்பளைங்களைத் திரட்டிட்டுப்போய் அவங்க வீட்டு முன்னால ஒப்பாரிவெச்சுப் போராடணும்னு முடிவு பண்ணோம்.
அப்படி வலிவலம் தேசிகர் பண்ணையில் ஒப்பாரிப் போராட்டம் நடத்தினோம். எங்களுக்குப் பின்னால் கம்யூனிஸ்ட் கட்சி இருந்துச்சு. பண்ணையார்கள் பின்னால் கம்யூனிஸ்ட் இல்லாத எல்லா கட்சிகளும் இருந்துச்சு. ஒரு பக்கம் கம்யூனிஸ்ட்காரங்க நடத்தின போராட்டம், இன்னொரு பக்கம் நாங்க கூலி உயர்வுக்காகவும் உரிமைக்காகவும் வாயைத் திறந்து பேச ஆரம்பிச்சோம். பண்ணையார்களுக்கு 'இந்தப்  பள்ளு - பறைகளும் பேச ஆரம்பிச்சுடுச்சே’ங்கிற எரிச்சல், இன்னொரு பக்கம் இதுக்குப் பின்னால் இருக்கிற கம்யூனிஸ்ட் கட்சிக்காரனை ஒழிக்கணுங்கிற கோபம். அது ரெண்டும் சேர்ந்து நடந்ததுதான் 44 பேரை உசுரோட எரிச்ச அவலம்!'' - 'அந்த நாளுக்குள்’ செல்வதற்கு முன் சின்ன இடைவேளை எடுத்துக்கொள்கிறார் பழனிவேல்.
''ஒருநாள் கம்யூனிஸ்ட்காரங்க கூட்டத்துக்குப் போயிட்டு, மறுநாள் வயல் வேலைக்குப் போனப்ப, 'யாரும் நிலத்தில் இறங்கக் கூடாது. இறங்கணும்னா கம்யூனிஸ்ட் கட்சியை விட்டுட்டு வரணும்’னு சொன்னாங்க. அப்ப கோபாலகிருஷ்ண நாயுடுதான் நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர். நீளக் கழி, கத்தி, நல்ல ராஜபாளையம் நாய்... இவை மட்டும் இல்லாம துப்பாக்கி, சுத்தி அடியாளுங்களோட அவர் நடந்துவரும்போது எதிரில் யாரும் போக மாட்டாங்க. 'அட்டூழியம்’கிறதுக்கு மறு பேர் அவர்தான். அவரோட அச்சுறுத்தலுக்குத் தாக்குப்பிடிக்கிறதே கஷ்டம். அவரோட ஆட்கள் குடுத்த குடைச்சலில் இருக்கை, ஆலங்குடி, பெருந்தலங்குடி, இருஞ்சூர் கிராம மக்கள் எல்லாம் அவங்க பக்கம் போயிட்டாங்க. அவங்க குடுக்கிற கூலியை வாங்கிட்டு சொன்ன வேலையைச் செஞ்சுட்டுப் போக சம்மதிச்சாங்க. எங்களுக்கு நெல்லை கூலியா அளந்து குடுத்தவன், அவங்களுக்கு மட்டும் அரிசி அளந்து குடுத்தான். எங்களுக்குப் பதிலா தெற்கில் இருந்து கூலி ஆட்களை நெல் அறுப்புக்குக் கூட்டிவந்தான். 'பட்டினிப் போட்டு சாவடிச்சாதான் இந்த நாய்ங்க திருந்துவானுங்க’னு நினைச்சு அப்படிப் பண்ணாங்க. நாங்க நேரடியா போய்த் தட்டிக்கேட்டோம். எங்க ஆளுங்க மூணு பேரைப் பிடிச்சு ஒரு பண்ணையார் வீட்டில் அடைச்சுவெச்சுட்டாங்க. நாங்களே அந்த வீட்டுக்குள் புகுந்து மூணு பேரையும் மீட்டு வந்தோம். அன்னைக்கு ஏதோ நடக்கப்போவுதுனு தெரிஞ்சது. ஆனா, அது இம்புட்டுப் பெரிய கொடூரமா இருக்கும்னு தெரியாது.
கோபாலகிருஷ்ண நாயுடு ஆட்கள் சுமார் 500 பேர் ஊரைச் சுத்தி வளைச்சாங்க. ஊருக்கு வர்ற வழியில் இருந்த எல்லா வீடுங்களுக்கும் தீ வெச்சுட்டே வெண்மணிக்குள் வந்தாங்க. துப்பாக்கியால் கண்டமேனிக்குச் சுட்டாங்க. அதில் பலரும் குண்டடிபட்டுக் கீழே விழ, பொம்பளைங்களையும் குழந்தைகளையும் பத்திரமா இருக்கச் சொல்லி நாங்க எச்சரிச்சோம். நாயுடுவோட ஆளுங்க ஊரை நெருங்கினப்போ, எல்லா பெண்களும் குழந்தைகுட்டிங்களைத் தூக்கிட்டு ஒரே இடத்தில் கூடினாங்க. குருவியைச் சுடுற மாதிரி மனுஷங்களைச் சுட்டுட்டே வந்து கோபாலகிருஷ்ண நாயுடுவையும் அவரோட ஆளுங்களையும் பார்த்த பெண்கள் ராமையா குடிசைக்குள் புகுந்தாங்க. ராமையா வீட்டை விட்டு வெளியில் வந்து நின்னார். அப்ப நாயுடுவோட ஆளுங்க குடிசைக்குத் தீ வெச்சாங்க. குழந்தை, குமரிங்க, பொம்பளைங்க எல்லாரும் 'விட்ருங்கய்யா... விட்ருங்கய்யா’னு கதறி அழுதாங்க. ஒருசிலர் குழந்தைங்களை வெளியில் வீசினாங்க. வெளியே வந்துவிழுந்த குழந்தைகளைத் தூக்கி மறுபடியும் எரியிற தீயில் போட்டாங்க நாயுடுவோட ஆளுங்க.  
எல்லாம் எரிஞ்சு தணிஞ்சு மறுநாள் போலீஸ் வந்து பார்த்துட்டு 28 பேர்னு கணக்கு எழுதினாங்க. ஆனா,  ராமையாவோட மனைவி பாப்பா, மூணு வயசுக் குழந்தை வாசுகி உள்பட ஆணும் பெண்ணுமா 44 பேர் எரிஞ்சு கரிக்கட்டை ஆகிட்டாங்க!'' - நிலைகுத்திய பார்வையுடன் நிறுத்திக்கொள்கிறார் பழனிவேல்.
விவசாயிகளின் போராட்டத்தில் 44 பேர் தீவைத்து எரிக்கப்பட்டார்கள். குண்டடிபட்டும், குத்துப்பட்டும், வெட்டப்பட்டும் கொல்லப்பட்ட தோழர்களின் எண்ணிக்கை  இன்னொரு ரத்தச் சரித்திரம். 44 தலித்களை எரித்துக் கொன்ற வழக்கில் கோபாலகிருஷ்ண நாயுடுவும் அவரது ஆட்களும் உயர் நீதிமன்றத்தால் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார்கள். பின்னர் நக்சல்பாரிகள் நீண்ட காலம் காத்திருந்து 1980-ல்  மிகச்சரியாக டிசம்பரில் கோபாலகிருஷ்ண நாயுடுவைத் தீர்த்துக் கட்டினார்கள். அபூர்வமாகப் பாதுகாப்பு எதுவும் இல்லாமல் கோபாலகிருஷ்ண நாயுடு வெளியில் வந்த ஒரு நாளில் கொல்லப்பட்டார். அவரது இறப்புக்குப் பின் நெல் உற்பத்தியாளர் சங்கம் உடைந்து பலம் இழந்துபோனது. அன்றைக்கு தஞ்சை முழுக்க நடவுப் பெண்கள் குலவைபோட்டுக் கொண்டாடிய மரணம் அது.
''அப்ப ஒரு நாளும் எங்க வீடுகளில் இருந்து சமையல் வாசனை வந்தது இல்லை. ஆனா, இன்னைக்கு கறிச்சோறும் நல்ல சாப்பாடும்  சமையல் வாசனையும் வருதுன்னா, அது அன்னைக்கு அவங்க எரிஞ்ச அந்த சாம்பல் மேடுதான் காரணம். வாரக் கூலியா இருந்த அடிமைச் சம்பளம் அன்றாடக் கூலி ஆனது. கார்த்திகை, மார்கழி மாசம்னு பஞ்ச காலங்கள்ல சோத்துக்கத்தாழை, வயல் எலிகள்தான் எங்களுக்குச் சாப்பாடு. ஆனா, இப்ப வெளைச்சல் இல்லாத நேரத்தில்கூட உக்காந்து சாப்பிடுறோம்னா, நிலம் எங்களுக்குச் சொந்தமாகக் கிடைச்சதுதான் காரணம். 1968-க்குப் பிறகு கூலி முறை, உழைப்பு நேரம், உரிமைகள்... எல்லாத்துக்கும் விடிவு வந்துச்சு. விவசாயக் கூலித் தொழிலாளர்களிடம் இருந்து பண்ணையார்களைக் காப்பாற்ற தனியாக 'கிஸான்’ போலீஸை உருவாக்குச்சு அரசாங்கம்.  சில பெரிய மனுஷங்களே எங்கள் கோபத்தின் தார்மீக நியாயங்களைப் புரிஞ்சுக்கிட்டாங்க.  யார் எங்களை அடிமைகளா நடத்தினாங்களோ, அவங்க நிலம் எங்களுக்குச்  சொந்தமாச்சு; ஆனா, அடிச்சுப் பறிக்கலை. உழைச்சுத்தான் சம்பாரிச்சோம். எங்க நிலைமையைப் பார்த்த கிருஷ்ணம்மா- ஜெகந்நாதன் உதவி செஞ்சாங்க. சுமார் 75 குடும்பங்களில் பெரும்பாலானவங்களுக்கு நிலம் வாங்கிக் குடுத்தது அவங்கதான். கட்சி, உரிமையை வாங்கிக் குடுத்தது; கிருஷ்ணாம்மா நிலம் வாங்கிக் குடுத்தாங்க.
நிலம் எங்களுக்குக் கிடைச்சதும் நாங்க மைனர் மாதிரி வாழலை. கடுமையா உழைச்சோம். எங்க பிள்ளைங்க முதல் தலைமுறையா பள்ளிக்கூடம் போனாங்க. ஒரு காலத்தில் அடிமை சனமா இருந்த இதே கீழ்வெண்மணி கிராமத்தில், இன்னைக்கு போலீஸ், ராணுவம், நேவினு எல்லாத்துலயும் எங்க பசங்க வேலைபார்க்கிறாங்க.  நல்ல நிலைமையில் அரசாங்க உத்தியோகம் பாக்குறாங்க. ஊருக்குள்ள படிக்காத பசங்களை நீங்க பார்க்கவே முடியாது. காதல் திருமணம், கலப்பு மணம்னு தமிழகம் பத்திக்கிட்டு எரியுது. ஆனா, இங்கே காதல் திருமணங்கள் சமாதானக் கலப்பு மணமா நடக்குது. எந்தப் பிரச்னையும் இல்லை.
ஏரியாவில் கொடி கட்டி ஆண்ட பல பண்ணையார்களின் வீடுக வெறிச்சோடிக் கிடக்கு. அவங்க வாரிசுகள் நகரங்களில் குடியேறிட்டாங்க. இருக்கிறவங்களும் முன்புபோல இல்லை. காலமும் சூழலும் மாறின மாதிரி, அவங்களும் தங்களை மாத்திக்கிட்டாங்க. இப்ப விவசாயம்தான் பிரச்னை. காவிரியை நம்பி விவசாயம் செய்ய முடியலை. பிரச்னைகளின் தன்மை மாறிப்போச்சு. ஆனா, இந்த மாற்றத்துக்கும் சுயமரியாதையான வாழ்வுக்கும் கம்யூனிஸ்ட் கட்சியும் நாங்களும் கொடுத்த விலை கொஞ்சநஞ்சமா!'' என்கிறார் பழனிவேல்.
எரிந்த ராமையாவின் குடிசைக்கு எதிரில் பிரமாண்டமாக  உருவாகிக்கொண்டிருக்கிறது 'வெண்மணி தியாகிகளின்  நினைவு மண்டபம்’. பழனிவேல், திரும்பி நின்று அந்த மண்டபத்தை நோக்கிக் கையெடுத்துக் கும்பிடுகிறார்.

அந்த நாள்... 2 - 15, ஜூலை: 2004 - நிர்வாணப் போராட்டம்

- Vikatan article

அந்த நாள்... 2
- 15, ஜூலை: 2004 - நிர்வாணப் போராட்டம்
ரீ.சிவக்குமார்
ந்த நெருப்புக்கு வயது, 10 ஆண்டுகள்!
15.07.2004... மணிப்பூர் வரலாற்றில் மறக்க முடியாத நாள். அதிகாரத்தின் வன்முறைக்கு எதிராகத் தங்களையே ஆயுதமாக்க முடியும் என  தாய்கள் நிரூபித்த நாள் அது. இந்திய ராணுவத்தின் முகத்தில் நிர்வாணத்தை விசிறியடித்தார்கள் அந்தப் பெண்கள். அதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு அரங்கேறியது அந்தக் கொடூரம்.
17-வது அசாம் ரைஃபிள்ஸ் ராணுவப் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள், தங்ஜம் மனோரமா என்கிற பெண்ணின் வீட்டுக்குள் அடாவடியாக நுழைந்தார்கள். 'ராணுவத்தை எதிர்த்துப் போராடும் ஆயுதக் குழுக்களுக்கும் மனோரமாவுக்கும் தொடர்பு இருக்கிறது’ என்பது இந்திய ராணுவத்தின் குற்றச்சாட்டு. மனோரமாவின் வீட்டைச் சூறையாடினார்கள். இருந்த சொற்பப் பணத்தைக் கொள்ளையடித்தார்கள். அனைவரும் பதைபதைத்துப்போய்ப் பார்க்க, மனோரமாவைத் தாக்கினார்கள். அதற்குப் பிறகும் விடவில்லை. விசாரிக்க வேண்டும் என அவரை இழுத்துச் சென்றனர். அன்று மாலை... அரைகுறை ஆடையுடன், உடல் சிதையுண்ட காயங்களுடன், பலரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மனோரமாவின் உடல் வீதியோரம் கிடந்தது.
கொதித்துப்போன மணிப்பூர், போராட்டத்தில் இறங்கியது. அதுதான் அந்தத் தாய்மார்களையும்  போராட்டம் நடத்தும் முடிவை எடுக்கவைத்தது. அசாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவினர் தங்கியிருந்த காங்களா கோட்டையின் இரும்புக் கதவுகளுக்கு முன்பு தாய்கள் திரண்டனர். திடீரென தங்கள் ஆடைகளைக் களைந்தவர்கள், 'ஏ... இந்திய ராணுவமே, உனக்குத் தேவை பெண்களின் உடல்தானே? இதோ எடுத்துக்கொள்... எங்களை மானபங்கப்படுத்து! எங்கள் மகள்களை விட்டுவிடு!’ என்ற பதாகையை கையில் பிடித்துக்கொண்டு நிர்வாணமாக நின்றனர். அதிர்ச்சியில் உறைந்த ராணுவமும் போலீஸும் குனிந்த தலை நிமிராமல், அவர்களின் மீது போர்வைகளைப் போத்திக் கைதுசெய்தது. போராட்டம் நடந்தது என்னவோ மிகச் சில நிமிடங்கள்தான். ஆனால், அந்த நெருப்பின் கங்கு, இன்றும் மணிப்பூரில் கனன்றுகொண்டே இருக்கிறது.
10 வருடங்கள் கடந்தும், மனோரமாவின் கொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை கிடைக்கவில்லை. மணிப்பூர் பெண்களை பாலியல் வல்லுறவுகொண்டதற்கான அதிகார மமதையை வழங்கும், Armed Forces (Special Powers) Act (AFSPA) என்ற ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரச் சட்டமும் இன்னும் நீக்கப்படவில்லை. இந்தியா முழுவதும் தனிநபர்களாலும் அதிகார நிறுவனங்களாலும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை 'ரேப் நேஷன்’ (Rape Nation) என்ற பெயரில் ஆவணப்படமாக எடுத்துக்கொண்டிருக்கிறார் லீனா மணிமேகலை. மணிப்பூர்  நிர்வாணப் போராட்டத்தில் பங்குபெற்ற தாய்மார்களை, 10 வருடங்களுக்குப் பிறகு அதே காங்களா கேட்டின் முன் வரவழைத்து அவர்களின் நினைவுகளைப் படமாக எடுத்துள்ளார்.
''காங்களா வாயிலில் நிர்வாணப் போராட்டம் நடத்திய 12 பேரில் ஒருவரான லியோடெம் இபெதாம்பி இறந்துவிட்டார். மற்றவர்களிடம் பேசினேன். சிலர் வயது காரணமாகவும் தொடர்ச்சியான செயல்பாடுகள் காரணமாகவும்  நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் சக்கர நாற்காலிகளிலும் சிறப்பு வாகனங்களிலும் சிரமப்பட்டு வந்திருந்தனர். எந்த இடத்தில் அறவுணர்வும் ஆவேசமும் ததும்ப போராட்டம் நடத்தினார்களோ, அதே காங்களா வாயிலில் 10 வருடங்களுக்குப் பின் குழுமிய அவர்கள், உணர்வு மேலோங்கக் கதறி அழுதனர்.  
பூக்கள், ரூபாய் நோட்டுகள், மெழுகுவத்திகள்  வைத்து சில நொடிகளில் காங்களா கேட்டை வழிபாட்டுத் தலமாக மாற்றிவிட்டனர். தங்கள் மீது சன்னதம் வந்து போராடச் சொன்னது தங்கள் மூதாதையர்கள்தான் என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். அதனாலேயே அந்தப் போராட்டக் களம் அவர்களுக்கு வழிபாட்டு இடமாக மாறியுள்ளது.  அவர்கள்  மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொன்ன கோரிக்கைகள் இரண்டுதான். 'AFSPA என்ற ஆயுதப் படையின் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும்’, 'மணிப்பூரில் நிரந்தரமாகத் தங்கியிருக்கும் ராணுவம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும்’. தங்கள் மண்ணைச் சேர்ந்த பெண்கள் சுதந்திரத்துடன், சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்றால், ராணுவத் தலையீடு இருக்கக் கூடாது என்பது அவர்களின் நிலைப்பாடு. 'எங்கள் மகள்களை ஆடையில்லாமல் தெருவில் இறந்த உடல்களாகப் பார்த்த பின், எங்களிடம் இழப்பதற்கு எதுவும் இருக்கிறதா என்ன? எதிர்காலத்திலும் எங்கள் மகள்களின் மானத்துக்கு உத்தரவாதம் என்ன?’ என்று கேட்கிறார்கள். பதில் சொல்லத்தான் யாரும் இல்லை.
இவர்களின் போராட்டத்தின் விளைவாக, அசாம் ரைஃபிள்ஸ் அகற்றப்பட்டு காங்களா கேட் வளாகம் பூங்காவாக மாற்றப்பட்டது. ஆனால், மணிப்பூரின் பிற பகுதிகளில் இன்னும் ராணுவம் நிலைகொண்டிருக்கிறது. அதையும் முற்றாக நீக்க வேண்டும் என்பதே கோரிக்கை. கொலைகாரச் சட்டம் AFSPA நீக்கப்படும் வரை ஓய மாட்டோம் என அந்தத் தாய்மார்கள் இணைந்து 'இமா மூவ்மென்ட்’ ('இமா’ என்றால் 'அம்மா’!) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். தொடர்ந்து நடந்துவரும் உள்நாட்டுப் போரால் கொல்லப்பட்டவர்களில், காணாமல்போனவர்களில், ஆயுதப் போராட்டத்தில் இணைந்ததில் ஆண்களின் எண்ணிக்கை அதிகம். இதனால் பெண்கள் தலைமையில்தான் மணிப்பூரில் பெரும்பாலான குடும்பங்கள் நடக்கின்றன. மணிப்பூரின் அடையாளமாக மாறிப்போன 'இமா மார்க்கெட்’ அதற்கு ஒரு சாட்சி. இயல்பாகவே மணிப்பூர் மக்களின் போராட்டத்தில் பெருமளவு பெண்கள் பங்கு எடுப்பதன் காரணத்துக்கான அடிப்படையும்  இதுதான்!'' என்கிறார் லீனா.
''இமா இயக்கத்தின் தலைமையில் நடந்த மனோரமாவின் 10-ம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலிக் கூட்டத்தையும் படமாக்கினேன். அந்த நிகழ்ச்சிக்கு மனோரமாவின் அம்மா தங்ஜம் குமன்லேய் வந்திருந்தார். அவர் கையில் மலர்கள்  இருந்தன. அது மணிப்பூரில் பிரசித்திபெற்ற லெய்ஹோ மலர். அவை மனோரமாவால் நடப்பட்ட செடியில் பூத்த பூக்களாம். அதைச் சொல்லி வெடித்துக் கதறி அழுதார் அந்தத் தாய். மேற்கொண்டு எதையும் பேசும் நிலையில் அவர் இல்லை.
மணிப்பூர் என்றதுமே, தொடர்ந்து பட்டினிப் போராட்டம் நடத்திவரும் இரோம் சர்மிளாவின் முகம்தான் நம் நினைவுக்கு வரும். அந்தப் போராளியை, ராணுவத்தின் நெருக்கடிகளுக்கு இடையில் சிறைச்சாலை மருத்துவமனையில் சந்தித்தேன். ஒடிசலான உருவம். நாம் அறிந்த தேவதைக் கதைகளில் இருந்து வழிதவறி வந்த தேவதையைப் போலதான் சர்மிளா இருந்தார். கட்டிலின் ஒருபக்கம் முழுக்க பொம்மைகள் அடுக்கப்பட்டிருந்தன. மறுபக்கம் உலகின் எல்லா மூலைகளில் இருந்தும் பரிசாக வந்து குவிந்திருந்த புத்தகங்கள். சன்னமான குரலில், ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் நீண்ட இடைவெளிகளுடன் பேசினார். உணவு, தண்ணீர் எதுவும் அருந்துவது இல்லை; எச்சிலைக்கூட விழுங்கக் கூடாது என அவ்வப்போது பஞ்சைக்கொண்டு உதடுகளைத் துடைத்துக்கொள்கிறார். ஆனால், அவரது மூக்கின் வழியாக 13 செ.மீ குழாயை நுழைத்து, உணவைத் திணித்துவருகிறது மணிப்பூர் அரசு. உண்மையில் அது வெறுமனே பைப் இல்லை, 13 செ.மீ அரசாங்கம்!'' என்கிறார் லீனா மணிமேகலை.
1947-க்கு முன்பு வரை மணிப்பூர், சுதேச சமஸ்தானமாக இருந்தது. 1949-ம் ஆண்டு மணிப்பூரின் அரசர் புதசந்திரா மணிப்பூரை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால் மணிப்பூர் மக்களில் பெரும்பாலானவர்கள் இந்தக் கட்டாய இணைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. மணிப்பூர் சுயாட்சிபெற்ற சுதந்திர பூமியாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறார்கள். அரசர் புதசந்திரா மிரட்டப்பட்டுத்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்றும் சொல்லப்படுகிறது. மணிப்பூர் விடுதலை அடைய வேண்டும் என அமைதி வழியில் ஆரம்பித்த போராட்டங்கள், ஈழம் தொடங்கி உலகின் பல பகுதிகளில் நடந்ததைப்போல ஆயுதப் போராட்டத்தில் முடிந்தது. பல்வேறு ஆயுதக் குழுக்கள் மணிப்பூரில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தன. இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்காகவும் மணிப்பூரில் 'அமைதி’யை நிலைநாட்டுகிறோம் என்ற பெயரிலும் ராணுவம் குவிக்கப்பட்டது. மக்கள் திரும்பும் திசையெங்கும் ராணுவம், செக்போஸ்ட் சோதனைகள். பல   இடங்களில் ராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்ந்தன. உலகின் எல்லா இடங்களிலும் ராணுவம் என்ன கொடுமைகளைச் செய்யுமோ, அவற்றையே மணிப்பூரிலும் செய்தது. தாங்கள் சந்தேகப்படுபவர்கள் மீது,  விசாரணை என்ற பெயரில் வன்முறைகளை ஏவுவது, பெண்கள் என்றால் பாலியல் துன்புறுத்தல் அளிப்பது எனப் பலவிதமான அத்துமீறல்கள். இதற்கெல்லாம் ராணுவத்துக்கு உதவியாக இருந்ததுதான் ஆயுதப் படையினரின் சிறப்பு அதிகாரச் சட்டம் AFSPA. அந்தச் சட்டத்தின்படி கைது வாரன்ட் இல்லாமல், ராணுவம் எவரையும் கைதுசெய்யலாம்; சிட்டுக்குருவிகளைப்போல சுட்டுக் கொல்லலாம். உண்மையில் இந்தக் கொடுமையான சட்டத்தின் முன்வரைவு, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வெள்ளைக்காரர்களால் கொண்டுவரப்பட்டது.  'வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் அது. ஆனால், சுதந்திர இந்தியாவிலும் அந்தச் சட்டத்துக்கு விசேஷ அந்தஸ்து அளித்து செம்மையாகப் பராமரிக்கிறார்கள். வெள்ளையன் வெளியேறிய பிறகும் அந்தச் சட்டம் வெளியேறவில்லை!
இந்தச் சட்டத்தை நீக்கச் சொல்லி, தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்தாலும், அதன்  உச்சகட்டம் 2000-ம் ஆண்டு தொடங்கியது. இம்பாலுக்கு அருகில் உள்ள மலோம் எனும் கிராமத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த 10 பேரை, பாதுகாப்புப் படையினர் எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்காமல் சுட்டுக் கொன்றார்கள். ராணுவத்துக்குக் கொல்வதற்கு ஆட்கள் தேவையே தவிர, காரணங்கள் தேவை இல்லை. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்துதான் இரோம் சர்மிளா தன் போராட்டத்தைத் தொடங்கினார். மைலமா விருது, ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது என பல விருதுகள் சர்மிளாவுக்கு அளிக்கப்பட்டுவிட்டன.  ஆனால், அவரது போராட்டத்துக்கான தீர்வு மட்டும் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் ஒரு நட்சத்திரத்தைப் போல கண்சிமிட்டிக்கொண்டிருக்கிறது.
''ஆக்கிரமிக்கும் நாடாகத்தான் மணிப்பூர் மக்கள் இந்தியாவைப் பார்க்கிறார்கள். குறிப்பாக, இந்தி மொழியை நெருடலோடும் அந்நியத்தோடும் பார்க்கிறார்கள். தென்னிந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் மீது  தனிப் பிரியம் அவர்களுக்கு. நம்முடைய இந்தி எதிர்ப்புப் போராட்டம் அங்கு பிரசித்தி. பொதுவாக தமிழர்கள் அல்லாதவர்களுக்கு ஈழப் பிரச்னை குறித்து விரிவாக விளக்க வேண்டும். ஆனால், மணிப்பூர் மக்களுக்கு ஈழப் பிரச்னை குறித்து ஓரளவு புரிதல் இருக்கிறது. விடுதலைப்புலிகளுக்கு அங்கிருக்கும் ஆயுதக் குழுக்களோடு நெருக்கம் இருந்ததாலும், தனிநாடு போராட்டங்கள் குறித்த சகோதரத்துவப் புரிதல் மணிப்பூர் மக்களுக்கு இருப்பதாலும் ஈழப் பிரச்னை குறித்து அவர்கள் அறிந்திருக்கிறார்கள். மணிப்பூர் மக்களில் கணிசமான பேர் இப்போது தமிழகத்தில் வந்து வேலைபார்ப்பதற்கும்  வட இந்தியாவின் மீது இருக்கும் ஆதார வெறுப்பும் ஒரு காரணம்!'' என்று தன் நேரடி அனுபவங்களைப் பகிர்கிறார் லீனா.
2013-ல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி ரஷீதா மன்ச்சூ, மனோரமாவின் தாயைச் சந்தித்துப் பேசினார். மனோரமாவின் வீட்டைவிட்டு வெளியில் வந்த அவர், ஊடகங்களிடம் கதறி அழுதார். ஆனாலும் அந்தக் கதறல்களையும் அலறல்களையும் இந்திய மத்திய அரசும் ராணுவமும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. இரோம் சர்மிளா தன் போராட்டத்தை ஆரம்பித்து 14 ஆண்டுகள் ஆகின்றன. மனோரமா சிதைக்கப்பட்டு 10 ஆண்டுகள் முடிகின்றன.
''இனப் படுகொலை, ராணுவ அத்துமீறல், சாதிக்கலவரம், மத மோதல்கள் என வன்முறை நிகழும் இடங்களில் எல்லாம் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அப்படி அத்துமீறும் ராணுவம் மணிப்பூரிலும் பெண்களைப் பாலியல்ரீதியாகச் சீண்டுவதும் வல்லுறவுக்கு உள்ளாக்குவதுமான ஓர் அத்தியாயமே மனோரமா சிதைக்கப்பட்ட சம்பவம். எந்தப் பெண்ணுடலை ஒடுக்குமுறைக்கான களமாக ஆக்கினார்களோ, அதே பெண்ணுடலைப் போராட்டத்துக்கான கருவியாக மாற்ற முடியும் என நிரூபித்த போராட்டம்தான் மணிப்பூர் பெண்கள் நிர்வாணப் போராட்டம்.'' என்கிறார் லீனா.
'தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்!’ என்ற வாக்கியத்தை ஒரு மந்திர உச்சாடனம்போல் அடிக்கடி உச்சரிக்கிறோம். ஆனால், ஆளும் வர்க்கமும் அதிகார நிறுவனங்களும் அந்த வாக்கியத்தை ஏளனச் சிரிப்புடன் கடந்துபோகின்றன!

அந்த நாள்... - 1

- Vikatan article

அந்த நாள்...
டி.அருள் எழிலன், படங்கள்: ஜெ.தான்யராஜு, கே.குணசீலன்
'பார்க்கச் சலிக்காதவை - கடல், ரயில், யானை! இந்தப் பட்டியலில் சில காலம் 'கடலுக்கு’ விடுமுறை விடவைத்த நாள் 2004, டிசம்பர் 26... சுனாமி!
மண்ணுக்கும் விண்ணுக்குமாக விஸ்வரூபம் எடுத்து ஊருக்குள் நுழைந்த ஆழிப்பேரலைகள், தமிழகக் கடலோரத்தைத் துவம்சம் செய்தன. காலம் எல்லாம் 'கடலம்மா’ என அதன் தாய் மடியில் தலை சாய்த்து உயிர் வாழ்ந்த மனிதர்களை, ஒரே கணத்தில் உயிரற்ற சடலங்களாக்கிவிட்டது சுனாமி. பல்லாயிரம் உயிர்கள் பலியான அந்தப் பயங்கரம் மறக்காது!
''எங்களாலும் மறக்க முடியலைதான். ஆனா, அந்தக் காயத்துக்கு நாங்களே ஒரு மருந்து கண்டுபிடிச்சோம்'' - நாகப்பட்டினம் கடலின் உப்புக்காற்று உடல் மோத, நினைவைக் கிளறிப் பேசுகிறார் பரமேஸ்வரன். அவரைச் சுற்றி சிறிசும் பெரிசுமாக, குழந்தைகள் துள்ளி விளையாடுகிறார்கள். ''இப்போ இவங்கதான் எங்க பிள்ளைங்க; உலகம்'' என்ற பரமேஸ்வரனின் கரம் பற்றுகிறார் அவரது மனைவி சூடாமணி.
10 ஆண்டுகளுக்கு முன்பு, சுனாமியின் கொடூரப் பசிக்கு திடீரென ஒரு நாளில் சடலங்களாகிப்போன கணத்தை இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது பரமேஸ்வரனுக்கு.
''அன்னைக்கு எனக்குப் பிறந்த நாள். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு நிறைய சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க. மூத்த பொண்ணு ரட்சண்யா, ரெண்டாவது பொண்ணு காருண்யா, பையன் கிருபாசன்... எல்லாரையும் அழைச்சுக்கிட்டு பீச்சுக்குப் போனேன். கூட வந்த சொந்தக்காரங்களையும் சேர்த்து மொத்தம் 11 பேர் பீச்சுக்குக் கிளம்பினோம். என் மனைவி மட்டும் வீட்டுல சமைச்சுட்டு இருந்தாங்க. வீட்டுல இருந்து அரை கிலோமீட்டர் தூரத்துலதான் பீச். அந்தக் காலை நேரத்துல கடல் அவ்வளவு பிரகாசமா இருந்துச்சு. வாக்கிங் போயிட்டிருந்தாங்க; வாலிபால் விளையாடிட்டிருந்தாங்க. சின்னச் சின்னப் பசங்களும் நிறையப் பேர் கும்பல் கும்பலா இருந்தாங்க. பறக்கும்தட்டு வீசி விளையாடினோம். அந்த ஏரியாவே குதூகலமா இருந்துச்சு.
கிருபாசன் கடலைப் பார்த்து நின்னுட்டு இருந்தான். நான் அவனுக்கு எதிர்ப் பக்கம் நின்னேன். திடீர்னு அவன் 'அப்பா கடலைப் பாருங்க’னு கத்தினான். பார்த்தா... எனக்கு என்னன்னே தெரியலை. அதுக்கு முன்னபின்ன அப்படி ஒரு காட்சியைப் பார்த்தது இல்லை... உலகமே அழியப்போகுதோனு தோணுச்சு...'' - துயரத்தைப் பரிசளிக்க வந்த அந்த நாளின் நினைவுகள் பரமேஸ்வரனை அழுத்துகின்றன.
''பனைமர உயரத்துக்கு அலை. முதல்ல அது அலைன்னே எனக்குத் தோணலை. ஏதோ ஒண்ணு விசித்திரமா வானத்துக்கும் கடலுக்கும் நடுவுல முளைச்சு நிக்குதுனு தோணுச்சு. அது நகர்ந்து நகர்ந்து வரவும்தான் பெரிய அலைனு புரிஞ்சது. அந்தக் காட்சியை இப்போ நினைச்சாலும் உடம்பு உதறுது. சட்டுன்னு சுதாரிச்சு, 'ஓடுங்க... ஓடுங்க’னு கத்துனேன். எல்லாரும் ஓட ஆரம்பிச்சாங்க. வயசானவங்களால ஓட முடியலை. நான் என் பையனைக் கையில் தூக்கிக்கிட்டு மத்த பிள்ளைகளைத் தேடுறேன். யாரையும் காணோம். அலை நெருங்கி வருது. வீட்டை நோக்கி நான் வேகவேகமா ஓடுறேன். திடீர்னு என் முதுகில் ஒரே அடி. அலை என்னை அடிச்சுக் கீழே தள்ளி அமுக்கிருச்சு. ஒரு கையில பிள்ளையைப் பிடிச்சுருக்கேன். மூச்சுத் திணறுது. கையில் இருக்கிற குழந்தையை யாரோ வலுக்கட்டாயமாப் பிடுங்குற மாதிரி இருக்கு. மூச்சுவிட முடியலை. தண்ணிக்கு மேல வந்து மூச்சு வாங்குறேன்... மறுபடியும் ஒரு பெரிய அலை வந்து மடேர்னு அடிச்சு உள்ளே தள்ளுது. பையன் கையில் இருந்து நழுவிட்டான். அலையோட வேகம் அதிகரிச்சு, என்னை அப்படியே தூக்கி ஒரு பனை மரத்துல வீசியடிச்சது. உடம்பெல்லாம் காயம். மரத்தைக் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டேன். சமாளிக்க முடியாத சமயத்துல மரத்தை விட்டுட்டு தண்ணி போற போக்குல நீந்த ஆரம்பிச்சேன். ஊருக்குள்ள கண்ணுக்கு எட்டின தூரம் வரை கடல்தான். தள்ளாடியபடியே என் வீட்டுக்குப் போனேன். முதல் மாடி வரைக்கும் தண்ணீர். என் மனைவி பதற்றமா மாடில நின்னுட்டு இருந்தாங்க!'' - ஆழிப்பேரலை கொடுத்த அடியை இப்போதும் உணர்ந்து நடுங்குகிறது பரமேஸ்வரனின் உடல்.
இவர், ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் உதவி செயற்பொறியாளர். இவரது மனைவி சூடாமணி, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் நிர்வாக அதிகாரி. மத்திய அரசு ஊழியர்களான இருவரும், கடல் பார்த்த வீடு வேண்டும் என வேண்டி விரும்பி, நாகப்பட்டினம் கடற்கரை அருகே வீடு வாங்கிக் குடியேறியவர்கள்.
''என் மனைவி என்னை மட்டும் பார்த்துட்டு, 'பசங்க எங்கே?’னு கேட்டாங்க. என்னால பதில் சொல்ல முடியலை. கடல் கொஞ்சம் உள்வாங்கவும் குழந்தைகளைத் தேடி கடலை நோக்கிப் போனேன். போற வழியிலேயே ரட்சண்யா தண்ணியில தலைகுப்புற மிதந்துட்டு இருந்தா. உயிர் இல்லை. அவளைத் தூக்க முடியலை. பிடிச்சு இழுத்துட்டே வந்து வீட்டுல போட்டேன். ரயில்வே டிராக் பக்கம் இன்னோர் உறவினரோட உடல் கிடந்தது. அதையும் இழுத்துட்டு வந்தேன். யாரோ வந்து, 'உன் மகன் உடம்பு கலெக்டர் ஆபீஸ் பக்கம் கிடக்கு’னு சொன்னாங்க. அழக்கூடத் தெம்பு இல்லாம அந்தப் பக்கம் ஓடினேன். உடம்பு முழுக்கக் காயங்களோடு இறந்துகிடந்தான் கிருபாசன். அவனையும் வீட்டுக்கு இழுத்துட்டு வந்தேன். கொஞ்சம் தள்ளி காருண்யா உடம்பும் கிடைச்சது. மொட்டைமாடியிலதான் எல்லாரையும் வரிசையா கிடத்தினோம். எங்க வீட்ல இருந்து பீச்சுக்குப் போன 11 பேர்ல நான் மட்டும்தான் பிழைச்சேன்; 7 பேர் உடல்கள்தான் கிடைச்சது.
ஆசை ஆசையா வாங்கின வீட்ல மூணு குழந்தைங்க உட்பட உறவினர்கள் உடல்களையும் வெச்சுக்கிட்டு நானும் மனைவியும் கதறிட்டு இருந்தோம். என்ன பண்றதுன்னே தெரியலை. ஊர் முழுக்கப் பிணங்கள். எல்லாரும் யாரையோ தேடி ஓடிக்கிட்டே இருக்காங்க. உறவினர்கள் வீட்டுக்கு எப்படித் தகவல் சொல்றதுனு தெரியலை. டெலிபோன், கரன்ட் எதுவுமே இல்லை. காலையில் வரைக்கும் உயிரோட இருப்போமானே சந்தேகமாகிருச்சு. கடல் அலையோட இரைச்சல் கேட்கும்போது எல்லாம் பக்குபக்குனு இருந்துச்சு. இன்னோர் அலை வந்து மொத்தமா எல்லாரையும் அள்ளிட்டுப் போயிட்டாக்கூட பரவா யில்லைனு தோணுச்சு.
இருட்டுன பிறகு, மூணு குழந்தைகளையும் வண்டியில எடுத்துட்டு சுடுகாட்டுக்குப் போனோம். நான் குழி தோண்ட, என் மனைவி எடுத்துக் கொடுக்க, மூணு குழந்தைகளையும் புதைச்சோம். அந்த நிலைமை எந்தப் பெற்றோருக்கும் வரக் கூடாது. சொந்தக்காரங்க உடல்களைத்தான் என்ன பண்றதுனு தெரியாம இடிஞ்சுபோய் உட்கார்ந்திருந்தோம். தகவல் தெரிஞ்சு ஊர்ல இருந்து ஆளுங்க வந்து சேரவே நாலு நாள் ஆச்சு!''
இதற்கு மேல் துக்கம் வேறு எதுவும் இல்லை என்ற அளவுக்கு, அந்தக் கொடூரத் துயரத்தை பரமேஸ்வரன் தம்பதி சந்தித்த நாட்கள் அவை. வாழ்வின் மீது பிடிப்பு விட்டுப்போய், 'இதுக்கு மேல் உயிரோடு இருந்து என்ன பண்ணப்போறோம், தற்கொலை பண்ணிக்கலாமா?’ என்று மனைவி சூடாமணியிடம் கேட்டிருக்கிறார் பரமேஸ்வரன். அதற்கு அவர், 'அதைப் பத்தி அப்புறம் யோசிப்போம். எனக்கு இப்போ பசிக்குது; சாப்பாடு வேணும்’ என்றாராம். சாவில் இருந்து வாழ்வுக்கு அழைத்து வந்த சொற்கள் அவை. இருவரும் நிவாரண முகாமில் சோற்றுப் பொட்டலம் வாங்க வரிசையில் நின்றனர். அப்போதுதான் சுற்றிலும் இருந்த ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் சோகம் நிரம்பியிருக்கும் யதார்த்தம் முகத்தில் அறைந்தது.
'' 'பெத்தவங்களை இழந்து நிறையக் குழந்தைங்க அழுதுட்டுத் திரியுறாங்க. வாங்க, போய்ப் பார்ப்போம்’னு என் மனைவிதான் அழைச்சுட்டுப் போனாங்க. சாமந்தான் பேட்டை கடற்கரைக் கிராமத்துக்கு நாங்க போனப்போ, பல சடலங்கள் மீட்கப்படலை. பெத்தவங்களை இழந்து நாலு சின்னப் பசங்க தவிச்சுப்போய் நின்னாங்க. அவங்களை எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தோம். முதல்ல சாப்பாடு சமைச்சு எல்லோரும் சாப்பிட்டோம். அப்பதான் இவங்களைப் போலவே இன்னும் நிறையக் குழந்தைங்க நிர்கதியா நிக்கிறதை நினைச்சுப்பார்த்தோம். பிள்ளைங்களை இழந்துட்டு நாங்க அநாதையா நின்னது மாதிரி, இவங்க தங்களைப் பெத்தவங்களை இழந்துட்டு நின்னாங்க. இனி நாமதான் இவங்களைப் பார்த்துக்கணும்; ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா இருக்கணும்னு நினைச்சோம். வரிசையா ஒவ்வொருத்தரா வந்து சேர ஆரம்பிச்சாங்க!'' என்கிறார் பரமேஸ்வரன்.
மொத்தமாக 36 குழந்தைகளை இவர்கள் அரவணைத்திருக்கிறார்கள். அப்போது சிறுவர், சிறுமியராக வந்தவர்கள் அனைவரும், இப்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள்; நம்பிக்கை இல்லத்தில் உற்சாகமாக உலா வருகின்றனர். கடல் பார்த்த பரமேஸ்வரனின் வீடுதான், இப்போது 'நம்பிக்கை இல்லம்’!
''இவங்க வந்து சேர்ந்த பின்னாடி எங்களுக்கு ரெண்டு குழந்தைங்க பிறந்தாங்க. ஷெமாயா, மிக்காயா. ஷெமாயா என்றால், புதிய தலைமுறை. மிக்காயா என்றால், தீர்க்கதரிசி. இவங்களையும் சேர்த்து இந்த நம்பிக்கை இல்லத்துல மொத்தம் 38 குழந்தைகள். இப்போ எல்லாரும் வளர்ந்துட்டாங்க. இவங்க எல்லாரையும் சின்ன வயசுலேருந்து வளர்த்தது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. எப்பவும் அழுகைச் சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும். அம்மா, அப்பா இறந்துட்டாங்கங்கிறதைப் புரிஞ்சுக்கிற வயசு இல்லை. எதை, எதையோ சொல்லி சமாதானப்படுத்தணும். 'அம்மா, அப்பா ஊருக்குப் போயிருக்காங்க’னு முழுப் பொய்யும் சொல்ல முடியாது. ஏன்னா, குழந்தைங்கள்ல விவரம் தெரிஞ்சவங்களும் இருந்தாங்க. அதுவும் போக, வீட்டைவிட்டு வெளியில் போனா, சுனாமி பாதிப்பு இல்லாத குடும்பமே கிடையாது. அதனால் உண்மைகளைச் சொல்லித்தான் வளர்த்தோம். எல்லார் மனசுலயும் சோகமும் வெறுமையும் நிறைஞ்சுருக்கும். திடீர்னு மன அழுத்தத்துக்கு ஆளாகிடுவாங்க. அதைப் புரிஞ்சு அவங்களை வழிநடத்தணும். நிறைய செலவுகள். சாப்பாடு, டிரெஸ்... எல்லாத்துக்கும் எங்க சம்பளப் பணத்தைச் செலவு செய்வோம். ரெண்டு பேரும் வேலைபார்த்ததால், சமாளிக்க முடிஞ்சது. வெளிய இருந்தும் சில உதவிகள் கிடைச்சது. 'இவங்களுக்கு ஏன் இந்தத் தேவை இல்லாத வேலை?’னு பலர் சொன்னாங்க. நாங்க அதைக் கண்டுக்கலை. சுனாமி பாதிப்பைப் பார்வையிட வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் என்னைக் கூப்பிட்டுப் பேசிய பிறகுதான் எல்லாரும் எங்களைக் கவனிச்சாங்க. இந்த இல்லத்துல தங்கிப் படிக்கிற பசங்க, சுயமா சொந்தக் காலில் நிற்கும் வரை நாங்களே எல்லா உதவிகளும் செய்றோம். ஒருசில பசங்க படிச்சுட்டு வேலைக்கும் போக ஆரம்பிச்சுட்டாங்க. மத்தவங்களை எங்களால முடிஞ்ச அளவுக்குப் படிக்கவெச்சு, வேலை வாங்கித் தர்றோம்.
அன்னைக்கு வந்த சுனாமி எங்க மூணு பிள்ளைங்களின் உயிரைப் பறிச்சது. அதுக்குப் பதிலா 38 பிள்ளைகள் இங்கே வளர்கிறார்கள்.  ஒருவேளை அன்னைக்கு நாங்க தற்கொலை செஞ்சிருந்தா, இவங்கள்லாம் எங்கே, என்ன பண்ணிட்டு இருப்பாங்கனு யோசிக்கவே முடியலை. சுனாமிக்குப் பிறகு எங்க வாழ்க்கை சூன்யம்னு நினைச்சோம். ஆனா, அதுக்கு அர்த்தம் கிடைச்சது இந்தப் பிள்ளைங்களால் தான்!'' - குழந்தைகளை அணைத்துக்கொண்டு சிரிக்கிறார் பரமேஸ்வரன்.
அதே கடல்தான்... அதே இல்லம்தான்... இப்போது அந்த இல்லத்தின் பெயர் நம்பிக்கை!

ரியல் எஸ்டேட்... ரியல் அப்டேட்! திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்பாட் ரேட் நிலவரம்!

- Vikatan article

ரியல் எஸ்டேட்... ரியல் அப்டேட்!
திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்பாட் ரேட் நிலவரம்!
மு.கோதாஸ்ரீ படங்கள்: தே.தீட்ஷித்.
அடித்தட்டு மக்களாகட்டும் அல்லது மேல்தட்டு மக்களாகட்டும் சொந்த வீடு என்பது அடிப்படைத் தேவை  என்றாகிவிட்டது. முந்தைய காலத்தில் பரம்பரை பரம்பரையாகக் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்ததால், ஒவ்வொருவருக்கும் சொந்தமாக வீடு என்று ஒன்று இருக்கவே செய்தது. ஆனால், இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் ஊர்விட்டு ஊர் மாறுவது சர்வசாதாரணம் என்றாகிவிட்டது.
இப்படி வேலை நிமித்தமாக எந்த ஊரில் வசித்தாலும் ஓய்வுக்காலத்தில் மனதுக்குப் பிடித்த ஊரில் செட்டிலாக வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உண்டு. ஆன்மிகத்தில் அதிக நாட்டமுள்ள பக்தர்கள் தங்கள் ஓய்வுக்காலத்தில் ஸ்ரீரங்கத்தில் செட்டிலாக விரும்புவதுண்டு.
60 வயதைத் தாண்டிய பலரும் கடந்த 10-15 வருடங்களாக இப்படி வந்து ஸ்ரீரங்கத்தில் செட்டிலாக விரும்புவதால், அங்கு ரியல் எஸ்டேட் விலை உயர்ந்துகொண்டே போகிறது.
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் எஸ்.ராமசுப்ரமணியம் இப்படி சொன்னார். “ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றி உள்ள சப்தபிரகார பகுதிகளில் இப்போது ரிஜிஸ்ட்ரேஷன் கிடையாது. மேலும், கோயிலைச் சுற்றி உள்ள நிலங்கள் ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தம் என்ற வழக்கு ஹைகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதனால் அதிக மனைகள் கிடைப்பது இல்லை என்பதால், கடந்த ஐந்து வருடங்களாக ஸ்ரீரங்கத்தில் மனை விலை மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதனால் நிலத்துக்குச்  சொந்தக்காரர் சொல்வதுதான் விலையாக உள்ளது. பத்திரப் பதிவு இல்லாத இடங் களில் இந்த விலை நிர்ணயம் குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது. மேலும், அண்மை ஆண்டுகளில் தமிழக அரசு வழிகாட்டி மதிப்பை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது.
ஸ்ரீரங்கத்தில் பிரதான பகுதிகளில் மனை ஒரு சதுர அடி ரூ.5,000 - 7,000ஆக உள்ளது. விலை அதிகம் என்றாலும் பெரும்பாலானோர் குறிப்பாக, வெளிநாடுவாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐகள்) ஸ்ரீரங்கம் பகுதியையே தேர்ந்தெடுக் கின்றனர். விலை அதிகமாக இருந்தாலும் அரங்கனை சுற்றி உள்ள பகுதி அமைதியானது என்பதே காரணம். சப்தபிரகாரம் தவிர்த்து, ஸ்ரீரங்கத்து பகுதிகளான மேலூர், தெப்பக்குளம், நெடுந்தெரு போன்ற பகுதிகளில் பத்திரப் பதிவு உண்டு.”
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பில்டர் முரளிதரன், ‘‘ஸ்ரீரங்கத்தின் முக்கியப் பிரச்னை, மனை விலை மிக அதிகம் என்பதுதான். இந்த அளவுக்கு அதிகமாக திருவானைக்கோவில், சமயபுரம் போன்ற இடங்களில் இல்லை. வெளிமாநிலங்கள், நாடுகளில் வாழ்பவர்கள் இங்குச் சொந்த வீடு வாங்கி செட்டிலாக விரும்புகிறார்கள். இதனால், முக்கிய பில்டர்கள் மற்றும் புரமோட்டர்களின் ஆர்வம் ஸ்ரீரங்கத்தை நோக்கி உள்ளது. இதனால் இங்கு பில்டர்களுக்கு இடையே நல்ல போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டி யால் சில பில்டர்கள், தங்களின் லாபத்தைக் குறைத்து அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலையைக் குறைத்தும் தருகிறார்கள்.
மனை விலை அதிகமாகிவிட்டது. கூடவே, கட்டுமானப் பொருட்களான செங்கல், மணல், ஜல்லி என பல பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டன. இதனால், நடுத்தர வருமானப் பிரிவினர் வாங்கும் அளவுக்கு வீட்டின் விலை இல்லை. இதனால் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளை விற்பதில்கூட சிரமம் வருகிறது. தற்போதைய நிலையில் ஸ்ரீரங்கத்தில் அதிக வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், அந்த அளவுக்கு டிமாண்ட் இல்லை என்பதால் விற்பனையில் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது.
நடுத்தர வருமானப் பிரிவினரும் வீடு வாங்க வேண்டும் என்பதால் ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய ஏதுவாக உள்ள இடங்களைத் தேர்வு செய்கிறோம். ஆனால், அந்தமாதிரியான இடங்கள் ஸ்ரீரங்கத்தில் மிகக் குறைவு. சொத்துப் பத்திரம் இருந்தால் மட்டுமே கடன் பெற முடியும். தற்போது சொந்த ஊரிலேயே வேலை பார்த்து, அங்கேயே செட்டில் ஆகிறவர்கள் மிக மிகக் குறைவு.
வேலை விஷயமாக வெளியில் செல்பவர்கள் அங்கேயே செட்டில் ஆவதால், இங்குள்ள பூர்வீக வீட்டை எப்படியாவது விற்றுவிடத் தான் ஆசைப்படுகிறார்கள். இடத்தேவை அதிகம். ஆனால், இருப்புக் குறைவு, இதனால் இடத்துக்காரர்கள் சொல்லும் விலை மிக அதிகமாக உள்ளது” என்றவர், ஸ்ரீரங்கத்தில் பொதுவாக, தனி வீடுகள் ரூ.40 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை, அதற்கும் அதிக மாகவும்கூட விற்பனையாவதாகச் சொன்னார். அடுக்குமாடிக் குடியிருப்பு ரூ.35 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை விலை போகிறதாம்.
ஸ்ரீரங்கத்தில் மனை வாங்கி வீடு கட்டும் நரசிம்மன் என்பவருடன் பேசினோம். ‘‘ஸ்ரீரங்கத்தைப் பொறுத்தவரை, கட்டடத்தின் மதிப்பைவிட நிலத்தின் மதிப்புதான் அதிகம். பழங்கால கல் கட்டடத்துக்கு மதிப்பு குறைவு.
ஒருகாலத்தில் வெறும் வயல் வெளியாக இருந்த ஸ்ரீரங்கத்தின் சுற்றுப்பகுதி இன்று கமர்ஷியல் இடமாக மாறிவிட்டது. அதிகம் பேர் இங்கு வீடு வாங்க ஆசைப்படுவதால், அதற்கு ஏற்றமாதிரி விலையும் அதிகமாகி, இன்று திருச்சியிலேயே அதிக விலை மதிப்புமிக்கப் பகுதியாக இருக்கிறது.
ஸ்ரீரங்கத்து சுற்றுவட்டாரப் பகுதியான தசாவதார சன்னதி, மேலூர், அம்மா மண்டபப் பகுதி களில் அடுக்குமாடி வீடுகள் ரூ.40 லட்சம் முதல் கிடைக்கிறது.  உள்வீதிகளில் வீடு கட்டுவது காஸ்ட்லி என்றாலும், அதற்கான நன்மைகள் அதிகம். அடிப்படை தேவைகளான மார்க்கெட், போக்குவரத்து, கோயில், அமைதியான சூழல் என அதிகம். இந்த வசதிகள் வெளிப்பகுதிகளில் குறைவு. ஆக, ஸ்ரீரங்கத்தில் வீடு கட்டுவதன் மூலம் எனக்கு லாபமே கிடைக்கும்’’ என்றார்.
ஸ்ரீரங்கம் என்கிற ஆன்மிக பூமியை பக்தர்கள் பலரும் நாடிச் செல்வதில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும்?  

தண்ணீர்... கண்ணீர்! நிஜ ‘கத்தி’ விவகாரம்

- Junior Vikatan

வங்க பசிக்குப் பிச்சை கேக்கல, விவசாயத்துக்கு தண்ணி கேக்குறாங்க’  இந்த வசனம் 'கத்தி’ திரைப்படத்தில் வரும். விவசாயத்துக்கான தண்ணீரைத் திருடும் ஒரு குளிர்பான ஆலைக்கு எதிராகப் பேசப்படும் இந்த வசனம் இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் உண்மையாகி இருக்கிறது.
 ஏற்கெனவே நீராதாரம் போதாமல் மக்கள் தவிக்கும் நிலையில், ஒரு தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளித்திருப்பது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் காட்டிய எதிர்ப்புக்குப்் பிறகு பெருந்துறை யூனியன் அலுவலகத்தில் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பெருந்துறை, சென்னிமலை, காஞ்சிக்கோவில், ஊத்துக்குளி உள்ளிட்ட 25 ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள், ஆலை நிர்வாகத்தினர், டி.ஆர்.ஓ சதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் ஆலை சார்பாகக் கலந்து கொண்ட நிர்வாகி சத்யா, ''இதுவரை ஒரு லிட்டர் கோலா தயாரிக்க 3.62 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தினோம். பலகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 1.2 லிட்டர் நீரைத்தான் பயன்படுத்தி வருகிறோம். எங்களால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது' என்று சொல்லிவிட்டு விளம்பரங்களைக் காட்டத் தொடங்கினார். மக்கள், 'உங்களின் திட்ட வரைவு அறிக்கை எங்களுக்கு வேண்டும்’ என்று சொல்ல அவர் மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் அமர்ந்துவிட்டார். அனைத்து மக்களின் பலத்த எதிர்ப்புக்குப் பிறகு, ''குளிர்பான நிறுவனம், பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோரின் கருத்துகளை அறிக்கையாகத் தயார்செய்து அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும்'' என்று சொல்லி டி.ஆர்.ஓ கூட்டத்தை முடித்தார்.
கூடங்குளம் போராட்டத்தில் கலந்து கொண்டவரும் சகாயம் ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்தவருமான முகிலன், 'நானும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவன்தான். ஏற்கெனவே இங்கு சாய, சலவை, பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், 25 கிராமங்களின் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிவிட்டனர். ஆலை சார்பாக தினமும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை என்று கேட்டுள்ளனர். அவர்களின் கணக்கு எல்லாம் திருப்பூர் திட்டத்துக்குச் செல்லும் காவிரி திட்டத்தில் இருந்து நீர் பெற்றுக்கொள்ளலாம் என்பதுதான். அப்படி அவர்கள் எடுத்தால் விவசாயத்துக்கு இருக்கும் கொஞ்சம் தண்ணீரும் திருடப்பட்டுவிடும். ஏழை விவசாயி எங்குதான் போவான்? இந்தியாவில் செயல்பட்டுவரும் 24 கோலா ஆலைகளும் இப்படி பிரச்னையில்தான் இயங்குகின்றன. சமீபத்தில்கூட வாரணாசியில் விதிமுறைகளுக்கு அதிகமாக தண்ணீர் எடுத்த கோலா நிறுவனம் மூடப்பட்டது. கேரளாவில் இவர்களின் நிறுவனம் 8 வருட தொடர் போராட்டங்களால் மூடப்பட்டது. ஆனால், இங்கே அரசு இவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது. பெருமுதலாளிகளுக்கான வளர்ச்சிதான் தொழில் வளர்ச்சியா? தி.மு.க ஆட்சியில் இதே சிப்காட்டில் தொடங்கப்பட இருந்த நச்சுக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு எதிராகவும் மக்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்த இன்றைய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், உடனடியாக இதில் ஒரு தீர்வு காண வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
பெருந்துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவர் கந்தசாமி, ''இந்த நிறுவனத்தின் தரப்பில் நிறுவனத்துக்்காக நாங்கள் எந்த ஒரு ஆழ்துளை கிணற்றையும் அமைக்க மாட்டோம் என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போது இந்த ஆலையின் வளாகத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 71.34 ஏக்கர் நிலப்பரப்புக்குள் 10 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் பேச்சைக் கேட்டு, நிறுவனம் அமைய நாம் அனுமதி கொடுத்தால் நம்மை அழித்துவிடுவார்கள். மேலும் இந்தப் பகுதி விவசாயி ஒருவர் வெளிநாடுகளுக்கு இயற்கை விவசாய காய்கறிகளை ஏற்றுமதி செய்து வந்தார். ஆனால், அவரது ஏற்றுமதி காய்கறிகளை வெளிநாட்டில் இருந்து திருப்பி அனுப்பிவிட்டனர். காரணம், அந்தக் காய்கறிகளில் நச்சுத்தன்மை இருப்பதாகக் கூறுகின்றனர். இதற்குக் காரணம் ஏற்கெனவே இந்தப் பகுதியில் இருக்கும் சிப்காட் நிறுவனத்தால் வெளியிடப்படும் நச்சுக்கழிவுகள் இவரது நிலத்தில் கலந்து இருப்பதுதான். எனவே  இந்த நிறுவனம் அமைய எந்தவித அனுமதியும் கொடுக்கக் கூடாது. சிப்காட்டை சுற்றி இருக்கும் பகுதிகளில் 20 பேரில் ஒருவருக்கு புற்றுநோய், 40,000 டன்கள் விஷக் குப்பை, பெண்கள் மற்றும் கால்நடைகளுக்கு மலட்டுத்தன்மை... இவைதான் இவர்கள் இதுவரை நமக்குக் கொடுத்த பரிசுகள். கேரளத்தில் நேர்ந்ததுபோல இங்கு நடக்க நாங்கள் விடமாட்டோம்'' என்று கொந்தளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தின் கருத்தை அறிய பலமுறை தொடர்புகொண்டோம். ஆனால், அவர் நம்மிடம் பேசவில்லை.
கண்ணை விற்றுச் சித்திரம் வரைய நினைப்பது முட்டாள்தனம். மண்ணை விற்று வாழ நினைப்பது?
மா.அ.மோகன் பிரபாகரன், கு.ஆனந்தராஜ்
படங்கள்: ரமேஷ் கந்தசாமி