Saturday, January 4, 2014

விகடன் விருதுகள் 2013 - 2

சிறந்த குழந்தை நட்சத்திரம் - பிருத்விராஜ் தாஸ் - ஹரிதாஸ்
வர் சவடால், வயதுக்கு மீறிய வீராப்பு காட்டித் திரிந்த தமிழ் சினிமா சிறுவர்களிடையே, 'ஹரிதாஸ்’ கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சர்யம். ஆட்டிஸம் பாதித்த சிறுவனாக, நிலையில்லாமல் ஆடிக்கொண்டே இருக்கும் தலையும் கவலை தோய்ந்த முகமுமாக 'சிறப்புச் சிறுவன்’ ஹரிதாஸ் பாத்திரத்துக்கு உணர்வும் உருக்கமுமாகப் பொருந்தினான் பிருத்விராஜ் தாஸ். முதல் பார்வையில் பரிதாபம் கொள்ளவைத்த பிருத்வியின் நடிப்பு, அடுத்தடுத்த அத்தியாயங்களில் ஹரிதாஸின் உற்சாகத்தை நமக்குள்ளும் கடத்திய தேர்ச்சியில், சிறப்பு அந்தஸ்து பெறுகிறது. கதையின் மைய இழையே தாம்தான் என்ற புரிதலுடன் சிறு மில்லிமீட்டர்கூட கூடுதல் குறைவாக நடிக்காத அந்தக் கலை, பிருத்வியின் வயதுக்கு அதிசயம்!
சிறந்த இசையமைப்பாளர் - இளையராஜா - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ போன்ற அரிதான படங்கள்தான் இசைக்கும் கதைக்குமான நெருங்கிய தொடர்பை உணரவைக்கின்றன. ஓர் இரவில் நடக்கும் கதையின் உச்சகட்டப் பதற்றத்தை ரசிகனுக்குக் கடத்தி சீட் நுனிக்குத் தள்ளியதில் ராஜாவின் 'முன்னணி’ இசைக்கு பெரும் பங்கு. பாடல்களே இல்லாத படத்தில் வசனமே இல்லாத பல இடங்களில் தன் பின்னணி இசையின் துணைகொண்டு த்ரில்லிங் சேர்த்திருக்கிறது இளையராஜாவின் மாஸ்டர் நோட்ஸ். பின்னணி இசையை மட்டுமே வெளியிட்டு அதற்கும் ரசிக மனங்களைப் பழக்கி, இசை ரசனையை அடுத்த கட்டத்துக்குக் கவ்விச் சென்றிருக்கிறது 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’!
சிறந்த ஒளிப்பதிவு - செழியன் - பரதேசி
முட்டுச்சந்துகளும் இருட்டுக் குடிசைகளுமான சாலூர் கிராமம், பஞ்சம் பிழைக்கச் செல்லும் வதைப் பயணம், பச்சைப் பசேல் சித்ரவதை முகாமாக விரியும் தேயிலைத் தோட்டம்... என 'பரதேசி’ படத்தின் துன்பியல் உணர்ச்சிகளை, உள்ளது உள்ளபடி கடத்தியது செழியனின் ஒளிப்பதிவு. ஊர், உறவு சனமே நடுவழியில் விட்டுச் செல்ல, துளி உயிர் சேகரித்து உயரும் ஒற்றைக் கை, 'நியாயமாரே...’ என்று அதர்வா கதறும்போது எட்டுத் திக்கும் சுற்றி வரும் கேமரா... என 'பரதேசி’ படத்தின் துயரத்தை பெரும்பாரமாகப் பதிவுசெய்தது செழியனின் ஒளிப்பதிவு வியூகங்கள்!  
சிறந்த படத்தொகுப்பு - அல்ஃபோன்ஸ் புத்தரன் - நேரம்
முதல் சில நிமிட 'பில்ட்-அப்’களுக்குப் பிறகு ஒரே நாளின் மாலை 5 மணிக்குள் நடக்கும் சம்பவங்கள்தான் 'நேரம்’ படத்தின் திரைக்கதை. இந்தச் சவாலை மிகவும் சுவாரஸ்யமாகச் சமாளித்திருந்தது அல்ஃபோன்ஸ் புத்தரனின் படத்தொகுப்பு. நிவின்,  பணத்தைப் பறிகொடுப்பது, நஸ்ரியா செயின் திருடுபோவது, நிவினை வில்லன் தேடுவது, நஸ்ரியா கடத்தப்படுவது, தங்கை கணவனின் வரதட்சணைப் பஞ்சாயத்து, நாசர் - தம்பி அத்தியாயங்கள், 'மாலை 5 மணி டெட்லைனுக்குள்’ பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வு என பரபர சம்பவங்களின் விதவித அடுக்குகளை, கச்சிதமாகத் தொகுத்திருந்தது அல்ஃபோன்ஸின் எடிட்டிங். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் 10 விநாடிப் பரபரப்பை 100 நிமிடங்களுக்கும் மேலாகத் தக்கவைத்ததில் ஸ்கோர் செய்கிறார் படத்தின் இயக்குநருமான அல்ஃபோன்ஸ்!
சிறந்த திரைக்கதை  - நலன் குமரசாமி - சூது கவ்வும்
காமெடி, திகில், சென்ட்டிமென்ட், ஆக்ஷன், கிளாமர்... என எதற்கும் தனித்தனி சீன் பிரிக்காமல், அனைத்துக் காட்சிகளிலும் அனைத்தையும் நீக்கமற நிறைந்திருக்கச் செய்த 'சூது கவ்வும்’ திரைக்கதை... பிரதி எடுக்க முடியாத ஸ்பெஷல். அச்சுபிச்சுக் கடத்தல்காரர்கள் ஐந்து லாஜிக்குகளோடு ஆள் கடத்தலில் ஈடுபடும் கதை, சற்றே கரணம் தப்பினாலும் சொதப்பியிருக்கக்கூடும். ஆனால், அதை சாகச சாதனையாக மாற்றி ரெவ்யூ, ரெவின்யூ இரண்டிலும் ஹிட் அடித்தது 'சூது கவ்வும்’ படை. முதல் காட்சியிலேயே கதையை ஆரம்பித்து இறுதிக் காட்சி வரை கலகலப்பு சேர்த்தது, படம் நெடுக கதாபாத்திரங்கள் அறிமுகமானாலும் சோர்வு உண்டாக்காதது, நம்பமுடியாத சம்பவங்களையும் லாஜிக் மேஜிக் மறந்து எக்ஸ்பிரஸ் வேகத்தில் கடத்தியது என ரசிகர்களை 'ஒன்ஸ்மோர்’ பார்க்கவைத்ததில் திரைக்கதையின் ஃபேன்டசிக்கு ஆயிரம் லைக்ஸ்!
சிறந்த கதை - வி.இசட்.துரை - 6 மெழுகுவத்திகள்
வாரத்தில் மூன்று முறையேனும் 'குழந்தைக் கடத்தல்’ செய்திகளை வாசிக்கிறோம். படிக்கும் கணத்தில் உறைந்து, பின் மறந்து, கடந்தும்போகிறோம். ஆனால், அந்தக் குழந்தைக் கடத்தல் நெட்வொர்க்கின் வேர் தேடி வெளிச்சம் பாய்ச்சிய '6 மெழுகுவத்திகள்’ கதை... திக் திகீர் அதிர்ச்சி. குக்கிராமம் வரையிலான குழந்தைக் கடத்தலின் ஊடுருவல், தேசம் முழுக்கப் பயணிக்கும் நெட்வொர்க் பரவல், கடத்தப்படும் குழந்தைகள் பலப்பல தொழில்களில் சிதைக்கப்படும் தகவல்... என திரைக்கதையின் ஒவ்வோர் அத்தியாயமும் அத்தனை கனம்... ரணம். பொது இடங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கூடுதல் பாதுகாப்புடன் அரவணைத்துக்கொள்ளவும், குழந்தைத் தொழிலாளர்கள் மீது கரிசனம் கொள்ளவும் ஒருசேரக் கற்றுக்கொடுத்த '6 மெழுகுவத்திகள்’ படம்... நிச்சயம் பாடம். இதற்கான வி.இசட்.துரையின் உழைப்புக்கும் மெனக்கெடலுக்கும் ஒரு பெரிய பூங்கொத்து!
சிறந்த வசனம்  - நவீன் ஷேக் தாவூத் - மூடர் கூடம்
'எடுக்கிறவன் மட்டுமில்லை... எடுக்க விடாமத் தடுக்கிறவனும் திருடன்தான்’, 'நாம நாலு பேர்ல நீங்க மட்டும் ஹீரோனு யாராச்சும் சொன்னாங்களா பாஸ்?’, 'ஒண்ணுக்கைக்கூட கன்ட்ரோல் பண்ணத் தெரியாதவன், ஒரு ஏரியாவையே எப்படி கன்ட்ரோல் பண்ணுவான்?’, 'எவனோ ஒருத்தன் எழுதிவெச்ச வாழ்க்கையை அப்படியே வாழ்ந்துட்டுப் போக நாம ஒண்ணும் கம்ப்யூட்டர் புரோகிராம் இல்லை’, 'சுடுறதுக்குத்தான்டா துப்பாக்கி வேணும். சுட மாட்டேன்னு சொல்றதுக்குக்கூடவா துப்பாக்கி வேணும்?’ - பிஸ்டல் தோட்டாவாக பளீர் சுளீரென வெடித்தது 'மூடர்’களின் ஒவ்வொரு ஸ்டேட்மென்ட்டும். எளிய மனிதர்களின் நியாயங்கள், புத்திசாலிகளின் திருட்டுத்தனம், திருட வந்தவர்களின் மனிதாபிமானம்... என ஒவ்வொரு கட்டத்திலும் பின்னணி அரசியலைப் புரியவைத்தது 'மூடர் கூடம்’ இயக்குநர் நவீனின் வசனங்கள்.
சிறந்த சண்டைப் பயிற்சி - கேச்சா - லீ விட்டேக்கர் - ரமேஷ் - விஸ்வரூபம்
ளினம் மிளிரும் கதக் கமல், சட்டென ஒரு நொடியில் 'சதக்’ கமலாகும் விஸ்வரூபத்தின் அந்த ஆக்ஷன் அத்தியாயம்... பட்படீர் பட்டாசு. ''சாகிறதுக்கு முன்னாடி ஒருதடவை பிரேயர் பண்ணிக்கிறேன்'' என்று அழுது விம்மிவிட்டு, எதிரிகள் சுதாரிக்கும் 'நீர்த்துளி’ நொடிக்குள் கமல் அனைவரையும் பொளந்தெடுக்கும் அதிரடி ஆக்ஷனைப் பொறிபறக்க வடிவமைத்தது கேச்சா, லீ விட்டேக்கர், ரமேஷ்... ஆகியோரின் நேர்த்தி. தாய்லாந்து ஆக்ஷன் இயக்குநரான கேச்சா, ஏற்கெனவே சில இந்தியப் படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். 'பேர்ள் ஹார்பர்’ உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களுக்கான சண்டைக் காட்சிகள் அமைத்தவர் லீ விட்டேக்கர். ஹாலிவுட் ஆக்ஷன் இயக்குநர்களுக்கு சமமாக சண்டைக் காட்சிகளை வடிவமைத்து ஸ்கோர் செய்தார் ரமேஷ். சென்ட்டிமென்ட்டில், உருக்கத்தில் 'உலக சினிமா’ தரத்தை எட்டியிருக்கும் தமிழ் சினிமாவின் ஆக்ஷன் அத்தியாயங்களை 'ஹாலிவுட் தரத்துக்கு’க் கொண்டுசென்றது விஸ்வரூபம்!
சிறந்த நடன இயக்குநர் - பண்டிட் பிர்ஜூ மஹாராஜ் -
'உன்னைக் காணாது நான் இன்று...’  - விஸ்வரூபம்
பெண்மையும் மென்மையும் நிரம்பி நளினம் ததும்பும் கதக் கலைஞனாக கமல் ஹாசனை முதல் பார்வையிலேயே நம்பவைத்தன 'உன்னைக் காணாது நான் இன்று...’ பாடலில் பிர்ஜு மஹாராஜின் கதக் அசைவுகள். 13 வயது முதல் கதக் கற்றுக்கொடுத்து வரும் பிர்ஜு மஹாராஜ், சினிமா பாடல்களுக்கு விரும்பி நடனம் அமைக்காதவர். ஆனால், கமல்-பிர்ஜு கூட்டணியின் ரசவாதம், சிறந்த நடன அமைப்புக்கான தேசிய விருதை வென்றிருக்கிறது. சேனல்களில் தடதடத்துக்கொண்டு இருக்கும் டிஸ்கொதெ, ராப் நடனங்களுக்கு இடையே இந்த கதக் ஆட்டத்தை சினிமா பிடித்தவர்கள்/பிடிக்காதவர்கள், கதக் ரசிகர்கள்/அறிமுகமே இல்லாதவர்கள், கமல் ரசிகர்கள்/மற்றவர்கள் என அனைவரிடமும் அழகிய கலையாகப் பதிவுசெய்ய வைத்தது பிர்ஜுவின் அனுபவ சாமர்த்தியம்!
சிறந்த கலை இயக்கம் - 'தோர்’ தவிபசாஸ்  லால்குடி ந.இளையராஜா - விஸ்வரூபம்
'விஸ்வரூபம்’ படத்தின் கதைக்களமான ஆஃப்கானிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் என உலகின் பதற்றப் பிரதேசங்களை சென்னை மைதானங்களில் எழுப்பி மிரளச்செய்தது 'தோர்’ தவிபசாஸ்-லால்குடி ந.இளையராஜா கூட்டணியின் கலை இயக்கம். தீவிரவாத முகாம்கள், அமெரிக்க இல்லங்கள், ஹெலிபேடுகள்... என படம் முழுக்க அசல் எது, நகல் எது என கண்டுபிடிக்க முடியாத வார்ப்பு படிந்திருந்ததே, 'சிறந்த கலை இயக்கத்துக்கான’ தேசிய விருதை இந்த இருவர் கூட்டணி வசம் சேர்த்திருக்கிறது. ''கலை இயக்குநர்கள் கேமரா ஃப்ரேமுக்காக செட் அமைப்பார்கள். ஆனால், என் செட்டுக்காக கேமரா ஆங்கிளை இயக்குநர் மாத்தும் அளவுக்கு உழைக்கணும். மத்தவங்களை மலைக்கவைக்கணும்!'' என்று சொல்லும் இளையராஜா, கும்பகோணம் கலைக் கல்லூரி விஸ்காம் அண்ட் டிசைனிங் துறைப் பட்டதாரி. தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 'தோர்’ தவிபசாஸ் தாய்லாந்து மற்றும் ஆங்கில சினிமாக்களில் முத்திரை படைக்கும் படைப்பாளி!
சிறந்த ஆடை வடிவமைப்பு - பூர்ணிமா ராமசாமி,  பெருமாள் செல்வம் - பரதேசி
'பரதேசி’ படக் கதாபாத்திரங்களுக்கான ஆடைகள், சந்தைகளிலும் மால்களிலும் கிடைக்காத மெட்டீரியல். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய ஆடைகளை வடிவமைத்ததில் பூர்ணிமாவின் அறிவுத்தேடலுக்கும் பெருமாள் செல்வத்தின் அனுபவத் தையலுக்கும் சம பங்கு. ஆடை விற்பனைத் தொழிலைப் பாரம்பரியமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்த பூர்ணிமா, சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தின் நாகரிக மாதிரிகளைத் திரட்டியிருக்கிறார். படத்தின் ஆடை வடிவமைப்பாளரான 51 வயது பெருமாள் செல்வம், அடிப்படையில் ஒரு தையல்காரரின் மகன். புதுத் துணிகளைப் பண்படுத்தி அழுக்கேற்றி கந்தல் ஆடைகளாக்கினர். 'கந்தலானாலும் கசக்கிக் கட்டு’ என்பதைப் புரட்டிப் போட்டு, கசக்கிக் கசக்கியே கந்தலாக்கிய உழைப்பே படத்தின் கதாபாத்திரங்களை 'பரதேசி’களாக்கியது!
சிறந்த ஒப்பனை - ராலிஸ்கான், கேஜ்ஹப்பர்ட் - விஸ்வரூபம்
'தசாவதாரம்’ படத்தில் 10 கமல்களையும் வித்தியாசத்துடன் வடிவமைத்த அமெரிக்கர் ராலிஸ்கானுடன் விஸ்வரூபத் துக்காக கூட்டணி சேர்ந்தார் கேஜ் ஹப்பர்ட். இவர்கள்தான் 'விஸ்வரூபம்’ படத்தில் அமெரிக்கா, ஆஃப்கானிஸ்தான், காஷ்மீர் என வெவ்வேறு தேசத்தினரை ஒரே சாயல் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களிடையே உருவாக்கியிருக்கிறார்கள். இதில் கமல் ஹாசனுக்கு மூன்று வித்தியாசமான கெட்-அப்கள் கொடுத்தது இன்னோர் அத்தியாயம். விஸ்வரூபத்தில் ஒற்றைக்கண் வில்லன், ஆஃப்கான் ஜிகாத்கள், கதக் கலைஞர்கள், அமெரிக்க ராணுவத்தினர் என எட்டுத்திக்கு மாந்தர்களையும் கண் முன்னே உலவவைத்தார்கள் இவர்கள்!
சிறந்த பாடலாசிரியர்  - நா.முத்துக்குமார் - 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்...’ தங்கமீன்கள்
ப்ரோ, ட்யூட், ஹனி, மினிகளுக்கு இடையில் ஆனந்த யாழை மீட்டியது நா.முத்துக்குமாரின் ஆனந்த வரிகள். படா பப்ளிசிட்டி, நட்சத்திர ஓப்பனிங், மாஸ் மசாலா என வணிகக் காந்தங்கள் இல்லாத 'தங்கமீன்கள்’ நோக்கி ரசிகர் தூண்டில்களை ஈர்த்ததில் 'ஆனந்த யாழ்’ மெலடிக்கு பெரும் பங்கு இருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் துள்ளல் இசைப் பள்ளத்தாக்குகளில் பாசப்பசுமை வார்த்தைகளை இட்டு நிரப்பியது நா.முத்துக்குமாரின் பேனா. எஃப்.எம். கோரிக்கைகள், இசை சேனல் டெடிகேட்கள், செல்போன் காலர் டியூன், ரிங்டோன்கள் என தமிழகத்தை 'யாழ் சூழ் உலகாக’ சில காலம் ஆக்கியிருந்தது அந்த மென்மெலடி. அம்மா-மகன் பாச மெலடிகளுக்கு ஏகப்பட்ட சாய்ஸ்கள் கொட்டிக் குவிந்திருக்க, அப்பா-மகள் பாச அத்தியாயத்தின் கீதமாக 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்...’ பச்சக்கென மனதில் ஒட்டிக்கொண்டது!
சிறந்த பின்னணிப் பாடகர்  - ஹரிஹரசுதன் - 'ஊதாக்கலரு ரிப்பன்...’
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
'ஊதாக்கலரு ரிப்பன்’தான் இந்த ஆண்டின் ஆல் கிளாஸ் மாஸ் ஹிட் நம்பர். பாடலின் ஆரம்பத்தில் 'ஊதா££...’ என்று ஹரிஹரசுதனின் குரல் சுதி மீட்டும்போதே, உள்ளம் முதல் உள்ளங்கால் வரை தன்னாலே துள்ளாட்டம் போடுகின்றன. எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்து ஹரிஹரசுதனின் குரல் டோனுக்கு டி-20 யுக இமானின் துள்ளல் இசை பக்கா பேக்கேஜாக அமைந்து சிட்டி முதல் பட்டி வரை ஊதா நிற ரிப்பனைப் பறக்கவிட்டது! அப்பாவுடன் பூஜைகளுக்குச் செல்லும்போது ஐயப்பப் பாடல்கள் பாடுவதில் தொடங்கிய ஹரியின் ஆர்வம், விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வரை கொண்டுவந்தது. கோரஸ் குழுவில் இருந்த ஹரி, இமான் கொடுத்த சோலோ அறிமுகத்தை நச்செனப் பிடித்துக்கொண்டார். வருட இறுதியில் 'பாண்டிய நாடு’ படத்தில் 'ஒத்தகட ஒத்தகட மச்சான்...’ பாடலிலும் கணீர் ஹிட் அடித்திருக்கிறது ஹரிஹரசுதனின் கம்பீரக் குரல்!
சிறந்த தயாரிப்பு - லோன் வுல்ஃப் புரொடக்ஷன்ஸ் - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
னக்கென தனித்துவமான கதை சொல்லல்தான் மிஷ்கினின் பலம். நடைமுறையில் வணிக சாத்தியம் உண்டா, இல்லையா என்று தீர்மானிக்க முடியாத 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை துணிந்து தன் சொந்த தயாரிப்பில் உருவாக்கினார் மிஷ்கின். நாயகன், நாயகி, நகைச்சுவை நடிகர்கள், பாடல்கள் என வழக்கமான சினிமா அம்சங்கள் எதுவும் படத்தில் இல்லை. நட்சத்திர மதிப்பு, பற்றிக்கொள்ளும் பரபரப்புகளும் இல்லை. ஆனாலும் திரைக்கதை அடுக்குகள், யதார்த்த கதாபாத்திரங்கள், கதை சொல்லும் உத்தி ஆகியவற்றால், இரண்டு மணி நேரம் நம்மைக் கட்டிப்போட்டார் இயக்குநர் மிஷ்கின். தமிழ் சினிமாவில் தரமான தடம் பதித்திருக்கிறது இந்த ஓநாய்!
சிறந்த பின்னணிப் பாடகி - சக்திஸ்ரீ கோபாலன் 'நெஞ்சுக்குள்ள...’  கடல்
வைரல் யுகத்திலும் மெலடிக்கு, கோடிகளில் லைக், ஷேர்களைக் குவித்த குயில். கேரளாவைச் சேர்ந்த சக்திஸ்ரீ, சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆர்க்கிடெக்ட் பட்டதாரி. வருடம் முழுவதுமே மெலடி ஹிட்ஸ் பட்டியலில் டாப் ரேங்கைத் தக்கவைத்திருந்தவர் 'நெஞ்சுக்குள்ள...’ பாடகி. 'கடல்’ படத்துக்கே பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டிய அந்தப் பாடல், ப்ளேலிஸ்ட், எஃப்.எம்., இணையம், ஆல்பம் என சகல திக்குகளிலும் ஹிட் அடித்த மென் மெலடி. தொடர்ந்து 'எங்க போன ராசா...’ (மரியான்), 'மன்னவனே...’ (இரண்டாம் உலகம்) பாடல்களிலும் இதயம் சுண்டிய சக்திஸ்ரீயின் குரல், நம் 'நெஞ்சுக்குள்ள’ இன்னும் இன்னும் இனிக்கட்டும்!  

-Vikatan article

விகடன் விருதுகள் 2013 - 1

சிறந்த படம்  -  பரதேசி
 பார்க்கவே அழகான பச்சைப் பசேல் தேயிலைத் தோட்டத்தின் ஒவ்வொரு செடியின் வேரும், கூலித் தொழிலாளிகளின் ரத்தத்தை உரமாக உறிஞ்சியது என்பதை நெஞ்சில் அறையும் விதமாகச் சொன்னதில், 'பரதேசி’ முக்கியமான தமிழ் சினிமா. 'எரியும் பனிக்காடு’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பணத்துக்கு ஆசைப்பட்டு பிரிட்டிஷ்காரர்களுக்கு விசுவாசமாக தன் சொந்த மக்க ளையே காவுகொடுத்த கங்காணிகளின் இரட்டை நாக்கு வாழ்க்கை, மிக அழுத்தமாகப் பதிவுசெய் யப்பட்டிருந்தது. முதலாளிகள், ஏழைகளின் அறியாமையை எப்படி அதட்டி, மிரட்டி உழைப்பாக உறிஞ்சினார்கள் என்பதை கணுக்கால் நரம்பு அறுப்பு, கசாப்பு மருத்துவம், வெறிபிடித்த அடியாட்கள், கடுங் குளிர், பெண்கள் மீதான பலாத் காரம்... என கொத்தடிமை வாழ்க்கையின் அறியாத பக்கங்களை மனம் வலிக்க வலிக்கப் புரட்டிய படம் இது. தனக்கென எந்தக் குரலும் இல்லாமல் தேயிலைத் தோட்டத்தில் உழைத்து உழைத்தே ஆயுளைத் தொலைத்த சாமானியன் மீது கவன ஈர்ப்பு கொண்டுவந்த வகையில், இது தமிழின் தவிர்க்க முடியாத சினிமா!
சிறந்த இயக்குநர் -  பாலா  - பரதேசி
ளிய மனிதர்களின் வலிகளையும் பிணிகளையும் அதிர அதிரப் பதிவுசெய்யும் பாலா, 'பரதேசி’யில் கையில் எடுத்தது பஞ்சம் பிழைக்க தேயிலைத் தோட்டத்துக்குக் கூலியாகச் சென்று, கொத்தடிமைகளாக வாட்டி வதைக்கப்பட்ட தமிழர்களின் கதை. தங்கள் வாழ்வையும் வாலிபத்தையும் தொலைத்த சாலூர் கிராம மக்களின் சோகத்தை 'ராசா’ என்கிற கதாபாத்திரத்தில் புதைத்து ஆவணமாக்கினார். ஒரு தேயிலைத் தோட்டக்காடுதான் லொகேஷன். வெள்ளைக்காரனுக்கு சலாம் போட்டுப் பிழைப்பு நடத்தும் கங்காணி, மறுபக்கம் தப்புக்கணக்குச் சொல்லி கூலிகளின் உயிரை, உழைப்பை உறிஞ்சும் அட்டையாக இருக்கிறான். 'நானே மருத்துவம் கத்துக்கிட்டேன்’ என்று அரைகுறை வைத்தியம் பார்க்கும் போலி மருத்துவர், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் அப்பாவிப் பெண்கள், தப்பித்து ஓடுபவர்களைப் பிடித்துவந்து முடமாக்கும் கொடூரம், எதற்கும் அசராது மகளுக்காக உயிர்வாழும் ஒரு பெண், இதற்கு நடுவே கதைநாயகன் என 'பரதேசி’ படத்தை நகர்த்துவது வெகுசில கதாபாத்திரங்கள்தான். ஆனாலும், ஒரு வரலாற்றுத் துயரத்தை, கண்ணீரும் ரத்தமுமாக சொன்ன வகையில் சிறந்த இயக்குநராக நிலைகொள்கிறார் பாலா!
சிறந்த நடிகர்  - அதர்வா -  பரதேசி
24 வயதுதான். எண்ணிக்கையில் மூன்றாவது படம்தான். ஆனால், திரையில் இந்த இரண்டும் நினைவில் வராதபடி நடிப்பில் மிரட்டினார் 'சாலூர் ராசா’ அதர்வா. அங்கம்மாவோடு காதலில் இருக்கும்போது, வறுமையும் பஞ்சமும் துரத்தியடிக்க 'எப்படியும் பணம் சம்பாதித்துவிடுவோம்... அங்கம்மாவோடு சந்தோஷமாக வாழ்ந்துவிடலாம்’ என்ற சாமானியக் கனவோடு ஊரைவிட்டு கிளம்பும்போது தொடங்குகிறது அதர்வாவின் கணக்கு. ஒவ்வொரு முறை கணக்கு முடிக்கும்போது நம்பிக்கையாக அமர்வதும், 'இன்னும் சில வருடங்கள் வேலை செய்ய வேண்டும்’ என்று கங்காணி சொல்வதும் மனம் வெதும்பித் திரும்புவதுமாக ஒரு கொத்தடிமையின் மனநிலை, உடல்மொழியை அச்சு அசலாக வார்த்திருந்த அதர்வா, இந்த வருடத்தின் சிறந்த நடிகர்!
சிறந்த நடிகை -  பூஜா -  விடியும்முன்
ளமையின் விளிம்பில் பொலிவு இழந்துபோன ஒரு பாலியல் தொழிலாளி, தன் ஒரே மூலதனமான உடல் வனப்பை இழந்தால், என்ன ஆகும்? இதற்கு 'விடியும்முன்’ படத்தில் தன் அசத்தல் நடிப்பின் மூலம் பதில் சொல்லியிருந்தார் பூஜா. லோக்கல் லாட்ஜில் 100-க்கும் 500-க்கும் உடலை விற்கும் பூஜா, ஒரு பெரும் தவறு செய்தால், வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம். இந்தச் சூழ்நிலையில் அவர் நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையில் தடுமாறி தவறு செய்பவராக, பின்பு தான் செய்த தவறின் விபரீதம் உணர்ந்து பிராயச்சித்தம் தேடுபவராக, தன்னை நம்பாத 12 வயது சிறுமிக்கு வளர்ப்புத் தாயாக, துரத்தும் வில்லன்களிடம் இருந்து தப்பிக்கப் பரிதவிக்கும்  பெண்ணாக... ஒரே கேரக்டரில் பல பரிமாணங்களைக் காட்டிய பூஜா, திரையில் ஜொலித்திருக்கும் ஒரு பளீர் நட்சத்திரம்!
சிறந்த குணச்சித்திர நடிகர் - கிஷோர் - ஹரிதாஸ்
ன்கவுன்டர் போலீஸாக, ஆட்டிஸம் பாதித்த மகனுக்குத் தாயுமானவனாக இரு வேறான வாழ்க்கையில் ஆறல்ல... நூறு வித்தியாசங்கள் காட்டி நடித்திருந்தார் கிஷோர். ஒரு பக்கம் வில்லனை வேட்டையாடக் கச்சித ஸ்கெட்ச்களுடன் துரத்துகிற போலீஸ் அதிகாரியாக, இன்னொரு பக்கம் பள்ளிக்கூடத்தில் மகனோடு அமர்ந்து பாடம் கற்கும் இடத்தில் டீச்சர் சினேகாவைப் பார்த்தபடி வெட்கப்படுவதுமாக வெரைட்டி விருந்து படைத்தார். தன் மகனுக்கு எதுதான் வரும் என்று புரியாமல் தவிக்கும்போதும், அவனுக்கு ஓட்டத்தின் மீதுதான் நாட்டம் என்பதைக் கண்டுபிடித்து பயிற்சி கொடுத்துப் பட்டை தீட்டும்போதும், ஆட்டிஸக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு பொறுப்புள்ள தந்தையை கண் முன் நிறுத்தினார். எந்த இடத்திலும் 'நடிப்பு’ என்று தெரியாத இயல்பே கிஷோர் ஸ்பெஷல். அதை இந்தப் படத்தில் மேலும் மெருகேற்றினார் கிஷோர்!
சிறந்த குணச்சித்திர நடிகை - தன்ஷிகா - பரதேசி
சுமைத் தேயிலைக் காடுகளில் எஸ்டேட் அரக்கர்களால் கணவன் கொல்லப்பட, கைக் குழந்தையுடன் தனியாகப் பரிதவிக்கும் ஒரு பெண், தன் சுயமரியாதை யைக் காப்பாற்றிக்கொள்ள அமைத்துக்கொள்ளும் கோபவேலியை, தன்ஷிகா தன் ஒவ்வோர் அசைவிலும் உணர்த்தினார். கூலித் தொழிலாளி மரகதமாக தகிக்கும் கோபத்துடன் தைரியம் காட்டிய அதே பார்வையில், பேரன்பையும் பொதித்துவைத்தார். குத்தீட்டி விழிகள், கம்பீரக் குரல் என தன் சொந்த இயல்புகளை, 'பரதேசி’யின் பழந்தமிழச்சி கதாபாத்திரத்தை மெருகூட்டப் பயன்படுத்திய தன்ஷிகாவுக்கு, தமிழ் சினிமா இன்னும் இன்னும் சவால் கதாபாத்திரங்களை அளிக்க வேண்டும்!  
சிறந்த நகைச்சுவை நடிகர்  - சென்ராயன் - மூடர் கூடம்
ப்பாவித் திருடனாக 'மூடர் கூடம்’ படத்தில் சென்ராயன் செய்த காமெடிகள், ரகளை ரகம். திருடும்போது அணிந்துகொள்ள தனக்கு மட்டும் தனி நிறத்தில் 'மங்கி’ குல்லா வாங்குவது முதல், 'என்னைப் பார்த்தா இங்கிலீஷ்ல 10 மார்க்குக்கு மேல எடுக்குற மாதிரி தெரியுதா?’ என்று கேட்பது வரை... ஒல்லி உடம்பை வைத்து கில்லி காமெடி செய்தார் சென்ராயன். 'தமிழே தெரியாத இங்கிலீஷ்காரன்கிட்ட தமிழ்ல பேசக் கூடாதுனு தெரிஞ்ச உனக்கு, இங்கிலீஷ் தெரியாத பச்சத் தமிழன்கிட்ட தமிழ்ல பேசணும்னு ஏன்டா தெரியாமப்போச்சு?’ என்று கெத்தாக அவர் அதட்டியதற்கு திரையரங்கில் அள்ளியது அப்ளாஸ். நடிப்பு, வசன உச்சரிப்பு, உடல்மொழி என அனைத்து அம்சங்களிலும் காட்சிக்குக் காட்சி சென்டம் ஸ்கோர் செய்த சென்ராயனுக்கு... ஹாட்ஸ் ஆஃப்!
சிறந்த நகைச்சுவை நடிகை - மதுமிதா - இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
ம் கொண்டை, ஜகஜக சேலை, ஓவர்டோஸ் மேக்கப், 70 எம்.எம். விழிகள்... 'ராஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்’, 'பாப்ப்ப்பு’... என தன் மனம் கவர்ந்த காதலர்களைச் சொக்கவைக்கும் அழைப்பு... அடிச்சுக்கவே முடியாது நம்ம 'தேன்ன்னடை’ மதுமிதாவை! சமகால 'கள்ளக்காதல்’ தகராறுகளில் அடிக்கடி செய்திகளில் இடம்பெறும் 'மனைவி’களுக்கு, செம சுவாரஸ்யமாக உயிரூட்டி இருந்தது மதுமிதாவின் நடிப்பு. கணவனைக் கொல்ல காதலர்களை ஏவிய அந்தக் கதாபாத்திரம் 'வில்லி’ சாயல் கொண்டது. ஆனால், குரலில் தேன் குழைத்து, மனதில் காதல் குழைத்து, செயலில் வன்மம் குழைத்து... என தாறுமாறு காம்பினேஷனில் கிச்சுக்கிச்சு மூட்டிய மதுமிதாவுக்கு எதிராகக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை... போட்டியே இல்லை!
சிறந்த வில்லன் - அனில் முரளி - 6 மெழுகுவத்திகள்
னம் பதைக்கச் செய்யும் குழந்தைகள் கடத்தல் நெட்வொர்க்கை, நெஞ்சம் பதைபதைக்க விவரித்த '6 மெழுகுவத்திகள்’ படத்தின் மிரட்டல் வில்லன் அனில் முரளி. இவர், 'ராம் சார்... ராம் சார்...’ என நளினமாகப் பேசிப் பேசியே கழுத்தை அறுக்கும் வில்லனாக, உரக்கக் கூவும் சவடால் வசனங்களோ கொடூர ஆயுதங்களோ இல்லாமல், வில்ல வியூகத்தில் மிரட்டினார். உடல்மொழியில் நளினமும், குரல்மொழியில் வஞ்சகமும் நிரம்பிய 'திவாகர்’ என்கிற கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டு, சிரித்துக்கொண்டே செத்துப்போகும் அனில் முரளிக்கு, தமிழில் இது முதல் படம். மலையாளத்தில் 150 படங்களுக்கு மேல் நடித்தவர். அடிபட்டக் கோபத்திலும் குழைவாகப் பேசுவது, பின்னிப் பின்னி நெளிந்து நடப்பது என பழக்கவழக்கமான வில்லன்களுக்கு இடையே, அனில் முரளி பதித்தது புதுத் தடம்!
சிறந்த புதுமுக இயக்குநர் - நலன் குமரசாமி - சூது கவ்வும்
திகாரத்தில் கை வைத்தல் கூடாது, அடி- உதை கூடாது... என்று ஆள் கடத்தலுக்கு ஐந்து விதிகளை வகுத்துக்கொண்டு, 'பேக்கேஜ் டூர்’ கணக்காக மினிமம் பேக்கேஜில் ஆட்களைக் கடத்திய 'சூது கவ்வும்’ படை, தியேட்டரை நோக்கி ரசிகர்களைக் கடத்தியது. இதற்கு முன் ரணகொடூரமாகவும் உளவியல்ரீதியாகவுமே கடத்தலை அணுகிய சினிமாக்களுக்கு இடையில், ஜாலிகேலி எபிசோடுகளுடன் கலாட்டா சினிமாவாக முத்திரை பதித்தது 'சூது கவ்வும்’. கடத்தப்படும் நபரிடம் நேரடியாகச் சென்று பணம் பெறுவது, கடத்தப்பட்டவர்களுக்கு பாக்கெட் மணி கொடுப்பது, அரூபக் காதலியைக் கவர்ச்சியுடன் உலவவைத்தது, 'பயப்படாதீங்க... பயப்படாதீங்க... மூச்சை நல்லா இழுத்துவிட்டு ரிலாக்ஸ் பண்ணுங்க’ எனக் கலகல வசனங்கள், கலாட்டா சம்பவங்களால் 'இருட்டு அறை’க்குள் கூடிய ரசிகர்களை 'முரட்டு குஷி’ப்படுத்தி அனுப்பினார் இயக்குநர் நலன் குமரசாமி!
சிறந்த புதுமுக நடிகை - நஸ்ரியா நசீம் - நேரம்
'இப்படி ஒரு ஹோம்லி காதலி கிடைத்தால் நன்றாக இருக்குமே’ என்று 'ட்ரீம் கேர்ள்ஸ்’ இலக்கணத்தின் அப்டேட்டட் வெர்ஷனாக 'நேரம்’ படத்தில் மலர்ந்து நின்றார் நஸ்ரியா. பொய்க் கோபம், செல்ல வருத்தம், குதூகல மகிழ்ச்சி, ஜாலி கொண்டாட்டம், சீண்டும் சிரிப்பு... என அடுத்தடுத்த நொடிகளில் மாறும் எக்ஸ்பிரஷன்களால் லைக்குகளைக் குவித்துக் கொண்டே இருந்தது இந்தக் கேரளக் கிளி. 'ராஜா ராணி’யில் நைட்டியை ஏற்றிக்கட்டிய 'ரிங்கரிங்கா’ நடனம், 'நய்யாண்டி’ தொப்புள் சர்ச்சை என வருடம் முழுக்க ஹிட் நியூஸில் இடம் பிடித்தது, ஜாலி ஜாக்பாட்!
சிறந்த புதுமுக நடிகர் - நிவின் பால்- நேரம்
திடீரென சாஃப்ட்வேர் வேலை பறிபோக, கந்து வட்டியை வசூலிக்க 'வட்டி’ ராஜா கழுத்தில் கத்தி வைக்க, வரதட்சணை பாக்கித் தொகையைக் கேட்டு தங்கை கணவர் அடம் பண்ண, 'கல்யாணம் பண்ணிக்க’ என்று வீட்டை விட்டு ஓடிவந்த காதலி காணாமல் போக... இதுவும் இன்னபிறவுமாக அடுத்தடுத்து இறுக்கி நெருக்கும் சிக்கல்களை சமாளிக்கும் நடுத்தரக் குடும்பத்து இளைஞன் 'வெற்றி’ கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாக உயிரும் உணர்வும் கொடுத்திருந்தார் நிவின். ஒற்றை சட்டை, வியர்வை அழுக்கு, கோப வேகம் இவற்றைக் கொண்டே வசீகரித்தது 'நேரம்’ நிவின் ஸ்பெஷல்!  

-Vikatan

புதைக்கப்பட்ட ஒரு விதையின் கதை!

'பசுமைப் புரட்சி’யின் பெயரால் ரசாயன விவசாயத்துக்கு அடிமைப்படுத்தப்பட்ட இந்திய... குறிப்பாக, தமிழக விவசாயிகளை 'இயற்கை வேளாண்மை’யின் பக்கம் திருப்பிய 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ.நம்மாழ்வார், 45 ஆண்டுகளாக தான் நேசித்து வந்த இயற்கையுடன், கடந்த 30-ம் தேதி அன்று இரண்டறக் கலந்தார். 75 வயதாகும் இந்தப் பசுமைப் போராளி, தன்னுடைய போராட்டப் பயணத்தின் நடுவே, பட்டுக்கோட்டை அருகே இருக்கும் அத்திவெட்டி கிராமத்துக்குச் சென்றபோது, கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக இயற்கை எய்தினார்.
 நம்மாழ்வாரின் விருப்பப்படியே அவருயை உடலை அடக்கம் செய்வதற்காக, கரூர் மாவட்டம், கடவூர், சுருமான்பட்டியில் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் அவர் உருவாக்கியிருக்கும் 'வானகம்' உயிர்ச்சூழல் பண்ணைக்கு, ஜனவரி 1 அன்று கொண்டு சென்றனர். அந்த வரப்பட்டிக்காட்டுக்கும் மக்கள் அணி அணியாக திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது... அனைவரையும் சிலிர்க்க வைத்தது. இதில், 80 சதவிகிதம் பேர் இளைஞர்கள். விகடன் குழுமத்தின் சார்பில் பசுமை விகடன் ஆசிரியர் குழுவினர் நம்மாழ்வாரின் உடலுக்கு 'பச்சை துண்டு போர்த்தி’ மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நம்மாழ்வார் உடலைப் புதைப்பதற்காக திருநீறு, உப்பு, மிளகு, சங்குக்காய், துளசி இலைகள், தர்பைப் புல் என பல்வேறு பொருட்களைக் கொண்டு வந்து குவித்தனர், சைவ சமயத்தைச் சேர்ந்த சிலர். குழியில் இதையெல்லாம் கொட்டி, அதன் மீது நம்மாழ்வாரின் உடல் வைக்கப்படும் என்றும் கூறினர். இதனால், நம்மாழ்வாரின் உடல் மக்காது இருக்கும் என்பதே அவர்களுடைய விளக்கம். ஆனால், உடல் அடக்கத்தின்போது அந்த இடத்துக்கு வந்த அவருடைய மனைவி சாவித்திரி, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ''ஐயா இயற்கையோடு வாழ்ந்தவர். மண்ணோடு மண்ணாக வேண்டும் என்பதே அவருடைய கொள்கை'' என்று கொதிப்போடு சொன்னார். இதையடுத்து, குழியில் போடப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் வெளியே எடுக்கப்பட்டு, எந்தவிதமான சடங்குகளும் இல்லாமல், அங்கு தோண்டிய மண்ணை மட்டுமே வைத்து, நம்மாழ்வாரின் உடலை அடக்கம் செய்தனர். அதன் மீது வேப்பங்கன்று ஒன்றையும் நம்மாழ்வார் விருப்பப்படியே நட்டு வைத்தனர்.
1938-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்தவர் நம்மாழ்வார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி., வேளாண்மை அறிவியல் பட்டம் பெற்றவர், 1960-ம் ஆண்டு கோவில்பட்டியில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் பண்ணை மேலாளராக ஏழு ஆண்டுகள் பணி புரிந்தவர். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், வீரிய விதைகள் போன்றவற்றால்... வேளாண்மை நஞ்சாகிப் போனதோடு, விவசாயிகளும் கடன்காரர்களாக அலைவதைக் கண்டு, தனது ஆராய்ச்சியாளர் பணியை உதறினார். பிறகு, நோபல் பரிசு பெற்ற 'டோம்னிக் பையர்’ என்ற அறிஞரின் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இதன் மூலம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலக அளவில் பயணம் செய்தவர், பிறகு... இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தேவையான இயற்கை வேளாண்மை நோக்கி விவசாயிகளை திசைதிருப்ப ஆரம்பித்தார். அழிவு நிலையில் இருந்த, நூற்றுக்கணக்கான பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து, விவசாயிகளிடம் சேர்த்த பெருமை நம்மாழ்வாரையே சேரும்.
இறப்புக்குப் பிறகும், இயற்கை விவசாயம் தழைத்தோங்க வேண்டும் என்ற எண்ணத்தில்... 'வானகம்’ உயிர்ச்சூழல் பயிற்சிப் பண்ணையை உருவாக்கினர். அங்கு, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கும் விவசாயிகளுக்கும் இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்து... இளைஞர்களையும் விவசாயத்தை நோக்கி ஈர்க்கும் வேலையைச் செய்தார். அந்த விதைகள் முளைத்து, தற்போது விருட்சமாக மாறி இருக்கின்றன.
ஆம்... விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை!
- காசி.வேம்பையன்

-Vikatan Article

மகாத்மா முதல் மன்மோகன் வரை ! 13

குடியரசுத் தலைவர்  தேர்தல் குஸ்தி!
காங்கிரஸ் கட்சி நிறுத்திய வேட்பாளரை, காங்கிரஸ் கட்சியால் பிரதமர் ஆக்கப்பட்ட இந்திரா வீழ்த்திய விபரீதம் நடந்த ஆண்டு 1969. அந்த ஆண்டு மே மாதம் குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் மரணம் அடைந்தார். புதிய தலைவர் யார் என்ற கேள்வி காங்கிரஸ் தலைவர்கள் முன் எழுந்தது. யாரையும் ஆலோசனை செய்யாமல் ஜெகஜீவன் ராம் பெயரை பிரதமர் இந்திரா முன்மொழிந்தார். இது காங்கிரஸ் பார்லிமென்ட் போர்டு உறுப்பினர்களுக்கு உடன்பாடானதாக இல்லை.
இந்தக் குழுவில் எட்டு தலைவர்கள் இருந்தார்கள். இவர்களில் காங்கிரஸ் தலைவரான எஸ்.நிஜலிங்கப்பா, காமராஜர், மொரார்ஜி தேசாய், ஒய்.பி.சவான், எஸ்.கே.பாட்டீல் ஆகிய ஐந்து பேரும் சஞ்சீவி ரெட்டிதான் குடியரசுத் தலைவராக வரவேண்டும் என்று சொன்னார்கள். ஜெகஜீவன் ராமை, பக்ருதீன் அலி அகமது மட்டுமே ஆதரித்தார். ''மகாத்மா காந்தி நூற்றாண்டு விழா நெருங்கி வருகிறது. அவர் அரிஜன முன்னேற்றத்தைப் பெரிதும் விரும்பினார். அதனால், ஜெகஜீவன் ராம் குடியரசுத் தலைவர் ஆவதே பொருத்தமானது'' என்று இந்திரா சொன்னார். என்றாலும், உண்மையான காரணம் காங்கிரஸ் தலைவர்களால் புகுத்தப்படும் குடியரசுத் தலைவரை ஏற்கக் கூடாது என்பதுதான்!
இதே காலகட்டத்தில் ஆட்சியில் எடுக்கப்பட வேண்டிய பொருளாதாரக் கூறுகள் தொடர்பாக பிரதமர் இந்திராவுக்கும், காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பாவுக்கும் கருத்து வேற்றுமை தலைதூக்கி இருந்தது. வங்கிகளை நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்ற இந்திராவின் எண்ணத்தை இடதுசாரிச் சிந்தனை என்று இவர்கள் எதிர்த்தார்கள். ஆனால், இவர்களை மீறி 14 வங்கிகளை தேசியமயமாக்கினார் இந்திரா. இது அவரது செல்வாக்கை அதிகப்படுத்தவும் பயன்பட்டது. ''வங்கிகளை முதலில் சமூகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின் தேசியமயமாக்குவதுதான் சரியானது. அதற்கு முன் உடனடியாக முடிவுசெய்தால் நான் பொறுப்பேற்க முடியாது'' என்று துணை பிரதமரும் நிதி அமைச்சருமான மொரார்ஜி தேசாய் சொன்னார். இதனை இந்திரா முற்றிலுமாக நிராகரித்தார். உடனே தனது எதிர்ப்பைக் காட்டுவதற்காக மொரார்ஜி பதவியை விட்டு விலகினார்.
'பார்லிமென்டரி போர்டில் நீங்கள் விரும்பியதைச் செயல்படுத்த உங்களுக்கு உரிமை இருப்பதைப்போல, அரசாங்கத்தில் நான் விரும்பியதைச் செய்ய பிரதமர் என்ற முறையில் எனக்கு உரிமை இருக்கிறது அல்லவா?'' என்று பிரதமர் இந்திரா மடக்கினார். இதற்கு நிஜலிங்கப்பா போன்றவர்களால் பதிலளிக்க முடியவில்லை. பிரதமர் என்ற அடிப்படையில் இந்திரா எடுத்த நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. இதை அறிந்து மகிழ்ந்த இந்திரா, தன்னுடைய நன்றியின் அடையாளமாக... காங்கிரஸ் பார்லிமென்டரி போர்டால் அறிவிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரான நீலம் சஞ்சீவி ரெட்டியை தான் ஆதரிக்கத் தயார் என்று சொன்னார். அதற்கான விண்ணப்பத்திலும் இந்திரா கையெழுத்துப் போட்டு அனுப்பினார். சமாதானக் கொடி பறப்பதாகத்தான் அனைவரும் நினைத்தார்கள். ஆனால் இந்திராவின் செயல்பாடுகளில் ஏதோ சந்தேகம் இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் நினைத்தார்கள். அவரும் அப்படித்தான் நடந்துகொண்டார்.
குடியரசுத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் சஞ்சீவி ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார். ஜனசங்கம், சுதந்திரா கட்சி ஆதரவுடன் சி.டி.தேஷ்முக் நிற்கிறார். அப்போது உதவி குடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரியும் போட்டியில் இருந்தார். இவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க., முஸ்லிம் லீக், அகாலிதளம் ஆகிய கட்சிகள் ஆதரித்தன.
மத்தியிலும் காங்கிரஸுக்கு பெரிய பெரும்பான்மை இல்லை, பல்வேறு மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டன. எனவே, காங்கிரஸ் ஓட்டுக்கள் முழுக்கவே சிந்தாமல் சிதறாமல் விழுந்தால்தான் காங்கிரஸ் வேட்பாளரான  சஞ்சீவி ரெட்டி வெற்றிபெற முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைத்தார்கள். 'சஞ்சீவி ரெட்டிக்குத்தான் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்'' என்று பிரதமர் இந்திராவுக்கு காங்கிரஸ் பார்லிமென்ட் போர்டு கோரிக்கை வைத்தது. கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்கள் அந்த உத்தரவுப்படிதான் நடந்துகொள்ள வேண்டும். மீறினால், அவர்கள் பதவியே பறிக்கப்படலாம். எனவேதான், கறாராக இந்த உத்தரவு வேண்டும் என்று பார்லிமென்ட் போர்டு நினைத்தது.
அதே நேரத்தில் இன்னொரு காரியத்தையும் இந்தத் தலைவர்கள் பார்த்தார்கள். அதுதான் இந்திராவை ஆத்திரம் கொள்ள வைத்தது.
காங்கிரஸ் தலைவரான நிஜலிங்கப்பா, சுதந்திரா கட்சி மற்றும் ஜனசங்கத் தலைவர்களைச் சந்தித்தார். அவர்களது இரண்டாவது வாக்கை சஞ்சீவி ரெட்டிக்கு தருமாறு கேட்டுக்கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர்களை காங்கிரஸ் தலைவர் சந்தித்திருப்பது, தன்னுடைய பதவிக்கு வைக்கப்படும் வேட்டு என்று நினைத்து பதறிப்போனார் இந்திரா. தன்னை விலக்கிவிட்டு, சுதந்திரா மற்றும் ஜனசங்க கட்சிகளின் ஆதரவுடன் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கக்கூட முடியும் அல்லவா என்று இந்திரா யோசித்தார்.
''என்னை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கு வகுப்புவாத மற்றும் பிற்போக்கு சக்திகளுடன் ஒப்பந்தம் செய்கிறார்கள்'' என்று இந்திரா குற்றம் சாட்டினார். எனவே, அவர் தனது அஸ்திரத்தை எடுத்தார்.
''சஞ்சீவி ரெட்டிக்குத்தான் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கொறடா உத்தரவு போட முடியாது. காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்கலாம்'' என்று இந்திரா அறிவித்து அகில இந்தியாவையும் பதறவைத்தார். ஒருவர் மனசாட்சிப்படி வாக்களிக்கலாம் என்றால், யாருக்கு வேண்டுமானாலும் தனது வாக்கைப் பயன்படுத்தலாம். காங்கிரஸ் உறுப்பினர்கள் காங்கிரஸ் வேட்பாளரான சஞ்சீவி ரெட்டிக்கும் வாக்களிக்கலாம். ஜனசங்கம் வேட்பாளருக்கும் வாக்களிக்கலாம். கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கும் வாக்களிக்கலாம். அனைத்து எம்.பி-க்களையும் இப்படி அவிழ்த்துவிட்டால் எப்படி காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற முடியும்?
இந்திராவின் சந்தேகத்தில் நியாயம் இல்லை என்று நிஜலிங்கப்பா சொல்லிப் பார்த்தார். அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கும் எண்ணம் இல்லை என்றும், 1972 வரை பிரதமராக இந்திரா நீடிக்கலாம் என்றும் நிஜலிங்கப்பா வாக்குறுதி கொடுத்தார். ஆனாலும், இதனை இந்திரா நம்பவில்லை. நிஜலிங்கப்பாவின் கோரிக்கையை ஏற்று கொறடா உத்தரவு பிறப்பிக்கவும் அவர் சம்மதிக்கவில்லை.
காங்கிரஸ் கட்சி உடையாமலேயே இரண்டாக பிரிந்து நிற்கத் தொடங்கியது. இத்தகைய குழப்பமான சூழ்நிலையில் 16.8.1969 அன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்தது. காங்கிரஸ் வேட்பாளரான சஞ்சீவி ரெட்டி தோற்றுப்போனார். இடதுசாரிகள், முஸ்லிம் லீக், அகாலிதளம், தி.மு.க. ஆகிய கட்சிகளின் வேட்பாளரான வி.வி.கிரி வெற்றிபெற்றார். அதாவது, இந்திரா அவரை வெற்றிபெற வைத்தார். வி.வி.கிரியின் வெற்றி இந்திராவின் வெற்றியாகவும், சஞ்சீவி ரெட்டியின் தோல்வி நிஜலிங்கப்பாவின் தோல்வியாகவும் வரலாற்றில் பதிவானது.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு வாக்களிக்காதது மட்டுமல்ல, எதிராக நின்றவரை வெற்றிபெறவும் வைத்தது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று நிஜலிங்கப்பா போன்றவர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். இந்திரா உள்பட அவரது ஆதரவாளர்கள் பலருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ''காங்கிரஸ் கட்சி உடைவதையோ, சிலர் வெளியேற்றப்படுவதையோ, நான் விரும்பவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலோடு தொடர்புபடுத்தி ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முயற்சி செய்தால், கட்சியின் அழிவுக்கு வழிவகுத்துவிடும்'' என்று இந்திரா பயமுறுத்தத் தொடங்கினார். சிறு அசைவு ஏற்பட்டாலும் கட்சி உடைந்துவிடும் என்பதே நிலைமை.
இரண்டு தரப்பையுமே சமாதானம் செய்ய சிலர் முயற்சித்தார்கள். இதன் அடிப்படையில் 'ஒற்றுமைத் தீர்மானம்’ ஒன்றை நிறைவேற்றி இரண்டு தரப்பையும் அமைதிப்படுத்த விரும்பினார்கள். ஆனால், இந்திராவின் ஆதரவாளர்கள் நிஜலிங்கப்பாவுக்கு எதிரான அஸ்திரங்களை ஏவத் தொடங்கினார்கள். கட்சியின் மேல்மட்டத்தில் நிஜலிங்கப்பா போன்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு செல்வாக்கு இருந்தாலும், பிரதமர் என்ற அடிப்படையில் ஆட்சியில் இந்திராவின் செல்வாக்கு அபரிமிதமாக இருந்தது. அவரால் பதவியை பெற்றவர்கள், அனுபவித்து வருபவர்கள் சேர்ந்து, 'அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரான நிஜலிங்கப்பாவை நீக்கிவிட்டு, புதிய தலைவரைத் தேர்வுசெய்ய வேண்டும்’ என்று கையெழுத்து இயக்கம் நடத்த ஆரம்பித்தார்கள்.
இதைப் பார்த்து கோபமான நிஜலிங்கப்பா, காங்கிரஸ் காரிய கமிட்டியை அவரே கூட்டினார். இதற்கு இந்திரா வரவில்லை. அவர் தனது வீட்டில் ஒரு கூட்டத்தைக் கூட்டி, காரியக் கமிட்டியை தான் கூட்டப்போவதற்கான தேதியை அறிவித்தார். இது விதிமுறைக்கு புறம்பானது என்று நிஜலிங்கப்பா சொல்ல... நீங்கள் செல்வது எதுவுமே விதிமுறைப்படியானது அல்ல என்று இந்திரா சொல்ல... நேரடி மோதல் எழுந்தது. இருவருமே நேரில் சந்தித்தால் பிரச்னை தீரும் என்று மைசூர் முதலமைச்சர் வீரேந்திர பாட்டீல் நினைத்தார். அதன் அடிப்படையில் இந்திராவும் நிஜலிங்கப்பாவும் டெல்லியில் சந்தித்துப் பேசினார்கள். இதுவும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.
இந்திராவைக் கட்சியை விட்டு நீக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைத்தார்கள். 1969 நவம்பர் 12-ம் நாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் நடந்தது. மொத்தமுள்ள 21 உறுப்பினர்களில் 11 பேர் வந்திருந்தார்கள். கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய இந்திராவை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்குவது என இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. புதிய பிரதமரை தேர்வுசெய்ய திட்டமிடப்பட்டது. இதனை இந்திரா ஆதரவாளர்கள் ஏற்கவில்லை.
மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்களில் 220 பேர் இந்திராவை ஆதரித்தார்கள். சிண்டிகேட் காங்கிரஸ் தலைவர்களுக்கு 68 உறுப்பினர் ஆதரவே இருந்தது. எனவே, இந்திராவின் பிரதமர் பதவிக்கு எந்த பாதிப்பும் வரவில்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மொத்த உறுப்பினர்கள் 705 பேர் இதில் 446 உறுப்பினர்கள் இந்திராவை ஆதரித்தார்கள். இவர்கள் சேர்ந்து நிஜலிங்கப்பாவை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஜெகஜீவன் ராமை தலைவராக ஏற்றுக்கொண்டார்கள். (இவர்தான் இன்று மக்களவை சபாநாயகராக இருக்கும் மீரா குமாரின் அப்பா).
நிஜலிங்கப்பா தலைமையிலானது காங்கிரஸ் (ஓ) என்றும் இந்திரா தலைமையிலானது காங்கிரஸ் (ஆர்) என்றும் அழைக்கப்பட்டது. முன்னதை ஸ்தாபன காங்கிரஸ் என்றும், பின்னது இந்திரா காங்கிரஸ் என்றும் அழைத்தார்கள். பெருந்தலைகள் வேறு கட்சியாக ஆகிப்போனது இந்திராவுக்கு வசதியாகப் போனது. தனது சர்வ வல்லமையை காங்கிரஸுக்குள் பயன்படுத்தத் தொடங்கினார். இனி அவரைக் கேள்வி கேட்க யாரும் இல்லை கட்சிக்குள். இடதுசாரிகள் நிறுத்திய வி.வி.கிரியை ஆதரித்து வாக்களித்ததால், இந்திரா ஆட்சியைக் காப்பாற்ற இடதுசாரிகளும் ஆதரவாக இருந்தார்கள்.
கட்சியும் ஆட்சியும் அவரது குடும்பச் சொத்தாக மாறத் தொடங்கியதன் அடையாளமாக சஞ்சய் காந்தி வந்தார்.
-Vikatan Article

மகாத்மா முதல் மன்மோகன் வரை ! - 12

சினம் கொள்ள வைத்த சிண்டிகேட்!   

''உங்கள் வழிகாட்டுதல்படிதான் இனி நான் நடந்துகொள்வேன்'' - என்று பெருந்தலைவர் காமராஜருக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டு இந்தியாவின் தலைமை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்ட இந்திரா அப்படி நடந்துகொள்ளவில்லை.
சிறுசிறு சம்பவங்களில் இந்திரா அப்படி நடந்துகொள்வதை காமராஜர் கண்டுகொள்வதில்லை. ஆனால் நாட்டின் எதிர்காலத்தையும் மக்களின் நிகழ் காலத்தையும் பாதிக்கும் பல நிகழ்வுகளிலும் இந்திரா இப்படி நடந்துகொள்வதை காமராஜர் சகிக்கத் தயாராக இல்லை.
முக்கியமான முரண்பாடு, இந்திய ரூபாயின் மதிப்பை குறைப்பதில் ஏற்பட்டது. இந்திய ரூபாயின் மதிப்பை திடீரென இந்திரா குறைத்தார். காமராஜர் இதனைக் கடுமையாகக் கண்டித்தார்.
இந்திய ரூபாயின் மதிப்பை எதற்காக இந்திரா குறைத்தார் என்றால்... அன்று இந்தியப் பொருளாதாரம் வேகவேகமாக சீர்குலைந்துகொண்டு இருந்தது. பாகிஸ்தான் ஊடுருவல் காரணமாக நாடும் அச்சுறுத்தலில் இருந்தது. இந்தியா - பாகிஸ்தான் போரைத் தொடர்ந்து உலக வங்கியும், சர்வதேச நிதி ஆணையமும் இந்தியாவுக்கு அதுவரை தந்துவந்த உதவிகளை நிறுத்திவிட்டன. இந்தியாவுக்கு உதவ வேண்டும் என்று கேட்டபோது, 'ரூபாயின் மதிப்பைக் குறையுங்கள்’ என்று இந்த இரண்டு நிறுவனங்களும் நிபந்தனை விதித்தன. இப்படி நிபந்தனை விதிக்க அமெரிக்காவும் தூண்டியது. இதனை ஏற்றுக்கொண்டு இந்திய ரூபாயின் மதிப்பைக் குறைத்தால் அந்நிய மூலதனம் நம்முடைய நாட்டுக்குள் வரும் என்று பொருளாதார ஆலோசகர்கள் ஆலோசனை சொன்னார்கள். இதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் இந்திரா, இந்திய ரூபாயின் மதிப்பை 35.5 சதவிகிதமாக குறைத்தார். 1966-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ம் நாள் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை எதிர்க் கட்சிகள் அனைத்தும் எதிர்த்தன. 'அமெரிக்காவுக்கு இந்தியா அடிபணிந்துவிட்டது என்று கண்டித்தன. இவர்களோடு, சேர்ந்து காமராஜரும் இதனை எதிர்த்தார். 'பிரதமர் என்னைக் கலந்துகொள்ளாமல் எடுத்த முடிவு’ என்று வெளிப்படையாகக் கூறினார்.
நடப்பது காங்கிரஸ் ஆட்சி. ஆனால் காங்கிரஸ் தலைவர் காமராஜருக்குத் தெரியாமல் மிகமிக முக்கியமான ஒரு பொருளாதார முடிவு எடுக்கப் படுகிறது. அதுவும் மிகப்பெரிய சர்ச்சைக்குரிய முடிவு என்றால் எப்படி இருக்கும்?
''நாணய மதிப்புக் குறைப்பைத் தொழில் வளர்ச்சிபெற்ற நாடுகள் தங்கள் உற்பத்தியில் ஈடுசெய்ய முடியும். ஆனால் விவசாயத்தை மட்டுமே பெரிதாக நம்பியுள்ள நம் நாட்டுக்கு இது மேலும் துன்பத்தையே கொடுக்கும்'' என்பது காமராஜரின் எண்ணம், இதனை இந்திரா மறுத்தார். ''ரூபாயின் மதிப்பைக் குறைத்தால் ஏற்றுமதிகள் அதிகரிக்கும். அந்நிய மூலதனம் அதிகமாக வரும்'' என்பதையே திரும்பத் திரும்பச் சொன்னார் இந்திரா. அமெரிக்காவிடம் அதிகமான நிதியை இந்திரா வேண்டி நின்றார். தருவதற்கு ஒப்புக்கொண்ட அமெரிக்கா, மொத்தமாகத் தராமல் பிய்த்துப் பிய்த்து வழங்கியது. இதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. இந்தியா தனது விவசாயக் கொள்கையை மாற்ற வேண்டும் என்று அமெரிக்கா நிபந்தனை விதித்தபோதுதான்  இந்திராவுக்கு லேசான விழிப்பு ஏற்பட்டது. வடக்கு வியட்நாம் மீது அமெரிக்கா தாக்குதல் தொடங்கியபோது முழு விழிப்பு இந்திராவுக்கு வந்தது.
''நாம் ஏதோ ஒரு சுழலில் சிக்க வைக்கப் பட்டோம்'' என்று ஓராண்டு கழித்துத்தான் இந்திரா உணர்ந்தார். ''அது நான் எடுத்த தவறான முடிவு. இதனால் அதிகமான தீங்குதான் ஏற்பட்டன'' என்று பிற்காலத்தில் இந்திரா அந்தத் தவறை ஒப்புக்கொண்டார்.
ஆனாலும், காமராஜர் இந்திராவை விட்டு மனதளவில் விலகத்தொடங்கினார். 1967 தேர்தல் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது தன்னிச்சையாக இந்திரா நடந்துகொள்வதாக காமராஜர் நினைத்தார். ''நான் செய்த தவறு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அவர் எல்லா அதிகாரமும் தன்னிடமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆகவே, யாரையும் எக்காரணத்துக்காகவும் அருகில் நெருங்க விடுவது இல்லை'' என்று காமராஜர் வருந்திப் பேச ஆரம்பித்தார். காமராஜர் எதிர்பார்த்தது மாதிரியே 1967 தேர்தல் காங்கிரஸுக்கு மகிழ்ச்சிக்குரியதாக இல்லை. மொத்தமுள்ள 518 நாடாளுமன்றத் தொகுதிகளில் 282 இடங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சி பெற முடிந்தது என்பதைவிட முக்கியமானது... அனைத்து மாநிலங்களிலும் அதுவரை ஏகபோகமாக இருந்த காங்கிரஸ் கட்சி தனது பழைய செல்வாக்கை இழந்தது.
பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு, கேரளா எனப் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ். இந்திராவின் தவறான வழிகாட்டுதலும், தன்னிச்சையான நடத்தையுமே இதற்குக் காரணம் என்று நினைத்த காமராஜ், ஒரு கடிவாளம் போட்டார்.
''காங்கிரஸின் கொள்கைகளைத் தெளிவுபட எடுத்துவைக்க வேண்டியது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பு. அவற்றை செயல்முறைக்குக் கொண்டுவர வேண்டியது காங்கிரஸ் அரசின் கடமை'' என்ற தீர்மானத்தை காங்கிரஸ் காரியக் கமிட்டியில் வைத்தே நிறைவேற்றினார் காமராஜர். காங்கிரஸ் கட்சி சொல்வதைத்தான், காங்கிரஸ் ஆட்சி செய்ய வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கியது இந்தத் தீர்மானம். அதாவது பிரதமர் பதவி அதிகாரம் பொருந்தியது அல்ல. காங்கிரஸ் கட்சித் தலைவரே அதிகாரம் பொருந்தியவர் என்பதைச் சொல்லாமல் சொல்லியது இந்தத் தீர்மானம்.
பிரதமர் ஆவது முக்கியமல்ல; காங்கிரஸ் தலைவராக இருப்பதே அதைவிட முக்கியம் என்பதை உணர்ந்து இந்திரா உழன்றார். அந்த காங்கிரஸ் தலைவர் பதவி எட்டு ஆண்டுகளுக்கு முன் தனக்கு கிடைத்தபோது, ஓராண்டு காலத்தில் அலட்சியமாக ராஜினாமா செய்துவிட்டுப் போனோமே என்று வருந்தினார். மூன்று விதமான சிந்தனைகள் அவரை அலைபாயவைத்தன.
இப்போது தலைவராக இருக்கும் காமராஜரை அந்த இடத்தில் இருந்து நகர்த்த வேண்டும். காங்கிரஸ் தலைவராக தான் அந்த இடத்தில் அமர வேண்டும். தான் வர முடியாவிட்டால், தனக்கு வசதியான தன் பேச்சைக் கேட்கக் கூடிய ஒருவரை கொண்டுவந்துவிட வேண்டும். - இந்த மூன்றும் அவரை தூங்கிவிடாமல் தவிக்கவைத்தன.
காமராஜர் மூன்றாவது முறையும் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டால் அவரை எப்படி எதிர்கொள்வது என்று நினைத்தார் இந்திரா. ஆனால், அவருக்கு கஷ்டம் கொடுக்கவில்லை காமராஜர். இரண்டு முறை தலைவர் பதவியில் இருந்த காமராஜருக்கு மூன்றாவது முறையும் இதனை அடைய விருப்பம் இல்லை. முதல்முறை இருந்த மகிழ்ச்சி இரண்டாவது தடவை இருந்தபோது இல்லை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருந்தார். ஆனால், அவரே தலைவராக இருக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் வலியுறுத்தினார்கள். காமராஜர் என்ன நினைக்கிறார் என்பதை அறிய அவரைச் சந்தித்தார் இந்திரா. அவரிடமும் தனது நிலைப்பாடு இதுதான் என்பதை தெளிவுபடுத்தினார். இந்திராவுக்கு முதல் தடை உடைந்தது.
அடுத்து தன்னை கொண்டுவர காமராஜ் முயற்சிப்பாரா என்று எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எந்தப் பேச்சையும் காமராஜர் எழுப்பாதது அவருக்கு ஏமாற்றமே. காமராஜர் போட்டியிடவில்லை என்றதும் தலைமைப் பதவிக்கு எஸ்.கே.பாட்டீல், அதுல்யா கோஷ் போன்றவர்கள் முயற்சித்தார்கள். 'யாரைத் தேர்ந்தெடுத்தாலும் போட்டியின்றித் தேர்ந்தெடுப்பதே கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது’ என்று காமராஜ் சொன்னார்.
எஸ்.கே.பாட்டீல், மோகன் தாரியா, அனுமந்தயா ஆகிய மூவரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். போட்டி என்று வந்துவிட்டது. அதுல்யா கோஷ், மனு தாக்கல் செய்யவில்லை. காமராஜரைச் சந்தித்த இந்திரா, சில பெயர்களை பரிந்துரை செய்தார். சுகாதியா, நந்தா, சஞ்சீவையா ஆகியோர் தலைவராக வந்தால் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என்று இந்திரா கோரிக்கை வைத்தார். ஆனால் காமராஜரின் பார்வையும், பாதையும் வேறு மாதிரி இருந்தது. தலைவர் பதவிக்கு மனுச் செய்திருந்தவர்களையும் ஒதுக்கினார். இந்திரா கொடுத்த பட்டியலையும் நிராகரித்தார். மைசூருக்கு தகவல் அனுப்பினார். மறுநாள் அந்த மனிதர் டெல்லிக்கு வந்தார். நள்ளிரவு நேரம்... 'நீங்கள்தான் அகில இந்திய காங்கிரஸின் அடுத்த தலைவர். நாளை காலை என்னை வந்து சந்தியுங்கள்’ என்று சொல்லி அவரை அனுப்பினார். மறுநாள் காலை வந்த அவரை அழைத்துச் சென்ற காமராஜ், இந்திரா முன் உட்கார வைத்தார். அவர்தான் நிஜலிங்கப்பா.
தன்னால் பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவரைக்கூடத் தலைவராக்க காமராஜ் விரும்பவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும், டெல்லி செல்வாக்கு இல்லாத நிஜலிங்கப்பாவை பின்னர் நம்மால் சமாளிக்க முடியும் என்று இந்திரா திருப்திப்பட்டுக்கொண்டார். தான் தலைவராக வேண்டும் என்று நினைத்தார். நடக்கவில்லை. தான் விரும்பியவரை தலைவராக்க வேண்டும் என்று நினைத்தார். அதுவும் செயல்படவில்லை. காமராஜர் மீண்டும் தலைவராகக் கூடாது என்று விரும்பினார். அது மட்டும் நடந்தது. பரவாயில்லை, சமாளிப்போம் என்று சமாதானம் அடைந்தார். ஆனால் நிஜலிங்கப்பாவின் நிஜமுகம் சில மாதங்களிலேயே இந்திராவுக்குத் தெரிய ஆரம்பித்து. அவர் முகம் இருளத் தொடங்கியது.
தன்னிடம் இருக்கும் பிரதமர் பதவியையே நிஜலிங்கப்பா பறிந்துவிடுவாரோ என்ற பீதி வந்துவிட்டது இந்திராவுக்கு. காமராஜருக்காவது, இது நேருவின் மகள் என்ற பாசம் இருந்திருக்கும். ஆனால் நிஜலிங்கப்பா, நேருக்கு நேராக முஷ்டியை உயர்த்தினார். தலைமைக்குக் கட்டுப்பட்டதுதான் கட்சி என்பதை ஒவ்வொரு விஷயத்திலும் நிரூபிக்க முயற்சித்தார். அதனை தயவு தாட்சண்யம் இல்லாமல் வெளிப்படுத்தவும் தொடங்கினார்.
பெரிய தலைவர்கள் கூடிக்கூடி உட்கார்ந்துகொண்டு தனக்கு அறிவுரை சொல்வதை அவஸ்தையாக நினைத்தார் இந்திரா. இந்தப் பெருந்தலைவர்கள் 'சிண்டிகேட்’ என அழைக்கப்பட்டார்கள். இந்திரா ஆதரவாளர்கள் இதனை கேலிச் சொல்லாகவும் பயன்படுத்தினார்கள்.
''1962-ல் சீனப் படையெடுப்பு நிகழ்ந்த பின், அதனால் மிகவும் மனம் நொந்துபோன நேருஜி, தேசத்தின் எதிர்காலம் பற்றி மிகவும் அதிகமாகக் கவலைப்படத் தொடங்கினார். அந்த நாட்களில் நேருஜி, என்னையும் சஞ்சீவி ரெட்டி போன்ற நண்பர்கள் சிலரையும் அடிக்கடி அழைத்து பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிப்பார். இப்படி அவருடன் ஆலோசனை நடத்துவதற்காக நாங்கள் அடிக்கடி சென்று வந்தபோது, இந்த ஆலோசனைக் குழுவை பத்திரிகையாளர்கள் 'சிண்டிகேட்’ என்று பெயரிட்டு அழைத்தார்கள். இந்த சிண்டிகேட்தான் நேருவின் மறைவுக்குப் பிறகு லால்பகதூரைப் பிரதமராக்க முடிவு செய்தது. இதே சிண்டிகேட்தான் அவர் மறைவுக்குப் பிறகு இந்திராவையும் பிரதமர் ஆக்கியது'' என்று 'சிண்டிகேட்’க்கு விளக்கம் சொன்னார் காமராஜர்.
நேருஜியின் 'சிண்டிகேட்’ இந்திராவை சினம்கொள்ள வைத்தது. அதற்கு நிஜலிங்கப்பாவே நிஜக் காரணமாய் ஆனார்.

_Vikatan Article

ஆ... சாமியோவ்! 12

போலி சாமியார்களை உலகம் தெரியாத சிலர், தெய்வமாகவே பாவித்து காலில் விழுகிறார்கள். உலகம் தெரிந்தவர்களோ இவர்களை காமெடியன்களாகப் பார்த்துச் சிரித்துவிட்டு நகர்கிறார்கள். ஆக, உலகம் புரிந்தவர்கள், புரியாதவர்கள் ஆகிய இருதரப்பினராலுமே போலி சாமியார்களுக்குப் பெரிதாக எந்தத் தடைகளும் கிளம்புவதில்லை. இதுபோன்ற போலிகளால் எத்தனையோ பேருக்கு பார்வை போகிறது. கேட்கும் திறன் போகிறது. ஏன் ஒரு சிலருக்கு உயிரேகூட போய்விடுகிறது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களே இதற்கெல்லாம் காரணம் போலி சாமியார் என்று அறியாமல் மீண்டும் அவர்களின் காலடியே சரணம் என்று விழுந்து கிடக்கிறார்கள்.
 ஆந்திர மாநிலம் ஹைதராபாத் மாவட்டத்தில், நேரேடிகுண்ட மண்டலத்தில் இருக்கும் இஸ்பூர்தண்டக் கிராமத்தில் இன்றும்  இப்படி அரங்கேறி வருகிறது. 'கணபதி சாமி’ என்று கேட்டால் அந்தப் பகுதியில் பலருக்கும் தெரியாது. அதுவே 'கிட்னி பாபா’ என்று கேட்டால் இந்த சாமியாரின் ஆசிரமத்துக்கு சரியாக வழி சொல்வார்கள்.
ஒருவகையில் கிட்னி பாபா மாடர்ன் ஆசாமி. 'சாமியார் என்றால் காவி அங்கியும், உத்தி ராட்சக் கொட்டையும்தான் அடையாளமா?’ என்று கேட்பதைப்போல, மடிப்புக் கலையாத ஃபுல் பேன்ட், வெள்ளை முழுக்கைச் சட்டை, படிந்து வாரப்பட்ட தலைமுடி என்று நவீன தோற்றத்தில் இருப்பார். போனால் போகிறது என்று இட்டுக்கொண்டதைப் போல, நெற்றியில் சிறியதாக விபூதியும் குங்குமமும் கண்சிமிட்டும்.
பொதுவாக சாமியார்களுக்குப் பக்தர்கள்தான் இருப்பார்கள். ஆனால் கிட்னி பாபாவுக்கு இருப்பதோ... எல்லாமே நோயாளிகள்தான்! அதிலும் குறிப்பாக வயிற்று வலி நோயாளிகள்தான். 'வயிற்று வலி’ என்று சொல்லிக்கொண்டு தன்னிடம் யார் வந்தாலும் கிட்னி பாபாவைப் பொறுத்தவரை அவர்கள் கிட்னியில் கல் உள்ள நோயாளிதான். கிட்னி பாபா தன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் 'அழகை’ சொல்வதற்கு முன்பு இவரது மருத்துவமனையாக செயல்படும் ஆசிரமத்தைப் பற்றி சொல்லியாக வேண்டும்.
கிராமத்தைவிட்டு தள்ளி இருக்கும் சவுக்குத் தோப்பைத் தாண்டி வெட்ட வெளியில் ஓர் ஒற்றை மரம். அந்த மரத்துக்கு பக்கத்தில் மூங்கில் சுவர்களைக்கொண்ட ஓர் ஓலைக் குடிசை. கிட்னி பாபா எதிலுமே டிரான்ஸ்பரென்ட். அதனால், ஓலை குடிசைக்குள் அவர் தன் பக்த நோயாளிகளுக்கு என்ன சிகிச்சை அளிக்கிறார் என்பதை வெளியில் இருந்தே பார்க்க முடியும். கிட்னி பாபா ரொம்ப ரொம்ப பிஸி. அவரை எல்லா நாட்களிலும் பார்த்துவிட முடியாது. திங்கட்கிழமை மட்டும்தான் அவர் அப்பாயின்ட்மென்ட் கிடைக்கும். அதனால் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இவரிடம் அற்புத அதிசய ஆசீர்வாத சிகிச்சைப்பெற கூட்டம் அலைமோதும். கிட்னி பாபாவுக்கு பௌர்ணமியும் அமா வாசையும் உகந்த தினங்கள் என்பதால் அன்று திங்கட்கிழமையாக இல்லாவிட்டாலும் அன்றும் ஆசிரமம் திறந்திருக்கும்.
தீராத வயிற்று வலி என்று வருகிறவர்களுக்கு உடனடியாக கிட்னியில் இருக்கும் கல்லை எடுத்துவிட மாட்டார் இந்த கிட்னி பாபா. சிவனும் பார்வதியும் சேர்ந்து அருள்பாளிக்கும் படத்துக்கு கீழே அமர்ந்து, 'நான் கடவுள். நீ நோயாளி. என்னை நம்பு. நீ குணமாவாய்’ என்று சொல்லிவிட்டு நோயாளிக்கு விபூதி குங்குமப் பிரசாதங்கள் கொடுத்து பூசிக்கொள்ளச் சொல்வார். அடுத்து இரண்டாவது கட்ட சிகிச்சைக்காக ஆசிரமத்துக்கு வெளியே சற்று தூரம் தள்ளியிருக்கும் ஒரு வேப்ப மரத்தடிக்கு அழைத்துச் சென்று செம்மண் பொடியால் மண் தரையில் பல கட்டங்களை வரைவார். பிறகு எலுமிச்சைப் பழங்களை அரிந்து கொஞ்ச நேரம் இந்தக் கட்டங்களில் வைத்து விளையாடிக்கொண்டே மாந்திரிக மந்திரங்களைச் சொல்வார்.
அதன் பிறகுதான் க்ளைமாக்ஸ். தனது உதவி யாளரையும் நோயாளியுடன் வந்தவரையும் அங்கேயே அமர வைத்துவிட்டு வயிற்று வலிக்காரரை மட்டும் மறைவான இடத்துக்கு அழைத்துச் செல்லுவார். அங்கே வயிற்றுவலிக்காரர் தன் ஆடைகளை எல்லாம் களைந்துவிட்டு நிற்கச் சொல்லும் கிட்னி பாபா அவர்களை கண்களாலேயே ஸ்கேன் செய்வார். அந்த ஸ்கேனிலேயே கிட்னியில் கல் எங்கே இருக்கிறது... எத்தனை பெரிதாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துவிடுவார். இது முடிந்ததும் நோயாளியை மீண்டும் தன் ஆசிரமத்துக்கே ஆபரேஷன் செய்ய அழைத்துவருவார்.
நோயாளியை நெடுஞ்சாண்கிடையாக மண் தரையில் குப்புறப் படுக்கச் சொல்லிவிட்டு குத்துக்கலிட்டு உட்காரும் சாமியார், குங்குமம் மஞ்சள் ஆகியவற்றால் ஆபரேஷன் செய்ய வேண்டிய இடத்தை நீவிவிடுவார். பிறகு நடுமுதுகில் கொத்து புரோட்டா போடுவதைப்போல வெறும் கைகளைக்கொண்டே வெட்டுவார். அந்த நேரம் எதோ ஒரு தெய்வீக சக்திக்கு ஆட்பட்டவரைப்போல கண்களை மூடி தலையை சுழட்டியப்படியே நோயாளியின் முதுகில் கடிப்பார். அப்போது அவரது உதவியாளர் ஒரு துண்டு பேப்பரை பயபக்தியோடு நீட்ட, நோயாளியின் முதுகு வழியாக கடித்து எடுக்கப்பட்ட கிட்னி கல்லை, கிட்னி பாபா துப்புவார். ஆனால், ரத்தமோ சத்தமோ எதுவுமே இருக்காது, ஏன், பாபா கடித்த பல் தடம்கூட நோயாளியின் உடம்பில் இருக்காது. இந்த அதிசயத்தை நோயாளியின் உடன் வந்தவர்கள் கண்டு கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள்.
எல்லா நோயாளிகளுக்குமே இத்தனை எளிமையாக சிகிச்சை முடிந்துவிடாது. ஒரு சிலருக்கு இதுபோன்று இரண்டு மூன்று சிட்டிங்கூட தேவைப்படும். ஒரு ஆபரேஷனுக்கு கிட்னி பாபா வாங்கும் ஃபீஸ் வெறும் 700 ரூபாய்தான். ஃபீஸ் குறைவாக இருப்பதால் ஹைதராபாத்தைத் தாண்டி கரீம் நகர், வாராங்கல் ஏன் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தெல்லாம்கூட கிட்னி பாபாவிடம் ஆபரேஷனுக்காகப் பலர் வருகிறார்கள்.
'இங்கிலீஷ் டாக்டர்களிடம் போய் பல ஆயிரங்கள் செலவு செய்தும் என் வயிற்று வலி சரியாகவில்லை. அதனால்தான் இங்கே ஆப ரேஷனுக்காக வந்திருக்கிறோம்!’ என்று சொல்கிற அளவுக்கு அங்கு வரும் பக்தர்கள் வெகுளியாக இருப்பதுதான் கிட்னி பாபாவின் தொழிலுக்கான மூலதனம்.
ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை கிட்னி சாமியார் என்ன, சட்னி சாமியார்கூட பலமாகவே கல்லா கட்டுவார்கள்!
-Vikatan Article

ஆ... சாமியோவ்! 11

நன்கு படித்த, ஓரளவுக்கு உலகம் தெரிந்த பலரே... கஷ்டம் என்று வரும்போது ஏமாற்றுக்காரர்களின் வலைகளில் வீழ்ந்துவிடுகிறார்கள். அதனால், சாதாரண மொக்கை சாமியார்களால்கூட பல சமயங்களில் எழுதப்படிக்கத் தெரியாத ஜனங்களின் தலையில் மிளகாய் அரைத்துவிட முடிகிறது. ஏமாறுவதற்கு மக்கள் தயாராக இருக்கும்போது, ஏமாற்றுவதற்கு இந்த சாமியார்களுக்கு பெரிய புத்திசாலித்தனம் தேவைப்படுவது இல்லை. இதற்கு சமீபத்திய உதாரணம் காலியா பாபா.
 ஒடிசாவில் புதிதாக உதயமாகி இருக்கும் ஆங்கூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காலியா பாபா. மாநிலத்தின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த மாவட்டத்தில் மகாநதி பாய்கிறது என்றாலும், அங்கே பூமிப்பரப்புக்கு மேலே இருக்கும் செழுமையையும் செல்வத்தையும்விட, பூமிக்கு அடியில் இருக்கும் தாதுப்பொருட்களில் மறைந்திருக்கும் செல்வம்தான் அதிகம். ஆனால் அந்த ஊர் மக்களுக்கோ, மண்ணே பொன்னாக இருப்பது தெரியாது. அதனால், ஏழ்மை அங்கே ஆதார் அட்டை வாங்கி நிரந்தரமாகக் குடியமர்ந்திருக்கிறது. நீர் முதலைகள் நிறைந்த நீர்பரப்புகளைக் கொண்ட ஆங்கூலில், காலியா பாபா போன்ற நிஜ முதலைகளும் அதிகம்.
'ஒரு சாமியார் என்றால் எப்படி இருக்க வேண்டும்?’ என்றுகூட தெரியாதவர்தான் காலியா பாபா. பார்ப்பதற்கு ஏறக்குறைய நம் ஊர் காமெடி நடிகர் செந்தில் மாதிரிதான் இருக்கிறார். ஊரார் சொத்தை சாப்பிட்டு வளர்த்த தொப்பை, இவருக்கு ஒரு அடி வரை நீண்டிருக்கிறது. இவர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், இவரது ஆசிரமத்தில் நடக்கும் தீர்த்த யாத்திரை என்ற ஆன்மிகம் தவழும் நிகழ்ச்சியை ஒருமுறை பார்த்தால் போதும்.
தீர்த்த யாத்திரை என்றால் ஏதோ டாஸ்மாக் சமாசாரம் என்று நினைத்துவிடக் கூடாது. காலியா பாபா சத்தியச் சந்திராவாக இந்தப் பூவலகில் அவதரித்த திருநாளாம் அது. அதாவது, 58 வயதாகும் காலியா பாபா, இந்த வயதிலும் ஹேப்பி பர்த்டே கொண்டாடுகிறார். அப்போது ஆசிரமத்தைச் சுற்றி நடத்தப்படும் தீர்த்த யாத்திரையில், தலையில் பால்குடத்தை சுமந்தபடி பெண்கள் வருவார்கள். திருப்பதி திருமலை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து புறப்படும் திருக்குடை ஊர்வலத்துக்கு குறைவில்லாத விமரிசையோடு நடக்கும் இந்த ஊர்வலத்தில், தாரை தப்பட்டைகள் காதைக் கிழிக்கும். 'கண்ணன் பிறந்தான், எங்கள் மன்னன் பிறந்தான், மனக் கவலைகள் மறைந்ததம்மா!’ என்ற பாடல் பாணியில் இவரது சிஷ்ய கோடிகள் அந்த ஊருக்கே உரிய அத்தனை ஆட்டம் பாட்டங்களோடும், கோலாட்டங்கள் போட்டபடி இத்துப்போன இந்தக் காலியா பாபாவை அழைத்துக்கொண்டு ஊர்வலம் செல்வார்கள்.
''எல்லா புகழும் எனக்கே எனக்கே!'' என்று அலையும் முகபாவனையோடு ஊர்வலத்தில் நடுநாயகமாக, கையில் புல்லாங்குழலோடும், கறுநீல வண்ணத்தில் இருக்கும் வெற்றுடம்பில் மின்னும் ஆபரணங்களோடும், தலையில் கீரிடத்தைப்போல கட்டப்பட்டிருக்கும் ஜரிகை வைத்த தலைப்பாகையுடனும் கிருஷ்ணன் வேடம் தரித்து காமெடியாக டான்ஸ் ஆடிக்கொண்டே வருவார் காலியா பாபா. ஒரு கட்டத்தில் இவரது பரமாத்ம சிஷ்யைகள் சிலருக்கு பக்தி முற்றிப்போகும். அவர்கள் டைட் கிளோஸ்-அப்பில் காலியா பாபாவைச் சுற்றி வந்து கோபியர் பாவனைக் காட்டி ஆடுவார்கள். அந்த ஷணம் பகவான் கிருஷ்ண பரமாத்மாவே தனக்குள் புகுந்துவிடுவதாக கதை கட்டுவார் காலியா பாபா. சுற்றியிருக்கும் பக்தைகளை எல்லாம் பிருந்தாவனத்தின் கோபியர்களாக பாவித்து ராசலீலை ததும்பும் நடனம் புரியத்தான் இப்படி ஒரு கட்டுக்கதை.  க்ளைமாக்ஸ் ஊர்வலம் ஆசிரமத்தை அடைந்த பிறகுதான் சூடுபிடிக்கும்.
தலையில் பால் குடம் வைத்திருக்கும் 'கோபியர்கள்’ எல்லாம் ஆசிரமத்துக்குள் வரிசையாக செல்ல... காலியா பாபாவின் அடுத்த கட்ட ராசலீலை ஆரம்பிக்கும். வீதியில் நடந்த கோலாட்டத்தைவிட ஆசிரமத்தின் உள்ளே கோலாட்டம் வேகம் எடுக்கும். பாடல்கள் ஹை டெசிபலில் முன்னைவிட வேகம் எடுக்கும். கோபிகாஸ்திரீகளாக மாறி பக்தைகள் எல்லோரும் ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொண்டு வட்ட வட்டமாக எதிரும் புதிருமான திசைகளில் பார்க்கிறவர்களுக்கே தலைசுற்றும் அளவுக்கு தன்னைச் சுற்றிவந்து ஆடச்சொல்வார் காலியா பாபா. ஒரு கட்டத்தில் கையில் இருக்கும் புல்லாங்குழலை தூர வீசிவிட்டு, கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் பக்தைகளுடன் காலியா பாபா கைகோத்து ஆடுவார். காலியா பாபாவுக்கு வயது வித்தியாசம் கிடையாது. பக்தைகளுக்கு பிடிக்கிறதோ, இல்லையோ... அவர்களை வலுக்கட்டாயப்படுத்தியாவது ஓரிரு நிமிடங்கள் காலியா பாபா டான்ஸ் ஆடிவிடுவார்.
அதன் பிறகுதான் காலியா பாபாவின் ரியல் அட்டாக் ஆரம்பமாகும். இதுவரை ஸ்ரீகிருஷ்ணனாக இருந்தவர், இப்போது பாலகிருஷ்ணனாக மாறுவார். கைகோத்து ஆடிக்கொண்டிருக்கும் பக்தைகளின் இடுப்பில் பாலகன் கிருஷ்ணனாக தன்னை பாவித்துக்கொள்ளும் காலியா பாபா, ஒரே ஜம்ப்பாக ஏறி உட்கார்ந்துவிடுவார். இடுப்பில் இருந்து கீழே விழுந்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதால், பக்தைகளை கரடியைபோல இறுக்கமாகக் கட்டிப் பிடித்துக்கொண்டு அவர்களின் முகத்துக்கு அருகே தன் முகத்தைக் காட்டி பயமுறுத்தி விளையாடுவார். பக்தைகள் பலரும் இதை சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால், யாராவது பக்தைக்கு சந்தேகம் வந்து கோபத்தில் புடவையை இழுத்து இடுப்பில் சொருகினால், 'தங்கச்சி’ என்று தடாலடியாக காலியா பாபா சரண்டர் ஆகிவிடுவார்.
கிருஷ்ணனாக மட்டும் தன்னைக் காட்டிக்கொண்டால் சிவபக்தைகள் தன் ஆசிரமத்துக்கு வராமல் போய்விடுவார்களோ என்ற பயத்தில் காலியா பாபா அவ்வப்போது சிவதாண்டவமும் ஆடுவார். அப்போது பக்கத்தில் இருக்கும் பக்தைகள் எல்லாம் அவருக்கு பார்வதி தேவியாகத் தெரிவார்கள். இவரின் ருத்ரதாண்டவத்தை காமெடி சேனல்களில் ஒளிபரப்பினால், டி.ஆர்.பி. ஒரே ஜம்ப்பாக உயர்வது நிச்சயம். பக்தைகளுக்கு பிராக்கெட் போடுவதற்கென்றே இவர் ஒரியா மொழியைத் தாண்டி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளும் தெரிந்துவைத்திருக்கிறார். பெரும்பாலும் காமெடி சாமியாராகத் தெரியும் இந்த காலியா பாபா, சிறுமிகளின் தோள்களில் கை போட்டுக்கொண்டு இருக்கும் விடியோ காட்சிகள் திகிலைக் கிளப்புகின்றன.
சமீபத்தில் பிரமணி தேவி என்கிற பெண்மணி அந்த ஊர் போலீஸ் நிலையத்துக்கு காலியா பாபா பற்றி ஒரு புகாருடன் சென்றார். ''நான்கு பிள்ளைகளைப் பெற்ற பெண் நான். அடைக்கலம் தேடி அந்த ஆசிரமத்துக்குச் சென்றேன். என்னை இந்த சாமியார் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார். விஷயம் வெளியே தெரிந்தபோது ஆசிரமத்தில் இருந்த அவரது சிஷ்யர்கள் என்னிடம் நைஸாகப் பேசி கருக்கலைப்பு செய்துவிட்டார்கள். ஆகவே, காலியா பாபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பிரமணி தேவி அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
வெளியூரில் இருந்து வருகிறவர்கள் யாராவது, ''என்னய்யா இது வெட்ககேடு. இப்படிப்பட்ட சாமியாரை எப்படி ஊருக்குள்ளே விட்டுவெச்சிருக்கிங்க?'' என்று காலியா பாபாவின் ஊர்காரர்களைப் பார்த்து கேட்டால், ''என்னங்க பண்றது? அது புத்தி வளர்ச்சி இல்லாத சாமிங்க. என்ன பண்றதுன்னே புரியலை’ என்று புது வியாக்கியானம் கொடுக்கிறார்கள் அந்த ஊர் அப்பாவிகள். அவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை என்று கேட்டால், அந்த ஊர் போலீஸும் இதையேதான் காரணமாகச் சொல்கிறது!
-Vikatan article

Saturday, December 28, 2013

ஆறாம் திணை - 68 மருத்துவர் கு.சிவராமன்

நெரிசலும் இரைச்சலுமான இந்த வாழ்வில் ஒவ்வொருவருக்குள்ளும் புற்றாக வளர்வது, 'மன அழுத்தமும் மனச்சோர்வும்’ மட்டும்தான். நவீன வாழ்வியலின் பெரும் சங்கடமான இது, பின்னாளில் முழு மனவியாதியாகப் பரிணமிக்கிறது. அதோடு மற்ற வியாதிகளை ஊக்குவித்தும் உருவாக்குவதும் மன அழுத்தத்தின் முக்கியமான பிரச்னை. அது காய்ச்சல், தலைவலி முதல் கேன்சர் வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்கிறது அந்தக் கால சித்த மருத்துவம் முதல் இந்தக் கால நவீன அறிவியல் வரை.  
முடக்கத்தான் தோசை சாப்பிட்டு மூட்டுவலியைக் கட்டுப்படுத்துவதுபோல, உளுந்தங்களி சாப்பிட்டு மாதவிடாய் வலியை நீக்குவதுபோல, இஞ்சி ரசாயனம் அருந்தி மைக்ரேன் தலைவலியைப் போக்குவதுபோல, உணவை மட்டும் ஊட்டி உள்ளத்து வலியை உதறுவது கடினம். ஆனால், உணவை 'ஊட்டுபவர்’ மூலம் உள்ளத்துக்கு மருந்திட முடியும். ஆனால், ஊட்டுபவர்களைத்தான் கொஞ்ச நாளாகக் காணோம்!
'அடிச்சட்டி ஆனை போல; கடைசி வாய் வாங்கிக்கோடா’ - எனச் சொல்லிக் குழைந்த பருப்பு சாதத்தில் கூடுதலாக தன் கைச்சுவையைச் சேர்க்கவேண்டிய அம்மாவுக்கு, நேர நெருக்கடி. 'வெண்டைக்காய் பச்சடி மீதி வெக்காமச் சாப்பிட்டானா?’ எனக் கேட்க வேண்டிய அப்பாவுக்கு, மூன்றாவது காது (செல்போன்) முளைத்து வீட்டிலும் அலுவல் நெருக்கடிகளைக் கொட்டிக்கொண்டே இருக்கிறது. இந்த நெருக்கடிகளில் உணவு அக்கறை மட்டும் அல்லாது, சின்னச் சின்னப் பாராட்டுகள், சுமையை இறக்கும் அரவணைப்புகள், மருந்திடும் புன்னகைகள், வருத்தங்களைக் காது கொடுத்துக் கேட்கும் பொறுமை... என எல்லாமே செத்துப்போனதில் மனசை அழுத்தும் பாறாங்கல்லின் கனம் அதிகரித்துக்கொண்டே போகிறது.
அந்த மன அழுத்தமே காதலையும் கருத்தரிப்பையும் தாமதிக்க வைக்கிறது. ஆண்களின் பிரத்யேக ஹார்மோன் டெஸ்டோஸ்டீரான், லேடிக் செல்களில் இருந்து ஊற வேண்டும். ஆனால், இந்த மாற்றம் மன அழுத்தத்தால் மந்தப்பட்டு விந்தணு உற்பத்தி குறைவதும், உடலுறுவுக்கான நாட்டத்தைக் குறைப்பதும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. பெண்களுக்கு சினைமுட்டை சரியான நாளில் பிதுங்கி, கருப்பையை நோக்கி வருவதைத் தாமதப்படுத்தி, கருத்தரிப்பில்கூட சிக்கலை உண்டாக்குகின்றன மன அழுத்தங்கள்!
இப்படி, பெண்களுக்கு மன அழுத்தத்தில் ஏற்படும் கருத்தரிப்புக் கோளாறு மற்றும் சினைமுட்டைப் பிரச்னைகள் இரண்டுக்கும், 'எள்’ ஒரு நல்ல மருந்து. எள்(நல்லெ)ளெண்ணெய் தடவிய உளுத்தங்களியும், தொலிஉளுந்தும் புழுங்கல் அரிசியும் சேர்த்துச் சமைத்த உளுந்தஞ்சோறும், அதில் பிசைந்து சாப்பிட எள்ளுத் துவையலும் பெண்களுக்கான ஆரோக்கிய உணவு. எள்ளில்தான் இன்று ஆண்மையைப் பெருக்கும் ஆங்கில மருந்துகளில் பரவலாகச் சேர்க்கப்படும் L-ARGININE  எனும் அமினோ அமிலமும் புரதமும் மிக அதிக அளவில் உள்ளன. ஆதலால், ஆண்களும் எள்ளை எள்ளி நகையாடாமல் உணவில் அடிக்கடி சாப்பிடலாம். ஆனால், எள்ளும் உளுந்தும் மட்டும் இதற்குப் போதாது. மன அழுத்தத்தை நீக்கும் புரிதலையும் பொறுமையையும் வளர்க்க வேண்டும். இன்ஸ்டன்ட் உலகில் இந்த இரண்டுக்குமான மெனக்கெடலுக்குப் பலருக்கு நேரம் இல்லை!
பிறந்தவுடன் நிகழும் குழந்தைகள் மரணம், சவலைப் பிள்ளைகள் பெருக்கம், பெண்கள் நலம் என நாட்டின் நலவாழ்வுப் புள்ளிகளில் நாம், வளர்ந்த நாடுகளைவிடப் பெருவாரியாகப் பின்தங்கி இருக்கிறோம். விவாகரத்தில் மட்டும் இன்னும் நாம் பாதுகாப்பாக இருப்பதற்கு, 'திருமணக் குடும்ப அமைப்பு’ என்ற கட்டுமானத்தின் மீதான நம் பலமான நம்பிக்கையும், அதை ஒட்டியே நகரும் வாழ்வியலும் மிகமிக முக்கியமான காரணம். (அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளில்  மணமுறிவு சராசரியாக 47 சதவிகிதக் கணக்கில் இருக்க, இங்கே அது இன்னும் 6 சதவிகிதப் புள்ளிகளில் குறைவாக இருக்கிறது என இந்தியக் குடும்ப நலவாழ்வு புள்ளிவிவரம் சொல்கிறது.) ஆனால், அந்தக் கட்டுமானம் உடைய ஆரம்பித்ததற்கு, பெருகும் மன அழுத்தமும், மன அழுத்தத்தைச் சீராக்கும் வழி தெரியாமல் விழி பிதுங்கி நாம் நிற்பதும் ஒரு முக்கியமான காரணம்.
'காளாஞ்சகப்படை’ என அழைக்கப்படும் சோரியாசிஸ், மன அழுத்தத்தில் பெருகும் முக்கியமான தோல் நோய்களில் ஒன்று. தோலில் தீயினால் சுட்ட புண் போல் சிவந்தும், செதில் செதிலாக உதிர்ந்தும், சில நேரங்களில் உள்ளங்கை உள்ளங்கால் தோலில் வெடிப்புகளும் பெருகிச் சிரமப்படும் இளைஞர் யுவதிகள் இன்று அதிகம். எளிய தமிழ்நாட்டுத் தாவரமான வெட்பாலை மரத்தின் இலையை மட்டும், செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் ஊறப்போட்டு இரண்டு நாள் வெயிலில் வைத்து எடுத்தால், எண்ணெய் அடர்ந்த கருநீல நிறமாகும். அந்த எண்ணெயை சோரியாசிஸ் பாதித்த சருமத்தில் வெளிப்பூச்சாகப் பூசி, இந்த நோயை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியும் என்பதை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆய்ந்து உறுதிப்படுத்தியுள்ளது. மருந்துடன் மனசையும் இலகுவாக்கினால் மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
னச்சோர்வு, இளந்தலைமுறையினருக்கு உண்டாக்கும் இன்னொரு தொல்லை, Gastroesophageal Reflux Disease (GERD) எனும் வயிற்றை வலித்து, உணவை எதுக்களித்து, தொண்டையில் சமயங்களில் புண் உண்டாக்கும் குன்ம நோய். அடிக்கடி ஆர்ப்பரித்து வெம்பும் மனம் இதற்கு ஒரு முக்கியமான காரணம். காரமான எண்ணெயில் பொரித்த உணவையும் கிழங்குகளையும் சில மாதங்கள் நீக்குவதுடன், இட்லிக்கு பிரண்டைச் சட்னி, இடியாப்பத்துக்குத் தேங்காய்ப்பால், தாகத்துக்கு மோர், சாப்பிடும்போது ஜீரணிக்க சீரகத் தண்ணீர், இரவில் கனிந்த வாழை... என உணவைத் திட்டமிடுங்கள்.
அப்பா-அம்மா அனுப்பிய செல்கள் சேர்ந்து உருவான முதல் கருமுட்டையில் இருந்து, நாம் எருமுட்டைக்குள் போகும் வரை ஒவ்வொரு கணமும் திட்டமிட்டபடி படியெடுக்கும் மரபணுக்கள், வாழ்வியல் நெருக்கடியில் தடம்புரளும்போது, புற்றுப்பெருக்கம் தொடங்குகிறது. சாதாரண சோகை, தலைவலி, ஜுரம்கூட சில நாட்கள் கூடுதலாக நீடித்தால், புற்றாக இருக்குமோ என்ற கண்ணோட்டத்தில் சிந்திக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மருத்துவ உலகம். மலக்குடலுக்குள் வரும் சாதாரண 'பாலிப்’, மார்பகத்திலும் கருப்பையிலும் வரும் சாதாரண 'நார்தசைக் கட்டிகள்’, எப்போதும் நெருக்கடியிலும் மனச்சோர்விலும் இருப்போருக்கு புற்றாக மாற வாய்ப்பு உண்டு என்கிறது இன்றைய அறிவியல்.
மனச்சோர்வில் இருந்து வெளியேற மூச்சுப்பயிற்சியும் பிராணாயாமமும் மிகமிக அவசியம். பலரும் நினைப்பது போல யோகா இந்துமத வழிபாட்டை ஒட்டியது அல்ல. இன்னும் சொல்லப்போனால், மதங்களை, மத வழிபாட்டை எதிர்த்த சாங்கிய ஆசீவகச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது. பக்தி மரபிலும் தாந்திரீக மரபிலும் திருமூலரும் பதஞ்சலியும் பேசிய அளவுக்கு முன்னரே, வேதமறுப்பு இயக்கங்கள் யோகாவின் கூறுகளை அலசியிருக்கின்றன. மதங்களைப் புறந்தள்ளிவிட்டு யோகாசனங்களைப் பார்க்க முடியும். பிராணாயாமப் பயிற்சியில் நடக்கும் உடல் இயக்க மாற்றத்தில், உணவுப் பொருளில் இருந்து சக்தி எப்படிக் கிரகிக்கப் பெறுகிறது, உடலின் எதிர்ப்புச் சக்தி எப்படித் தூண்டப்படுகிறது, மனச்சோர்வில் நிகழும் அரைகுறை உறக்கம் எப்படிச் சீராகிறது, மன அழுத்தத்தில் பெருகும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் எப்படிக் குறைகிறது... எனத் துல்லியமாக ஆராய்ந்திருக்கிறார்கள். நாம் செய்ய வேண்டியதெல்லாம் முறையான வாழ்வியலைப் படிப்பதும், படித்ததை தினம் பயிற்சி செய்வதும் மட்டுமே!
எல்லோருக்கும் ஒரு கடந்த காலம் இருக்கும். அப்படிக் 'கடந்தவை’, நம் 'நாளை’யைக் கட்டமைப்பதில் பெரும் பங்கு வகிக்கும். கல்யாண்ஜியின் 'மர அலமாரிக்குள் ஓடிய மணல் ஆறு’ வரிகளைப் படித்ததும் முணுக்கென்று இமைகள் நனைந்த ஈரம் இன்னும் நினைவில் இருக்கிறது. சிவவாக்கியரின் 'மனத்தகத்து அழுக்கறதா மௌனஞான யோகிகள்’ உணர்த்தும் அறச்சீற்றம் இன்னும் அடிமனதில் ஒட்டியிருக்கிறது. 'சலங்கை ஒலி’ கமல், தன் தோழி நீட்டிய தேசிய நடன விழா அழைப்பிதழில் தன் பெயர், படத்தைக் கண்டதும் மனம் பொங்கி அழுகையில், 'இப்படி ஒரு தோழி நமக்கும் கிடைப்பாளா?’ என்ற ஏங்கியது இப்போதும் மூச்சில் கலந்திருக்கிறது. பள்ளியில் செபஸ்தியான் வாத்தியார், கவிதைக்கு இலக்கணம் சொல்லித்தந்த, Spontaneous overflow of powerful feelings in tranquility’- வாக்கியத்தின் 'tranquility’-ஐ தேடிய ஏக்கம் நெஞ்சில் இன்னும் தேங்கியிருக்கிறது.
'கறுப்பு ஓவியக் கண்காட்சி’யில் ஓவியர் நடேஷின் 'கூட்டுக்குள் இருந்த ஹாஃப்-பாயில் முட்டை’ இன்னும் வலித்துக்கொண்டே இருக்கிறது. வாழ்வில் இப்படி கடந்துபோன, ஏக்கமும், நேசமும், கோபமும், வலியும் வாழ்வின் பல பரிமாணங்களைக் காட்டி மன எழுச்சியைத் தரும். ஆனால், இன்றைய தலைமுறையோ இப்படி எதையும் கடக்காமல், பணமும் பணம் சார்ந்த அசைவுமாக வாழும் தட்டையான நகரத்து ஓட்டங்களுக்குள் சிக்கியிருக்கிறது; சிக்கவிடப்பட்டிருக்கிறது!
ஒவ்வொருவரிடமும் களவாடப்பட்ட அந்த மன எழுச்சிக்கான வித்துகளை, இந்தப் புது வருஷத்தில் இருந்தேனும் மீட்டெடுப்போமே! நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

-Vikatan