Thursday, December 12, 2013

ரஜினி பற்றி ரஜினி!

இது நம்ம ரஜினி படம்’ என்று தன்னை ரசிப்பவர்களையும், 'என்ன பெரிய ரஜினி படம்?’ என்று விமர்சிப்பவர்களையும் தான் நடித்த படங்களை முதல் நாளே பார்க்கத் தூண்டும் தமிழ் சினிமாவின் 'பாட்ஷா’ ரஜினிக்கு இப்போது வயசு 64. கண்டக்டர் டு சூப்பர் ஸ்டார் வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களில் ரஜினி குறிப்பிட்டவற்றின் தொகுப்பு இங்கே...
''சென்னை கிருஷ்ணவேணி தியேட்டர்ல 'அபூர்வ ராகங்கள்’ படத்தை முதன்முதலாப் பார்த்தேன். நான் நடிச்ச காட்சி வந்ததும் பக்கத்து சீட்டுல இருந்த குட்டிப்பொண்ணு, என்னைப் பார்த்துட்டே இருந்துச்சு. படம் முடிஞ்சு வெளியே வரும்போது என்கிட்ட ஓடிவந்து, சினிமா டிக்கெட் பின்னாடி ஆட்டோகிஃராப் கேட்டுச்சு. என் முதல் ரசிகை அந்தச் சிறுமிதான்; நான் போட்ட முதல் ஆட்டோகிஃராப் அதுதான்!''
''எனக்கும் லதாவுக்கும் திருப்பதியில் கல்யாணம். பத்திரிகை நண்பர்கள் எல்லாருக்கும் தகவல் சொல்லிட்டு, 'யாரும் கல்யாணத்துக்கு வராதீங்க. கல்யாண போட்டோ உங்க ஆபீஸ் தேடி வரும்’னு சொன்னேன். 'மீறி நாங்க வந்தா என்ன செய்வீங்க?’னு ஒருத்தர் கேட்டார். 'உதைப்பேன்’னு சொன்னேன். இப்படிச் சொன்னதுக்காக பின்னாடி ரொம்ப வருத்தப் பட்டேன்!''
''சினிமா நிகழ்ச்சிக்காக ஒருமுறை மதுரை போயிருந்தப்ப, மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போனோம். அங்கே எல்லாரும் பேர், பிறந்த நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செஞ்சாங்க. கோயில் குருக்கள் என்கிட்ட, 'உங்க நட்சத்திரம் என்ன?’னு கேட்டப்ப, 'தெரியாது சாமி’னு சொன்னேன். பின்பு, ரசிகர்கள் எனக்கு 'சூப்பர் ஸ்டார்’னு ஒரு நட்சத்திரத்தைக் கொடுத்தாங்க. அந்த நட்சத்திர ராசியை கடைசி வரை காப்பாத்தணும்னு முடிவெடுத்தேன்!''
''நான் கஷ்டப்பட்டபோதும், வசதியா இருக்கும்போதும் என்மேல ஒரே மாதிரி அன்பு செலுத்துற ராஜ்பகதூர், ஆச்சர்யமான நண்பன். ஆஞ்சநேயர் பக்கத்துல இருந்தா ராமனுக்கு அசுர பலம் சேரும். அதுபோல எனக்கு ஆஞ்சநேயரா இருந்த நண்பன் காந்தி. அவன் இறந்தது பெரிய இழப்பு!''
''சம்மர் வந்துட்டா, 'போன வருஷத்தோட இந்த வருஷம் வெயில் ஜாஸ்தி’னு எல்லாரும் புலம்புறாங்க. ஆனா, அவங்களுக்கு ஒரு வயசு ஜாஸ்தி ஆகிருச்சு. அதனால உடம்பு அந்த அனலைத் தாங்க முடியலைங்கிறதை மறந்துடு றாங்க!''
'' 'நான் யார்?’னு தெரிஞ்சுக்க எனக்குத் தனிமை தேவைப்படுது. அதனால இமயமலை போறேன். அது ரிஷிகள், முனிகள் தவம் செஞ்ச / செய்ற புண்ணிய பூமி. அங்கே 'நான் யார்?’னு என்னைச் சுலபமாக் கண்டுபிடிக்கிற வாய்ப்பு அதிகம். அதான் அடிக்கடி போறேன்!''
''இந்தம்மா மறுபடியும் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை ஆண்டவனால்கூட காப்பாத்த முடியாது!''
'' 'பாபா’ படப்பெட்டிகளை அபகரித்து தகராறு செய்த ஒரு கட்சியைக் கண்டிச்சு கண்ணியமா கறுப்புக்கொடி காட்டினார்கள் என் ரசிகர்கள். அவங்களை அந்தக் கட்சிக்காரங்க அடிச்சிருக்காங்க. நான் அவங்களைப் பார்த்துக் கேட்கிறேன், 'மதுரையில இருக்குற ரசிகர்களை அடிக்கிறீங்க. சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா... என எல்லா நாட்லயும் ரசிகர்கள் கறுப்புக்கொடி காட்டுவாங்க. அப்போ என்ன செய்வீங்க?’ ''

''யானை, கீழே விழுந்தா... அதால சீக்கிரம் எந்திரிக்க முடியாது. ஆனா, குதிரை விழுந்தா டப்புனு எந்திரிச்சு முன்னைவிட வேகமா ஓடும். நான் குதிரை. சட்னு எந்திரிச்சு ஓடிக்கிட்டே இருப்பேன்!''
''சந்தனக் கடத்தல் வீரப்பன் கும்பலை அழித்துக்காட்டிய முதல்வர் ஜெயலலிதாவை, 'பராசக்தியின் மறு உருவமாகப் பார்க்கிறேன்’!''
''கமல்கூட 'அவர்கள்’ படம் நடிச்சேன். என் சீன் எடுத்து முடிச்சாச்சு. அடுத்து கமல் நடிக்கணும். அந்த கேப்ல ஷூட்டிங் ஸ்பாட்டைவிட்டு வெளியில கிளம்பினேன். அப்போ 'எங்கடா... சிகரெட் பிடிக்கக் கிளம்பிட்டியா? உள்ளே போடா... அங்கே கமல்னு ஒருத்தன் நடிச்சிட்டு இருக்கான். அவன் நடிக்கிறதைப் பார்த்துக் கத்துக்கோ’னு பாலசந்தர் சார் சொன்னார்!''
''ஒரு தடவை ஃப்ளைட்ல அமிதாப் சாரைச் சந்திச்சேன். நான் போட்டிருந்த கறுப்பு கலர் டிரெஸைப் பார்த்தவர், 'ரஜினி... உனக்கு வெள்ளை கலர் டிரெஸ் நல்லா இருக்கும்’னு சொன்னார். அதுக்குப் பிறகு ஒயிட் டிரெஸ்தான் நிறைய அணியுறேன்!''
''சிங்கப்பூர்ல ட்ரீட்மென்ட், மருந்து மாத்திரைகள் கொடுத்த டாக்டர்ஸ், 'நாங்க தர்ற மருந்துகள் நிறையப் பேர் உடம்பு ஏத்துக்காது. தவிர இவ்வளவு சீக்கிரம் யாருக்கும் க்யூர் ஆனதே இல்லை. உங்களுக்கு மட்டும் எப்படிக் குணமாகுது?’னு ஆச்சர்யமாக் கேட்டாங்க. 'நீங்க கொடுக்கிற மருந்து மாத்திரைகளைவிட என் ரசிகர்கள் பிரார்த்தனைக்கு பவர் அதிகம். அதுதான் என்னைக் காப்பாத்துச்சு’னு சொன்னேன்!''
'' 'எம்.எஸ்.வி-யைச் சந்திக்கிறதுக்கு முன்னாடி சோத்துக்கு வழி இல்லை; சந்திச்சப் பின் சோறு திங்க நேரம் இல்லை’னு வாலி சார் அடிக்கடி சொல்வார். அதுபோலதான், எனக்கு கே.பி-சார். எனக்குள்ளே இருக்கிற நடிகனை முதன்முதலாக் கண்டிபிடிச்சவர் அவர். அப்புறம்தான் உலகத்துக்குத் தெரிஞ்சேன். 'கேமிரா முன்னாடி நடி... பின்னாடி நடிக்காதே’னு அவர் சொன்னதை இப்போ வரைக்கும் கடைப்பிடிச்சிட்டு வர்றேன்!''
'நீங்கள் நினைத்த இடத்தை அடைந்துவிட்டீர்கள். இனி ரிலாக்ஸ்தானே?’ என்ற கேள்வியை ரஜினியிடம் எப்போது கேட்டாலும், ''இல்லை. இப்பவும் போராடிட்டுத்தான் இருக்கேன். ஆரம்பத்தில், இந்த அந்தஸ்தை அடையப் போராடினேன். இப்போ அந்தப் புகழுக்குக் களங்கம் வராமக் காப்பாத்தப் போராடிட்டு இருக்கேன். அப்பவும், இப்பவும்... எப்பவும் நமக்குப் போராட்டம்தான்!'' என்பார்.

Sunday, December 8, 2013

காமராஜுடன் ஒருநாள்...

ரண்டு மாதங்களுக்கு முன் காமராஜ் அவர்களைச் சந்திக்க நான் டெல்லிக்குப் போயிருந்தபோது, அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார்.
சில தினங்கள் கழித்து மீண்டும் அவரை டெல்லியில் சந்தித்தேன். அப்போது அவர் முதலமைச்சராக அங்கு வரவில்லை. பதவியிலிருந்து விலகிவிட்ட வெறும் காமராஜராக வந்திருந்தார்.
அன்று மாலை காமராஜரைக் காண மெட்ராஸ் ஹவுஸுக்கு வந்திருந்தார் லால்பகதூர் சாஸ்திரி. வாசலில் நின்றுகொண்டிருந்த ரிசப்ஷன் ஆபீஸர் தீனதயாளைக் கண்டதும் அவர், ''காமராஜைப் பழையபடியே கவனித்துக்கொள்கிறீர்கள் அல்லவா? முன்பு அவர் தங்கியிருந்த அதே அறைதானே? உபசரிப்பில் ஒன்றும் குறைவில்லையே?'' என்று கேட்டுக்கொண்டே மாடிக்கு ஏறிச் சென்றார்.
காமராஜ் பதவியிலிருந்து விலகிவிட்டதால் எங்கே அவரைச் சரியாகக் கவனிக்காமல் இருந்துவிடுகிறார்களோ என்ற கவலையிலேயே சாஸ்திரி அவ்வாறு கேட்டார். ஆனால், உண்மையில் காமராஜுக்கு அங்கே முன்னைக் காட்டிலும் இரட்டிப்பு உபசாரம்.
மறுநாள் காலை. நான் மெதுவாக காமராஜ் தங்கியிருந்த அறைக்குள் எட்டிப் பார்த்தேன். என்னைக் கண்டதும் ''என்...ன? வாங்க...'' என்று புன்முறுவலோடு அழைத்தார்.
விசிட்டர்கள் அதிகம் இல்லாத நேரமாகையால் நிம்மதியாக உட்கார்ந்து பத்திரிகை படித்துக்கொண்டிருந்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு யார் வரப்போகிறார்கள் என்பது பற்றி, பத்திரிகைகளில் ஏதேதோ செய்திகள் வெளியாகி இருந்தன. காமராஜரும் அப்போது அதுபற்றித்தான் யோசித்துக்கொண்டிருக்க வேண்டும்.
''லால்பகதூர் சாஸ்திரியையே காங்கிரஸ் தலைவராகப் போட்டுவிடலாமே...'' என்று மெதுவாகப் பேச்சைத் தொடங்கினேன்.
''ஆமாம்; போட்டுவிடலாம்; அப்படித்தான் நாங்களும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். (நாங்கள் என்பது சஞ்சீவ ரெட்டியையும், அதுல்யா கோஷையும் சேர்த்துச் சொன்னது.) சாஸ்திரியிடமும் கேட்டுப் பார்த்தோம். ஆனால், அவர் தலைமைப் பதவி தமக்கு வேண்டாம் என்கிறார். இன்றைக்கு மறுபடியும் சாஸ்திரியைச் சந்தித்து கன்வின்ஸ் பண்ண வேண்டும்'' என்றார்.
ஆனால், மறுநாள் காலைப் பத்திரிகைகளைப் புரட்டியபோது தலைமைப் பதவிக்கு காமராஜரையே காரியக் கமிட்டி தேர்ந்தெடுத்திருப்பதைக் கண்டபோது எனக்கு வியப்பு.
''என்ன இப்படி ஆகிவிட்டது?'' என்று காமராஜிடம் கேட்டேன்.
''எனக்கு ஒன்றுமே தெரியாது; காரியக் கமிட்டிக் கூட்டத்தில் அதுல்யா கோஷ§ம் சஞ்சீவ ரெட்டியும் காதைக் கடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து செய்த வேலை இது என்று எண்ணுகிறேன்'' என்றார்.
''எப்படி இருந்தாலும் நல்ல முடிவு'' என்று என் மகிழ்ச்சியைத் தெரிவித்துவிட்டு, விடைபெற்றேன். ''பதினைந்து நாட்களுக்கு முன்னால், முதலமைச்சராக இங்கு வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்னால் பதவியில்லாத சாதாரண மனிதராக வந்தார். இன்றைக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமைப் பதவி தேடி வந்திருக்கிறது. இத்தனை மாறுதல்களும் இரண்டே வாரங்களில் நடந்துவிட்டன. ஆனாலும் அவரிடத்தில் எந்தவித மாறுதலையும் காண முடியவில்லை. பதவியில் இருந்தபோது, பதவியை விட்டபோது, பதவி அவரைத் தேடி வந்துள்ளபோது - ஆக எந்த நிலையிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்'' என்றார் தீனதயாள்.
றுநாள் காலை காமராஜ் அறைக்குள் எட்டிப் பார்த்தேன். அவர் சோபா ஒன்றில் கால்களைச் சப்பணமிட்டு உட்கார்ந்துகொண்டிருந்தார். சட்டைப் பித்தான்களைக் கழற்றிவிட்டு, வலது கையை முதுகுப் பக்கமாகச் செலுத்தி இடது தோளைத் தேய்த்தபடியே பத்திரிகை படிப்பதில் சுவாரஸ்யமாக இருந்தார்.
மேஜை மீது அன்றைய இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்துஸ்தான் டைம்ஸ், இண்டியன் எக்ஸ்பிரஸ் இவ்வளவு பத்திரிகைகளும் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.
''பத்திரிகைகளில் அரசியல் செய்தி மட்டும்தான் படிப்பீர்களா? அல்லது..''
''எல்லாந்தான். எந்த ஊரில் என்ன பிரச்னை என்று பார்ப்பேன். ஒரு ஊரில் தண்ணீர் இல்லை என்ற செய்தி இருந்தால், அதையும்தான் பார்ப்பேன். தண்ணீர் இல்லை என்பதும் அரசியல் சம்பந்தப்பட்டதுதானே?'' என்று சொல்லிக்கொண்டே எழுந்தார். எழுந்தவர் கவனமாக மின் விசிறியை நிறுத்திவிட்டு அடுத்த அறைக்குள் சென்றார். அதுதான் அவருடைய படுக்கை அறை. படுக்கை அறையை ஒட்டினாற்போல் இன்னொரு சின்ன அறை. அங்கேதான் அவருடைய பெட்டி இருந்தது. அந்தச் சின்ன அறைக்குள் இருந்த சிறு மேஜை, கோட் ஸ்டாண்ட், முகம் பார்க்கும் கண்ணாடி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகக் கண்ணோட்டமிட்டேன்.
''என்ன... என்ன பாக்கறீங்க?'' என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.
''ஒன்றுமில்லை; தங்களைக் கூடவே இருந்து கவனிக்கப் போகிறேன். இது என்னுடைய நெடுநாளைய ஆசை'' என்றேன்.
''ஓ, தாராளமா இருங்களேன். இப்படி வந்து உட்காருங்க'' என்று கூறிக்கொண்டே பெட்டியிலிருந்த சலவைத் துணிகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கீழேவைத்தார்.
அந்தப் பெட்டிக்குள் என்னென்ன இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலில் கூர்ந்து கவனித்தேன்.
INSIDE AFRICA - by John Gunther.
ENDS AND MEANS - by Aldous Huxley.
TIME MAGAZINE
NEWS WEEK
சிந்தனைச் செல்வம் - வி.ச.காண்டேகர்.
இவ்வளவும் இருந்தன. இவ்வளவையும் கவனிக்காததுபோல் கவனித்துக்கொண்டேன். நான் கவனிக்காததுபோல் கவனித்ததை அவரும் கவனிக்கத் தவறவில்லை.
அடுத்தாற்போல் பெட்டியிலிருந்து ஷேவிங் செட்டை எடுத்துக் கண்ணாடி முன் வைத்துக்கொண்டார். அந்த நித்திய கடமை முடிந்ததும், தமது சட்டையைக் கழற்றி ஒழுங்காக மடித்து அதற்குரிய இடத்தில் கொண்டுபோய் வைத்தார். அங்கு ஏற்கெனவே பல சட்டைகள் இந்த மாதிரி மடித்துவைக்கப்பட்டிருந்தன.
''ஒரு நாளைக்கு எத்தனை சட்டை மாற்றிக்கொள்வீர்கள்?''
''இரண்டு மூன்று முறை குளிக்க வேண்டும் எனக்கு. ஒவ்வொரு முறை குளித்து முடித்ததும் சலவைச் சட்டை போட்டுக்கொள்ள வேண்டும்'' என்றார்.
''இப்படி ஓயாமல் அலைந்து கொண்டிருக்கிறீர்களே! இதனால் உடல் நலம் பாதிக்கப்படுவதில்லையா?''
''கிடையாது. நான் ஆகாரத்தில் ரொம்ப உஷாராக இருந்துவிடுவேன். காலையில் சூடாக ஒரு கப் காபி சாப்பிடுவேன். அப்புறம் கோட்டைக்குப் போவதாக இருந்தால், 11 மணிக்குள் சாப்பிட்டுவிடுவேன். அத்துடன் இரண்டு மணிக்கு ஒரு கப் காபி, இரவு இட்லியும் சட்னியும். இவ்வளவுதான் என் ஆகாரம்.
கிராமங்களில் சுற்றுப் பயணம் செய்யும் நாட்களில் சில சமயம் பகலில் மணி இரண்டுக்கு மேல் ஆகிவிடும். அந்த நேரத்தில் லேசாக வெறும் மோர் சாதம் சாப்பிட்டால் போதுமென்று தோணும். ஆனால், எனக்குச் சாப்பாடு போடுகிறவர்களிடம் மோர் சாதம் போதுமென்று சொன்னால் கேட்க மாட்டாங்க. இலையில் எல்லாவற்றையும் போட்டுக் கஷ்டப்படுத்திடுவாங்க. என் நிலையைப் புரிந்துகொள்ளாமல் தொந்தரவு கொடுப்பாங்க. இதற்காக நான் ஒரேயடியாகச் சாப்பாடே வேண்டாமென்று சொல்லிப் பட்டினி போட்டுவிடுவேன்.''
''தாங்கள் கைக் கடியாரம் கட்டிக்கொள்வதில்லையே, ஏன்?''
''அதெல்லாம் எதுக்கு! அவசியமில்லை. யாரைக் கேட்டாலும் நேரம் சொல்றாங்க. கிராமங்களுக்குப் போகும்போது மட்டும் சில சமயம் நேரம் தெரியாமல் போய்விடும். அதற்காக ஒரு சின்ன டைம்பீஸ் வாங்கி வைத்திருக்கிறேன்'' என்றார்.
''தினமும் நூற்றுக்கணக்கான பேர் தங்களைத் தேடி வந்து தங்கள் வீட்டு வாசலில் காத்திருக்கிறார்களே. அவர்களெல்லாம் தங்களிடம் என்ன கேட்பார்கள்?''
''சிபாரிசுக்கு வருவாங்க. ஏழை எளிய மக்கள் கேட்கிற உதவிகள் எல்லாம் சுலபமாகச் செய்யக்கூடியதாக இருக்கும். முடிந்ததை நானும் செய்துவிடுவேன். படிச்சவங்க, விஷயம் தெரிஞ்சவங்க வந்து கேட்கிற காரியங்களில்தான் சிக்கல்  இருக்கும். அவங்களே வக்கீலிடம் கேட்டுக்கொண்டு வந்து 'இப்படிச் செய்யலாமே!’ என்று எனக்கு ஆலோசனை சொல்லுவாங்க. நான் 'ஆகட்டும், பார்க்கலாம்’ என்பேன். யாருக்காவது இரண்டொருவருக்குச் செய்துவிட்டு மற்றவர்களுக்குச் செய்யவில்லை என்றால்தானே கோபம் வருகிறது? ஆகையால், எல்லோருக்குமே சமமாக இருந்துவிடுவேன். யாராவது ஒரு பையன் ஸ்கூல் அட்மிஷனுக்கு வருவான். மார்க் கொஞ்சமாக வாங்கியிருப்பான். 'நீ வாங்கியிருக்கும் மார்க்கைவிடக் குறைந்த மார்க் வாங்கியுள்ள பையன் யாருக்காவது அட்மிஷன் கொடுத்திருந்தால் சொல்’ என்பேன். அப்படி இருக்காது. ஒருவேளை யாருக்காவது அம்மாதிரி அட்மிஷன் கொடுத்திருந்தால் அவனிடம், 'ஆமாம்,  நீ சொன்னது உண்மைதான்’ என்று ஒப்புக்கொள்வேன். அவன் அதிலேயே திருப்தியடைந்து போய்விடுவான்!''
''தினந்தோறும் இவர்கள் அத்தனை பேருக்கும் பதில் சொல்லி அனுப்புவது ரொம்பக் கஷ்டமான காரியம் ஆயிற்றே? அலுப்பாக இருக்குமே!''
''எனக்கு அலுப்பே கிடையாது. எவ்வளவு பேர் வந்தாலும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், இதில் எனக்குள்ள சங்கடம் பத்திரிகை படிக்க நேரம் இல்லாமல் போய்விடுவதுதான். ஆகையால், காலை வேளையில் என்னை யாரும் தொந்தரவு செய்யாமலிருந்தால் நல்லது. பத்திரிகை படிக்கும் நேரம் எனக்கு ரொம்ப முக்கியம். விசிட்டர்களால் அது தடைப்பட்டுப் போகிறது. அந்த நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் எப்போது வந்தாலும் பார்க்கத் தயார்'' என்றார்.
அன்றிரவு மணி 12 இருக்கும். காமராஜ் கட்டிலில் படுத்தவாறே மிக சுவாரஸ்யமாக ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். என்ன புத்தகம் என்று எட்டிப் பார்த்தேன். கம்ப ராமாயணம்!

ஆறாம் திணை - 65

சில வாசிப்புகள், நம் மனதை மிகவும் உலுக்கும். அப்படி, சமீபத்தில் என் மனதை உலுக்கிய இரண்டு புத்தகங்கள்... சங்கீதா ஸ்ரீராம் எழுதிய 'பசுமைப் புரட்சியின் கதை’ எனும் தமிழ்ப் புத்தகமும், நான்சி எழுதிய 'DEATH BY SUPERMARKET’ எனும் ஆங்கிலப் புத்தகமும். 'மாற்றுக் கருத்து பேசுபவர்கள், உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதோடு நிறுத்திவிட்டு, அறிவியல், வரலாற்றுச் செய்திகளை ஆவணப்படுத்தத் தவறிவிடுவார்கள்’ என்ற குற்றச்சாட்டைத் தகர்த்திருக்கின்றன இந்தப் புத்தகங்கள்.
'பசுமைப் புரட்சியின் கதை’, வரலாற்றுரீதியாக ஆங்கிலேயர்கள் நம் மண்ணின் வளத்தை எப்படித் திட்டமிட்டுத் தகர்த்தார்கள், அவர்களது வாழ்வியலுக்கும் வணிகத்துக்குமான களமாக மாற்ற, நம் மண்ணை எப்படியெல்லாம் சிதைத்தார்கள் என்பதைக் காட்சிகளாக கண் முன்னே நிறுத்துகிறது. 'DEATH BY SUPERMARKET’ புத்தகமோ, உணவுச் சந்தையில் கோலோச்சும் நிறுவனங்களுக்காக மட்டுமே உருவாக்கப்படும் அறிவியல் சான்றுகளையும், மிரட்டும் அதன் மறுபக்கத்தையும் தோலுரித்துக் காட்டுகிறது.
இந்திய விவசாயிகளுக்கு நவீன வேளாண் அறிவியலைக் கற்றுக்கொடுக்க, சர் ஆல்பர்ட் ஹோவர்ட் என்கிற வேளாண் விஞ்ஞானியை அனுப்பிவைத்தது அப்போதைய ஆங்கிலேய அரசு. 15 வருடங்கள் இந்தியாவின் ஈடு இணையற்ற விவசாயப் பாரம்பரிய அறிவியலைப் பார்த்துவிட்டு, 'இங்கே நான் கற்பிக்க ஒன்றும் இல்லை. கற்றுக்கொண்டதுதான் ஏராளம். உண்மையில் மேலை நாடுகள் இவர்கள் அறிவைத் தேடிக் கற்க வேண்டும்’ என்று தான் எழுதிய 'AN AGRICULTURAL TESTAMENT’ என்ற புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். காய்ப்பு உவப்பு இல்லாத அவரது ஆய்வும், தேடலும், அகங்காரம் இல்லாத மனமும்தான் அப்படி எழுத வைத்தன.
னிதனின் எந்த உதவியும் இல்லாமல், விருட்சமாக வளர்ந்து, அடர்ந்து, பசுமையாகப் பரவி, கோடிக்கணக்கான உயிரிகளுக்கு (மனிதனுக்கும் சேர்த்து!) உணவூட்டிக் கொண்டிருக்கும் காடுகள் கற்றுத்தரும் பாடத்தைப் பெற பகுத்தறிவு பத்தாது. மசானபு புகோகா தன் 'ஒற்றை வைக்கோல் புரட்சி’ என்ற நூலில் சொல்லும் நுண்ணறிவு தேவை. இந்த நுண்ணறிவு மட்டுமே பாரம்பரியத்தின் அறம் சார்ந்த அறிவியலை நமக்குப் புரியவைக்கும். ஆனால், நம் மெக்காலே கல்விமுறையும், மனப்பாடம் செய்து எழுதும் நுழைவுத் தேர்வுகளும் மாணவர்களின் நுண்ணறிவுத் திறனை அழிப்பதில் முன்நிற்கின்றன என்பது வேதனையான உண்மை.
'இந்த நுண்ணறிவைக்கொண்டு என்ன செய்ய முடியும்? பசி, பஞ்சம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதற்கான அறிவார்ந்த மனிதனின் தேடல்தானே, அதிக உணவு உற்பத்திக்கான அறிவியல்? 'வங்காளப் பெரும் பஞ்சத்தின் சோகமும் கோரமும் மீண்டும் நிகழ வேண்டுமா?’ என்று சண்டை பிடிப்பார்கள் பலர். வங்காளப் பெரும் பஞ்சத்தையும் காரணம் காட்டித்தான் இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டனர். ஆனால், அந்தப் பசுமைப் புரட்சி குறித்து, அமர்த்தியா சென் தன் 'POVERTY AND FAMINES’ என்ற புத்தகத்தில், 'இந்தப் பசி, பஞ்சம் தானாக உருவானது அல்ல; உருவாக்கப்பட்டது. ஏறத்தாழ ஒரு வருடத்துக்கான உணவு கையிருப்பில் இருந்தது. பசிக் கொடுமையால் இறந்துபோன 30 லட்சம் மக்களும் வறியவர்கள்தான். உணவுப் பற்றாக்குறையில் எந்தப் பணக்காரரும் அவதிப்பட்டதாகவோ இறந்ததாகவோ சான்று இல்லை’ என்கிறார் அவர். உணவுப் பற்றாக்குறை, மக்கள்தொகைப் பெருக்கம் என்று சொல்லப்படும் காரணங்கள் ஜோடிக்கப்படுபவையோ என்று வலுவாகச் சந்தேகிக்கவைக்கிறது.
சந்தைகள் தரும் சான்றுகள்தான் சாமானியனை மட்டுமல்ல நம் மருத்துவ உலகையும் வழி நடத்துகின்றன. சோள அவலும், ஓட்ஸ் கஞ்சியும் இங்கே பெற்றிருக்கும் வரவேற்பும், 'தேனி பக்கம் 50 ஏக்கர் இருக்கு... ஆலிவ் மரம் நட்டா வருமா சார்?’ என்பது போன்ற விசாரிப்புகளும் எனக்குள் பயத்தை விதைக்கின்றன. 'புரதம் தரும், ஈஸ்ட்ரோஜன் தரும், புற்று தடுக்கும்’ எனச் சொல்லி மருத்துவ உலகத்தால் பலமாக முன்நிறுத்தப்படும் சோயாவும் சரி, 'ஐரோப்பாவில், அமெரிக்காவில் குண்டர்களே இல்லை; இதய நோயாளியே இல்லை; அதனால் ஆலிவ் ஆயில் பயன்படுத்துங்கள்’ என நடுத்தர வர்க்கத்தில் மெள்ள மெள்ளப் புகுத்தப்படும் ஆலிவ் எண்ணையும் சரி... நம் மரபணுக்களுக்குப் பழக்கம் இல்லாதது.
ந்தைக்குச் சாதகமாக எழுதப்படும் அறிவியலில், சமீபத்தில் நாம் மொத்தமாகத் தொலைத்தது தேங்காயை. படித்த மக்களிடையே 'தேங்காய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் வரும்’ என்ற கருத்து பலமாக வேரூன்றப்பட்டு இருக்கிறது. எண்ணெய்வித்து கம்பெனிகள் உருவாக்கிய அந்த மாயை, மருத்துவர் வழியாக பாமரன் மண்டையில் புகுத்தப்பட்டு, 'வெள்ளைச் சட்னி வேண்டாம் சார்’ என்ற அளவில் கொண்டுசேர்த்திருக்கிறது. 'எந்த ஒரு தாவர எண்ணெயிலும் கொலஸ்ட்ரால் கிடையாது. விலங்குக் கொழுப்பிலும் பாலிலும் நெய்யிலும்தான் அது உள்ளது. மாறாக, தேங்காயும் அதன் எண்ணெயும் இதயத்துக்குப் பலம் தரும் HIGH DENSITY LIPOPROTEIN-ஐ உயர்த்தும் என்கின்றன சில ஆய்வுகள். சவலைப் பிள்ளைக்கு தேங்காய் எண்ணெயை ராகிக் கூழில் கொடுத்த பாட்டிக்கு, தேங்காய் எண்ணெயின் MEDIUM CHAIN TRIGLYCERIDES பற்றி தெரியாது. இன்றைய விஞ்ஞானம், அதே MCT-ஐ மிகவும் எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைக்கு மருந்தாகக் கொடுக்கிறது. ராகி கஞ்சி குழந்தையின் இரைப்பையைத் திடப் பொருட்களைச் செரிக்கப் பக்குவப்படுத்தும் ஓர் உணவு.
வயிற்றுப்புண், அடிக்கடி வரும் வாய்ப்புண் இவை இரண்டுக்கும் தேங்காய்ப் பால், மணத்தக்காளிக் கீரை, சிறுபயறு சேர்த்துச் செய்த குழம்பு இவை அனைத்தும் உணவு வடிவில் இருக்கும் மருந்துகள். இதில் கீரைக்குப் பதில் முருங்கைக்காய் சேர்த்துவிட்டால், அதுவே நெல்லை மாவட்டத்துப் பிரபலமான சொதி குழம்பு. வெயில் காலத்துக்கு ஏற்ற உணவான இது, நீர்ச்சுருக்கத்துக்கான மருந்தும்கூட. உடல் மெலிந்து இருக்கும் குழந்தைகள் சுவைத்துச் சாப்பிட்டு உடல் தேற, கசப்பு டானிக்குகளைக் காட்டிலும், தேங்காய்த் துருவல், பனை வெல்லம் சேர்த்த சிகப்பரிசி மாவுக்குள் பொதிந்துவைத்து, வேகவைத்து எடுக்கப்பட்ட கொழுக்கட்டை / மோதகம் பெரிதும் உதவும். 'வெர்ஜின் தேங்காய் எண்ணெய்’ எனப்படும், பிழிந்த தேங்காய்ப் பாலில் இருந்து நேரடியாக எடுக்கப்படும் எண்ணெய், இன்று உலகின் வளர்ந்த நாடுகள் அதிகம் தேடும் மருந்து. பெண்களைச் சிரமப்படுத்தும் வெள்ளைப்போக்கு, குடல் புண்கள், குழந்தைகளுக்கு வரும் கணச்சூடு... என பல நோய்களுக்கு தேங்காயில் இருந்து செய்யப்படும் மருந்துகள் சித்த மருத்துவத்தில் ஏராளம். ஆனால், கொலஸ்ட்ரால் பயத்தில் இத்தனையையும் இழந்து வருவதுதான் வேதனை!
- பரிமாறுவேன்...

ஆறாம் திணை - 64

துவரை வீட்டிலும் நடுத்தர, கையேந்தி பவன் வகை உணவகங்களிலும் மட்டுமே சாப்பிட்டுப் பழகிய நீங்கள், முதல்முறையாக நட்சத்திர உணவகத்தில் சாப்பிட்ட அனுபவம் ஞாபகம் இருக்கிறதா?
எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது! நான் வேலைபார்த்த மருத்துவமனையின் அதிபர், எங்களையெல்லாம் நட்சத்திர உணவக விருந்துக்கு அழைத்துச் சென்றார். மேஜை முன் சாப்பிட அமர்ந்ததும், மடியில் துண்டை விரித்தார்கள். உணவு மேஜையில் தட்டுக்கு அருகில் கத்தி ஸ்பூன், முள் கரண்டி... என, பளபள ஆயுதங்களைப் பார்த்ததுமே பதட்டமாகியது. அகோரப் பசியுடன் நாங்கள் காத்திருக்க, 15 நிமிடங்களில் சாப்பிடவேண்டிய உணவு வகைகளை ஆற அமர இரண்டு மணி நேரத்துக்குப் பரிமாறினார்கள். கரண்டியில் எடுக்கவேண்டியதை ஃபோர்க்கிலும், கையில் கிள்ளவேண்டியதை கத்தியிலும், ஃபோர்க்கில் குத்தவேண்டியதை கரண்டியிலுமாக தட்டுத்தடுமாறி எடுத்துச் சாப்பிட்டு முடித்தபோது, கடினமான கணக்குப் பரீட்சை எழுதி வந்த களைப்பு உண்டானது எனக்கு.
புது இடத்தில் சாப்பிடும்போது, உணவு மேஜையில் வயிற்றுக்கு வெளியே நடக்கும் பரபரப்பு இது. இதே ரீதியிலான பதற்றம்தான் புது வகை உணவை உண்ணும்போது வயிற்றுக்குள்ளும் அரங்கேறும்... அமிலங்களின் கொதிகொதிப்போடு!
அதிலும் புதுப்புது வெளிநாட்டுச் சந்தை உணவுகளைச் சாப்பிடும்போது நம் வயிற்றுக்குள் உள்ள பெப்சின் (உணவை ஜீரணிக்க உதவும் நொதி) பயத்துடனே பழக்கமில்லாதவற்றைச் சுவைக்கும் என்கிறது உணவு மரபணு அறிவியல். போதாக்குறைக்கு வயிற்றுக்குள்ளும், சிறுகுடலின் உள்ளும் உள்ள சமர்த்தான சில நுண்ணுயிரிகள், 'இது ஏதோ புதுசா இருக்கு. நான் அப்புறமா சாப்பிடுறேன்’ என பயத்தில் ஒதுங்குவதும் நடக்குமாம். எப்போதேனும் இப்படியான பதற்றம் அரங்கேறினால், உடம்பு நோகாது. அடிக்கடி நடக்கும்போது மருத்துவரை நாட வேண்டியிருக்கும்!
மேற்கு ஐரோப்பாவைப் பூர்விகமாகக் கொண்ட 'மேயோனைஸ்’ சாஸ் (Mayonnaise), இப்போது சிந்துபூந்துறைச் சித்தப்பா வீட்டு உணவு மேஜை வரை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கிறது. காய்ச்சல் கண்டபோது மட்டுமே பார்த்திருந்த ரொட்டியை, நீளவாக்கில் பிளந்து அதில் மேயோனைஸைத் தடவி சிலபல காய்கறிகளை நுழைத்து, கூடுதல் சீஸையும் பிதுக்கி, வாய் வலிக்கப் பிளந்து சாப்பிடும் கலாசாரம் இங்கே வேகமாகப் பரவுகிறது.
'பாலும் கீரையும் ஒன்றாகச் சேரக் கூடாது. பாலும் மீனும் ஒன்றாகச் சேரக் கூடாது. தயிருடன் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது. தயிருடன் இறைச்சி நஞ்சாகும்’ என சித்த மருத்துவம் சொல்லும் தமிழர் உணவு விதிகளை, குழந்தைகள் உலகத்தில் விதைக்காமலேயே கடந்து சென்றுகொண்டிருக்கிறோம்.
எண்ணெய், பால், முட்டை, வினிகர், பதப் பொருள்கள், சுவையூட்டிகள் முதலான பல ரசாயனங்களின் கலவையாக எமல்சிஃபை செய்யப்பட்ட பொருளே 'மேயோனைஸ்’. அதிகளவிலான டிரான்ஸ் ஃபேட்டும், ரத்த நாளங்களில் படியும் கெட்டக் கொழுப்பையும் தரும் அந்த சாஸ், நம் சீதோஷ்ண நிலைக்கும் ஜீரண சுழற்சிக்கும் எப்போதும் பழக்கமானது அல்ல. அதோடு, என்றோ எப்போதோ எங்கேயோ செத்த பிராய்லர் கோழி இறைச்சி, பெருங்கடல் மீன் இறைச்சி அல்லது உருளை மசியல்களை, அந்தப் பால் எண்ணெய் பொருளில் தோய்த்துச் சாப்பிடுவது தற்காலிகமாகச் சந்தோஷப்படுத்தினாலும்(?), நெடுங்காலத்தில் நிச்சயம் சங்கடப்படுத்தும். இந்த மேயோனைஸ், கட்டக் கடைசியாக சாப்பாட்டின் மேல் ஒரு கோட்டிங் தடவி ருசி சேர்க்க உதவும் ஒரு பொருள். ஆனால், நம்
பாரம்பரிய உணவுப் பழக்கத்தில் சமைத்த பின் கடைசியாகச் சேர்த்த விஷயமே வேறு. அப்படி நம் முன்னோர்கள் சேர்த்தது மணம் மட்டுமல்ல, மருத்துவத்தையும்தான்.
சாம்பாரோ, வத்தக்குழம்போ, வாழைக்காய் பொரியலோ அதில் போடும் பெருங்காயத் தூளே அந்த மருத்துவம். பெருங்காயம், ஒரு தாவர ரெசின். அதன் கந்தக மணத்தைப் பார்த்த அமெரிக்கர்கள் விஷயம் புரியாமல் முதலில் அதனை, 'பிசாசு மலம்’ (Devil dung) என்று முகம் சுளித்தனர். 1918-ல் உலகில் 20 மாதங்கள் கட்டுக்கடங்காமல் 100 மில்லியன் மக்கள் 'ஸ்பானிஷ் ஃப்ளூ’ நோயில் கொத்துக்கொத்தாக இறந்தபோது, பெருங்காயம் இந்தக் காய்ச்சலில் இருந்து காக்கும் எனக் கண்டறிந்து, கழுத்தில் பெருங்காயத் துண்டுகளைக் கட்டித் திரிந்தார்கள் அதே அமெரிக்கர்கள். அதற்குப் பிறகு அவர்கள் அதனை 'கடவுளின் உணவு’ (Food of Gods) என பெயர் மாற்றியது வரலாறு. பறவைக் காய்ச்சலுக்கு இன்றளவிலும் பயன்படும் Symadineக்கு இணையான, வைரஸ் எதிர்ப்பு ஆற்றல் பெருங்காயத்துக்கு உண்டு என எகிப்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். காய்ச்சலை மட்டுமல்ல, கேன்சரையும் தடுக்கும் தன்மைகொண்டது பெருங்காயம் என ஆய்வு முடிவுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கிரீன் டீ, சிவப்பு ஒயின், கறுப்பு சாக்லேட், மாதுளை ரசம் இவற்றில் எல்லாம் உள்ள ஆன்ட்டி-ஆக்சிடென்ட் பெருங்காயத்தில் நிறையவே உள்ளது.
ருஞ்சீரகமும் அப்படி ஓர் அற்புதமான மருந்து. சீரகம் பயன்படுத்தும் அளவுக்கு நம்மில் பலர் கருஞ்சீரகத்தைக் கண்டுகொள்வது இல்லை. இஸ்லாத்தின் தூதுவர் முகமது அவர்கள், மரணத்தைத் தவிர மற்ற அனைத்தையும் குணப்படுத்தும் என்று அன்றே குறிப்பிட்டது கருஞ்சீரகத்தைதான். அதன் எண்ணெய், கழுத்துப் புற்றுநோயைத் தடுப்பதையும், நோய் எதிர்ப்பாற்றலைத் தூண்டுவதையும், கொஞ்சம் குணப்படுத்த கடினமான குடலின் Ulcerative colitis  நோயைக் கட்டுப்படுத்துவதிலும் கருஞ்சீரகப் பயன் கண்டறியப்பட்டு வருகிறது. இதிலுள்ள THYMOQUINONE, வேறு எந்த தாவரத்திலும் இதுவரை கண்டறியப்படவில்லை என்கிறது Healing Spices நூல்.
யாருடைய துரத்தலுக்கோ எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் நாம், இந்தத் துரித வாழ்வில் தொலைத்தவை, ஜன்னல் காற்று, சைக்கிள் பயணம், முற்றத்து மாக்கோலம், மாடக்குழி விளக்கு, தோட்டத்து கிரேந்திப்பூ, கிணற்றுக் குளியல், திருவிழாக் களிப்பு மட்டுமல்ல... நம் நலவாழ்வையும்தான். கொஞ்சம் திரும்பிப் பார்த்து, வயோதிகச் சுருக்கங்களில் இன்னும் ஒட்டியிருக்கும் மிச்சத்தையாவது, எடுத்து ஒட்டிக்கொள்வோமே!
- பரிமாறுவேன்...

Saturday, December 7, 2013

ஆ...சாமியோவ் ! - 5



உ ணவு என்றால் கண்ணீர் சொட்டும் அளவுக்குக் காரம்... டான்ஸ் என்றால் சிரஞ்சீவி மாதிரி ஃபாஸ்ட் மூவ்மென்ட்ஸ்... டயலாக் என்றால் தியேட்டரே இடிந்துவிழும் அளவுக்கு ஹை-பிட்சில் சத்தம்... இப்படி எதிலுமே உச்சத்தை விரும்பும் ஆந்திர மக்கள் ஏமாறுவதிலும் உச்சம்தான். சாமான்யனான ஒருவன் சிவ சாய்பாபா ஆன வினோதம், அந்த தெலுங்கு மண்ணில் வெகு சமீபத்தில் நடந்துள்ளது.
 ஹைதராபாத் - பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் இந்த மகானுபாவரின் ஆசிரமத்தைப் பார்த்தால் பல கோடீஸ்வரர்களே பொறாமைப்படுவார்கள். கோட்டைக் கதவுகள் மாதிரித் தோற்றமளிக்கும் பிரமாண்டமான கதவுகள் தொடங்கி, வண்ணப்பூக்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனம் வரை அந்த ஆசிரமத்தில் எல்லாமே தெலுங்கு சினிமா செட் மாதிரி பளிச் பளிச் என்று கண்ணைப் பறிப்பதுபோல இருக்கும். அவர் பெயர் சிவ சாய்பாபா.
லோக்கல் எம்.எல்.ஏ., மாநில அமைச்சர், மத்திய அமைச்சர் என்று எப்போதும் வி.ஐ.பி-க்களின் வருகையால் தனது ஆசிரமம் பரபரப்பாகவே இருக்க வேண்டும் என்பதில் சிவ சாய்பாபா குறியாக இருப்பார். இந்த அசைன்மென்ட்டை சரிவர செய்வதற்கு தனி பக்தர்கள் படையே நியமித்திருந்தார்.
வெறும் கையை தலைக்கு மேலே காற்றில் சுற்றி விபூதி வரவழைப்பது, வாயில் கையைவிட்டு மோதிரத்தைத் தருவிப்பது... என்று தந்திர வேலைகளை செய்வார். 'யோகா தெரிந்தால்தான் யோகி’ என்று பாழாய்ப்போன பக்தர்களுக்கு யார் சொல்லிவைத்தார்களோ... அந்த யோகாவில், தான் ஒரு 'அப்பாடக்கர்’ என்பதை ஊருக்கும் உலகுக்கும் நிரூபிக்க சிவ சாய்பாபா அவ்வப்போது யோகா செய்து, படுத்துவார். பாண்டி விளையாடுவதுபோல குதிகால்களால் நடந்துக்காட்டி அதற்கு 'பாபா யோகா’ என்று பச்சைக்குத்தி பறைசாற்றுவார். பள்ளிக்கூட ட்ரில் மாஸ்டர் மாதிரி கைகளையும் கால்களையும் வினோதமாக நீட்டி மடக்கி எக்ஸர்சைஸ் செய்து, பக்தர்களையும் அதேபோல செய்யச் சொல்வார். யோகாவை தப்புத் தப்பாக செய்ததாலோ, என்னவோ... பக்தர்கள் அதை புதுவிதமான யோகக்கலை என்று சுலபமாக நம்பிவிட்டார்கள். இது மாதிரி சின்னச்சின்ன வித்தைகள் எல்லாம் லோக்கல் பக்தர்களைத்தான் ஆசிரமத்துக்கு வரவழைத்ததே தவிர கூரையைப் பிய்த்துக்கொண்டு பணம் கொட்டும் அளவுக்குப் பணக்காரப் பக்தர்களையோ அல்லது டாலர்களைக் காணிக்கையாகக் கொட்டும் வெளிநாட்டு பக்தர்களையோ ஈர்க்கவில்லை. அதுவரை தன்னை சாய்பாபாவின் அவதாரம் என்று கூட்டத்தைக் கூட்டியவர் ஒரு கட்டத்துக்குப் பிறகு தன்னை சிவனின் அவதாரம் என்றே சொல்லிக்கொண்டார். சிவ சாய்பாபா என்ற அவரது பொய் பெயரின் ஆரம்பமே 'சிவ’ என்று இருந்ததும் அவருக்கு வசதியாகப் போய்விட்டது. சிவன் என்றால் அவருக்குத் தெரிந்ததெல்லாம் பாம்பு மட்டும்தான்.
பாய்ந்து வரும் காளையை ஸ்பெயின் நாட்டு வீரன் சிவப்பு துணியைக் காட்டி வெறுப்பேற்றுவானே... அதுபோல இவர் பல் பிடிங்கிய பாம்பின் முன் முட்டிக்காலிட்டு அமர்ந்து ஒரு கர்சிஃப்பை அதற்கு முன் ஆட்டுவார். ஏதோ சாப்பிட்ட கடனுக்காகப் பாம்பு படமெடுத்து ஆடும்.  ஒரு கட்டத்துக்கு மேல் களைப்பாகிப்போகும் பாம்பு, 'அடப்போய்யா!’ என்று தன் வேலையைப் பார்க்க வேறு பக்கம் திரும்பினால்... சிவ சாய்பாபா அதன் பாதையில் போய் படுத்துக்கொள்வார். பாம்பு அவர் மீது ஏறும்போது சட்டென்று எழுந்துவிடுவார். பாம்பு தப்பித்து ஓடுவதற்காக கீழே இறங்கும்... அதை தப்பிக்கவிடாமல் அவர் குனிந்து, நிமிர்ந்து சமாளிப்பதைச் சுற்றியிருக்கும் அவரது அல்லக்கைகள் 'தாண்டவம்’ என்று வியந்து பாராட்டும். சிவனுக்கும் பாம்புக்குமாவது கனெக்ஷன் உண்டு. ஆனால், சிவனுக்கும் உறுதியான பற்களுக்கும் தொடர்பு உண்டு என்று இவருக்கு யார் சொன்னதோ? தரையில் இருக்கும் ஒரு சின்ன மூட்டையைப் பற்களால் பிடித்து மேலே தூக்கி அதை அவர் தன் தோள்களில் போட்டுக்கொள்வார். இதற்கும் பரவசப்பட்டு இவரைப் போற்றி புகழ்ந்து பாடல்கள் பாடுவார்கள்.
கூட்டத்தை வரவழைப்பதற்காக சிவ சாய்பாபா இப்படி பல அல்லுசில்லு வேலைகளை செய்வதைப் பார்த்த லோக்கல் டி.வி. சேனல்கள் இவரைப் பற்றி புலனாய்வில் இறங்கியபோதுதான் இவரது பூர்வாசிரமப் பெருமைகள் வெட்ட வெளிச்சமாகின. ஆந்திரப்பிரதேசத்தின் அனந்தப்பூர் மற்றும் சித்தூர் மாவட்டங்களில் பலவிதமான கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்த பாபா... ஒரு கட்டத்தில் கர்நாடகாவுக்குத் தப்பி ஓடியவராம். யாரும் தன்னை சந்தேகிக்கக் கூடாது என்பதற்காக சாமியார் வேஷம் போட்டுக்கொண்டு அங்குள்ள ஒரு சீனியர் சாமியாரிடம் 'அப்ரசண்டி’யாக வேலைக்கு சேர்ந்த இவர், வெகு காலத்துக்குப் பிறகு சொந்த மாநிலமான ஆந்திராவில் இருக்கும் சிக்பலாப்பூர் வந்திருக்கிறார்.
தன் முதல் விசிட்டிலேயே லோக்கல் அரசியல்வாதியான ஜாலப்பாவை, சிவ சாய்பாபா மயக்கிவிட... ''இங்கேயே உங்களுக்கு ஒரு ஆசிரமம் கட்டிக் கொடுக்கிறேன்'' என்று சொல்லிவிட்டு சொன்னபடியே கட்டியும் கொடுத்துவிட்டார். மற்றபடி இவருக்கும் புட்டப்பர்த்தி சாய்பாபாவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. பாபாவின் பெயரை வைத்து, காசு பண்ண முயற்சி செய்திருக்கிறார் என்பதையும் டி.வி. சேனல்கள் ஆதாரத்துடன் போட்டு உடைத்தன.
தவிர சிவ சாய்பாபா லேடீஸ் மேட்டரில் ரொம்ப வீக். அதை மோப்பம் பிடித்த ஒரு டி.வி. சேனல் இந்த சாமியாரின் முகத்திரையைக் கிழிப்பதற்காக, தனது பெண் நிருபர் ஒருவரை விட்டு, அவரிடம் கொஞ்சும் குரலில் பேசவைத்தது. ''உங்களின் மகிமைகளைப் பற்றி நிறைய கேள்விப்பட்டேன். உங்கள் தரிசனத்தைப் பெற ஏங்கிக்கொண்டிருக்கிறேன்’ என்று அந்தப் பெண் நிருபர் சொன்னதைக் கேட்ட சிவ சாய்பாபா முதல் பந்திலேயே க்ளீன் போல்ட்! தான் பேசுவது செல்போனில் பதிவு செய்யப்படுகிறது என்று தெரியாமல், ''வியாழக்கிழமை சாயங்காலம் ஆறு மணிக்கு என் ஆசிரமத்துக்கு வந்து இரவு பூஜையில் கலந்துகொள். உனக்கு என்னுடைய முழு அருளும் கிட்டும்’ என்று அப்போது சிவ சாய்பாபா அழைப்பு விடுத்தார்.
சாமியார் விடுத்த அழைப்பின்படியே, ஆசிரமத்துக்கு சென்ற அந்தப் பெண் நிருபரைப் பார்த்து சிவ சாய்பாபா லிட்டர் கணக்கில் ஜொள்ளுவிட்டதுடன்... 'இன்று இரவு ஆசிரமத்தில்தான் நீ தங்க வேண்டும்’ என்று பிடிவாதமும் பிடித்திருக்கிறார். இதையெல்லாம் தான் கொண்டுபோயிருந்த ரகசிய கேமராவில் பதிவுசெய்த அந்தப் பெண் நிருபர் அங்கிருந்து கிளம்ப எத்தனித்திருக்கிறார். ஆனால் சாமியாரோ விடவில்லை. வற்புறுத்தி தனது பெட்ரூமுக்கு கொண்டுபோய் அங்கே ஒரு ஆபாசப் படத்தைப் போட்டுக்காட்டி அந்தப் பெண்ணையும் கட்டியணைக்க முயற்சி செய்திருக்கிறார். சாமியாரிடம் இருந்து தப்பித்து வெளியேறிய அந்தப் பெண் நிருபர் நேரடியாக சேனல் ஆபீஸுக்கு சென்றார். அடுத்த சில மணிநேரங்களில், 'உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக...’ சாமியார் சினிமா ஒளிப்பரப்பானது. இதைப் பார்த்து பதறிய சாமியார்... துண்டைக் காணோம்; துணியைக் காணோம் என்று அங்கிருந்து எஸ்கேப்! ஆனால் ஆந்திரப் போலீஸ் விடவில்லை. திருப்பதியில் வைத்து இவரை கைது செய்துவிட்டது. 'ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்’ என்பது இந்த சாமியாரின் வாழ்கையிலும் மெய்யானது. சாமியாரின் இந்த காமாந்தக நடவடிக்கைகளை எல்லாம் டி.வி-யில் பார்த்த சிறைக் கைதிகள்... இவர் சிறைக்குள் எங்கே போனாலும் அவரிடம் வந்து, 'சாமி வாயில கையைவிட்டு மோதிரம் எடுத்துக் கொடுங்க. காத்துல கையை ஆட்டி விபூதி வரவழைச்சு கொடுங்க’ என்று கடுப்பேத்த... ஆ... சாமி இப்போது முழி பிதுங்கிக் கிடக்கிறார்.

மகாத்மா முதல் மன்மோகன் வரை ! - 5 அடிமடியில் கை வைப்பது என்பார்கள்... அதைத்தான் மாமா நேருவுக்கு எதிராக மருமகன் ஃபெரோஸ் செய்தார்.

அடிமடியில் கை வைப்பது என்பார்கள்... அதைத்தான் மாமா நேருவுக்கு எதிராக மருமகன் ஃபெரோஸ் செய்தார்.
 1957-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ம் நாள் இந்திய நாடாளுமன்றத்தில் ஃபெரோஸ் பேசிய பேச்சு, சுதந்திர இந்தியாவில் வீசப்பட்ட முதல் ஊழல் வெடிகுண்டாக இருந்தது. அடிமை இந்திய நாடாளுமன்றத்தில் பகத்சிங் வீசிய கந்தக வெடிகுண்டுகளுக்கு இணையான அதிர் வலைகளை இது உருவாக்கியது. ஃபெரோஸ் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டிய நெருக்கடி அன்றைய நிதி அமைச்சரும் நேருவின் ஆத்மார்த்தமான நண்பருமான டி.டி.கிருஷ்ணமாச்சாரிக்கு ஏற்பட்டது. அதற்கு சில மாதங்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான அளவுக்கு பணத்தைச் செலவு செய்ததாகச் சொல்லப்பட்ட ஹரிதாஸ் முந்த்ரா என்ற பிரபலமான வர்த்தகருக்கு எதிராகத்தான் ஃபெரோஸ் பேசினார்.
சோஷலிசம் பேசிய நேரு, பிரதமர் பதவியில் இருக்கிறார். 'அடுத்த பத்து ஆண்டுகளில் தனியார் துறைகள் அனைத்தும் தேசியமயமாக்கப்படும்’ என்று நெஞ்சை நிமிர்த்தி நேரு அறிவித்துவிட்டார். இதையே அடிப்படையாக வைத்து ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டிக்கொண்டு இருந்தார்கள். ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாடு (1955 ஜனவரி) அறிவித்த இரண்டு முக்கியமான தீர்மானங்கள் அந்தக் கட்சியின் அந்தஸ்தை வானளாவ உயர்த்திவிட்டன. ஒருவருக்கு ஒரு பதவிதான் என்ற அடிப்படையில் பிரதமர் நேருவே, தான் இதுவரை வகித்துவந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை யு.என்.தெப்பருக்கு தாரைவார்த்தார். சோஷலிச சமுதாயத்தை உருவாக்க காங்கிரஸ் பாடுபடும் என்று அறிவித்த இந்த மாநாடு, தேசிய சொத்துக்களை பொதுமக்களுக்கு உரிமை ஆக்கியது. நேருவின் நடவடிக்கைகளைப் பார்த்து கம்யூனிஸ்ட்களே மிரண்டுபோனார்கள். எந்த அளவுக்குப் போனது என்றால், புரட்சியே நடக்காமல் இந்தியாவில் கம்யூனிஸத்தை நேரு உருவாக்கி வருவதாக கம்யூனிஸ்ட் தலைவர்களே பேச ஆரம்பித்துவிட்டார்கள். பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்குவதற்கான திட்டங்களைப் பற்றி மட்டுமே பிரதமரும் நிதி அமைச்சரும் இதர அமைச்சர்களும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அன்றைக்கு இருந்த ஒரே பிரதான எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட்களும் குழப்பமான சூழ்நிலையில் இருக்கும்போது... அத்தனைக்கும் சேர்த்து ஆப்புவைத்தார் ஃபெரோஸ்.
சோஷலிச சமுதாயம், பொதுத் துறைக்கு ஆதரவு, தனியார் துறைக்கு தடங்கல்... என்று பிரதமர் நேரு புகழ் மயக்கத்தில் இருந்தபோது, இன்னொரு பக்கத்தில் இதற்கு எதிரான வேலைகளை காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சில பெரிய மனிதர்கள் பார்த்தார்கள். அதனைத்தான் ஃபெரோஸ் அம்பலப்படுத்தினார். கொல்கத்தாவைச் சேர்ந்த ஹரிதாஸ் முந்த்ராவின் நிறுவனங்களில் ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஏராளமான பணத்தை முதலீடு செய்திருந்தது. அனைத்தும் பொதுத் துறைக்கு மாற வேண்டும் என்று ஒரு அரசாங்கம் கொள்கை வகுத்திருக்கும்போது, ஒரு தனியார் நிறுவனத்தில் பொதுத் துறை நிறுவனம் முதலீடு செய்வது எத்தகைய முரண்பாடு என்பதே ஃபெரோஸின் கேள்வி.
''நொடித்துப்போன நிலையில் இருக்கும் ஒரு நிறுவனத்துக்கு, இனிமேல் இந்த நிறுவனத்தை நடத்த முடியுமா, முடியாதா என்ற கவலையில் இருக்கும் ஒரு மனிதருக்கு, நிதி நெருக்கடியில் இருந்து தன்னைக் காப்பாற்றுவதற்கு யார் இருக்கிறார்கள் என்ற அச்சத்தில் இருக்கும் ஒருவருக்கு, இப்படிப்பட்ட சலுகையை இந்த அரசாங்கம் எப்படிச் செய்யலாம்?'' என்றார் ஃபெரோஸ்.
ஹரிதாஸ் முந்த்ராவின் ஆறு நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் இருந்தன. அந்த நிறுவனங்களை மீட்டெடுக்க முந்த்ராவுக்கு அவசர அவசியம் பணம். ஆனால், வீழ்ந்துகொண்டு இருக்கும் நிறுவனத்தில் யார் முதலீடு செய்வார்கள்... யார் கடன் கொடுப்பார்கள்... யார் அதன் பங்குகளை வாங்குவார்கள்? ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை பலிகடா ஆக்கியது காங்கிரஸ் அரசு. அதன் லட்சக்கணக்கான சந்தாதாரர்களின் கண்ணீரால் சேமிக்கப்பட்ட கரன்சி, சில கையெழுத்துக்களால் முந்திராவின் கஜானாவுக்குப் போனது. காங்கிரஸை காவல் தெய்வமாக நினைத்து வணங்க ஆரம்பித்தார் முந்திரா. இதனால், அவரது நிறுவனத்தின் பங்குகள் சடசடவென ஏற ஆரம்பித்தன. இதனைத்தான், 'இந்த அரசாங்கத்தின் அவமானகரமான செயல்’ என்று ஃபெரோஸ் வர்ணித்தார்.
''சரிய ஆரம்பித்திருந்த முந்த்ரா நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்காகவே, ஆயுள் காப்பீட்டுக் கழகம் அதிகளவிலான பணத்தை முதலீடு செய்துள்ளது. முந்த்ரா நிறுவனத்தில் இருந்து பங்குகளை வாங்கலாமா என்று ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பரிசீலனை நடந்திருந்தால் அவர்கள் இந்த நிறுவனத்தைத் திரும்பிக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் முதலீட்டு கமிட்டியின் எதிர்ப்பையும் மீறி பங்குகளை வாங்கி இருக்கிறார்கள் என்றால், அது யாரோ ஒரு அதிகாரம் பொருந்தியவர் தூண்டுதலின் பேரில் இது நடந்துள்ளது. இந்தப் பணப்பரிமாற்றம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தியாக வேண்டும்'' என்று ஃபெரோஸ் பொங்கினார்.
குற்றச்சாட்டை நேரடியாகவே வைத்தார் ஃபெரோஸ். முதலில் குற்றச்சாட்டை மறுத்த நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி, பின்னர் அதுகுறித்து விளக்கமாகப் பேசியாக வேண்டியதாயிற்று.
''உறுப்பினர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல நான் மறுக்கவில்லை. அந்தப் பொறுப்பில் இருந்து விலகிச்செல்ல நான் விரும்பவில்லை. அதிகாரிகள்தான் அனைத்துக்கும் காரணம் என்று சப்பைக்கட்டு கட்ட முயலவில்லை. முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை மத்திய நிதித் துறை அமைச்சகம் நேரடியாக நிர்வகிக்கவில்லை. எனவே, அதில் நாங்கள் நேரடியாகத் தலையிட்டு எதனையும் செய்ய முடியாது. இது மாதிரித்தான் நீங்கள் செயல்பட வேண்டும் என்றோ, இந்தப் பங்குகளைத்தான் வாங்கவேண்டும் என்றோ நாங்கள் கட்டளையிட முடியாது. அவர்கள் இதுபற்றி எங்களிடம் ஆலோசனை நடத்துவதும் இல்லை'' என்று நிதி அமைச்சர் சொன்னார்.
ஆனாலும், ஃபெரோஸ் விடவில்லை. ''நிதியமைச்சரின் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் இந்த பங்குகள் வாங்கப்பட்டுள்ளன'' என்று நிதியமைச்சரின் முகத்தை நோக்கிச் சொன்னார் ஃபெரோஸ். நண்பரைக் காப்பாற்றுவதா, மருமகன் குற்றச்சாட்டை மறுப்பதா என்பதற்கு மத்தியில் நேரு துடித்தார். அடுத்த அறிவிப்பை நிதியமைச்சர் செய்தார். ''சொல்லப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா என்பதை ஆராய விசாரணை கமிஷன் அமைக்கப்படும்'' என்று நிதியமைச்சர் பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் சொன்னார்.
1958-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி நீதிபதி எம்.சி.சக்லா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. கமிஷன் அமைக்கப்பட்ட மூன்றாவது நாளே தன்னுடைய விசாரணையை நீதிபதி சக்லா தொடங்கினார். பிப்ரவரி 5-ம் தேதி விசாரணையை முடித்தார். பிப்ரவரி 10-ம் தேதி தன்னுடைய அறிக்கையை அரசாங்கத்திடம் கொடுத்தார் நீதிபதி. இந்திய வரலாற்றில் இவ்வளவு துரிதமாக நடந்த முதலும் கடைசியுமான விசாரணை இதுதான்.
ஜனவரி மாதம் 17-ம் தேதி விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் 10-ம் தேதி அறிக்கை தரப்பட்டது. இது ஏதோ கண்துடைப்பு விசாரணையாக இல்லை. இந்த விசாரணைக்கு உத்தரவிட்ட நிதியமைச்சரை நோக்கியே கையை நீட்டியது சக்லா கமிஷன்.
இந்த கமிஷனின் முக்கியப் புள்ளியாக நிதித் துறையின் செயலாளர் ஹெச்.எம்.படேல் குறிக்கப்பட்டார். ''நிதித் துறைச் செயலாளராக இருந்த ஹெச்.எம்.படேலின் அறிவுரையின் பெயரிலேயே முந்த்ராவின் பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. அவரது தூண்டுதலால்தான் இந்தப் பங்குகளை வாங்கவேண்டிய நெருக்கடி ஆயுள் காப்பீட்டுக் கழக அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. பங்குகள் வாங்க தேர்வு செய்யப்பட்ட தேதி உட்பட முந்த்ராவுக்கு முன்கூட்டியே தெரிந்துள்ளது. அந்தத் தேதியில் தனது நிறுவனப் பங்குகளை மார்க்கெட்டில் கூட்டிவைத்து முந்த்ரா விளையாடிவிட்டார். அதாவது, செயற்கையாகத் தனது பங்குகளின் விலையை அதிகப்படுத்திக் கொண்டார்கள். இதனால் தேவையில்லாமல் அநியாய விலைக்கு காப்பீட்டுக் கழகம் இந்தப் பங்குகளை வாங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இவை அனைத்தும் நிதித் துறையின் செயலாளர் ஹெச்.எம்.படேலுக்குத் தெரியும்'' என்ற முடிவுக்கு கமிஷன் வந்தது.
நிதித் துறை அமைச்சர் நேரடியாக சம்பந்தப்படவில்லை என்றாலும்... நீதிபதி சக்லா, தீர்மானமான ஒரு கருத்தைச் சொன்னார். ''நிதித் துறை செயலாளர்தான் இதனைச் செய்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இந்த விவகாரங்கள் நிதித் துறை அமைச்சருக்குத் தெரியாமல் இருக்க முடியாது. தன் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் செய்யும் செயல்களுக்கு, அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு அமைச்சர்தான் முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும். இந்தியாவில் நடப்பது நாடாளுமன்ற ஜனநாயகம். இங்கு தனது அமைச்சகம் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர்தான் முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும்'' என்று சொன்னார். இந்த அறிக்கை நேருவுக்கு நெருக்கடியைக் கொடுத்தது. அறிக்கை தாக்கல் ஆனதுமே, தனது பதவி விலகல் கடிதத்தை நிதியமைச்சர் டி.டி.கே. கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து டி.டி.கே.வும் நேருவும் எழுதிக்கொண்ட கடிதங்கள் முக்கியமானவை.
''அதிகாரி செய்யும் தவறுக்கு அமைச்சர்தான் பொறுப்பு என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால், நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டியவன் நான்தானே'' என்றார் டி.டி.கே.
''இந்த விவகாரத்தை அமைச்சர் நேரடியாக அறியாவிட்டாலும், அவர் முழு பொறுப்பை ஏற்றே தீர வேண்டும்'' என்றார் பிரதமர் நேரு.
இருவருமே அவரவர் அளவில் தங்களது நேர்மையை நிரூபிக்க நினைத்தார்கள்.  ஆனால்  இன்று, எந்தக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும் அதற்கு தார்மீகப் பொறுப்பேற்று விசாரணை கமிஷன்கள் அமைக்கப்படுவது இல்லை. அப்படியே அமைக்கப்பட்டாலும் அதற்குத் தேவையான ஆவணங்களைத் தருவது இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் அதற்கு முன்னால் ஆஜராவது இல்லை. முதல் அறிக்கை, இரண்டாம் அறிக்கை, மூன்றாம் அறிக்கை, அரைக் காலாண்டு அறிக்கை, அரையாண்டு அறிக்கை, வரைவு அறிக்கை, இறுதி அறிக்கைக்கு முந்தைய வரைவு அறிக்கை... என்று இழுத்து, ஆட்சிக் காலக்கட்டமான ஐந்து ஆண்டுகளையே முடித்துவிடுகிறார்கள். உச்ச நீதிமன்றம் போடும் கிடுக்கிப்பிடிகளைக்கூட சாமர்த்தியமாகச் சமாளித்து தப்பிக்கும் தந்திரமும் இன்றைய அரசியல்வாதிகளுக்குத் தெரிந்துள்ளது. ஆனால், 100 ரூபாய் லஞ்சம் வாங்கியவனும் 5,000 கையூட்டு கேட்டவனும் வேலையை இழந்து வாழ்க்கையைத் தொலைத்து ரோட்டில் அலைகிறான். ஆனால், ஆயிரம் கோடிகளில் புரள்பவர்களுக்கு பண மழை பொழிவது எப்போதும் நிற்கவில்லை. அப்படியானால், உண்மையான சுதந்திரம் இவர்களுக்கு மட்டும்தானே கிடைத்துள்ளது?
''சுதந்திரம் என்பது ஆட்சியாளர்களை மாற்றுவது மட்டுமல்ல. சமூகத்தின் அடித்தட்டு மக்களின் பொருளாதார முன்னேற்றமே சுதந்திரத்தின் அளவைத் தீர்மானிக்கும்'' என்று ஃபெரோஸ் பேசினார். இது மாமா, மனைவி, மகன்... ஆட்சி வரை தொடர்ந்தது!

- Vikatan article 

ஆ...சாமியோவ் ! - 4



பகவான் கிருஷ்ணர் அவதரித்ததாக மக்கள் வழிபடும் திருத்தலம் மதுரா. டெல்லியில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கிருஷ்ண ஜன்ம பூமி. அதை ஒட்டி பிருந்தாவன், கோவர்தன்... என்று கிருஷ்ணரோடு தொடர்புகொண்ட ஏராளமான புண்ணியத் தலங்கள். 
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு, இந்தப் புனித நகரம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அதிர்ச்சிக்கு உள்ளானது. ஓர் உல்லாச சாமியார் ஏற்படுத்திய உலுக்கல் சம்பவம் அது.
'நாராசமான அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு இறை நம்பிக்கை கொண்ட பக்தர்கள் பலரும் கோபம் கொப்பளிக்க வீதிகளில் குவிந்தனர். 'பகவத் ஆச்சார்யாவை கைதுசெய்’ என்று விலா எலும்பு புடைக்க அடிவயிற்றில் இருந்து குரல் எடுத்து கோஷங்கள் எழுப்பினர். அவரின் உருவபொம்மையை எரித்தனர்.
மதுரா மட்டுமல்லாது பிருந்தாவன், கோவர்தன்... என்று எல்லா ஊர்களிலும் போலீஸார் வந்து கூட்டத்தைக் கட்டுப்படுத்தப்பட வேண்டிய அளவுக்குச் சூழ்நிலை மோசமாகியது. இத்தனைக்கும் அவர்கள் கைதுசெய்ய சொன்ன பகவத் ஆச்சார்யா ஒரு பக்திப்பழம். அந்த நிமிஷம் வரை 'சுவாமிஜி’ என்று இவர்கள் கையெடுத்து வணங்கிய ஒரு ஆன்மிகக் கடல். பக்தி மனத்தைப் பரப்பும் தனது உபன்யாசங்களால் மதுரா நகரைப் பரவசப்படுத்தியவர். பகவானின் புகழைப் பாடும் கீதா உபாசகர்.
என்ன நடந்தது?
மதுரா நகரத்தில் மூண்ட இந்தக் கலவரத்துக்குக் காரணம், இணையதளங்களில் வெளியான வீடியோ க்ளிப்ஸ். அந்த வீடியோக்களில் சுவாமிஜி பிரேம நிலையில் ஒரு பெண்ணை ஆலிங்கணம் செய்யும் காட்சிகள் துவங்கி, சிருஷ்டி வித்தைகள் வரை இடம் பெற்றிருந்தன. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் அந்த அந்தரங்கக் காட்சிகளில் சுவாமிஜியோடு இருந்தது வேறு யாருமல்ல; அவரது மனைவி!
அவர் தன் சொந்த மனைவியோடு ஆலிங்கணம் செய்தால் அதற்கு மக்கள் எதற்குக் கொந்தளிக்க வேண்டும்?
விஷயம் இருக்கிறது. அந்த வீடியோ அத்தோடு முடிந்திருந்தால் சுவாமிஜியின் மீது மக்களுக்கு அனுதாபம்தான் உருவாகியிருக்கும்.
மேலும் அவர் 'பகவத் ஆச்சாரியா’ என்ற பெயரில் உபன்யாசகராக வலம் வந்தாலும் 'முற்றும் துறந்த துறவி’ என்று இவர் தன்னை என்றைக்குமே தம்பட்டம் அடித்துக்கொண்டது இல்லை. இல்லறத்தில் நல்லறம் காண்பவராகவே தன்னைச் சித்திரித்தார். 'இவரது பொல்லாத காலம். இவரது அந்தரங்கத்தை யாரோ விஷமிகள் படமெடுத்து அசிங்கப்படுத்திவிட்டார்கள்’ என்று இவர் மீது பரிதாபம் ஏற்பட்டு, அதை வெளியிட்ட பாவி யார் என்று தேடியிருப்பார்கள்.
'ஆசாபாசங்களைக் கடந்த நிர்வாண நிலை’ குறித்து உபதேசிக்கும் இந்த சுவாமிஜி இடம்பெற்றிருந்த அந்த வீடியோவில் இவரும், இவரது மனைவியும் மட்டும் இடம்பெற்றிருக்கவில்லை. இவர்களோடு ஒரு சில வெளிநாட்டவர்களும் நிர்வாண நிலையில் இருந்தனர். இந்த வீடியோவைப் பார்த்த போலீஸார், 'கலி முற்றிவிட்டது’ என்று தலையில் அடித்துக் கொண்டு விட்டுவிட நினைத்தார்கள்.
சரசங்களையும் சல்லாபங்களையும் தாண்டி பகவத் ஆச்சாரியாவிடம் இருந்த விபரீதமான திட்டங்களையும் போலீஸார் அந்த வீடியோவில் மோப்பம் பிடித்தனர். யமுனை நதிக்கரையில் கோபியர்களோடு பகவான் கிருஷ்ணர் ராசலீலையில் ஈடுபட்டதாகப் புராணங்களில் இடம்பெறும் ஷேத்திரங்களை எல்லாம் தனியாகப் படம்பிடித்து பகவத் ஆச்சார்யா தனது வீடியோவில் சேர்த்திருந்தார். அதோடு நடுநடுவே ராதா - கிருஷ்ணனின் காதல் சொட்டும் சாகா வரம்பெற்ற ஓவியங்கள், மதுராவின் புனிதமான கோயில்கள்... என்று அந்த வீடியோவை பல்சுவை சிறப்புடன் படைத்திருந்ததுதான் போலீஸாருக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.
தனிப்பட்ட முறையில் வக்கிர புத்தியில் விளைந்த வீடியோ அல்ல அது. வியாபாரம். இணையதளத்தில் வைத்து வெளிநாட்டவர்களுக்கு விற்பனைசெய்ய பல மானங்கெட்ட மார்கெட்டிங் தந்திரங்களையும் பகவத் ஆச்சார்யா கையாண்டிருந்தார். விஷயம் அம்பலமானபோது போலீஸாரே அதிர்ந்தனர்.
பகவத் ஆச்சார்யாவின் அடுத்த வீடியோ அதைவிட 'பகீர்’ ரகம். இதில் தனது மனைவி, வெளிநாட்டவர் என்று நிறுத்திக் கொள்ளாமல் வக்கிர ஆசை பிடித்த இன்னொரு கூட்டத்திடம் தனது வீடியோக்களை மார்கெட்டிங் செய்ய, பகவத் ஆச்சார்யா சில சிறுவர்களையும் தங்களின் களியாட்டத்தில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தியிருந்தார். அது போலீஸாருக்கு மட்டுமல்ல, ஊருக்கே உச்சிமண்டை வரை கோபம் ஏற்றியது.
போலீஸாரோடு சேர்ந்து ஊரே கொலைவெறியோடு வலை வீசித் தேடியது. தனது பாவத்துக்கு என்ன சம்பளம் கிடைக்கும் என்று தெரிந்துகொண்ட பகவத் ஆச்சார்யாவும் அவரது மனைவியும் மந்திரம் போட்டதைப் போல தலைமறைவாயினர்.
போலீஸ் சளைக்கவில்லை. ஊராரும் பகவத் ஆச்சார்யாரின் உற்றார், உறவினர், நண்பர்கள்... என்று தங்களுக்குத் தெரிந்த அத்தனை தகவல்களையும் தொடர்ந்து போலீஸாருக்குச் சொல்லி உஷார்படுத்தினர். 'இனிமேல் ஓடுவதற்கோ, ஒளிவதற்கோ இடமில்லை’ என்பதைப் புரிந்துகொண்ட பகவத் ஆச்சார்யா போலீஸ் தன்னைக் கைதுசெய்வதற்கு முன் தன் மனைவியைவிட்டு ஒரு புகார் கொடுப்பது என்று முடிவுசெய்தார்.
''தனிப்பட்ட முறையில் நான் சில வீடியோ பதிவுகளை எடுத்து வைத்திருந்தேன். இந்த வீடியோ பதிவுகள் இருந்த என் கம்ப்யூட்டரைப் பழுதுபார்க்க சர்வீஸ் சென்டரில் கொடுத்திருந்தேன். அங்கே சிலர் கம்ப்யூட்டரில் இருந்த என் அந்தரங்க வீடியோக்களைத் திருடியதோடு, 10 லட்ச ரூபாய் கேட்டு பிளாக் மெயில் செய்தனர். நான் பணம் கொடுக்காததால் அதை அவர்கள் இணையதளங்களில் வெளியிட்டு என்னை அவமானப்படுத்திவிட்டார்கள். அதுமட்டுமல்ல.
எங்களது தனிப்பட்ட வீடியோவில் அவர்கள் வேறு சில காட்சிகளையும் கிராஃபிக்ஸ் மூலம் தந்திரமாகச் சேர்த்து எங்களை வேறு பல பழிகளுக்கும் ஆளாக்கிவிட்டனர். அதனால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' - இப்படி ஒரு புகாரை தன் மனைவியைவிட்டு, போலீஸிடம் கொடுப்பதற்காக பகவத் ஆச்சார்யா தன் மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டபோது போலீஸார் முந்திக்கொண்டு அவரையும் அவரது மனைவியையும் அவருக்கு உதவிய வெளிநாட்டவர்களையும் கைது செய்தனர்.
விசாரணையின்போது பகவத் ஆச்சார்யா தன் உண்மையானப் பெயர் ராஜேந்திரா என்றும் தான் ஒரு பெயின்டர் என்றும் வாக்குமூலம் அளித்ததோடு... ''என்னை ஏதோ ப்ளூ ஃபிலிம் பார்ட்டி என்று சாதாரணமாக எடைப்போட்டுவிடாதீர்கள். இணையதளத்தில் பலவிதமான 'பலான’ வீடியோக்கள் கடைவிரித்துக் கிடப்பதால்... தனித்துவம் காட்டினால் மட்டுமே பலான வீடியோக்களை சந்தைப்படுத்த முடியும். அதனால் இந்தத் தொழிலில் டாலர்கள் பார்க்க வேண்டும் என்றால் மார்க்கெட்டிங் தெரிந்திருக்க வேண்டும். அதனால்தான் கிருஷ்ணர் கோபியர் என்று சுவாரஸ்யப்படுத்தினேன்'' என்று ஆரம்பித்து சைபர் செக்யூரிட்டி, சர்வதேச காபி ரைட் சட்டம், அந்நிய செலாவணிச் சட்டம், நிதி நிர்வாகம்... என்று பல விஷயங்களைப் பற்றி டீடெய்லாக விளக்கியிருந்தார்.
காசு ஆசை கடவுளர்களையும் கொச்சைப்படுத்தத் தயங்காது என்பதற்கு பகவத் ஆச்சார்யா ஒரு பக்பக் உதாரணம்.

- Vikatan Article

மகாத்மா முதல் மன்மோகன் வரை ! - 4



மரத்தை வெட்ட மரக்கோடரியே பயன்படுவதைப்போல, பிரதமர் ஜவஹர்லால் நேரு காலத்திய முறைகேடுகளை அவரது மருமகன் ஃபெரோஸ் காந்தியே வெளிப்படுத்த வேண்டியதாயிற்று!
 இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, சோனியா காந்தி, மேனகா காந்தி, ராகுல் காந்தி, வருண் காந்தி, பிரியங்கா காந்தி... என்று 'காந்தி’யை ஒட்டாகச் சேர்க்கப்பட்டு இருப்பதற்குக் காரணம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மீதான பாசம், பற்று, நேசத்தால் அல்ல. காந்தி என்பது ஃபெரோஸ் காந்தியின் குடும்பப் பெயர். குஜராத்தைச் சேர்ந்த ஜஹான்கீர் காந்திக்கும் ஹட்டா காந்தி என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர் ஃபெரோஸ் காந்தி. பார்சி வகுப்பைச் சேர்ந்தவர்கள் இவர்கள். குஜராத்தில் பார்சிக்களும் இந்துக்களும் தங்களது குடும்பப் பெயராக காந்தி என்று வைத்துக்கொள்வது உண்டு. அதனால்தான் மகாத்மாவுக்கும் காந்தி என்ற பெயர் வந்தது. ஃபெரோஸுக்கும் காந்தி என்ற பெயர் வந்து சேர்ந்தது. ஆனால், மகாத்மா காந்தியின் வாரிசுகளாக இவர்கள் அடையாளப்படுத்திக் கொண்டு அரசியல் நடத்தியதுகூடப் பரவாயில்லை. அது தவறுகளை மறைப்பதற்கான முகமூடியாகப் போனதுதான் மகாத்மாவுக்கு அவலம்.
இந்திராவின் கணவர் என்பதற்காகவோ, நேருவின் மருமகன் என்பதற்காகவோ ஃபெரோஸுக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை. சுதந்திர தாகம்கொண்ட இளைஞராகத்தான் இளமைப் பருவம் முதல் அவர் வளர்ந்தார். வர்த்தகக் குடும்பத்துக்கு அரசியல் அலர்ஜி என்பதால், போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றில் கலந்துகொள்ளாமல் பிள்ளையை வளர்க்கவே ஃபெரோஸின் பெற்றோர் விரும்பினார்கள். அலகாபாத் ஈவினிங் கல்லூரியில் மதியநேர உச்சி வெயிலில் பெண்கள் படையோடு ஆர்ப்பாட்டம் செய்யப் போன, நேருவின் மனைவி கமலா மயங்கி விழ... அதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்த ஃபெரோஸ் போய் அவரைத் தாங்கிப்பிடிக்க... அதன் பிறகுதான் ஆனந்த பவனத்துக்குள் அவர் போனார். ஆரோக்கியமற்ற உடல்நிலையைக் கொண்ட கமலா பெரும்பாலும் மருத்துவமனையிலும் படுக்கையிலும் காலம் கழித்தபோது அடிக்கடி போய் பார்த்து வந்தார் ஃபெரோஸ். அதன்பிறகு இவரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். அந்தக் காலக்கட்டத்தில்தான் இந்திராவைச் சந்தித்தார். காதல் வயப்பட்டார். இந்திராவுக்கு 16 வயது இருக்கும்போது தன்னுடைய காதலைச் சொன்னார் ஃபெரோஸ். ஆனால், அதனை இந்திரா ஏற்கவில்லை. அம்மாவின் சிகிச்சைக்காக ஜெர்மன் போனார் இந்திரா. ஃபெரோஸும் படிக்க லண்டன் போனார். கமலாவின் உடல்நிலை மோசமானது. கமலாவைப் பார்க்க ஃபெரோஸ் சென்றிருந்த நேரத்தில்தான் அவர் இறந்து போனார். அதற்கு முன்னரே இந்திரா மீதான தனது காதலை ஃபெரோஸ், கமலாவிடம் சொல்ல, 'அவள் சின்னப் பெண்’ என்று சொல்லி மறுத்துவிட்டார். தன்னுடைய அம்மாவின் கடைசிக் காலத்தில் கவனித்துக் கொண்டவர் என்ற அடிப்படையில் இந்திராவுக்கும் ஃபெரோஸ் மீது கரிசனம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. அதாவது 1933 ஃபெரோஸ் வெளிப்படுத்திய காதலை, நான்கு ஆண்டுகள் கழித்துத்தான் இந்திரா ஏற்றுக்கொண்டார். அதற்கு நான்கு ஆண்டுகள் கழித்துத்தான் நேருவிடம் இந்திரா சொன்னார். அவரும் இந்தக் காதலை ஏற்கவில்லை. தட்டிக் கழிக்க நினைத்தவர் காந்தி உட்பட தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரது சம்மதத்தையும் இந்திரா வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினார் நேரு. காந்தி ஏற்றுக் கொண்டார். ஆனால் நேரு குடும்பத்தினர் அனைவரும் எதிர்த்தார்கள். ஆனால், இந்திரா தன்னுடைய வைராக்கியத்தால் வென்று, ஃபெரோஸைக் கைப்பிடித்தார்.
தன்னை நேரு, முதலில் இருந்தே ஏற்கவில்லை என்ற கோபம் ஃபெரோஸுக்கு இருந்தது. திருமணம் ஆனதும், இந்திராவை அந்த பெரிய வீட்டில் இருந்து அழைத்துச் சென்று தனிக்குடித்தனம் வைத்தார் ஃபெரோஸ். நேருவின் வெளிச்சத்தில் வாழ விரும்பவில்லை. ஆனால் இந்தியத் தலைவர்கள் அனைவரும் சுற்றிச்சுற்றி கைதான சூழ்நிலையில் ஃபெரோஸும், இந்திராவுமே கைதாகி பல மாதங்கள் சிறையில் இருந்தார்கள். விடுதலை ஆகி வந்தவர்கள், ஆனந்தபவனத்தில் குடியேற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஏனென்றால் அப்போது நேரு, சிறையில் இருந்தார். அதன்பிறகு அப்படியே தங்கிவிட்டார் ஃபெரோஸ்.
முதல் குழந்தை பிறந்தது. ராஜீவ் ரத்னா என்று பெயர் வைக்க ஆசைப்பட்டார் இந்திரா. பிர்ஜிஸ் என்று வைக்க நினைத்தார் நேரு. 'எங்காவது நேரு என்று சேர்க்க முடியுமா?’ என்று தாத்தா மனது துடித்தது. ஃபெரோஸ் தனது குடும்பப் பெயரான காந்தி என்பதைச் சேர்க்க ஆசைப்பட்டார். அனைத்தையும் சேர்த்து ராஜீவ் ரத்னா பிர்ஜிஸ் நேரு காந்தி என்று பெயர் வைக்கப்பட்டது. தன்னை மனப்பூர்வமாக நேரு ஏற்றுக் கொள்ளவில்லை என்று நினைத்த ஃபெரோஸ், தனது வாழ்க்கையை லக்னோவை நோக்கி நகர்த்தினார். அடிப்படையில் மார்க்சீய ஆர்வம் கொண்டவர் ஃபெரோஸ். பாசிசத்துக்கு எதிரான குரல்களைப் பதிவு செய்தவர். அடக்குமுறைகளை எதிர்த்தவர். எழுதுவதிலும் அதீத விருப்பம் கொண்டவர். 'நேஷனல் ஹெரால்ட்’ இதழின் நிர்வாக இயக்குநராக ஆனார். இது ஒருகாலத்தில் நேரு நடத்திய பத்திரிகைதான். லக்னோவுக்கும் அலகாபாத்துக்கும் போய் வந்துகொண்டு இருந்தார் இந்திரா. அதன் பிறகு சஞ்சய் பிறந்தார். சஞ்சய் என்று பெயர் வைக்கப் போகிறோம் என்றோ, என்ன பெயர் வைக்கலாம் என்றோ ஃபெரோஸிடம் யாரும் கேட்கவில்லை, இந்திரா உட்பட. அதனையும் சகித்துக்கொண்டார். இந்திராவுக்கு இளமைக் காலம் முதல் காச நோய் உண்டு. அதனால், குழந்தைகளை தனியாக வளர்ப்பது சாத்தியம் இல்லை என்பதால் அப்பா வீட்டோடு இருந்தாக வேண்டிய நெருக்கடி அவருக்கு. இந்த நிலையில் ரேபரேலி தொகுதியில் இருந்து ஃபெரோஸ் எம்.பி-யாக தேர்வானார். எம்.பி-களுக்கான பங்களா கிடைத்தது. நேருவின் தீன்மூர்த்தி பவனில் இருந்து படிப்படியாக வெளியேறி எம்.பி. பங்களாவில் தங்க ஆரம்பித்தார்.
நேருவின் தலைமையில் புதிய முகங்கள் அதிகாரம் செலுத்தும் ஆட்சி உட்கார்ந்து இருந்ததை ஃபெரோஸால் ஏக்கத்தோடும் ஏமாற்றத்தோடும் பார்த்துக்கொண்டு இருக்கவே முடிந்தது. அந்த வட்டாரத்துக்குள் அவரால் போகவே முடியவில்லை. அந்த விரக்தியும், தன்னை ஆரம்பத்தில் இருந்தே உதாசீனம் செய்த நேருவின் மீதான கோபமும், தன்னைவிட அப்பா நேருவின் வார்த்தைகளுக்கே மனைவி இந்திரா கட்டுப்படுகிறார் என்ற எரிச்சலும் சேர்ந்தது. அப்போது அவருக்குள் இந்த பத்திரிகையாளன் மெள்ளத் தலைதூக்கினான். நேருவும் நேருவைச் சுற்றி இருப்பவர்களும் என்ன செய்கிறார்கள் என்பதைத் தோண்டித்துருவ ஆரம்பித்தார். காங்கிரஸ் கட்சியைத் தாண்டி வேறு கட்சியில் இருந்து வந்த எம்.பி-க்களோடு கைகோத்து அலைய ஆரம்பித்தார். அப்போது அவர் கையில் இன்ஷூரன்ஸ் மோசடி வசமாக மாட்டியது. இன்ஷூரன்ஸ் திட்டத்தில் செய்யவேண்டிய மாறுதல்கள் சம்பந்தமான புதிய மசோதா அமல்படுத்தப்பட்டபோது மைக் பிடித்தார் ஃபெரோஸ். வீட்டுக்குள் இருந்தே வாள் பாய்ந்து வரும் என்று நேரு எதிர்பார்க்காத பேச்சு அது.
இதோ நாடாளுமன்றத்தில் ஃபெரோஸ் பேசுகிறார்...
''காலம் தாழ்ந்து நடந்திருந்தாலும் நல்லதே நடந்திருக்கிறது. இந்தியாவில் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களைப்போல எக்கச்சக்கமான இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் நிறைய முளைத்துவிட்டன. இவற்றில் நடந்துவரும் குளறுபடிகள்தான் இப்போது இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரக் காரணம். இவர்கள் பொதுமக்கள் பணத்துடன் விளையாடுவதை அனுமதிக்க முடியுமா?
ஒரு கம்பெனியில் முதலீடு, பின்பு வேறு கம்பெனியில், அதன் பிறகு வேறு ஒரு கம்பெனியில், பின்னர் பேர் இல்லாத பற்பல கம்பெனிகள் என்ற வகையில் பணத்தை பந்தாடிப் பந்தாடி கொள்ளை லாபம் அடித்துள்ளார்கள். இவை அனைத்துமே அவர்கள் உடல் உழைத்து ஈட்டிய பணமா? இல்லவே இல்லை. ஒன்றும் தெரியாத அப்பாவி பொதுமக்கள் பணம்தான். இது நமது நிதித் துறை வசம் உள்ள வருமானவரித் துறைக்குத் தெரியாதா? தெரியாது என்று சொன்னால் நம்பும்படியாக இருக்கிறதா? ஏன் இந்த அரசாங்கம் கண்டும் காணாதது போல இருக்கிறது? யாரைக் காப்பாற்ற இந்த அரசாங்கம் தன் நம்பகத்தன்மையை இழக்க வேண்டும்? நிதி அமைச்சர் எதற்காக காலஅவகாசம் கொடுக்கிறார்? ஏன் ஒட்டு மொத்தமாக இந்தப் பணத்தைத் திரும்பப்பெற முயற்சி எடுக்கவில்லை?
இதற்கெல்லாம் நம்முடைய அரசாங்கமும் நிதி அமைச்சகமும் முழுபொறுப்பேற்று நிலைமையை சீரடையச் செய்ய வேண்டுமா இல்லையா? அங்கும் இங்கும் சிற்சில விசாரணைகள் மட்டுமே நடைபெற்றன. நான் நமது வருவாய்த் துறை அமைச்சரிடம் கேட்டேன். அவர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஜால்ஜாப்பு சொல்கிறார். 'நான் அட்டர்னி ஜெனரலை கன்சல்ட் செய்கிறேன்’ என்பார். சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பார். ஆனால், இரண்டரை வருடங்கள் ஓடிவிட்டன. ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை. நான் இறுதியாக நிதி அமைச்சரைக் கேட்டுக் கொள்வதெல்லாம்,
எப்படியாவது மோசடி செய்யப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுங்கள். கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் என்பது பொதுமக்கள் வியர்வை சிந்தி உழைத்துச் சம்பாதித்த பணம். இவ்வாறு செய்வது இந்த அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களின் கடமை.'' - ஃபெரோஸின் இந்தப் பேச்சு இன்றுவரை பொருத்தமாகத்தான் இருக்கிறது. இரண்டரை வருடங்களில் எதுவும் நடக்கவில்லை என்று ஃபெரோஸ் வருந்தினார். 60 ஆண்டுகளாக அதுதான் நடந்துகொண்டு இருக்கிறது. 'சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன்’ என்ற வார்த்தைக்கு வாய் இருந்தால் கதறிக்கதறி அழும். பிரதமர் ஆரம்பித்து, விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர் உட்பட அனைவருமே, 'சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்’ என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்வார்கள். எந்தச் சட்டப்படி என்பதுதான் இன்றுவரை விளங்கவில்லை. அட்டர்னி ஜெனரல் பற்றியும் ஃபெரோஸ் சொன்னதில் இன்றுவரை மாற்றம் இல்லை. நிலக்கரி வழக்கில் கோப்புகளே மாயம் ஆனது. 'கோப்புகளைக் காணாமல் போனதைக் கண்டுபிடிக்க என்ன முயற்சி எடுத்தீர்கள்? இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்தீர்களா?’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கேட்டபோது, அட்டர்னி ஜெனரல் வாகனவதி, 'சி.பி.ஐ-க்கு நிலக்கரித் துறை அமைச்சகம் ஒத்துழைப்பு அளிக்கும்'' என்று மையமாகச் சொன்னார். இன்னொருநாள் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டார். ''எல்லா விவரங்களையும் மூளையில் பதிவுசெய்து ஒப்பிக்க என்னால் இயலாது. முன்னறிவிப்பு இன்றி என்னிடம் எழுப்பப்படும் கேள்விகள் சங்கடமாக உள்ளது'' என்று மழுப்பினார். மறுநாள் வந்து, ''நான் இப்படி பேசியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று சொன்னதும் அவர்தான்.
ஃபெரோஸின் பேரன் பிரதமர் ஆகப் போகும் காலக்கட்டத்திலும் எதுவுமே மாறவில்லை!

- Vikatan