Wednesday, May 23, 2012

ஒரு வருட ஜெ. ஆட்சியின் டாப் 10... ஃப்ளாப் 10...

ரண்டாம் ஆண்டில் அடிஎடுத்து வைத்துவிட்டார் அம்மா! அதற்கான கொண்டாட்டங்களில் மூழ்கி இருக்கிறது அ.தி.மு.க. 80 சாதனைகளைச் சொல்லி, ஜெயலலிதா மகிழ்ச்சியைத் தெரிவிக்க... எத்தனையோ வேதனைகளை அடுக்கி மக்கள் அவஸ்தையை வெளிப்படுத்துகிறார்கள். நியாயமாகப் பார்த்தால் இரண்டின் கலவையாகவே முதல் ஆண்டைக் கடந்திருக்கிறார் ஜெயலலிதா!
 நல்லவை  10
தி.மு.க. ஆட்சியில் அதிகாரம், போலீஸைப் பயன்படுத்தி அடித்துப் பிடுங் கப்பட்ட நிலங்களை மீட்க எடுத்த முயற்சி கள், இன்றைய நில அபகரிப்பு மனிதர் களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்தது. வருமானத்துக்கு அதிகமாக, அடித்துப் பிடித்துச் சொத்து சேர்த்த தி.மு.க. மந்திரிகளின் வீட்டுக்குள் லஞ்ச ஒழிப்புத் துறை யைவிட்டு ரெய்டுகள் நடத்தியதும், அதற் கெனத் தனி நீதிமன்றம் அமைக்க முயற்சித் ததும் அனைத்துத் தரப்பினராலும் வரவேற் கப்பட்டது.
சசிகலா குடும்பத்தின் ஆக்டோபஸ் கரங்கள் வெட்டி எறியப்பட்டன. ஜெ. பதவி ஏற்ற மே மாதம் முதல் சசி டிஸ்மிஸ் செய்யப்பட்ட டிசம்பர் மாதம் வரை, இந்தக் குடும்ப உறுப்பினர்கள் செய்த காரியங்களுக்குத் தடை விழாமல் இருந்திருந்தால், 3-வது ஆண்டு விழாவின்போது தமிழ்நாடே தனியார் சிலருக்குச் சொந்தமாகி இருந்துஇருக்கும். இந்தக் கும்பலுக்குத் தடுப்பணை விழுந்தது எல்லோரும் வரவேற்பது.
இரண்டு விஷயங்களில் ஜெ. சிறப்புக் கவனம் செலுத்தினார். ஒன்று, மதுரையை அடாவடி மனிதர்களின் ஆதிக்கத்தில் இருந்து மீட்பதில் உறுதி காட்டியது. இரண்டாவது, அ.தி.மு.க-வினர் சிலருக்கே பிடிக்காதது. ஆனால், ஜெ. தயக்கம் இல்லாமல் செய்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை முறைகேடு இல்லாத தேர்வு அமைப்பாக மாற்ற அவர் எடுத்த முயற்சிகள் இளைஞர்களுக்கு நம்பிக்கை கொடுத்தன.
மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது வேறு. அண்டிப் பிழைப்பது வேறு. பாதகமான காரியங்கள் நடந்தாலும் ஒரு மாநில அரசு சுயாட்சி உரிமைகொண்ட தாகச் செயல்பட வேண்டும் என்பதை நடைமுறையில் காட்டிய தைரியம் ஜெயலலிதாவின் தனித்தன்மையை உறுதிப் படுத்துகிறது.
ஈழத் தமிழர் விவகாரத்தில் கடந்த காலத்தில் இன விரோத நிலைப்பாடுகளை எடுத்தாலும், ஆட்சியைப் பிடித்த பிறகு கொண்டுவந்த தீர்மானங்கள், விடுத்த அறிக்கைகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் முதல்வரின் செல்வாக்கை அதிகரித்து உள்ளது.
தினமும் தலைமைச் செயலகம் வருவது, அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் கலந்துரையாடுவது, முக்கியப் பிரச்னைகள்பற்றி அடிக்கடி ஆலோசிப்பது போன்றவை பழைய ஜெயலலிதாவைவிட இன்றைய ஜெ. உற்சாகமானவர் என்றே காட்டுகிறது. சட்டப் பேரவை நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்று விவாதங்களில் கலந்துகொண்டு வாத வல்லுநராகவும் திகழ்கிறார்.
தி.மு.க. ஆட்சியில் பல அமைச்சர்கள் தலைகால் புரியாமல் ஆடினார்கள். அந்தச் சூழ்நிலை இப்போது இல்லை. ஆளும் கட்சியினர் காவல் நிலையங்களுக்குச் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்வதும் குறைந்துவருகிறது. 'பதவியை வைத்து ஆடினால், அம்மா ஆப்பு அடித்துவிடுவார்’ என்ற அசரீரிக் குரல் கேட்பதே தப்பைக் குறைக்கிறது.
வெண்மைப் புரட்சிக்கு வித்திடும் வகையில், கறவை மாடுகள், ஆடுகள் வழங் கியதும், ஏழைப் பெண்களின் திருமணத் துக்கு தாலிக்குத் தங்கம் வழங்கியதும் கிராமப்புற மக்களுக்கு நல்ல உதவியாக அமைந்து இருக்கிறது.
கல்வித் துறையிலும் சிறப்புக் கவனம் செலுத்தினார் ஜெ. பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்குவதில் தொடங்கி, 55 ஆயிரம் ஆசிரியர் நியமனம் வரை நடந்தால்... தமிழகப் பள்ளிக் கல்வி செழிக்கும்.
தன்னுடைய இலக்கு இதுதான் என்பதை வரையறுத்து 'விஷன் 2023’ வெளியிட்டார் முதல்வர். தன்னுடைய எண்ணங்களை அடுத்த 10 ஆண்டுகளுக்கு உரியதாக சொன்ன தன்னம்பிக்கை அனை வராலும் பின்பற்றத்தக்கது.
அல்லவை  10
சென்ற தி.மு.க. ஆட்சியில் எகிறி வந்த விலைவாசி, கடந்த ஆண்டு ஏகத்துக்கும் ஏறியது. விலைவாசியைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கையில் இல்லை என்ற மெத்தனம் ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. இதைத் தடுக்க முயற்சிக்காத ஜெ., பால் விலையையும் பஸ் கட்டணத்தையும் தன் பங்குக்கு ஏற்றிவைத்தார்.
மின் வெட்டு முழுமையாக இல்லாத தமிழ்நாட்டை எப்போது பார்க்க முடியும் எனத் தெரியவில்லை. இதற்கான திட்டமிடுதல்களில் ஜெயலலிதா முழுக் கவனம் செலுத்தியதாகவும் தெரியவில்லை. 6 முதல் 8 மணி நேரம் வரை மின் வெட்டு இருந்ததும்... இன்னும் பல இடங்களில் இருப்பதும் வேதனையானது.
தமிழ்நாட்டின் பொதுச் சொத்தான மணல், பட்டப்பகலில் கொள்ளை அடிக் கப்படுகிறது. என்ன சட்டதிட்டப்படி, யார் எடுக்கிறார், எவ்வளவுக்கு விற்கிறார் என்ற வரைமுறையே இல்லாமல் பூட்டு உடைக்கப்பட்ட வீடாக ஆறுகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. இதுபற்றியவெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.
கருணாநிதி கொண்டுவந்தவை என்பதற்காக, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தையும் தலைமைச் செயலகத்தையும் மருத்துவமனை ஆக்க முயற்சித்தார். சமச்சீர்க் கல்வியை என்ன செய்தேனும் ஒழிக்க முயற்சித்தார். செம்மொழி நூலகம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.
மூன்று தமிழர் தூக்கு, கூடங்குளம் எனப் பல முடிவுகளை மாற்றிக்கொண்டே இருந்தார். அதிகாரிகளும் அமைச்சர்களும் முதல் ஆறு மாதத்தில் பந்தாடப்பட்டே வந்தார்கள். 'எடுத்த முடிவில் எப்போதும் தெளிவானவர்’ என்ற பெயரை ஜெ. இழந்தார்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்கும் என்ற நினைப்பில் மண் விழுந்தது. குற்றம் நடக்காத நாளே இல்லை எனலாம். இதற்கு முக்கியக் காரணம், போலீஸ் - குற்றவாளிகள் இடையிலான நட்புதான். இந்தக் கண்ணியை உடைக்காமல், நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியாது.
அப்பழுக்கற்ற அரசாங்கம் நடக்கிறது என்று சொல்ல முடியவில்லை. கடந்த ஆட்சியைவிட கமிஷன் சதவிகிதம் உயர்த் திய அமைச்சர்களும் இருக்கிறார்கள். கான்ட்ராக்ட் மனிதர்களின் நடமாட்டமும் தலைமைச் செயலகத்தில் அதிகம். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே புரோக்கர்களாக மாறிய அவலமும் தொடர்கிறது.
சசிகலாவைக் கட்சியைவிட்டு நீக்கியபோது உயர்ந்த இமேஜ், அவரை மறுபடியும் சேர்த்துக்கொண்டபோது சரிந்தது. 'சசிகலா செய்தது எதுவும் எனக்குத் தெரியாது’ என்று ஜெ. சொன்ன வாதத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை.
சட்டப் பேரவையில் அளவுக்கு மீறி அம்மா புகழ் பாடும் ஜால்ரா சத்தமே கேட்கிறது. ஆளும் கட்சியை விமர்சித்துப் பேச எதிர்க் கட்சிகளை அனுமதிப்பது இல்லை. அமைச்சர்கள் முதல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் வரை அனைவருமே தங்கள் சொந்த அம்மாவைக்கூட இத்தனை தடவை 'அம்மா’ என்று அழைத்திருப்பார்களா என்ற சந்தேகமே எழுகிறது.
முதல்வர் மீது மரியாதை இருக்கலாம். பக்திகூட இருக்கலாம். பயம் இருந்தால், அது அவருக்கேகூடப் பயன்படாது. அதுவும் சில அமைச்சர், அதிகாரிகளுக்கு மரண பயமே இருக்கிறது. இத்தகைய மனிதர்களை வைத்து ஜெயலலிதாவால் நல்லாட்சி தரவே முடியாது. நெகிழ்வுத்தன்மை உள்ளவராக ஜெயலலிதா தன்னை மாற்றிக்கொண்டால் மட்டுமே வெற்றியைத் தக்கவைக்க முடியும்.

Source: junior vikatan

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

''பயணிகள் கவனிக்கவும். இப்போது விமானம் ஜார்கண்ட் தலைநகரம் ராஞ்சியை நெருங்கி​விட்டது. தயவுசெய்து சீட் பெல்ட்டை அணிந்துகொள்ளவும்.'' - விமானப் பணிப்பெண் அறிவித்ததும் வெளியே எட்டிப்பார்த்தோம்.
'காட்டு நிலம்' என்பதுதான் ஜார்கண்ட் என்பதன் அர்த்தம். கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி பிறந்த மண். 700 மலைகளைக் கொண்ட சரண்டா காடு இங்கேதான் இருக்கிறது. 24 மாவட்டங்களைக் கொண்ட சிறிய மாநிலம். இவற்றில் 22 மாவட்டங்களில் மாவோயிஸ்ட்டுகளின் கொடிகள் மட்டுமே பறக்கின்றன. இவற்றை, 'மாவோயிஸ்ட்டுகளால் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள்’ என்கிறார்​கள் காவல் துறையினர். முன்னாள் முதல்வர் சிபுசோரனுக்குச் செல்வாக்கு உள்ள இரண்டு மாவட்டங்களில் மட்டும் மாவோயிஸ்ட்டுகள் நட​மாட்டம் இல்லாததன் ரகசியம் இதுவரை தெரியவில்லை!   
இந்த மாநிலம் ஏன் மாவோயிஸ்ட்டுகளின் பிடியில் இருக்கிறது? உரிமைக்குப் போராடும் மாவோயிஸ்ட்​டுகள், அவர்களை அடக்கத் துடிக்கும் மத்தியக் காவல் படையினர், இருவருக்கும் இடையே மாட்டித் தவிக்கும் ஆதிவாசிக் கிராம மக்கள், சமரசத்துக்குப் போராடும் மனித உரிமை ஆர்வலர்கள், இத்தனை சிக்கல்களுக்கு இடையே ஆட்சி நடத்தும் ஆளும் கட்சி என்று அத்தனை பேரையும் சந்திப்பதுதான் நம் நோக்கம். 
மாவோயிஸ்ட் பெயரைச் சொல்லி அபாயச்சங்கு ஊதுகிறார் பிரதமர் மன்மோகன் சிங். பச்சைவேட்டை என்கிற பெயரில் ஒருங்கிணைந்த போலீஸ் படைகளை மாவோயிஸ்ட்டுகள் மீது ஏவுகிறார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். இவர்களின் கட்டளைக்கு ஏற்ப, களத்தில் நின்று மாவோயிஸ்ட்டுகளுடன் மோதிக்கொண்டு இருக்கிறார், மத்திய ரிசர்வ் காவல் படைத் (சி.ஆர்.பி.எஃப்) தலைவர் விஜயகுமார். சுமார் 1.6 லட்சம் மக்கள் படையைக் கொண்ட மாவோ​யிஸ்ட்டு இயக்கத் தினர், கெரில்லா முறையில் போலீஸாரைத் தாக்கி துவம்சம் செய்கிறார்கள்.
இந்த இயக்கத்தின் பொதுச் செய​லாளராக அறியப்படுபவர் கணபதி. தலைமறைவாக வாழ்ந்து​கொண்டே, இந்த இயக்கத்தை உயிர்ப்புடன் நடத்திக்கொண்டு இருக்கிறார். மாவோயிஸ்ட் ஆதரவுப் பத்திரிகை​களில் கண​பதியின் பெயரில் சில நேரங்களில் பேட்டி வரும். மற்ற​படி, இயக்கத்தின் சீனியர்​கள் சிலருக்குத்தான் அவர் யார் என்ற அடையாளமே தெரியும். 
ராஞ்சி 'பிர்ஸா முண்டா' ஏர்​போர்ட்டை விமானம் தொட்டது. ஜன்னல் வழியாக ஓடுதளத்தைக் கவனித்ததும், தூக்கிவாரிப் போட்​டது. காரணம், அங்கே மினி ஹெலிகாப்டர் ஒன்று தலைகுப்புற நொறுங்கிக் கிடந்தது. ''மே 9-ம் தேதி, மாநில முதல்வர் அர்ஜூன் முண்டா வந்த ஹெலிகாப்டர் அது. திடீரென நிலை தடுமாறி விழுந்து விட்டது. அந்த விபத்தில் உயிர் தப்பிய அர்ஜூன் முண்டா,  காயங்​​களுடன் இன்னமும் மருத்துவ மனையில்  இருக்கிறார்'' என்று என் சக பயணியான தினேஷ் என்பவர்  சொன்னார்.
சென்னையில் இருந்துவந்​திருக்கும் பத்திரிகை​யாளர்என்று அறிமுகம் ஆனதால், பல்வேறு தகவல்​களைக் கொட்டினார் தினேஷ். மாவோயிஸ்ட்டுகளின் அட்டூ​ழியம் காரணமாக சாதாரண மக்கள் தொடங்கி அதிகாரவர்க்கத்தினர், அரசியல்வாதிகள் வரை அனைவரும் எத்தனை துன்பங்களுக்கு ஆளாகிறார்கள் என்று அவர் சொல்லச் சொல்ல, அவரது நிலைப்பாடு என்ன என்பதை உணர முடிந்தது.
''வருடத்துக்கு 400 கோடி ரூபாய் அளவுக்குத் தனியார் நிறுவனங்கள் மற்றும் கான்ட்ராக்டர்களிடம் மாவோ​யிஸ்ட்​​டுகள் வரிவசூல் செய்கிறார்கள். கிட்டத்தட்ட மினி அரசாங்கமே காட்டுக்குள் நடக்கிறது'' என்றார் தினேஷ்.
''அப்படி என்றால் போலீஸ் நடவடிக்கைதான் மக்களுக்கு ஆறுதலாக இருக்கிறதோ?'' என்று கேட்டதும் மர்மப் புன்னகை வீசினார். மாவோயிஸ்ட்டுகளை வேட்டை ஆடுகிறோம் என்ற பெயரில் போலீஸ் நடத்தும் அத்துமீறல்கள் குறித்தும், பச்சைவேட்டையின் பெயரால் வருடத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் அரசுப் பணத்தைச் செலவு செய்வது பற்றியும் அவருக்கு நிறையவே தெரிந்து இருந்தது. மாவோயிஸ்ட் - சி.ஆர்.பி.எஃப். ஆகிய இரண்டு தரப்பின் நடவடிக்கைகள் மீதும் விமர்சனம் செய்யும் மனிதராகவே அவர் இருந்தார். உண்மைநிலை அறிய ஜார்கண்ட்டுக்குள் அடி எடுத்து வைத்தோம்!
....
உயர்ந்த மலைகள் காடு... மலையளவு மரங்கள்... அதன் உச்சியில் ஏதோ ஒரு பறவை. காடுகளில் பறவைகளுக்கா பஞ்சம் என்றுதான் தோன்றியது. ஆனால், அந்தப் பறவை ஆகாயத்தில் அப்படியே ஒரே இடத்தில், அப்போதுதான் எடுக்கப்பட்ட புகைப்​படம் போல ஃப்ரீஸ் ஆக நின்றது.
சில நிமிடங்கள்தான்... நாலு கால்கள் கொண்ட இரும்புக் குண்டு ஒன்று நம்மை நோக்கி விழுவதைப் போல, அது சரேலனக் கீழ் நோக்கி வந்தது. அலுமி​னியப் பறவையாக 100 மீட்டர் உயரத்தில் நாம் நண்பர்களுடன் நின்ற இடத்தை வட்டம் அடித்து​விட்டு மறைந்தது. அன்றைய இரவில், அந்தக் காட்சி​யை மறக்க முடியவில்லை!
சி.ஆர்.பி.எஃப்.காரர்களிடம் சொன்னபோது சிரித்தார்கள். 'ஓ....! நேத்ராவைப் பார்த்தீங்களா?’ என்று கேட்டார்கள்.
யார் அந்த நேத்ரா?
 - அதிர்ச்சி தொடரும்..
 எங்கே இருக்கிறது ஜார்கண்ட்?
இந்தியாவின் கிழக்குப் பகுதியில் 2000-ம் ஆண்டு உருவான ஒரு புதிய மாநிலம். வடக்கே பீகார், தெற்கே ஒடிசா, மேற்கே உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், கிழக்கே மேற்கு வங்கம் இதன் எல்லைகள். இந்த மாநிலத்தின் மக்கள் தொகை 3.29 கோடி. இதில் 28 சதவிகிதத்தினர் ஆதிவாசிகள். இயற்கை வளம் நிரம்பிய மாநிலம். விட்டு வைப்பார்களா? 183 நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. 28 இடங்களில் இரும்புத் தாதுக்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இவைதவிர, சுண்ணாம்புக் கல் 33 இடங்களிலும், மைக்கா 84 இடங்கங்களிலும், சீனா களிமண் 25 இடங்களிலும் வெட்டி எடுக்கப்படுகின்றன. இவை தவிர, இன்னும் வெட்டி எடுக்கப்படாத கனிம வளங்கள் நிறையவே இருக்கின்றன. ஏற்கெனவே, பொக்காரோ ஸ்டீல் ஆலை, டாடா ஸ்டீல் பிளான்ட், ஜாம்ஜெட்பூர் டாடா மோட்டார்ஸ் என்று ஏராளமான தொழிற்சாலைகள் இயங்குகின்றன. தொழில் நகரமான ராஞ்சி, இந்த மாநிலத்தின் தலைநகரம். அதேபோல், ஜாம்ஷெட்பூர் நகரம், மிகப்பெரிய தொழிற்சாலைகளுக்குப் பெயர் பெற்றது. சென்னையில் இருந்து ரயிலில் சென்றால் 33 மணி நேரத்தில் ராஞ்சியை அடையலாம். கொல்கத்தா வழியாக விமானத்தில் ராஞ்சி செல்ல அதிகபட்சம் நான்கு மணி நேரம் போதும்.
 என்ன நடக்கிறது 'மாவோயிஸ்ட்’ மாநிலங்களில்?
 போலீஸ் - மாவோயிஸ்ட்டுகளுக்கு இடையே நடக்கும் போராட்டம் காரணமாக, உளவாளிகள் என்ற சந்தேகத்தில் அப்பாவிக் கிராமவாசிகள் இரு தரப்பினராலும் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். சித்ரவதை அதிகமானால், மரணங்கள் தவிர்க்க முடியாதவை. இந்திய வரைபடத்தில், மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளை, சிவப்புப் பிரதேசம் (ரெட்காரிடர்) என்று குறிக்கிறார்கள். மத்தியப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் உட்பட எட்டு மாநிலங்களைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள், மாவோயிஸ்ட்டுகளின் தீவிர ஆதிக்கத்தில் இருக்கின்றன. அங்கே வரிவசூல், மக்கள் நீதிமன்றம் என்று நிர்வாகத்தைக் கவனிப்பவர்கள் மாவோயிஸ்ட்டுகள். அதனால் ஊழல் அரசியல்வாதிகள், லஞ்ச அதிகாரிகள் குறைவு. அப்படி இருப்பவர்கள் உயிர் பயத்தில் நடமாடுகிறார்கள். சில மாதங்களுக்கு முன், பச்சை வேட்டை நடவடிக்கைக்குப் பிறகு, சுமார் 20 மாவட்டங்களில் மாவோயிஸ்ட்டுகளை விரட்டி அங்கே போலீஸார் முகாம் அமைத்து இருக்கின்றனர்.
ஜார்கண்டில் வாழும் ஆதிவாசி மக்கள், கனிம வளம் மிகுந்த வனங்களையும், மலைகளையும் தெய்வங்களாகவே நினைத்து வழிபடுகின்றனர். ஆனால், அந்த நிலத்துக்குக் கீழே இருக்கும் கனிம வளங்களைக் கொள்ளை அடிக்க உள்ளூர் தாதாக்கள், சுரங்கத் தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் துடிப்பதுதான் மோதலுக்குக் காரணம். அரசிடம் நிலத்தை ஏலத்துக்கு வாங்கிய தனியார் முதலாளிகளை, தங்களின் கடவுளை அழிக்க வரும் ராட்சதர்களாகத்தான் என்றுதான் ஆதிவாசிகள் பார்க்கிறார்கள். அதனால், 'வனத்தையும் மலையையும் விற்பது என்றால், எங்கள் கடவுளை விற்பனை செய்வதாக அர்த்தம். அதனால் ஓர் அடி நிலத்தைக்கூட யாருக்கும் விட்டுத்தர மாட்டோம். முடிந்தால், நுழைந்து பாருங்கள்' என்று தங்களது வில் - அம்பு, நாட்டுத் துப்பாக்கிகளை தூக்கிப் பிடித்துப் போராடுகிறார்கள். ஆதிவாசிகளின் பாதுகாவலர்​கள் என்கிற பேனரில்தான் மாவோயிஸ்ட்டுகள் நடமாடுகிறார்கள்.
அதனால், அரசை எதிர்க்கும் இவர்களுக்கும் அரசுத் திட்டங்களை நிறைவேற்ற உறுதுணையாக நிற்கும் போலீஸுக்கும் இடையே வனப்பகுதிகளில் அவ்வப்போது துப்பாக்கிச் சண்டை நடக்கின்றன. மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி.எஃப்.), ஜார்கண்ட் மாநில போலீஸைச் சேர்ந்த ஜாக்குவார் படையினர், உள்ளூர் போலீஸார் ஆகியோர் இணைந்து கடும் தாக்குதல் நடத்துகிறார்கள். ஜார்கண்ட் - சத்தீஸ்கர் மாநில எல்லைப் பகுதிகளில் அவ்வப்போது வெடிச் சத்தமும் மரண ஓலமும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.       

Source: jun.vikatan

Saturday, May 5, 2012

ஒரு வருட ஜெ. ஆட்சி... பாஸா? பெயிலா?



ஓர் ஆண்டு...
கடந்த சட்டசபைத் தேர்தலில் சுனாமி​யாக எழுந்த மக்களின் எதிர்ப்பு அலை, கருணாநிதியை ஆட்சிக் கட்டிலில் இருந்து அப்புறப்​படுத்தியது. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன்... அமோகப் பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டார் ஜெயலலிதா. மே 16-ம் தேதியோடு ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்ய இருக்கிறார், ஜெய​லலிதா. இந்த ஒரு வருடத்தில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்.
ஆனால், மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தாரா ஜெயலலிதா? அவர்களுடைய பிரச்னைகள் தீர்க்கப்பட்டதா? இந்த ஒருவருட ஆட்சியின் மீது மக்களின் மதிப்பீடு என்ன? என்று கேள்விகள் எழவே, கருத்துக் கணிப்பு நடத்த முடிவு எடுத்தோம். ஓர் ஆட்சி தன்னுடைய சிந்தனை​களை ஓரளவாவது அமல்படுத்த இரண்டரை ஆண்டுகள் ஆகும் என்றாலும், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய பாதையில் இவரது ஆட்சி செல்கிறதா என்பதே இந்தக் கருத்துக் கணிப்பின் நோக்கம்.
ஜெயலலிதாவின் ஆட்சி முறை, முதல்வராக அவரது செயல்பாடு, அமைச்சர்களின் பங்கேற்பு, மின்வெட்டு, கட்டண உயர்வுகள், சட்டம் - ஒழுங்கு, இலவசத் திட்டங்கள், சசிகலா விவகாரம் என்று 18 கேள்விகளை சர்வேயில் முன்வைத்தோம். விகடன் படை  களம் இறங்கியது. கிராமம், நகரம், மாநகரம் என  எல்லாம் புகுந்து புறப்பட்டு மக்களைச் சந்தித்து வந்தது ஜூ.வி. டீம். ஏப்ரல் 26 தொடங்கி மே 2-ம் தேதி வரை எடுக்கப்பட்ட இந்த சர்வேயில் 3,659 பேரிடம் வினாக்களைக் கொடுத்து விடைகளை வாங்கினோம். இதில் பெண்கள் எண்ணிக்கை மட்டும் 1,445. 
சர்வே எடுக்கச் சென்ற ஜூ.வி. டீமுக்கு நிறையவே புதுமையான அனுபவங்கள். சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கேட்டது, 'ஏங்க... இந்த கரன்ட் பிரச்னை எப்போங்க தீரும்?’
'எங்களுக்கு வேற எதுவுமே வேணாம். கரன்ட் மட்டும் கொடுத்தாப் போதுங்க...’ என்று, மக்கள் கெஞ்சு​கிறார்கள். மின்சாரத்தை அடுத்து, பால், பஸ் மற்றும் மின்கட்டண உயர்வை மிகவும் கடுமையாகச் சாடினார்கள். காரசாரமான விமர்சனங்களை ஜெயலலிதா ஆட்சி மீது மக்கள் வைத்தார்கள். ஒரு வருடத்துக்கு முன், சிம்மாசனத்தில் தூக்கி வைத்துக் கொண்டாடிய மக்கள், இப்போது ஜெயலலிதா மீது அதிக ஆத்திரத்தில் இருப்பதை உணர முடிந்தது.  'இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், லேப்டாப் எல்லாம் எங்களுக்கு இன்னும் கிடைக்கலை. எப்போ கொடுப்பாங்க?’ என்று ஒரு சிலரே கேட்டார்​கள். மற்ற அனைவருக்கும் மின்சாரம்தான் முதல் முக்கியத் தேவையாக இருக்கிறது.
ஜெயலலிதாவின் ஒரு வருட ஆட்சி என்ற கேள்விக்கு, 'சுமார்’ என்று பதில் சொன்னவர்களே அதிகம். மின்வெட்டுப் பிரச்னையைப் பொறுத்த வரை, 'மோசம்’ என்று சொன்னவர்கள் 47.31 சதவிகிதம் பேர். 'தி.மு.க. ஆட்சியைவிட மோசம்’ என்று சொன்னவர்கள் 37.66 சதவிகிதம். மின்வெட்டுப் பிரச்னைக்கு மட்டும் 84.97 சதவிகிதம் பேர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அந்த அளவுக்கு மக்கள் 'மின்’ வெப்பத்தில் இருக்கிறார்கள். மின்வெட்டுப் பிரச்னையைத் தீர்ப்பதில் அரசின் செயல்பாடு எப்படி? என்கிற கேள்விக்கு 'அரசு உரிய அக்கறை காட்டவில்லை’ என்பதே அதிக மக்களின் கருத்து.
புதிய சட்டசபை, அண்ணா நூலகத்தை ஜெய​லலிதா முடக்கியது தொடர்பான கேள்விகளுக்கு, 'தவறு’ என்று அதிகபட்சமாக 50.23 சதவிகிதம் பேர் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள். பால், பஸ், மின் கட்டண உயர்வு பற்றிய கேள்விக்கு 'படிப்படியாக உயர்த்தி இருக்கலாம்’ என்று கருத்து சொன்னவர்கள்தான் அதிகம்.
ஜெயலலிதா ஆட்சிக்கு சாதகமாக ஒரே விஷயம்... நில அபகரிப்புப் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்தான். தி.மு.க பிரமுகர்கள் மீது தொடுக்கப்பட்ட அபகரிப்புப் புகார்களையும், அதிரடி நடவடிக்கைகளையும் 'நியாயமானது’ என்று வரவேற்கிறது தமிழகம். ஜெயலலிதா கொண்டுவந்த இலவசங்கள் ஏனோ பெரிய வரவேற்பைப் பெறவில்லை. மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப் போன்ற இலவசத் திட்டங்கள் தொடர்பான கேள்விக்கு, 'மக்கள் வரிப் பணம்தான் வீண் ஆகிறது’ என்று 63.41 சதவிகிதம் பேர் கருத்துச் சொல்லி இருக்கிறார்கள்.
இப்படி சர்வே முடிவுகள் நிறையவே ஆச்சர்யங்​களையும் அதிர்ச்சிகளையும் உண்டாக்கி இருக்​கிறது.
(ஜெயலிதாவின் செயல்பாடுகள், சட்டமன்ற நடவடிக்கைகள், சசிகலாவோடு ஜெயலலிதாவுக்கு இருந்த உரசல், அ.தி.மு.க. ஆட்சியின் டாப் 3 பிரச்னை​கள், ஜெயலலிதாவுக்கு மக்கள் போட்ட மார்க் போன்ற சர்வே முடிவுகள் அடுத்த இதழில்...)
ஜெயலலிதா ஆட்சியைப் பற்றி பொதுமக்கள் சொன்ன கருத்துகளில் சில இங்கே...
சூர்யகலா, ஆரணி: ''ஒரு பெண்ணை முதல்வர் ஆக்கினால் எங்களைப் போன்ற சாதாரண மக்களின் குறை​களைத் தீர்ப்பாங்கன்னு​தான் ஓட்டுப் போட்டோம். ஆனா, அந்தம்மா ஒரேடியா கரன்ட் கட், பால் விலை ஏற்றம், பஸ் கட்டண உயர்வுன்னு எல்லாத்தையும் ஏத்திக்கிட்டே போறாங்க. நினைக்கவே வேதனையா இருக்குங்க.''
செந்தில்குமார், சேலம்: ''நிர்வாகச் சீர்திருத்தத்துக்காக நிறைய முயற்சிகள் எடுத்திருக்காங்க. அது  பாராட்டுக்​குரிய விஷயம். ஆனா, மக்களை நேரடியாகப் பாதிக்கும் பால், கரன்ட், பஸ் கட்டணங்களை ஒரேய​டியாக உயர்த்தினது, மன்னிக்க முடியாத கொடுமைங்க!''
சீனிவாசன், வேலூர்: ''பாலில் இருந்து எல்லா விலைவாசியும் அநியாயத்துக்கு ஏறிப்போச்சு தம்பி. நாங்க ரொம்பக் கஷ்டப்​படுறோம். உண்மையைச் சொல்லணும்னா, ஏன்டா ரெட்டை இலைக்கு ஓட்டு போட்டோம்னு வருத்தமா இருக்கு. எல்லாம் எங்க தலையெழுத்து!''
வேல்குமார், காரைக்கால்: ''மாற்றம் வேண்டும்னு ஒட்டுமொத்த மக்களும் ஓட்டுப் போட்டதற்கு, இவ்வளவு கடுமையான ஏமாற்றத்​தைத் தந்திருக்க வேண்டாம். மக்களுக்கு எது தேவை... எது தேவை இல்லை? எது நல்லது.. எது பாதிப்பு? என்று யோசித்து திட்டங்கள் தீட்டி இருக்க வேண்டும். நரேந்திர மோடி மாதிரி வர வேண்டும் என்று ஆசைப்படலாம். எப்படி ஆவது என்று திட்ட​மிட வேண்டும். இப்படிப் போட்டு மக்களைக் கஷ்டப்​படுத்தக் கூடாது.''
நந்தகுமார், கும்பகோணம்: ''தனிப்பட்ட விருப்பு, வெறுப்புல இவங்க கவனம் செலுத்துறதுதான் அதிகமா இருக்குது. தேர்தல் அறிக்கையில் நிறையத் தொலைநோக்குத் திட்டங்கள் அறிவிச்​சாங்க. அதெல்லாம் என்ன ஆச்சுன்னே தெரியலை''
லெட்சுமணன், தூத்துக்குடி: ''கடந்த ஆட்சியில் நடந்த ஊழல், கட்டப்பஞ்சாயத்து, நிலஅபகரிப்பு போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் ஜெயலலிதாவின் ஆட்சியில் இல்லை என்பது ஆறுதல். சசிகலாவை மீண்டும் வீட்டுக்குள் சேர்த்துக்கிட்டதும், ஜெயலலிதா மீது இருந்த நம்பிக்கை சுத்தமாப் போயிடுச்சு.''
சாந்தி, மதுரை: 'நடு ராத்திரியில கரன்ட் கட் ஆகுதுங்க. தூக்கமே இல்லை. குழந்தைகளை வச்சுக்கிட்டு ரொம்பவும் கஷ்டமா இருக்கு. இதை எல்லாம் நினைக்கும்போது, தி.மு.க. ஆட்சி எவ்வளவோ பரவாயில்லைன்னு தோணுது. எதிர்க் ​கட்சியா விஜயகாந்த் என்ன பண்ணிட்டு இருக்காருன்னே தெரியலை...''
முருகவேல், ஆண்டிபட்டி: ''கடந்த தி.மு.க ஆட்சியை அகற்ற என்னென்ன காரணங்கள் இருந்தனவோ, அந்தக் குறைகளை மட்டும் உடனடியாக ஜெயலலிதா சரிசெய்திருந்தாலே நல்ல ஆட்சி என்று பெயர் எடுத்திருக்கலாம். அது எதையும் ஜெயலலிதா செய்யவில்லை. இலவசங்கள் கொடுத்துவிட்டாலே மக்கள் அமைதியாகி விடுவார்கள் என்று அவர் தப்புக் கணக்கு போட்டு​விட்டார்.''
ரஞ்சித்குமார், திருச்சி: ''மின்சாரமே இல்லாமல் மிக்ஸி, கிரைண்டர், ஃபேனை வெச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு சொல்​லுங்க. இது எதுவும் இல்லாமல்கூட இருந்துடுவேங்க.. ஆனா கரன்ட்டை மட்டுமாவது கொடுக்கச் சொல்லுங்க. மத்த விஷயத்​தைப்பத்தி அப்புறம் பேசிக்கலாம்.''
கார்த்திக்,ஆற்காடு: ''ஒரு வருஷத்துல அ.தி.மு.க ஆட்சி ரொம்பப் பாடாய்ப்படுத்தி விட்டது. நிம்மதியா இருக்க முடியலை. குடிநீர்ப் பிரச்னையை தீர்க்கவே ஆளைக் காணோம். அது எப்ப​டிங்க சசிகலா விஷயத்துல ஜெயலலிதா அவ்வளவு சூப்பரா நாடகம் போடுறாங்க...''
காமராஜ், தர்மபுரி: ''இடைத்தேர்தலில் காட்டும் ஆர்வத்தை மக்கள் பிரச்னையிலும் ஜெயலலிதா அரசு காட்டி இருந்தால், தமிழகம் சுபிட்சமா மாறியிருக்கும். 'கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா, அங்கே ரெண்டு கொடுமை வந்து ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம்’னு எங்க ஊருப் பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க. அப்படித்தான் இருக்கு இந்தம்மாவோட ஆட்சி.''
சதீஷ்குமார், சென்னை: ''தேர்தல் அறிக்கையில் சொன்ன விஷயங்களை ஓரளவுக்கு நிறைவேற்றி இருக்கிறார்கள். சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியதும், ஜெயலலிதா மீது எல்லோருக்குமே நம்பிக்கை வந்தது. ஆனால், மீண்டும் அவரை தன்னோடு சேர்த்துக்கொண்டதும், அவர் மீதான நம்பிக்கை போய்விட்டது.''
வின்சென்ட் செல்வா, சென்னை: ''நில அபகரிப்பில் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்கத்தக்கது. பஸ் கட்டண உயர்வைத் தவிர்த்து இருக்கலாம். சாதாரண மக்களைத்தான் அந்த விஷயம் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இதை ஏன் ஜெயலலிதா உணராமல் போனார்?''
- ஜூ.வி. டீம்

வேளாண்மை... அரசு திட்டங்கள், மானிய விவரங்கள் !




Wednesday, April 4, 2012

மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்!

மின் கட்டண உயர்வால் தமிழகமே அதிர்ந்துபோய் நிற்கிறது. கொஞ்ச நேரமே மின்சாரம் கிடைத்தாலும், ஓடோடிப் போய் லைட்டுகளை அணைப்பதும், ஃபேன்களை நிறுத்துவதுமாக இருக் கிறார்கள் மக்கள். ஆனால், அமைச் சர்களின் வீடுகள் மின்தடையே இல்லாமல், மின்கட்டண உயர்வைப் பற்றி கவலைப்படாமல் எந்த நேர மும் ஜொலிஜொலிக்கின்றன. அதுசரி, அவர்கள் நிம்மதியாக வேலை பார்த்தால்தானே, மக்கள் குறைகளைத் தீர்க்க முடியும்?
சென்னை அடையாறு பகுதியில் பங்களா டைப்பில் இருக்கும் அரசு இல்லங்களில்தான் அமைச்சர்கள் குடியிருக்கிறார்கள். மிகப்பெரிய ஹால், கிச்சன், டைனிங் ஹால், ஆபீஸ் ரூம், ரீடிங் ரூம், ஜிம் என்று இரண்டு தளங்கள் வரையில் கட்டப்பட்ட தனித்தனி வீடுகளைச் சுற்றிலும் போதுமான இட வசதி உண்டு. அமைச்சர்கள் இல்லங்களின் முன்பு விசாலமான நிலப்பரப்பு, தோட்டம், போர்ட்டிகோ, கார் பார்க்கிங் வசதி எல்லாமே செவ்வனே அமைந்துள்ளன. அனைத்து அறைகளிலும் ஏசி வசதி இருக்கிறது. சில அமைச்சர் வீடுகளில் டாய்லெட், பாத்ரூமிலும் கூட ஃபேன் இருக்கிறதாம். 
இதற்கெல்லாம் பில் உண்டு என்றாலும் அவர்களுக்கு அந்தக் கவலை இல்லை. ஏனென்​றால், கட்டணத்தை அமைச்சர்கள் செலுத்தப்போவது இல்லை. சைரன் கார், ஆடம்பர பங்களா, தனிப் பாதுகாப்பு அதிகாரி, எஸ்கார்டு என்று சகலமும் இலவசமாகக் கிடைப்பதைப்போலவே, மின்சாரக் கட்டணத்¬​தயும் அரசேதான் ஏற்கிறது. மின்வெட்டு கார​ணமாக எரிச்சலில் வெந்து​கொண்டு இருக்​கும் மக்களுக்கு, அமைச்சர்​களுக்கு மின்சாரக் கட்டணம் எவ்வளவு வருகிறது என்று தெரிந்தால், இன்னமும் எரியும்.
கடந்த தி.மு.க. ஆட்சியிலும் அதற்கு முந்தைய அ.தி.மு.க. ஆட்சியிலும் அமைச்​சர்கள் எந்த அளவுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தகவல் சேகரித்​தோம். கடந்த தி.மு.க. அமைச்சரவையில் மின்சாரத்தை எக்கச்சக்​கமாகப் பயன்படுத்தியதில் முதல் இடத்தில் இருப்பவர் கருணா​நிதி.ஐந்து ஆண்டுக் காலத்தில் கருணாநிதியின் கோ​பால புரம் இல்லத்துக்கு மின்சாரக் கட்டணமாக செலுத்தப்​பட்ட தொகை 7.27 லட்சம். கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் பேராசிரியர் அன்பழகனுக்கு, மின்சாரத்தைப் பயன்படுத்தியதில் ஐந்தாம் இடம். மின்சாரத்தின் அருமை தெரிந்ததாலோ என்னவோ, மின்சாரத் துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமிக்கு 12-வது இடம். ஐந்து ஆண்டுக் காலத்தில் அவர் பயன்படுத்திய மின்சாரக் கட்டணம்
4.22 லட்சம். பெண் அமைச்சர்களில் அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தியது கீதாஜீவன், 4.17 லட்சம். சபாநாயகராக இருந்த ஆவுடையப்பனைவிட துணை சபாநாயகராக இருந்த வி.பி. துரைசாமி மின்சாரத்தை அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறார். மிகக்குறைந்த அளவுக்கு மின்சாரத்தைப் பயன் படுத்தியவர் உபயதுல்லா. ஐந்து ஆண்டுகளில் இவர் பயன்படுத்திய மின்சாரக் கட்டணம் 27,748. கடந்த தி.மு.க. ஆட்சியில் மட்டும் ஒட்டுமொத்த அமைச்சர்களுக்கும் சேர்த்து மின் கட்டணமாக 1.23 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய 2001-2006 அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களுக்காகச் செலுத்தப்பட்ட மின் கட்டணம் 1.16 கோடி. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா வீட்டுக்கு மின்சாரக் கட்டணத்தை அரசு செலுத்தவில்லை. அந்தப் பணத்தை ஜெயல​லிதாவே செலுத்தி விட்டாராம். முந்தைய இரண்டு ஆட்சிக் காலத்திலும் அமைச்சர்கள் பயன்படுத்திய மின்சாரத்துக்​கான கட்டணம், தனியே கொடுக்கப்பட்டுள்ளது.
கண்ணு போட்டு விடாதீர்கள்!

வாஸ்கோவின் வெறியாட்டம்!

இத்தனை நாட்களாகக் கனவு கண்ட இந்தியா​வைக் கண்டுவிட்ட சந்தோஷத்தில் குதித்தார் வாஸ்​கோடகாமா. அது, கண்ணனூர் என்னும் காலிகட் துறைமுகம் அருகில் இருக்கிறது என்று அறிந்துகொண்டார். காலிகட் மன்னர் சாமோரினை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு பாவ்லோவையும் கறுப்பு மூர் ஒருவனையும் அனுப்பிவைத்தார். அவர்களைச் சந்திக்க மறுத்துவிட்ட மன்னர், அவர்கள் அரபு உள​வாளிகள் என்று சந்தேகித்தார். வாஸ்கோடகாமாவே அரண்​மனைக்குச் சென்றார். அவரை யாரும் வரவேற்கவில்லை. போர்த்துக்கீசிய மன்னரிடம் இருந்து கடிதம் கொண்டுவந்து இருப்​பதாகச் சொன்னார் வாஸ்கோடகாமா. அதன்பிறகு​தான், மன்னரைச் சந்திக்க ஏற்பாடு ஆனது. மன்னருக்கு முன் தலைகுனிந்து நிற்க வேண்டும். ஆசனத்தில் உட்காரக் கூடாது. கை நீட்டிப் பேசக் கூடாது என்ற நிபந்தனைகளுடன், அரண்மனைக்குள் அனுமதிக்கப்பட்டார் வாஸ்கோடகாமா.
சாமோரின் மன்னர், வாஸ்கோடகாமாவை வரவேற்று போர்ச்சுக்கல் மன்னரின் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். அரண்மனையின் அறை ஒன்றில் தங்கி இருக்க வாஸ்கோடகாமாவுக்கு உத்தரவு இட்டார் மன்னர். இதற்கிடையில், போர்த்துக்கீசியர்கள் மன்னருக்கு எதிராக சதி செய்ய வந்தவர்கள் என்று மன்னரை நம்பவைத்து, வாஸ்கோடகாமாவைக் கைது செய்ய ரகசிய ஏற்பாடு நடந்தது. எதிர்பாராமல் வாஸ்கோடகாமா கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். கப்பல்கள் சிறைப்பிடிக்கப்​பட்டன.
தாங்கள் உளவாளிகள் இல்லை என்று நிரூபிக்க வாஸ்கோடகாமா போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. முடிவில், மூன்று கப்பல்களும் உடனே கிளம்பிச் செல்ல வேண்டும் என்ற எச்சரிக்கையோடு விடுதலை செய்யப்பட்டார் வாஸ்கோடகாமா. அந்த அவமானம் அவருக்குள் ஆறாத வடு போல் உறைந்தது.
அந்தக் கடல் பயணத்தில்தான் அவர்கள் கோவாவை அடைந்தனர். அங்கே, உள்நாட்டுப் பிரச்னை தலைதூக்கி இருப்பதை அறிந்து, அதை தாங்கள் தலையிட்டு முடிப்பதாக நுழைந்த வாஸ்கோடகாமா, கோவாவைத் தன் வசமாக்கிக்கொண்டார். இந்தியாவில் போர்த்துக்கீசியர்களுக்கான அடித்தளமாக கோவா உருவாக்கப்பட்டது. நாடு திரும்பலாம் என்று முடிவு செய்த வாஸ்கோடகாமா, நிறையப் பொன்னும் வெள்ளியும் வாசனைத் திரவியங்களும் கப்பலில் ஏற்றிக்கொண்டு போர்ச்சுக்கல் கிளம்பினார். நோயுற்ற வாஸ்கோடகாமாவின் சகோதரன் பாவ்லோ நடுக்கடலில் இறந்துபோனான்.
1499-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி வாஸ்கோடகாமாவின் கப்பல், லிஸ்பன் நகரை அடைந்தது. வெற்றிகரமாகத் திரும்பி வந்த கப்பல்களை அரசரே முன்னின்று வரவேற்றார். அவரோடு துணைக்குச் சென்ற 150 பேரில் 50-க்கும் குறைவானவர்களே நாடு திரும்பினர். மற்றவர்கள், வழியிலேயே இறந்துபோய் கடலில் வீசி எறியப்பட்டு இருந்தனர். வாஸ்கோடகாமாவுக்கு 'டான்’ பட்டம் அளிக்கப்பட்டதோடு, பணமும் பதவியும் அவரது தலைமுறைக்குத் தரப்பட வேண்டிய கௌவரமும் அளிக்கப்பட்டது. இந்தியாவுக்கான கடல் வழி பற்றிய வரைபடத்தைப் பார்த்த மேனுவல் மன்னர், உலகமே இனி தன் கையில் என்று துள்ளிக் குதித்தார். அடுத்த கடல் பயணத்துக்கு உத்தரவிட்டார்.
1501-ல் புறப்பட்ட இந்தப் பயணத்தில் வாஸ்கோடகாமா செல்லவில்லை. அந்தக் கப்பலுக்குக் கேப்டனாக பெத்ரோ அல்வாரஸ் என்பவர் நியமிக்கப்பட்டார். 1502-ல் தனது இரண்டாவது கடல் பயணத்தைத் தொடங்கினார் வாஸ்கோடகாமா. இந்த முறை 13 கப்பல்கள், 5 துணைக் கப்பல்கள், நிறைய ஆயுதங்கள், போர் வீரர்கள் என்று யுத்தக் களத்துக்குச் செல்வது போல சென்றார். கடலில் எதிர்ப்பட்ட வணிகக் கப்பல்களைச் சூறையாடிப் பொருட்களைக் கொள்ளை அடித்தார். இந்தக் கடற்பயணம் பழிதீர்க்கும் யாத்திரை போலவே இருந்தது. தன்னை அவமதித்த சாமோரின் அரசனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக, பீரங்கி மூலம் காலிகட் நகரைத் தரைமட்டமாக்கி ஊரையே கொள்ளை அடித்தார் வாஸ்கோடகாமா. காலிகட் நகரம் இயங்கும் என்று உத்தரவிட்ட வாஸ்கோடகாமா, மன்னரின் செல்வங்கள் மற்றும் முக்கிய வணிகர்களின் சொத்துக்களை அபகரித்துக்கொண்டார்.
கோவாவில் தனது பிரதிநிதிகளை நியமித்து விட்டு, பெரும் செல்வத்துடன் லிஸ்பன் திரும்பினார் வாஸ்கோடகாமா. இரண்டாவது கடற்பயணத்தில் அவர் ஒரு கடற்கொள்ளையனைப் போல நடந்துகொண்டார். போர்த்துக்கீசியர்களின் கையில் இந்தியாவின் வணிகம் ஏகபோகம் ஆகத் தொடங்கியது. வாஸ்கோடகாமா, கடல் வாழ்வில் இருந்து ஒதுங்கி வசதியான பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு பிரபு போல செல்வாக்கோடு வாழத் தொடங்கினார். ஆறு பிள்ளைகள் பிறந்தனர்.
இந்தியாவின் வைஸ்ராயாக வாஸ்கோடகாமா நியமிக்கப்பட்டார். புதிய கௌரவத்துடன் 1524-ம் ஆண்டு தனது 56-வது வயதில் 14 பெரிய கப்பல்களில் 3,000 போர் வீரர்களுடன் தனது மூன்றாவது கடல் பயணத்தைத் தொடங்கினார் வாஸ்கோடகாமா. இந்த முறை, அவரது இரண்டாவது பிள்ளை எஸ்தவான், மூன்றாவது மகன் பவுலோ இருவரும் உடன் சென்றனர். கோவாவுக்கு வந்து, பதவி ஏற்றுக்கொண்ட வாஸ்கோடகாமா 1524-ம் ஆண்டு செப்டம்பரில் கொச்சிக்கு வந்தார். தன்னை அவமதித்த ராஜ்ஜியத்தை அடக்கி ஒடுக்கிய சந்தோஷத்துடன், தன்னால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பொறுப்புக்களைப் பகிர்ந்து கொடுத்தார். மறைமுகமாக அவரை எதிர்த்த எதிரிகளை ஒழித்துக் கட்டியதோடு, வாசனைத் திரவியங்களின் மொத்த வணிகமும் தங்கள் வசமே இருக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடுடன் செயல்படத் தொடங்கினார். ஆனால், எதிர்பாராமல் கழுத்தைச் சுற்றிக் கொப்பளங்கள் உண்டாகி தலையை அசைக்க முடியாமல் அவதிப்பட்டார். படுக்கையில் வீழ்ந்த வாஸ்கோடகாமா 1524-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி கொச்சியில் மரணம் அடைந்தார். எந்த இந்தியாவைக் காண வேண்டும் எனத் துடிப்புடன் கடல்பயணம் செய்தாரோ, அதே இந்தியாவில் அவர் இறந்துபோனார். அவரது உடல் உரிய கௌரவத்துடன் அடக்கம் செய்யப்பட்டது. இறந்த உடலின் மிச்சம், 1880-ம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
ஜாதிய ஒடுக்குமுறை, அதிகாரத் துஷ்பிரேயோகம், மதச் சண்டை ஆகியவற்றால் இந்தியா பிளவுபட்டு இருப்பதை, வாஸ்கோடகாமா சரியாக உணர்ந்து கொண்டார். அந்தப் பிரச்னைகளைத் தனக்குச் சாதமாக்கிக்கொண்டு இந்தியாவை தனது பிடிக்குள் எளிதாகக் கொண்டு வர அவரால் முடிந்தது.
மிளகு மற்றும் சந்தனம் உள்ளிட்ட பொருட் களுக்காகத் தொடங்கிய கடல் பயணம், நாடு பிடிக்கும் சண்டையாக மாறியதே வரலாறு. இதில், அதிக இழப்புகளையும் பொருளாதார வீழ்ச்சியையும் சந்தித்தது இந்தியாதான்.
கடந்த 300 ஆண்டுகளுக்குள் போர்த்துக்கீசியரும் பிரெஞ்சு, டச்சுக்காரர்களும், கிழக்கிந்தியக் கம்பெனியும் இந்தியாவின் இயற்கை வளங்களையும், தங்கம், வெள்ளி, வைரங்களையும் கொள்ளையிட்டு, கப்பல் கப்பலாகக் கொண்டுசென்றனர். இந்தியா திட்டமிட்டு வறுமை நாடாக உருவாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சிதான் இன்று நடந்துவரும் பன்னாட்டுக் கம்பெனிகளின் கொள்ளை வணிகம். இந்தியாவின் வளம் எப்போதும் அன்னியர்கள் அனுபவிப்பதற்கே கொள்ளை போய்க்கொண்டு இருக்கிறது என்பதுதான் காலத்தால் மாறாத உண்மை.
ஏதேதோ பெரும் கனவுகளுடன் வந்த வாஸ்கோடகாமா இந்தியாவின் வைஸ்ராயாக ஆட்சி செய்தது எவ்வளவு காலம் தெரியுமா? மூன்றே மாதங்கள்தான். அலை போல எழுவதும் வீழ்வதுமான இந்த வாழ்க்கை நிலையற்றது என்பதை, வாஸ்கோடகாமாவுக்கு கடல் நிச்சயம் உணர்த்தி இருக்கும்.

Saturday, February 4, 2012

எனது இந்தியா!

எனது இந்தியா!

நீதியின் முன்னால்

டந்த காலம் நிகழ் காலத்திற்குக் கற்றுத்தரும் பாடத்தின் பெயர்தான் வரலாறு. சரித்திரம் என்பது உறைந்துபோன கற்படிவம் இல்லை, அது வாழ்வனுபவங்களின் வழியே நாம் கவனிக்கத் தவறிய உண்மைகளை, மறந்துபோன நினைவுகளை, அறியப்படாமல்போன துயரங்களை நினைவூட்டும் அறிவுத் துறை.
அதிகாரம் கைமாறுவதன் சரித்திரத்தை மட்டுமே வாசித்துப் பழகிய நமக்கு, சரித்திரம் என்பது ஒரு பெரும் மானுடப் பிரவாகம் என்பதைப் புரிந்துகொள்வது சற்று சிரமமாகவே இருக்கக்கூடும்.
வரலாற்றின் குரலுக்குச் செவிசாய்க்காமல் நிகழ்காலப் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முடியாது, வரலாற்றினை ஒரு நதி என உருவகப்படுத்​தினால், ஒரே நதிதான் எல்லாக் காலத்திலும் ஒடிக்​கொண்டு இருக்கிறது, ஆனால், அதில் ஒடும் தண்ணீர் ஒன்றல்ல, தண்ணீர் ஒவ்வொரு பருவ காலத்திலும் அதற்கான விசையோடு வேறுவேறு கதியில் பெருகி ஓடுகிறது
அப்படி வரலாற்றின் போக்​கானது அரசியல், அதிகாரம், கலாசாரம், சமூக மாற்றம் என்று பல்வேறு காரணிகளால் வேகமெடுப்​பதும் தணிவதுமாகவே இருக்கிறது, எந்த விசை, வரலாற்று இயக்கத்தினை சாத்தியப்படுத்துகிறது, எதன் வழியே வரலாறு தன்னை அடையாளப்​படுத்திக்​கொள்கிறது, அதன் பின் இயங்கிய மனிதர்கள் யார் எவர் என்பதை அறிய முற்படும்போது, சரித்திரத்தை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ளத் துவங்குகிறோம்.
நீதிக்காகக் காத்திருப்பது பிறரோடு பகிர்ந்துகொள்ள முடியாத துயரம், மன உளைச்சல். இன்று எளிய மனிதர்களில் இருந்து அரசியல் தலைவர்கள் வரை பலரும் நீதிமன்றத்தில் தங்களுக்கான நீதி கிடைக்குமா என்று காத்துக்கிடக்கிறார்கள்.
மனு நீதி, விதுர நீதி, சாணக்கிய நீதி, பதினென் கீழ்க்கணக்கு நீதி நூல்கள் என்று எண்ணிக்கையற்ற நீதி சாஸ்திரங்கள் இந்தியாவில் இருக்கின்றன. ஆனால் நடைமுறை வாழ்வில் இவை தனிமனிதனைப் பாதிக்கவே இல்லை.
ஒவ்வொரு நீதிமன்ற வளாகத்திலும் வலியும் மௌனமும் கொண்ட மனிதர்கள் நிற்கிறார்​கள், நீதிதேவதை அவர்களை சலனமற்று பார்த்துக்கொண்டே இருக்கிறாள்.
இந்திய வரலாறு எத்தனையோ வழக்குகளைச் சந்தித்திருக்கிறது... சில விசித்திரமானவை; சில புதிரானவை.
சுதந்திர இந்தியாவின் முதல் பெரும் நீதி விசாரணை, காந்தி கொலை வழக்கு. வேறு எந்த வழக்கினையும் விட இந்த வழக்கு  முதன்மையானது, காரணம் அஹிம்சையைப் போதித்த காந்தியைக் கொன்றவனை எப்படித் தண்டிக்கப்போகிறார்கள்? அப்படி ஒருவனுக்குத் தண்டனை தருவதை காந்திய வழி ஏற்றுக்கொள்ளுமா? எதற்காக காந்தி கொல்லப்பட்டார்?
1948-ம் வருடம் மே 27-ம் தேதி வழக்கு விசாரணை துவங்கியது. காந்தி கொல்லப்பட்ட இடத்திலேயே கோட்சே கைது செய்யப்பட்டு விட்டான். குற்றத்தை அவன் மறுக்கவும் இல்லை. கைப்பற்றபட்ட துப்பாக்கியில் மீதம் நான்கு குண்டுகள் இருந்தன, மீதி மூன்று காந்தி உடலில் பாய்ந்திருந்தன. ரகுநாத் நாயக் என்ற தோட்டக்காரன் கையில் புல்வெட்டும் கருவியோடு காந்தியின் வலது பக்கம் பத்தடி தள்ளி நின்று இருந்தான். யாரோ ஒருவன் துப்பாக்கியால் காந்தியை சுடுவதைக் கண்டதும் ரகுநாத் நாயக் கோபத்துடன் கோட்சேயை மூன்று முறை புல்வெட்டியால் தாக்கினான்.
அப்போது சார்ஜென்ட் தேவராஜ் சிங் ஓடி வந்து கோட்சேயைப் பிடித்துக்கொண்டான். கூட்டம் அவனை அடித்தே கொன்றுவிடக்கூடும் என்று பயந்து அவனைப் பாதுகாப்பாக பிடித்துத் தள்ளிக்கொண்டு போனார். காந்தி சுடப்படுவதை அருகில் இருந்து கண்ட சர்தார் குர்பாசான்சிங் உணர்ச்சிவசப்பட்டு அழுதபடியே நின்றார். கொலை வழக்கின் முதல் குற்றவாளி என்று நாதுராம் கோட்சே அறிவிக்கப்பட்டான். மற்றவர்களைத் தேடும் பணி துவங்கியது. தனிப் படை அமைக்கப்பட்டு, துரிதமாக விசாரணைகள் நடந்தேறின.
பிப்ரவரி 4-ம் தேதி பிர்லா இல்லத்திற்குச் சென்ற வாடகை காரைக் கண்டுபிடித்து டிரைவர் சுர்ஜித் சிங்கைக் கைது செய்தது போலீஸ். சங்கர் கிருஷ்டய்யா, சாவர்க்கர், நாராயண் ஆப்தே ஆகியோர் கைதானார்கள். ஆப்தே டெல்லியில் உள்ள இந்து மகாசபையின் பின் உள்ள காட்டில் துப்பாக்கி சுட பயிற்சி அளித்த மரத்தை அடையாளம் காட்டினான்.  கோட்சே சுடப் பழகிய வீட்டின் உரிமையாளர்  டாக்டர் பார்ச்சர்  கைது செய்யப்பட்டார்.  ஒன்பது பேரைக் கொலையில் உடந்தையானவர்கள் என்று கைது செய்தார் மும்பையைச் சேர்ந்த போலீஸ் உயர் அதிகாரி நகர்வாலா. எந்த அரசியல் குறுக்கீடும் இல்லாமல் இருந்தால் மட்டுமே, தான் இந்த விசாரணையைச் செய்வேன் என்று நகர்வலா கண்டிப்புடன் கூறியிருந்தார். அப்படியே நடந்தேறியது!
காந்தியின் உடலைப் பரிசோதனை செய்த இர்வின் மருத்துவமனை, சிவில் சர்ஜன் லெஃப்ட்டினென்ட் காலோனா தானேஜா, காந்தியின் உடலில் 1/4 x  1/6அளவு ஆழமான முட்டை வடிவத் துளை விழுந்த ஐந்து காயங்கள் இருந்ததைக் குறிப்பிட்டார். அவை, உடலைத் துளைத்த துப்பாக்கிக் குண்டுகளால் உருவானவை என்று உறுதி அளித்தார். காந்தியைச் சுட்ட துப்பாக்கியின் எண் 606824.
வழக்கு விசாரணை நடைபெறுவதற்குத் தேர்வு செய்யப்பட்ட இடம், செங்கோட்டையில் மொகலாய மாமன்னர் ஷாஜகான் நீதி வழங்கிய இடத்தின் ஒரு பகுதி. 100 அடி நீளமும் 23 அடி அகலமும் கொண்டது. முதல் மாடியில் இருந்தது. நீதிமன்றத்தின் ஒரு கோடியில் நீதிபதிக்கான தனிமேடை அமைக்கப்பட்டு இருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆத்மசரண்,  கான்பூரின் மாவட்ட நீதிபதியாகவும் செஷன்ஸ் நீதிபதியாகவும் பணியாற்றியவர்.
முதல் நாள் சரியாக காலை 10 மணிக்கு நீதிபதி பக்கவாட்டுக் கதவு வழியாக நீதிமன்றத்தினுள் நுழைந்து தனது இருக்கையில் அமர்ந்தார். குற்றவாளிகள் ஒரே அணியாகக் கூண்டுக்குள் கொண்டுவரப்பட்டனர், நகர்வாலா தனது குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்தார்.
ஒன்பது குற்றவாளிகளும் மூன்று வரிசையில் அமர்ந்​திருந்தனர், சாவர்க்கர் மட்டுமே அதில் மிகுந்த சோர்வாகக் காணப்பட்டார். மற்றவர்கள் தங்களுக்குள்ளாக சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
ஜூன் 24-ம் தேதி விரிவான விசாரணை ஆரம்பமாகி, நவம்பர் 6-ம் தேதி வரை நடைபெற்றது. அரசுத் தரப்பில் 149 சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். 720 பக்க ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டன, வழக்கிற்குத் துணை சேர்க்கும்படியாக 404 ஆவணங்களும், 80 தடயப் பொருட்களும் நீதிமன்றத்தின் முன்வைக்கப்பட்டன. 160 பக்கம் குற்றவாளிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 297 பக்க எழுத்துபூர்வமான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. ஏழு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் வழக்கில் பங்கேற்றனர்.
கார்க்கரேக்கு மராத்தியும், சங்கருக்கு தெலுங்கும், மதன்லாலுக்கு இந்தியும் தெரிந்திருந்த காரணத்தால், வழக்கு விசாரணையில் மொழிப் பிரச்னை ஏற்பட்டது. அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் சி.கே.தப்தரி வழக்கை நடத்தினார்.எதிர்த் தரப்பில் எல்.பி. போப்பட்கர் முக்கிய வழக்கறிஞராகப் பணியாற்றினார். அவரோடு 15 முக்கிய வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்காக ஆஜர் ஆனார்கள்.
கோட்சே தனது அறிக்கையை கோர்ட்டில் வாசித்தான். அது 93 பக்கங்கள்கொண்டது. 35 ஆயிரம் சொற்கள் அதில் இருந்தன. அந்த அறிக்கையில் தன்னை ஒரு வீரப் புருஷனைப் போல அவன் காட்டிக்கொண்டான்.
1949-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் நாள் வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது, விரிவான 204 பக்கத் தீர்ப்பு அது. அந்தத் தீர்ப்பில் காந்தி போன்ற அஹிம்சாவாதியைக்கூட ஒருவன் கொன்றுவிட்டுத் தண்டனையில் இருந்து தப்பிவிடக் கூடாது என்பதற்காகவே, கோட்சேவுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
நீதியின் செயல்பாடு, இந்திய சமூகத்தில் அறத்தின் முக்கியத்துவம் என்று நீதியரசர் ஆத்மசரண் முன்னுதாரணமான ஒரு தீர்ப்பை எழுதினார். அந்தத் தீர்ப்பில் இந்தியப் பிரிவினையில் இருந்து எப்படி காந்தியைக் கொல்லும் சதிச் செயல் விதை ஊன்றப்பட்டது என்பதில் துவங்கி, காந்தியைக் கொன்றவர்களின் அரசியல் பின்புலம் வரை அத்தனையும் கவனமாக விவரிக்கப்படுகிறது.
வழக்கு விசாரணையில் அரசு குறுக்கிடவே இல்லை. குற்றவாளிகளுக்கும் முறையான சட்ட உதவிகள் கிடைத்தன. இந்த வழக்கின் மேல் முறையீடு கிழக்கு பஞ்சாப் உயர் நீதிமன்றத்திற்குச் சென்றது. நீதியரசர் ஹர்னாம் சிங் அதை விசாரித்தார். கோட்சே தானே கோர்டில் வாதாட முன்வந்தான். சொந்தச் செலவில் வழக்கறிஞர்களை வைத்துக்கொள்ள முடியாதவர்களுக்கு, அரசே வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து தந்தது.
பஞ்சாப் உயர் நீதிமன்றக் கோடைக் கால விசாரணை சிம்லாவில் நடைபெற்றது. கோர்ட்டிற்குக்கொண்டுவரப்படும் நாதுராம் கோட்சேயைக் காண மக்கள் பெருமளவு திரண்டுவிட்டதால், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
நீதிபதிகள் குழுவில் நீதிபதி பண்டாரி, நீதிபதி அச்சுருராம் நீதிபதி கோஷ்லா ஆகிய மூவர் இடம் பெற்று இருந்தார்கள், அவர்களும் மறுமுறையீட்டினை நிராகரித்து மரண தண்டனையை உறுதி செய்தனர்.
தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் நாளின் முந்தைய இரவில் கோட்சே இருந்த சிறை வளாகத்திற்குள் இரண்டு பேர் ரகசியமாக சுவர் ஏறிக் குதித்தனர். அதை, காவலாளி பார்த்துக் கூச்சலிட்டான். அவர்கள் இருவரும் விசாரிக்கப்பட்டபோது, தென்னிந்தியாவில் இருந்து வந்த இரண்டு பத்திரிக்கையாளர்கள் என்பது தெரிய வந்தது. தங்கள் உயிரைப் பணயம்வைத்து அவர்கள் குற்றவாளிகளைப் பேட்டி காண சிறைக்குள் புகுந்த விவரம் தெரிய வந்தது.முடிவில், கோட்சே தூக்கிலிடப்பட்டான். இறந்த உடலை வெளியே கொண்டுசெல்ல அரசு அனுமதிக்கவில்லை. ஆகவே, சிறைக்குள்ளேயே தகனம் செய்யப்பட்டது. கோட்சேவின் சாம்பல், காகர் என்ற சிறிய ஆற்றில் கரைக்கப்பட்டது. காந்தி கொலை வழக்கு அத்தோடு முடிந்து போனது.
இந்த வழக்கு சுட்டும் உண்மைகள்தான் வரலாற்றின் கசப்பான நிஜங்கள். பிரிவினையின் பெயரால் நடைபெற்ற வன்முறைகளுக்கு உண்மையில் யார் காரணம்? காந்தி போன்ற மகானைக் கொல்லும் மனநிலை எப்படி உருவாகிறது? காந்தி கொல்லப்படக்கூடும் என்று முன் உணர்ந்திருந்த உள்துறை அமைச்சகம் ஏன் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாமல் போனது? காந்தியை கொன்றது ஒரு முஸ்லீமாகத்தான்  இருக்கக்கூடும் என்ற கசப்பு உணர்வில் நிறைய வன்முறைகள் நடைபெற்றன, அந்த துவேசத்தின் விதை  எப்படி உருவானது? அதுதான் இன்றும் முற்றி வளர்ந்திருக்கிறது இல்லையா?
அதே நேரம் நீதி விசாரணைக்குள் எந்த அரசியலும் இருக்கக் கூடாது. சுதந்திரமாக நேர்மையாக அது நடைபெற வேண்டும் என்பதையும் காந்தி விசாரணை முன்உதாரணமாகக் காட்டுகிறது. அது போன்ற அறத்தை ஏன் நாம் இன்று இழந்துவிட்டோம்?